கடந்த வார தினசரிகளில் இப்படியான சில விளம்பரங்களைப் பார்த்திருக்கலாம்.
"மிரட்டும் திகில்', "எரிமலைகள்', "மீளமுடியாத மிரட்டல் உலகம்', "அமேசான் காட்டு அழகி', "ஹாரி பாட்டரும் ஃபீனிக்ஸ் கட்டளையும்...' இவை எல்லாம் தமிழ் சாயம் பூசப்பட்ட ஆங்கிலப் படங்களின் தலைப்புகள்.
ஒரிஜினல் ஆங்கிலப்படத்தின் தலைப்புகளுக்கும் இவற்றுக்கும் கிஞ்சித்தும் சம்பந்தமிருப்பதில்லை. உதாரணத்துக்கு "எரிமலைகள்' படத்தின் ஆங்கிலத் தலைப்பு ஊஹய்ற்ஹள்ற்ண்ஸ்ரீ ச்ர்ன்ழ். "அமேசான் காட்டு அழகி'க்கோ ஆங்கிலத் தலைப்பு அச்ழ்ண்ஸ்ரீஹய் ற்ட்ழ்ண்ப்ப்ள் என்று போட்டிருக்கிறார்கள். அமேசான் எங்கே இருக்கிறது, ஆப்ரிக்கா எங்கிருக்கிறது என்ற பூகோளக் குழப்பமெல்லாம் கூடவே கூடாது.
இராம. நாராயணன்
தலைப்புதான் இப்படி என்றால் படத்தில் இடம் பெறும் வசனங்கள் அதைவிட அதிர வைக்கின்றன. ஒரு சீனப் படத்தின் தமிழ் வடிவத்தில் ""இன்ன மாரீ... கண்டுக்காம போறீயே... சும்மா ஒரு தபா வந்துட்டுப் போப்பா'' என்று வசனம். கேரக்டர்களின் பெயர்களையும் தமிழ்ப்படுத்தி, அவர்களின் பேச்சையும் மெட்ராஸ் வட்டார வழக்குக்கு மாற்றி அமர்க்களம் பண்ணயிருந்தார்கள்.
""அசல் தமிழ்ப்படம் பார்க்கிற மாதிரி இருக்கில்ல?'' என்று சிலாகிப்பவர்களும் இருக்கிறார்கள். ""இவ்வளவு பிரம்மாண்டமான சண்டைக் காட்சியையெல்லாம் தமிழில் யாரும் எடுக்கப் போவதில்லை. நடிகர்கள்தான் நமக்குத் தெரியாத ஆசாமிகளாக இருக்கிறார்கள். அவர்கள் பேசுகிற தமிழாவது நம்ம ஸ்டைலில் இருப்பதால்தான் தமிழ்ப் படத்தைப் பார்த்து ரசிப்பதுபோல் இப்படங்களைப் பார்த்து ரசித்துப் பார்க்க முடிகிறது'' என்கிறார் சண்டைப் படங்களாகத் தேடிப் பார்க்கும் ரசிகர் ஒருவர்.
இவருடைய கருத்தை ஆமோதிப்பதுபோல இருக்கிறது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம. நாராயணனின் குரலும். ""இப்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் ஆங்கிலப் படங்களையும் தமிழ்ப்படங்கள் அளவுக்கு ஒரே சமயத்தில் ரிலீஸ் செய்ய முடிகிறது. ஆங்கிலப் படங்களை நேரடியாக மொழி மாற்றம் செய்தால் இந்த அளவுக்கு ரிலீஸ் செய்ய முடியாது. ஒரு சில பிரிண்டுகள் மட்டும் எடுத்து ஒவ்வொரு நகரத்திலும் ரிலீஸ் செய்வோம். இப்போது 50, 60 பிரிண்டுகள் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய முடிகிறது. சுமாரான தமிழ்ப் படத்தைவிட இவை அதிக அளவுக்கு லாபம் ஈட்டுகின்றன.
ஆங்கிலப் படத்தை ஆங்கிலத்திலேயே ரிலீஸ் செய்யும்போது அவை சென்னை, போன்ற பெரு நகரங்களில் மட்டும்தான் ரசிக்கப்படுகிறது. ஆனால் இவற்றையோ குக்கிராமங்களில்கூட ரசிக்கிறார்கள். அப்படி ரசிக்கப்படுவதற்குக் காரணம், மாடுலேஷன். அதைப் பலரும் ரசிக்கும் வண்ணம் கலோக்கியலாக செய்வது பலருக்கும் சுலபமாகப் புரிவதாகவும் நகைச்சுவையாகவும் இருக்கிறது. இங்கு சென்னையிலும் மும்பையிலும் இப்படி டப்பிங் செய்வதற்கான நிறுவனங்கள் செயல்படுகின்றன'' என்கிறார் அவர்.
மொழி மாற்றம் செய்யும் வசனகர்த்தாவாக இருக்கும் கவிஞர் பிறைசூடன், ""மொழி மாற்று படம் என்பது, அவர்களின் வசனத்தை நம் மொழியில் மாற்றுவதுதான். சிலர் ஆங்கில படத்தின் ஹீரோ "நான் ஒரு தடவை சொன்னா ஐநூறு தடவை சொன்ன மாதிரி' என்றெல்லாம் வசனம் எழுதுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை அதில் எனக்கு உடன்பாடில்லை. நான் வசனம் எழுதும் படங்களுக்கு ஒரிஜினல் வசனத்தை வாங்கி அதை திரையில் அவர்களின் உதட்டசைவுக்கு ஏற்ப வசனங்களை தமிழில் எழுதுகிறேன்'' என்கிறார்.
நூற்றுக்கணக்கான ஆங்கிலப் படங்களின் இந்திய உரிமைகளை வாங்கி விநியோகித்தவரும் பிரபல பட அதிபருமான ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் கேட்ட போது,""நான் ஆங்கிலப் படங்களைத் தமிழில் டப்பிங் செய்வதில்லை. அது படத்தின் ஜீவனையே குலைத்துவிடும். நல்ல படத்துக்கு மொழி ஒரு தடையே இல்லை. பல நல்ல படங்கள் இங்கு பல நாட்கள் ஓடியுள்ளன. "பென்ஹெர்', "டென் கமான்மென்ட்ஸ்', "சாம்ஸன் அண்ட் டிலைலா', "எண்டர் தி ட்ராகன்', ஜாக்கிசான் படங்கள் போன்றவை ஆங்கிலத்திலேயே சக்கை போடு போட்டன. ஆங்கிலத்தில் "டைட்டானிக்' படம் ஏவிஎம். ராஜேஸ்வரி தியேட்டரில் 7 லட்ச ரூபாய் ஷேர் கலெக்ட் செய்தது. அது ரெக்கார்ட். இப்படி தமிழில் டப் செய்வதற்கு விருப்பமில்லாததாலேயே இப்போது ஆங்கிலப் படங்களை விநியோகிப்பதை நிறுத்திவிட்டேன்.
எம்.ஜி.ஆரோ, சிவாஜியோ பேசிய வசனத்தை சீனாவில் ஒருவன் சியாங்கோ பியாங்கோ என்று அவனுடைய மாடுலேஷனில் அடித்துவிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் நம்மால் தாங்கிக் கொள்ள முடியுமா? தமிழிலும் தெலுங்கிலும் இந்தியிலும்தான் இப்படி மொழி மாற்றம் செய்கிறார்கள். மற்ற பிராந்தியங்களில் இப்படிச் செய்வதில்லை. இதனால் தரமான படங்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் குறைந்து கொண்டு வருகிறது'' என்றார் அவர்.
டப்பிங் படங்கள் "டப்'புக்காக எடுக்கும் படங்களாக இல்லாமல் இருந்தால் சரிதான்.
தமிழ்மகன்
2 கருத்துகள்:
ஒரு சமயத்தில் டப் செய்யப்பட்ட தெலுங்கு படங்களின் வரவும் இதுபோல்தான் இருந்தது. அவற்றின் டைட்டிலும் வித்தியாசமாக இருக்கும். வசனங்களும் உச்சபட்ச சத்ததில் வெறும் உதட்டசைவிற்காக மட்டுமே இருக்கும். வசனத்தில் எந்த வித அர்த்தமும் இருக்காது.
உதாரணத்திற்கு... இதுதாண்டா போலீஸ், லத்திகாரன், போலீஸ் அடி, போலீஸ் லாக்கப், மீசைக்காரன்.
உண்மையில் ஆங்கிலப்படங்கள் டப் செய்யப்படுவதால் படத்தின் தனித்தன்மை குறைந்துவிடுகிறது. ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் டைரக்ட் செய்த ஆங்கில படத்தை தமிழில் பார்க்கும் போது நம்ம பேரரசு இயக்கிய படத்தை பார்த்தது போல் சப்பென்று இருக்கிறது.
நன்றி... நன்றி
கருத்துரையிடுக