வெள்ளி, நவம்பர் 02, 2007
மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ்!
சென்னைக்கு இது 368- வது வயது.
ஏறத்தாழ 368 ஆண்டுகளுக்கு முன் தமிழகக் கடற்கரை ஓரம் இருந்த ஒரு சிறு மீனவக் குப்பத்தில் இருந்துதான் சென்னையின் சரித்திரம் துவங்குகிறது. விறுவிறுப்பான சினிமா போல அமைந்த சென்னையின் கதை:
வாணிபம் செய்ய இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் தென்னிந்தியாவில் குடிபெயர்ந்த இடம் நிசாம் பட்டினம் மற்றும் பெத்தபள்ளி.
அங்கு நிலவிய தட்ப வெப்பநிலை அவர்களுக்கு ஒத்துவரவில்லை. அங்கிருந்து சிறு சிறு படகுகளில் தங்கள் மூட்டை முடிச்சுகளை ஏற்றிக் கொண்டு பழவேற்காட்டுக்கு வடக்கே சில கிலோமீட்டர் தூரத்தில் ஆறுமுகப் பட்டனத்தை ( அழ்ம்ஹஞ்ர்ய்)1626 -ல் அடைந்தனர். அங்கும் துறைமுக வசதி சரியாக இல்லை.
கண்டேன் சென்னையை!
ஆறுமுகப் பட்டனத்தில் கிடங்கின் தலைவனாகப் பணியாற்றி வந்த பிரான்சிஸ் டே என்பவன் 1637-ல் இடம் தேடி பாண்டிச்சேரி வரை கடற்கரையோரமாகப் பயணித்தபோது, பழவேற்காட்டுக்குத் தெற்கே இருந்த இடம் நெசவுப் பொருள்களை மலிவாக வாங்கவும் கிடங்கு அமைப்பதற்கு ஏற்றதாகவும் இருப்பதைக் கண்டான்.
அந்த இடம் கிழக்கே கடலாலும், தெற்கே கூவம் ஆற்றாலும், மேற்கே பின்னாளில் எழும்பூர் ஆறு என அழைக்கப்பட்ட ஆற்றாலும் சூழப்பட்டிருந்தது. மூன்று பக்கத்திலும் இயற்கை அரண்கள் இருந்ததால் இந்த இடம் பிரான்சிஸ் டேக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. டே தேர்ந்தெடுத்த அந்த இடம்தான் "சென்னைப் பட்டினம்'. தேர்ந்தெடுத்த ஆண்டு 1637.
இங்குத் தொழில் தொடங்க அனுமதி பெற அப்போது தொண்டை மண்டலத்தை ஆண்ட நாயக்கர்களை அணுகினார்கள். அவர்கள் தாங்கள் தேர்வு செய்திருந்த நிலப்பகுதியைச் சொன்னதும் வேங்கடபதி சந்தோஷமாகச் சம்மதித்தார். ஆங்கிலேயர் மூலமாகப் பாதுகாப்பையும் அதே சமயத்தில் வருவாயையும் ஈட்ட முடியும் என்ற திருப்திதான் வேங்கடபதி நாயக்கரின் மகிழ்ச்சியான ஒப்புதலுக்குக் காரணம்.
ஒப்பந்தம்
1639 -ல் ஆகஸ்ட் 22- தேதி பாளையக்காரர்கள் -டே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆண்டுக்கு 1,200 வராகன் கிஸ்தி கட்டுவதற்கு ஆங்கிலேயர்கள் ஒப்புக் கொண்டனர். இதைத்தான் சென்னை பிறந்த ஆண்டாகக் கொண்டாடுகிறார்கள்.
வாழைத் தோட்டத்தில் கோட்டை
கடற்கரையோரமெங்கும் சிறு சிறு மீனவக் குப்பங்கள் திருவொற்றியூர் முதல் திருவல்லிக்கேணி வரை இருந்தன. இப்பொழுது "செயிண்ட் ஜார்ஜ் கோட்டை' இருக்கும் இடம் அப்போது மதுரசேனன் என்ற மீனவனின் வாழைத் தோட்டமாக இருந்தது. அதனருகே நரிமேடு எனும் குன்று இருந்தது. அதனருகே சிறு தீவு (இப்போது தீவுத் திடல்). கடற்கரை ஓரமாக நின்று பார்த்தால் நகிரி மலையின் உச்சி தெரியும். கப்பல் மாலுமிக்கு அதுதான் கலங்கரை விளக்கம்.
பிராட்வே சாலை இருக்கும் இடத்தில் சிறு கால்வாய் ஓடிக் கொண்டிருந்தது. கால்வாய்க்கு மேற்கே விளை நிலங்கள். அவற்றின் பாசனத்துக்கு உதவியாக ஏரிகள் இருந்தன.
"பூவிருந்தவல்லியிலிருந்து சென்னையை உள்ளடக்கிய தொண்டை மண்டலப் பகுதியை சந்திரகிரி அரசன் கீழ் வேங்கடபதி நாயக்கர் ஆண்டுவந்தார். அவர் ஆங்கிலேயர்களுக்கு நான்கு சிற்றூர்களைத் தந்தார்' என்று மெக்கன்சியின் கைப்பிரதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவை முறையே மதறாஸ் குப்பம், சென்னைக் குப்பம், ஆர் குப்பம், மேலுப்பட்டு.
பண்டகச் சாலைக் கட்டட வேலை 1640 மார்ச் முதல் தேதி தொடங்கப்பட்டது. இக் கட்டடத்தின் ஒரு பகுதி "செயின்ட் ஜார்ஜ் தின'த்தில் கட்டி முடிக்கப்பட்டதால் செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்று பெயரிட்டனர். பணப்பற்றாக்குறை காரணமாக மெதுவாகவே வளர்ந்தது கோட்டை. 14 ஆண்டுகள் கழித்து 1653 -ல் கோட்டை முழுமையடைந்தது.
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே உள்ள பகுதி சென்னப்பட்டினம் என்றும் தெற்குப் பகுதி மதறாஸ் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த இரண்டு பட்டினங்களையும் ஒன்று சேர்த்து ஆங்கிலேயர்கள் மெட்றாஸ் என்றனர். தமிழர்கள் சென்னப்பட்டனம் என்று அழைத்தனர். 1653-ல் சென்னைப்பட்டினம் சென்னை மாகாணமாக மாறியது. அதன் பின்னர் 1702-ல் முகலாயர்களாலும் 1741-ல் மராட்டியர்களாலும் தாக்குதலுக்கு ஆளானது. 1746-ல் பிரெஞ்சு ஆட்சியர்களின் கைக்கு மாறியது.
மீண்டும் ஆங்கிலேயர்கள் ஆட்சியைப் பிடித்தனர். அதன் பிறகு 1758-ல் மீண்டும் பிரெஞ்சு ஆட்சி. ஆனால் இரண்டே மாதத்தில் ஆங்கிலேயர்கள் மீட்டனர். அதன் பிறகு இந்தியா சுதந்திரம் அடையும் வரை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர் வசமாகவே இருந்தது.
சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று 1968-ம் ஆண்டு பெயர் சூட்டப்பட்டது. அதே போல் மெட்றாஸ் என்ற பெயரும் 1997-ல் சென்னை என்று மாற்றப்பட்டது.
30 ஆயிரம் மக்கள் தொகையுடன் உருவான சென்னை நகரம், இன்று 60 லட்சம் பேர்களோடு மகத்தான பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் தொகை மட்டுமின்றி மக்களின் கண்ணோட்டத்திலும் மகத்தான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதும் மறுக்க முடியாது.
"சென்னை' என்று பெயர் பெற்றதற்கும் இருவேறு கருத்துகள் உள்ளன. வேங்கடபதி நாயக்கரின் தந்தை சென்னப்ப நாயக்கரின் நினைவாக சென்னப் பட்டனம் என்று பெயர் வந்ததென்றும் இங்கிருந்த "சென்ன கேசவபுரம்' என்ற இடம்தான் சென்னை என்று மாறிப்போனதென்றும் பெயர்க் காரணங்கள் நிலவுகின்றன. எது எப்படியோ சென்னையை இப்போது நினைத்துப் பார்த்தால் பெருமையாக இருக்கிறதல்லவா?
-தமிழ்மகன்
august 22nd 2007
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)