அன்புள்ள தமிழ்மகனுக்கு,
வணக்கம். நலம்தானே.
சமீபத்தில் உங்களை வீடியோவில் பார்த்தேன். நீங்கள் சுப்பிரபாரதிமணியன் புத்தகவெளியீட்டில் பேசியதை ரசித்தேன். நேற்று உங்கள் ’வெட்டுப்புலி’ நாவலை படித்தேன். முதல்நாள் இரவு தொடங்கி நேற்று மாலை முடிக்கமுடிந்தது. இத்தனைகாலமாக இதை தள்ளிப்போட்டது வருத்தமாக இருந்தது. படித்து பிரமித்துப்போய் இருக்கிறேன். எப்படி உங்களால் 100 ஆண்டு வரலாறையும், அரசியலையும், சினிமாவையும், வாழ்க்கையும் சுவையாக இணைக்க முடிந்தது. 370 பக்க நாவல் என்றால் அதற்கான குறிப்புகள் சேகரிக்க 3700 பக்கங்கள் தேவையாக இருந்திருக்கும். எத்தனை எத்தனை தகவல்கள். எப்படிஅவற்றை சுவாரஸ்யம் கெடாமல் கோர்க்க முடிந்தது. அந்தக் காலங்களில் என்ன காசு புழங்கும், என்ன உணவு, என்ன வேலை பார்த்தனர், என்ன பேச்சுமொழி என்று ஒவ்வொன்றும் பெரிய சவாலாக இருந்திருக்கும்.
ஓர் இடத்தில் தருப்தி என்று வரும். ஆப்பிரிக்காவில் இந்தப் பழக்கம் இருந்தது. குழந்தை ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டிய பின்னர்தான் அது வாழப் பிறந்தது என்று கணக்கில் சேர்ப்பார்கள். தியாகராஜன் ஹேமலதா பகுதி மிக அழகாக வந்திருக்கிறது. ஆரம்பத்தில் பல இடங்களில் சிரித்தேன். அப்படியே அந்தக் கதையை சினிமாவாக எடுக்கலாம்.
.நான்காம் ஜோர்ஜ் படம் போட்ட ஒரு ரூபாய்தாள்
ஐயர் வூடுகளிலயும் காப்பி குடிக்க ஆரம்பிச்சுட்டான்
இந்தி பேசுது இங்கிலீஸ் பேசுது தமிழ் மட்டும் பேசாதா
இப்படியான இடங்களை எழுதுவதற்கு எத்தனை உழைப்பு தேவைப்பட்டிருக்கும். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
(எழுத்தாளர் அ.முத்துலிங்கம் மிகச் சிறந்த படிப்பாளி. உலக அனுபவம் அதிகம் பெற்ற தமிழ் எழுத்தாளர். அவர் எழுத்துக்களைப் பிரமிப்பாக படிப்பேன். அதுவும் என்னைப் பற்றி எழுதியதை படிப்பதென்றால்... எனக்கு எவ்வளவு ந்ம்பிக்கை ஏற்பட்டிருக்கும் என்பதை விளக்குவது கடினம்.)