சனி, நவம்பர் 22, 2008

திங்கட்கிழமை

`உங்கள் விருப்ப'த்தில் இரண்டாவது பாட்டும் போட்டு விட்ட நேரம். 8.40 -க்கு லேடீஸ்- ஸ்பெஷல் உண்டு. அதைப் பிடித்தாக வேண்டும். அது அவ்வளவு சொகுசானது என்றல்ல. இரண்டு வருடமாய் இப்படி ஒரு பழக்கம் ஏற்பட்டாகிவிட்டது. கீதாவுக்கு.
அடுத்து வருகிற பொது பஸ்களில் ஏறினால், ஆடவர்களின் அழுத்தமும், அடர்த்தியும் அதிகமாக இருக்கும். முதுகில் வந்து ஒருவன் மூச்சு விட்டுக் கொண்டிருப்பதாலோ, அவசர, "பிரேக்'கின் போது, அளவுக்கதிகமாய் ஒருவன் மேலே சாய்வதாலோ, காலைச் சீண்டுவதாலோ, ஏற்படுகின்ற எரிச்சலை, கோபமாய் ஒரு முறை திரும்பிப் பார்ப்பதன் மூலம் சரி செய்ய முடியும்.
இருந்தாலும் லேடீஸ்}ஸ்பெஷலை விட்டுவிட்டதாகத் தெரிந்தாலே ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது மாதிரி கீதாவுக்கு வேர்க்க ஆரம்பித்துவிடும். கால்மணி, அரை மணி லேட்டாகப் போனாலும் கோபிக்காத "ப்ரைவேட்' நிறுவனம்தான். சைக்காலஜிக்காக அன்றைய பொழுது அவஸ்தையானதாய் மனம் முடிவு கட்டிவிடும்.
கல்யாணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அப்பா இறந்துவிட, அவர் வேலை செய்த, "புரஜெக்டர் ஆபரேட்டர்' வேலைக்காக தியேட்டர் ஓனர் மூவாயிரம் கொடுத்தான். இவ்வளவு பெரிய தொகையைப் பார்க்க அப்பாவுக்குக் கொடுத்து வைக்கவில்லை.

கம்மலை மீட்டது போக மீதியிருந்த பணத்தில் இரண்டு மாத வாழ்க்கையை ஓட்ட முடிந்தது.
உடன் படித்த தோழியின் மூலம் ஏகப்பட்ட அலைச்சலுக்குப் பின் கிடைத்த " ஸ்டோர் கீப்பர்' வேலையால் அப்பா ஸ்தானத்தை அடைந்தாள். "பொம்பளை' அப்பா.
கீதாவோடு வேலை செய்த பெண்களில் ஒருத்தி கணவன் ஸ்தானத்தில் இருந்தாள். கணவனுக்கு சீட்டாடிக் களைத்துப் போனால், குடித்துவிட்டு உதைப்பது என்பது போன்ற வேலைகள் இருந்தன.
நல்லவேளையாய் லேடீஸ் ஸ்பெஷலைப் பிடித்து, டிக்கெட் எடுக்கும் நேரத்திற்குள் சித்தி வினாயகர் கோவிலை பஸ் கடக்கவே, "ஒரு ஆர்ட்ஸ் காலேஜ்'' என்று சொல்லிக்கொண்டே கன்னத்திலும் போட்டுக் கொண்டாள்.

திங்கட்கிழமையின் அவசரம் தவிர்க்க முடியாதது. ஒரு நாள் விடுமுறையை அனுபவித்ததாலோ என்னவோ திங்கட்கிழமை காலையில் - அது மதியம் வரை கூட நீடிக்காது - ஒருவித துரிதம் நிலவும். எல்லோரும் இது எங்கே? அது எங்கே? என்று குதிப்பார்கள். டைப் அடிப்பார்கள். போட்டுப் பார்த்துவிட்டு தப்பு கண்டுபிடிப்பார்கள்.

கீதாவுக்கு அப்படியில்லை மந்தமான "ஸ்டோர்கீப்பர்' வேலை. எவ்வளவு பேப்பர்கள், எத்தனை "இங்க் பாட்டில்கள், எத்தனை பென்சில், கார்ப்ன் பேப்பர், ஸ்டேப்ளர் பின், டைப்ரைட்டிங் ரிப்பன் கொடுக்கப்பட்டது என்பதைக் கணக்கு வைக்க வேண்டும். எது எது தீர்ந்தது போய்விட்டதென்று தெரிவிக்க வேண்டும். வந்தவற்றைக் கணக்குப் பார்க்க வேண்டும்... வாரப் பத்திரிகை படித்துக் கொண்டே செய்கிற வேலைகள்.

இண்டர்காமை அழுத்தி சுஜாவை அணுகினாள். "நாலு நாளாச்சு இன்னும் இந்த வாரம் குமுதம் எனக்கு வரலை'' என்று தெரிவித்தாள் கீதா.

"வந்ததும் வராததும் என்ன குமுதம்? மானேஜர் பொண்டாட்டிக்கிட்ட சண்டை போல இருக்குது. கத்துது கிழம்... ஒரு மணி நேரம் கழிச்சு வரேன்'' வைத்துவிட்டாள்.

பதினொன்றே காலுக்கு வந்தாள் சுஜா.

"கவர்மெண்ட் வேலையா பாத்துக்கிட்டு போயிடணும்டி'' என்றாள்.

"என்னாச்சு இன்னைக்கு?''

"கொஞ்சம்கூட மரியாதையே இல்லாம பேசினார்.''

"யாரு''

"மானேஜர்''

"என்னவாம்?''

"அதான் சொன்னனே... பொண்டாட்டி சண்டதான்"'

"இந்த வயசுல என்னவா இருக்கும்?'' என்று சிரித்தாள் கீதா.

"திட்டினாரா?''

"எதுக்குன்னு இல்லாம எல்லாத்துக்கும் கத்தல்.... கேசுவலா நடக்கற விஷயத்தையெல்லாம் பெரிசு பண்ணி, ஆபீஸ் நேரத்தில எதுக்கு சிரிக்கிறீங்கன்னு கேக்குது... பியூன் சின்னசாமி பீடி பிடிச்சதுக்கு போட்டு கன்னத்துல அறைஞ்சிருக்கு....''

"அதுக்கு என்ன ப்ராப்ளமோ...வுடு''
சுஜா, எதிரில் இருந்த வார இதழை லேசாய் புரட்டி, ""நதியும் கரையும் படிச்சிட்டியா?'' என்று தொடர்கதைப் பற்றி விசாரித்தாள்.

"இன்னும் இல்ல''

"ராஸ்கல்... கடைசில என்ன பண்ணாந் தெரியுமா?... கல்யாணத்துக்கு அம்மாகிட்ட பர்மிஷன் கேட்டுட்டு வரேன்னு ஊருக்குப் போனான் இல்ல..?''

"ஆமா...''

"அவங்க அம்மாவுக்குப் பயந்து அத்தை பொண்ணையே கட்டிக்றேன்னு சொல்லிவிட்டான்...''

"அடப் பாவமே...''

"அம்மாகிட்ட பர்மிஷன் கேட்டுட்டு காதலிச்சிருக்கணும்... நைன்டி நைன் பர்சண்ட் இப்படித்தான் இருக்கானுங்க. காதல்னாவே பயமா இருக்கு... நீ யாரையாவது "லவ்' பண்றியா?'' என்றாள் அறைந்தாற்போல்.

"ச்சேச்சே...''

"அதானே காதலிக்கறதுக்கு நமக்கு ஏது நேரம்?... உன் தம்பிய மெக்கானிக் ஷெட்ல விட்டயே எப்படி இருக்கான்?...''

"சரியா போமாட்றான்... அடிக்கடி லீவ். ரெண்டு ரூபா கெடைச்சா சினிமா. ரஜினி ரசிகர் மன்றத்துக்கு போஸ்டர் ஒட்டறது. எப்படி ஆவான்னு தெரிலை''

"எங்க அண்ணன் சம்பாதிக்கிற பணம், அவன் "சைட்' அடிக்கறதுக்கே பத்தல. முந்நூர் ரூபால ஷு வாங்கி இருக்கான். வாடகை எப்படிக் குடுக்கறதுனு நா தவிக்றேன்...''

"ச்சூ... எம்ப்ளாய்மென்ட்ல ரிஜிஸ்டர் பண்ணிட்டியா?''

"எனக்கு வேலைக்குப் போற ஐடியாவே இல்ல... எங்கப்பா "எக்ஸ்பயர்ட்' ஆனதும்தான் பண்ணேன்.''

"ஆள் தெரிஞ்சா பதிவு பண்ண மூணா நாள்கூட "ஆர்டர் வருது. நமக்குப் பத்து வருஷமானாலும் வராது'' என்று எழுந்தாள் சுஜா,

"கொஞ்ச நேரம் இருடி... ரொம்ப வெறுப்பா இருக்கு...''

"வேணாம்பா, கிழவனுக்கு நா பதில் சொல்ல முடியாது. "லஞ்ச்'ல பார்ப்போம்...'' மறைந்து போனாள் சுஜா.
கீதா இண்டர்காமில் ஆபரேட்டரிடம் ஒரு நம்பரைச் சொல்லிக் காத்திருந்தாள்.

"ஹலோ...''

"ஹலோ... எம் எல் டி லிமிட்டெட்?''

"யெஸ்''

"குட் யூ கால் மிஸ்டர் பாஸ்கர்?''

"பிளீஸ் லைன்ல இருங்க'' இருந்தாள்.

"ஹலோ பாஸ்கர் இயர்''

"நான் கீதா''

"ஹொ டூ யூ டூ?''

"ஒரு வாரமாச்சு பாத்து'' என்றாள்.

"மார்க்கெட்டிங்ல போட்டுட்டாங்க... எப்ப எந்த ஊருக்குப் போக வேண்டியிருக்கும், தெரிலை... "இன்பார்ம்' பண்றதுக்குக் கூட டயம் இல்ல... சாரி''

"உங்கம்மாவுக்கு நம்ம விஷயம் சொல்லிட்டிங்களா?''

"என்ன திடீர்னு எங்கம்மா...? அவுங்க உயிரோட இல்ல''

"ஐம் சாரி... ஏன் முதல்லயே சொல்லல?''

"பழய விஷயம். நானே எங்கம்மாவ பாத்ததில்ல''

"அப்பா?''

"அரோக்கோணத்தல இருக்கார்'' கீதா ஏதோ கேட்க நினைத்தாள்.

"சரி. ஈவனிங் பாப்பமா?'' என்றாள்

"ஓ.கே''

பாஸ்கர் ரிஸீவரை வைக்கும் சத்தம் கேட்டதும், ரிஸீவரை மெல்ல வைத்தாள் கீதா.

(தொடரும்)

LinkWithin

Blog Widget by LinkWithin