வியாழன், நவம்பர் 13, 2014

இடுக்கண் களைதல்



தளபதி திரைப்படம் ரிலீஸ். 10 ரூபாய் டிக்கெட் 40 ரூபாய் வரைக்கும் ப்ளாக்கில் போனது. தியேட்டர் வாசலில் பேனர்களை மட்டும் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய அன்று இரவுதான் அண்ணாமலை காரில் வீட்டுக்கு வந்தான்.
அவன் வந்த காரில் மொத்தம் ஐந்து பெண்கள் இருந்தனர். கார் கண்ணாடிகளை ஊடுருவிக்கொண்டு அவர்களைப் பார்ப்பதற்குக் கூச்சமாக இருந்தது. அவர்கள் அனைவரும் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பதே என்னை சங்கடப்படுத்திக்கொண்டிருந்தது. அண்ணாமலை வந்த காரில்தான் கொத்தாக அத்தனைப் பெண்கள் இருந்தார்கள். அண்ணாமலையிடம் பேசிக்கொண்டே என்னையும் மீறி காரைப் பார்ப்பதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. காருக்கு ஒரு மெல்லிய விளக்கு எரிந்தது. அந்த வெளிச்சம் என் ஆர்வத்தை அதிகப்படுத்துவதாக இருந்தது.
டீக்கடையை மூடுகிற நேரம். ‘‘நாயர் ஏழு டீ’’ என்று ஒருவித கட்டளைத் தொனியோடு சொன்னேன். என்னைப் பார்க்க காரில் விருந்தினர் வந்திருக்கிற கர்வம் என்று அதைச் சொல்லமுடியாது. காரில் வந்திருக்கிறவர்கள் எதிரில் என்னை அசிங்கப்படுத்திவிடாதே என்ற அறிவுறுத்தல். நாயரும் பெருந்தன்மையாக டீ போடுவதற்கு முனைந்தார். அவர் கண்களில் காசை இப்போதே கொடுப்பாயா, இல்லை கடன் சொல்லிவிட்டுப் போவாயா? என்ற சந்தேக மின்னலை கவனிக்க முடிந்தது. அவருடைய சந்தேகம் வலுவடையும்முன் நான் வேறு பக்கமாகத் திரும்பிப் பேச ஆரம்பித்தேன்.
தெரு அடங்கும் இரவு. வீட்டு விளக்குகள் அணைக்கப்பட்டு தெருவிளக்கு வெளிச்சத்தில் பெருச்சாளிகள் பவனி வரும் நேரம். பதினோரு மணிக்கு மேல் இருக்கும். தூங்க ஆரம்பித்தபின்புதான் கதவைத் தட்டி எழுப்பினான் அண்ணாமலை. கல்லூரி முடிந்த பிறகு ஐந்தாறு வருஷங்களுக்குப் பிறகு திடுதிப்பென்று இப்படி வந்து நிற்கிறான். அர்த்த ராத்திரியில் வந்ததால், என்னவோ ஏதோ என்று பதறிப் போய் லுங்கியை இறுக்கி, சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியே வந்தேன். பயப்படும்படியாக ஒன்றும் இல்லை போல அவன் எனக்கு முன்னால் நடந்து தெருவைக் கடந்து ஓரம் கட்டி நிறுத்தப்பட்ட காரில் இருந்து சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டான். அவன் ஒரு வாடகைக் காரில் வந்திருப்பது தெரிந்தது. வாழ்க்கையில் என்னைக் காரில் தேடி வந்த முதல் நண்பன் இவனாகத்தான் இருக்கும். அது வாடகைக்காராக இருந்தாலும் நண்பன் வந்த கார் என்பதால் அதை அருகில் சென்று பார்த்தபோதுதான் கார் முழுக்கப் பெண்கள் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன்.
சற்றே விலகி டீக்கடை பக்கமாக வந்து, ‘‘வீட்டை எப்படியோ கண்டுபிடிச்சுட்டியே..?’’ என்றேன்.
‘‘குத்து மதிப்பாத்தான் வந்தேன்’’
‘‘யாருப்பா இந்தப் பொண்ணுங்கல்லாம்?’’ இதுதான் நான் முதலில் கேட்க நினைத்த கேள்வி.
அவன் சொன்ன சிறிய பதில் ஏகப்பட்ட விளக்கங்களைத் தருவதாக இருந்தது.
‘‘கேர்ள்ஸ்’’.
அந்த வார்த்தைக்கு அகராதியில் இல்லாத வெவ்வேறு அர்த்தங்களை உணரத் தொடங்குவதற்கு நான் கார் கண்ணாடிகளுக்குள் ஊடுருவிப் பார்க்க வேண்டியிருந்தது.
‘‘மலேசியாவுக்கு அனுப்பி வெக்கிறேம்பா.. ஒன்னொன்னும் அரை லட்சம்’’
படுவேகமாக நான் எல்லாவற்றையும் புரிந்துகொண்டேன். மூளை அத்தனை விழிப்படைந்து விட்டது. குற்றம், தவறு, கைது, புரோக்கர், அபாயம், ஆபத்து என்ற கோர்வையற்ற வார்த்தைகள் அலைமோதின. ஒவ்வொன்றும் வார்த்தைகளாக இல்லாமல் வாக்கியங்களாகவும் சம்பவங்களாகவும் தோன்றி மறைந்தன. என்னுடைய தூக்கம் சுத்தமாக விலகிவிட்டது.
‘‘அண்ணாமலை இதெல்லாம் என்னடா?’’
‘‘தப்பா எதுவும் செய்யல செல்வா.. பாவப்பட்ட பொண்ணுங்க.. ஏதோ கல் உடைக்கிற காட்டானைக் கட்டிக்கிட்டு மாரடிக்க இஷ்டமில்லாம அதுகளாவே வருதுங்க. எல்லாம் ஆந்(த்)ரா. ஒவ்வொரு குடும்பத்துக்கும் பத்தாயிரம் குடுத்து கூட்டியாந்திருக்கேன். அவங்களுக்கு எவ்ளோ சந்தோசம் தெரியுமா? தெய்வத்தப் பாக்குறா மாதிரிதான் என்னைப் பாக்கறாங்க..’’
மேற்கொண்டு விவரம் தெரிந்து கொள்கிற ஆர்வமா, விருந்தோம்பலா என்று தெரியவில்லை. அந்த நேரத்தில்தான் ‘‘நாயர் ஒரு ஏழு டீ’’ என்றேன்.
கல்லூரியில் உடன் படித்தவன். வசதியான வீட்டுப் பையன். ரைஸ் மில், எண்ணெய் மில் இருந்தது. பையனைப் பார்க்க ஹாஸ்டலுக்கு வரும் அண்ணாமலையின் அப்பாவைப் பார்க்கும்போது கல்லூரிக்கே முதலாளிபோல தோன்றும். திருவல்லிக்கேணி மெஸ்ஸில் மதிய சாப்பாட்டுக்காக அவனுக்கு மாதக் கூப்பன் வாங்கித் தந்துவிட்டுச் செல்வார் அவனுடைய அப்பா. முப்பது நாட்களுக்கு அறுபது டோக்கன் வாங்கித் தந்தாலும் அது பதினைந்தே நாட்களில் தீர்ந்துவிடும். நண்பர்களை அழைக்காமல் சாப்பிடப் போக மாட்டான். எத்தனை நாள் அவனுடன் சாப்பிட்டிருப்பேன்? இடையில் என்ன நடந்ததோ.. எதற்காக இப்படி ஒரு தொழிலோ?
சப்தத்தோடு தயாராகிக் கொண்டிருந்தது டீ. ‘‘பொண்ணுங்களுக்கு டூரிஸ்ட் விசா எல்லாம் ரெடி.. நம்ம வேலை ஏர்போர்ட்ல் போய் அனுப்பி வைக்க வேண்டியதுதான். ஏர்போர்ட்ல வெச்சே அஞ்சு லட்சம் கைக்கு வந்துடும்’’
‘இதெல்லாம் பாவச் செயல்’ என்று அறிவுரை சொல்லும் மனோ நிலைக்கு வந்தபோது அண்ணாமலை அதற்கு வாய்ப்பு தராமல் ஒரு உதவி கேட்டான்.
‘‘என்னோட பார்ட்னர் இப்ப ஹைதராபாத்ல இருக்கார்ப்பா. காலையிலதான் வர்றாரு. இப்ப என்னான்னா இவங்களை எல்லாம் பாதுகாப்பா ஒரு ஹோட்டல்ல தங்க வைக்கணும். உன் கிட்ட ஒரு பத்தாயிரம் இருக்குமா?’’
என்னிடம் யாரும் அத்தனைப் பெரிய தொகையைக் கடனாகக் கேட்டதில்லை. அந்தத் தொகை எனக்கு அச்சமூட்டுவதாக இருந்தது. நாயர் காதில் விழுந்தால் நிச்சயம் சிரிப்பார். ஏன்.. மொத்தமாக அவ்வளவு பணத்தை நான் கற்பனை செய்ததில்லை. விலாசம் மாறிவந்த விண்ணப்பத்தை எண்ணி, உண்மையில் நான் இப்படியான யோசனையில் இருந்தேன். மவுனமாக இருந்த இந்த நேரத்தை தயங்குவதாக அண்ணாமலை நினைத்திருக்கக்கூடும்.
‘‘நாளைக்கு இருபதாயிரமா திருப்பித் தந்திட்றேன்பா’’
இந்தப் பரிவர்த்தனையை மட்டும் நிறைவேற்ற முடிந்தால் என்னுடைய எல்லா பிரச்னைகளும் சரியாகிவிடும்.
இரண்டு குழந்தைகளுக்கும் இந்த மாதத்துக்கான ஸ்கூல் ஃபீஸ், இரண்டு மாத வாடகை பாக்கி, பால், மளிகைக்கடை, மார்வாடி கடையில் மூழ்கிக் கொண்டிருக்கும் கம்மல் எல்லாவற்றுக்கும் சேர்த்து இருபதாயிரம் இருந்தால் போதும். என்னிடம் சுத்தமாக காசு இல்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னால் வேலை போய்விட்டது.
முட்டாள்தனமாக அதை இப்படி வெளிப்படுத்தினேன். ‘‘என்னிடம் அவ்வளவு இருக்காதே?’’
‘‘எவ்வளவு இருக்கிறதோ அவ்ளோ குடு, போதும்’’
‘‘சாரே.. டீ’’
ஆளுக்கு இரண்டிரண்டு டீ கப்புகளை எடுத்துக் கொண்டு காரை நோக்கி நடந்தோம். மாருதி ஆம்னி. நாங்கள் காரை நெருங்கியதும் கதவு விலகி, எதிர் எதிராக போட்டிருந்த இருக்கைகளின் இருபுறமும் பெண்கள் அமர்ந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. நான் எதற்காகவோ அவர்களைத் தவறான கண்களால் பார்க்கவில்லை என்பதை வெளிப்படுத்தப் போராடினேன். கதவு ஓரத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண் எங்கள் கையில் இருந்த டம்ளர்களை வாங்கி மற்ற பெண்களுக்குக் கொடுத்தாள். இரண்டு பெண்கள் சுடிதார் அணிந்திருந்தார்கள். வயது பதினேழு, பதினெட்டுக்குள் இருக்கலாம். இன்னும் மூன்று பெண்கள் சேலை கட்டியிருந்தார்கள். அவர்கள் இருபதைக் கடந்தவர்களாகத் தென்பட்டார்கள். மலிவான சரிகை வைத்த வெங்காயச் சருகுச் சேலை. சிவப்புச் சேலையில் இருந்தவள் அநியாயத்துக்கு அழகாக இருந்தாள். சேலை வழியாக ஜாக்கெட் தெரிந்தது. மறுபடி டீக்கடைக்குப் போய் இன்னும் இருந்த மூன்று டீயை நான் இரண்டும் அண்ணாமலை ஒன்றுமாக எடுத்து வந்தோம்.
கார் ஓட்டுநர் ஒன்றும் இன்னும் ஒரு பெண்ணும் ஆளுக்கொரு கோப்பையை எடுத்துக் கொள்ள, ‘அட எட்டு டீ சொல்லியிருக்க வேண்டும்’... ‘‘நான் இப்பத்தான் சாப்பிட்டேன்’’ என்றேன் அவசரமாக. அண்ணாமலை டீயை உறிஞ்சினான். காரைவிட்டு விலகி வந்து, ‘‘கையில எவ்வளோ இருக்கோ குடு’’ என்றான்.
வீட்டில் ஒரே ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு இருந்தது. காலில் விழாத குறையாகக் கொஞ்சிக் கூத்தாடி ஆறுமுகத்திடம் கைமாற்றாக வாங்கிவந்தது. நாளை முதலில் கழுத்தை நெறிக்கும் ஒரு செலவுக்கு அதை உடைக்கலாம் என்று திட்டமிட்டிருந்தேன். தளபதி அலுவலகத்தில் நாளை வேலைக்கு வரச்சொல்லி இருந்தார்கள். அடுத்தடுத்த மாதத்தில் நிலைமையைச் சரியாக்கிவிடலாம்.
‘‘குழந்தைக்கு ஃபீஸ் கட்றதுக்காக ஒரு ஐநூறு ரூபாய் வெச்சிருக்கேன்’’
அண்ணாமலை விடவில்லை. ‘‘நாளைக்கு பதினோரு மணிக்கெல்லாம் பணம் கைக்கு வந்துடும். இதுகளை ஃப்ளைட் ஏத்தியாச்சுன்னா பிரச்னை முடிஞ்சிடும். ஐநூறு குடு.. ஆயிரமா வாங்கிக்க.. ரெண்டாயிரமாகூட வாங்கிக்க. ஏதாவது கல்யாண மண்டபம் மாதிரி ஒரு இடம் கிடைச்சா நைட் பொழுதைத் தள்ளிடலாம்.. அதுக்காகத்தான்.. பெரிய சங்கடமா போச்சு.. என்ன சொல்றது செல்வா.. வீட்டுல அப்படி ஒரு ப்ராப்ளம்.. நிதானமா நாளைக்கு வந்து சொல்றேன்.. உன் வீட்ல தங்கறதுக்கு இடம் இருக்குமா?’’
அதைப் பற்றி யோசிக்காமாலேயே மறுப்பு தெரிவித்து அசைந்தது தலை. வற்புறுத்துவானோ என்ற அழுத்தத்தை வெளிக்காட்டாமல் பதறினேன்.
‘‘சரி அந்த ஐநூறு ரூபாயைக் குடு’’
‘‘ஃபீஸு..’’
‘‘நான் அஞ்சு பொண்ணுகள வெச்சுக்கிட்டு அல்லாடிக்கிட்டு இருக்கேன்.. இந்த வண்டிக்காரனுக்கு எவ்ளோ தரணும்னு தெரியல. இப்படி சொன்னா எப்படிப்பா?..’’
‘‘வேற யாரையும் தெரியாதா?’’
‘‘இந்த ராத்திரியில இன்னும் எங்க போய் தேடச் சொல்றே? சாயங்காலம் ஆறுமணிக்கு சென்ட்ரல்ல ரயிலவிட்டு இறங்குச்சிங்க. இன்னும் பச்சைத் தண்ணிகூட கண்ணுல காட்டல... இதோ நீ இப்பத்தான் வாங்கிக்குடுத்திருக்க.. வேற எவனுக்காவது தெரிஞ்சா அசிங்கமா நினைப்பானுங்க. எங்கயாவது வாங்கிக்குடு.. ராத்திரில பொண்ணுகள வெச்சுக்குட்டு சுத்திக்கிட்டு இருக்கறது டேன்ஞ்சர்பா. ரெண்டு மடங்கா தர்றேன்னு சொல்லு’’
அதற்கு மேல் தாமதிக்காமல் நாயரிடம் காலையில் தருவதாகச் சொல்லிவிட்டு அவனுடைய முகபாவனையையோ, பதிலையோ எதிர்பாராமல் வீட்டுக்கு ஓடினேன். தட்டுத்தடுமாறி விளக்கைப் போட்டபோது அருணா கண்ணைத் திறக்க முயற்சிசெய்து உடனே மூடிக்கொண்டாள்.
‘‘எதுக்கு ராத்திரில லைட்டைப் போட்டுக்கிட்டு நிக்கிறீங்க?’’ டி.வி., கட்டில், பீரோ எல்லாம் அடங்கிய ஓர் அறை வீடு அது. 170 ரூபாய் வாடகை.
‘‘அந்த ஐநூறு ரூபாயைத் தர்ரீயா.. காலைல ஆயிரம் ரூபாயா திருப்பித் தந்துடுவாரு.’’
‘‘யாரு?’’ கண்ணைத் திறந்தாள். அதில் சடுதியில் அவநம்பிக்கையும் எரிச்சலும் வெளிப்பட்டது.
‘‘என் கூட படிச்சவரு. அஞ்சாறு வருஷம் கழிச்சு தேடி வந்திருக்காரு.. ஒரு அவசரம். காலைல திருப்பித் தந்துடுவாரு.’’
அருணா தலைமுடியைச் சுழற்றிக் கொண்டை போட்டபடி, ‘‘யாருங்க அது? ஆகாஷுக்காவது பீஸைக் கட்டிடலாம்னு பாத்தா.. இரண்டு பசங்களும் பத்து நாளா ஸ்கூல் போகல. ஞாபகம் வெச்சுக்கங்க’’ என்றாள்.
அருணாவுக்கு வெளியில் ஐந்து பெண்களோடு அவன் காத்திருப்பதைத் தவிர வேறு என்னென்னவோ சொல்லிப் பார்த்துவிட்டேன். அவள் மனது கரைவதாகத் தெரியவில்லை. பணத்தை வாங்கிச் சென்று, நம்பிக் கழுத்தறுத்தவர்களை மட்டும்தான் அவளுக்குத் தெரியும்.
கடைசியாக ‘நம்மிடம் இருக்கும் ஐநூறு ரூபாயையும் கொடுத்துவிட்டு நாளைக்கு நடுத்தெருவில் நிற்க முடியாது’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள். யாரிடமாவது காசைக் கொடுத்துவிட்டால் அதைத் திருப்பி வாங்குவதற்கு உங்களுக்குத் தெரியாது என்பது அவளுடைய தீர்மானம்.
தலையைத் தொங்கப் போட்டபடி வெளியே வந்தேன். எவ்வளவு மோசமான காரியமாக இருந்தாலும் கஷ்டமான நேரத்தில் உதவ முடியாமல் போய்விட்டதே என்ற குற்ற உணர்வு பாடாய்ப்படுத்தியது. வெளியே தெரு வெறிச்சோடி கிடந்தது. டீக்கடை மூடப்பட்டுவிட்டது. கார் இருந்த இடத்தில் ஒரு நாய் மட்டும் சுருண்டு படுத்திருந்தது. பெண்களுக்கான மணம் மட்டுமே அங்கே மிச்சம் இருந்தது.
தெருவின் இரு முனைகளையும் தீர பார்த்தேன். கார் எதுவும் நிற்கவில்லை. கோபித்துக்கொண்டு போய்விட்டானா, வேறு எங்காவது காத்திருக்கிறானா, கார் டிரைவருக்கு விஷயம் தெரிந்துபோய் இறங்கச் சொல்லிவிட்டானா... ஹைதரபாத் பார்ட்னர் வேறு இடத்தில் பணத்துக்கு ஏற்பாடு செய்து தந்தானா.. பணம் தரமுடியாததற்கு, அவனாகப் போய்விட்டதில் ஒரு திருப்திதான். வீட்டுக்கு வந்து படுத்துவிட்டேன். வெகுநேரத்துக்குத் தூக்கமே வரவில்லை.
காலையில் பையனுக்கு மட்டும் பீஸ் கட்டி பிரின்ஸிபாலைப் பார்த்து இனிமேல் இப்படி ஆகாது என்று உறுதி சொல்ல வேண்டியிருந்தது. இதுவரைக்கும் ஏழெட்டு முறை மன்னிப்பு கேட்டாகிவிட்டது. மீதி எழுபத்தைந்து ரூபாயில் அரிசியும் பருப்பு, எண்ணெய், கடுகு, தக்காளி, வெங்காயம் என முப்பதே ரூபாயில் மளிகை சாமான் வாங்கிக் கொடுத்துவிட்டு வந்தேன். ‘தளபதி’ ஆபீஸுக்குப் போனேன்.
வேலைபார்த்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் தானாகவே ஈடுபாடு கொப்பளித்தது. மூன்று மணிக்குத்தான் சாப்பாட்டு ஞாபகமே வந்தது.
சாப்பிட எதிரில் தள்ளு வண்டி கடையைக் காட்டினார்கள். அதுவரைக்கும் ஓய்வே இல்லை.
வேலையில் சேர்ந்த அன்றைக்கே நிலைமையைச் சொல்லி ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கேட்டிருந்தேன். அது கிடைக்குமா எனத் தெரிந்துகொண்டு சாப்பிடப் போகலாம் என்று காத்திருந்ததில் இவ்வளவு நேரம் ஆகிவிட்டது. சாப்பிட்டுவிட்டு மரத்தடியில் உட்கார்ந்து சிகரெட் பற்ற வைத்தேன். பேப்பர் வெயிட்டாக ஒரு செங்கல் வைக்கப்பட்ட மாலை பேப்பர் ஒன்று கிடந்தது. இரண்டாம் பக்கத்தைப் புரட்டியபோது, நான் எதிர்பார்த்த ஒன்று நிகழ்ந்திருந்தது. அண்ணாமலையும் அந்த ஐந்து பெண்களும் வரிசையாக நிற்கும் போட்டோ. இரவு திடீரென்று காணாமல் போனதுமே நினைத்தேன். அப்படியெல்லாம் விபரீதமாக நினைக்கக் கூடாது என்பதால், ‘கோபித்துக்கொண்டு போய்விட்டானா, வேறு எங்காவது காத்திருக்கிறானா, கார் டிரைவருக்கு விஷயம் தெரிந்துபோய் இறங்கச் சொல்லிவிட்டானா... ஹைதரபாத் பார்ட்னர் வேறு இடத்தில் பணத்துக்கு ஏற்பாடு செய்து தந்தானா..’ என்பதோடு நிறுத்திக்கொண்டேன்.
கொஞ்சம் இருந்திருந்தால் நானும் அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றிருப்பேன். நல்லவேளை. ஒருவேளை தகுந்த நேரத்தில் உதவ முடிந்திருந்தால் நண்பனைக் காப்பாற்றியிருக்கலாம் என்று மிக மெல்லிய உணர்வு ஒன்று எழுந்தது. சிறைக்குச் சென்று பார்ப்பதோ, அவனைச் சிறையில் இருந்து மீட்பதோ பற்றிய எண்ணங்கள் எனக்கு எழவில்லை. அவன் எனக்குத் தெரிந்தவன் என்பது வெளியில் தெரிவதே எனக்கு ஆபத்தாக முடியும்.
அட்வான்ஸ் தொகையைக் கொடுத்தார்கள். நண்பன் உத்தரவாதம் கொடுத்திருந்தான். ஒரு நண்பன் உதவிய நாளில் இன்னொரு நண்பனுக்கு உதவ முடியாமல் போய்விட்டது வருத்தமாகத்தான் இருந்தது. இரவு அவன் வந்திருந்த அந்த ஐந்து நிமிடத்தில் நான் உள்வாங்கிக் கொண்டது குறைவுதான். எதற்காக இப்படியானான்? அவனுடைய வீட்டோடு அவனுக்கு இப்போது தொடர்பு இருக்கிறதா? கல்யாணமானதா? அவனை வெளியேகொண்டு வருவதற்கு உதவலாமா? உதவப் போய் தொல்லை வந்து சேர்ந்துவிடுமா? அவன் செய்தது சட்டப்படிச் சரியா? சட்டம் என்பது சரியா?
பேருந்தில் திரும்பும்போது கேள்விகளின் அலைமோதலாக இருந்தது மனது.
இறுதிச் சமாதானத்தில் எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் நான் வீட்டுக்குப் போனேன்.
ஆயிரம் ரூபாயை விதம்விதமாகப் பிரித்தாள் அருணா. பெண்ணுக்கு ஃபீஸ். வீட்டு வாடகை பாக்கிக்குக் கொஞ்சம். மளிகைக்கடை பாக்கி, அப்புறம் இந்த மாதச் செலவுக்கு. மறக்காமல் எனக்கு வேலை கிடைத்துவிட்டதைப் பரவலாக அக்கம் பக்கத்தில் சொல்லிவிடுவாள். அது ஒருவிதத்தில் நல்லது. அப்போதுதான் நம்பிக்கையாகப் பேசுவார்கள்.
‘‘உங்க ஃப்ரெண்ட் இன்னிக்கி வந்திருந்தார்னா ஹெல்ப் பண்ணியிருக்கலாம்’’ என்றாள். நேற்று இரவு கண்டிப்புடன் பேசியவளுக்கு, கையில் ஆயிரம் ரூபாய் இருக்கும் நேரத்தில் சற்றே ஈகை சுரந்திருக்க வேண்டும். நான் ஒன்றும் சொல்லாமல் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தேன்.
‘‘அப்புறம் என்ன சொல்லி அனுப்பிச்சீங்க?’’ மீண்டும் கேட்டாள். பொய் சொல்வதா, உண்மை சொல்வதா என்று முடிவெடுக்க முடியாமல் வேறு சேனலுக்கு மாறினேன். தகுந்த நேரத்தில் நண்பனுக்கு உதவிசெய்யாமல் இப்போது கேட்கிறாயே என்ற கோபத்தில் இருப்பதாக அவள் நினைத்திருப்பாள். திரும்பிப் படுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கும் முயற்சியில் இறங்கினாள்.
சாரி செல்வா,
இந்தக் கடிதம் உன் கையில் கிடைக்குமா என்று தெரியவில்லை. உன் முகவரியை ஞாபகத்தில் இருக்கும் உன் முகவரியை எழுதியிருக்கிறேன். திடீர் என்று போலீஸ் வந்துவிட்டது. அந்த நேரத்தில் நீ வந்துவிடுவாயோ என்று பயந்தேன். நல்லவேளை.
&அண்ணாமலை
இரண்டு நாள் கழித்து வீட்டுக்கு வந்த ஓர் அஞ்சல் அட்டையில் அவன் இவ்வளவுதான் எழுதியிருந்தான்.
‘வீட்ல ஒரு ப்ராப்ளம்’ என்றானே என்னவாக இருக்கும்? என்ற யோசனையும் ஸ்ரீபெரும்புதூரில் அந்தக் கொடூரச் சம்பவத்துக்குப் பிறகு மறந்தே போய்விட்டது.
இன்று மன்மோகன் சிங்கையும் ப.சிதம்பரத்தையும் கிண்டல் செய்து ஒரு கார்ட்டூன் வெளியாகியிருந்தது. ரூபாய் மதிப்பு மிகவும் சரிந்துவிட்ட இந்த நாளில் அந்தச் சம்பவத்தை மீண்டும் நினைவுபடுத்திப் பார்த்தபோது பொருளாதார வியப்பு அதிகமாகத்தான் இருந்தது. என்ன ஆனான் அண்ணாமலை என்று இப்போது ஒரு தரம் நினைத்துப் பார்த்தேன்.






LinkWithin

Blog Widget by LinkWithin