பெரியவர்கள், சிறுவர்களுக்கான மன நிலையோடு சிந்திப்பது சவாலானது. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, குழந்தைகளுக்காகவே எழுதியவர் வாண்டுமாமா. ஏறத்தாழ 90 ஆண்டுகள், ஒருவர் தன் குழந்தை மனதைத் தக்கவைத்துக்கொள்வது சாதாரணம் அல்ல. அந்தக் குழந்தை மனநிலையுடனேயே இயங்கி கடந்த வாரம், வயோதிகம் காரணமாக தன் மூச்சை நிறுத்திக்கொண்டார் 'வாண்டுமாமா’ என்பதே அடையாளமாகிப்போன திரு.கிருஷ்ணமூர்த்தி. தமிழில் சிறுவர் இலக்கியத்தின் மூலவர்!
குழந்தைகளை மாய உலகில் சஞ்சரிக்க வைப்பது ஓர் அரிய கலை. கொஞ்சம் தப்பினால் அது மூடநம்பிக்கையின் மூட்டையாகிவிடும். இவரின் 'மந்திரச் சிலை’, 'மந்திரக் குளம்’, 'மாய மோதிரம்’ உள்ளிட்ட பல கதைகள் நம்மை விசித்திர உலகுக்கு அழைத்துச் செல்பவை. ஆலீஸின் அதிசய உலகத்துக்கு நிகரான சாத்தியங்கள் அவற்றில் உண்டு. பல நூறு ஹாரிபாட்டர்களைப் படைத்தவர் வாண்டுமாமா. குழந்தைகளுக்குப் புரியும்படியான எளிய மொழியில், சுமார் 160 புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். அதில் சரிபாதி குழந்தைகளுக்கான மருத்துவ, விஞ்ஞானப் புத்தகங்கள். கௌசிகன், சாந்தா மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி எனப் பல பெயர்களில் எழுதியுள்ளார்.
'பூந்தளிர்’ இதழின் ஆசிரியராக இருந்த நேரத்தில், நான் அதே நிறுவனத்தின் இன்னோர் இதழுக்குப் பொறுப்பு ஏற்று இருந்தேன். சில ஆண்டுகள், அவருக்கு அருகே பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. குழந்தைகளுக்கான போட்டிகளுக்குப் பரிசு வழங்கு வதில், வாண்டுமாமாவுக்கும், அந்தப் பத்திரிகையின் நிர்வாகிக்கும் நடந்த வாக்குவாதம் ஒன்று நினைவுக்கு வருகிறது.
பரிசுத்தொகையாக 5,000, 10,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பது நிர்வாகியின் எண்ணம். வாண்டுமாமா, '50, 100 ரூபாய் போதும்’ என்றார். 'குழந்தைகளின் மனதில் போட்டியை வளர்ப்பதுதான் நோக்கமே தவிர, பேராசையை வளர்ப்பது அல்ல. பெரிய பரிசுத் தொகையை அறிவித்தால், அது பெற்றோர்கள் கலந்துகொள்ளும் போட்டியாக மாறிவிடும்’ என உறுதியாகக் கூறிவிட்டார். இது நுணுக்கமான ஓர் உளவியல் அணுகுமுறை.
அப்போது (1991) அவருக்கு தொண்டையில் கேன்சர் ஏற்பட்டு அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அவர் பேசுவதைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருந்தது. அதனால், யாரும் அவரிடம் விளக்கம் கேட்பதற்கான சந்தர்ப்பமே தராமல், அந்த இதழுக்கான எல்லா வேலைகளையும் முடித்துவிடுவார். 'பூந்தளிர்’ இதழுக்கான அனைத்து பக்கங்களையும் அவரே எழுதுவார்; திருத்துவார். பேசுவதற்கான சந்தர்ப்பமே தராமல், அவர் பணியாற்றியது ஆச்சர்யமாக இருந்தது.
புதுக்கோட்டைக்கு அருகில் அரிமழம் கிராமத்தில் பிறந்த இவர், திருச்சியில் இருந்து வெளிவந்த 'சிவாஜி’ என்ற இதழில் தன் பத்திரிகைப் பணியைத் தொடங்கினார். பிறகு 'காதல்’, 'ஆனந்த விகடன்’, 'கல்கி’, 'கோகுலம்’, 'தினமணி’ என, இவர் பயணித்த இதழ்கள் ஏராளம். வறுமையின் துரத்தலும் கூடவே இருந்தது. அதனால்தான் அவருடைய வாழ்க்கை சரித்திரத்துக்கு அவர் 'எதிர்நீச்சல்’ என்று பெயரிட்டிருந்தார்.
சிறுவர்களுக்காக எழுதுபவர்களை சிறுவர்கள்தான் அங்கீகரிக்கவேண்டிய சூழல். அதனால் அவருக்குப் பெரிய அங்கீகாரங்கள் கிடைக்காமல் போயின.
அவர் இன்னொருவரின் வாழ்க்கை நூலையும் எழுதியிருக்கிறார். தனக் குச் சிலை வைப்பதையோ, தன்னைப் பற்றி புத்தகம் எழுதுவதையோ கடுமையாக எதிர்த்து வந்தவர் மூதறிஞர் ராஜாஜி. 'கல்கி’யில் பணியாற்றியபோது ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை மிக மிக ரகசியமாக எழுதி, ராஜாஜியிடம் அதைக் காட்டி அவருடைய அனுமதியைப் பெற்று நூலாக வெளியிட்டார். அப்போது ராஜாஜி அடித்த கமென்ட்: 'நான் சொல்வது எதையும் கேட்காதவர்கள்... என் வாழ்க்கையை மட்டும் படிப்பார்களா? உங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படும்.’
'எதிர்நீச்சல்’ நூலில் இறுதியாக அவர் இப்படி முடிக்கிறார்:
'நான் நிறைய எழுதியிருப்பதாகப் பிறர் கூறினாலும் இன்னும் எழுத வேண்டியவை நிறைய இருக்கின்றன என்ற குறை எனக்கு உண்டு. அதற்கான வாய்ப்பையும் வயதையும் எனக்கு ஆண்டவன் அளித்தால், இந்த என் குறையை ஓரளவுக்குப் போக்கிக்கொள்வேன்’ என்று முடித்திருக்கிறார் வாண்டுமாமா.
'புத்தகங்களே...
குழந்தைகளைக்
கிழித்துவிடாதீர்கள்!’
குழந்தைகளைக்
கிழித்துவிடாதீர்கள்!’
- என்று ஒருமுறை கவிஞர் அப்துல் ரகுமான் எழுதினார். சில புத்தகங்களிடம் இருந்து சிறுவர்களைக் காப்பாற்றத்தான் வேண்டியிருக்கிறது. இந்த நிதர்சனம் உணர்ந்தே தன் இறுதி நாட்கள் வரை சிறுவர்களுக்காக எழுதிக்கொண்டே இருந்தார் அவர். உயிர் பிரியும் தருணம் வரை எழுதிக்கொண்டே இருப்பது ஓர் எழுத்தாளனுக்கு வரம். அந்த சாகாவரம், இவருக்கு இருந்தது. மழலை மனம் மாறாதவர் உள்ளங்களில் வாண்டுமாமா என்றும் வாழ்வார்!
நன்றி: ஆனந்த விகடன் 25.6.14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக