செவ்வாய், அக்டோபர் 16, 2007
வனமும் இனமும்!
"ஆட்டோ சங்கர்' நெடுந்தொடருக்குப் பிறகு சந்தனக் கட்டை வீரப்பன் கதை(சந்தனக்காடு)யை ஒளிபரப்ப ஆரம்பித்திருக்கிறது மக்கள் தொலைக்காட்சி. இந்த இரண்டுத் தொடர்களையும் இயக்கியிருப்பவர் வ. கெüதமன். சர்ச்சைக்குரிய மனிதர்களை கதாநாயகர்களாக்கி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இவருக்கு வாடிக்கையாகியிருக்கிறது. வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, "இத் தொடர் வெளிவந்தால் தன் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கப்படும்' என்று கூறியிருக்கிறார். இத்தகைய சூழலில் இயக்குநர் கெüதமனைச் சந்தித்தோம்.
ஆட்டோ சங்கர், வீரப்பன் என்று நிஜ மனிதர்களின் கதையையே தொடர்களாக்கிக் கொண்டிருப்பதற்குப் பிரத்யேகக் காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா?
அது நிஜக் கதையாகவோ, புனைகதையாகவோ இருப்பதுபற்றி எனக்கு எந்த வித்தியாசமும் இல்லை. ஜெயகாந்தனின் "சினிமாவுக்குப் போன சித்தாளு' கதையை குறும்படமாகத் தயாரித்தேன். அது புனைகதைதான். ஆனால் நிஜமாகவே தமிழகத்தில் அப்படியொரு சூழல் இல்லையென்று சொல்ல முடியுமா? சொல்லுங்கள், அது ஒரு புனைகதை மட்டுமேதானா? படைப்பு நிஜ உலகை பிரதிபலிப்பதாக இருப்பதைப் போலவே நிஜக்கதையை படமாக்குவதையும் நான் அதே பார்வையில்தான் பார்க்கிறேன்.
இது சமூகத்தின் பார்வையில் குற்றவாளிகளாகப் பார்க்கப்பட்ட வர்களை ஹீரோக்களாக்குவதாக அமையாதா?
கதைக்கு ஹீரோ என்பது ஒரு வசதிக்காகச் சொல்கிற வார்த்தைதான். என்னைப் பொறுத்தவரை அவர்கள் நமக்கு அறிமுகமான அளவுக்கு வில்லன்கள் இல்லை என்பதுதான். ஆட்டோ சங்கரோ, வீரப்பனோ முதலில் சில அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளாலேயே ஊக்குவிக்கப்பட்டவர்கள்தான். பிரச்சினை என்று வந்தபோது கைவிடப்பட்டவர்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு அவர்களின் பிரச்சினைகளை அவர்களே எப்பாடு பட்டேனும் சமாளிக்க வேண்டியதாகவும் ஆனது. அவர்கள் தள்ளப்பட்ட சூழல்தான் முக்கியமே தவிர அதில் இடம் பெறும் ஹீரோக்கள் அல்ல.
சந்தனக்காடு தொடரில்....
"சந்தனக்காட்டை' எங்கெல்லாம் படப்பிடிப்பு நடத்தினீர்கள்?
ஏறத்தாழ சந்தனக் காட்டுப் பகுதியில்தான். வீரப்பன் படுத்த, நடந்த, ஓடிய இடங்களில்தான் முழுபடப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. ரத்தமும் சந்தனமும் மணந்த காட்டுப் பகுதிகளில் படம் பிடித்திருக்கிறோம். இதுவரை மேட்டூர், மாதேஸ்வரன் மலை, சத்தியமங்கலம், ஏமனூர் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். வீரப்பன் பிறந்த கிராமமான செங்கம்பாடி (இது கர்நாடகாவில் இருக்கும் தமிழ் கிராமம்)யிலும் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.
படப்பிடிப்பு அனுபவங்கள் எப்படி?
காட்டுப் பகுதியில் படப்பிடிப்பு என்பதால் தினமும் அதிகாலை 4 மணிக்கு தங்கியிருக்கும் ஹோட்டல்களில் இருந்து புறப்பட்டால்தான்
விடியற்காலையில் படப்பிடிப்பைத் தொடங்க முடிகிறது. அடர்த்தியான காட்டுப்பகுதி. திக்கு திசை தெரியாமல் போய்விடும் ஆபத்துகள் அதிகம் இருக்கிறது. வனவிலங்குகள் அதிகம் கண்ணில்படுகின்றன. கரடிகள், குரங்குகள், மான்கள், பாம்புகள், விஷப் பூரான்கள், காட்டு எருதுகள் பல வற்றைப் பார்த்தோம். படமாக்கியிருக்கிறோம்.
வீரப்பனைப் பற்றிய தகவல்களை எங்கே சேகரித்தீர்கள்?
வீரப்பனைப் பற்றி மற்ற யார் சொல்வதையும்விட அவனை பார்த்த அவனுடன் பேசிய மக்கள் சொல்வதுதான் சரியாக இருக்கும் என்பது என் கணிப்பு. நான் சந்தித்த சில பெண்கள் கர்நாடக, தமிழக காவல்துறையினரால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள். "நாங்கள் தாயும் மகளுமாகக் கூட்டம் கூட்டமாகக் கற்பழிக்கப்பட்டோம். எங்களுக்கு நேர்ந்த வேதனையைக் கேட்டு நாங்கள் கற்பழிக்கப்பட்ட ராமாபுரம் போலீஸ் ஸ்டேஷனை தரைமட்டமாக்கிய எங்கள் அண்ணன் அவர்' என்கிறார்கள்.
படப்பிடிப்பில் சந்தனக்காடு...
அதே போல சுள்ளி பொறுக்க வந்து வழி தவறிவிட்ட பெண்ணை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டு கையில் கொஞ்சம் பணமும் கொடுத்து, "ஆடு வாங்கி ரெண்டை நாலாக்கிப் பொழைச்சுக்கோ' என்று அறிவுரை சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான். இப்படி மனிதநேயம் பாராட்டும் விஷயங்கள் ஏராளம் வீரப்பன் வாழ்க்கையில் இருக்கின்றன. ஏற்கெனவே மீடியா மூலமும் காவல்துறை மூலமும் தெரிந்த விஷயங்களும் உண்டு.
வீரப்பனின் மனைவி இந்தத் தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்து?
நான் டேப்பில் பதிவு செய்துவிட்டேன் என்று கூறுவதெல்லாம் வீணான கற்பனை. அதுவும் மூன்று மாதங்களுக்கு முன்பு சந்தித்தேன் என்று கூறியிருக்கிறார். நான் ஒன்பது மாதங்களுக்கு முன்பு பேசினேன். அவர் பயப்படும் அளவுக்கு எதுவும் இத் தொடரில் இல்லை என்பதை பலமுறை தொலைபேசியில் விளக்கிவிட்டேன். டி.வி.டி. ஒன்றும் கொடுத்தனுப்பினேன். விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புகிறோம். வழக்கு முடிவும் எங்களுக்குச் சாதகமாகத்தான் வந்திருக்கிறது.
"சந்தனக்காடு' தொடர் மூலம் சொல்லவிரும்பும் செய்தி?
உண்மையை உடைத்துச் சொல்ல முடிந்த அளவுக்கு முயற்சி செய்திருக்கிறோம். வனமும் இனமும் சிதைந்த வரலாறு இது. மனித நேயம் நிறைந்த வீரப்பனுடைய பிற்காலத்தையும் இன்னொரு பக்கத்தையும் சொல்ல விரும்புகிறோம்.
தமிழ்மகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக