ஒரு வறட்சியான ஞாயிற்றுக்கிழமை. டி.வி. நிகழ்ச்சிகளில் மண்டை காய்ந்து போய்
வீட்டில் இருந்த டி.வி.டி.களை தூசு தட்டினோம். அஜீத் நடித்த ‘காதல் கோட்டை’, விஜய் நடித்த ‘குஷி’ ஆகிய திரைப்படங்களைத் தேர்வு செய்தோம்.. இருவரும் சந்தித்துவிட மாட்டார்களா என்பதுதான் இரண்டு படங்களிலும் நாற்காலி நுனிக்குத் தள்ளிய கிளைமாக்ஸ். இப்போதும் எனக்கு அந்தப் பரபரப்பில் மூழ்கிப் போவதில் எந்தவித சுணக்கமும் இல்லை. அஜீத், விஜய் என்ற பேதமும் எனக்கு இல்லை. சுமார் பத்தாண்டு இடைவெளியில் என் ரசனையில் எந்த மாற்றமும் இல்லாமல் அன்று பார்த்தது மாதிரியே ரசித்தேன்.. படங்களைப் பார்த்து முடிந்ததும் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த உறவுக்காரின் பெண் ஒரு கேள்வி கேட்டாள். ‘‘ஏன் ரெண்டு படத்திலும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க முடியாம இவ்வளோ கஷ்டப்பட்றாங்க? செல்போன்ல ‘நான் இங்கத்தான் இருக்கேன்.. நீ எங்க இருக்கேனு கேக்க வேண்டியதுதானே?’’ அவள் இந்த பத்தாண்டுகளுக்குள் பிறந்தவள். நிறைய பேர் அந்தப் படத்தைப் பார்த்தாலும் குழந்தைக்குத்தான் அந்த சந்தேகத்தைக் கேட்க முடிந்தது. அந்த படம் வந்த போது செல்போன் என்பது இங்கு இல்லை என சொன்னால், செல்போன் இல்லாம எப்படி இருந்தீங்க என ஆச்சர்யப்பட்டாள். குழந்தைகள் ‘மாத்தி யோசி’.. என்பதை இயல்பாக யோசிக்கின்றன. "நிலாவில் ஆயா வடைசுட்டுக் கொண்டிருக்கிறாள்" என்றதும், "சுட்ட வடையை யாருக்கு விற்பாள்?"என்று குழந்தைகள் கேட்கின்றன. ‘‘முயலுக்கும் ஆமைக்கும் ரேஸ் வெச்சாங்களாம்.’’ இந்தக் கதையைச் சொன்னேன். தீவிர யோசனைக்குப் பிறகு நண்பரின் பையன் ஒரு கதையைச் சொன்னான். ‘‘இந்த ரேஸ்ல ஒரு மிஸ்டேக் இருக்கு. முயல் ஃபாஸ்ட்டா ஓடும். ஆமை ஸ்லோவா போவும். இது ரெண்டுக்கும் யாராவது ரேஸ் வைப்பாங்களா? வேணும்னா முயலுக்கும் மானுக்கும் ரேஸ் வைக்கலாம்... எல்.கே.ஜி. படிக்கிறவனுக்கும் பிளஸ் டு படிக்கிறவருக்கும் எக்ஸாம் வெச்சா எப்படிப்பா..? முயலுக்கும் ஆமைக்கும் ரேஸ் வெச்சா ரெண்டுக்கும் ஈக்குவல் இம்பார்டன்ஸ் கொடுக்கணும்.. பாதி தூரம் ஓடிக் கடக்கணும். நடுவுல ஒரு ஆறு வரும். அதை நீந்திக் கடக்கணும்.. இந்த ரெண்டையும் கடந்து யார் மொதல்ல வர்றாங்களோ அவங்களுக்குத்தான் பர்ஸ்ட் பிரைஸ்.. இப்ப ஓ.கே.வா?’’ குழந்தைளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், பல சமயங்களில் நாம் விடையறியாத கேள்விகளின் குழந்தைகளாகிறோம். குழந்தைகள் சொல்லும் கதைகளும் அவர்கள் கேட்கும் சந்தேகங்களும் சுவாரஸ்யமானவை. நமது பள்ளிக்கூடங்கள் குழந்தைகளின் கதைளுக்குக் காது கொடுப்பதில்லை. அவர்களின் சந்தேகங்களுக்குக் காது கொடுப்பதில்லை. மூட்டை மூட்டையாகப் புத்தகங்களைக் கொடுத்து அதை பத்து மாதங்களுக்குள் படித்து முடித்து 99 மார்க் எடுத்து பாஸ் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறோம். இதில் அரசுப் பள்ளிக்கூடம், மெட்ரிக் பள்ளிக்கூடம், சி.பி.எஸ்.ஸி. என்று விதம்விதமான புத்தகமூட்டைகள் வேறு. எல்லோருக்கும் சமமானதாகவும் சீரானதாகவும் ஒரு கல்வி அவசியம். அதை யார் உருவாக்கினாலும் சரி.
நன்றி: விகடன்.காம்
|
புதன், ஜூன் 27, 2012
கேள்விகளின் குழந்தைகள் !
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)