முன்பெல்லாம் தமிழ்மகன் என்று கூகிளில் தேடினால் என்னுடைய கந்தலான இரண்டு புகைப்படமும் என்னைப்பற்றி சில செய்திகளும் படிக்கக் கிடைக்கும். விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் என்றொரு படம் வந்தது. அதன் பிறகு நான் அதில் காணாமல் போனேன். எப்போது தேடினாலும் விஜய், ஸ்ரேயா, நமீதா பற்றிய செய்திகள்தான் படும்.
நான் ஆத்திரப்படுவதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையில் இப்படி இடையூறாகிவிட்டது அவர்களுக்கு ஒரு பொருட்டும் அல்ல.
சில நாட்களுக்கு முன் அழகிய தமிழ்மகன் படத்தின் சில காட்சிகளை டி.வியில் பார்த்துக் கொண்டிருந்தேன். பெரும் அதிர்ச்சி. கவிஞர் மு.மேத்தா அந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் வந்தார். அதாவது கவிஞர் மு.மேத்தாவாகவே. அவர் என்னுடைய கல்லூரி பேராசிரியர். எனக்கு சந்தோஷமாக இருந்தது. படத்தில் விஜய்யின் கவிதையைப் பாராட்டி அவர் தமிழ்மகன் என்று சிறப்பித்தார். விஜய் அழகாக இருப்பதால் அழகிய தமிழ்மகன் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.
இதில் அதிர்ச்சி அடைவதற்கு எனக்கு ஒரு காரணம் இருந்தது. கல்லூரியில் படித்த காலத்தில் என் கவிதைத் தொகுப்பு வெளியான நேரத்தில் எனக்கு ஒரு புனைப் பெயர் வேண்டும் என்று கோரிய போது எனக்கு அந்தப் பெயரை வைத்தவர் கவிஞர் மு. மேத்தா அவர்கள்தான்.
என் வாழ்க்கையில் நமீதா, ஸ்ரேயா ஆகியோரைக் குறுக்கிட வைத்தவர் என் ஆசானா?
சரி என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.
கலகலப்பு என்று ஒரு படம். சுந்தர்.சி இயக்கி சந்தானம், விமல், அஞ்சலி, ஓவியா போன்றவர்கள் நடித்திருந்தார்கள்.
அதில் சந்தானத்தின் பெயர் வெட்டுப்புலி. அது நான் எழுதிய நாவலின் பெயர்.
அதிர்ச்சி அடைவதற்கு ஓரளவுக்கு வாய்ப்பு உண்டு தானே?
என் நாவலில் சிறுத்தையோடு போரிட்ட என் கொள்ளு தாத்தாவின் வீரத்தைச் சொல்லிவிட்டு, அது எப்படி ஒரு தீப்பெட்டிக்கு சின்னமாக மாறியது என்று சொல்லி இருப்பேன். சந்தானமும் தன் பெயர் காரணத்துக்கு அதையேதான் சொல்கிறார்.
படத்தின் இரண்டாவது பாதியில் சந்தானம் பல இடங்களில் வெட்டுப்புலியின் வீர தீரத்தைச் சொல்கிறார்.
எப்போதுமே ஏதாவது ஒரு திரைப்படம் வெளியான பிறகு காமெடி நடிகர்கள் அந்தப் படத்தைப் போலவே காட்சிகள் அமைத்துக் கிண்டல் அடிப்பார்கள். விவேக், சந்தானம் போன்றவர்களிடம் அடிக்கடி சிக்கிக் கொள்பவர் நடிகர் கமல்ஹாசன். வெட்டுப்புலி நாவலை திரைப்படமாக எடுக்க விரும்பி சில இயக்குநர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது படமாக வருவதற்கு முன்பே சந்தானமும் சுந்தர்.சி யும் முந்திக் கொண்டது ஒரு விதத்தில் ஆச்சர்யம்தான்.