ஞாயிறு, மார்ச் 08, 2009

திரைக்குப் பின்னே- 23





ஒரு விமர்சனம்!

எனக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் ஏற்பட்ட முதல் பேச்சு வார்த்தை ஒரு சண்டையில் முடிந்தது. அப்போது அவர் மணிரத்னத்தின் உதவியாளராக இருந்தார். ‘உயிரே' வெளியான போது நான் எழுதிய விமர்சனம் அவருக்குக் கடும் கோபத்தை உண்டுபண்ணியது. காலையில் வீட்டுக்குப் போன் செய்து "பேனா கையில இருந்தா என்ன வேணா எழுதிடுவீங்களா?'' என்றார்.

படத்தில் இரண்டு விஷயங்களைக் கண்டித்திருந்தேன். ஷாரூக்கான் மீடியா மனிதராக வருகிறார். திரிபுராவில் ரேடியோவில் செய்தியாளராக வேலைக்கு வரும் அவர், அங்கு ஏன் அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடக்கிறது, எதற்காக தீவிரவாதிகளும் ராணுவத்தினரும் மோதிக் கொள்கிறார்கள் என்று ஆச்சரியமாகக் கேட்பார். திரிபுராவில் துப்பாக்கிச் சூடு என்பது ஒரு தினசரிச் செய்தி. அது எதற்காக என்பதும் சாதாரண அளவிலாவது ஒரு செய்தியாளருக்குத் தெரிந்திருக்கும். அதிலும் அந்த மாநிலத்துக்கே செய்தியாளராகச் செல்கிறவருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டும். நாயகனோ ‘சய்யா.. சய்யா' என்று பாட்டு பாடிக் கொண்டு தன் பொறுப்பையும் சூழலையும் புரிந்து கொள்ளாதவராக இருக்கிறார். படத்தின் மிகப் பெரிய தவறு இது என்று எழுதியிருந்தேன்.

இரண்டாவது, படத்தில் இடம் பெறும் ஒரு பாடல். காதலின் சிறப்பைச் சொல்லும் பாடல் வரியில் காதலில் மரணம்தான் உயர்ந்த நிலை என்று சொல்லப்பட்டிருக்கும். காதல் தோல்வி மரணங்கள் நிறைந்த ஒரு நாட்டில், இது ஆபத்துக்கு வழி வகுக்கும் என்று எழுதியிருந்தேன். அவருடைய கேள்விக்கு, பதிலுக்கு நான் ஏதோ சொல்ல, அவர் பதிலடி கொடுக்க.. நான்.. பதி... அவர் படாரென்ற சத்தத்தோடு போனை வைத்துவிட்டார்.

அதன் பிறகு ஒரு நாள் குமுதம் வார இதழின் இயக்குநர் வரதராஜன் என்னைச் சந்திக்க விரும்புவதாக போன். பத்திரிகையாளர் மணா பேசினார். வரதராஜன், மணா இருவரும் அண்ணாசாலை பாலிமர் ஹோட்டலில் சந்தித்துப் பேசினர். வரதராஜன் குமுதம் இதழில் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்றார். நான் யோசித்துச் சொல்வதாகச் சொன்னேன். அடுத்து அவர், "நீங்கள் எங்கள் பத்திரிகைக்கு வரவில்லை என்றாலும் உங்களை நேரில் பார்த்ததே எனக்குப் பெருமைதான்'' என்றார். என்னை நேரில் பார்ப்பதில் அவருக்கு அப்படி என்ன பெருமை என்று புரியவில்லை. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பேசலாம் என்று அவருடைய பர்ஸனல் நம்பரைக் கொடுத்தார்.

நெகிழ்ந்து போய்விட்டேன். தமிழகத்தின் முன்னணி வார இதழின் உரிமையாளர் இப்படியொரு வார்த்தை சொன்னால் ஒரு பத்திரிகையாளனுக்கு வேறென்ன மரியாதை வேண்டும்? நான் உடனே வந்து சேருகிறேன் என்று ஒப்புதல் சொல்லிவிட்டேன்.

ஆனால் குமுதத்தில் ஆறேழு மாதங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. வெளியே வந்த பின்னர் மீண்டும் சுசி கணேசனிடம் இருந்து போன். "என்ன தலைவா... உங்களை நான்தான் குமுதத்துக்குச் சிபாரிசு செய்தேன். இப்படி அவசரப்பட்டு வந்துவிட்டீர்களே?'' என்றார் மிகுந்த நட்போடு.

இவர் சண்டைக்காரராயிற்றே... இவர் எப்படி? அவரிடமே கேட்டேன்.

"தலைவா, அப்ப நான் மணி ஸார் அஸிஸ்டென்ட். அவருக்காக வாதாடினேன். அதே சமயத்தில் நானும் ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் உங்களைப் போன்ற பத்திரிகையாளனை அடையாளம் காட்ட வேண்டியது என் கடமை'' என்றார். இந்தப் படிப்பினையை என் பாடத்தில் சேர்த்துக் கொண்டேன்.


ஷகிலா என்ற பள்ளி மாணவி!

மலையாளப்படங்களில் மம்முட்டி, மோகன்லால் படங்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த செக்ஸ் குயின் ஷகிலாவைத் தெரிந்திருக்கும். கோடம்பாக்கத்தில் யுனைட்டெட் இந்தியா காலனியில் சிறிய அடுக்குமாடி வீட்டில் பத்தாம் வகுப்பு மாணவியாக இருந்தபோது அவரைப் பற்றி முதன் முதலில் அறிந்தேன். பாப்பாங்குளம் பாரதி என்ற சினிமா நிருபர் அந்தப் பெண்ணின்ஒரு புகைப்படத்தைக் கொடுத்து ஏதோ படத்தில் புதுமுகமாக நடிக்கிறார் என்று ஒரு துணுக்குச் செய்தி தந்தார். முஸ்லிம் குடும்பப் பின்னணி. அவருடைய தந்தை சினிமா துறையில் சம்பந்தப்பட்டவர்தான். ஒல்லியான சின்னப் பெண். அவர் முதலில் நடிப்பதாகச் சொன்ன படம் வெளிவந்ததாகத் தெரியவில்லை. அடுத்து வேறு ஏதோ படத்தில் நடிப்பதாகச் செய்தி. படத்தில் துண்டு வேடம். கவுண்டமணிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் என்றெல்லாம் குட்டி, குட்டிச் செய்திகள் வந்தன. குட்டிப் பெண்ணாக இருந்த ஷகிலா சற்றே அகலமாகவும் உருண்டையாகவும் மாறிக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் அவருடைய தங்கையும் நடிக்கக் களம் இறங்கினார்.



இரண்டு பெண்களிடத்தும் ஏதோ வசீகரம் இருந்தது. ஆனால் ஏனோ எதிர்பார்த்த இடத்தைப் பிடிக்கவில்லை.

கொஞ்ச நாள்கழித்து மிகக் குறைந்த ஆடையில் ஷகிலாவின் புகைப்படங்கள் வெளியாகின. மலையாளப் பட உலகில் பிஸி என்றார்கள்.

கவர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் அதிர்ச்சி பெரிதாக இருந்தது. பத்தாம் வகுப்பு மாணவியாக அறிமுகமான பெண், கண் முன்னாலேயே இப்படி வேறொரு அவதாரம் எடுத்தது ஜீரணிக்க முடியாததாகத்தான் இருந்தது. போஸ்டர்களில் பாவாடையைக் கக்கம் வரை தூக்கிக் கட்டிக் கொண்டு எப்போதும் குளித்துக் கொண்டிருந்தார். வண்ணத்திரையின் நடுப்பக்கத்தின் பிரதான நாயகியானார். அவருடைய பள்ளித் தோற்றம் மெல்ல மனதில் இருந்து மறைந்து அவரை சதைகளால் மட்டும் ஆன பெண்ணாகப் பார்க்கப் பழகிய நாளில் அவருடைய சகோதரி என்ன ஆனார் என்று விசாரித்தேன்.

அவர் நடிக்க வந்த சில நாளிலேயே இறந்து போய்விட்டார் என்றார்கள். எப்படி என்று பதறியபோது அது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.


வைரமுத்து எழுதிய கடிதம்!




சிறுவயதில் புரசைவாக்கம் பகுதியில் குடியிருந்தவன் என்கிற ஒரு காரணமே கவிஞர் வைரமுத்துவின் மீது எனக்கு அதீத ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அவரும் தம் கல்லூரி நாள்களில் புரசை பகுதியில் தங்கியிருந்தார் என்கிற காரணம்தான். கந்தப்ப கிராமிணி தெருவைப் பற்றியும் தாணா தெருவைப் பற்றியும் அவருடைய வாழ்க்கைத் தொடரில் ‘தன் ராத்திரி நேரத்து ராஜ பாட்டை' என்று வர்ணித்தபோது, நான் எழுத வேண்டியதை அவர் எழுதிவிட்டதுபோல சிலிர்த்துப் போனேன்.

அப்போது எஸ்.அறிவுமணி, ஞானராஜ் போன்ற புரசைவாக்கத்துப் பேனாகாரர்களிடம் எனக்கு நல்ல அறிமுகம் இருந்தபோதும் நான் வைரமுத்துவைச் சென்று சந்திக்கத் தயங்கினேன். அவர் என்னைவிட வயதில் மூத்தவர் என்பதைவிட நான் சிறிய பையனாக இருந்தேன் என்ற தயக்கம் இருந்தது.

எண்பதுகளின் இறுதியில் பெரியார்தாசனோடு அவரைச் சந்தித்தபோதும் பேச நினைத்தது எதையும் பேசாமலேயே வந்தேன். பத்திரிகை நிருபரான பின்னும் ஏனோ தயக்கம் மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவருடைய வளர்ச்சி மலைக்க வைக்கும் பிரமாண்டமாக இருந்தது. பத்திரிகை நிருபராக பதினைந்து ஆண்டுக்காலம் ஆனபின்னும் நான் சந்திக்காத திரையுலகப் பிரபலம் வைரமுத்து மட்டும்தான்.

‘திரைப்பாடல் இலக்கியம் ஆகுமா?' ஒரு வாசகரின் கேள்விக்குப் பதில் அளிக்கும்விதமாக வைரமுத்துவின் திரைப் பாடல் ஒன்றை உதாரணம் காட்டி எழுதியிருந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பும் இளைஞன் தன் முறைப் பெண்ணுக்கு எழுதும் கடிதம்போல அமைந்த பாடல்வரி அது.

"ஐத்தையும் மாமனும் சுகம்தானா?

ஆத்துல மீனும் சுகம்தானா?

அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும் சுகம்தானா?''

-என்ற வரியைக் குறிப்பிட்டு இதெல்லாம் இலக்கியச் சுவையுள்ள வரிகள்தான் என்று எழுதினேன். மறுநாள் வைரமுத்து எனக்கு ஒரு நன்றிக் கடிதம் எழுதியிருந்தார். அப்படியொரு பூரிப்பு.


அவரைச் சந்திக்கும் தைரியம் வந்து, நான் எழுதிய சில புத்தகங்களை அவரிடம் கொடுத்தேன். பார்த்துவிட்டு, "நிறைய எழுதுங்கள். நிறைய படியுங்கள். விதையிலிருந்து ஆரம்பத்தில் இலைகள்தான் வரும். பிறகுதான் பூக்களும் பழங்களும்வர ஆரம்பிக்கும். நம் புத்தகங்கள் பேசப்படவில்லையே என்று வருந்த வேண்டாம். எழுதிக் கொண்டே இருங்கள்'' என்றார். மிகவும் நெருக்கமாக அரைமணி நேரத்துக்கும் அதிகமாகவே பேசிக் கொண்டிருந்தார்.

பதினைந்து ஆண்டு தயக்கம் தீர்ந்தது.

LinkWithin

Blog Widget by LinkWithin