புதன், ஜனவரி 07, 2009

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்

ஆனந்த விகடனில் என் சிறுகதை

நான் நான்காம் வகுப்பு படித்த போது பார்த்த அந்த முகம்தான் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை மஞ்சு அக்காவுக்கான முகம். ஏனென்றால் அதன் பிறகு அவரை நான் பார்க்கவில்லை. தொடர் வண்டியின் எத்தனை நிறுத்தங்களைக் கடக்கும் போதும் அதிக மாற்றமில்லாமல் தோன்றும் ரயில் நிலையம் போல என் வயதுக்குமான முகமாக இருக்கிறது மஞ்சு அக்காவின் முகம். அந்த முகத்துக்கு மட்டும் முதிர்ச்சியே இல்லை. பளிச்சென்று துறு துறு முகம் அது. அந்தக் கண்களும் உதடுகளும் இன்றும் பிரகாசமாகவே இருக்கின்றன. தேவைப்பட்ட போதெல்லாம் மனதின் ஆழத்தில் இருந்து மிதந்து மிதந்து மேற்பரப்புக்கு வந்து பரவசமூட்டுவதாக அது இருக்கிறது.

சொல்லப் போனால் அக்கா என்று அவரை நான் அழைப்பது அத்தனை சரியில்லை. அது அந்த உறவின் பெயரைக் கொச்சைப்படுத்துவதாக இருக்கும்.

நான் மீன் வரைவதற்குக் கைபிடித்துச் சொல்லித் தந்தவர் மஞ்சுளா அக்காதான். அவர் மிகச் சுலபமாக மீன்களை வரைந்தார். பென்சிலை இப்படியும் அப்படியும் சுழற்றினால் அது மீனாக மாறிவிடுவதாக நான் ஆச்சர்யப்பட்டேன். அவர் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். புதிதாகத் திருமணமாகி நாங்கள் இருந்த வீட்டுக்குக் குடிவந்திருந்த மஞ்சு அக்காவுக்குக் குழந்தைகள் இல்லாததால் எனக்கு அவர்கள் வீட்டில் மிகுந்த செல்வாக்கு இருந்தது. சுரேஷ் அங்கிள் எனக்காக என்றே கேக்கும் சாக்லெட்டும் வாங்கி வர ஆரம்பித்திருந்தார். நான்காம் வகுப்பு படித்தபோது எனக்கு வேறென்ன தேவை இருக்க முடியும்? சாப்பிட சாக்லெட், ஹோம் ஒர்க் செய்ய ஒரு ஆள்.

சுரேஷ் அங்கிள் என்னை "மயங்குகிறாள் ஒரு மாது' என்ற படத்துக்கு அழைத்துச் சென்றார். அது என் வயதின் ருசிக்கு ஏற்ற படம் அல்ல. அதில் கணவன் மனைவிக்குள் சந்தேகம் வந்து தத்தளிக்கிற படம். மனைவி வேறொருவனுடன் பழகியதைத் தெரிந்து கணவன் அவனைச் சந்தேகிப்பதுகூட ஓரளவுக்குப் புரிந்தது; ஆனால் அதற்காகக் கணவனும் மனைவியும் ஏன் அவ்வளவு கவலைப்படுகிறார்கள் என்பதுதான் அப்போது புரியாததாக இருந்தது.

""படம் பிடிச்சிருக்கா?'' ரிக்ஷாவில் வீடு திரும்பும்போது சுரேஷ் அங்கிள் கேட்டார்.

செலவு செய்து அழைத்துச் சென்றவரின் மனம் நோகக்கூடாது என்பது போன்ற ஒரு காரணத்தால் பிடித்திருக்கிறது என்று சொன்னேன்.
கொஞ்ச நேரம் சைக்கிள் ரிக்ஷாவின் செயின் சுழலும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அவர் ""சந்தேகம் வீட்டுக்குள்ள நுழைஞ்சுட்டா வீடு அவ்வளவுதான்'' என்றார்.

ஒரு அதிகாலைப் பொழுதில் அவர் எங்கள் வீட்டுக்கு வந்து "மஞ்சுவைக் காணலை'' என்றார். வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர் எப்படிக் காணாமல் போய்விட முடியும் என்று குழம்பிப் போய் நான் பதறினேன்.

"நைட் எனக்கும் அவளுக்கும் சண்டை... அடிச்சுட்டேன். ராத்திரி முழுக்க தூங்காம உட்கார்ந்து அழுதுகிட்டு இருந்தா. மூணு மணிக்குக் கொஞ்சம் அசந்துட்டேன். நாலு மணிக்குப் பார்க்கிறேன்... காணோம்'' என்றார்.

அதன் பிறகு என்னை அவர்கள் அங்கே இருக்க அனுமதிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு அவர்கள் தனியாகப் பேசிக் கொண்டிருந்த அடுத்த சில மணி நேரத்தில் அந்த வீட்டின் குடித்தனக்காரர்கள் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் விஷயமாக இருந்தது. வீட்டின் எதிரில் இருந்த லாண்டரி கடை, பக்கத்தில் இருந்த தையல் கடை எல்லாவற்றிலும் அந்தப் பேச்சு ஓடியது.

மஞ்சு அக்கா இதே வீட்டில் இருக்கும் மனோகரிடம் தொடர்பு வைத்திருந்ததால்தான் அந்தச் சண்டை என்று அப்போது காதில் வாங்கிக் கொண்டு அடுத்த பத்தாண்டுகளில் அந்த விவகாரத்தைப் புரிந்து கொண்டேன்.
வீட்டை விட்டுப் போன மஞ்சு அக்கா கங்காதீஸ்வரர் கோவில் அருகே விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடக்க யாரோ காப்பாற்றி வீடு கொண்டு வந்து சேர்த்திருந்தார்கள். அடுத்த சில நாட்களில் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குப் போய் குடியேறினார்கள். எங்கள் தெரு வாய்களுக்கும் சில நாள்களில் மெல்லுவதற்கு வேறு அவல் கிடைத்தது. அக்கா திடீரென்று ஊரைவிட்டுப் போய்விட்டார்கள் என்பது பெரிய வருத்தமாக இருந்தது. அக்காவைப் பற்றி யார் என்ன பேசிக் கொண்டிருந்தாலும் எனக்குக் கண்களில் நீர் துளிர்ப்பது வழக்கமாக இருந்தது. சமயத்தில் அவர்கள் அக்காவைப் பற்றி அவதூறாகப் பேசிக் கொண்டிருந்தாலும் நான் ஒரு மெüன சாட்சியாக அழுது கொண்டிருந்தேன்.

மஞ்சு அக்காவின் முதல் முகம் இதுதான்.

நான் கல்லூரிக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்த வேளை. வேறு ஒரு புரிதலில் நான் அவரைப் புரிந்து கொண்டது அப்போதுதான். நான்கைந்து குடித்தனக்காரப் பெண்கள் உள்ளறையில் உட்கார்ந்து கதையளந்து கொண்டிருந்தார்கள். விஷயம் மஞ்சுவைப் பற்றி.
இ} மெயில், இண்டெர் நெட், செல் போன் போன்ற எந்த வசதியும் இல்லாமல் இத்தகைய விஷயங்கள் எப்படி விநியோகமாகின என்பது இப்போது நினைத்தால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

"அவன் அப்பவே செத்துப் போயீ... இவ இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணக்கிட்டுப் போயிட்டாளாம்'' இதுதான் சட்டென ஈர்த்தது.
அவர்களின் பேச்சில் அடுத்த அரை மணி நேரத்தில் என்னால் கிரகிக்க முடிந்தது இதுதான்... இங்கிருந்து சென்ற மூன்றாம் ஆண்டிலேயே அதிக குடிப் பழக்கம் காரணமாக சுரேஷ் இறந்துவிட்டார் என்பதும் அடுத்த மூன்றாண்டுகளில் மஞ்சு அக்கா வேறு யாரையோ கல்யாணம் செய்து கொண்டதாகவும் பேசிக் கொண்டிருந்தார்கள். மஞ்சு அக்காவின் இரண்டாவது முகம் அப்போதுதான் மனத் தடாகத்தில் மிதக்கத் தொடங்கியது.

அன்றொரு நாள் பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்த சந்தோஷத்தில் ஓடிப் போய் மஞ்சு அக்காவின் மடியில் விழுந்தேன். மஞ்சு அக்கா தன் வீட்டு வாசப்படியை ஒட்டி உட்கார்ந்திருந்தார். நான் இப்படி வந்து விழுவேன் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. பதறிப்போனார். அக்கம் பக்கத்துப் பெண்கள் எல்லாம் அதைவிட பதறினார்கள். ""ஐயோ... ஐயோ'' என்று தலையில் அடித்துக் கொண்டார்கள். அதன் பிறகு என்னை அவர் எழுந்து செல்ல விடவில்லை. ""நீயும் அக்காகூடவே குளிச்சுட்டு வந்து வேற ட்ரஸ் போட்டுக்க'' என்றார்கள். நான் யாருடன் குளிக்க வேண்டும் என்று குடித்தனக்காரப் பெண்கள் முடிவு செய்தது அநீதியாக இருந்தது. அம்மாவும் நான்கு குடித்தனத்துக்கும் பொதுவாக இருந்த குளியல் அறையில் எனக்கான வேறு ட்ரஸ்ûஸ கொண்டு போய் வைத்துவிட்டு வந்தார்கள்.

மஞ்சு அக்கா தன் கைகள் ஆரம்பிக்கும் இடம் வரைக்கும் பாவாடையை இழுத்துக் கட்டிக் கொண்டு என் பள்ளிக் கூட ஆடைகளைக் கழற்றிக் குளிப்பாட்டினார். எனக்கு அழுகை பீறிட்டது. கதறி அழுதேன். ""இப்ப ஏன் அழறே?... நான் உன்னை இப்படிப் பார்க்கக் கூடாதா?'' என்று கன்னத்தைக் கிள்ளினார். குளியல் என்ற பெயரில் இரண்டு சொம்பு தண்ணீரைத் தலையில் ஊற்றிக் கொண்டு நான் வெளியில் தப்பி ஓடி வந்தேன். மஞ்சு அக்காவே என் டிரஸ்ûஸ துவைத்துக் கொண்டு வந்து கொடுத்தார். ""அக்காவைத் தொட்டுட்டுக் குளிக்காம வந்தா தேள் கொட்டிடும்'' என்றாள் அம்மா.

மஞ்சு அக்காவின் இரண்டாவது முகம் உண்மையில் கொட்டும் தேளாக இருந்தது. அது என் நினைவின் தகிப்புக்கு ஏற்ற ஜோடியாக இருந்தது. மஞ்சு அக்கா சுகத்துக்காக ஏங்கிய ஒரு பெண்ணின் படிமமாக நெஞ்சில் நிலைகுத்தியது. மஞ்சு அக்காவுடன் தொடர்பு படுத்தப்பட்ட மனோகர் என் நினைவுக்கு வந்தார். பருவம் தரும் புதிய பாடமாக இருந்தது எல்லாமும். அவரைப் பற்றி நினைத்துப் பார்க்க நேர்ந்தது சற்று ஏன் என்பது மெல்ல புரிந்தது. அவர் மீது சற்று பொறாமை கொள்ள பழகிக் கொண்டேன். அது எனக்குப் பிடித்திருந்தது. என்னை பிறந்த மேனியாகப் பார்த்த வேற்றுப் பெண் என்றால் அது மஞ்சு அக்கா மட்டும்தான். "நான் உன்னை இப்படிப் பார்க்கக் கூடாதா?' என்ற வாக்கியம் எனக்குப் போதையூட்டும் வாக்கியமானது. மஞ்சு, அக்கா இரண்டும் சேர்ந்து ஒரு பெயர்ச் சொல்லாக மாறிவிட்டது. அது உறவின் பெயராக இல்லை. என் கனவுப் பெண்ணாக, காதலியாக, எண்ணி உருகும் தகிப்பின் வடிகால இருந்தார். அதனால்தான் அந்த உறவைக் கொச்சைப்படுத்துவதாகச் சொன்னேன்.

அதன் பிறகு அவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். என் மன பிம்பத்தை நிஜத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று தவித்தேன். நேரில் சென்று பார்ப்பதற்கு ஒரு புள்ளி அளவு தயக்கம் மட்டுமே இருந்தது. ஆனால் அந்தப் புள்ளியின் வலிமை என்னை கடைசி வரை தடுத்துவிட்டது. நான் பார்க்க முடியாத ஏக்கம் என்னை வாட்டியது. வாடுவது மனதின் வடு போல நீக்கமற இருந்தது. அவரைத் தேடிச் சென்று பார்த்து அந்த வடிவத்தைச் சிதைத்துக் கொள்ள வேண்டியிருக்குமோ எனவும் இருந்தது. இச்சைக்குக் நான் கொடுத்துக் கொண்ட வடிவமாகவும் இருந்தார் மஞ்சு அக்கா.

அவரோடு எனக்கிருந்த மிகச் சில நினைவுகளைத் தூசு தட்டி ஊதிப் பெரிதாக்கி அசைபோட ஆரம்பித்தேன்.
ஒரு நாள் இரவு என்னை மஞ்சு அக்கா வீட்டின் ஓட்டுக் கூரை மீது ஏற்றிவிட்டு பக்கத்துவீட்டு மாமரத்தில் காய்த்துத் தொங்கிய மாம்பழத்தைப் பறிக்க வைத்தது ஞாபகம் வந்தது. அது விசேஷமான மரம். அதன் ஒரு கிளையில் புளிப்புச் சுவை உள்ள மாம்பழமும் இன்னொரு கிளையில் இனிப்புச் சுவையுள்ள மாம்பழமும் காய்த்தது. எங்கள் வீட்டுக் கூரையின் பக்கம் புளிப்புச் சுவைக் கிளை. அது எங்கள் வீட்டு ஓட்டின் மீது ஓய்வாகப் படுத்திருப்பதுபோல இருந்தது. திருடித்தின்றதால் மாற்றான் தோட்டத்து மாம்பழம் எங்களுக்கு அது இனிப்பாகவே தெரிந்தது.

"மயங்குகிறாள் ஒரு மாது' படம் மீண்டும் திரையிட்டால் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்தப் படம் மீண்டும் எங்கும் திரையிட்டதாகத் தெரியவில்லை. மஞ்சு அக்கா என்றதும் மஞ்சள் நிறத்தில் சிறிய சிறிய பூ போட்ட புடவை அணிந்து அவர் குறு குறுவென பார்க்கிற பார்வை ஞாபகத்துக்கு வருகிறது. அவர் நல்ல உயரம் என்றும் கச்சிதமான உடல் வாகும் சிவந்த மேனியும் உள்ளவர் என்றும் மனச்சித்திரம் பதிந்திருந்தது.

என் இரண்டு குழந்தைகள் வளர்ந்து நிற்கும் இந்த வயதில் மஞ்சு அக்கா நினைவின் ஆழத்தில் நிறம் மங்கி, சாயம் இழந்த மயில் தோகைபோல இருந்தார். எங்கள் குடும்பமும் குடித்தன வீடுகளுக்கு நடுவே புழங்கும் நிலை மாறிவிட்டது.

ஓட்டலுக்குக் காய்கறி சப்ளை செய்யும் அவருடைய கணவர் நட்டாற்றில் விட்டுவிட்டுப் போய்விட்டதாகவும் ஒரே ஒரு பையன் இருப்பதாகவும் அவனைப் படித்து ஆளாக்க ரைஸ் மில்லில் உமி அள்ளும் வேலை செய்துவருவதாகச் சொன்னார்கள். இந்தமுறை எங்கள் வீட்டுடெலி போனுக்குத்தான் தகவல் வந்தது. பிறந்த வீட்டு உறவும் அறுந்து புகுந்த வீட்டு உறவும் பொருந்தாமல் மஞ்சு அக்கா நிராதரவாகிப் போனதாகப் புரிந்து கொண்டேன். ஏனென்றால் தகவல் தந்தவர்கள் ""அவன் எவன்கூடவோ ஓடிப்போய் உருப்படாமப் போயிட்டாளாம்'' என்பதாகத்தான் சொன்னார்கள். உண்மையில் எந்த விஷயத்தையும் அவர்களுக்கு வசதியாகத்தான் வெளிப்படுத்துகிறார்கள். புரிந்து கொள்கிறவர்களும் அவரவர் வசதிக்கு ஏற்பத்தான் புரிந்து கொள்கிறார்கள். மொழியின் சூட்சுமம் அது.
தொடருமா எனச் சந்தேகித்த எத்தனையோ மனிதத் தொடர்புகள் இப்படியாகத் தொட்டுத் தொடர்ந்து கொண்டிருப்பதில் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. மஞ்சு அக்காவின் ஞாபகத்தடங்கள் எனக்குள் அழுந்தப் பதிந்து ஒற்றையடி பாதையாக ஓடிக் கொண்டிருப்பதால்தான் அந்தத் தொடர்பு காப்பாற்றப்பட்டு வருகிறது. ஞாபகச் சங்கிலிகளின் கண்ணிகள்.

என் மகளின் திருமணத்துக்காக பட்டுப்புடவை எடுக்கக் காஞ்சிபுரம் போயிருந்தபோது நடுவே குளிர் பானத்துக்காகக் காரை நிறுத்தினோம்.

"ஏம்பா மொத்தம் ஏழு நாளு... '' என்று அந்தப் பெண்மணி முறையிட்டுக் கொண்டிருந்தாள்.

"கெழ்வி சும்மா இருக்க மாட்டே... நாலு நாளுதான் கணக்கு வருது... செவ்வா ஒண்ணு, புதன் ரெண்டு, வியாயன் மூணு, வெள்ளி நாலு...''

"இல்ல கண்ணு... சனிக்கிழமலேர்ந்துப்பா''

எனக்குப் பகீரென்றது. அது மஞ்சு அக்காதான். புகையிலைப் போட்டு காவி ஏறிய பற்கள்... முகத்துச் சுருக்கம் உலர்ந்து போன உதடுகள், குங்குமம் தடம் மறைந்து போன நெற்றி, கணுக்காலுக்கு மேலே சுருங்கி தூக்கிக் கிடந்த எட்டுகஜம் புடவை. மஞ்சு அக்காவின் மூன்றாவது முகம். மனச்சித்திரம் நொறுங்கிய கணத்தில் நான் நிர்கதியாக நின்றேன்.

"மஞ்சு அக்கா?''

அவரை யாரும் அப்படி அழைத்திருக்க வாய்ப்பில்லை. கண்களை இடுக்கி நெருங்கி வந்து பார்த்தாள். கிழவிக்கு எல்லாமே சொல்ல சொல்ல நிதானமாக ஞாபகத்துக்கு வந்தன. ஆனால் அந்த ஞாபகங்கள் அவளுக்குச் சுவையூட்டுவதாகவோ, பெருமிதமானதாகவோ இருந்ததாகத் தெரியவில்லை. என் அம்மாவின் பெயரைச் சொன்னபோது சற்றே நினைவு துளிர்த்து ""உம் பேரென்ன மறந்தே போயிட்டேனே'' என்றார்.

அது எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. ஏதாவது ஒரு கட்டத்தில் மாங்காய் திருடியதையோ, குளிப்பாட்டியதையோ சொல்லுவாள் என்று எதிர்பார்த்தேன். இல்லை. என் தடயம் சற்றும் அவரிடத்தில் இல்லை. தன் மகன் வேலைக்குப் போக ஆரம்பித்திருப்பதாகவும் இனி தனக்கு ஒரு கவலையும் இருக்காது என்று நம்புவதாகவும் சொன்னாள். அது மகனின் புரிதலையும் மருமகளின் மனதையும் பொறுத்தது. ஒரு பெண் தன் அறுபதைக் கடந்த வயதில் இனி தனக்கு ஒரு கவலையும் இருக்காது என்று நம்புவதின் சுமை அழுத்தியது.
புடவை எடுக்க வந்தவர்கள் அவசரப்பட்டார்கள். அவளிடம் என் ஒரு முகம்கூட இல்லை என்ற வலியை ஏற்றுக் கொள்ள முடியாமல் காரைச் செலுத்திக் கொண்டிருந்தேன். முற்றிலும் வேறு சுவையுடைய வேறு கிளை.







tamilmagan2000@gmail.com

LinkWithin

Blog Widget by LinkWithin