"சரக்கு அடிப்பது சப்பை மேட்டர்!'
சிவாஜியின் பேரன் துஷ்யந்த் நடித்த படத்தில் அறிமுகமானார் சோனியா அகர்வால். அடுத்து வந்த "காதல் கொண்டேன்' திரைப்படம் அவருக்கு மிகப் பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது.
வழக்கமாக மும்பை நடிகைகள் என்றால் படப்பிடிப்பு நேரத்தில் குடும்ப சகிதமாக சென்னைக்கு வந்து நட்சத்திர ஹோட்டலில் தங்குவார்கள். விமான டிக்கெட், ஹோட்டல் பில் என்று பில் எகிறும். தயாரிப்பாளர் அந்தச் செலவில் இன்னொரு படம் எடுத்துவிடலாம் என்று புலம்புவார். எனக்குத் தெரிந்து சோனியா அகர்வால் தனியாகத்தான் படப்பிடிப்புக்கு வந்தார். எளிமையான நடிகை. பேட்டி நேரங்களிலும் அந்த எளிமையும் துணிச்சலும் அவரிடம் இருந்தது. வட இந்திய நடிகையான அவரை வண்ணத்திரை நிருபர் சுரேஷ் ராஜா பேட்டி காண சென்றார். அவர் மது அருந்துவார் என்பது அப்போதைய சூடான கிசி கிசுவாக இருந்தது. அவரைப் பற்றி இப்படி ஒரு கிசு கிசு உலவிக் கொண்டிருப்பதைப் பற்றித் தெரியாதவராக இருந்தார் அவர்.
நமது நிருபர் இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டுவிட்டு ரியாக்ஷனுக்காகக் காத்திருந்தார்.
""ஆமாம் குடிப்பேன்'' என்றார் அவர். இவ்வளவு இடம் கொடுத்தால் போதாதா? நிருபருக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது. எவ்வளவு குடிப்பீர்கள், என்ன ரக மதுவை அருந்துவீர்கள் என்றெல்லாம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார். பொதுவாக நடிகைகள் பிறந்த ஆண்டைச் சொல்ல மாட்டார்கள். அவர் தன் பிறந்த நாளோடு பிறந்த ஆண்டையும் சொன்னார். வயசு தெரிந்தால் பரவாயில்லையா என்று கேட்டதற்கு "வயசை எத்தனை வருஷம் மறைக்க முடியும்? '' என்றார்.
அடுத்த வார வண்ணத்திரையின் அட்டைப்படத் தலைப்பு: "சரக்கு அடிப்பது சப்பை மேட்டர்''- சோனியா அகர்வால் ஆவேசம்!
பேட்டி வெளியான பத்திரிகையைப் பார்த்தும்கூட அவரிடம் பெரிய ரியாக்ஷன் இல்லை. மிகச் சரியாக பேட்டி வந்திருப்பதாகத்தான் கருதினார்.
ஆச்சர்யப்படுத்திய நடிகை.
பங்கஜ் புதிர்!
திரையுலகின் எத்தனையோ தீராத புதிர்களுக்கு விடையே இல்லாமல் விட்டிருக்கிறேன்.
அதில் இது ஒரு புதிர்.
பங்கஜ் மேத்தா என்ற ஃபைனான்சிஸர் முதன் முதலாகப் படம் தயாரிக்க முனைந்து "மாறன்' என்ற படத்தை எடுத்தார். மார்வாடி இனத்தவரான அவர் பல தமிழ்ப் படங்களுக்கு முதலீடுசெய்பவர். நாவரசன் கொலை வழக்கைச் சம்பந்தப்படுத்திய படம் அது. அந்தப் படத்துக்கு மேலும் சில பரபரப்புகளும் இருந்தன. பார்த்திபனை பிரிந்த பின் சீதா மீண்டும் நடிக்க வந்த படம்... சத்யராஜின் மகனாக மணிவண்ணனின் மகன் அறிமுகமாகும் படம்... இப்படியான பரபரப்புகள் படத்துக்கு இருந்தது.
எனக்கு வேறு ஒரு ஈர்ப்பு அந்தப் படத்தின் மீது இருந்தது. தமிழ் நாட்டில் மாறன் என்பது தனி மனிதரின் பெயராக மட்டுமின்றி ஒரு குடும்பப் பெயராக மாறிவிட்ட நேரம். இவர் ஏன் இப்படி ஒரு தலைப்பை படத்துக்கு வைத்தார் என்பதுதான் அது.
அவரைச் சந்திக்கப் போனபோது மேலும் அதிர்ச்சி. அவர் டேபிளில் கலைஞரின் படம். இத்தனைக்கும் அப்போது கலைஞர் ஆட்சியில் இல்லை. கொச்சையான உச்சரிப்பில் தமிழ் பேசும் அவர் ""எனக்கு தமிழ்னா உயிர் ஸார்'' என்றார். ""கலைஞர்னா அதைவிட உயிரு'' என்றார். எதற்காக இவருக்கு கலைஞர் மீது உயிர் என்று புரியவேயில்லை.
எதற்காக உங்களுக்கு அவர் மீது உயிர் என்று கேட்டேன். என் கேள்வியில் ஏதோ பிழையிருப்பதாக அவர் என்னைப் பார்த்தார். ஒரு வட இந்தியர்... ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களிடம் நிறைய காரியம் ஆக வேண்டியிருக்கும் அதற்காகக் கலைஞர் பெயரைப் பயன்படுத்துகிறார் என்றால்கூட பரவாயில்லை.
"கலைஞரு ஆட்சில இல்லாதபோதுதான் அவர் படத்தை டேபிள் மேல வெப்பேன். அவர் ஆட்சி இருக்கும்போது எல்லாரும்தான் அவர் படத்தை வெச்சுப்பாங்களே... நமக்கும் மத்தவங்களுக்கும் வித்தியாசம் இருக்குப்பா'' என்றார்.
எதற்கு வித்தியாசம் இருக்க வேண்டும்?
காலத்தின் கட்டளை!
கலைஞரிடம் ஆசி பெறும் என்.ஸி.ஸி மாணவன் புகைப்படம் ஒன்று கிடைத்தது. குங்குமத்தில் பணியாற்றியபோது அந்தப் படத்தைப் பிரசுரித்து, அது யார் என்று கண்டுபிடிப்பவர்க்கு அதிரடி பரிசு காத்திருக்கிறது என்று அறிவித்தோம்.
கலைஞரிடம் ஆசி பெறும் அந்த மாணவர் சரத்குமார். 1970-ம் ஆண்டில் குடியரசு தின அணிவகுப்புக்காகத் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு தில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார் சரத்குமார். முதல்வரிடம் வாழ்த்துகளைப் பெற்றுச் செல்லும் தருணம்தான் அந்தப்படம்.
நிறைய கடிதங்கள் வந்தன. இரண்டு பேர் மட்டும் மிகச் சரியாக சரத்குமார் என்று குறிப்பிட்டிருந்தார்கள். நாங்கள் அறிவித்திருந்த இந்தப் போட்டியைக் கேள்விப்பட்டு சரத்குமார், அந்த இருவருக்கும் பரிசளிக்கும் பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வதாகக் கூறினார்.
500 அல்லது ஆயிரம் ரூபாய் பரிசளிப்பதாக உத்தேசித்திருந்தோம். ஆனால் சரத்குமார் அவர்கள் இருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் பரிசளித்தார். பரிசு பெற்றவர்கள் எங்கள் அலுவலகத்துக்கு வந்து கலைஞரையும் சந்திக்க வேண்டும் என்றார்கள். கலைஞரிடம் சென்று விஷயத்தைச் சொன்னேன். கலைஞர் ""சரத்குமார் எவ்வளவு பரிசு தந்தார்?'' என்றார்.
"பத்தாயிரம்'' என்றேன்.
"தலா ஐந்தாயிரமா?''
"இல்லை அய்யா. தலா பத்தாயிரம்''
எதிரில் இருந்த சின்னக்குத்தூசி அய்யாவை ஆச்சர்யம் தொனிக்கப் பார்த்தார். "ரெண்டு பேருக்குமே பத்தாயிரம் கொடுத்தாரா?'' என்று மீண்டும் ஒரு முறை கேட்டார். அந்த வயதிலும் அவருடைய ஆச்சர்யம் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நான்கு முறை முதலமைச்சராக இருந்த ஒருவருக்கு - தமிழகத்தின் பெயர் சொல்லும் செல்வந்தராக இருக்கும் ஒருவருக்கு - பணம் என்பது இன்னமும் ஆச்சர்யமானதாக இருக்குமா என்பதுதான் என் ஆச்சர்யத்துக்குக் காரணம்.
சரத்குமாரை தொலைபேசியில் அழைத்து கலைஞர் ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் அடைந்ததைச் சொன்னேன்.
சரத்குமார் ஓர் அழகான கோ- இன்ஸிடென்ஸ் சொன்னார்.
"70-ம் ஆண்டில் என்னை வாழ்த்தி டெல்லி அனுப்பி வைத்தார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் என்னை வாழ்த்தி டெல்லிக்கு அனுப்பினார், ராஜ்ய சபா எம்.பி.யாக. எங்கோ பிறந்த இருவரை காலம் முதன்முறையாக ஒன்று சேர்க்கிற போது தற்செயலாக நிகழ்வதாகச் சொல்லலாம். இன்னொரு முப்பதாண்டுகள் கழித்து மீண்டும் இணைத்தபோது அது தற்செயலாகத் தெரியவில்லை. காலத்தின் கட்டளை போல இருக்கிறது'' என்றார்.
"மிக நன்றாக இருக்கிறது உங்கள் ஒப்புமை'' என்றேன்.
அடுத்த சில ஆண்டுகளில் அவர் தி.மு.க.விலிருந்து பிரிந்து அ.தி.மு.க.வில் இணைந்தார். அதுவும் காலத்தின் கட்டளைதான் போலும்.