செவ்வாய், பிப்ரவரி 24, 2009

திரைக்கு பின்னே- 21

வழி தவறிய ஆட்டுக்குட்டி!

"ஈரமான ரோஜாவே' படத்தில் தயாரிப்பாளர்; இயக்குநர் கே.ஆர். மூலம் அறிமுகம் செய்யப்பட்டவர் மோகினி.

மைலாப்பூரில் ஒரு ஒண்டுக் குடித்தன வீட்டில் அவரை முதன் முதலாகச் சந்திக்கச் சென்றேன். என் அனுமானத்தில் அங்கு இருந்த அத்தனை குடும்பங்களுமே பிராமணக் குடும்பங்கள்தான். அந்த மாதிரியான சூழலில் ஒரு நடிகை குடியிருப்பது சற்றும் பொருத்தமில்லாததாக இருந்தது. வத்தல், வடாம், துவைத்துப் போட்ட துணிகள் எல்லாம் காயப்போடப்பட்டுக் கொண்டிருந்த இடத்தில் நடிகையா? சரியான முகவரிதானா என்ற ஐயத்தோடு அங்கு குடியிருந்த ஒரு வீட்டின் கதவைத் தட்டி விசாரித்தேன். அவர் தம் குடியிருப்பில் இப்படியொரு நடிகை குடியிருப்பதையும் அவரைத்தேடி சினிமா கார்களும் சினிமாக்காரர்களும் வந்து போய்க் கொண்டிருப்பதை விரும்பாதவராக இருப்பார்போலும். ஒரு வீட்டைக் கை காட்டிவிட்டு டம்மென்று கதவை அறைந்து சாத்தினார். நான் மேற்கொண்டு எந்தவீட்டுக் கதவையும் தட்டி விசாரிக்காமல் மோகினி வீட்டின் கதவைச் சரியாகக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.

நான் தட்டிய கதவுக்கு மறுபுறத்தில் மோகினி நின்றிருந்தார். "ஈஸியா கண்டுபிடிக்க முடிந்ததா?'' என்றார்.

திரையில் இருந்த எந்த ஆடம்பரமும் இல்லாத ஆடை. நெற்றியில் திருநீறு. பவுடர் கூட போட்டிருப்பாரா என்று தெரியவில்லை. அத்தனை எளிமை. கையில் ஒரு வெள்ளை பேப்பரைச் சுருட்டிக் கொடுத்தால் பத்தாம் வகுப்பு முடித்து டைப் ரைட்டிங் இன்ஸ்ட்டிட்யூட் செல்லும் மாணவி போல இருந்தார்.

இவர் எதற்கு நடிக்க வரவேண்டும் என்று இருந்தது. இனம் புரியாத அச்சம்கூட இருந்தது. வழி தவறி வந்துவிட்டவர் மாதிரி தோன்றியது. மறுபடியும் ஸ்கூலில் சேர்ந்து படியுங்கள் என்று சொல்லிவிடுவேன் போல தவித்தேன். நடிகையிடம் வழக்கமாகக் கேட்கும் எந்தக் கேள்வியையும் கேட்க முடியவில்லை. அவரும் இந்தியா ஒரு பழம்பெரும் நாடு என்பதாக எதையோ சொல்லிக்கொண்டிருந்தார்.

கிளம்பும்போது அந்த வீட்டில் தலையில் முக்காடு போட்டு அமர்ந்து எங்களையே பார்த்துக் கொண்டிருந்த மொட்டையடித்த பெண்மணியைப் பார்த்தேன். திடீரென்று அவர் என்ன நினைத்துக் கொள்வாரோ என்ற தேவையில்லாத பயம் தொற்றியது.

பிறகு என்ன சூழலோ, அவர் ஒரு பிரஸ்மீட் வைத்து "கிளாமராக நடித்தால் என்ன தவறு? ஆனால் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்'' என்று அறிவித்தார். நவீன ஆடைகளில் போட்டோ எடுத்து விநியோகித்தார். பெரிதாக வாய்ப்பு எதுவும் வரவில்லை. இந்தியப் பெருமையையும் பண்பாட்டையும் பேசும் அந்த நடிகை திடீரென்று கிருஸ்துவ மதத்தில் சேர்ந்து.. மத சேவை செய்யப் போவதாக அதே மயிலாப்பூரில் அறிவித்தார். நான் எதிர்பார்த்தது போல அவர் டைப்ரைட்டிங் இன்ஸ்ட்டிட்யூட் மாணவியாகவே இருந்திருந்தால் இந்த மதமாற்றத்துக்கு அவசியம் இருந்திருக்காதோ?


மணிரத்னம் இயக்கத்தில் ராமராஜன்!


பத்திரிகையில் சுவாரஸ்யமான செய்திகளுக்காக நிருபர்கள் என்னவேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் இது.

மணிரத்னம் இயக்கத்தில் ராமராஜன் என்ற தலைப்பிட்டு ஒரு செய்தியை எழுதித்தந்தார் நிருபர் ஒருவர்.

ராமராஜன் வரிசையான வெற்றிப்படங்களைத் தந்துவிட்டு இளையராஜாவோடு ஏதோ மனஸ்தாபம் எற்பட்டு படங்கள் ஏதும் இல்லாமல் இருந்த நேரம் அது. மணிரத்னமோ, "ரோஜா', "பம்பாய்' என... ஏறுமுகத்தில்.

ஏதோ வித்தியாசமான கதையம்சத்தில் இந்த காம்பினேஷன் இருக்கப் போகிறது என்று செய்தியைப் படித்த பலரும் பேசிக் கொண்டார்கள். சிலர் போனில் தொடர்பு கொண்டு உண்மையா சார் என்றோ... தலைப்பு என்ன சார் என்றோ கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ராமராஜன் அலுவகத்தில் இருந்தே ஒரு போன்... "மணிரத்னம் அறிவித்தாரா?'' என்று அவர்கள் விசாரித்தபோதுதான் விபரீதம் புரிந்தது. ராமராஜனுக்கும் தெரிவிக்காமலா இந்தச் செய்தி வெளியே கசிந்தது? என்ற சந்தேகம். சீக்கிரத்திலேயே மணிரத்னம் அலுவகத்தில் இருந்து தொடர்பு கொண்டார்கள். ராமராஜனை வைத்து படம் எடுக்கப் போவதாக உங்களுக்கு யார் சொன்னது நிறைய பேர் போன் செய்து விசாரிக்கிறார்கள் என்றனர்.

அதன் பிறகுதான் அந்த நிருபரை விசாரித்தேன். முதலில் "யாரோ சொன்னார்கள்.. பேசிக் கொண்டார்கள் என்று சொன்னவர்.. கடைசியில் பரபரப்பா இருக்குமேன்னு எழுதினேன் சார்'' என்று உண்மையை ஒப்புக் கொண்டார். ஒருவாரம் பத்திரிகையைப் பேச வைத்த சந்தோஷம் இருந்தாலும் மேலுக்குக் கடிந்து கொண்டேன்.

"யார் கண்டது சார்... மணிரத்னம் அவரை வெச்சி ஒரு படம் எடுத்தாலும் எடுப்பார் சார்... எடுத்தா நல்லா இருக்கும் சார்'' என்றார்.

"பலிக்கட்டும்'' என்றேன்.



எழுத்துத் திருத்தம்!


பாண்டு என்ற நடிகரை ஞாபகப்படுத்துவது சுலபம். வாயை அஷ்ட கோணலாக்கி "ஆங்', "ஊங்" என்று அவர் செய்கிற சேட்டை அத்தனை பிரபலம்.

பிரபலமில்லாத செய்தி.. அவர் குமுதம் இதழில் நெடுங்காலம் பணியாற்றிய எழுத்தாளர் புனிதனின் மருமகன். கேபிடல் லெட்டர்ஸ் என்ற விளம்பர எழுத்து பலகை நிறுவனம் நடத்தி வருகிறார் அவர். குங்குமம், சன் டி.வி., தினகரன் உள்ளிட்ட பித்தளை எழுத்துககளை உருவாக்கி வடிவம் தந்தவர்.

ஒருமுறை அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு செய்தியைப் பகிர்ந்து கொண்டார். கலைஞர் மீது அவருக்கு அதீத பாசம். கலைஞர் மாளிகை என்று ஒரு அரசு நிறுவனத்துக்குப் பெயர்ப் பலகை செய்து தந்ததைச் சொன்னார். ஆனால் அடுத்து வந்த ஆட்சியாளர்கள் அந்தக் கட்டடத்தில் இருந்து அந்தப் பெயரை நீக்கச் சொல்லிவிட்டு, அதற்குப் பெரியார் மாளிகை என்று பெயரிட்டுவிட்டார்கள். அந்த ஆர்டரும் இவருக்கே வந்தது. நாம் செய்த கலைஞர் பெயரை நாமே நீக்க வேண்டியதாகிவிட்டதே என்று வருத்தமாக இருந்ததாம். "சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. கலைஞர் மாளிகை என்ற அந்த எழுத்துகளை உருக்கி அதையே பெரியார் மாளிகை என்று ஆக்கினேன். பெரியாருக்குள் கலைஞர் அடக்கம்தானே?'' என்றார் சந்தோஷத்தோடு .

ஆங்!

LinkWithin

Blog Widget by LinkWithin