திங்கள், ஆகஸ்ட் 13, 2012

நினைவின் நிழல்



நான் அமைதியாகக் கண் அயர்ந்து இருந்தேன். எனக்கு உயிர் இருக்கிறதா என்பதை பலரும் நம்பிக்கையே இல்லாமல் பரிசோதித்துக்கொண்டிருந்தார்கள். உடலில் ஒரு அசைவும் இல்லை. பத்து குதிரைத்திறன் உள்ள நீர் இறைக்கும் இயந்திரத்தை தோளில் சுமந்து செல்லக்கூடிய என் தோள்கள் துடைத்துப் போட்ட கரிக்கந்தை போல கிடந்தது. இமையைக்கூட அசைக்க முடியவில்லை. என்னைச் சுற்றி நான்கைந்து டாக்டர்கள் நின்றிருப்பதை மிக யோசனைக்குப் பிறகே உணர்ந்தேன். எல்லோருமே நான் பிழைப்பது அரிது என்பதைத் தங்கள் மருத்துவ அறிவைக்கொண்டு தீர்மானமாகச் சொன்னார்கள்.
நெடிய உருவம் கொண்ட ஆங்கிலேயரை நினைவுபடுத்தும் தோற்றம் உள்ள அந்த மருத்துவர்& இது அவருடைய குரலை வைத்து நான் செய்த கற்பனை& என்னை ஏறத்தாழ இறந்துவிட்டதாகவும் இனி எனக்குச் செய்யும் மருத்துவ உதவி வீண்விரயம் என்றும் சொன்னார். என்னால் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. நாக்கையோ, உதடுகளையோ அசைக்கும் முயற்சிகள் பயனளிக்கவில்லை. சொல்லப்போனால் அதற்கு எப்படி முயற்சி செய்ய வேண்டும் என்பது விளங்கவில்லை. நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை.
என் வாயும் மூக்கும் பிராணவாயு செலுத்துவதற்கான கருவிகளால் மூடப்பட்டிருந்தன. சிரமப்பட்டு சுவாசிக்கிறேன்.
‘‘வென்டிலேஷன் வெக்கணும்னா ஒரு நாளைக்கு 50 ஆயிரம் ரூபா ஆகும்னு சொல்லிட்டீங்களா?’’
‘‘சொல்லிடுறோம் சார்.. ’’
‘‘அதை மொதல்ல சொல்லிடுங்க. அட்டண்டர் யாரு இருக்காங்க?’’ என்னைப் பொறுத்தவரை அந்த நேரத்தில் அங்கு இருந்தவர்கள் எல்லோருமே டாக்டர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறேன்.
ஒரு பெண் குரல் ‘‘அவங்க் வொய்ஃப் இருக்காங்க சார்’’& இது நர்ஸாக இருக்கலாம்.
‘‘இப்ப எங்க இருக்காங்க?’’
‘‘வெளிய வரான்டாவுல நிக்கறாங்க சார்’’
‘‘வரச் சொல்லுங்க’’
என் மனைவி வரப்போகிறாள்.. அவளை இவர்கள் அழவைக்கப் போகிறார்கள்... என்னால் எதுவும் செய்ய முடியாது.. எனக்குச் சிந்திப்பதற்கே சோர்வாக இருந்தது. சில நேரங்களில் எங்கிருக்கிறேன் என்பதையே உணர முடியாமல் இருந்தது. எங்கிருக்கிறேன் என்பதைத் தெரிந்துகொள்ளவோ, தெரிவிக்கவோ திராணி இல்லை.
டாக்டர் ஒருவர், ‘‘இதுவரைக்கும் எத்தனை நாளா வென்டிலேஷன்ல வெச்சு இருக்காங்க?’’ என்று விசாரித்தார். அவருடைய கேள்வியில் இருந்து அவர் இப்போதுதான் என்னை முதன்முதலாகப் பார்க்க வந்திருக்கிறார் என்பதை அனுமானித்தேன். சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் பெரிய மருத்துவராக இருப்பார்.
‘‘வாம்மா... என்ன ஆச்சு இவருக்கு?’’
‘‘வேலைக்குப் போயிட்டு வந்தாரு.. காலைல இருந்து சாப்படல. கஷ்டமான வேலை சார்... கஷ்டமான குடும்பம் சார்..’’
‘‘அழாதம்மா. விஷயத்தைச் சொல்லுங்க’’
‘‘பசி எடுக்குது. சாப்பாடு போடுன்னு சொன்னாரு. ஒரு வா தான் சாப்புட்டாரு. கை எல்லாம் வலிக்குதுன்னு துடிச்சாரு. வாயெல்லாம் இழுத்துக்குச்சி.. என்னமோ சொல்றாரு. ஆன ஒண்ணுமே புரியலை.. ’’ எனக்கும் அவள் சொல்கிற சம்பவம் நினைவுக்கு வந்தது. கணபதிராமன் நிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் சப் மெர்ஸிபிள் மோட்டாரைப் பொருத்தினேன். பூமிக்குள் இறக்கப்பட்டிருந்த குழாயில் லேசாக வளைவு இருந்தது. மோட்டர் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டது. பெரும்பாடு. ஒவ்வொரு முறை மேலே ஏற்றி சர்ஜிங் செய்துவிட்டு மோட்டரை இறக்கி... காலையில் இருந்து வேலை இழுத்துவிட்டது. சரியான டென்ஷன். சாப்பிடவே இல்லை. ஆறு மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தேன். சாப்பிட உட்கார்ந்தேன். இடது கையில் அப்படி ஒரு வலி. தலை வெடித்துவிடுவதுமாதிரி ஒரு பிரமை. வெடித்துவிட்டதா என்று தெரியவில்லை. தொட்டுப் பார்த்து உறுதி செய்ய நினைத்தேன். அய்யோ என் கை? அது எங்கே இருக்கிறது?
‘‘அப்புறம்..?’’
‘‘ஜி.ஹெச்.சுக்கு தூக்கினு போனோம்... அங்க ஒண்ணும் முடியாதுன்னு சொல்லிட்டாங்க...’’
‘‘எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்தாங்களா?’’
‘‘அங்க எடுக்கலை... இங்க கொண்டுவந்த பிறகுதான் எடுத்தாங்க’’ என்று இன்னொரு டாக்டர் பதில் சொன்னார்.
‘‘இப்பவும் ஒண்ணும் சொல்றதுக்கு இல்லம்மா..’’
‘‘எப்பிடியாவது காப்பாத்திடுங்க சார்...’’
‘‘99 சதவிதம் வாய்ப்பே இல்லம்மா. இப்ப இந்தக் கருவிய எடுத்துட்டா அவர் கதை முடிஞ்சுடும். இதலதான் ஓடிக்கிட்டு இருக்கு..’’
‘‘அப்பன்னா இதை எடுக்காதீங்க சார்...’’ குரல் பதறியது. பயப்படாதே விமலா.
‘‘இதுக்கு ஒரு நாளைக்கு அம்பது ஆயிரம் வாடகை.. அப்புறம் மருந்து, வாடகை, டாக்ட ஃபீஸு எல்லாம் இருக்கு. முடியுமா உங்களால?’’
‘‘எத்தனை நாளிக்கி இப்பிடி வெச்சிருக்கணும்? அப்புறம் நல்லாயிடுமா?’’
‘‘அத சொல்ல முடியாதும்மா.. இதை வெச்சி இருந்தா உயிர் இருக்கும். எடுத்துட்டா சொல்ல முடியாது’’
விசும்பலும் கேவிக் கேவி அழுவதும் கேட்டது. நான் எழுந்து கொள்ள விரும்பினேன். அதை எப்படி செய்வதென்று தெரியவில்லை.
‘‘மனச தேத்திக்கம்மா... இதுவரைக்கும் மூணு நாள் வெச்சிருக்காங்க. ஒன்றை லட்சத்துக்கு மேல ஆகிருச்சு. அதுக்குத்தான் சொல்றேன்’’
மூன்று நாட்களா? அதிர்ச்சியாக இருந்தது. படுக்கையில் மூன்று நாட்களாகவா இருக்கிறேன்? கொடுத்த செக் என்ன ஆனது? கடையை யார் பார்த்துக்கொள்கிறார்கள்? மேனேஜரிடம் ஸ்டாக் வைக்கச் சொன்னார்களா? கதிரேசன் மோட்டர் கேட்டானே? அய்யோ மூன்று நாட்களா..?
‘‘எத்தனை நாள் வேணா இருக்கட்டும் சார்’’ அழுதாள்.
‘‘அழாதம்மா. நீங்க சொன்னாத்தான் எடுப்போம். ரெண்டு நாளைக்கு ஒரு தரம் பணம் கட்டிடுங்க. வேற யாராவது விபரம் தெரிஞ்சவங்க இருந்தா வரச் சொல்லுங்க..’’ ஒவ்வொருவரின் காலடிச் சத்தமும் நின்று நின்று நகருவது கேட்டது. என் மனைவி மட்டும் என் அருகே நின்று அழுது கொண்டிருந்தாள். அவள் என் கையைப் பிடித்துக்கொண்டிருப்பதை உணர முடிந்தது. பதிலுக்கு உணர்த்த முடியவில்லை. அவளுடைய கைச்சூடு இதமாக இருந்தது. ஆனால் அழுதுகொண்டே அங்கிருந்து சென்றுவிட்டாள்.
வெகு நேரத்துக்கு யாருமே இல்லை. யாருமற்ற சூனியவெளியில் நான் உருவமற்று இருந்தேன். எடையும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் என்பது ஒரு வெற்றிடம் போல இருந்தது. இதையெல்லாம் நான் சிந்திக்கிறேனா, எனக்காக யாரோ சிந்திக்கிறார்களா? எதாஅவது ஒரு இடத்தில் இருக்கிறேனா, எல்லா இடத்திலும் இருக்கிறேனா? யுகமா, வினாடியா? யாரோ என் நெற்றியில் அழுத்துவது தெரிந்தது. ஓ விமலா விபூதி பூசி விடுகிறாள். விபூதித் துகள்கள் நெற்றியில் நமைக்கின்றன. கடவுள் அருள் வேலை செய்கிறது. கடவுள் துகள்.. ஆஹா..
‘‘நாலு நாலா இப்பிடியேத்தாண்ணா இருக்காரு..’’ கூட வேறு யாரோ நிற்கிறார்கள்.
‘‘என்ன சொல்றாங்க?’’... அட இந்தக் குரல்.. அரசு... திருநாவுக்கரசு.. வந்துவிட்டாயா..? இந்த டாக்டர்களுக்குப் புரிய வை. நான் உயிருடன்தான் இருக்கிறேன். டாக்டர்களுக்குச் சொல். என் மனைவிக்கு நம்பிக்கைக் கொடு.
‘‘நீங்க வந்தா பெரிய டாக்டரு பாக்கணும்னு சொன்னாரு. இருண்ணா இப்ப ரவுண்ட்ஸ் வருவாரு’’
‘‘ரமேஷ்.. ரமேஷ் எழுந்திர்றா... டேய் ரமேஷ்... நான் பேசறது கேக்குதா?’’ அரசு என் காதருகில் கத்தினான்.
கேட்கிறது. நன்றாகக் கேட்கிறது.
‘‘என்னடா எல்லாத்தையும் போட்டது போட்டது மாதிரி இங்க வந்து படுத்துட்ட? எழுந்துரு’’
என்னை மெல்ல உலுக்கினான்.
‘‘சார் அப்பிடிலாம் அசைக்கக் கூடாது...’’
வேறு ஒரு பெண்ணின் குரல். நர்ஸ்.
‘‘கால் அசையுதே...’’ என்றான் ரமேஷ்.
‘‘நாம எந்த எடத்திலயாவது கிள்ளினா, அசைச்சா அந்த இடத்தில மட்டும் ஒரு ஸ்டிமுலேஷன் இருக்கும்.. இத பாருங்க... பாத்தீங்க இல்ல? எங்க கிள்றமோ அந்த இடத்தில அசையும்.. அவ்வளவுதான். அதுக்கும் பிரெய்னுக்கும் சம்பந்தமில்ல.. பல்லி வால் அறுந்து கீழ விழுந்தாலும் துடிக்கும் தெரியுமா? அப்பிடித்தான். மூளை கண்ட்ரோல் இல்லை..’’
அடிப்பாவி எங்கேயோ கிள்ளிக்காட்டி விளக்குகிறாள். சிறிய மவுனமும் மெல்லிய காலடிச் சத்தமும் கேட்டது.
‘‘என்னம்மா முடிவு பண்ணே?’’
‘‘அண்ணா கிட்ட சொல்லுங்க’’
‘‘சொந்த அண்ணனா?’’
‘‘இல்ல சார். சின்ன வயசுல இருந்து ஃப்ரண்ட்...’’
‘‘ரத்த சம்பந்தம் இருந்தாத்தான் சொல்ல முடியும்..’’
‘‘ரிலேஷனும்தான்.. ஊர்ல பங்காளிங்க..’’
நல்லவேளை. நன்றாகச் சமாளித்துவிட்டான்.
‘‘ஓ.கே. இவங்க சொல்லி இருப்பாங்க. பாயிண்ட் ஒன் பர்சன்ட் சான்ஸ்தான் இருக்கு. வென்டிலேஷன் வெச்சி இருக்கறதால மூச்சு போய்கிட்டு இருக்கு.. ரொம்ப கஷ்டம். வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போயிடுறது நல்லது’’
‘‘வேற சான்ஸ் இல்லையா டாக்டர்?’’
‘‘அமெரிக்காவுல இருந்து டாக்டர் வந்தாலும் காப்பாத்த முடியாது.. அப்படி ஒரு சான்ஸ் இருந்தா நாங்களே சொல்லி இருப்போம்’’
‘‘வேற ஏதாவது ரிஸ்க் எடுக்கலாம்னாலும் சொல்லுங்க டாக்டர்’’
‘‘இல்ல சார். எதாவது இருந்தா இன்னேரம் செஞ்சி இருப்போம்... இப்ப ஒரு நாளைக்கு சராசரியா அம்பதாயிரம் ஆகுது. வசதியானவங்க பத்து நாள் இருபது நாள்கூட வெச்சிருக்காங்க’’
‘‘அப்படி வெச்சிருந்தா குணமாகுமா?’’
டாக்டர் எதுவும் சொல்லவில்லை. அவர் உதட்டைப் பிதுக்கி இருக்கலாம். ஆள்காட்டி விரலை வானத்தை நோக்கிக் காட்டி இருக்கலாம்.
‘‘வெச்சுருக்கறது பலனளிக்குமா? எத்தனை பர்ஸென்ட் ஹோப்?’’
‘‘அதான் சொல்லிட்டனே.. நேத்தே இந்த அம்மாகிட்ட வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போறதுதான் நல்லதுன்னு எங்க பி.ஆர்.ஓ. டிபார்ட்மென்ட்ல இருந்து கன்வீன்ஸ் பண்ணியிருக்காங்க... சொன்னாங்களா, இல்லியாம்மா?’’
‘‘சொன்னாங்க சார்’’ அவள் குரல் உடைந்திருந்தது.
‘‘நல்லா யோசிச்சுக்கம்மா. டாக்டர் சொல்றது புரியுதில்ல? தினமும் அம்பதாயிரம் கொடுத்து...’’ அரசுவின் குரல்.
‘‘இன்னும் வீடுகூட கட்டி முடிக்கலையே..’’
‘‘அதுக்குத்தான் சொல்றேன்... வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போறதுதான் புத்திசாலித்தனம்... புரிஞ்சுக்கம்மா’’
டேய் அரசு.. என்னடா இப்படி சொல்லிட்டியே... நான் உயிரோடதான்டா இருக்கேன். நண்பா..
விமலாவின் அழுகை மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தது.
‘‘சார் அப்படின்னா இன்னும் ஒரு நாள் இருக்கட்டும். நான் வேற சில டாக்டர் கிட்ட ஒபீனியன் கேட்டுக்கிட்டு சொல்றேன்’’
‘‘ஓ.கே. உங்க இஷ்டம்..’’
செருப்புகள் தரை உரசும் சப்தம் மெல்ல தேய்ந்து மறைந்தது. அப்புறம் வெகு நேரத்துக்கு யாருமே வரவில்லை. சோர்வில் நினைவு மங்குவதும் திடீரென விழிப்பதும் நர்ஸ் வந்து குளுகோஸ் ஏறும் ஊசியை அழுத்திப் பார்த்துவிட்டுப் போவதுமாக இருந்தது. எத்தனையோ யுகமாக படுத்திருப்பது போல இருந்தது. திடீர் திடீரென நினைவு தப்பிப் போனது.
மீண்டும் சப்தங்கள். யாரோ அருகே வந்து நிற்கிறார்கள். போகிறார்கள்.
‘‘மூளைக்கு ரத்தம் சப்ளை ஆகுற ரெண்டு முக்கியமான நரம்பு பிளாக் ஆகி இருக்கு. மூளைக்கு இப்ப ரத்தம் போகல. அதாவது மினிமம் பங்ஷன் ஆகுற அளவுக்குப் போகுது. ஹார்ட் வேலை செய்யுது. லங்ஸ் வேலை செய்யுது.. கிட்னி வேலை செய்யுது.. ஐ திங்க் செஃட் பிரெய்னுக்கு கொஞ்சூண்டு சப்ளை இருக்கு. இந்த பிளாக்கை சரி பண்ண இன்னும் மருந்து கண்டு பிடிக்கல. அதைக் கரைக்க முயற்சி பண்ணா அது மூளைக்குள்ள போய் இன்னும் காம்பிளிகேஷன் அதிகமாகும். புரியுதுங்களா?’’
டாக்டர் யாருக்கோ விளக்கிக்கொண்டிருந்தார். எதிரில் தலை அசைத்துக்கொண்டிருப்பது யாரென்று தெரியவில்லை.
‘‘நீங்க உடல்தானம் பற்றி யோசிக்கறதுதான் நல்லது’’
‘‘காதுகிட்ட போய் பேசினா கண்ணுக்குள்ள பாவை அசையுது டாக்டர்.’’ &அரசு.
‘‘நீங்க பாத்தீங்களா?’’
‘‘நான் பாத்தன் சார்.. வாயில விபூதி போட்டன். நெஞ்சுக்குழி ஏறி எறங்குச்சு சார்’’
‘‘ஏம்மா இது என்ன ஆஸ்பித்திரியா, மாரியம்மன் கோயிலா? அவரால எதையும் முழுங்க முடியாது. சளியை எல்லாம் ட்யூப் வழியாத்தான் எடுக்குறோம். சளி லங்ஸ்குள்ள போயீ இங்ஃபெக்ஷன் ஆகிடுமோ, நிமோனியா வந்துடுமோன்னு பயந்துகிட்டு இருக்கேன்.. நீ பாட்டுக்கு விபூதிய வாயில போட்டன்னு சொல்றியே... இன்னோரு முறை இப்படி பண்ணா வீட்டுக்கு அனுப்பிடுவேன்... புரியுதா?’’
‘‘எங்க குலசாமி கோயில்ல மந்திரிச்சு எடுத்தாந்தாங்க சார்.. அதனாலதான்... இனிமே குடுக்க மாட்டன்சார்’’
டாக்டர் ஒரு பெருமூச்சை வெளியேற்றி, ‘‘என்ன பண்ணலாம் சொல்லுங்க?’’ என்றார்.
விமலாவும் அரசுவும் மட்டும் இருந்தனர். இருவரில் யார் என்னை என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
‘‘எல்லாரும் கிராமத்து ஆளுங்க. வென்டிலேஷனை எடுத்தா இறந்துடுவாங்கன்னா அதுக்கு ஒத்துக்க மாட்டாங்க. சென்டிமென்ட்ஸ்... வீடு வாசல் எல்லாத்தையும் வித்தாவது உசுர காப்பாத்தணும்னு நினைப்பாங்க டாக்டர்..’’
‘‘அதுக்காக எண்டலஸ்ஸா இப்படி வெச்சுக்கிட்டுருந்தா? பணம் இல்ல வேஸ்ட்..? உனக்கு பொண்ணு இருக்கில்லம்மா?’’
‘‘பத்தாவது போவுது’’
இந்திராவை மறந்துவிட்டேனே.. என் இனிய இந்திரா...
‘‘ம் பின்ன?’’
மவுனம்.
எல்லோரும் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறார்கள். நான் பிழைப்பேனா, மாட்டேனா என்பது எனக்கும் தெரியவில்லை.
‘‘எடுத்திடலாம்மா...’’ அரசு மெதுவாகச் சொன்னான். சொன்னானா, கேட்டானா?
விமலா அழுவது பிசிறாகக் கேட்டது.
‘‘அமாவாசை வரைக்கும் எடுக்க வேணாம் சார்..’’
‘‘அமாவாசை என்னைக்கு?’’
‘‘ரெண்டு நாள் இருக்கு சார்’’
‘‘உங்க இஷ்டம். மீன் டைம் வென்டிலேஷன் இல்லாம சர்வைவ் ஆகிறாரான்னு ட்ரை பண்ணி பாக்கறம்.. அப்புறம் உங்க லக்.’’
‘‘அதனால ஏதாவது ஆபத்து இருக்குமா?’’
‘‘நோ.. நோ.. கிராஜுவலாத்தான் செய்வோம்... டோன்ட் வொர்ரி’’
எல்லோரும் நகர்ந்தனர். மின்விசிறி சுழலும் சப்தம் கேட்டது. அது குளிரூட்டப்பட்ட அறையும்கூட. அவர்கள் சொல்லும் வென்டிலேஷன் என்ற கருவிதான் என்னைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. கருவிதான் சிந்திக்கிறது. கருவி இல்லையேல் உயிர் இல்லை; சிந்தனை இல்லை.
டாக்டர்கள் வருகிறார்கள். நர்ஸுகளுக்குக் கட்டளை இடுகிறார்கள். ரிப்போர்ட் எழுதி என் கட்டில் கம்பியில் அட்டையில் தொங்கவிட்டுவிட்டுப் போகிறார்கள்.
‘‘நாலு லிட்டர் கொடும்மா போதும்’’ என்கிறார்கள். பி.பி., நார்மல் என்றது கேட்டது. டிரக்கியா பண்ணிடலாம் என்கிறார்கள்.
அமாவாசை வந்துவிட்டதா என்று தெரியவில்லை. எல்லா நாளும் அமாவாசை மாதிரி இருந்தது.
யாரோ வருகிறார்கள். விமலா, விமலாவின் அம்மா, அரசு, அரசுவின் மனைவி... எல்லோர் குரலையும் அடையாளம் தெரிந்தது. என் காதருகே வந்து எழுந்திரு.. எழுந்திரு என்று அன்பாகச் சொல்கிறார்கள். நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.
‘‘நீங்க சொல்றது எதுவுமே அவருக்குக் கேட்காது..’’ டாக்டர் மட்டும் பிடிவாதமாக இருந்தார்.
‘‘இல்லை டாக்டர். நான் கூப்பிட்ட போது அவர் அவர் மூச்சை இழுத்து விட்டார்..’’ அரசுவின் மனைவி சொல்வது சரிதான். அவர் சரியாகக் கண்டுபிடித்துவிட்டார். என்னால் மூச்சு விட முடிந்தது. அதையே சைகையாகப் பயன்படுத்தத்தான் அப்படிச் செய்தேன். ‘‘எங்க இன்னொரு வாட்டி கூப்பிடுங்க நானும் பார்க்கிறேன்..’’
‘‘அண்ணா... ரமேஷ் அண்ணா... இங்க பாருங்க... நான் பேசறது கேக்குதா?’’
மூச்சை வேகமாக இழுத்து விடுவதற்கு சக்தி திரளவில்லை. வழக்கமாக விடும் மூச்சே நின்று போனது போல இருந்தது. பெரும் போராட்டத்துக்குப் பின் ஓரளவுக்கு இழுத்துவிட்டேன்.
‘‘பார்த்தீங்க இல்ல சார்?’’
‘‘ஓ.கே. உங்களுக்கு நார்மலா நடக்கிற எல்லாமே அதீதமா தெரியுது.. ஆன ஒரு விஷயம். இப்ப ஓரளவுக்கு முன்னேற்றம் இருக்கு... வென்டிலேஷன் ரிமூவ் பண்ணிட்டோம். ஆக்ஸிஜன் மட்டும் வெச்சிருக்கோம். அது ஒரு சப்போர்ட்டுக்குத்தான். அவரால சுவாசிக்க முடியுது. ஆனா இதனால எல்லாம் பொழைச்சுடுவார்னு சொல்ல முடியாது.’’
‘‘அப்படின்னா இன்னும் ரெண்டு நாள் இருக்கட்டும் சார்..’’
‘‘பத்து நாள் ஆகிடுச்சு.. இத்தனை நாளா மூளைக்கு ரத்தம் போகலைன்னா அந்த செல்லெல்லாம் என்ன கதி ஆகி இருக்கும்னு நினைச்சுப் பாருங்க. பெட் ஷோர் வேற. உடம்பே ஊதினாப்பல ஆகிடுச்சு’’
யாரோ கை அழுத்திப் பார்க்கிறார்கள். பெண்ணின் கை. விமலாவா? அரசுவின் மனைவியா?
டாக்டர் ‘‘உங்க இஷ்டம்’’ என்றார்.

எல்லோரும் போய்விட்டார்கள்.
இரவு கண்ணைத் திறந்தேன். அது அன்று இரவா அடுத்த வருட இரவா என்பது தெரியவில்லை. இரவு என்பது மட்டும் தெரிந்தது. ஏனென்றால் என்னைச் சுற்றி நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. அங்கு ஒரு நிலவும் இருந்தது.


விகடன் இதழில் வெளியான சிறுகதை

புதன், ஆகஸ்ட் 01, 2012

ஆஸ்திரேலிய பண்பலையில் வெட்டுப்புலி



ஜூலை 22‍ம் தேதி ஆஸ்திரேலிய பண்பலையில் வெட்டுப்புலி குறித்த கலந்துரையாடல் நிகழ்ந்தது. அதை எதேச்சையாக இன்று அறிந்தேன். யாரோ, எங்கோ தூரதேசத்தில் கலந்துரையாடியது பரவசமாக இருந்தது. இணைப்பு கீழே



பிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் இடம்பெற்ற தமிழ்மகன் எழுதிய வெட்டுப்புலி நாவல் பற்றிய கலந்துரையாடல். 

நிகழ்ச்சியில் பங்கெடுத்தோர்: 
பார்த்தீபன், சத்யா, முகுந்த், நிமல் 

நூல்: வெட்டுப்புலி 
ஆசிரியர்: தமிழ்மகன் 
வெளியீடு: உயிர்மை பதிப்பகம் 
இணையத்தில் நூலினை வாங்க: http://www.uyirmmai.com/Publications/BookDetails.aspx?bid=262 

 

இந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.

LinkWithin

Blog Widget by LinkWithin