புதன், டிசம்பர் 17, 2008

பென்டியம் மனிதர்கள்

இந்த வார தினமணி கதிரில் என் சிறுகதை

"மூன்று லட்ச ரூபாய் சம்பளத்தை உதறித் தள்ளிவிட்டுப் போகிறேன் என்கிறீர்களே.. அது கூட எப்படியோ போகட்டும். உங்களைப் போன்றவர்கள் இந்தப் பதவியை தவிர்ப்பது நாட்டுக்குப் பேரிழப்பு அல்லவா?'' மல்ஹோத்ரா நிஜமான வருத்தத்துடன் கேட்டார்.
சமீபத்தில்தான் தன் நாற்பதாவது வயதைக் கடந்த ராகுல் விஸ்வநாத் மிகக் குறுகிய காலத்தில் மரபணு சோதனை ஆய்வுக்குழுவின் தலைவராகப் பொறுப்புக்கு உயர்ந்தான். வேலையில் ஏனோ ஆர்வம் குறைந்துவிட்டது. இஷ்டம் போல ஆய்வுக்கூடத்துக்கு வருவான். யாராவது மடக்கித் திட்ட வேண்டும் போலத்தான் எந்த வேலையிலும் பொறுப்பில்லாமல் இருந்தான். ஆனால் யாரும் அவனை அப்படித் திட்டாமாலேயே இன்று ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டான்.

"என்னுடைய வாழ்வில் மிக்க அக்கறை உள்ளவர் என்பதால் ஒன்று சொல்கிறேன். இங்கு செய்து வரும் எல்லா ஆராய்ச்சிகளும் எனக்குக் குப்பையாகத் தோன்றுகின்றன. இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. இந்த ஆண்டு மத்திய அரசு ஒதுக்கிய 1200 கோடி ரூபாயும் எள். பாழுங்கிணற்றில் போட்டுவிடலாம். போதுமா? இந்த மடத்தனத்துக்கு நானும் உடந்தையாக இருக்க விரும்பாமல்தான் விலகிக் கொள்கிறேன்.''
இத்தனை கடுமையான விமர்சனத்தை மல்ஹோத்ரா எதிர்பார்க்கவில்லை.

"மிஸ்டர் விஸ்வநாத்... தீர்மானிக்கும் பொறுப்பில் உள்ள உங்களைப் போன்றவர்கள் இப்படிப் பேசக் கூடாது. என்ன மாதிரி ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும் என்று நீங்கள் கருத்து தெரிவிக்கலாமே?''

"மரபியல் சோதனையில் நாம் மிகவும் பின் தங்கியிருக்கிறோம். ஐரோப்பிய நாடுகளின் சாதனைகளை எட்ட வேண்டுமானால் இன்னுமொரு 25 ஆண்டு உழைப்பு தேவை. அப்புறம்தான் டாலி மாதிரி ஒரு ஆட்டுக்குட்டி செய்வோம். மரபு அணுவில் சர்க்கரை நோயை அகற்ற அதற்கடுத்து 20 ஆண்டுகள் இப்படியே போனால் மூளைத் தகவல் பதிவிறக்கம் செய்ய இன்னுமொரு 100 ஆண்டு ஆகிவிடும். யாராவது செய்துவிட்ட சாதனையைச் செய்து பார்க்கவே நமக்கு இன்னும் ஆற்றல் போதவில்லை.''

"உங்களைப் போன்றவர் என்ன செய்யலாம் என்று சொல்லலாமே?'' மல்ஹோத்ரா தாடியை ஆயாசமாகத் தடவி விட்டுக் கொண்டார்.
விஸ்வநாத் தன் பிரெஞ்ச் பேடு செவ்வகத்திந் நடுவே சிரித்தார்.

"நாம் ஆசைப்படுவதையெல்லாம் செய்து பார்த்துவிடுகிறமாதிரியா இருக்கிறது நம் சமூக அமைப்பு? அது எப்படி இருக்கிறதோ அதில் ஒரு அங்கமாக வாழ்ந்துவிட்டுப் போய்விடுவதுதான் மரியாதைக்குரியதாக இருக்கிறது. நாம் மாற்ற நினைத்தால் புரட்சிக்காரன், கலகக்காரன், சமூகவிரோதி என்று அகராதியில் நிறைய வார்த்தைகளை இதற்காகவே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். வேண்டாம் நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதை ஏற்றுக் கொள்ளவோ, புரிந்துகொள்ளவோகூட இங்கு யாரும் இல்லை.''

"நிச்சயம் நான் இருக்கிறேன்.''

"அப்படியானால் என் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டதாக கையெழுத்துப் போட்டுவிட்டு என் வீட்டுக்கு ஒரு நடை வாருங்கள் சொல்கிறேன்.''
விஸ்வநாத் பதவி விலகியது தினமானி நாளிதழில் எட்டாம் பக்கத்தில் ஒற்றைப் பத்தி செய்தியாக வெளியானது. அதற்காகத்தான் காத்திருந்தது மாதிரி விஸ்வநாத் வீட்டுக்குப் போனார் மல்ஹோத்ரா.

பகட்டு தெரியாத எளிமையான வீடு. பெயருக்கு ஒரு தோட்டம் இருந்தது. குறுக்கே கொடிகட்டி துணி காயபோட்டிருந்தார்கள். பழைய டீசல் கார் ஒன்று சேறுகூட துடைக்கப்படாமல் இருந்தது. ரொம்ப விவரிக்காமல் சொல்ல வேண்டுமானால் பிழைக்கத் தெரியாதவன் என்று பெரிய எழுத்தில் எழுதி ஒட்டியிருந்தது.

"இதுதான் எனக்கு இனி சோதனைக் கூடம்'' என்று விஸ்வநாத் தன் இரண்டு கைகளையும் விரித்து அறிமுகப்படுத்துவது போல தன் வீட்டைக் காண்பித்தார்.
குஷன் மீது இருந்த செஸ் போர்டை நகர்த்தி வைத்துவிட்டு உட்காரச் சொன்னார்.

"அசப்பில் வீடுபோலவே இருக்கிறது'' என்றார் மல்ஹோத்ரா. அது பாராட்டல்ல, குத்தல்.
மனைவி விவாகரத்துப் பெற்றுச் சென்றுவிட்டதால் தன் இரண்டு குழந்தைகளையும் தன்னுடனே வைத்திருந்தார் விஸ்வநாத். பெண்ணுக்கு பத்து வயது. பையனுக்கு எட்டு வயது. அப்பாவைப் பார்க்கவும் யாரோ வந்திருக்கிறார்கள் என்ற ஆச்சர்யத்தில் அவர்கள் ஹாலுக்கு வந்தனர்.

"குழந்தைகள் பள்ளிக்குப் போகவில்லையா?''

"என் ஆராய்ச்சியின் முதல் கட்டமே எல்லா பள்ளிக் கூடங்களையும் மூட வேண்டும் என்பதுதான். அது முடியாது என்பதால் இவர்களைப் பள்ளியில் இருந்து நிறுத்திவிட்டேன். ஏதோ என்னால் முடிந்தது...''

"என்ன சொல்கிறீர்கள்... ஏன் இந்த விஷப்பரீட்சை?''

"ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கான எந்தக் கேள்வியையும் அவளிடம் கேட்கலாம். ஏனென்றால் அவள் இப்போது படிக்க வேண்டியிருந்தால் ஐந்தாம் வகுப்புதான் படிப்பாள்.
இல்லையா இதோ இந்தப் புத்தகத்தில் எந்தப் பக்கத்தில் எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம்'' என்றார்.

அவர் காட்டியது என்ûஸக்கிளோ பீடியா பிரிட்டானிகாவின் 16}வது வால்யூம்.
ஏதோ பக்கத்தைத் திருப்பி வீராப்புக்காகக் கேட்டு வைத்தார். கேட்டு முடிப்பதற்குள் பதில் வந்தது. மல்ஹோத்ராவின் வியப்பை ரசித்தபடி ""நீங்கள் உங்கள் அறைக்குப் போங்கள்'' என்று குழந்தைகளை விடுவித்தார். அவை பொம்மை ரிமோட் கார் போல நடந்தன.

"என்ன அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?''
மல்ஹோத்ரா குழந்தைகள் புகுந்த அறையிலிருந்து கண்களை விடுவித்து ""குழந்தைகளை என்ன செய்கிறீர்கள்?'' என்றார்.

"மூளையின் ஆற்றலில் ஒரு சதவீதத்தைக் கூட மனிதர்கள் பயன்படுத்துவதில்லை என்று உங்களுக்குத் தெரியும்தானே? பில்லியன் கணக்கான மூளைச் செல்கள் இருக்கின்றன. அதில் ஒவ்வொன்றிலும் இரண்டு லட்சம் தகவல்களை சேகரித்து வைக்க முடியும். ஆனால் என்ன நடக்கிறது? யாருக்கும் அவர்கள் வீட்டு போன் நம்பர் கூட ஞாபகம் இருப்பதில்லை. உலகில் உள்ள அத்தனை போன் நம்பரையும் சேமிக்க முடியக் கூடிய மூளை ஏன் ஓரிரு நம்பரோடு முடிந்து போகிறது?'' போன முறை பெட்ரோலிய அமைச்சராக இருந்தவர் யார் என்றால் ஏன் தடுமாற்றம்? இந்த எல்லா பிரச்சினையையும் தீர்த்து வைக்கப் போகிறேன்.""
மல்ஹோத்ரா குழந்தைகளை என்னடா செய்கிறாய் படுபாவி என்ற முகக்குறியை மாற்றாமல் கேட்டுக் கொண்டிருந்தார்.

"ஒலி அலைகளின் குறிப்பிட்ட அலை வரிசையில் மனித மூளை ஸ்தம்பித்து நிற்கிறது. அதுதான் மூளையைப் பயன்படுத்துவதற்கான சரியான தருணம். கிட்டத் தட்ட கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் போல அது தகவல்களைப் பதிந்து கொள்ளத் தயாராக இருக்கிறது. அப்போது கீர்த்தனையைப் பாடினால் அது டிவிடி போல பதிந்து போகிறது. ஒரு புத்தகத்தின் பக்கத்தைக் காட்டினால் அது ஸ்கேனர் போல அதாவது ஒரு புகைப்படம் போல பதிந்து போகிறது... அடுத்து எப்போது கேட்டாலும் அந்தப் பக்கத்தின் தகவல்களைத் திரும்பச் சொல்ல முடிகிறது. பரிட்டானிகா என்ûஸக்ளோ பீடியாவின் 26 வால்யூம்களையும் அப்படி என் மகளுக்குப் பதித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது 16 முடித்துவிட்டேன். சிம்பிள்...''

"அடப்பாவி மனிதர்கள் பாட்டரியால் இயங்குவதாக நினைத்துவிட்டாயா? உடம்பில் ஓடுவது ஒயர்கள் இல்லை, நரம்புகள்... ரத்தமும் சதையும் வேறு... சிலிக்கான் சிப்புகள் வேறு''

"அடிப்படை ஒன்றுதான். இதில் எந்தச் சிக்கலும் இல்லை. என் மகள் அனிதா வழக்கம் போலத்தான் இருக்கிறாள். அதையும் சோதித்துவிட்டேன். இட்லி, சப்பாத்தி சாப்பிடுகிறாள். டி.வி. பார்க்கிறாள்... காலண்டரி கிழிக்கிறாள் எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது.''

"பையன்?''

"நல்ல கேள்வி... மனிதர்கள் என்று பொதுவாகச் சொல்வதே தவறுதான். ஆண்கள் வேறாகவும் பெண்கள் வேறாகவும் இருக்கிறார்கள். ஆண்களுக்கு வேறு மாதிரியும் பெண்களுக்கு வேறு மாதிரியும் போதிக்க வேண்டியிருக்கிறது. பள்ளிக் கூடங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுவேறுவிதமாகப் போதிக்க வேண்டியிருப்பதன் அவசியம் இருக்கிறது.''

"எப்படி?'' கேள்வியில் ஆர்வத்தைவிட விபரீதத்தைத் தெரிந்து கொள்ளும் நோக்கம்தான் அதிகம் தொனித்தது.

"ஆண்களின் மூளை லாஜிக் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. மேற்கே இத்தனை கிலே மீட்டர் தூரம் சென்றால் பூந்தமல்லி வரும் என்று தெரிந்து விட்டால் அது சைதாப்பேட்டை மார்க்கமாகச் செல்வதா, வடபழனி மார்க்கமாகச் செல்வதா, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செல்வதா என்று மூளையில் ஒரு கணக்கு உருவாகிவிடுகிறது. புறப்படும் இடம், ட்ராபிக்ஜாம் பொருத்து எந்தச் சாலையில் செல்வது என்று ரூட் உருவாகிவிடும். பெண்களுக்கு வடபழனி மார்க்கம் வழியாகப் பழகிப் போனால் அதிலேதான் செல்கிறார்கள். அல்லது அதையேதான் விரும்புகிறார்கள்.''

"எத்தனை பேரிடம் கணக்கெடுத்தாய்?''

"பார்த்தாயா?... ஒரு உதாரணத்துக்குத்தான் சொல்கிறேன். அதற்காக பூந்தமல்லி செல்லும் பெண்ணையெல்லாம் விசாரிக்க முடியுமா? நான் சந்தித்தப் பெண்களின் பொது குணத்தை வைத்துச் சொல்கிறேன்... ஏனென்றால் அந்த முழுப் பாதையும் ஒரு புகைப்படம் போல மனதில் இருக்கிறது. அதில் சென்றால் இந்த இடத்தில் இந்தக் கடை இருக்கும், இந்த இடத்தில் ஒரு பூக்காரி இருப்பாள், இந்த இடத்தில் ஒரு மரம் விழுந்து கிடக்கும், இந்த இடத்தில் ஒரு சிவப்புக் கட்டடம் இருக்கும் என்று முழுப்பாதையையும் அவர்கள் மூளையில் போட்டோ எடுத்துவிடுகிறார்கள். ஆண்களுக்கு இலக்குதான் முக்கியம் "பூந்தமல்லிதானே... எட்டு மணிக்குள்ள வந்திட்றேன்' என்கிறார்கள். அவர்கள் மூளையில் நேரடியாக பூந்தமல்லி விரிகிறது."

"பையனை என்ன செய்தாய்?''

"நீ என்ன வந்ததிலிருந்து குற்றவாளி போலவே பேசுகிறாய்? நான் செய்வது சமூகத்துக்கு நல்லது என்று புரியவில்லையா உனக்கு?''

"முயற்சி செய்கிறேன். சொல்''

"உதாரணத்துக்கு செஸ் போர்டில் எத்தனை லட்சம் நகர்வுகள் செய்ய முடியும் என்று நிகழ்தகவு கணக்கு இருக்கிறது. இதை என் இரு குழந்தைகளுக்கும் அந்த அலைவரிசையில் சொல்லிக் கொடுத்தேன். பெண் ஏறத்தாழ எல்லா நகர்வுகளையும் சித்திரம் போல உள்வாங்கிக் கொண்டாள். நீ வேண்டுமானால் விளையாடிப்பார். நான்காவது நகர்வில் வீழ்த்தப்படுவாய்... ஏன் காஸ்ப்ரோ, விஸ்வநாதன் ஆனந்த்... யாரை வேண்டுமானாலும் அழைத்து வா... அவர்களுக்கும் அதே கதிதான். என் மகளை யாரும் ஜெயிக்க முடியாது. பையன் அவனாக ஆட ஆரம்பிக்கிறான்... அதனால் தோற்றுப் போகிறான். லாஜிக் கூர்மையாவதற்கு வேறு முறையைக் கையாள இருக்கிறேன்.''

மல்ஹோத்ரா கிட்டத் தட்ட இங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தார். நம்மை ஒரு அறையில் போட்டு பரிசோதிக்க ஆரம்பித்துவிடுவானோ என்ற அச்சம் கண்களில் தெரிய ஆரம்பித்தது.

"நீ சொல்வதைப் பார்த்தால் பார்த்தால் எல்லோரும் பென்டியம் ஃபோர் கம்ப்யூட்டர் மாதிரி ஒரே மாதிரி ஆகிவிடுவார்களே...?''

"எல்லோரும் ஒரே திறன் உடைய இசை வித்வான்களாக இருப்பார்கள், எல்லோரும் உயர்ந்த தரத்தில் கவிதை எழுதுவார்கள், சுருக்கமாகச் சொன்னால் எல்லோரும் ஒரே மாதிரி புத்திசாலியாக இருப்பார்கள். சமத்துவம்தானே வேண்டும்?''

மல்ஹோத்ராவுக்கு நல்லது மாதிரிதான் தோன்றியது. "வாழ்த்துகள் விஸ்வநாத்... நான் கிளம்பறேன்...''

குழந்தைகளை அழைத்து "மாமாவுக்கு டாடா சொல்லுங்க'' என்றார் விஸ்வநாத்.
குழந்தைகள் கால்களை கழுத்துவரைத் தூக்கி மேலும் கீழும் ஆட்டினார்கள். மல்ஹோத்ரா திடுக்கிட்டு பின் நகர்ந்தார்.

விஸ்வநாத் மெல்ல புன்னகைத்து குழந்தைகளை நோக்கி ""பின்னங்கால் அல்ல, முன்னங்கால்...'' என்றார்.

குழந்தைகள், காலை இறக்கிவிட்டு கைகளால் ""டாடா'' என்றனர். கட்டளையின் படியான நகர்வு தெரிந்தது.

"சில நேரங்களில் இந்த மாதிரி சின்னக் குழப்பங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. பதிவிறக்கத் தவறுகள்தான் காரணம்.. சரியாகிவிடும்'' விஸ்வநாத் சாதாரணமாகச் சொன்னார்.

"ஓ அப்படியா?'' மல்ஹோத்ரா ஆச்சர்யப்பட்டார் என்று சொல்ல முடியாது அதில் மெல்லிய அலறல் ஒளிந்திருந்தது.

காரை சாலைக்குத் திருப்பியதும் முதல் வேளையாக போலீஸ் கமிஷனருக்குப் போன் போட்டார் மல்ஹோத்ரா.

"ஸôர் இரண்டு குழந்தைகளை உடனடியாகக் காப்பாற்ற வேண்டும். முகவரியா..? ம் குறித்துக் கொள்ளுங்கள்... ''

LinkWithin

Blog Widget by LinkWithin