அமெரிக்காவில் இந்தியர்கள் சிலரைத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியது நினைவிருக்கலாம். இந்திய அரசாங்கம் உடனடியாக கண்டனம் தெரிவித்தது. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களை அடித்த அடியில் இந்திய அரசு, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை அனுப்பி விசாரித்திருக்கிறது. வளைகுடா நாடுகளில் கொத்தடிமையாக இந்தியர்கள் பலர் நடத்தப்படுவதாக செய்திகள் வருகின்றன. மீட்புக்குழு அனுப்பி வைக்கப்படுகிறது.
"இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருப்பது இதிலிருந்து வேறுபட்டது. ஏனென்றால் அவர்கள் இந்தியர்கள் இல்லை, இது அண்டை நாட்டில் வசிக்கும் இரண்டு இனத்தவரின் பிரச்சினை' என்று சுலபமாகக் கை கழுவிவிட முடிகிறது. அவர்கள் அண்டை நாட்டவர்கள் என்பது முதல் இந்திய பிரதமர் நேருவுக்கும் அதன் பின்னர் வந்த இந்திரா காந்திக்கும் தெரியாமல் போய்விட்டது . அவர்கள் இதைப் புரிந்து கொள்ளாமல் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். தினம் நூறு மார்வாடியையோ, தினம் நூறு பஞ்சாபியரையோ வெளிநாட்டில் கொன்று கொண்டிருந்தால் இந்தியா இப்படி வெளிநாட்டுப் பிரச்சினை என்று இருந்துவிடக் கூடாது என்பதுதான் தமிழர்களின் கோரிக்கையாகவும் வருத்தமாகவும் இருக்கும்.
ஏனென்றால் ஒருமைப்பாடு குறித்து தமிழர்களுக்கு இயல்பாகவே நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. "யாவரும் கேளிர்' பாடிய காலத்திலிருந்தே இதற்கு உதாரணங்கள் சொல்ல முடியும். இப்போதும் திருவள்ளுவருக்கு சிலை வைக்க பெங்களூருவில் எதிர்ப்பு.18 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு பலத்த பாதுகாப்போடு சிலை திறக்கப்பட்டிருக்கிறது. இங்கே சர்வக்ஞர் சிலை மகிழ்ச்சியாக திறக்கப்பட இருக்கிறது.
ஆக, இப்போது சொல்ல வருகிற விஷயம் அண்டை நாட்டினர் பற்றியல்ல, இந்தியர்களைப் பற்றியதுதான். அதாவது வெளிநாட்டில் இந்தியர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது பற்றி.
பிரான்ஸில் நாகரத்தினம் கிருஷ்ணா சென்னை வந்திருந்தார். அமுதசுரபி மாத இதழின் சார்பில் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு.
ஏன் பல நாடுகளிலும் வேலை பார்க்கப் போயிருக்கும் இந்தியர்களை வெளிநாட்டினர் உருட்டுக் கட்டையால் அடிக்கிறார்கள் என்று அவருடைய ஒரு பதிலில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது.
இந்தியர்கள் பொதுவாக சகிப்புத் தன்மை மிக்கவர்களாக இருக்கிறார்கள். பொறுமையாக இருக்கிறார்கள். நன்றாக உழைக்கிறார்கள்.. அதுதான் வெளிநாட்டினரின் ஆத்திரத்துக்குக் காரணம்.
முதலாவது இங்கிருந்து செல்கிறவர்கள் உழைத்துச் சம்பாத்து ஊருக்குள் செல்வச் செழிப்போடு வாழ ஆசைப்படுகிறார்கள். அதனால், கிடைத்த வெளிநாட்டு வேலையைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். எட்டு மணி நேரத்தைக் கடந்து.. சிலர் 12 மணி நேரம்கூட வஞ்சனை இல்லாமல் வேலை செய்கிறார்கள்.
இரண்டாவது, விடுமுறை நாள்களில் வரச் சொன்னாலும் வருகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் ஜுன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சுற்றுலா மாதங்கள். பலர் விடுப்பு எடுத்துக் கொண்டு ஊர் அல்லது உலகம் சுற்றுகிறார்கள். நம்மவர்களில் பலர் அவர்களின் சுற்றுலா மாதங்களில் பணியாற்றுவதால் நிறைய சம்பளம் ஈட்ட முடிகிற மகிழ்ச்சி. விடுப்பு எடுப்பதில்லை.
எனது பள்ளி நாள்களில் பட்டை அடித்து, தலை மொழுகி வாரி, சுத்தமான கையெழுத்தில் வீட்டுப் பாடங்கள் முடித்து, நல்ல மதிப்பெண்ணும் வாங்கிவிடும் மாணவர்கள் சிலர் இருப்பார்கள். இது போதாதென்று விடுமுறை நாளில் வாத்தியார் வீட்டுக்கும் போய் அவருக்கு உறுதுணையாக இருப்பார்கள். வகுப்பில் சுமாரான பையன்களின் எண்ணிக்கைதான் எப்போதும் பெரும்பான்மையாக இருக்கும். அவர்களுக்கு வாத்தியார் அடித்தால் அவர் மீது ஏற்படும் கோபத்தைவிட அந்தப் பட்டை போட்ட பையன் மீது கோபம் அதிகமாக இருக்கும். அவன்தான் நம்மை மாட்டிவிடுகிறவன் என்கிற சந்தேகமும் சேர்ந்து கொண்டால் ஆத்திரம் வலுக்கும். சென்னையில் ""டேய் டாபர் மாமா'' என்பார்கள்.
அதுதான் நடக்கிறது இப்போது வெளிநாடுகளில். உண்மையில் நாம் உழைக்கிறோம். அளவுக்கு அதிகமாக சிரத்தையுடன் இருக்கிறோம். அதுவே குற்றமாகிவிடுகிறது.