ஞாயிறு, பிப்ரவரி 10, 2013

அமரர் சுஜாதாவும் மகா பெரியவரும் பின்னே தமிழ்மகனும்



நேற்று (பிப்.10) மாலை 6 மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் அமரர் சுஜாதா என்ற என் அறிவியல் புனைகதை தொகுப்பின் அறிமுகவிழா. எழுத்தாளர்கள் கவிதா பாரதி, அமிர்தம் சூர்யா, சந்திரா, ராஜுமுருகன் நூலைப் பற்றி பேசினார்கள். நான் நன்றாகத்தான் எழுதிக்கொண்டு வந்திருக்கிறேன் என்பதை என் வெவ்வேறு கால கட்டக் கதைகளை எல்லாம் சுட்டிக்காட்டிப் பேசியபோது உணர முடிந்தது.


எழுத்தாளர் அஜயன் பாலா என்னோடு அவருக்கு இருக்கும் 20 ஆண்டுகால நட்பைப் பற்றிப் பேசினார். எழுத்தாளர் என்றாலும் நூலை வெளியிட்டவர் என்ற முறையிலேயே அவருடைய பேச்சு இருந்தது. என்னிடம் இருந்து அறிவியல் புனைகதைகளை வாங்கி வெளியிட்டதற்கான காரணத்தைச் சொன்னார். ‘விஞ்ஞான கதைகளை மிகச் சிலரே எழுதுகிறார்கள். சுஜாதாவுக்குப் பிறகு எனக்குத் தெரிந்து தமிழ்மகன்தான் எழுதிவருகிறார். அதனால்தான் புத்தகத்துக்கு ‘அமரர் சுஜாதா’ என்று பெயரிட்டு.. கீழே தமிழ்மகன் என போட்டேன். முதன் முதலில் என்னை உலக சினிமா பற்றி எழுத வைத்தவர் தமிழ்மகன்தான். வண்ணத்திரை இதழில் பணியாற்றியபோது, ‘பேட்டல் ஷிப் ஆஃப் பொட்டாம்கின்’ படத்தைப் பற்றி இவர் எழுதிய செய்தியைப் படித்துவிட்டு அப்போது குங்குமம் பப்ளிகேஷன் இதழ்களின் ஆசிரியராக இருந்த முரசொலி மாறன் அழைத்து அதைப் பெரிய கட்டுரையாக எழுதச் சொன்னார். அதன் பிறகு தமிழ்மகன் தினமணியில் சேர்ந்தார். அங்கும் என் உலக சினிமா கட்டுரைத் தொடர் தொடர்ந்தது. உலக சினிமா என்ற நூலை எழுதுவதற்கு அவர்தான் முதல் காரணமாக இருந்தார்’ என்று ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து வந்தவர்கள் எல்லாருமே கிட்டத்தட்ட வார்த்தைக்கு வலிக்காமல் பேசுபவர், மிகவும் நல்லவர் என்று சில நிமிடங்கள் என்னைக் குறித்து பேசிவிட்டு பிறகுதான் என் நூலை அலச ஆரம்பித்தனர். நூலை ‘வெளி’ ரங்கராஜன் வெளியிட (என்ன ஒற்றுமை?), பெற்றுக்கொண்டார் கவிஞர் கடற்கரய்.
கடற்கரய் பார்வையாளராக வந்தவர்தான். அவரையும் பேசச் சொன்னார்கள். ‘தமிழ்மகனுக்காகத்தான் முதுகுவலி இருந்தும் வெகுதூரத்தில் இருந்து வந்தேன். உடம்பு ஒத்துழைக்கவில்லை என்றாலும் மனம் ஆர்வமாக இருந்ததால் கிளம்பி வந்துவிட்டேன். தமிழ்மகன் வயது வித்தியாசம் பார்க்காமல் பழகக் கூடியவர். கடும் விமர்சனங்களை முன் வைத்தாலும் அதை புன்முறுவலோடு ஏற்றுக்கொண்டு எப்போதும் போல பேசுவார்’ என்றார்.
எனக்கு மணிவிழா, பொன்விழா போல ஏதோ நடக்கிறதோ என இருந்தது. எல்லோருமே என்னை குறிவைத்து பாராட்டினர். எல்லோரும் கலந்துபேசி ஒரு முடிவுடன் வந்தது மாதிரி இருந்தது. அதை நானே மறுபடி தொகுத்து எழுதுவதால் கொஞ்சம் கட்டுப்படுத்தித் தந்திருக்கிறேன்.
அமிர்தம் சூரியா ஏறத்தாழ எல்லா கதைகளையும் பட்டியல் போட்டு அலசினார். ‘இந்த நூலை நான் வெளியிட்டு இருந்தால் மகா பெரியவரும் அமரர் சுஜாதாவும் என பெயரிட்டு இருப்பேன். மகா பெரியவர், சுஜாதா இருவருமே நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்கள். அவர்களை மையப்படுத்திய கதைகள் இடம்பெற்று உள்ளன. மகா பெரியவர் என்ற கதை பேசும் அரசியல் நுணுக்கமானது. கல்கியில் மகா பெரியவரின் தத்துவங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். மகா பெரியவரின் தத்துவங்களை அதிகம் படித்த நவீன எழுத்தாளன் என்ற முறையிலும் இந்த நூலுக்கு அந்தத் தலைப்பு மிக பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து’’ என்றார்.
இயக்குநர் கவிதா பாரதியும் எனக்கும் அவருக்குமான இருபது ஆண்டுகால நட்பில் இருந்தே பேச்சைத் தொடங்கினார். ‘‘உங்களுக்கெல்லாம் தெரிந்த தமிழ்மகனுக்கு சற்று முந்தைய தமிழ்மகனை எனக்குத் தெரியும். எண்பதுகளின் மத்தியில் பேராசிரியர் சுப.வீரபாண்டியனோடு இணைந்து சிவாஜி கணேசன் நடித்த ‘முதல்குரல்’ படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபட்டோம். அதோடு அவரை பத்திரிகை உலகுக்கு அழைத்து வந்தவன் நான்தான். போலீஸ் செய்தி பத்திரிகையில் உதவி ஆசிரியராக வேலைக்குச் சேர்த்தேன். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து எழுதிக்கொண்டு வருபவர். சிறப்பான படைப்புகளை வழங்கியவர். அவருக்கான அங்கீகாரத்தை எழுத்துலகம் வழங்கவில்லை. இத் தொகுப்பிலே நோக்கம் என்ற சிறுகதை, ராமர் கட்டிய சேது பாலத்தையும் மகாத்மா காந்தி வளர்த்தெடுத்த காங்கிரஸ் இயக்கத்தையும் மிக சாமர்த்தியமாக இணைக்கிறது. சீதையை மீட்டு வருவதற்காக கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் பாலம் அது உருவாக்கப்பட்ட நோக்கம் முடிந்து இன்னும் பிரச்னையை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. சுதந்திரம் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட காங்கிரஸ் இன்னமும் இருந்துகொண்டு பிரச்னையை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது என்று இணைக்கிறார். தமிழ்மகன் அறிவியல் புனைகதைகளில் சுஜாதாவைப் போல என்றார்கள். சுஜாதாவின் புனைகதைகளில் இதுபோன்ற அரசியல் நுணுக்கங்கள் இருக்காது. அப்படியே இருந்தாலும் அது இவர் பேசும் அரசியலாக இருக்காது. ஒரு தீப்பெட்டிக்குள் நிகழ்கால சரித்திரத்தை அடைத்துத் தந்தார். ஆண்பால் பெண்பால் நாவலில் குடும்பச் சிக்கலில் எம்.ஜி.ஆரை புகுத்தினார். சம்பந்தமில்லாத இரண்டை சம்பந்தப் படுத்தும் ஆச்சர்யங்கள் இவருடைய கதைகள்’’ என்றார்.


சந்திரா பேசும்போது, ‘‘இந்த நூல் நேற்றுதான் என் கைக்குக் கிடைத்தது. நான்கு கதைகளைத்தான் வாசிக்க முடிந்தது. இவை வழக்கமாக நான் வாசிக்கும் கதைகளைப் போல இல்லை. சுவாரஸ்யமான கதைகளாக இருந்தன. முதலில் கதைகளைப் படிக்காமல் எப்படி விழாவுக்கு வருவது என நினைத்தேன். தலைவலியாகவும் இருந்தது. படிக்க ஆரம்பித்ததும் தலைவலி போய்விட்டது. திருவள்ளுவர் பற்றிய வீடு கதை, பல சரித்திர காலகட்டங்களைச் சொல்கிறது. அறம், பொருள், இன்பம் எழுதிய திருவள்ளுவர், இமயமலைக்குச் சென்று ‘வீடு’ என்ற அதிகாரத்தை எழுதுகிறார். அவர் திரும்பி வருவதற்கும் அவர் இறந்துவிட்டதாக முடிவு செய்துவிடுகிறார்கள். தான் எழுதிய வீடு அதிகாரத்தை உலகுக்கு வழங்க அவர்படும் துன்பம்தான் கதை. எளிமையான மொழியில் பல விஷயங்களைச் சொல்லிச் செல்லும் கதை அது’’ என்றார்.
ராஜுமுருகன் என்னுடைய எளிமையை சொல்லிவிட்டு கதைகளுக்கு வந்தார். ‘‘இவருடைய அறிவியல் கதைகள் பேசும் அரசியல் அசாதாரணமானது. இவருடைய வெட்டுப் புலி, ஆண்பால் பெண்பால் நாவல்கள் பேசும் அரசியல் இந்த அறிவியல் கதைகளில் இருக்கிறது. கேப்ரியல் கார்ஸிய மார்க்வெஸ§க்கான இடத்தை இவருக்கு எழுத்துலகம் தந்திருக்க வேண்டும்’’ என்றார்.
எல்லோருமே அன்பால் குளிப்பாட்டி விட்டதாக நான் ஏற்புரையில் சொன்னேன். ‘‘அறிவியல் கதைகள் என்பவை சமூக பிரச்னைகளுக்கு வெளியே இருப்பவை அல்ல. அதனால்தான் இந்த அறிவியல் கதைகள் அரசியல் கதைகளாகவும் இருக்கின்றன. அறிவியல் கதைகள் என்றால் செவ்வாய் கிரகம், பறக்கும் தட்டு, எதிர்காலம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அதில் திருவள்ளுவரோ, ஆதி மனிதர்களோ வரலாம். ஒரே ஒரு நிபந்தனை.. அதில் புதிதாக ஒரு உலகம் எட்டிப் பார்க்க வேண்டும்.. அதில் அறிவியல் இருக்க வேண்டும்’’ என்றேன்.
என்னையும் என் கதைகளையும் நினைவு கூர்வதற்கு இத்தனை விஷயங்களையும் நண்பர்களையும் சேகரித்துவிட்டது பெருமையாக இருந்தது.





LinkWithin

Blog Widget by LinkWithin