வியாழன், செப்டம்பர் 27, 2007
வேரோடும்...வேரடி மண்ணோடும்...
தமிழ்மகன்
ஒரு சமூகம் தன் அடையாளங்களைத் தொலைத்துவிட்டு நிற்பது எப்பேர்பட்ட பரிதாபம்? விவசாய நாடான இந்தியா, தம் பாரம்பர்ய விவசாய உத்திகளைக் கைவிட்டு இன்று கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. இதன் பூர்வீக விதை நெல்கள் இப்போது இந்தியாவில் இல்லை. களைக் கொல்லி, பூச்சி மருந்துகள், செயற்கை உரங்கள் அனைத்துமே இந்திய விவசாயத்தில் இருந்ததில்லை. பசுமைப் புரட்சி என்ற பெயரில் ஏற்பட்ட இந்த மாற்றம் (தடுமாற்றம்?) இன்று பல நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது.
இவை பற்றிய விழிப்புணர்வை வலியுறுத்தி வெளியாகி இருக்கிறது "வேர்களைத் தொலைத்துவிடாதீர்கள்' என்ற ஆவணப் படம். எஸ்.ஏ.இ. திரைப்படக் கல்லூரி மாணவர் கே.அமர்நாத் ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்கித் தயாரித்திருக்கிறார். இன்று இந்தியா முழுதும் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பையும் எழுச்சியையும் ஏற்படுத்தியிருக்கும் இப் படம் குறித்து அவரிடம் பேசினோம்.
இப்படியொரு படம் தயாரிக்க வேண்டும் என்பதற்கான ஆதார எண்ணம் எப்படி ஏற்பட்டது?
நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆம்பூரை அடுத்த குடியாத்தம் அருகே என் கிராமம். தொழிற்சாலை ரசாயனக் கழுவுகளும் பயிர்களுக்கு நாமாகப் பயன்படுத்திய ரசாயனமும் பயிர்த் தொழிலைப் பாழாக்கிவிட்டதை என் கண் முன்னாலேயே கண்டேன். இப்போது நான் விவசாயியாக இல்லை. என் தந்தையார் காலத்திலேயே விவசாயம் எங்கள் பகுதியில் அதன் மகத்துவத்தை இழக்க ஆரம்பித்துவிட்டது. இந்தச் சுயபாதிப்பு அடிப்படைக் காரணம். இது குறித்து மேற்கொண்டு தகவல் தேடிய போது அது என் சுயபாதிப்பைக் கடந்த விஷயமாகி விட்டது.
இந்த ஆவணப் படத்தின் சிறப்புத் தன்மையாக நீங்கள் கருதுவது எதை?
விவசாயிகளுக்கும் படித்த மேதாவிகளுக்கும் இடையே இருக்கும் இடைவெளிதான் இந்தியாவின் 80 சதவீத மக்களின் ஜீவாதாரமான பிரச்சினை பொருட்படுத்தப்படாமல் இருப்பதற்குக் காரணம். வலுவாக இதைப் பற்றிப் பேசக் கூடியவராக இருக்க வேண்டும் என்பதற்காக வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களைத் தேர்ந்தெடுத்தேன். செயற்கை உரங்கள் எதற்காகத் தயாரிக்கப்பட்டன. எதற்காகப் பசுமைப் புரட்சி என்ற பெயரில் அவை இந்தியாவில் சந்தைபடுத்தப்பட்டன என்ற தகவல்களோடு அவற்றால் ஏற்படும் நோய்களையும் இந்த ஆவணப் படத்தில் மிகச் சிறப்பாகப் பட்டியல் இட்டிருக்கிறார்.
செயற்கை உரங்கள் தயாரிக்கப்பட்டது ஏன்? குறிப்பாக என்ன நோய்கள் ஏற்பட்டன?
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு வல்லரசுகளின் வெடி மருந்து தொழிற்சாலைகளுக்கு வேலை இல்லாமல் போனது. அமோனியாவையும் நைட்ரஜனையும் வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவை யூரியாவாகவும் அமோனியம் சல்பேட்டாகவும் வேறு சில உரங்களாகவும் சந்தைப்படுத்தப்பட்டன. பயிர்கள், ஊக்க மருந்து செலுத்தப்பட்ட ஓட்டப்பந்தய வீரனைப் போல தன் தன்மையில் வீரியத்தைக் காட்டின.
விளைவு... அதை உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட்டது. உணவுப் பொருட்களில் ஏற்பட்ட அதிகப்படியான கார்போ ஹைட்ரேட் அடர்த்தியினால் சர்க்கரை நோய்... அதற்காக நாம் சாப்பிடும் மருந்துகளால் மேலும் பக்க விளைவுகள்... சங்கிலித் தொடர் போல ரசாயனத்தின் பிடியில் சிக்கிக் கொண்டோம். ரசாயனங்கள் நமது பாரம்பர்ய பயிர்களை மட்டுமன்றி நம் மண்ணையும் பாழாக்கிவிட்டது.
இந்தியா முழுதும் உள்ள விவசாயிகளிடம் இந்த ஆவணப்படம் எப்படி சென்றடைந்தது?
அது யாரிடம் எப்படிச் செல்கிறது என்பது என் கையிலேயே இல்லை. திடீரென்று பீகாரிலிருந்தோ, கர்நாடகாவிலிருந்தோ விவசாயிகள் யாராவது பேசும்போதுதான் இது அங்கெல்லாம் சென்றிருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறேன். நம்மாழ்வாரும் விவசாயிகளின் அழைப்பின் பேரில் நேரில் சென்று விளக்கம் தருகிறார். இந்த ஆவணப்படத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தயாரித்திருக்கிறேன்.
சில இடங்களில் அவர்களாகவே அவர்கள் மொழியில் பின்னணிக் குரல் கொடுத்தும் சப் டைட்டில் போட்டும் திரையிடுகிறார்தகள். மேற்கு வங்கத்தில் "சேவா' என்ற விவசாய அமைப்பும் கேரளத்தில் "தானல்' அமைப்பும் கர்நாடகத்தில் "நாகரிகா' அமைப்பும் ஆந்திரத்தில் "அந்த்ரா' என்ற அமைப்பும் தமிழகத்தில் "இயற்கை உழவு' என்ற அமைப்பும் இதை மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் இருக்கின்றன.
இதனால் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?
நிச்சயமாக. பல கிராமங்களில் இயற்கை உரங்கள் மூலமே பயிர்செய்வோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் இதை முழுமையாக உணர முடியும்.
வேறு ஆவணப் படங்கள் தயாரித்திருக்கிறீர்களா?
சுனாமி பாதிப்பை உணர்த்தும் ஆவணப் படத்தை ரவுண்ட் டேபிள் அமைப்பினருக்காக தயாரித்தேன். இண்டெர்நெட்டில் சிக்கி உழன்று கொண்டிருக்கும் இளைஞர்களின் நிலையைச் சொல்லும் படத்தையும் தயாரித்தேன். வனப் பாதுகாப்பை வலியுறுத்தும் படம் ஒன்றை உதகையில் இருக்கும் அயல்நாட்டு அமைப்பினருடன் சேர்ந்து தயாரித்து வருகிறேன். ஈஷா யோகா அமைப்பினர் நாடெங்கும் லட்சக் கணக்கில் மரம் நடுவதைப் பற்றியும் படமெடுக்கும் திட்டம் உண்டு. விளம்பரப் படம், சினிமா இவற்றிலும் தடம் பதிக்கும் ஆர்வமிருக்கிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)