புதன், ஜனவரி 21, 2009

திரைக்குப் பின்னே -16

திரையுலகின் தடயங்கள்

காணாமல் போன ஆட்டுக்குட்டி கேள்விபட்டிருக்கிறோம். காணாமல் போன குழந்தைகள் கேள்விபட்டிருக்கிறோம். குங்குமத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் என்னிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தார். காணாமல் போய்விட்ட நடிகர் நடிகைகள் பற்றி எழுதுங்கள். அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் எழுதுங்கள் என்றார்.

சிறு பட்டியல் தயாரானது. சிலர் நடிகர்கள், பலர் நடிகைகள். அன்றாடம் ஸ்டூடியோக்களில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் நடமாடிக் கொண்டிருந்தவர்கள், ஆயிரம் வாட்ஸ் பல்புகளுக்கு முன் பிரகாசித்துக் கொண்டிருந்தவர்கள், தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் போஸ்டர்களாக ஒட்டியிருந்தவர்கள், பிலிம் சுருள்களாகப் பயணித்தவர்கள்... என் கண் முன்னால் அப்படித் துடைத்துவிட்டது மாதிரி காணாமல் போனவர்கள் இரண்டு பேர். நாங்கள் தயாரித்த பட்டியலில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சரியாக விவரிக்க முடியாமல் போனவர்கள் அவர்கள்.

ஒருவர் ஹீரா. `இதயம்' படத்தில் அறிமுகமாகி "காதல்கோட்டை', "தொடரும்' படங்கள் வரை தொடர்ந்தவர். திடீரென ஒரு நாள் அவர் எந்தப் படத்திலும் இல்லாமல் போனார். தொலைக் காட்சித் தொடர்களில் இல்லை, ஒரு விழாவில் தலைக் காட்டவில்லை, அம்மா, அண்ணி என்று வேடமெடுக்கவில்லை. அவருடைய தொலைபேசியில் வேறு யாரோ பேசுகிறார்கள், அவர் இருந்த முகவரியில் வேறு யாரோ வசிக்கிறார்கள். இன்றைய தேதியில் அவர் காணாமல் போய் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. சாதாரணமாக கடைத்தெருவில், தியேட்டரில், ஹோட்டலில் எங்கும் யார் கண்ணிலும் அவர் படவில்லை.

இரண்டாவது அபிராமி.

'வானவில்', 'பட்ஜெட் பத்மநாபன்', 'விருமாண்டி' என அவருடைய நடிப்புக்கு நல்ல உதாரணங்களைக் காட்டலாம். 'விருமாண்டி' போன்றதொரு படத்தில் நடித்தவர் அந்தப் படம் வெளியான சில தினங்களுக்குப் பிறகு அவரைப் பேட்டி எடுக்கவும் முடியாமல் மாயமானார்.

செல்போன், வீட்டு போன், முகவரி, இ மெயில் எதிலும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருக்கு பத்திரிகை தொடர்பாளராக இருந்தவர், அவர் உடன் நடித்தவர்கள், அவர் படத்தை இயக்கிய இயக்குநர்கள் யாருக்கும் அவர் என்ன ஆனார் என்று தெரிந்திருக்கவில்லை. அவருடைய கேரளத்து முகவரியையும் மாற்றிக் கொண்டார் என்றார்கள்.

இப்படி தூங்கி எழுந்த மறுநாள் எல்லா தொடர்பையும் துண்டித்துக் கொண்டற்கு நியாயமான ஆழமான காரணங்கள் இருக்கக்கூடும். அவர்களைத் தேடுபவர்களுக்கோ அல்லது தேடாதவர்களுக்கோ அது தெரிய வேண்டும் என்ற நியாயம் இல்லைதான்.

கொஞ்ச நாளைக்கு முன் சன் டி.வி. 'நேருக்கு நேர்' வீரபாண்டியன் யாருக்காகவோ விசாரித்தார்.. "காதலிக்க நேரமில்லை' படத்தில் நடித்த நடிகை காஞ்சனா இப்போது எங்கே இருக்கிறார் என்று. மாதவி என்ன ஆனார் என்பார் சிலர். ரவளி, சுவலட்சுமி எல்லாம் இப்போது எங்கே என்பார்கள்.

ஒரு சினிமா ஆரம்பிக்கப்படும் போது மும்பையில் இருந்து ஒரு நடிகை வருகிறார், கேரளத்தில் இருந்து வில்லனை அழைத்து வருகிறார்கள், ஆந்திரத்தில் இருந்து அப்பா நடிகர், கர்நாடகத்தில் இருந்து ஒரு குணசித்திர நடிகர்... வேடந்தாங்கல் பறவைகள் போல கூடுகிறார்கள். படம் முடிந்ததும் கலைகிறார்கள். எல்லோரும் ஒன்றாக இருந்ததற்கான தடயம்போல படம் மட்டும் அவ்வப்போது டி.வி.யில் ஓடிக் கொண்டிருக்கிறது.



கூல்...!

கார்கில் நிதி திரட்டப்பட்ட நேரத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்துவதற்குப் பின் புலமாக இருந்து உதவியவர்களில் அரவிந்த்சாமி முக்கியமானவர். மிக அமைதியாக அலுங்காமல் குலுங்காமல் பேசுகிறவராக அவரைப் பார்த்திருக்கிறேன். கலெக்டர், சாஃப்ட்வேர் என்ஜினீயர், கோடீஸ்வரர், அதிகாரி போன்ற வேடங்களுக்குப் பொருத்தமானவர் என்று முடிவு செய்திருந்தார்கள். பெண்களைப் பார்த்து "நீ என்ன ஐஸ்வர்யா ராயா' என்பது மாதிரி ஆண்களில் "நீ என்ன அர்விந்த்சாமியா' என்று கேட்கிற வழக்கமிருந்தது. அந்த நேரத்தில் அர்விந்த்சாமியை பட்டிக்காட்டு வேடத்தில் நடிக்க வைக்க ஏற்பாடானது.இளையராஜா கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த நேரம். என் ஆசை ராசாவே, ராசா கைய வெச்சா, ராசய்யா என்ற படத்தின் டைட்டிலும் பாடலும் ராசா மயமாக இருந்தது. அவர் இசையமைப்பதாக ஒத்துக் கொண்டால் அவர் படத்தை போஸ்டரில் போட்டு படத்தை விற்றுவிடுவார்கள் அப்படியொரு நிலைமை. இந்த நேரத்தில் அரவிந்த்சாமியின் இந்தக் கிராமிய படத்துக்கு ராஜா இசையமைப்பதாக முடிவானது.அது தாலாட்டு. அதில் கிராமத்தான் வேடத்தில் அரவிந்த்சாமி நடித்தார். அந்தப் படத்தின் பூஜைக்கு ராஜா வந்தார்.

ராஜா அந்தப் பக்கம் வருகிறார் என்றாலே எதிரில் வருகிறவர்கள் சுவர் ஓரமாக ஒட்டிக் கொண்டு நிற்பார்கள். இளையராஜா வந்து கொண்டிருந்தார். அரவிந்த்சாமியிடம் அப்படி எந்தப் பதட்டமும் இல்லை. அவர் பாட்டுக்குச் சிகரெட் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார். ராஜா நெருங்க நெருங்க சுற்றியிருந்தவர்களுக்கெல்லாம் பதட்டம் தொற்றிக் கொண்டிருந்தது. சம்பந்தபட்ட இருவரும் புன்னகைத்துக் கொண்டார்கள். பூஜையை முடித்துக் கொண்டு ராஜா போனார். அரவிந்த்சாமி இன்னொரு சிகரெட்டைக் கொளுத்திக் கொண்டு காரில் புறப்பட்டார். கூல்.

இன்னொரு சம்பவம்.

"மெட்டி ஒலி' தொடரில் ஐந்து பெண்களுக்கு அப்பாவாக நடித்தவர்தான் அர்விந்த்சாமியின் அப்பா என்ற தகவல் எனக்குப் புதிதாக இருந்தது. குங்குமத்தில் பணியாற்றிய அய்யனார் ராஜனிடம் அவரிடம் ஒரு பேட்டி எடுக்கச் சொன்னேன். அவரும் தம் மகனைப் பற்றி அப் பேட்டியில் சொல்லியிருந்தார். 73}ல் அவரை வேறொருவருக்குத் தத்து கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அய்யனார் ராஜன் தொடர்ந்து அர்விந்த்சாமியிடம் பேசினார். உங்கள் தந்தையார் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.. நீங்கள்

அவரைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..?

அரவிந்த்சாமி அமைதியாகச் சொன்னார்: "என்னுடைய அப்பா 73-லேயே இறந்து போயிட்டாரே....''

உச்சரிப்பு கூலாகத்தான் இருந்தது. மனதின் வலி அப்படி தெரியவில்லை.

வில்லன் விவேக்

கொஞ்சம் எம்.ஆர்.ராதா, கொஞ்சம் என்.எஸ்.கே. இரண்டும் கலந்த கலவை. நகைச்சுவை நடிகர்களில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர். தனக்கான காட்சிகள் வசனங்கள் போன்றவற்றில் அதீத கவனம் எடுத்துக் கொள்பவர். படத்தில் மட்டுமல்ல, பத்திரிகைக்குப் பேட்டி கொடுக்கும்போதும் அதே அளவு கவனமாக இருப்பார். விவேக் எனக்கு வில்லனாகிப் போன ஒரு சம்பவம் இது.

சிவாஜியை இமிட்டேட் செய்து நடிப்பது பற்றி நிருபர் ஒருவர் விவேக்கிடம் கேள்வி கேட்டார். அதற்கு அவர் சிவாஜியை வைத்து பெருமை தேடிக் கொள்கிற விஷயம் அது என்று சொன்னார். எழுதிய நிருபர் என்னால் "சிவாஜிக்குப் பெருமை' - விவேக் அதிரடி பேட்டி!.. என்று எழுதிவிட்டார். வார இதழின் அட்டை மற்றும் டி.வி. விளம்பரத்திலும் அதையே திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பித்தார்கள். "சிவாஜியால் எனக்குக் கிடைத்த பெருமை' என்ற விஷயம் "என்னால் சிவாஜிக்குப் பெருமை' என்று வந்து கொண்டிருப்பதைப் பார்த்து வெகுண்டெழுந்தார் விவேக். எவ்வளவு சொல்லியும் விளம்பரம் நின்றபாடில்லை.

சிவாஜிக்குப் பதில் சொல்வதா? வீட்டுக்கு வரும் கண்டன போன்களுக்குப் பதில் சொல்வதா என்று தவித்துப் போனார். அதன் பிறகு அந்த இதழுக்கு மட்டும் பேட்டி கொடுக்கவே மாட்டேன் என்று கடும் கோபத்தில் இருந்த அவரை, நான் அந்த இதழுக்குப் பொறுப்பேற்றதும் சமாதானக் கொடியோடு சந்தித்தேன். அவரை ஒரு தொடர் எழுத வைக்கச் சம்மதிக்க வைத்தேன். வாரம் ஒரு வி.ஐ.பி. பற்றி எழுதுவதாக பேச்சு. அவர் சொல்ல, சொல்ல எழுதிக் கொண்டு வந்து அதை அவர் சொல்வதுபோலவே எழுதி, அச்சுக்குச் செல்வதற்கு முன் அதை ஒருமுறை அவரிடம் காட்டி ஒப்புதல் வாங்கிக் கொள்ளவேண்டும் என்றும் சொன்னார். எல்லாவற்றுக்கும் சம்மதித்து அந்தத் தொடர் வெளியானது. எட்டாவது வாரம் மீண்டும் பிரச்சினை. அச்சுக்குப் போவதற்கு முன்னர் அவர் படித்துத் தருவாரே அந்தப் பிரதி வருவதற்கு முன்னரே அச்சுக்குப் போனது. அந்த வார இதழ் வந்ததும் ""சாரி தமிழ்.. நான் எதிர்பார்த்தது நடந்துடுச்சு. இந்த வாரத்தோட நிறுத்திக்குவோம்'' என்றார்.

அதன் பிறகு அந்தத் தொடர் தொடரப்படவில்லை. எவ்வளவு மன்னிப்புகளுக்குப் பின்னரும். எந்த மொழியிலுமே அவருக்குப் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்று உறுதியாகக் கூறிவிட்டார்.

LinkWithin

Blog Widget by LinkWithin