புதன், அக்டோபர் 24, 2007
மறுபடியும் ஆரம்பிக்கலாம், வழக்கம் போல...!
நோபல் பரிசு பெற்ற டோரிஸ் லெஸ்ஸிங் நேர்காணல்!
வடக்கு லண்டன் பகுதியில் சிறிய வரிசை வீட்டில் உளவியல் அறிஞர் சிக்மெண்ட் ஃப்ராய்டின் கல்லறைக்கு அருகே அமைந்திருக்கிறது டோரிஸ் லெஸ்ஸிங்கின் பறவைசூழ் இல்லம். 25 ஆண்டுகளாக அதே வீட்டில்தான் அவர் வசித்து வருகிறார். 87 வயது நோபல் பரிசு வெற்றியாளரான அவர் ஒவ்வொரு நாளும் காலை ஐந்து மணிக்கு கண்விழிக்கிறார். பிறகு பலநூறு பறவைகளுக்குத் தீனியிடுகிறார். பிறகு வீடு திரும்பியதும் காலை உணவு.... பெரும்பாலும் அப்போது காலை ஒன்பது மணி ஆகியிருக்கும். பிறகு எழுதுகிறார்... மிகவும் எளிமையாக சாதாரணமாக... ""நான் செய்வதெல்லாம் இவைதான்'' என்கிறார்.
கடந்த ஆண்டு கடுமையான பனி பொழிந்து கொண்டிருந்த மதிய வேளை. வானியல் அறிஞர்கள் சொன்னது போல இங்கிலாந்தின் மிகக் கடுமையான குளிர்காலமாக அது இருந்தது. லெஸ்ஸிங் தன் சமீபத்திய நாவலான "தி ஸ்டோரி ஆஃப் ஜெனரல் டேன் அண்ட் மாராஸ் டாட்டர், கிரியோட் அண்ட் த ஸ்நோ டாக்' பற்றி பேசுவதற்குச் சம்மதித்திருந்தார். எதிர் காலத்தின் பனிக்கால (ஐஸ் ஏஜ்) பயங்கரம் பற்றி சொல்லப்பட்டிருந்த அந்த நாவலின் நாயகன் டேன், இவருடைய "மாரா & டேன்' நாவலிலும் இடம்பெறுகிறான். அதில் டேனும் அவனுடைய சகோதரியும் ஆப்ரிக்க வறட்சியில் இருந்து தப்பிப்பதை கதை விவரிக்கிறது.
தி ஸ்டோரி ஆஃப் ஜெனரல் டேன்... படிக்கத்தூண்டும் நாவல். யூகத்தின் அடிப்படையில் பின்னப்பட்ட அதே சமயம் நம்காலத்துக்கான நீதியைச் சொல்வதாகவும் இருக்கிறது. ஆனால் இந்த உள்ளுணர்வை நீங்கள் கடந்த காலத்தோடு கட்டுப்படுத்திக் கொள்வதாகத் தெரிகிறது. நீங்கள் இப்போதும் அது சரிதான் என்று உணர்கிறீர்களா?
நான் "மாரா & டேன்' என்று ஒரு புத்தகம் எழுதினேன். பரிதாபத்துக்குரிய டான்}ஐ சார்ந்துதான் கதை நகர்கிறது. சிலர் அவனை வெறுக்கிறார்கள். வன்முறையைத் தூண்டக் காரணமாக இருந்தவன் என்கிறார்கள். ஆனால் நான் அவனை நேசித்தேன். அதற்கான சம்பவங்களைக் கோர்வைப்படுத்தினேன். நான் பாதி அளவு மூழ்கிய உலகத்தை உருவகித்திருந்தேன். அதனால் அதற்கான புவி அமைப்பைக் கதைக்குள் கொண்டு வருவதும் எனக்கு கடினமாக இல்லை. "மாரா & டேன்' முழுவதுமே வறட்சி காலத்தில் நடக்கும் கதை. அதாவது நான் பார்த்த ஆப்ரிக்காவின் பின்னணியில். என்னுடைய மகன் ஜானும் காப்பித் தோட்ட விவசாயி ஒருவரும் அங்கே இருந்தார்கள். நீங்கள் எப்போதாவது வறட்சியை அனுபவித்திருக்கிறீர்களா?
இல்லை.
கொடுமையானது அது. மக்கள் மடிந்து கொண்டு இருப்பார்கள். தண்ணீர் வறண்டபடி இருக்கும். மரங்கள் காய்ந்து மரணத்தைத் தழுவும். தாளமுடியாத பயங்கரம். அதைக் கற்பனை செய்யக்கூட விரும்பவில்லை.
அகதிகளைப் பற்றிய விவரணைகள் எனக்கு எண்பதுகளில் ஆப்கானிஸ்தான் நிகழ்வுகளைப் பற்றி நீங்கள் எழுதிய புத்தகத்தை நினைவுபடுத்தின. அதாவது அப்போது பெஷாவருக்குத் தப்பி ஓடிக் கொண்டிருந்தவர்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டதை .
இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றவர்கள் அனைவருமே அகதிகள்தான் என்பது வெகுகாலம்வரை எனக்குத் தோன்றவில்லை. ஆனால் மக்கள் எல்லோரும் வறட்சியின் காரணமாகவோ, வெள்ளம், போர்கள் காரணமாகவோ வேறு இடம் தேடி ஓடுகிறார்கள். ஆனால் இந்த எல்லா வகையான அகதிகளும் வந்து சேருவது ஒரே சாலையில்தான். அவர்களில் பலதரப்பட்ட திறமைசாலிகள் இருப்பார்கள். பலர் அங்கு சென்று மரவேலை செய்பவரையோ, குழாய் ரிப்பேர் செய்பவரையோ வேறு வகையானவர்களையோ தேடி எடுத்துக் கொள்கிறார்கள். என் தோழி ஒருத்தி அவளுக்கு எதாவது தேவையென்றால் அங்கு சென்றுவிடுவாள். அவர்கள் எல்லாம் திறமையானவர்கள்.
நீங்கள் 1949}ல் லண்டனுக்கு வந்தீர்கள். லண்டன் அப்படியேதான் இருக்கிறதா?
இல்லை. அப்போது நான் சந்தித்தவர்கள் எல்லோரும் ராணுவ வீரர்களாகவோ, கடற்படை ஆசாமிகளாகவோ இருந்தார்கள். ஆகவே அவர்கள் பேச்சும் எப்போதும் போர் பற்றியதாகவே இருந்தது. 50}களின் நடுப்பகுதி வரை அவர்கள் பேச்சு அப்படியே தொடர்ந்தது. அப்புறம் என்ன... புதிய தலைமுறைக்குப் போரில் விருப்பமில்லை. சடாரென்று ஒரு நாள் போர் பேச்சுகள் ஓய்ந்து போயின. அதை அந்த வகையில் வலியான விஷயமாகத்தான் பார்க்கிறேன். அந்த மோசமான கடந்த காலத்தின் தடயங்கள் தெரியாமல் உங்களால் வாழ்ந்துவிட முடிவதில்லை என்பதை நினைத்துப் பார்க்கிறேன். முடியுமா உங்களால்?
வித்தியாசமானதுதான். அதன்பிறகு அதைப் போலவே பாழாக்கியதில் சில கம்யூனிஸ சிந்தனையாளர்களுக்கும் பொறுப்பிருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் இன்றோ ஒருத்தருக்கும் மதத்தைத் தாண்டி மார்க்கம் இருப்பதாகத் தெரியவில்லை.
யாரும் எல்லாக் காலங்களிலும் ஒன்றையே நம்பிக் கொண்டிருப்பதில்லை. உங்களுக்குத் தெரியும் வியட்நாம் போரைப்பற்றிப் புளித்துப் போகும் அளவுக்கு எத்தனை சினிமாக்களும் டி.வி. படங்களும் வெளிவந்தன என்று. அது அமெரிக்கா என்றுதான் நினைத்தோம். இப்போது என்ன ஆனது?
காதல் கதை எழுத வேண்டும் என்று நீங்கள் எப்போதும் நினைத்ததில்லையா?
ஒன்று தெரியுமா? காதலைப் பற்றி குற்றம் குறை காண்பது போல எழுத முடியாது. எனக்குத் தெரிந்த ஒருவர் அப்படி எழுதுகிறார். அவர் தீவிரமான சோஷலிசவாதி. ""நினைவு வைத்துக் கொள் டோரிஸ். இந்த விஷயத்தை நீ தமாஷாக எழுதிவிட முடியாது. கடவுளுக்கு நன்றி... எனக்கு அதற்கான பிரத்யேக உணர்வுபூர்வமான நரம்புகள் இருக்கின்றன'' என்றார். நல்லவேளை அவர் மற்றவர்களைவிட நன்றாகவே எழுதுகிறார்.
1950}களில் நீங்கள் எழுத ஆரம்பித்த காலங்களில் எதார்த்த நாவல்கள் தவிர வேறு எந்த உத்திகளும் இருந்ததில்லை அல்லவா?
இல்லை. இப்போது எல்லா எல்லைகளையும் உடைத்துவிட்டார்கள். நான் எழுத ஆரம்பித்த நேரத்தில் விஞ்ஞான புனைகதைகள் எழுத ஆரம்பித்திருந்தார்கள். வெகுசிலரே அதைப் படிக்கவும் செய்தார்கள். இப்போதோ... சல்மான் ருஷ்டியை எடுத்துக் கொள்ளுங்கள்... அல்லது தென் அமெரிக்க எழுத்தாளர்களை எடுத்துக் கொள்ளுங்கள். எல்லோரும் மாயாவாத எதார்த்தவாதிகள் என்று சொல்லப்படுகிறார்கள்.
பல்வேறு நாவல்கள் எழுதியிருக்கிறீர்கள். உங்களிடம் மக்கள் அதிகம் விரும்பிப் படிக்கும் புத்தகம் எத்தகையவை?
என்னுடைய விஞ்ஞான கதைகள்தான். 'கனோபஸ் இன் அர்கோஸ்" பெரிய அளவில் வாசகர்களைப் பெற்றது. அது ஒரு மதத்தையே உருவாக்கும் அளவுக்குப் போனது. சிகாஸ்தா (அந்த வரிசையில் முதலாக வந்த நாவல்) அதை அப்படியே எடுத்துக் கொண்டு அமெரிக்காவில் ஒரு கூட்டுவாழ்க்கை முறையாகவும் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் எனக்கு எழுதும் கடிதங்களில் ""எப்போது கடவுள் எங்கள் முன் தோன்றுவார்?'' என்று கேட்கிறார்கள். ""இது மேல் லோகம் சம்பந்தமானது இல்லை... இது என் கண்டுபிடிப்புதான்'' என்று பதில் எழுதுகிறேன். ஆனால் அவர்களோ ""நீங்கள் எங்களைச் சும்மா சோதிக்கிறீர்கள்'' என்று மறுபடி கடிதம் எழுதுகிறார்கள்.
இன்று இப்படியெல்லாம் நடக்கிறதா என்று என்னால் கற்பனை செய்யமுடியவில்லை.
அப்போது வேறுமாதிரி இருந்தது. நான் சான்பிரான்சிஸ்கோவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். பெரிய மக்கள் கூட்டத்தின் முன் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோது ஒருவர் எழுந்து, ""இனிமேல் நீங்கள் இந்த மாதிரியான வறண்ட எதார்த்தவாத நாவல்களை எல்லாம் எழுதமாட்டீர்கள் என்று நம்புகிறேன்'' என்றார். இன்னொருவரோ ""டோரீஸ் இனிமேல் கத்துக்குட்டித்தனமான விஞ்ஞானப் புனைகதைகளை எழுதி நேரத்தை வீணாக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்'' என்றார். மொத்தக் கூட்டமும் விவாதத்தில் இறங்கிவிட்டது. இப்போது இப்படியெல்லாம் நடக்குமா என்று எனக்குத் தோன்றவில்லை.
60 களுக்குப் பிறகு கலாசாரப் புரட்சி ஏற்பட்டதாக நம்புகிறீர்களா?
கடுமையான போதை வஸ்துகளின் நடமாட்டம் நின்றுவிட்டது. மரிஜோனாவோடு நிறுத்திக் கொண்டார்கள், அதுதான் நடந்தது.
பாலியல் புரட்டி எனப்படுவதும் ... அதைப் புரிந்து கொள்வதில் எனக்கு மிகுந்த சிரமம் இருக்கிறது... ஏனென்றால் அதற்கு முன்னால் பாலியல் புரட்சி எதுவும் ஏற்பட்டதில்லை போல பேசுகிறார்கள். போர்க்காலங்களில் செய்யப்படாத பாலியல் புரட்சிகளா? போர் காலத்தில் எல்லா பாலியல் புரட்சிகளையும் ராணுவத்தினர் செய்து முடித்துவிட்டனர்.
தி கோல்டன் நோட் புக் மிகவும் பிரபலமானதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
பெண்ணிய சிந்தனை குறித்த என் முதல் நாவல் என்பதால் இருக்கலாம். அதே சமயத்தில் அதற்காக நான் நிறைய சக்தியைச் செலவிட்டேன். 50}களின் கடைசியில் என்னுடைய சொந்த வாழ்க்கை பெரும் குழப்பத்தில் இருந்தது. கம்யூனிஷம் உங்கள் கண் முன்னால் கிழிபட்டுக் கொண்டிருந்தது. இவை எல்லாம் என் நாவலின் கருப் பொருளாகின. என் மொத்த சக்தியையும் இதற்காகச் செலவிட்டேன். இப்படிப் பிரபலமாகும் என்றும் எதிர்பார்த்தேன்.
தி ஸ்டோரி ஆஃப் ஜெனரல் டேன் நாவலிலும் போதுமான சக்தியைச் செலவிட்டிருப்பது தெரிகிறது... உங்கள் 86 வயதிலும்!
ஆனால் இதில் எந்தச் சித்தாந்தத்துக்கும் சவால்விடவில்லை. தி கோல்டன் நோட் புக் எழுதும்போது அதை ஒரு பெண்ணிய நாவலாக்கும்படியாக எனக்கு எந்தத் திட்டமும் இல்லை. பெண்களின் சமையல் அறைப் பேச்சுகளை அதில் எழுதியிருந்தேன். எழுதப்படும் சிலவற்றைப் போல சொல்லப்படும் சிலவற்றுக்கு ஆற்றல் இருப்பதில்லை. நான் ஏதோ பிரமாதமாக எழுதிவிட்டதாகச் சொல்கிறார்கள். நான் பெண்கள் பேசிக் கொள்வதைத்தான் எழுதினேன்.
முந்தைய பேட்டியின் போது இனி வரப்போகும் பனி யுகம், நியுக்ளியர் பயங்கரத்தை சிறிய நாய்க்குட்டியாக மாற்றிவிடும் என்று கூறியிருந்தீர்கள். தி ஸ்டோரி ஆஃப் ஜெனரல் டேன் அதற்கான எச்சரிக்கையா?
நான் அப்படித்தான் நினைக்கிறேன். நாம் பல பனி யுகங்களைச் சந்தித்திருக்கிறோம். மிகச் சீக்கிரத்தில் இன்னொன்றைச் சந்திக்கப் போகிறோம். இதில் எனக்கு வருத்தமான விஷயம் என்னவென்றால் மனித சமுதாயம் உருவாக்கியவை என்று சொல்லப்படுபவை எல்லாமே கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில்தான் உருவானவைதான். அதில் பெரும்பான்மையானவை சமீப காலங்களில் உருவாக்கப்பட்டவை. அதை எல்லாவற்றையும் வரப்போகும் பனியுகம் துடைத்தெறிந்துவிடும். நாம் மறுபடியும் ஆரம்பிக்கலாம், வழக்கம்போல.
}தமிழ்மகன்
நன்றி: நியூல்டே.காம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)