அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வெளியிட்டுள்ள இருவாச்சி திரட்டு நூலில் என் கட்டுரை
இது என் ஏரியா.. அத்துமீறி உள்ளே நுழையாதே என்பதற்கு விலங்குகள் சில அடையாளங்களைப் பதிக்கின்றன.
சிறுத்தைகள் நகங்களால் மரங்களில் கீறிவைக்கும். புலிகள் தம் பிராந்தியத்தை சிறுநீர் தெளித்து அடையாளப்படுத்தும். நாய்களுக்கும் இந்தச் சிறுநீர் பயன்பாடு உண்டு. பிரத்யேக வாசனைகளாலும் தங்கள் இருப்பிடத்தை வகுத்துக் கொள்ளும் விலங்கினங்கள் உண்டு. மனிதர்களுக்கு இப்படி எல்லைக் கோடு வகுத்துக் கொள்ளும் உரிமை என்றோ மறுக்கப்பட்டுவிட்டது. இனக்குழுக்கள், அரசுகள் தோன்ற ஆரம்பித்த நாளிலேயே இது நிகழ்ந்துவிட்டிருக்க வேண்டும். இருப்பினும், பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் எல்லை வகுக்கும் தன் மிருக குணத்தை மனிதனால் மறக்க முடியவில்லை. துப்பும் பழக்கத்தை அவனால் இன்றும் மீற இயலவில்லை.
துப்புவதற்கான காரணங்கள்தான் மாறிப்போய்விட்டன. பெரும்பான்மையான மனிதர்கள் துப்புவதை மிக இயல்பாகச் செய்கிறார்கள். வெகுநாள் கழித்து நண்பனைச் சந்தித்தால் பேசுவதற்கு ஆயத்தமாவதற்கு துப்புகிறார்கள். முகவரி தேடி அலுத்துப் போனால் துப்புகிறார்கள். முகவரி கிடைத்துவிட்டாலும் சந்தோஷத்தில் துப்புகிறார்கள். பஸ்ûஸவிட்டு இறங்கியதும் துப்புகிறார்கள். பஸ்ஸிலும் போகும்போது ஜன்னல் ஓர இருக்கை கிடைத்துவிட்டால் துப்பிக் கொண்டே செல்வதற்கு வசதியாக இருக்கிறது. பஸ்ஸில் ஏறுவதற்கு முன்பு படிக்கட்டுக்கு இரண்டடி முன்பு, ஓர் அவசரப் பணியாகத் துப்பிவிட்டு ஏறிக் கொள்வதைப் பார்க்கிறேன். சிலர் கோபம் வந்தால் துப்புகிறார்கள். துப்புவது சந்தோஷம், வெட்கம், துக்கம், ஏமாற்றம், மோனநிலை, ஏகாந்த நிலை என்று அனைத்துப் மெய்ப்பாடுகளுக்கும் ஏற்புடையதாக இருக்கிறது.
என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர் என்னைப் பார்த்ததும் ஒவ்வொரு நாளும் பரவசம் பொங்கும் முகத்தோடு எதிர் கொள்வார். அதே பரவசத்தோடு சட்டென இடப்பக்கமோ, வலப்பக்கமோ திரும்பி பிளிச் என்று துப்புவார். என்னிடம் பேசுவதற்கு முன்பு வாயைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்கு அவர் செய்து கொள்ளும் உபாயமாக அது இருக்கலாம். ஒருவகையில் அது எனக்குத் தரும் மரியாதை என்று கருதுகிறார் போலும். அவமரியாதையே மரியாதை செயலாய் மாறிவிடும் விந்தைத் தருணம் அது. அவருடைய முகக் குறிப்பை வைத்து நான் இதை ஆழமாக உணருகிறேன்.
சில மனிதர்கள் துப்புவதை தங்கள் சுய உரிமையாக கருதுகிறார்கள். இந்த உரிமைப் பிரச்னையைப் புரிந்து கொள்ள இங்கே துப்பவும் என்று போர்டு எழுதி தொட்டி வைத்திருக்கும் இடத்தைப் பார்த்தால் தெரியும். தொட்டிக்குள் துப்புவதைவிட அதன் பக்கத்தில் இருக்கும் சுவரிலோ, தரையிலோ துப்புவதுதான் அதிகமாக இருக்கும்.
வெறும் எச்சிலை மட்டும் துப்பவது சிரமமான வேலை. வெற்றிலை போட்டு துப்புவதோ, புகையிலை போட்டு துப்புவதோ துப்புவதை வேகப்படுத்துவதற்கு உகந்த வழியாக இருக்கிறது. வாய் நிறைய சுமார் அரை டம்ளர் கொள்ளளவுள்ள புகையிலைச் சாறை வைத்துக் கொண்டு.. அதே நிலையில் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி, அல்லது கேள்வி கேட்டுவிட்டு மொத்தமாகத் துப்புபவர்கள் உண்டு.
பான்பராக் விற்பனைக்கு வந்தபோது இந்தத் துப்பல் கலாசாரம் வண்ணமயமாகியது, வாசனை மயமாகியது. வீட்டைவிட்டு வெளியே வந்ததும் ஒரு சரம் பான்பராக்கை வாங்கி பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டால் அந்த நாளில் தன் கண்ணில் படுகிற மரம், போஸ்ட் கம்பம், குப்பைத் தொட்டி, வாஸ் பேஸின், சிறுநீர் கழிக்கும் பீங்கான் எல்லாவற்றிலும் "எச்சில் இலக்கம்' பொறிக்கத் தொடங்கிவிடுகிறான் மனிதன். எச்சில் இலக்கியம் என்று பொருள் கொண்டாலும் பிழையில்லை.
மனிதன் மனிதன் என்று வலியுறுத்திச் சொல்லுவதற்குக் காரணம் இருக்கிறது. தம் உமிழ் நீரைப் பயன்படுத்தி இத்தனை பெரிய சாம்ராஜ்ஜியத்தை அமைக்கும் திறன் மனிதனுக்கு மட்டுமே உண்டு.
பொது இடங்களில் கைதட்டி அழைப்பது, எச்சில் துப்புவது குற்றம் என்று காவல்துறை சொல்கிறது. பொது இடங்களில் புகைப்பிடிப்பது குற்றம் என்றும் ஒரு சட்டம் காற்றிலே பறக்கவிட்டது போல அவையும் இருக்கின்றன. இவையெல்லாம் மனிதர்களின் ஆதி உரிமைகள் என்பது அரசுக்கும் போலீஸôருக்கும் புரியாதா என்ன?
அவர்களின் பெருந்தன்மையை அவர்கள் போட்டிருக்கும் சட்ட நுணுக்கங்கள் மூலமாகவே நாம் அறிந்து கொள்ள முடியும்.
எல்லா பொது இடங்களிலும் சிகரெட்டை எல்லா பெட்டிக் கடைகளிலும் விற்கலாம். ஆனால் அதை பொது இடத்தில் பயன்படுத்தக் கூடாது. பான்பராக்கை விற்பதற்குத் தடை, ஆனால் அதை மென்று கொண்டிருக்கும் மனிதனின் வாய்க்கு எந்தவிதத் தடையும் இல்லை. எங்கும் பான்பராக் விற்பதில்லையே நீ எப்படி பான்பராக் மென்று கொண்டிருக்கிறாய் என்று எந்த போலீஸ்காரரும் கேட்பதில்லை. இந்தச் சட்டங்கள் வினோதமாக இருக்கலாம். ஆழ்ந்து யோசித்தால் "இந்த' மனித உரிமை குறித்து அரசு கொண்டிருக்கும் அக்கறை புரியும். மறைமுகமாக ஆதரிப்பது புரியும். அதனால்தான் போலீஸ்காரர்கள் தங்கள் பணிகளையும் "துப்பு'த் துலக்குவதாகவே சொல்லுகிறார்கள்.
துப்புவதால் நோய் பரவுவதாகச் சொல்லுகிறார்கள். அதற்கும் ஆதாரபூர்வமாக கதை வைத்திருப்பார்கள். ஆண்டுக்கு 10 லட்சம் பேர் எச்சிலால் பரவும் நோயால் செத்துப் போவதாக. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத அத்தகைய மக்களை இனங்கண்டு அழிப்பது அவசியம் என்று உணராதவர்கள் பேச்சு அது. துப்புபவரை நோய் பரப்புபவர் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஏனென்றால் துப்புபவரே துப்புறவாளர்கள். துப்புறவாளன் என்பதின் வேர் சொல் எது? துப்புதானே?
துப்புதல் யார்க்கும் இயல்பாம். சில ஆண்டுகளுக்கு வெளியாகி சக்கைபோடுபோட்ட டைட்டானிக் படம் நினைவிருக்கலாம். அதில் கதாநாயகன் ஜாக் கப்பலின் மேல் தளத்தில் இருந்து கடல் நீரை நோக்கித் துப்புவான். கப்பலில் இருந்து எவ்வளவு தூரத்துக்குத் துப்ப முடியும் என்பது போட்டி. அதை நாயகி ரோஸýம் மிகுந்த ஈடுபாட்டுடனும் மகிழ்ச்சியுடனும் செய்வாள். இயக்குநர் ஜேம்ஸ் காமரூனுக்கு இப்படிகாட்சி வைக்க வேண்டும் என்று எப்படி தோன்றியிருக்க முடியும்? தன் முனைப்பான இயல்பூக்கம் காரணமாகத்தான் இந்தக் காட்சி படத்தில் புகுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
சில துப்பார்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் துப்புபவரை கேவலமாகவோ, எரிச்சலாகவோ பார்க்கிறார்கள். அதற்கு பண்படாத மனம்தான் காரணம். அவர்களைப் பண்படுத்த இந்தக் கட்டுரையில் ஆயப்பட்டிருக்கும் சில துப்புகள் பயன்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
எஞ்சியிருக்கும் எச்சில் குடிகளே... துப்புபவர்களே.. நீங்கள் எல்லாம் சேர்ந்து இந்தத் துப்பார்க்கு ஒரு தண்டனையை வழங்குங்கள். நீங்களும் துப்பாமல் இருந்து அந்த மரபை அழித்துவிடுங்கள். அப்போதாவது சிட்டுக்குருவிகள் அழிந்துவிட்டன, சிங்கங்கள் அழிந்துவிட்டன என்று புலம்பும் துப்பார்கள், துப்புபவர் விஷயத்தில் தப்பு செய்துவிட்டதை உணரட்டும்.