செவ்வாய், செப்டம்பர் 15, 2009

மில்லும் மில் சார்ந்த இடமும்


















சாதாரண விஷயம் எப்படி செய்தியாகிறது என்பதற்கு உலக அளவில் எத்தனையோ உதாரணங்கள் இருக்கும். குறிப்பிட்ட கால வித்தியாசத்தில் ஒரு நபரையோ, ஒரு இடத்தையோ பார்க்கும்போது ஒரு அழகான ஆச்சரியம் இருப்பதும் சாதாரணம் செய்தி ஆவதில் ஒரு வகை.
சிறுவயதில் ஓட்டேரியில் பதினாலு குடித்தனங்கள் இருந்த ஒண்டிக் குடித்தன வீட்டில் இருந்தேன். அந்த வீட்டுக்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் ஏற்பட்டது பற்றிப் பார்ப்போம்.
அந்த வீட்டில் பெரும்பாலும் பி அண்ட் சி மில் தொழிலாளர்கள் வசித்தனர். அதாவது 12 குடித்தனக்காரர்கள் அங்குதான் வேலை செய்தனர். மீதி இரண்டு பேரில் என் அப்பா ஒருவர். சுற்றுப்பட்டில் இருந்த எல்லா வீட்டிலும் இதுதான் நிலைமை. சுமார் பதிமூன்றாயிரம் பேர் அந்தக் கம்பெனியில் வேலை பார்த்தனர். மூன்று ஷிப்ட். ஷிப்டுக்கு நான்காயிரம் பேர் நடமாட வேண்டிய சாலை. ஆலைச் சங்கு காலை பதினோரு மணிக்கு ஒரு தடவை கூவும். பெண்கள் தம் கணவன்மார்களுக்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு ஓடுவார்கள்.
பி அண்ட் சி ஆலை மூடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதையே நம்பியிருந்த பதிமூன்றாயிரம் தொழிலாளர் குடும்பங்களும் என்னென்ன விபரீதங்களுக்கு ஆளாயின என்பது ஆய்வுக்கான விஷயம். உளவியல் ரீதியான உலுக்கல் அது. அங்கே தடுக்கிவிழுந்தால் டீக்கடை. தொழிலாளர்களின் பிரதான உணவு. சரஸ்வதி, மகாலட்சுமி தியேட்டர்கள் அவர்களின் மையப் பகுதி. மேற்கே மேகலா தியேட்டரும் கிழக்கே புவனேஸ்வரி தியேட்டரும் தெற்கே ராக்ஸி தியேட்டரும் எல்லைகள். அப்போது மேகலாவில் எம்.ஜி.ஆர். படமும் புவனேஸ்வரியில் சிவாஜி படமும் ரிலீஸ் ஆகும். இப்போது எம்.ஜி.ஆரும் இல்லை, சிவாஜியும் இல்லை. அந்தத் தியேட்டர்களும் இல்லை. இதில் மகாலட்சுமியின் உயிர் மட்டும் ஊசாலாடிக் கொண்டிருக்கிறது. மற்றவை வேறு கான்கிரீட் அவதாரம் எடுத்துவிட்டன. டீக்கடைகள் இருக்கின்றன, இப்போதும் இருக்கும் உதிரித் தொழிலாளர்களின் உணவாக.
ஒரு பெரிய தொழிற்சாலை அங்கிருந்த சுற்றுப்பட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு வாழ்க்கை முறையாக இருந்தது. அப்படியே ஒரு நாள் அது காணால் போனது. திரு.வி.க. அதன் தொழிற் சங்கத் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். அந்தத் தொழிற்சாலைக்கு நிலக்கரி சுமந்து வரும் ரயில் ஒன்று உண்டு. அது தொழிற்சாலைக்குள்ளேயே போய் இறக்கும் வசதி இருந்தது. கூவம் ஆறும் அதனுள் ஓடும். அதில் படகுகள் மூலம் பஞ்சுப் பொதிகளும் தயாரித்த ஆடைகளும் வருவதும் போவதுமாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதில் படகுகள் போய் வருவதை நானும் பார்த்திருக்கிறேன்.
சமீபத்தில் அந்தத் தொழிற்சாலையில் ரஜினிகாந்தும் ஸ்ரேயாவும் ‘சிவாஜி’ படத்துக்காக ஒரு நடனம் ஆடினார்கள். அந்தப் பக்கம் போயிருந்த போது மக்கள் முகத்தில் ரஜினி வந்திருக்காரு என்ற பரவசத்தைப் பார்த்தேன். உலகத்துக்கே துணி அளந்து கொண்டிருந்த ஒரு பேக்டரியின் இறுதி மூச்சைக் கேட்டேன்.
அத்தகைய சாதாரணர்கள் இருந்த வீடுதான் அது. இப்போது அதிமுக பிரமுகர் சேகர் பாபு அந்த வீட்டை வாங்கி அவருடைய இல்லமாக புணரமைத்துக் கொண்டார். ஏழைகளின் பெருமூச்சுகளால் நிரம்பியிருந்த அந்த வீடு இப்போது பளபளப்பாக நிம்மதியாக இருக்கிறது. ஒரு வேளை அவருடைய தந்தையும் அதில் வேலை பார்த்திருக்கலாம். அத்தனை உறுதியாகத் தெரியாது. ஆனால் சேகர் பாபு என்னுடன் அப்பு செட்டியார் பள்ளிக் கூடத்தில் படித்தார். ஏழாவது படிக்கும் போதே வாத்தியாரிடம் சண்டை போட்டுவிட்டு பள்ளியை விட்டு நின்றுவிட்டார்.

இப்போது அந்த வீட்டுக்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் இருப்பதாக நினைக்கிறீர்களா?

செவ்வாய், செப்டம்பர் 08, 2009

பெரிய மனிதர்.. சின்ன வீடு!

எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் இரண்டு முறை பேசியிருக்கிறேன். ‘ஊருக்கு நூறு பேர்', ‘பாவம் இவள் ஒரு பாப்பாத்தி', ‘ஆயுத பூஜை' என்று அவருடைய லட்சியம் பேசும் கதைகளைத்தான் முதலில் படித்திருந்தேன். "சில நேரங்களில் சில மனிதர்கள்', ‘கங்கை எங்கே போகிறாள்', ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' போன்ற அதற்கு முந்தைய நாவல்களில் இன்னும் கொஞ்சம் அழுத்தமான மன உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டியிருப்பதாக ஒரு மேலோட்டமான அபிப்பிராயம் இருந்தது. இந்த வாசிப்புப் பின்னணியில்தான் ஜெயகாந்தனைச் சந்தித்தேன்.
முதல் முறை பேசியது டெலிபோனில்.
போலீஸ் செய்தி என்ற புலனாய்வு பத்திரிகையில் பணியாற்றியபோது அந்தப் பத்திரிகையின் ரத்தவாடையைப் போக்கிவிட நினைத்து நான் எடுத்த முயற்சியின் ஒரு பங்காக சிலவிதமான குற்றங்களுக்கு எழுத்தாளர்களின் கருத்துகளை வாங்கிப் போடலாம் என்று யோசனை சொன்னேன். உதாரணத்துக்குக்கற்பழிப்பு' என்ற குற்றம் குறித்து சேலம் அருள்மொழி, ஜெயகாந்தன் இருவரையும் பேச வைக்கலாம் என்று திட்டமிட்டேன். ஜெயகாந்தனிடம் இதைச் சொன்னபோது "நான் இப்போது பத்திரிகைகளுக்கு எழுதுவதையோ, பேசுவதையோ தவிர்த்துவிட்டேன்'' என்று கூறிவிட்டார்.
போலீஸ் செய்தி பத்திரிகையை சமூக இலக்கிய ஏடாக மாற்றும் யோசனையை பிரபஞ்சனிடம் வாசகர் கேள்விகளுக்கு பதில் வாங்கிப் போட்டதன் மூலம் ஓரளவுக்குத் தீர்த்தேன்.
அதன் பிறகு போலீஸ் செய்தி வேலை இழந்து (சசிகலா) நடராசன் நடத்திய தமிழரசி இதழில் ஃப்ரிலான்ஸராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு விக்ரமன் ஆசிரியராக இருந்தார். பாக்யராஜ் இயக்கத்தில் வெளியானசின்னவீடு' என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.
சின்னவீடு' என்று ஒரு திரைப்படத்திற்குப் பெயர் வைப்பது எவ்வளவு கேவலம்? இது குறித்து எழுத்தாளர் ஜெயகாந்தன் என்ன சொல்கிறார் என்று கேட்டு வாருங்கள் என்று சொல்லியிருந்தார் விக்ரமன்.
போனில் பேசினால் தவிர்த்துவிடுவாரோ என்ற தயக்கம். காலையில் நேரில் அவருடைய வீட்டுக்குச் சென்றேன்.
மீசையைத் தடவிவிட்டுக் கொண்டு மிடுக்காக விசாரித்தார். என்னவோ ஒரு வசீகரம் இருந்தது அவரிடத்தில். பிரமிப்பும் இருந்தது. எனக்கு என்ன சொல்வதென்றே புரியாமல் நாக்குழற ஏதோ பேசினேன்.
"மேலே இருங்கள் வருகிறேன்'' என்றார்.
மாடியில் ஓலை வேய்ந்த கொட்டகை இருந்தது. அங்கே அவர் பைப் பிடிப்பது போல பெரிய போட்டோ ஒன்று மாட்டியிருந்தது. எனக்கு மாக்ஸிம் கார்க்கி மனதில் ஓடினார்.
சின்னவீடு' பற்றிப் பேசுவதற்கு எனக்கே கூச்சமாக இருந்தது.
தோளின் மீது ஒரு துண்டைப் போர்த்திக் கொண்டு உள்ளே நுழைந்தார் ஜெயகாந்தன். நான், வெளிவந்திருக்கும் அந்தப் படத்தின் தலைப்பைப் பற்றிச் சொன்னேன்.
"சின்னவீடு என்றால் என்ன அர்த்தம்?'' என்றார். அவர் தெரிந்து கொண்டே கேட்கிறாரா தெரியாமல் கேட்கிறாரா என்று தெரியவில்லை.
"முதல் மனைவிக்குப் பிறகு ஒருவர் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்வதை சின்னவீடு என்று சொல்கிறார்கள். அது பெண்களை கொச்சைப் படுத்துவதாக இருக்கிறது... உங்கள் கருத்து வேண்டும்'' என்றேன்.
"எனக்கு இந்த மாதிரியான சீப்பான வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தெரியாது'' என்று கூறிவிட்டார்.
"சரி சார்'' என்று எழுந்து வருவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.
பின்னாளில் அவருக்கு இரண்டு மனைவியர் என்ற செய்தியும் தெரிந்த போது அவரிடம் போய் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுச் சங்கடப்படுத்திவிட்டோமே என்று அதிர்ச்சியும் வருத்தமும் ஏற்பட்டது.
ஒருசில அறிமுகங்கள் பிறகு அவர்களை எப்போதும் சந்திக்க வழியில்லாமல் சுவர் எழுப்பிவிடும். ஜெயகாந்தனுடனான இந்தச் சந்திப்பும் அப்படியான ஒன்றுதான். அதன் பிறகு அவரைச் சந்திக்கவே இல்லை.

அவருதாம்பா இவரு!




















வாழைப்பழ காமெடியை தமிழ்கூறும் நல்லுலகம் இன்னும் ஒரு கால் நூற்றாண்டுக்காவது மறக்காது என்பது திண்ணம். அந்த நகைச்சுவையை எழுதியவர் ஏ.வீரப்பன்.
டணால் தங்கவேலு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன் காலத்திலிருந்து இவருடைய நகைச்சுவை தமிழ் சினிமாவில் வயிறு குலுங்க வைத்திருக்கிறது, மனது நிறைய வைத்து வந்துள்ளது. சமீபத்திய காலங்களில் கவுண்டமணி, செந்தில் டைப் காமெடி என்று ஒரு பெயர் ஏற்படுத்திய காமெடி இவருடையதுதான். எனக்குத் தெரிந்து வடிவேலு, விவேக் காலம் வரை இவருடைய நகைச்சுவை தொடர்ந்துகொண்டிருந்தது.
இவருடைய நகைச்சுவை படம் நெடுக்க தொடர்புடைய நகைச்சுவையாக இருக்கும். அங்கங்கே தனித்தனியாகக் கட்டித் தொங்கவிட்ட சிரிப்புத் தோரணமாக இருக்காது. ஒரு படத்தில் கவுண்டமணி மரத்துக்கு மரம் சாமி படம் போட்டு உண்டியல் கட்டி தினமும் அலுவலகம் வருகிற மாதிரி வந்து கலெக்ஷன் செய்துகொண்டு போவார். முதலில் நடந்து வருவார். பிறகு சைக்கிள், டி.வி.எஸ். 50 என்று கடைசியில் காரில் வந்து கலெக்ட் செய்வதுவரை போகும் அந்த காமெடி. மெல்லிய சமூக அங்கதம் கலந்த அவை படம் ஆரம்பித்ததும் ஆரம்பித்து படம் முடிவதற்கு சற்று முன்பு வரை நம்மை தொடர்ச்சியாக பங்கெடுத்துச் சிரிக்க வைக்கும்.
ருத்ரதாண்டவம் என்ற படம் இவர் கதை வசனத்தில் வெளியான மிகவும் முக்கியமான படம். கடவுள் பூமிக்கு வந்து அவருடைய பார்வையில் சமூகப் பிரச்சினைகளை அலசியிருப்பார். பொதுவாக அவருடைய எல்லா நகைச்சுவையிலும் சமூகப் பிரச்சினை உருளும். ஒரு படத்தில் கவுண்டமணி தேங்காயில் பாம் வைத்துவிட்டதாகப் புரளி கிளப்பிவிட நாடு முழுக்க தேங்காய்கள் உடைக்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாகச் சொல்லியிருப்பார். பணத்துக்கு ஆசைப்பட்டு ஊமையனாக நடிப்பார் ஒரு படத்தில் கவுண்டணி. ஆனால் அவருக்கு இளையராஜாவின் இசையில் பின்னணி பாட வேண்டும் என்பதாக ஆசை இருக்கும். இப்படி நிறைய சொல்லலாம்.
ஒருநாள் காலை வண்ணத்திரை செக்யூரிட்டி ஆபிஸர் என்னைத் தொடர்பு கொண்டு வீரப்பன் என்பவர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார் என்று சொன்னபோது நான் இவரை எதிர்பார்க்கவில்லை.
தட்டுத் தடுமாறி அறைக்குள் வந்தார். கைத்தாங்கலாக அவரை ஒருவர் அழைத்துவந்திருந்தார். முள்ளென முளைத்திருந்த சிறிய தாடியினாலும் பார்வை தெரியாதவராக இருந்ததாலும் அவரை சட்டென நான் அடையாளம் காண முடியவில்லை. உடன் வந்தவர்தான் அறிமுகம் செய்தார். எத்தனையோ காமெடி நடிகர்களை ஆளாக்கிவிட்ட இவரை இப்போது யாரும் கண்டுகொள்வதே இல்லை என்று உடன் வந்தவர் வருந்தினார்.
ஏ.வீரப்பன் கையை உயர்த்தி "இருக்கட்டும் இருக்கட்டும் அதனாலென்ன?' என்பது போல சைகையால் சொன்னார்.
"உங்கள் பத்திரிகையில் ஏதாவது காமெடி தொடர் எழுத முடியுமா என்று தெரிந்து கொள்வதற்காகத்தான் வந்தேன்'' என்றார்.
"தாராளமாக எழுதுங்கள்'' என்றேன்.
"நான்கு சேப்டர் எழுதி அனுப்புகிறேன். பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள்'' சினிமாவில் கிடைக்கும் சம்பாத்தியம் போல பத்திரிகையில் கிடைக்காது. அவர் ஒரு படத்துக்கு எழுதுவதை அவர் ஒருவருடமெல்லாம் பத்திரிகையில் எழுதினாலும் சம்பாதிக்க முடியாது என்பதைத் தெரிவித்தேன்.
"அது தெரியும்'' எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினார். மனசு நகைச்சுவைக்கு இடம் தருவதாக இருந்தாலும் வயது இடம் தராத நிலைமை அவருக்கு. பார்வையில்லாமல் தடுமாற்ற நடையில் இன்னொருவர் துணையோடு நடந்து கொண்டிருக்கும்போது அவருடைய நகைச்சுவையின் முகம் மாறிப்போய்விட்டதை உணர முடிந்தது.
அவர் போன பிறகு அலுவலக ஊழியர்கள் யார் அவர் என்று விசாரித்தார்கள். அவரைப் பற்றிச் சொன்னேன்.
"அவரா இவரு?'' என்று ஒருவர் ஆச்சர்யப்பட்டார்.
இன்னொருவர் வாழைப்பழ காமெடியின் தொனியிலேயே "அவர்தாம்பா இவரு'' என்றார். எல்லோரும் சிரித்தனர்.
நகைச்சுவை என்பது இன்னொருவரை செல்லமாகப் புண்படுத்துவது என்று சொல்லுவார்கள். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிரிப்பு உற்பத்தி செய்து கொண்டிருந்தவர் இன்று இன்னொருவர் கைத்தாங்கலாக வந்து வாய்ப்பு கேட்டபோது வருத்தமாக இருந்தது. நான் சிரிக்கவில்லை.

LinkWithin

Blog Widget by LinkWithin