ஞாயிறு, ஆகஸ்ட் 02, 2009

கட்டில் தோழன்


முட்டையிட்ட பதினெட்டாவது நாள் புறா குஞ்சு பொறிக்கும். அவ்வளவு நீண்ட ஆயுள் எனக்கு இல்லை. நான் இறப்பதற்குள் அந்தப் புறா குஞ்சு பொறித்துவிடுமா? அதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. நான் வந்து சேர்ந்து இரண்டாவது முறையாக அது முட்டை இட்டு, வீணடித்துவிட்டது. கால் இடறி முட்டைகள் அனைத்தும் கீழே விழுந்து நொறுங்கிவிட்டன.
இந்த ஆஸ்பித்திரியில் சேர்க்கப்பட்ட யாரும் உயிர் பிழைத்துப் போனதாக சரித்திரமே இல்லை. எந்த ஆஸ்பித்திரியில் சேர்ந்தாலும் சாகாமல் தப்பித்து இருக்க முடியுமா என்ன? ஆனாலும் இந்த ஆஸ்பித்திரிக்கு ஒரு பிரத்யேக லட்சணம் உண்டு. அதைச் சொல்கிறேன். எல்லோரும் மரணமடைவதற்காகவே இங்கு வந்து சேருவதாகப் பட்டது. இத்தனைக்கும் பெரிய சிபாரிசு இருந்தால்தான் அங்கு சேர முடிந்தது. ஐஐடியில் படிக்க இடம் கிடைத்த மாதிரிதான் எனக்கு இங்கு இடம் கிடைத்தது. மனிதர்களுக்கு இருக்கும் உயிராசைதான் இந்த ஆஸ்பித்திரி நடப்பதற்கான ஆதாரம். ஒருநிமிடமாவது ஆயுளை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற கடைசி சொட்டு ஆசை இருக்கிறவரை இதற்கு பூர்ண ஆயுசுதான்.
சொத். இருந்த இன்னொரு முட்டையையும் உருட்டி உடைத்துவிட்டது அந்தப் புறா. அந்த இடம் புறாக்கள் முட்டையிடுவதற்காக உருவாக்கப்பட்டதல்ல, மழை நீர் வடிந்து செல்வதற்காக துத்தநாகத் தகட்டால் அடிக்கப்பட்ட "ப' வடிவ கால்வாய். மேலே இன்னொரு மாடி கட்டிவிட்டதால் இதன் வழியாக மழைநீர் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. நிர்வாகமும் அதைக் கழற்றுவதற்கான செலவைவிட அதை அப்படியே விட்டுவிடுவது லாபம் என்று நினைத்திருக்கலாம்.


புறாக்கள் ஓயாமல் சிறகுகளை கோதிவிட்டபடி இருந்தன. அந்தப்புரத்து ராணிகள் தலைகோதியபடியே இருப்பது போன்ற ஞாபகத்தை ஏற்படுத்தின. அது சப்ஜா வகைப் புறா. இந்தியாவில் அதற்கு அப்படித்தான் பெயர். இறக்கைப் பகுதியில் இரண்டு கோடுகள் இருக்கும். அவசரத்தில் ஒரு விரலின் விபூதி சரியாகப் பூசப்படாத சைவ நெற்றி போல.
நேற்று மூட்டையாகக் கட்டித் தூக்கிச் செல்லப்பட்டவரின் படுக்கையில் இன்று வேறு ஒரு ஆசாமியைக் கொண்டுவந்து கிடத்தினார்கள். உயரமானவர். திடகாத்திரமாகவும் சிவப்பாகவும் இருந்திருப்பார் என்று தோன்றியது. ஒரு யூகம்தான். இங்கு வருகிறவர்கள் ஒட்டி உலர்ந்து போய் மொட்டை அடிக்கப்பட்டு போன மாதம் பார்த்தவருக்கே அடையாளம் தெரியாமல் போய்விடுவதுண்டு. நிறைய பேரை அப்படிப் பார்த்த அனுபவத்தில் இங்கு வந்து சேருகிறவர்களின் கடந்த மாத உருவத்தை உருவகிக்கும் திறன் எனக்கு அதிகமாகிவிட்டது.
இப்போது வந்தவர் பெரிய நிறுவனத்தில் பெரிய அதிகாரியாக இருந்தவர் என்றார்கள். எப்பேர்பட்ட சிம்மமாசனத்தில் இருந்தாலும் நோய்படுக்கை ஒன்றுதான். அடடா எப்படியெல்லாம் சிந்திக்கிறேன். இருந்தாலும் அவர் சிட்டிகை போட்டால் எல்லோரும் அவர் எதிரில் குனிந்து ஏவல் செய்ய காத்திருந்தனர்.
"ஏன் ஜெனரல் வார்ட்ல போட்டிருக்கீங்க?'' என்று அவர் கேட்டபோது, வேறு அறை எதுவும் காலியாக இல்லை என்பதைச் சொல்ல பதறினர். உடன் வந்திருந்த நான்கு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
நான் "வேறு அறை எதுவும் காலி இருந்திருந்தால் சேர்த்திருப்பார்களே?'' என்றேன்.
அவரைப் போலவே ஒடுங்கிப் போய் படுத்திருந்த இன்னொரு மொட்டைத் தலையனான என்னைப் பார்த்து அவருக்குக் கோபப்படுவதா? சிரிப்பதா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்க வேண்டும். என்னைப் போல் சிரிப்பதற்கு அவருக்கு தைரியம் பத்தாது. அவர் கோபம்தான் பட்டார். அதையும் பார்வையால் மட்டும்தான் படமுடிந்தது.
"எந்த ஊர்?'' என்றார் கம்பீரமாக கேட்கும் தொனியில். ஏற்கெனவே பழகியவர்களாக இருந்தால் மேற்படி வாக்கியத்தின் இறுதியில் இருக்கும் "கேட்கும் தொனியில்' என்ற வார்த்தைகள் தேவைப்பட்டிருக்காது.
"சென்னைதான்'' என்றேன்.
அதை அவர் அலட்சியமாக ஏற்றார். தென் தமிழகத்தில் இருந்து வருகிற பலர் அப்படித்தான். சென்னைவாசிகள் அடாவடியாக ஆட்டோ கட்டணம் வசூலிப்பவர்கள் என்று எண்ணுகிறார்கள்.
என் பக்கத்துக் கட்டிலில் புதிதாகச் சேர்ந்தவரைப் பார்க்கப் புதிதாக ஒரு தம்பதி வந்திருந்தது. அவர்கள் பொருத்தமான ஜோடியாகத் தோன்றவில்லை. இந்த நேரத்தில் எனக்கு இப்படியொரு ஆராய்ச்சி தேவையா? என்னால் ஒருவிஷயத்திலேயே தொடர்ச்சியாகச் சிந்தனையைச் செலுத்த முடியவில்லை. மரண நிமிடங்கள் என்னை அப்படி அவசரப்படுத்துகிறதோ என்னவோ? இருக்கப் போகிற நாள்களில் நல்ல விஷயங்களாக நினைப்போம் என்று முடிவெடுத்தேன். நல்ல விஷயங்களைப் பட்டியலிட முயற்சி செய்தேன்.
எனக்கு வயிற்றில் புற்று இருப்பதாக முடிவானது. வயிறு வீக்கம் கணிசமாக இருந்தது. கதிர்வீச்சு தெரபி சிகிச்சைகள் முடிந்து இப்போது ஈமோதெரபியில் வந்து நிற்கிறது. கட்டிலில் படுத்துக் கொண்டு உலகத்தை வெறித்துக் கொண்டிருப்பதற்கு எதற்காக இவ்வளவு வைத்தியம், எதற்காக இத்தனை செலவு? வயிற்றுக்குள் ரப்பரை வைத்துத் திணித்தது போல இருக்கிறது. தேவையில்லாத எதையோ திணித்து வைத்திருப்பதுபோல இருக்கிறது வயிற்றுக்குள். சுமப்பது தலைவலியாக இருந்தது. கையைவிட்டு வயிற்றுக்குள் பிசைய முடிந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. ச்சே... நல்ல விஷயமாக நினைக்க வேண்டும்.
புறா முட்டையிட்டுக் குஞ்சு பொறிப்பதைப் பார்க்க வேண்டும் என்பது குறைந்தபட்ச ஆசையா? பேராசையா? அதுகூட வேண்டாம்.
பக்கத்துப் படுக்கையில் இருப்பவரைச் சிரிக்க வைப்பதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளலாம். முடியும் என்று தெரியவில்லை. அவருக்கு எரிச்சல் கொண்ட முகம். நன்றாக இருந்த நாளிலேயே சிரித்தவராகத் தெரியவில்லை.
அல்லது புதிதாக வேலைக்கு வந்திருக்கும் இளம் மருத்துவர் செங்கோட்டையைச் சேர்ந்தவராக இருப்பார் என்று யூகித்ததை உறுதிப்படுத்த முடிந்தால்கூட நல்ல விஷயமாகத்தான் இருக்கும்.
இப்படியொரு படுக்கையில் இருந்து கொண்டு வேறு நல்ல சிந்தனை கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. நல்ல உடம்புக்குள்தான் நல்ல சிந்தனை இருக்கும். நல்ல சிந்தனை என்றால் என்ன என்ற குழப்பம் தொற்றியது. யாருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பது நல்ல சிந்தனைதான். பின்லேடன், மகாத்மா காந்தி எல்லோரும் நீடூழி வாழ்க. யாருக்கும் தீங்கு இல்லாமல் சிந்திப்பது எப்படி உடலும் உயிரும் பற்றி சிந்திக்கலாம் என்று ஆசையாக இருந்தது. நமக்கு ஏற்பட்டிருக்கிற இந்த உபாதையெல்லாம் உடலுக்குத்தான். உயிரை இந்த வலிகள் எதுவும் செய்வதில்லை. பால் பாயிண்ட் பேனா ரீபிள் போல. மேலே உள்ள கூடு உடைந்திருந்தாலும் நசுங்கியிருந்தாலும் ரிபீள் நன்றாக இருந்தால் எழுதும். உபயோகப்படுத்த முடியாமல் போனால் இந்த ரீபிளை வேறு பேனா கூட்டுக்கு மாற்றிக் கொள்ளலாம்.... அட.. இப்படியொரு உதாரணத்தை யாராவது சொல்லியிருப்பார்களா?
ஆனால் இது உயிர், உடலுக்குச் சிறந்த உதாரணமாகத் தெரியவில்லை. ரீபிள் தீர்ந்து போனால் வேறு ரீபிள் போடுவது மாதிரி இந்த உடம்புக்குப் புது உயிர் போட முடியுமா என்ன? எதையுமே சிந்திக்க வேண்டாம் என நினைத்தேன். மண்டைக்குள் ஒரு வெற்றிடம் இருப்பதாக நினைப்பது சந்தோஷமாக இருந்தது. யார் அடுத்துப் பிரதமரானால் நாட்டுக்கு நல்லது என வேறுபக்கம் திரும்பியது. நல்லது, நல்லவர் என்பதெல்லாம் என்ன என்ற குழப்பம் தொற்றி அசதி ஏற்பட்டது.




"ஹாட் வாட்டர்'' என்றார் பக்கத்துக் கட்டில் பெரியவர். ஆனால் அவருடன் வந்தவர்களோ, அவரைப் பார்க்க வந்த தம்பதியோ பக்கத்தில் இல்லை. என் ப்ளாஸ்க்கில் இருந்து கொஞ்சம் சுடுதண்ணீரை டம்ளரில் ஊற்றிக் கொடுத்தேன். அவருடைய தலையைச் சற்றே உயர்த்தி பருகச் செய்தேன். அவர் என்னை நல்லவன் என்று நினைத்திருக்கலாம். இந்தச் செயலுக்குப் பெயர் நற்செயல் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியுமா? நல்லவன் என்று அவர் நம்மை நினைக்காமல் போயிருக்கக் கூடுமெனில் "யார் இவன்' என்று நினைத்திருக்கலாம். நல்லவன் என்பதும் யார் இவன் என்பதும் ஒன்றுதான்.
"உனக்கு எவ்வளவு நாளாக இருக்கிறது?'' என்றார்.
"ஒரு வருஷமாக'' என்றேன்.
"எனக்கு ரெண்டு வருஷம் ஓடிவிட்டது. ப்ராஸ்டேட்டில் கேன்ஸர். வலியும் இப்போதெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஓல்டு டிஸ்டம். இனி தாளாது. அலுவலகத்தில் என்னை "ஃபயர் பிராண்ட்' என்பார்கள். சிங்கம் போல இருந்தேன். நான் அப்படி இருக்கக் கூடாது என்பது காலத்தின் ஆசை போலும்.''... அவருடைய ஆங்கில உச்சரிப்பு தமிழ்போல இருந்தது. ஒவ்வொரு வார்த்தையையும் தேவைக்கு அதிகமாக இழுத்து உச்சரித்தார்.
நோய்வாய்பட்டு படுத்திருப்பதில் சிலருக்கு விருப்பம் இருக்கும் என்பார்கள். பெரும்பாலும் அத்தகையவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. சிங்கம் போல இருப்பவர்களுக்குத்தான் வருகிறது. என்னை முயல் என்று சொல்லலாம். அதாவது முயல்போல துறுதுறுவென இருந்தேன் என்பதைவிட, இவரைப் போன்ற சிங்கங்களுக்கு "ஒருவாய்' உணவாக இருந்தேன் என்பது பொருத்தமாக இருக்கும்.
"எல்லோர் முகத்திலும் சவக்களையாக இருக்கிறது. அப் கோர்ஸ் என் முகத்திலும்தான். தனி ரூம் கேட்டிருக்கேன்'' என்றார். என்ன நினைத்தாரோ கொஞ்ச நேரம் கழித்து ""உன் முகத்தில் அந்தச் சாயல் தெரியவில்லை'' என்றார்.
மரணத்தை எதிர் கொள்ளும் உறுதி தெரிந்தது. அவர் சொன்னதில் ஓல்டு சிஸ்டம் இனி தாங்காது என் ற வார்த்தை பிடித்திருந்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் எது தெரிந்திருக்கிறதோ இல்லையோ, இது தெரிந்திருக்கும். "வயசாகிவிட்டது. இனி தாக்குப் பிடிக்க முடியாது' அதை ஒத்துக் கொள்வதில் எவ்வளவு தயக்கம் பலருக்கும்.

ஆயா படுக்கையில் விழுந்தபோது தாத்தா பதறி அடித்துக் கொண்டு அவரை ஆஸ்பித்திரிக்குத் தூக்கிச் செல்லாதது இரக்கமற்ற தன்மையாக தோன்றியது. ""ஒண்ணும் வேண்டியதில்லை. அவ ஆனந்தமா இருக்கா'' என்று ஸ்ருதி பெட்டியை இயக்கியபடி ""ஹரே ராம கிருஷ்ணா... ஜெயராம கிருஷ்ணா'' என்று பாட ஆரம்பித்தார். ஆயாவின் முணகலைக் கேட்கவிடாமல் உச்சஸ்தாயியில் கத்திக் கொண்டிருந்தார். பட்டிக்காடு அது. ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டுமானால் டாக்ஸி வரவழைத்து பதினைந்து கிலோ மீட்டராவது பயணிக்க வேண்டும். அந்தத் தூரத்தில் 24 மணி நேர மருத்துவமனை ஒன்று உண்டு. பெரும்பாலும் கம்பவுண்டர் வைத்தியம்தான். யார் கையால் செத்தால் என்ன என்பது போல் அவனிடம் போய் கொண்டிருந்தார்கள் மக்கள். எப்போதெல்லாம் பாட்டி வலி பொறுக்கமுடியாமல் கத்துகிறாளோ அப்போதெல்லாம் தாத்தா ஸ்ருதி பெட்டியைப் பக்கத்தில் கொண்டு வந்து வைத்தபடி முகுந்தா, வைகுந்தா, முருகா, ஆனை முகத்தானே என்று ஒரு சாமிப்பாட்டு பாடினார். உடம்பு ஊதி, நீர் கோர்த்து முதுகுப் புண்ணால் துடித்தார் பாட்டி. ஐந்தாம் நாளில் அடங்கிவிட்டது. ""அவ்வளவுதான். எடுத்துடுங்கப்பா'' என்றார். திண்ணையில் போய் அமர்ந்து கொஞ்ச நேரம் கண்களில் நீர் வழிய உட்கார்ந்திருந்தார். அதில் ஆர்ப்பாட்டம், மிகை உணர்ச்சி எதுவும் இல்லை. அமைதியாக உட்கார்ந்திருந்தார். "பொழுதோட எடுத்துடுங்கடா'' என்றார் பலமுறை. சடங்குகள், சாங்கியங்கள் இருந்தன. பாட்டி விடைகொடுக்கும் தைரியமும் தன் மரணத்தை எதிர் நோக்கும் திராணியும் எனக்குப் புதிய அனுபவங்கள். சுற்றத்தார் எல்லோரும் அந்த அனுபவத்தைக் கிரகித்துக் கொள்ளாதது ஆச்சர்யமாக இருந்தது.
என்னை அழைத்து "பசியா இருக்குடா.. சாப்பிட ஏதாவது இருக்குமா பாரு... இல்லாட்டி நாடார் கடையில கடலை உருண்டை ரெண்டு வாங்கியாந்து குடு'' என்றார்.

"மிஸ்டர். நான் தனி ரூம் கேட்டு வாங்கிட்டேன். முதல் மாடி. நேரம் இருந்தா வா'' என்றார் பக்கத்துப் படுக்கைப் பெரியவர்.
"வருகிறேன்'' என்றேன்.
"இது ராக் பிக்யான் தானே?'' புறாவைக் காட்டிக் கேட்டார்.
"இதை பந்தயக்காரர்கள் சப்ஜா என்பார்கள்''
"சப்ஜா..? புறா ஒவ்வொர் முறையும் இரண்டு முட்டைப் போட்டதும் அடைகாக்க உட்கார்ந்துடும். ஒரு முட்டைக்கும் அடுத்த முட்டைக்கும் சுமார் இரண்டு நாள் இடைவெளி இருக்கும். முதல் முட்டை ஆண், இரண்டாவது முட்டை பொட்டை... பொட்டை எப்பவுமே இரண்டாவதுதான்... ஹா.. ஹா.. ஹா''
"பொட்டைதான் எப்பவும் புதுசு... ஆம்பளை எப்பவுமே பழசு'' என்றேன்.
"ஹா.. ஹா.. லாஜிக்''
அவரை சக்கரம் வைத்த படுக்கையில் வைத்து லிஃப்ட் பக்கம் நகர்த்திக் கொண்டு போனார்கள். படுத்தபடியே "வர்றேன்'' என்றார்.

தாத்தா மரணத்துக்குத் தயாரானது பலருக்கும் தெரியாது. பொங்கல் திருநாளில் சர்க்கரை பொங்கலும் கடலை பருப்பு வடையும் உற்சாகமாகச் சாப்பிட்டவர் அடுத்த சில நாளில் பேதியும் வாந்தியுமாகப் படுத்தார். என்ன உற்சாகம் அவருக்கு. "அவ்வளவுதான்டா... கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சு. அப்பப்ப ஓடியாந்து சுத்தம் பண்ண வேண்டியதில்லே. ஒரு நாளைக்கு ஒரு தரம் போதும். மருந்து மாத்திரை, ஆஸ்பித்திரி எதுவும் வேண்டாம். என்னை இங்க அங்க தூக்கிட்டுத் திரியாதீங்க'' என்று தீர்மானமாக அறிவித்தார். கை காலெல்லாம் நீர் கோர்த்து முதுகுப் புண்ணோடு மிகவும் போராடினார். பாட்டியாவது ஐந்து நாளில் போய் சேர்ந்தார். இவர் இரண்டு மாதம் கிடந்து துடித்தார். பக்கத்தில் இருந்து பக்தி பாட்டு பாடுவதற்குக்கூட யாருமில்லை. உடம்பை நோக்கி சாரை, சாரையாக எறும்புகள் படையெடுத்தன. அவரைச் சுற்றி எறும்பு மருந்தை தூவி வைத்தனர். அப்போதும் எறும்புகள் சுற்றுவதைப் பார்த்து யாரோ அவர் உடம்புக்குக் கீழேயெல்லாம் எறும்பு மருந்தைத் தூவிவிட்டனர். தாத்தாவால் வலி பொறுக்க முடியவில்லை. தன்னை மீறி முணகினாரே தவிர, "ஆஸ்பத்திரியும் வேணாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்' என்பதை மட்டும் நினைவு தப்பிய பின்னும் சொல்லிக் கொண்டிருந்தார். கடுமையான உழைப்பாளி அவர். மரணத்தோடு மல்லு கட்டிக் கொண்டிருந்தபோது அதை நான் முழுமையாக உணர்ந்தேன்.

இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது என் படுக்கைக் கருகே இண்டர் காம் மணி அடித்தது. எடுத்தபோது "எஸ்.எம்.டி. பேசறேன். மேலே வர்றியா?'' என்று குரல்.
"எஸ்.எம்.டி.னா?''
"அட, உன் பக்கத்துக் கட்டில் தோழன், மிஸ்டர்.''
"ஓ. நீங்களா..? வர்றேன் சார்''
தனி அறை. "யாரும் கூட இருக்க வேணாம்னு அனுப்பிச்சிட்டேன். உட்கார். அந்தப் பேப்பரைத் தூக்கிக் கீழ கிடாசிட்டு உட்காரு மிஸ்டர்.''
"ஏன் யாரும் கூட இல்லை? தனி அறை எடுத்ததற்கு...''
"யாரும் இருக்கக் கூடாதுன்னுதான் தனி அறை கேட்டேன். அவங்களுக்கும் தொந்தரவு.. எனக்கும் தொந்தரவு. எண்பது கிலோ இருந்தேன். இப்ப நாப்பது கிலோ.. கண்ணு அவுட்... ரெட்டினா டேமேஜ். மூணு அடி தள்ளி நின்னா தெரியலை.''
"நல்லதா ஏதாவது பேசுவோம்...''
சிரித்தார். "என்னையே எடுத்துக்க... பாதி பேர் அவரை மாதிரி வருமான்னு சொல்லுவான். பாதி பேர் அயோக்கியன்னு ஏசுவான்... எனக்கு எல்லாம் ஒண்ணுதான். சரி... நல்லதா ஏதாவது பேசுமே. அதில என்ன கஷ்டம் இருக்கு?''
நல்லதாக ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தேன். ஏதோ யோசித்துக் கொண்டிருந்தவர் அப்படியே தூங்கிவிட்டார். கீழே போய்விடலாம் என்று எழுந்தபோது நாற்காலி அசைவில் கண்விழித்தார். "துரியோதனன் கதை மாதிரிதான். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் ஒரு நல்லதும் தெரியல எனக்கு. ஒரு இன்ஜக்ஷன் போடணும். போட்றியா?''
"நர்ஸ் யாராவது இருக்காங்களானு பார்க்கிறேன்.''
"அது என்ன மிஸ்டர் பிரமாதம்? எடு அதை நான் சொல்லித்தர்றேன். இவ்வளவு நாள் ஆஸ்பித்திரில இருந்து இதை கத்துக்கலைன்னா எப்படி?''
கட்டுப்பட்டேன். சரக்கென்று பாட்டிலில் இருந்து இன்ஜெக்ஷனால் மருந்து உறிஞ்சினார். "இடுப்புல போட்டுடு'. போட்டேன்.
மருந்து பாட்டிலையும் ஊசியையும் ஜன்னல் பக்கம் வீசி எறிந்தார். அது புறாக்கள் வசிக்கும் துத்தநாக தகட்டில் போய் விழுந்தது. படபடவென சிறகோசை கேட்டது. ""உனக்கு எல்லாமே நல்ல விஷயமா இருக்கா?'' என்றார்.
"தெரியலை. அதுக்கு இன்னும் நாளாகும்'' என்று சிரித்தேன்.
என்னுடைய பதில் அவருக்குப் பிடித்திருந்தது. "சரி. நீ போய் படு மிஸ்டர்''
"காலையில் பார்க்கலாம்'' என எழுந்தேன். நம்பிக்கையற்றுச் சிரித்தார். நான் அனிச்சையாக தூக்கியெறியப்பட்ட மருந்து பாட்டில் விழுந்த இடத்தைப் பார்த்தேன்.
"இன்னொரு மருந்து பாட்டிலும் இன்ஜெக்ஷனும் இருக்கு. உனக்குத் தேவைப்படும். எடுத்து வெச்சுக்க'' கண் சிமிட்டிச் சிரித்தார்.
"இந்த நேரத்தில இதை வாங்கித் தந்தவனும் இதை இன்ஜெக்ட் பண்ணவனும்தான் நல்லவன்''
நான் திகைத்தபடி நின்றிருந்தேன். மனிதர் கலக்கமின்றி இருந்தார்.
"சீக்கிரம் கீழே போயிடு மிஸ்டர்.'' அந்த ஹீனசுரத்தில் அதட்டலை உணர்ந்தேன். மருந்தை எடுத்துக் கொண்டேன். விழிகளை மூடித் திறந்து வழியனுப்பினார்.
நான் கீழே வந்தேன். ஜெனரல் வார்டில் எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தனர். ஒரே ஒரு பூஜ்ஜிய பல்புமட்டும் எரிந்தது. புறாக்கள் அடுத்து முட்டையிடுவதற்கான ஏற்பாட்டில் தீவிரமாக இருந்தன.

அம்ருதா ஆகஸ்ட் 2009

LinkWithin

Blog Widget by LinkWithin