தீபாவளி செலவுக்கு!
ஒரு தீபாவளி மலருக்காகப் பேட்டி காண ஆச்சி மனோரமா அவர்களின் வீட்டுக்குப் போயிருந்தேன். பழமையும் அழகும் கலந்த வீடு. சிவாஜி கணேசன் வீட்டுக்கு எதிர் தெருவில் அவருடைய வீடு. நான் போயிருந்த நேரத்தில் ஒரு சமையல் பணி ஆள் தவிர வேறு யாரும் இல்லை. அவ்வளவு பெரிய வீட்டில் அமைதி அப்பியிருந்தது. ஏதாவது பேச்சு சப்தம், குழந்தைகளின் ஆட்டம் பாட்டம், மிக்ஸி} கிரைண்டர் எதுவும் இல்லை. சோபாவில் தனியாக சில நிமிடங்கள் அமர்ந்திருந்தேன்.
மனோரமா வந்தார். "என்ன கேட்கப் போறீங்க?'' என்றார். எவ்வளவோ சொல்லி முடித்த அலுப்பு.கொஞ்ச நேரத்தில் ஒரு பழம் சினிமா நடிகை வந்தார். ""என்னடியம்மா எப்படி இருக்கே...'' என அவர் மனோரமாவை விசாரித்தபோதும் அதைத் தொடர்ந்து அவர்களின் குடும்பப் பிரச்சினைகளைப் பேசிக் கொண்டிருந்தபோதும் நான் ஏதோ என் கிராமத்து உறவினர் வீட்டில் இருப்பது மாதிரிதான் இருந்தது. பேட்டி நின்றது.
வந்த நடிகை தில்லானா மோகனாம்பாள் படத்தில் பத்மினியின் தாயாக வடிவாம்மாள் வேடத்தில் நடித்தவர். அவருடைய கண்களும் உருவமும் அவருக்குக் குயுக்தி படைத்த குறுமனப்பான்மை உடையவர் போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தது. அல்லது அந்த மாதிரி தோற்றமிருப்பவருக்கு குயுக்தி படைத்த வேடங்கள்தான் பொருத்தமாக இருக்கும் என்று சினிமா இயக்குநர்களும் நினைத்தனர்.
கொஞ்ச நேரத்தில் நானும் அவர்கள் பேச்சில் கவனம் கொண்டேன். வந்த அம்மாள் குடும்பத்தின் வறுமையான சூழலைச் சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய வீட்டில் மிகவும் துன்புறுத்துவதாக அவர் கண்ணீர் வடித்தார். சினிமாவில் எல்லாக் குடும்பங்களையும் அழவைத்துப் பார்க்கிற வேடத்தில் நடித்த அவர் தன் பிரம்மாண்டமான உருவத்தோடு அழுது கொண்டிருந்தது சினிமா நடிகர்களைப் பற்றிய என் அத்தனை மனச் சித்திரத்தையும் கேள்விக்குறியாக்கியது.
மனோரமா ஆறுதல் சொல்லி தீபாவளி செலவுக்கு இருநூறு ரூபாய் பணம் கொடுத்தார்."கொண்டுபோய் புள்ள கிட்ட குடுப்பே. அவன் குடிச்சுட்டு வந்து இன்னும் ரெண்டு சாத்துவான்... '' என்றார்.
"என்ன பண்றது.. மேல இருந்து ஓலை வர்ற வரைக்கும் பட்டுத்தான் ஆவணும். அண்ணனைப் பார்க்கலாம்னுதான் வந்தேன். எங்கயோ வெளிய போயிருக்காராம்'' என்றபடி கிளம்பிப் போனார்.
போனதும் மனோரமா பேச ஆரம்பித்தார். "அண்ணன்னு சொல்லிட்டுப் போறாங்களே.. யார்னு தெரியுதா? சிவாஜி அண்ணனைத்தான் சொல்றாங்க. அவரைப் பார்த்தாத்தான் பொறாமையா இருக்கு. எவ்வளவு பெரியவீடு.. அந்த வீடு முழுக்க புள்ளைங்க, பெண்ணுங்க, பேரன், பேத்தினு ராஜாவாட்டம் இருப்பாரு. எங்க வீட்டையும் பாருங்க. சம்பாதிச்சு என்ன புண்ணியம்? அதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்'' என்றார்.
பேட்டி முடிந்து கிளம்பி வரும்போது சிவாஜி வீட்டுப் பக்கம் ஸ்கூட்டரைச் செலுத்தி, கூட்டுக் குடும்ப சாம்ராஜ்ஜியம் நடக்கும் அந்த வீட்டை ஒரு தரம் நின்று பார்த்துவிட்டுக் கிளம்பினேன்.
மிஸ்டர் ரைட்!
"பாண்டியன்' படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ரஜினியின் ஒரு புகைப்படம் மிகவும் பிரபலம். ஸ்டைலாக தலையைக் கோதிவிட்டபடி ரஜினி புன்னகைத்துக் கொண்டிருப்பார். ப்ரெüன் நிற பேண்ட்}சர்ட். அவர் அணிந்திருக்கும் பனியனில் "ரைட்' என்று டிக் செய்திருக்கும். அந்தப் புகைப்படத்தை எடுத்தவர் நண்பர் ஸ்ரீராம் செல்வராஜ்.
ரஜினியிடம் அவருக்கு நல்ல நெருக்கம் இருந்த சமயம் அது. புதிய கேமிராவும் புரோபிளிட்ஸ் லைட்டுகளும் வாங்கிவைத்துவிட்டு முதலில் படம் எடுத்தால் ரஜினியைத்தான் படம் எடுப்பேன் என்று பிடிவாதமாக இருந்தார் அவர். ரஜினியைச் சந்தித்து ஒரு முறை இந்தத் தகவலைச் சொன்னார். இந்த மாதிரி காதுகுத்துக் கெல்லாம் ஏமாறுகிறவன் இல்லை நான் என்று என்பது போல் ரஜினி, அதற்கெல்லாம் நேரமில்லை என்று கூறிவிட்டார். ஸ்ரீராம் சளைக்கவில்லை. ""நீங்கள் எப்போது நேரம் தருகிறீர்களோ அதுவரை இந்த கேமிராவைத் தொடமாட்டேன்'' என்று உறுதியாகக் கூறிவிட்டுக் கிளம்பினார். என்ன நினைத்தாரோ ரஜினி, கூப்பிட்டு நாளைக்கு ஏவி.எம். ஸ்டூடியோவுக்கு வந்துவிடுங்கள்'' என்றார். மறுநாள் போனதும் எப்படி வேணுமோ எடுத்துக்கோ என்றுகூறினார். அப்படி இவருடைய பிடிவாதத்துக்காகவே ரஜினி தந்த போஸ் அது.
அவருடன் சென்று ஒரு முறை ரஜினியை அவருடைய வீட்டில் சந்தித்திருக்கிறேன்.இன்னொரு முறை நாங்கள் இருவரும் ரஜினியைத் தேடி மைசூரின் காடு மேடெல்லாம் அலைந்து திரிந்தது தனிக்கதை.
"முத்து' படப்பிடிப்பில் ரஜினியைச் சந்தித்துப் பேட்டி கண்டு அந்தப் படத்தின் புதிய ஸ்டில்களையும் பிரசுரித்து அசத்துவதாக எங்களுக்குள் திட்டம். நான் அப்போது வண்ணத்திரையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
மைசூர் சென்று இறங்கியதும் அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலை அணுகினோம். அவர்கள் படப்பிடிப்புக்குக் கிளம்பிப் போய்விட்டதாகவும் மைசூர் சுற்றுப்பட்டில் ஏதோ கிராமத்துப் பெயரைச் சொல்லி அங்கு இன்று படப்பிடிப்பு நடப்பதாகவும் கூறினார்கள். நாங்கள் ஒரு கிராமத்து தகர டப்பா பஸ்ஸில் ஏறி அந்தப் பிராந்தியத்தை அடைந்த போது அந்த இடம் வெறுமையாகக் கிடந்தது. அங்கிருப்பவர்கள் சிலர் இன்னும் ஒரு ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் படப்பிடிப்பைத் தொடர்ந்து கொண்டிருப்பதாகக் கூறினார்கள். அங்கு பஸ் எதுவும் இல்லை. நடையோ நடை என்று வேர்க்க விறுவிறுக்க ஓடினோம். அவர்கள் சொன்ன இடத்தை அடைந்த போது அங்கும் படப்பிடிப்புக்கான தடயம் எதுவும் இல்லை. ஒரு மாடு மேய்க்கும் சிறுவனிடம் கன்னடம், இந்தி, தமிழ் எல்லாம் கலந்து பேசி விபரம் கேட்டோம்.
அவன் இன்னொரு மலைக் குன்றைக் காண்பித்து அதன் பக்கத்தில் படப்பிடிப்பு நடப்பதாகச் சொன்னான். அந்தப் பக்கம் போன மாட்டு வண்டியைப் பிடித்தும் சிறிது தூரம் நடந்தும் போய்ச் சேர்ந்தோம்.
சாலையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. "ஒருவன் ஒருவன் முதலாளி'' என்ற பாடலின் படப்பிடிப்பு அது. ரஜினி குதிரை வண்டியில் பயணித்துக் கொண்டே பாடுகிற பாட்டு. இன்னும் சற்று தாமத்திருந்தாலும் அடுத்த ஐந்து கிலோ மீட்டர் பறந்திருப்பார்கள்.
ரஜினியிடம் போய் விஷயத்தைச் சொன்னார் ஸ்ரீராம் செல்வராஜ். தயாரிப்பாளர் சொல்லாமல் நான் பேட்டியோ, போúஸô தரமுடியாது என்று ரஜினி கறாராகச் சொல்லிவிட்டார்.பசியும், களைப்பும், முயற்சி தோல்வி அடைந்ததும் சேர்ந்து எங்களுக்கு அழுகை வராத குறையாக ஆனது. சென்னைக்கு எந்த திசையில் இருக்கிறோம் என்றுகூடத் தெரியவில்லை. ரஜினியின் முடிவுதான் பிரதானம். இயக்குநர் கே.எஸ். ரவிகுமாரிடம் நிலைமையை விளக்கலாம் என்று பார்த்தால் அந்த வார வண்ணத்திரையில் அவரைப் பற்றி ஏடாகூடமாக ஏதோ துணுக்கு வந்துவிட்டதற்காக வாட்டி எடுத்தார்.
தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரும்பினோம்.
"மண்ணின் மீது மனிதனுக்காசைமனிதன் மீது மண்ணுக்காசை ''என்று நாகராவில் பாடல்வரி ஓடியது. ரஜினி வாயசைத்துக் கொண்டிருந்தார்.
விளம்பரம் இல்லாத உதவி
திரையுலகில் எனக்கு அறிமுகமான நல்ல மனிதர்களில் சிவசக்தி பாண்டியன் ஒருவர். அவருடைய அலுவலகப் பணியாளர்கள் அனைவருமே எனக்கு நல்ல பரிச்சயம். கதை விவாதங்களில் இருந்த நேரங்களிலும் மிக முக்கியமானவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போதுகூட நான் உரிமையாக அவர் அறைக்குள் சென்றுவர முடியும்.
ஒருமுறை ஆசிரியர் ராம.திரு. சம்பந்தம் "ஏம்பா சினிமா எடிட்டர்.. உன்னால இன்னைக்குள்ள ஒரு சினிமா விளம்பரம் வாங்கித் தரமுடியுமா?'' என்று கேட்டார். தீபாவளி மலரில் திடீரென ஒரு விளம்பரம் நிறுத்தப்பட்டுவிட்டதால் அந்த இடத்துக்கு அப்படி ஓர் அவசரம்.நான் சிவசக்தி பாண்டியனுக்குத்தான் போன் செய்தேன். அரைமணி நேரத்தில் விளம்பர டிசைனும் செக்கும் வந்தது சேர்ந்தது. ஆசிரியர் ஆச்சர்யப்பட்டார்.
நான் தினமணியில் பணியாற்றி வேலையை ராஜினாமா செய்து விட்டுச் சென்ற போது அப்போது விளம்பரப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த ராமநாதன் என்னை அணுகினார்.சிவசக்தி பாண்டியன் தயாரித்த திரைப்படங்களுக்கான விளம்பரப் பணம் 60 ஆயிரத்துக்கு மேல் வரவேண்டியிருந்தது. அப்போது அப்படிப் பாக்கி வைத்திருந்த பலருடைய பேருக்கும் அலுவகத்தில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்கள். பல ஆண்டுகளாக நிலுவை வைத்திருந்தவர்களுக்குத்தான் நோட்டீஸ் அனுப்புவதாக ஏற்பாடு. தெரியாத்தனமாக அந்த மாத பாக்கிக்காக இவருக்கும் நோட்டீஸ் போய்விட்டது.
அந்தக் கோபத்தில் "நான் உங்களுக்கு இனி பணமும் தரமாட்டேன் விளம்பரமும் தரமாட்டேன்'' என்று உறுதியாகக் கூறியிருந்தார் சிவசக்தி பாண்டியன். நான் வேலையைவிட்டுப் போய்விட்டால் அந்த விளம்பரப் பணத்தை வாங்கவே முடியாது என்பதாலும் இனி அவரிடம் நட்புறவைத் தொடர்வதும் கேள்விக் குறியாக இருப்பதாலும்தான் எங்கள் விளம்பரப் பிரிவு அலுவலர் ராமநாதன் என்னிடம் முறையிட்டார்.
சிவசக்தி பாண்டியனைச் சந்தித்தேன். "இந்த விளம்பரப் பணத்தை நிறுத்தி வைத்திருப்பதால் உங்களுக்கு ஏதும் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடுமா'' என்று கேட்டார்.
ஆமாம் என்று ஒரு பொய்யைச் சொன்னேன். என் மீது அவர் வைத்திருந்த மரியாதையை இப்படிப் பயன்படுத்திக் கொண்டதில் வருத்தம்தான். ஆனால் அலுவலகத்துடன் ஒரு சுமுக உறவுக்கு அது காரணமாக இருக்கும் என்று அந்தப் பொய்யைச் சொன்னேன். அடுத்த வினாடி செக்கைப் போட்டு என் கையில் கொடுத்தார்.
பிறகொரு சமயம் அவர் என்னிடம் நெருக்கடியான நேரத்தில் என்னிடம் ஒரு உதவி கேட்டார். அவருக்கு நான் உதவ முடியாமல் போன வடு இன்னும் எனக்குள் இருக்கிறது.