வியாழன், ஜூன் 25, 2009

பல நேரங்களில் பல மனிதர்கள்!




தவறு செய்யாமல் இருப்பதுதான் மனிதப் பிறவியின் நோக்கமாக இருக்கமுடியும். அதற்கு நிறைய அனுபவம் தேவைப்படுகிறது. அந்த அனுபவத்தைப் பெறுவதற்கு நாம் சில தவறுகள் செய்ய வேண்டியிருக்கிறது.. எண்ணிறந்த மனித விசித்திரங்களின் சுழற்சி இது.

ஒரு சிலர் முதலில் இருந்து ஆரம்பிக்கிறார்கள்; அதாவது தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதாக. சிலர் சில தவறுகளைக் கடந்த அனுபவங்களில் இனி இது போல நடந்து கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு வருகிறார்கள். பலர் தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறார்கள், திருத்திக் கொள்வதற்கு நேரம் இருப்பதில்லை. சிலருக்கு திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே தெரிவதில்லை. தெரிந்தாலும் ஏன் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற வித்தியாசமானவர்களும் இருக்கிறார்கள். மொத்தத்தில் தவறு தவிர்க்க முடியாத உலக இயல்பாக இருக்கிறது. பொது அர்த்தத்தில் தவறு என்பது அறியாமல் செய்யப்படுவது எனப்படுகிறது. அல்லது அவசரத்தில். புத்துயிர்ப்பு நாவலின் அடிநாதமாக இருப்பது தவறுக்கு வருந்தி அதற்கு பிராயசித்தம் தேடுவதுதான்.

உண்மையில் தவறு தனியாகவும் பிராயசித்தம் தனியாகவும் இருக்கிறது. பிராயசித்தத்தின் மூலம் தவறை சரி செய்துவிட முடிவதில்லை என்பது நாவல் நம் மன ஆழத்தில் குருதிக் கசிவோடு உணர்த்தும் பாடம்.

டால்ஸ்டாய் எழுதிய புத்துயிர்ப்பு நாவலின் கதாநாயகன் நெஹ்லூதவ், பெரிய பணக்காரர். பெரும் பண்ணையார். அவருக்கு ஒரு நாள் காலை நீதி மன்ற வழக்கு ஒன்றில் ஜூரியாகப் பங்கேற்பதற்கு அழைப்பு வருகிறது. நகரின் முக்கியமான பிரஜைகளை வழக்கை விசாரிக்கும்போது உடனிருந்து கேட்க வைத்து தீர்ப்புக்கு முன் அபிப்ராயம் கேட்கும் வழக்கம் அப்போது இருக்கிறது. நெஹ்லூதவ் போலவே இன்னும் சிலரும் நீதிமன்றத்தில் இருக்கிறார்கள்.

மாஸ்லவா என்ற விபச்சாரி விசாரணைக்கு அழைக்கப்படுகிறாள். அவள் பணத்துக்காக ஒருவனைக் கொன்றுவிட்டதாக வழக்கு. அவளைப் பார்த்த மாத்திரத்தில் நெஹ்லூதவ் நிலை குலைந்து போகிறார். ஏனென்றால் அவள் தன் அத்தை வீட்டில் வேலைபார்த்து வந்த கத்யூஷா என்ற கள்ளம்கபடமற்ற சிறுமி. இளைஞனாக ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஒரு ஈஸ்டர் தினத்தில் அவளை வலுக்கட்டாயமாக இணங்க வைத்து உறவு வைத்துக் கொள்கிறார். காமப் பித்து தலைக்கேறி ஆடுகிறது. உயிருக்குயிராகக் காதலிப்பதாக, திருமணம் செய்து கொள்வதாகப் பிதற்றுகிறார். செலவுக்கு நூறு ரூபிளைத் திணித்துவிட்டுச் செல்கிறார். ஆனால் அவர் ராணுவப் பணி முடிந்து அடுத்த ஆண்டுகளில் வந்த போது அங்கே கத்யூஸூ இல்லை. அவள் கர்ப்பம் தரித்து, பிரசவித்து, குழந்தையை நோய்க்குப் பறிகொடுத்துப் பிழைப்புக்கு வழியில்லாமல் ஆசை நாயகியாக அவதாரமெடுக்கிறாள். அப்படித்தான் இப்போது கைதியாகி, விசாரணைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறாள்.

தீர்ப்புக்கு அபிப்ராயம் சொல்வதற்கு வந்த பெரிய மனிதரான நெஹ்லூதவ், எங்கே அவள் தம்மைப் பார்த்துவிடுவாளோ என்று பதட்டமாகிறார். அவள் எல்லா ஜூரிகளையும் ஏதேச்சையாகப் பார்க்கிறாள். ஆனால் நெஹ்லூதவ் பதைக்கிறார். இதோ இவன்தான் என் வாழ்க்கை சீரழிந்ததற்குக் காரணம் என்று கத்தி விடுவாளோ என்று நடுங்குகிறார். ஆண்டுகள் பல ஆகிவிட்டதால் அவளுக்கு நெஹ்லூதவ்வின் முகம் நினைவில் இல்லை.

விசாரணை பிறிதொருநாள் தொடரும் என்று அறிவிக்கப்படுகிறது. சிறையில் கத்யூஸூவைச் சந்திக்க ஓடுகிறார். சிறைக் கைதிகளைப் பார்க்க வந்த பலரும் கம்பிச் சட்டங்களுக்கு மறுபக்கத்தில் இரைச்சலாகக் கத்திக் கொண்டிருக்கிறார்கள். கத்யூஷா வுக்கு அந்தச் சத்தத்தில் நெஹ்லூதவ் சொல்லும் எதுவும் சரியாகக் கேட்கவில்லை. உன்னை இந்த அளவுக்கு ஆளாக்கினவன் நான்தான் என்பதை எடுத்துச் சொல்கிறான். ஞாபகம் வந்தாலும் அவளுக்கோ அவன் மீது கோபம் ஏதும் வரவில்லை. பெரிய பணக்காரன் சிக்கியிருக்கிறான். ஆன வரைக்கும் பணத்தைக் கறந்துவிட வேண்டியதுதான் என்று தீர்மானிக்கிறாள். செலவுக்கு ஏதாவது பணம் கொடுத்துவிட்டுப் போ என்கிறாள். குறுக்கும் நெடுக்குமாகக் காவல்காரன் சுற்றுவதால் அவன் மறு முனைக்குச் சென்று திரும்புவதற்குள் கொடு என்கிறாள். அவரோ குற்ற உணர்வால் அவளையே மணந்து கொண்டுவிட வேண்டும் என்பதாகத் துடிக்கிறார். மாஸ்லவாவாக பெயரை மட்டும் மாறிவிடவில்லை, அவளே மாறிப் போய் இருக்கிறாள். அவளுக்குப் பணம்தான் குறிக்கோளாக இருக்கிறது.

ஆனால் அவளுக்கு சிறை தண்டனை உறுதியாகிறது. சைபீரியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறாள். குற்ற உணர்வுக்கு ஆட்பட்ட நெஹ்லூதவ்வும் அவளுடனேயே சைபீரியாவுக்குப் பிரயாணிக்கிறார். கைதிகள் ஆடு மாடுகள் போல சைபீரியாவுக்கு ஓட்டிச் செல்லப்படுகிறார்கள். இவரும் அவர்களுடன் சேர்ந்து வதைபடுகிறார். ஜெயிலுக்குப் பக்கத்திலேயே தங்கியிருந்து சிரமங்களை ஏற்றுக் கொள்கிறார். கடைசிவரை கத்யூஷா வுக்கு நெஹ்லூதவ்மீது காதல் ஏற்படவே இல்லை. அவரை கணவராக ஏற்றுக் கொள்ளவும் அவளுக்கு விருப்பமே இல்லை.

எனக்காக குற்ற உணர்வுக்கு ஆளாக வேண்டாம். நீங்கள் என் வாழ்க்கையைப் பாழாக்கவில்லையென்றாலும் வேறு யாராவது இப்படித்தான் என்னை ஆளாக்கியிருப்பார்கள் என்கிறாள். ஏதோ ஒரு கட்டத்தில் என் போன்ற ஆதரவற்ற பெண்ணின் வாழ்க்கை அப்படித்தான் ஆகும். அதற்கு நீங்கள் பொறுப்பேற்று வருந்த வேண்டாம் என்கிறாள். சிறையிலேயே வேறு ஒருவரை அவள் விரும்ப ஆரம்பிக்கிறாள். ஏதோ ஒரு புள்ளியில் அவருக்குத் தன் குற்றத்துக்கான தண்டனை பூர்த்தியடைந்துவிட்டதாக மனம் தேறுகிறார்.

சுமார் 850 பக்கங்கள் கொண்ட இந்த நாவல் துன்பியல் காவியச் சுவையை அளிக்க வல்லது. மனிதர்களின் குற்ற உணர்வை ரணச் சிகிச்சை செய்து ஆற்றும் திறம் படைத்தது இந்த நாவல். செய்த தவறுகளுக்காக வேதனைப்படும் இதயங்களுக்கு மிகவும் நெருக்கமான உணர்வைத் தருவதாக இருக்கும். அல்லது செய்த தவறுக்கு வருந்த செய்யும் மாயவித்தையை இந்த நாவல் செய்யும். அதனாலேயே உலகம் முழுதும் உள்ள பல இன, மத, மொழியினரையும் வாசகராக பெற்ற மகத்தான நாவலின் பட்டியலில் இது இருக்கிறது.

ஈஸ்டர் தினத்தன்று அந்த அதிகாலைப் பொழுதில் கத்யூஷாவையும் நீதிமன்றத்தில் இருந்து அழைப்பு அனுப்பப்படும் நாளின் நெஹ்லூதவ்வின் காலைப் பொழுதையும் மிக அற்புதமான ஓவியமாகத் தீட்டியிருக்கிறார் பிரபல ஓவியர் பாஸ்தர்னாக். நாவல் படிக்கும் வாசகனுக்குக் கிடைக்கும் மனச்சித்திரத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தவல்லது அது.

துன்பியலுக்கு முக்கியத்துவம் தரும் நாவலாக இருப்பினும் டால்ஸ்டாய்க்கே உரிய நகைச்சுவையும் ஆங்காங்கே இதில் உண்டு. அது மேட்டுக்குடி மனப்பான்மையைக் கிண்டலடிக்கும் வகையைச் சேர்ந்தது.

உதாரணத்துக்கு நீதிமன்றத்துக்கு வரும் நீதிபதி கோர்ட் அரங்கத்துக்குள் வரும்போது வாசலில் நின்று இப்படியோசிப்பார். தாம் சாப்பிட்டு வரும் வயிற்றுக்கடுப்புக்கான சூரணம் நல்ல குணம்தருமா? வாசலில் இருந்து தம் இருக்கைக்குச் செல்லும் வரை தாம் எத்தனை அடிகள் வைக்கிறோமோ அது மூன்றால் முழுதுமாக வகுபடும் எண்ணாக இருந்தால் தம் வயிற்றுக்கடுப்பு நீங்கும் என்று வரையறுத்துக் கொள்வார். கோர்ட்டில் இவருடைய தீர்ப்புக்காக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கைதிகள் இருப்பார்கள். இவருக்கோ இப்படி ஒரு யோசனை. ஒவ்வொரு அடியாக எண்ணிக் கொண்டே வருவார். இருபத்தாறு அடிகள்தான் வரும். அது மூன்றால் வகுபடாத எண். அவசரமாக இருக்கைக்குப் பக்கத்தில் ஒரு சிறிய அடியை எடுத்து வைத்து 27 அடியாக மாற்றிவிடுவார்.
இந்த மாதிரியான மனித குணங்களின் அரிய படப்பிடிப்பு இதில் நிறையவே உண்டு. அது வேடிக்கையாகவும் வேதனையாகவும் வியப்பாகவும் இது எப்படி இவருக்குத் தெரியும் என்று ஆச்சர்யப்படுவதாகவும் இருக்கும்.

ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவலுக்கும் இதற்கும் பல ஒற்றுமைகள் எனக்குத் தென்பட்டன. ஆனால் புத்துயிர்ப்பைப் பொறுத்தவரை பல நேரங்களில் பல மனிதர்களை பாதிப்பதாக இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எல்லோரும் வாழ்வில் ஒரு தரமாவது படிக்க வேண்டிய நாவல்.

புத்துயிர்ப்பு,
லியோ டால்ஸ்டாய்,
என்.ஸி.பி.எச். வெளியீடு,
41 பி, சிட்கோ இண்டஸ்ட்ரீஸ்,
அம்பத்தூர்,
சென்னை- 98.
போன்: 26359906, 26251968.
ரூ. 275

LinkWithin

Blog Widget by LinkWithin