செவ்வாய், ஜூலை 28, 2009
அண்ணா சகாப்தம்: 1937 முதல் 1969 வரை
பெரியாருடனும் அண்ணாவுடனும் மிக நெருங்கிப் பழகிய பத்திரிகையாளர் ஜே.வி.கே. பத்திரிகையாளரின் அனுபவம் என்பது அறிவார்ந்த விளக்கங்களும் காலப் பயணத்தோடு ஒப்பிட்டு உருவாக்கும் புதிய உண்மைகளும் கொண்டதாக இருக்கும். அவர்களின் பார்வை மற்றெல்லாருடையதையும் விட நுணுக்கமானது. இந்தப் பேட்டி அதை இன்னொரு முறை உறுதிப்படுத்துகிறது. அண்ணா பேச்சாளரானது எப்படி என்பது தொடங்கி, திராவிடர் கழகத்தில் இருந்து விலகிய காரணம் வரை} இவருடைய பார்வை வேறுபட்டு நிற்கிறது. பத்திரிகை உலகில் ஜே.வி.கே. என்று மதிப்போடு அழைக்கப்படும் அவருக்கு இப்போது 82 வயது. வயது தரும் பக்குவம்} ஆதாயம் தேவைப்படாத அப்பட்டமான உண்மையாகச் சுடுகிறது. இதோ அந்தச் சூட்டுடன்...
"1940 களில் தமிழகத்தின் மேடைப் பேச்சுகள் எப்படி இருந்தது தெரியுமா? காங்கிரஸ் கட்சி பலமான கட்சியாக இருந்த போதிலும் அதன் மேடைப் பேச்சு பலமற்றதாக இருந்தது. காங்கிரல் தலைவர்களின் பேச்சு புராண காலட்சேபம் போல இருக்கும். படித்த புலவர்களின் பேச்சு இலக்கணத் தமிழிலும் கடும் தமிழிலும் அமைந்திருக்கும். பொதுமக்களுக்குப் புரியாது.
அந்தச் சூழலில் 1943}ல் வந்தவாசி உயர்நிலைப் பள்ளியில் நான் படித்து வந்த நேரத்தில், காஞ்சிபுரத்து அண்ணாதுரை என்றவர் அற்புதமாக பேசுவார் என்று கேள்விப்பட்டேன். அடுத்து, செய்யாறில் 1943 ஜனவரி இறுதியில் பொங்கல் விழாவை ஒட்டிய கொண்டாட்ட நிகழ்ச்சியில் அண்ணாதுரை சிறப்புச் சொற்பொழிவு எனக் கேள்விப்பட்டு சென்றேன். பொதுக் கூட்ட பாணியே வித்தியாசமாக இருந்தது.
விழா வணக்கத்துக்கு முன், நாட்டுப் பண் என்ற தலைப்பில் நடிகர் டி.வி. நாராயணசாமி புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் "வாழ்க வாழ்கவே வளமார் எமது திராவிட நாடு' என்ற பாடலை இசையுடனும் உணர்ச்சிகரமாகவும் பாடினார். அடுத்து சி.என். அண்ணாதுரை எம்.ஏ. பேசுவார் என்று அறிவித்தனர். அவருடைய தமிழ்நடை} மேடைப் பேச்சு கண்டறியாத புதிய நடை. அடுக்கு மொழிச் சொற்கள் மூலம் சுண்டி இழுக்கும் பேச்சு.
குறிப்பாக, தமிழர்களைப் பார்த்து "இந்த ஒலிபெருக்கியைக் கண்டுபிடித்தது யார் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது, மின்சாரத்தைக் கண்டுபிடித்தது யாரென்று கேட்டால் யாருக்கும் தெரியாது. இங்கு வந்து சேர்ந்த மோட்டார்} ரயில் கண்டுபிடித்தது யாரென்றால் தெரியாது; ஆனால் எமனுக்கு வாகனம் எது என்று கேட்டால் நேரில் பார்த்து போல எருமை மாடு என்பார்கள். இதுதான் தமிழன் நிலை' என்று பேசினார். அதே போல் வடநாட்டு முதலாளிகள் தமிழ்நாட்டைச் சுரண்டுவதாகக் குற்றம் சாட்டிய அண்ணா, "பெரிய பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் வட புலத்து முதலாளிகள் இடத்தில்தான். இரும்புக்கு டாடா, செருப்புக்கு பாட்டா, ஜவுளிக்கு செல்லாராம்ஸ், வைரத்துக்கு சுராஜ் மல்ஸ்..'' என்று நீண்ட பட்டியலை அடுக்கிக் கொண்டே போனார். அவருடைய பேச்சின் நடை துண்டாக } அலாதியாக இருந்தது. தமிழக அரசியலில் எளிய குடும்பத்தில்} எந்த ஆதரவும் இல்லாமல் பிறந்த ஒரு இளைஞரை ராக்கெட் வேகத்தில் அரசியலில் வளர்த்தது அவருடைய அற்புதமான நாநயமே..'
1925 -ல் இருந்து பெரியாரின் பேச்சு மட்டுமே தமிழ் மேடைகளில் எடுப்பானதாக இருந்தது. அதற்குப் பிறகு 20 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணாவின் பேச்சு நடை தனி வடிவத்தோடு பிரகாசிக்க ஆரம்பித்தது. ஆனால் பெரியாரின் பேச்சுக்கும் அண்ணாவின் சொற்பொழிவுக்கும் வித்தியாசம் உண்டு. இரண்டையும் நேரில் கேட்பவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அண்ணாவின் பாணியில் நயமும் நெளிவுகளும் அதிகமிருக்கும். பெரியாரின் பேச்சு பலமான தர்க்க வாதத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கும்; காரசாரமானதும்கூட.
அண்ணாவின் பேச்சில் அணி அழகும் சிலேடையும் கமகமக்கும். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. 1945-ல் ஜூலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அண்ணாவின் சொற்பொழிவு.
"இந்த நாட்டின் வறுமையைக் கவனிப்போம். வளமில்லாத ஒரு நாடு வறுமையில் இருந்தால் ஆச்சர்யமில்லை. அரபு பாலைவனத்தில், எஸ்கிமோ பனிக் காட்டில் வளம் இராது. இங்கு நீர்வளம், நிலவளம், குடிவளத்துக்கு குறைவில்லை; மக்களின் மனவளம் ஒன்றைத் தவிர. வற்றாத ஜீவ நதிகள்,, அவற்றால் பாசனம் பெறும் வயல்கள், அவற்றில் விளையும் மணிகள், நஞ்சையும் புஞ்சையும்! நாடெங்கும் சோலைகள்; சாலைகள்.. மண்ணுக்கடியில் பொன். கடலுக்கடியில் முத்து, காட்டிலே சந்தனம், இயற்கை கொஞ்சும் இந் நாட்டில் இல்லாமை இருக்கக் காரணம் என்ன?''' எத்தகைய சூழ்நிலையில் இத்தகைய காவிரி வெள்ளத்தைப் போன்ற சொற்பொழிவு. காங்கிரஸ் மேடைகளில் "அக்கிராசனாதிபதி அவர்களுக்கும் மகா ஜனங்களுக்கும் நமஸ்காரம். இப்பொழுது நாம் எடுத்துக் கொண்ட விஷயம் என்னவென்றால்.. அதாவது நமது நாட்டை சுரண்டி வரும் வெள்ளைக்காரர்களிடமிருந்து பாரத தேசத்தை எப்படி மீட்பது என்பதுதான்' என்று கூறிவிட்டு அவ்வப்போது "ஊம்'காரமும் முனகியும் ஒவ்வொரு சொல்லாக பிரசவிப்பார்கள். அந்த மேடைப் பேச்சில் இருந்து அண்ணாவின் பாணி தனித்து பளிச்செனத் தெரிந்தது. ஆனால் இந்தப் பேச்சு பாணி திடீரென்று ஆகாயத்தில் இருந்து அண்ணாவிடம் குதித்தது அல்ல.
இந்தப் பேச்சு பாணியைஅவருக்குத் தந்த பெருமை சென்னை மாநகருக்கே உரித்தானது.
பிறந்தது காஞ்சியாக இருக்கலாம். ஆனால் அற்புதமான மேடை பேச்சாளராக அரசியல்வாதியாக அண்ணா பிறந்தது சென்னையில்தான். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1920களின் இறுதியில் சேர்ந்த அண்ணாவை, அந்தக் காலத்தில் அற்புதமான ஆங்கில நாவலரான ஆர்க்காடு ராமசாமி முதலியாரின் பேச்சு நடை ஈர்த்துவிட்டது.
காங்கிரஸ் கட்சியும் நீதிக்கட்சியும் அந் நாளில் அரசியல் களத்தில் பலமான சக்திகளாக விளங்கி வந்தன. அந்தக் காலத்தில் அரசியல் மேடைகளில் ஆங்கிலமே கோலோச்சியது. காங்கிரஸ் சார்பில் தீரர் சத்யமூர்த்தியின் ஆங்கில நடையும் நீதிக் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் ராமசாமி முதலியார் நடையும் எடுப்பாக இருந்தன. சத்யமூர்த்தியின் பேச்சு வாள்வீச்சு போல இருக்கும். முதலியாரின் பாணி புல்லாங்குழல் ரகம். பேச்சினூடே நடனச் சிலம்பின் ஓசையின் நயம் மிளிரும். அண்ணாவுக்கு முதலியாரின் பாணி பிடித்துப் போய்விட்டது.
சத்யமூர்த்தி பாணியில் டி.செங்கல்வராயன் பேச ஆரம்பித்தார். அண்ணாதுரையும் செங்கல்வராயனும் சென்னையில் இளைஞர் மன்றக் கூட்டங்களில் சொற்போர் நிகழ்த்தியதுண்டு. ஆக, முதலில் ஆங்கிலப் பேச்சாளராகவே அண்ணாவின் பொது வாழ்க்கை ஆரம்பமானது.
பின்னர் பைய ப் பைய அதே ஆங்கில பாணியில் தமிழில் பேச ஆரம்பித்தார். அதன் விளைவாக தமிழ் மேடையில் அண்ணா சகாப்தம் தோன்றியது. மற்ற பேச்சு நடைகள் எல்லாமே படுத்துக் கொண்டுவிட்டன.
ஆயினும் அண்ணா ஆரம்பத்தில் கவனம் செலுத்தியது தொழிற்சங்க இயக்கத்தில்தான். சென்னையில் பாசுதேவ் என்ற தொழிற்சங்கத் தலைவருடன் நெருங்கிப் பழகி, தொழிற்சங்க இயக்கத்தில் அண்ணா நுழைய ஆரம்பித்தார். அந்தக் காலத்தில் நீதிக்கட்சியின் வீரியம் மிக்க தலைவரும் சண்டே அப்சர்வர் ஆங்கில வார ஏட்டின் ஆசிரியருமான பி. பாலசுப்ரமணிய முதலியாரைச் சந்திக்க நேர்ந்த வாய்ப்பு அண்ணாவின் பாதையையே மாற்றிவிட்டது. தொழிற்சங்கத்தில் ஊடாடிக் கொண்டிருந்த அண்ணாவை நீதிக்கட்சிக்கு மடைமாற்றிவிட்டவர் அவர்தான்.
அதோடு அரசியல் இரட்டையர்களாக நீதிக்கட்சியில் போற்றப்பட்டவர்கள் பாலசுப்ரமணியமும் முதுபெரும் பத்திரிகையாளர் டி.ஏ.வி. நாதனுமே.
இந்த இருவருடனும் அண்ணா பழக ஆரம்பித்த பிறகு நீதிக் கட்சியின் கொள்கைகளில் } குறிப்பாக சமூக நீதிக் கொள்கையில் அவருக்கு அழுத்தமான பிடிப்பு ஏற்பட்டது. அண்ணா நீதிக் கட்சியின் இளம் தொண்டனாக விளங்கினார். ஜமீன்தாரர்களும் மிட்டா மிராசுதார்களும் நிரம்பி வழிந்த நீதிக் கட்சியில் இளைஞர் அண்ணாவுக்கு அரவணைப்பு தந்து வளர்த்தவர் பாலசுப்ரமணியமே.
1952- முதலாவது பொதுத் தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் நீதிக்கட்சி வேட்பாளராக பாலசுப்ரமணியம் போட்டியிட்டார். அந்தத் தருணத்தில் அவரை ஆதரித்து தென் சென்னையில் பிரசாரம் செய்த அண்ணா ," சண்டே அப்சர்வர் பாலசுப்ரமணியம் என் அரசியல் ஆசான்' என்று நெகிழ்ந்து கூறினார்.
1935-ல் திருச்சியில் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநில மாநாட்டில் தான் மாநில அளவில் முதன் முதலாக அண்ணா அறிமுகமான பின்னணி சுவை மிக்கது. அந்த மாநாட்டில் எல்லாத் தலைவர்களும் ஆங்கிலத்திலேயே பேசினார்கள். அந்தத் தலைவர்களில் ஆர்க்காடு ராமசாமி முதலியாரும் ஒருவர். அவருடைய ஆங்கில உரையை தமிழில் மொழிபெயர்க்க அம் மாநாட்டின் அமைப்பாளர் கி.ஆ.பெ.விசுவநாதம் தகுதியான ஒருவரைத் தேடியபோதுதான் அண்ணா அறிமுகப்படுத்தப்பட்டார். முதலியாரின் அற்புதமான ஆங்கில உரையை அண்ணா மொழிபெயர்த்ததைக் கண்டு மாநாடே வியந்தது.
முதலியாரும் அண்ணாவின் மொழிபெயர்ப்பை மெச்சிப் பாராட்டியதோடு மொழிபெயர்ப்பில் "நுணுக்கமான கைவேலைகளும்' நிறைந்திருந்ததாகத் தட்டிக் கொடுத்தார். ஆனால் நீதிக்கட்சியின் தலைவரின் மொழிபெயர்ப்பவராக அறிமுகமான அண்ணா அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நீதிக் கட்சியையே பெயர்த்து சுயமரியாதை இயக்கத்துடன் இணைத்துவிட்டார். சுயமரியாதை இயக்கத்துடன் நீதிக் கட்சியை இணைத்து 1944- ல் சேலத்தில் திராவிடர் கழகத்தைப் பெரியார் உருவாக்கியபோது அவருக்குத் தோள் கொடுத்து துணை நின்றவர் அண்ணா.
திராவிடர் கழகத்தினர் அண்ணாவை தளபதி அண்ணா என்று போற்றினார்கள். 1942-ல் திராவிட நாடு என்ற வார ஏட்டைத் தொடங்கினார் அண்ணா. பேச்சு மேடையில் அவருடைய தமிழ் இளைஞர்களைச் சுண்டி இழுத்தது போல எழுத்திலும் அண்ணா தனி பாணியைக் கண்டார். திராவிட நாடு இதழின் 16 பக்கங்களையும் அவரே எழுதி நிரப்பினார்} பல புனைப் பெயர்களில்.
பரதன் என்ற பெயரில் நையாண்டி கட்டுரைகள், செüமியன் என்ற பெயரில் சமூகச் சித்தரிப்புகள், வீரன், சம்மட்டி என்ற பெயர்களில் அரசியல் எதிரிகள் மீது மூர்க்கத் தாக்குதல்.. 3-4 பக்கங்களில் தலையங்கமும் உண்டு. சுருங்கச் சொன்னால் பெரியாரின் சமுதாயப் புரட்சி கருத்துகளுக்குப் படித்த வட்டாரத்தில் செல்வாக்கு ஏற்படச் செய்தவர் அண்ணாவே. எளிய மக்களுக்கும் இலக்கியச் சுவையை லாகவமாக எடுத்து ஊட்டிய முதலாவது சொற்பொழிவாளர் அண்ணாவே.
பேச்சு மேடையிலும் எழுத்து மேடையிலும் தனக்கென தனிப்பாணி வகுத்துக் கொண்டு புதிய வடிவுடன் பிரகாசிக்க ஆரம்பித்த அண்ணாவின் கவனம் நாடக உலகின் பக்கம் திரும்பியது. முதன் முதலில் அவர் இயற்றிய "சந்திரோதயம்' என்ற நாடகம் திராவிடர்க் கழக மேடையில் பெரிய வரவேற்பைப் பெற்றது. அது சுயமரியாதை பிரச்சார நாடகம். வசனத்தில் கேலியும் கிண்டலும் தூக்கலாக இருந்தது. அதை அடுத்து "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் அல்லது சந்திரமோகன்' என்ற நாடகம் அண்ணாவை இணையற்ற நாடக ஆசிரியராக அறிமுகப்படுத்தியது. தமிழ் கொஞ்சி விளையாடியது. ஒவ்வொரு வார்த்தையிலும் தேன் சுவை கொட்டியது. நாடகத் தமிழில் அண்ணா புதுமையைப் புகுத்தினார். அது மட்டுமல்ல. நாடகத் தமிழில் புதுமை மலர்ந்தது. அந்த நாடகத்தில் சிவாஜி வேடத்தை தாங்கி நடித்த வி.சி. கணேசன் என்ற இளைஞரை "சிவாஜி கணேசனாக' ஆக்கி விளம்ப வெளிச்சத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.
தமிழ் மேடை கண்டறியாத பேச்சாளர், தனி நடை கண்ட எழுத்தாளர், இணையற்ற நாடக ஆசிரியர் என்ற மும் முகப்புகளோடு நூதன வடிவத்துடன் அண்ணாவின் சகாப்தம் மலர்ந்தது!.
இந்தச் சூழ்நிலையில் 1947- ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. பெரியார் அந்த நாளை துக்கநாள் என்று அறிக்கைவிட்டார். "தமிழர் பிரதிநிதிகளைக் கலந்து பேசாமலேயே வெள்ளைக்காரன் ஆட்சியை வடபுலத்தாரிடம் ஒப்படைத்துவிட்டுப் போய்விட்டான். தமிழனைப் பொறுத்தவரை ஆகஸ்ட் 15 துக்கத்தினமே' என அந்த அறிக்கையில் பெரியார் கூறினார். ஆனால் அண்ணா அதை ஏற்க மறுத்தார்} தி.க.வில் இருந்தபடியே!
ஆகஸ்ட் 15 சுதந்திர தினமே.. சரித்திர மாணவன் என்ற முறையில் அதைச் சுதந்திரமாகவே மதிக்கிறேன். அந்நாளை தமிழகம் கொண்டாடிடத்தான் வேண்டும் என்று திராவிட நாடு இதழில் துணிச்சலோடு எழுதினார் அண்ணா. அதிலிருந்து பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. ஏராளமான இளைஞர்கள் அண்ணாவைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்ததால் அவரைக் கட்சியைவிட்டு விலக்கப் பெரியார் விரும்பவில்லை. பெரியாரைவிட்டு விலக அண்ணாவும் துணியவில்லை.
அதே சமயத்தில் இவ்விரு தலைவர்களுக்கு இடையே அடிப்படையில் ஒரு வித்தியாசம் மனோரீதியாக உள்ளூர முளைத்துவிட்டது.
பெரியார், திராவிடர்க் கழகம் அரசியலில் பங்கு கொள்ளவே கூடாது, சமுதாயப் புரட்சி இயக்கமாகவே நீடிக்க வேண்டும் என்பதில் கண்டிப்புக் காட்டினார். அண்ணாவோ அரசியலில் திராவிடர் கழகம் ஈடுபட்டு அதிகாரத்தைக் கைப்பற்றி அதன் மூலம் தனது கொள்கைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆயினும் திராவிடர் கழகம் இந்த அடிப்படை வேறுபாட்டால் இரண்டாகப் பிளவுபடவில்லை. ஆனால் அதற்கான வாய்ப்பை பெரியாரே ஏற்படுத்தித் தந்துவிட்டார்- 1949 ல் மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டதன் மூலம்.
"பொருந்தாத் திருமணம்- சுயமரியாதைக் கொள்கைக்கு விரோதம், தந்தையைத் தடுத்துப் பார்த்தோம், பயனில்லை. வேறு வழியின்றி தி.க.விலிருந்து வெளியேறுகிறோம்' என்று கண்ணீர்த் துளி சிந்தி அண்ணா வெளியேறினார். தி.க.விலிருந்த மிகப் பெரிய இளைஞர் படையையும் கூட்டிக் கொண்டு வெளியேறினார்.
தி.மு.க உதயமாகிவிட்டது. கழகத்தைப் பிளந்து புதிய அமைப்பை அண்ணா உருவாக்கியதை பெரியாரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அண்ணாவை மூர்க்கமாகத் தாக்க அவர் தயங்கவில்லை. ஆனால் அண்ணாவோ, பதிலுக்கு பெரியாரை தாக்கி ஒரு வார்த்தைக் கூட பேசவே இல்லை. தன்னை நோக்கி பெரியார் விடுத்த கண்டனக் கணைகளை எல்லாம் பூஜித்தார்.
பெரியாருடைய தாக்குதலை சமாளிக்க ஒரே வழி பேசாமல் விலகி நிற்பதுதான் என்று அண்ணா முடிவு செய்தார். பெரியாரைக் குறைகூறி எந்த அறிக்கையும் விடவில்லை. சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் 1949 செப்டம்பர் 17}ம் தேதி நடைபெற்ற தி.மு.க. துவக்கவிழாவில், "நாங்கள் தி.க.வில் இருந்து பிரிந்து வந்த போதிலும் எங்களின் நிரந்திரத் தலைவர் தந்தை பெரியாரே. இத்தனை ஆண்டுகளில் நான் கண்ட, நான் கொண்ட ஒரே தலைவர் பெரியார்தான். நாம் பிரிந்து வந்துவிட்டபோதிலும் அவரே நமது தலைவர். எனவே, தி.மு.க.வைப் பொறுத்த வரையில் தலைமை பீடத்தை நாம் காலியாகவே வைத்திருப்போம்' என்று கூறியதோடு நிற்கவில்லை. திராவிடர் கழகத்தின் கோட்பாடும் கொள்கைகளுமே தி.மு.க.வின் கொள்கைகளும் கோட்பாடும் ஆகும் என்று பகிரங்கமாக அறிவித்தார்.
அண்ணா பிரிந்து சென்றதைவிட பெரியாரின் கொள்கையைச் செயல்படுத்துவதற்காகவே அரசியலில் பிரவேசிப்பதாக அண்ணா அளித்த விளக்கம் பெரியாருக்குஆத்திரத்தை ஏற்படுத்தியது. இச் சந்தர்ப்பத்தில் பெரியாரிடம் அண்ணா நடந்து கொண்ட, நடந்து காட்டிய பவித்திரமான பாணியை அருகில் இருந்து கவனிக்கக் கூடிய அரிய வாய்ப்பை பெற்றவன் என்ற முறையில்அப்போது நடந்த நிகழ்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அண்ணாவை முதன் முதலில் பார்த்தது செய்யாறு பொங்கல் திருநாள் விழாவில். ஆனால் அடுத்த மூன்றாண்டுகளில் சென்னையில் அவருடன் மிக நெருக்கமாகப் பழகக் கூடிய அரிய அபூர்வ வாய்ப்பு நான் தேடாமலேயே எனக்குக் கிடைத்தது.
அந்தக் காலத்தில் அண்ணாவுக்குச் சென்னையில் தங்குவதற்கு இடமில்லை, அச் சமயத்தில் வாலாஜாபாத்தைச் சேர்ந்த பஸ் தொழிலதிபர் தேவராஜ முதலியார் அண்ணாவின் மீது அளவு கடந்த மதிப்பு வைத்திருந்தவர். அதோடு அண்ணாவின் புரவலராகவும் விளங்கியவர். அண்ணா போன்ற மேதை காஞ்சியில் பிறந்ததற்காக தொண்டை நாட்டு தமிழர்கள் பெருமைப்பட வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசியவர். அண்ணா சென்னைக்கு வரும் போதெல்லாம் தங்குவதற்காக தன்னுடைய பேருந்து அலுவலக மாளிகையில் முதல் மாடியைக் காலி செய்து கொடுத்தார். அண்ணாவை அவருடைய குடும்பத்தில் ஒருவர் போலவே நடத்தினார். சென்னையில் கல்லூரி படிப்பில் ஈடுபட்டிருந்த நான் கல்லூரி நேரம் போக மற்ற தருணங்களில் பெரும்பாலும் என்தாய் வழி மாமா தேவராஜ முதலியாரின் அலுவலகத்தில் இருப்பது வழக்கம். அந்த முறையில் 1947}லிருந்து அண்ணாவிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அதிகரித்தது.
1949 தொடக்கத்தில் பத்திரிகை உலக பிதாமகனாக விளங்கிய டி.எஸ்.சொக்கலிங்கத்தை ஆசிரியராகக் கொண்ட தினசரி நாளிதழில் ஆசிரியர் பிரிவில் பயிற்சி துணையாசிரியராகச் சேர்ந்தேன். அந்த நேரத்தில் பொருளாதார சங்கடங்களில் அந்த நாளிதழ் தள்ளாடிக் கொண்டிருந்தது. மாத ஊதியத்தை வழங்கக்கூடிய சக்திகூட நிர்வாகத்துக்கு இல்லை. ஆயினும் தீப்பொறி பறக்கும் தலையங்கங்களுடன் அந்த இதழ் தமிழ் வாசகர்களிடையே பவனி வந்து கொண்டிருந்தது.
ஒருநாள் அண்ணா என்னுடைய மாமாவையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு எனக்கொரு யோசனை கூறினார். ""தினசரியில் பொருளாதார நிலைமை சரியாக இல்லை என்று கேள்விப்படுகிறேன். பேசாமல் விடுதலை நாளேட்டில் சேர்ந்து கொள். சம்பளம் குறைவாக இருந்தாலும் பெரியார் மாதாமாதம் டாண் என்று கொடுத்துவிடுவார். பெரியாரோடு நெருங்கிப் பழகக் கூடிய வாய்ப்பு உனக்குக் கிடைக்கும். அது பிற்காலத்தில் பத்திரிகை தொழிலில் உனக்கு ஒரு செல்வம் போலவே பயன்படும். என் யோசனையை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என்பதை உன் முடிவுக்கே விட்டு விடுகிறேன்'' என்று கூறிவிட்டார்.
அதை ஏற்று 1949 ஜூன் மாதத்தில் பெரியாரைச் சந்தித்து அவருடைய விடுதலை நாளிதழில் துணையாசிரியராகப் பொறுப்பேற்றேன். குத்தூசி குருசாமி ஆசிரியராக இருந்தார். அண்ணாவோடு வெளியேறிய இளைஞர் பட்டாளத்தில் அப்போதைய விடுதலை ஆசிரியர் பிரிவைச் சேர்ந்த துணையாசிரியர்களும் அடக்கம். அதனால் விடுதலை ஆசிரியர் பிரிவில் எடுப்பான இடம் கிடைத்துவிட்டது.
பெரியார் விடுதலை அலுவலகத்துக்கு வரும்போதெல்லாம் அவரோடு பழகக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. விடுதலை இதழ் அப்போது சிந்தாதரிப்பேட்டையில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.
1949 செப்டம்பர் 17}ல் தி.மு.க தொடங்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள் காலை எட்டு மணி. பெரியாருடைய பிரச்சார வேன் வெளியூரிலிருந்து நேராக விடுதலை அலுவலகத்துக்கு வந்துவிட்டது. வேனைவிட்டு இறங்கி வந்த பெரியார், அவருடைய நாற்காலியில் அமர்ந்துகொண்டு என்னை அழைத்தார். அன்றைய பத்திரிகைகளில் வெளியாகியுள்ள முக்கிய செய்திகள் என்னவென்று கேட்டார். அதன்பிறகு அவருடைய முகத்தில் வாட்டமும் வேதனையும் நிழலாடியதை உணர முடிந்தது. ஏதோ ஒருவிதக் கவலை அவருடைய மனத்தில் குடி கொண்டிருப்பது போல எனக்குப்பட்டது. பெரியாரை நோக்கி, "அய்யா ரொம்ப கவலையில் இருப்பதாகத் தெரிகிறதே? கழகத்தில் இருந்து அண்ணாவோடு ஏராளமானவர்கள் வெளியேறிவிட்டார்களே என்ற கவலையா அய்யா' என்று நான் வெள்ளந்தியாகக் கேட்டுவிட்டேன். அவ்வளவுதான். பெரியார் சிலிர்த்துக் கொண்டார். எப்பொழுதும் யாரையுமே "நீங்க... வாங்க' என்றே மரியாதையாகப் பேசும் வழக்கமுடையவர் பெரியார். என்னையும் அப்படித்தான் அழைப்பார்.
இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் அவருக்கு ஆத்திரமே வந்துவிட்டது.
""என்ன சொன்னே?.. அண்ணாதுரையோடு நிறையபேர் வெளியேறிவிட்டதால் நான் கவலைப்படுகிறேனா?.. பைத்தியக்காரா...'' என சுளீரெனத் தைக்கும் விதத்தில் கூறியதுடன், "அவர்கள் வெளியேறி விட்டதற்காக நான் ஏன் கவலைப்பட வேண்டும்? இந்த இயக்கத்தை யாரை நம்பி ஆரம்பித்தேன் தெரியுமா?' என்று கேட்டார். "ஆரம்பித்தவர்கள் சொன்னால்தானே தெரியும்?' என்று அடக்கத்தோடு கூறினேன். அது பெரியாரை இளக வைத்தது.
"யாரை நம்பி ஆரம்பித்தேன் தெரியுமா? என்னை நம்பி.. என்னையே நம்பி..' என்று திடத் தொனியில் மாரைத் தட்டியபடி சொன்னார்.
ஆயினும் சற்று நேரம் கழிந்த பிறகு மெதுவான குரலில் "நீ சொன்னதைப் போல என் மனதுக்குள் ஒரு கவலை இருந்து வருவது உண்மைதான்' என்று சொல்லி , அந்தக் கவலை என்ன என்பதை அவர் விளக்கியபோது திகைத்துவிட்டேன். பெரியார் அந்தக் கவலையை விவரித்தார்.
"அண்ணாதுரை எதற்காக நமது கழகத்தில் இருந்து விலகிச் சென்று புதிய கட்சியை ஆரம்பித்திருக்கிறார்? அவருக்கு அரசியலில் ஈடுபட்டு அதிகாரத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. என்னோடு இருக்கும் வரையில் நான் அதற்கு அனுமதி தரமாட்டேன். அதனால் வெளியேறிவிட்டார். இதுதான் உண்மையான காரணம். ஆனால் அண்ணாதுரை என்ன சொல்கிறார்? என்னுடைய கொள்கைகளைச் செயல்படுத்துவதற்காக அரசியலில் புதிய கட்சியைத் தொடங்கியிருப்பதாக. எதற்காகப் பசப்ப வேண்டும்? என் கொள்கைகளை நிறைவேற்றுவது எப்படி என்பதில் என்னைவிட அண்ணாவுக்கு என்ன அவ்வளவு அக்கறை? என்னுடைய கொள்கைகளை அரசியல் ரீதியாக நிறைவேற்றவே முடியாது என்பதில் திட்டவட்டமான தீர்மானத்தைச் செய்துவிட்டுத்தான் கழகத்தை இயக்கமாகவே நடத்தி வருகிறேன். அண்ணாதுரையோ தி.மு.க என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். அரசியல் என்று இறங்கிவிட்டால், பிறகு தேர்தல்களே முக்கியமாகிவிடும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டுமானால் அதற்கு பணபலம் தேவை. பிறகு பல தரப்பிலிருந்தும் பணம் வசூல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும். அப்பொழுதே கொள்கைகள் எல்லாம் பின்னணிக்குத் தள்ள வேண்டிய கட்டாயத்துக்குப் போய்விடும். போதாகுறைக்கு தேர்தல் நிதியை வசூலிப்பதிலும் செலவிடுவதிலும் பல கட்டங்களில் சொல்ல முடியாத மனஸ்தாபம் கட்சிக்குள்ளேயே ஏற்படும். இது ஒருபுறம் இருக்க, தப்பித் தவறி தி.மு.க. ஆளும் கட்சியாக மாறிவிட்டாலோ அதிலிருந்துதான் என்னுடைய திராவிடர் கழக கொள்கைக்கே சரிவு ஏற்பட்டுவிடும். ஏனெனில் ஆளும் கட்சியாக மாறிவிட்ட பிறகு கட்சிக்குள்ளேயே பல மையங்கள் தோன்றிவிடும். அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்து சேர்ப்பதில் பலரும் இறங்கிவிடுவார்கள். ஏனெனில் அண்ணாவோடு சென்றிருப்பவர்களை எல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். சாமானிய குடும்பங்களில் பிறந்தவர்கள். பலருக்கு சமுதாயத்தில் வசதியாக வாழ வேண்டும் ஆசை இல்லாமல் போகாது. இதன் விளைவாக கட்சிக்கே கெட்ட பெயர் ஏற்படும் அளவுக்குச் சென்றுவிடும். அந்தச் சமயம் பார்த்து என் கொள்கை ரீதியான எதிரிகள் ஊழல் என்ற கற்களால் திராவிட இயக்கத்துக் கொள்கைகளையே அழிக்கப் பார்ப்பார்கள். அதுமட்டுமல்ல, தி.மு.க. அதிகாரத்தைக் கைப்பற்றுமானால் அதன் பிறகு கட்சிக்குள் ஏற்படக் கூடிய கருத்து வேறுபாடுகளாலும் போட்டியாலும் கழகமே பலவிதமான பிளவுகளுக்கு உள்ளாவதைத் தவிர்க்க முடியாது. இதையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் நான் இப்பொழுது கவலைப்படுகிறேன். அதிலும் என்னுடைய கொள்கையை நிறைவேற்றுவதற்காகப் புதிய கட்சியைத் தொடங்கியிருப்பதாக அண்ணாதுரை கூறியிருப்பது மேலும் அந்தக் கவலையை அதிகமாக்குகிறது' என்று நீண்ட விரிவுரையை பெரியார் நிகழ்த்தினார்.
அண்ணாவைப் பொறுத்தவரையில் பெரியார் சென்னைக்கு வருகை தரும் போதெல்லாம் விடுதலை அலுவலகத்தில் என்னிடம் ஏதாவது கூறினால், அதைத் தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். பெரியார் என்ன நினைக்கிறார் என்பதைப் பற்றி அண்ணா அறிந்து கொள்வதுடன் எப்போதுமே மிகுந்த விழிப்புடன் நடந்து கொள்ளக் கூடியவர். அந்த முறையில் அன்று காலை என்னிடம் பெரியார் பேசிய அவ்வளவையும் என்னுடைய மாமா வீட்டில் அண்ணாவிடம் விவரித்தேன். அண்ணா வெலவெலத்துப் போய்விட்டார்.
ஒன்று பெரியாரின் தீர்க்க திருஷ்டியின் தீட்சண்யத்தை எண்ணிப் பார்த்திருக்கலாம்.
இன்னொன்று இந்த இளைஞரிடம் எவ்வளவு பெரிய பேச்சை அவர் பேசியிருக்கிறார் என்பதை நினைத்தும் இருக்கலாம்.
ஆயினும் தி.மு.க.வை ஆரம்பித்த 13 ஆண்டுகளிலேயே அது பிரதான எதிர்கட்சியாக உருவெடுத்துவிட்டது. 1967 தேர்தலில் ராஜாஜியின் சுதந்திரா கட்சி. காயிதே மில்லத்தின் முஸ்லிம் லீக், பி. ராமமூர்த்தியின் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றைக் கொண்ட கூட்டணியின் மூலம் தி.மு.க. அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, பெரியாரின் செல்லப்பிள்ளையாக தி.மு.க.வில் இருந்து வந்த அன்பில் தர்மலிங்கத்தை அழைத்துக் கொண்டு நேராக திருச்சிக்குச் சென்று பெரியாரைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் தன் அரசையே பெரியாருக்குக் காணிக்கை ஆக்கினார்.
தி.மு.க. துவக்க விழாவில் "நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவரைத்தான். அவர் பெரியாரே'என்று செய்த பிரகடனத்தை நிரூபித்துக் காட்டியதன் மூலம் அண்ணா அபூர்வ தரத்தை நிரூபித்துக் காட்டிவிட்டார்.
ஆயினும் தி.மு.க.வை தான் உண்டாக்கிய ஒரு ஸ்தாபனம் என்று அண்ணா எப்போதுமே நினைத்ததில்லை. சமூக நீதி சுயமரியாதை, தமிழ் உணர்வு போன்ற கொள்கைகளுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்த மாபெரும் இயக்கத்தின் வாரிசாகவே தி.மு.க.வை அவர் எப்போதும் கருதினார். ஆனால் அதற்கு குடும்ப வாரிசுகளை நியமிக்கும் எண்ணமே எப்போதுமே வந்ததில்லை. அதுமட்டுமல்ல தி.மு.க. சார்பில் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை அண்ணா தேர்வு செய்தபோது ஒரு நியதியை கண்டிப்புடன் கடைபிடித்தார். தமிழ்ச் சமுதாயத்தின் எல்லா தரப்புகளுக்கும் குறிப்பாக மூத்த தமிழ்ச் சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கக் கூடிய விதத்தில் வேட்பாளர் பட்டியலை மிகுந்த விழிப்புடன் தயாரிப்பதை வழக்கமாகவே கொண்டிருந்தார். இதே காரணத்தினால்தான் தி.மு.க.வில் குறிப்பாக மேல் அடுக்குகளில் தம் குடும்பத்தைச் சேர்ந்த எவரையும் அவர் அனுமதித்ததே இல்லை, இத்தனைக்கும் அவருடைய வளர்ப்பு மகன்களில் பரிமளத்தின் மீது தனி வாஞ்சை உண்டு என்பதை அண்ணாவோடு நெருங்கிப் பழகியவர்கள் அனைவரும் அறிவார்கள். அப்படி இருந்தும்கூட அவரை அரசியலில் பிரவேசிக்க அனுமதிக்கவில்லை.
இது போன்ற பத்தியமான} சத்தியமான பொது வாழ்க்கையை அண்ணா இறுதிவரை கடைபிடித்தார். இதுவே அவருக்குத் தனிப் புகழைச் சூட்டியிருக்கிறது.
சந்திப்பு: தமிழ்மகன்
படங்கள்: ராதாகிருஷ்ணன்
தினமணி அண்ணா நூற்றாண்டு மலர் - 2009
அண்ணாவுக்கு அரிதாரம் பூசினேன்!
எஸ்.எஸ்.ராஜேந்திரன்
காங்கிரஸ் இயக்கத்துக்குத் திரையுலகம் சார்பாக ஓர் "அன்னை இல்லம்' இருந்தது. திராவிட இயக்கத்துக்குத் திரையுலகம் சார்பாக அன்று சென்னையில் செயல்பட்டது "அண்ணா இல்லம்'. அது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீடு. இது லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் வீடு. ஆனால் இரண்டாவது வீட்டின் தீவிரம் முதல் வீட்டில் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.
திராவிட நாடு நாளிதழை ஆரம்பிக்க அண்ணா நிதி திரட்டத் தொடங்கிய நாளில் எஸ்.எஸ்.ஆருக்கும் அண்ணாவுக்கும் முதல் அறிமுகம். அந்த நாள் தொடங்கி அண்ணாவின் இறுதி மூச்சுவரை தொடர்ந்தது அந்த நெருக்கம். அணைபோட்டுத் தடுக்கப்பட வேண்டிய மூன்று ஆறு(ஆர்)களில் ஒன்றாக காங்கிரஸ் பிரமுகர்களால் வர்ணிக்கப்பட்ட ஆர்களில் கே.ஆர்., எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர். ஆகியோரில் முதன்மையானவர் எஸ்.எஸ்.ஆர். முக்கியமானவரும்கூட.
அண்ணாவுடனும் திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் அவருக்கு இருந்த ஈர்ப்பை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.
"ஈரோட்டில் டி.கே.எஸ். கலைக் குழுவில் நடித்துக் கொண்டிருந்த நேரம்.
ராமாயணம் நாடகம் நடந்து கொண்டிருந்தது. எனக்குப் பரதன் வேடம். அண்ணனின் பாத அணிகளையே பூஜிக்கும் வேடம். ஆனால் உண்மையில் அண்ணாவின் மீதுதான் எனக்கு அப்படியொரு பக்தி இருந்தது. ஆனால் அவர் எப்படியிருப்பார் என்று தெரியாது. அண்ணாவின் கட்டுரைகளைப் படித்திருக்கிறேனே தவிர அவரை நேரில் பார்த்ததில்லை. அந்த நாள்களில் கட்டுரை எழுதியவர்களின் படங்களையும் பிரசுரிக்கிற வழக்கம் அவ்வளவாக இல்லை. ப்ளாக் எடுத்து போட்டோவைப் பிரசுரிப்பது அக் காலத்தில் செலவு பிடிக்கிற சமாசாரமாக இருந்தது. அவருடைய எழுத்தால் மட்டுமே ஈர்க்கப்பட்டு, அவரை எப்போது காண்போம் என்று தவித்துக் கொண்டிருந்தவனுக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. ஈரோட்டில் எங்கள் நாடக அரங்கிலேயே அண்ணா நடிக்க வருகிறார் என்ற தகவல்தான் அது. அந்த நாளை மறக்கவே முடியாது. ஆம்! 19.11.43... அண்ணனை நேரில் கண்ட நாள்.
அந்த முதல் சந்திப்பு சுவாரஸ்யமானது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கான வளர்ச்சி நிதிக்காக "சந்திரோதயம்' நாடகத்தை நடிப்பதற்காக அவர் வருகிறார் என்றார்கள். அண்ணா எப்போது வருவார் எப்போது வருவார் என்று ஏங்கிக் கொண்டிருந்தேன் நான். டி.கே.எஸ். அவர்கள், "சந்திரோதயம்' நாடகத்தில் நடிப்பதற்காக வந்திருந்தவர்க்கெல்லாம் எங்கள் குழுவைச் சேர்ந்தவர்களை ஒப்பனை போடுமாறு கூறினார். எங்களுக்கு ஆளுக்கொரு முகத்தைக் கொடுத்தார்கள். எனக்கு வாய்த்த முகம் அவ்வளவு ஈர்ப்புடையதாக இல்லை. அதுவுமில்லாமல் அவர் இங்கும் அங்கும் திரும்பிப் பேசியபடியே இருந்தார். எனக்கு எரிச்சல் என்றால் எரிச்சல். சற்று தூரத்தில் ஒரு பெரியவர் அமைதியாக மேக்-அப் போட்டுக் கொண்டு இருந்தார். அவர்தான் அண்ணா என்று முடிவு செய்துவிட்டேன்.
இவரை இப்படித் திரும்பு... அப்படித் திரும்பு, தலையை மேலே தூக்கு, போதும் கீழே இறக்கு என்று ஆணையிட்டுக் கொண்டிருந்தேன். என் கவனமெல்லாம் பக்கத்தில் இருந்த பெரியவர் மீதே இருந்தது. மெல்ல நான் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தவரிடம் "அவர்தானே அண்ணா?'' என்றேன், அந்தப் பெரியவரைக் காட்டி.
அவர் பொறுமையாக "இல்லை. நான்தான் அண்ணா. அவர் ஈழத்தடிகள்'' என்றார்.
இவ்வளவு நாள்களாக யாரைப் பார்க்க வேண்டும் என்று துடித்தோமோ அந்த அண்ணாவையா நாம் இவ்வளவு நேரம் இந்தப் பாடுபடுத்தினோம் என்று பதறிப்போனேன். எனக்குக் குற்ற உணர்வாகிவிட்டது. அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அவரைப் பார்க்க வேண்டும் என்று துடித்ததைச் சொன்னேன். அண்ணா அமைதியாகச் சிரித்துவிட்டுத் தட்டிக் கொடுத்தார்.
பின் நாள்களில் நான் சினிமாவில் பிரபலமான காலங்களில் அண்ணா அதைப் பலரிடம் நினைவுபடுத்திச் சிரிப்பார்.
50 -களில் மதுரை பகுதிகளில் தி.மு.க. என்றால் பலருக்குத் தெரியாது. இப்போது போல பத்திரிகைகளோ, தொலைக்காட்சிகளோ அப்போது இல்லை. தனி நபர் செல்வாக்கு முக்கியமானதாக இருந்தது. எங்கள் பகுதிகளில் நான் இருக்கும் கட்சி என்பதால் ராசேந்திரன் கட்சி, ராசேந்திரன் கொடி என்றுதான் தி.மு.க.வையும் கருப்பு சிவப்பு கொடியையும் மக்கள் சொல்லுவார்கள்.
ஒரு சம்பவம் சொன்னால் அப்போதிருந்த நிலைமை ஓரளவுக்குப் புரியும். ஒருமுறை முதுகளத்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அண்ணா கலந்து கொள்வதாக ஏற்பாடு. எதனாலோ அவர் வருவதற்குத் தாமதமாகிக் கொண்டிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் அண்ணா வந்துவிடுவார் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் எழுந்து "அண்ணா வர்ற வரைக்கும் அண்ணாதுரையையாவது பேசச் சொல்லுங்களேன்'' என்றார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. அண்ணா வருகிறவரை, அண்ணாதுரையை எப்படிப் பேச வைப்பது?
கொஞ்ச நேரம் கழித்துத்தான் புரிந்தது. நாங்களெல்லாம் அண்ணா அண்ணா என்று பேசுவோம். எதிர்க்கட்சிக்காரர்கள் அண்ணாவை, அண்ணாதுரை என்றே அழைப்பார்கள். அண்ணா, அண்ணாதுரை என்று தி.மு.க.வில் இரண்டு பேச்சாளர்கள் இருப்பதாக அவர் நினைத்துவிட்டார். அப்படியொரு நிலைமையில்தான் ஐம்பதுகளின் துவக்கம் ஆரம்பமானது.
தேவர் சமுதாயத்தினரிடையே தி.மு.க. செல்வாக்கு பெருவதற்கு -குறிப்பாக கம்பம், தேனி, மதுரை பகுதிகளில் -நான் காரணமாக இருந்தேன் என்பதற்காக இதைச் சொல்கிறேன். ராசேந்திரன் கட்சி என்பதற்காகவே கூட்டம் சேருவார்கள்.
1962 பொதுத்தேர்தல் எங்களுக்கெல்லாம் படு உற்சாகமான தேர்தல். அண்ணா பதட்டமாகத்தான் இருந்தார். முழுவீச்சோடு களம் இறங்கியிருந்தோம். தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு ஜவஹர்லால் நேரு வந்திருந்தார். தேனி மாவட்டத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுரை பகுதிகளில் நாம் ஜெயிப்பது கடினம்தான் என்று எண்ண ஆரம்பித்துவிட்டோம். அப்போது ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது. நேருவின் பேச்சை மொழிபெயர்ப்பு செய்தவர் இறுதியில் "நம் ராஜாங்கத்துக்கே வாக்களிக்க வேண்டுகிறேன்' என்பதாக மொழிபெயர்த்தார். தி.மு.க.வின் சார்பில் போட்டியிட்டவர் பெயர் ராஜாங்கம். நேருவே ராஜங்கத்துக்கு ஓட்டுப் போடச் சொல்லிவிட்டார் என்று மக்களில் பாதிப் பேர் தவறாகப் புரிந்து கொண்டு ஓட்டுகளை வாரி வழங்கினர். அப்போது தி.மு.க. பிரமுகர்களுக்கு பிரசாரத்துக்கு கார் தந்து அனுப்புவது நான்தான். அண்ணா, நெடுஞ்செழியன் என யார் சுற்றுப் பிரயாணம் செய்வதானாலும் என்னுடைய காரை அனுப்பிவிடுவேன். தேர்தல் சமயங்களில் என்னுடைய ஜீப், ப்ளைமூத், வேன்கள் எல்லாமே களத்தில் இருக்கும்.
தி.மு.க.வின் ஆரம்பக் கட்டத்தில் இருந்து அதில் பணியாற்றி வந்ததற்கு எனக்கு இருந்த ஒரே ஒரு காரணம் அண்ணா என்ற மூன்றெழுத்து மட்டும்தான். சினிமாவில் பிரபலமாக நடித்துக் கொண்டிருந்த நேரத்திலும் நடிப்புக்கு நடுவே தி.மு.க. கூட்டங்களில் பிரசாரத்துக்குத் தொடர்ந்து செல்வேன். வில்லுப்பாட்டு கச்சேரிகள் நடத்துவேன். தி.மு.க. அதில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதாகவும் அதில் அண்ணா முதலமைச்சராகவும் நெடுஞ்செழியன் கல்வி அமைச்சராகவும் ஈ.வி.கே. சம்பத், கலைஞர் கருணாநிதி போன்ற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதவி கொடுத்து பாடுவேன். அதில் இறுதியில் "எனக்கு என்ன பதவின்னு கேட்கிறீர்களா? இறுதிவரைக்கும் அண்ணாவின் அன்புத் தொண்டனாக இருப்பேன்' என்று முடிப்பேன்.
அதே போல் 1967 -ல் அண்ணா முதல்வரானபோது என் வீட்டில் இருந்துதான் மந்திரிசபையே அமைக்கப்பட்டது. என் வீட்டு போனில் இருந்துதான் நெடுஞ்செழியன், கருணாநிதி போன்றவர்கள் அழைக்கப்பட்டு அவரவர்களின் அமைச்சரவையை அறிவித்தார் அண்ணா. எனக்கு எந்தப் பதவியும் பெற்றுக் கொள்ளவில்லை.
கருணாநிதியை என் வீட்டுக்கு அழைத்துவிட்டு, "இப்ப கருணாநிதி வந்ததும் எனக்கு போலீஸ் மந்திரி சபை வேண்டும்னு கேட்பார் பாரு'' என்றார். அதேபோல் கருணாநிதி வந்ததும் போலீஸ் மந்திரி பதவி வேண்டும் என்றார். "முதலமைச்சர் பதவியை வேண்டுமானால் கேள், போலீஸ் அமைச்சராக நான் பொறுப்பேற்க இருக்கிறேன்' என்று அண்ணா அப்போது சொன்னார். கருணாநிதியை அந்த அளவுக்கு அண்ணா கணித்து வைத்திருந்தார்.
அண்ணாவுக்கு முதன்முதலாக பெரிய அளவில் பிறந்தநாள் கொண்டாடியவன் நான்தான். எல்டாம்ஸ் ரோடில் என் புதுவீட்டுக்கு "அண்ணா இல்லம்' என்று பெயரிட்டு அதன் திறப்புவிழாவோடு அண்ணாவின் 50 -வது பிறந்தநாளைப் பொன்விழாவாகக் கொண்டாடினேன். அதே போல் 51 -வது பிறந்தநாளைக் கொண்டாடும்போது அவருக்குப் பிறந்த நாள் நினைவாக 51 பரிசுகள் கொடுக்கத் தீர்மானித்தேன். வாட்ச், பேனா, சட்டை, வேட்டி என 50 பரிசுகளை எடுத்துக் கொடுத்தேன்.
"51 -வது பரிசு எங்கே?'' என்று அண்ணா சிரித்துக் கொண்டே கேட்டார். நான் என் சட்டைப் பையில் இருந்து ஒரு துண்டுச் சீட்டை எடுத்துக் கொடுத்தேன்.
அதில் 51
}வது பரிசு என் உயிர் என்று எழுதியிருந்தேன்.
அண்ணா கண்கலங்கிப் போனார்.
"வாழ வேண்டியவன் இப்படியெல்லாம் எழுதலாமா?'' என்று கண்டித்தார்.
அண்ணாவுக்கு தெருகூத்தில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. ஒருமுறை அண்ணாவும் நானும் சிவகங்கையில் ஒரு பொதுகூட்டத்துக்குப் போய்விட்டு இரவு சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். அண்ணா வருகிறார் என்றால் நான் பின் சீட்டில் உட்கார்ந்து கொள்வேன். அவர் முன்னால் உட்கார்ந்து பார்த்துக் கொண்டு வருவார். திருச்சிக்கு அருகே கார் நின்றிருந்தது. நான் எழுந்து பார்த்தபோது அங்கே நடந்து கொண்டிருந்த தெருக்கூத்தில் முன் வரிசையில் அண்ணா உட்கார்ந்து தலைப்பாகைச் சுற்றிக் கொண்டு "சத்யவான் சாவித்திரி' நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். தூக்கம் கலைந்து நானும் அண்ணாவுக்குப் பக்கத்தில் சென்று அமர்ந்தேன். "நீ நிம்மதியாகத் தூங்குவாய் என்றுதானே காரை நிறுத்திவிட்டு வந்தோம். நீ ஏன் எழுந்து வந்தாய்?'' என்றார். கூத்து பார்க்க நானும் அண்ணாவும் வந்துவிட்டதில் நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தவர்களுக்குப் பரம திருப்தி. அண்ணாவை மேடைக்கு அழைத்து இரண்டு வார்த்தை பேசச் சொன்னார்கள். எமதர்மன் வந்துவிட்டான். எங்களுக்கு மேலுலகம் செல்வதற்கு இன்னும் காலம் இருப்பதால் இப்போதைக்கு விடைபெற்றுக் கொள்கிறோம் என்று சுருக்கமாகப் பேசினார்.
ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் அவர் மேலுலகம் செல்வார் என்று யார்தான் எதிர்பார்த்தார்கள். என் தாய் இறந்தபோதுகூட என்னால் தாங்கிக் கொள்ள முடிந்தது. அண்ணாவின் மறைவு என்னால் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் துயராக இருந்தது. அந்தத் துயரை மறக்க விடாமல் குடிக்க ஆரம்பித்தேன். தினமும் கடற்கரைக்குச் சென்று அங்கேயே குடித்துவிட்டு அவர் கல்லறைக்கு அருகிலேயே படுத்துக் கிடந்த நாள்கள் உண்டு. படப்பிடிப்புக்குப் போகமுடியவில்லை, வீட்டில் தங்க முடியவில்லை, யாருடனும் பேசிப் பழக முடியவில்லை. குடிதான் எனக்குத் தீர்வாக இருந்தது. சீக்கரமே குடல் கெட்டுப் போனது. அரசுப் பொது மருத்துவமனையில் என்னைக் கொண்டு போய் சேர்த்தார்கள்.என் நிலைமை கேட்டு தந்தை பெரியார் என்னைச் சந்திக்க மருத்துவமனைக்கு ஓடோடி வந்தார். உரிமையாகத் திட்டினார். என்னை நீ வந்து பார்க்க வேண்டிய வயதில் நான் உன்னை வந்து பார்க்க வேண்டியிருக்கிறதே என்றார்.
"என்னை மன்னித்துவிடுங்கள் ஐயா, இனிமேல் இப்படிக் குடிக்க மாட்டேன்'' என அவர் கையைப் பிடித்துக் கலங்கியபடி சொன்னேன்.
அண்ணா இறந்த சில ஆண்டுகள் கழித்து நடந்த சம்பவத்தைச் சொல்கிறேன்.
மணிமகுடம் படப்பிடிப்பு. மிகப் பெரிய செட் அமைத்து ஏராளமான நட்சத்திரப் பட்டாளத்தோடு படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. ஃபிலிம் சுருள் தீர்ந்து போனது. ஒரு காரை அனுப்பி லேபிலிருந்து ஃபிலிம் சுருளை எடுத்து வரச் சொன்னேன். போன கார் போனதுதான். என்ன ஆனதென்றே தெரியவில்லை. இப்போது போல உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலை. அத்தனை பேரும் காத்திருக்கிறோம். எனக்கு எரிச்சல் என்றால் எரிச்சல். வேறு ஒரு காரை அனுப்பி ஃபிலிம் சுருளைக் கொண்டு வர ஏற்பாடு செய்தோம். அதன் பிறகு முதலில் அனுப்பிய கார் வந்து சேர்ந்தது.
"அவனை அப்படியே போகச் சொல்லுங்கள்'' என்று என் உதவியாளரிடம் சொல்லி அனுப்பிவிட்டேன். ஆனால் அந்தக் கார் டிரைவர் என்னை நேரில் பார்த்துப் பேச விரும்புவதாகச் சொன்னார்கள். கோபத்தோடு "என்னய்யா?'' என்றேன்.
"அய்யா இது அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையாரின் கார். இந்தச் சவாரியில் வரும் பணத்தில்தான் அவர்கள் குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது. பழைய கார் திடீரென்று பழுதாகிவிட்டது. அதைச் சரி செய்து கொண்டுவருவதில்தான் தாமதமாகிவிட்டது'' என்று விளக்கினார்.
அண்ணாவின் குடும்பத்துக்கா இந்த நிலை? என்று துடித்துப் போனேன். உடனடியாக ஐந்தாயிரம் ரூபாயைக் கொண்டு போய் அம்மையாரிடம் கொடுத்தேன். தன் குடும்பத்துக்கென பேரையும் புகழையும் தவிர எதையுமே சேர்த்து வைத்துக் கொள்ளாத தன்னிகரில்லாத் தலைவன் அண்ணா என்பதற்கு இதைவிட வேறென்ன அத்தாட்சி வேண்டும்?
சந்திப்பு: தமிழ்மகன்
தினமணி அண்ணா நூற்றாண்டு மலர் -2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)