செவ்வாய், ஜூலை 21, 2009

26 குரங்குகள், அதனுடன் ஒரு படுகுழி




அமெரிக்கா எழுத்தாளர் கிஜ் ஜான்ஸன்

தமிழில்: தமிழ்மகன்


கிஜ் ஜான்ஸன்
ஃபேன்டஸி பிக்ஸனுக்கான இந்த ஆண்டின் நெபுலா விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர் கிஜ் ஜான்ஸன். 1960- ல் ஐயோவா மாகாணத்தில் பிறந்தவர். "கல்சுரல் ஹிஸ்ட்ரி ஆஃப் இங்கிலாந்து' என்ற துறையில் தம் டிகிரியை முடித்தவர். விஞ்ஞானக் கதைகளுக்கான விருதுகள், ஃபேன்டஸி கதைகளுக்கான விருதுகள் பல பெற்றவர். மலையேற்றம், குழந்தைகள் புத்தக வெளியீடு என பலவித விருப்பங்கள் இவருக்கு உண்டு.
வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் ஏற்படும் இடையறாத கேள்வியை மனிதமனம் எப்படி தர்க்கரீதியாக கேட்டுக் கொண்டே இருக்கிறது என்பதுதான் "26 குரங்குகள் அதனுடன் ஒரு படுகுழி' என்ற கதைக்கான மையம். அந்தக் கேள்வி ஒரு சாராரிடமிருந்து இன்னொருத்தரின் தலைக்கு எப்படி இறக்கிவைக்கப்படுகிறது என்பதும் வாழ்க்கையில் அதீதமானது என எதுவுமே இல்லை என்பதும் கீழை தத்துவ சிந்தனையை நினைவுபடுத்துகிறது.



1
எய்மி செய்யும் மிகப் பெரிய சாகஸம் 26 குரங்குகளை மேடையில் காணாமல் போகச் செய்வதுதான்.

2
பார்வையாளர்களின் முன்னிலையில் ஒரு "பாத் டப்'பை நகர்த்தி வைத்து யாரேனும் ஒருத்தர் மேடைக்கு வந்து அதை பார்வையிடுமாறு அவள் கேட்டுக் கொண்டாள். சிலர் ஏறி வந்து பாத் டப்பின் அடிப்புறத்தைப் புறத்தை நோக்கினர். அடிப்புறத்தின் எனாமல் பூசிய பகுதியைத் தொட்டும் கைகளால் உள்புறத்தை துழாவியும் பார்த்தனர். இது முடிந்ததும் மேடையின் மேலே இருந்து நான்கு சங்கலிகள் கீழே இறங்கியது. டப்பின் உதட்டுப் பகுதிகளில் இருக்கும் துளைகளில் சங்கலிகள் பூட்டியானதும் எய்மி தரும் ஜாடைக்குப் பின் பத்தடி உயரத்துக்கு பாத் டப் மேலே அந்தரத்தில் இழுத்துக் கட்டப்படும்.

அதன் மீது ஏணி ஒன்றைச் சாய்த்து வைப்பாள். அவள் கை தட்டியதும் 26 குரங்குகளும் மேடைக்கு ஓடிவரும். ஒவ்வொன்றாக ஏணியில் ஏறி பாத் டப்புக்குள் தாவி குதிக்கும். குரங்குகளின் குதிப்புக்கு ஏற்ப பாத் டப்பின் ஊசலாட்டம் இருக்கும். பார்வையாளர்களால் குரங்குகளின் தலை, கால், வால் போன்றவற்றைப் பார்க்க முடியும். ஆனால் ஒவ்வொரு முறை குரங்கு தாவி குதித்தும் அது ஆடி அடங்குவதையும் காணலாம். எப்போதும் கடைசியாக ஏணியில் ஏறும் குரங்கு ஜெப். அது மார்பில் அறைந்தபடி ஏற்படுத்தும் கூக்குரல் அரங்கத்தை நிறைக்கும்.

பிறகு அரங்கத்தில் பரவும் விளக்கு வெளிச்சத்தில் பாத் டப்பின் இரண்டு சங்கலிகள் மட்டும் கீழே இறக்கப்படும். பாத் டப் அதன் உட்புறத்தைக் காட்டியபடி சரிந்துத் தொங்கும்.

காலி.

3

அவர்கள் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு தங்கள் டூர் பஸ்ஸýக்குத் திரும்புவார்கள். அதில் சிறிய கதவு .. சில மணி நேரங்களுக்கு முன் காலையில் குரங்குகள் அதில் நுழைந்து தனியாகவோ கூட்டமாகவோ குழாயில் தண்ணீர் பிடித்தன. அப்போது ஒரே நேரத்தில் தண்ணீருக்கு போட்டிபோடும்போது தண்ணி அடித்துவிட்டு அறைக்குத் திரும்பிய கல்லூரி மாணவர்களின் கூச்சல் போல இருக்கும். சில ஷோபாவில் தூங்கி வழிந்து கொண்டிருக்கும், ஏதாவது ஒன்றாவது மெத்தையில் படுத்திருக்கும், பல குரங்குகள் இலக்கு ஏதுமின்றி தங்கள் கம்பி கூண்டுக்குத் திரும்பி வந்திருக்கும். அவற்றின் போர்வைகளையோ மென் பொம்மைகளையோ மாற்றியமைக்கும் வேளைகளில் உறுமிக் கொண்டிருப்பவை அதன் பின் நிம்மதி பெருமூச்சுடன் குறட்டைவிட ஆரம்பிக்கும். அவை எல்லாம் உள்ளே சென்று அடங்கும் வரை எய்மியால் உண்மையில் உறங்க முடிவதில்லை.

பாத் டப்புக்குள் அவற்றுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி எய்மமிக்கு எந்த யோசனையும் இல்லை, அல்லது அவை எங்கே செல்கின்றன என்றோ, மீண்டும் அவை திரும்பி வரும் அந்த சிறிய கதவு திறக்கப்படும் முன்புவரை என்ன நடக்கிறது என்றோ. அது அவளை மிகவும் தொல்லைபடுத்திக் கொண்டிருந்தது.

4

எய்மி இந்த நிகழ்ச்சிகளை மூன்றாவது ஆண்டாக நிகழ்த்துவதற்கான அனுமதி பெற்றிருந்தாள். சால்ட் லேக் ஏர்போர்ட்டில் இருந்து விமானங்கள் பறக்கும் பாதையின் கீழே அமைந்திருந்த மாதவாடகை அடுக்குமாடிக் குடியிருப்பில் அவள் இருந்தாள். ஏதோ ஒன்றால் மென்று தமக்குள் ஏற்பட்ட குழி இப்போது கிருமிகளால் பாதிக்கப்பட்டிருப்பதுபோல ஒரு வெறுமையை உணர்ந்தாள்.

உட்டா மாகாண கண்காட்சியில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போதுதான் அவளுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத இந்த நிகழ்ச்சியை வாங்கி நடத்த வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. ஏதற்காக அப்படியொரு யோசனை தோன்றியது அவளுக்குத் தெரியாது, நேராக அந்த முதலாளியிடம் சென்று ""நான் இதை வாங்கிக் கொள்ள விரும்புகிறேன்'' என்றாள்.

அவரும் உடனே சம்மதித்தார். இந் நிகழ்ச்சியை அவர் ஒரு டாலருக்கு விற்றார். இதே விலை கொடுத்துதான் நான்காண்டுகளுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியை தாம் வாங்கியதாகவும் தெரிவித்தார்.

ஒப்பந்தம் எல்லாம் கையெழுத்தாகி முடிந்த பின் ""எப்படி முடிந்தது?இவற்றைப் பிரிவதால் உங்களுக்கு எந்த வருத்தமும் இல்லையா?'' என்று கேட்டாள்.

"பாருங்கள், இது தனிப்பட்ட விவகாரம்தான். அவை என்னைப் பிரிந்து ஏங்கும். நான் அவற்றைப் பிரிந்து ஏங்குவேன். ஆனால் இதுதான் தருணம், அவற்றுக்கும் இது தெரியும்'' என்றார் அவர்.

தன் புது மனைவியுடன் சேர்ந்து சிரித்தார். அவருடைய இளம் மனைவியின் ஒரு கையில் ஒரு வெர்வெட் குரங்கு தொங்கிக் கொண்டிருந்தது. "நாங்கள் ஒரு தோட்டத்தை வாங்கத் தயாராகிவிட்டோம்'' என்றாள்.

அவர் சொன்னது சரிதான். குரங்குகள் அவரைப் பிரிந்து ஏங்கிப் போய்விட்டன. ஆனால் இவளை வரவேற்கவும் செய்தன. ஒவ்வொரு குரங்கும் இவளிடம் நாகரீகமாக கைகொடுத்து இப்போது அவள் வைத்திருக்கும் பஸ்ஸýக்குள் ஏறிக் கொண்டன.

5

எய்மியிடம் 19 ஆண்டு டூர் பஸ் ஒன்று குரங்குகளுக்கான கூண்டுகளோடு இருந்தது. அதில் பச்சைக்கிளிக்கானது போன்ற அளவில் இருந்து (இது வெர்வெட்டுக்கானது) மக்காக் வகை குரங்குக்கான படுக்கையோடு கூடிய கூண்டுவரை இருந்தன. குரங்குகள் பற்றி புத்தகங்கள் அடங்கிய அலமாரி.. பபூன் குரங்குகளின் பரிணாமமும் சுற்றுச் சூழலும், நிகழ்ச்சி நடத்துவதற்கான சமம்பிரதாயமான பொருள்கள், ஒரு தையல் மிஷின், கோல்ஃ விளையாட்டுக்கான சமாசாரங்கள், சில ஆண்டுகளுக்கு முன் அச்சடித்த "24 குரங்குகள்! படுகுழியை நோக்கி' என்ற போஸ்டர்கள் ஒரு கற்றை , பழுதான ஒரு பச்சைநிற சோபா, மற்றும் குரங்குகளுக்கு உதவ ஒரு பாய் ஃப்ரண்ட்.

இவற்றை எதையாவது ஒன்றையேனும் எதற்காகச் சுமக்கிறோம் என்பதை அவளால் சொல்ல முடியாது. அது அவளுடைய பாய் ஃப்ரண்டாக இருந்தாலும். அவன் பெயர் கியோஃப். அவனை அவள் ஏழு மாதங்களுக்கு முன் பில்லிங்க்ஸில் சந்தித்தாள். எய்மிக்கு எங்கிருந்து எவ்வளவு கிடைக்கும் என்பதில் எந்த யோசனையும் இல்லை. எதிலும் தொடர்ச்சியான அர்த்தம் இருப்பதாகவும் தோன்றவில்லை. இருந்தாலும் அவள் நம்பிக்கை வைப்பதை நிறுத்த முடியாமல் இருந்தாள்.

அந்த பஸ் குரங்குகளால் நிரம்பியிருப்பதால் எப்போதும் குரங்குகளால் ஆன வாசனையாக இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். நிகழ்ச்சி முடிந்ததும் பாத்டப் சாகஸத்துக்குப் பின் ஆனால் குரங்குகள் வந்து சேரும் முன்னர் சின்னாமான் வாசனை இதில் முகிழ்க்கும். அந்த டீயைத்தான் எய்மி சமயங்களில் குடிப்பாள்.

6

செயல்பாடுகள் என்று எடுத்துக் கொண்டால், குரங்குகளால் சாகஸம் செய்ய முடிகிறது, உடை உடுத்திக் கொண்டு ஹிட் படங்களில்- இதில் மாட்ரிக்ஸ் திரைப்படம் பிரபலம்- தோன்றச் செய்யலாம். எப்படி வேண்டுமானாலும் உடை உடுத்தி நடிக்க வைக்கலாம். மனிதக் குரங்குகள், சிங்கவால் குரங்குகள், கோலாபஸ்கள் போன்றவை பழக்குவதற்கு எளிமையானவை. வயதான பேங்கோவை சிவப்பு ஜாக்கெட் அணிவித்து கையில் ஒரு சவுக்கும் கொடுத்து சிம்மாசனத்தில் உட்கார வைக்கலாம். சிம்பான்சியை (அதன் பெயர் மிமி, அது குரங்குவகை இல்லை) கை சாதுர்யங்கள் நிறைந்த விளையாட்டுகளுக்குப் பயன்படுத்தலாம். அவள் அத்தனை சிறப்பாகச் செய்யக் கூடியவள் இல்லையென்றாலும் காதில் பூ சுற்றுவதில் திறமையானவள்.
குரங்குகளால் மர நாற்காலிகள் மற்றும் கயிறுகளைக் கொண்டு பாலம் அமைக்கவும் தங்கள் பெயர்களை பலகையில் எழுதிக் காட்டவும் முடியும்.

குரங்கு நிகழ்ச்சி இந்த ஆண்டில் 127 காட்சிகளை நிகழ்த்தி மைய மேற்கத்திய நாடுகள் முதல் சமவெளி பிராந்தியங்கள் வரை மிகவும் பிரபலமடைந்துவிட்டது. எய்மியால் இன்னும்கூட அதிகமாக நிகழ்ச்சிகள் நடத்த முடியும், இருப்பினும் கிருஸ்துமஸ்ûஸ முன்னிட்டு இரண்டு மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டாள்.

7

இது பாத் டப் நிகழ்ச்சி:

எய்மி பளபளவென மின்னும் கத்திரிப் பூ நிறத்தில் சிக்கென உடையணிந்து மாயாஜாலம் செய்வாள். ஆழ் நில நிறத்தில் ஒளிரும் மேடையில் நட்சத்திரம் மின்ன தோன்றுவாள். குரங்குகள் அவளுக்கு முன் வரிசையாக நிற்கும். அவள் சொல்வதற்கேற்ப அவை ஆடைகளைக் கழற்றி மடித்து வைக்கும். ஜெப் குரங்கு ஒரு மூலையில் நாற்காலியில் அமர்ந்தபடி நிழலான தோற்றத்தில் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்.

அவள் கைகளை உயர்த்துவாள்.

"இந்தக் குரங்குகள் உங்களை சிரிக்க வைக்கும் பிரமிக்க வைக்கும். உங்களுக்காக ஆச்சர்யங்களையும் ஜாலங்களையும் நிகழ்த்தும். இதன் கடைசி அங்கம் வித்தியாசமானது பிரம்மாண்டமானது''

அவள் கைகளை சட்டென விரித்ததும் திரைவிலகி பாத் டப் மேடையில் தெரியும். அவள் அந்த பாத் டப்பின் வளைந்த விளிம்புகளில் கையால் தடவியபடிசுற்றிவருவாள்.

"சிறிய விஷயம்தான், இது பாத் டப். எந்த வகையிலும் சாதாரணமானதுதான். காலைச் சிற்றுண்டிபோல எளிமையானது. சில நிமிடங்களில் உங்களில் ஒருவரை மேடைக்கு அழைத்து இதை உங்களுக்கு உறுதிப்படுத்துவேன்''

"ஆனால் இதில் குரங்குகளும் மேஜிக் வஸ்துகளாக இருக்கும். இதில் இறங்கு பயணிக்கும். எங்கே செல்கின்றன என்று யாருக்கும் தெரியாது. எனக்கும்தான்'' சற்றே தாமதித்து ""குரங்குகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் இது. அவை இதை யாரிடமும் பகிர்ந்து கொள்வதுமில்லை''

பிறகு பாத் டப் சோதனை முடிந்து பார்வையாளரிடம் "தங்கள் ரகசிய பயணத்தை முடித்துக் கொண்டு அவை திரும்புவதற்கு சில மணி நேரங்கள் ஆகும்'' பார்வையாளர்களிடம் இருந்து கைதட்டலைக் கேட்பாள். குரங்குகளை வரிசையாக அனுப்பி வைப்பாள்.

8

எய்மியின் குரங்குகள்:

2 சியாமாங்குகள், இவை ஜோடிகள்.

2 அணில்வால் குரங்குகள். இவை மிகவும் சுறுப்பானனவை.

2 வெர்வெட்டுகள்.

ஒரு குயினான், இது கர்ப்பமாக இருக்கிறது என உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் இது எப்படி நிகழ்ந்ததென்று எய்மிக்கு புரியவில்லை.

3 ரிஸஸ் குரங்குகள். அவை மோசடி வித்தைகளில் ஓரளவுக்குத் தேர்ந்தவை.

ஒரு வயதான காபிச்சின் பெண் குரங்கு, பெயர் பேங்கோ.

ஒரு மக்காக், 3 பனிக்குரங்குகள் (ஒன்று குட்டி), ஒரு ஜாவா மக்காக். இவை சிறிய குழுவாக இருக்கும், ஒன்றாக உறங்கும்.

ஒரு சிம்பன்சி, சொல்லப்போனால் இது குரங்கு அல்ல.


ஒரு கிப்பன்

2 மார்மோசெட்டுகள்

ஒரு கோல்டன் டாமமரைன், ஒரு காட்டன் டாப் டாமரைன்

ஒரு நீள மூக்கு குரங்கு

சிவப்பு மற்றும் கருப்பு கோலாபஸ்கள்

ஜெப்

9

ஜெப் ஒரு "பராஜ்ஜா குவானான்' வகையாக இருக்கும் என்று எய்மி நினைத்தாள். அது மிகவும் வயதாகிப் போய் கிட்டத்தட்ட மமுடியெல்லாம் இழந்து இருந்தது. அதைப் பற்றி அவளுக்கு கவலையாக இருப்பினும் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி வந்தாள். பாத் டப்பில் கடைசியாக இறங்குவது இதுதான். மற்ற நேரங்களில் ஆரஞ்சும் சில்வருமான நிறம் பூசப்பட்ட நாற்காலியில் அமர்நந்து பார்த்துக் கொண்டிருக்கும். வயதான நிகழ்ச்சித் தயாரிப்பாளரின் தோரணையில் பார்வையிட்டுக் கொண்டிருக்கும். சில நேரங்களில் எய்மி அதன் கையில் ஒரு கோலைக் கொடுத்து வைப்பாள். அணில்வால் குரங்குகள் அந்தக் கோலைத் தாண்டிக் குதிக்கும்.

10

குரங்குகள் எங்கே செல்கின்றன என்பதோ எங்கே மறைகின்றன என்பதோ யாருக்கும் தெரியாது. சில சமயங்களில் அவை வெளிநாட்டு நாணயங்களுடனோ துரியன் பயத்துடனோ அல்லது கூரான மோராகான் செருப்புகளை அணிந்து கொண்டோ திரும்பி வந்தன. ஒவ்வொரு முறையும் அடிக்கடி ஏதாவது ஒன்று கர்ப்பம் தரித்துத் திரும்பி வந்தது. குரங்குகளின் எண்ணிக்கை நிலையற்று இருந்தது.


"எனக்குப் புரியவே இல்லை'' கியோஃப் ஏதாவது யோசனை சொல்வான் என்ற எண்ணத்தில் அவனிடம் கேட்டாள் எய்மி. அவளால் எதையுமே அதற்கு மேல் தெரிந்து கொள்ள முடியவில்லை. எதிலும் தீர்மானம் இன்றி அவள் வாழ்க்கையை எதிர் கொண்டதில்லை, இந்த ஒரு விஷயம்} சரி இந்த எல்லா விஷயமும்தான். குரங்குகள் குழுவாக இருப்பது, சீட்டாட்டங்கள் தெரிந்து வைத்திருப்பது, அவளுடைய வாழ்க்கையைத் திசை திருப்பியது, பாத் டப்பில் இருந்து மறைந்து போவது.. எல்லாமே} இதனோடே மல்லு கட்டிக் கொண்டிருந்தாள் சதா நேரமும். பெரிய மலை ஒன்றில் பிரேக் செயலிழந்த வாகனத்தில் கீழிறங்கும் உணர்வோடு அடிக்கடிபோராடும் அவள் இந்தத் தருணத்தில் மீண்டும் துவள ஆரம்பித்தாள்.

எய்மியைவிட கியோஃப் இந்தப் பிரபஞ்சத்தை அதிகம் நம்புபவனாக இருந்தான். நம்பிக்கைதான் செயல்களுக்கும் அர்த்தம் தருவனவாகவும் எல்லா மக்களும் அன்பு செலுத்துபவர்கள்தான் என்றும் அவன் மனப்பூர்வமாக உணர்ந்ததால் அவனுக்கு ஆதாரங்கள் தேவைப்படவில்லை. "நீ மற்றவர்களைக் கேட்டுப் பார்'' என்று அடிக்கடி சொல்வான்.

11

எய்மியின் பாய் ஃப்ரண்ட்:

ஒரு பாய்ஃப்ரண்டிடம் எய்மி என்ன எதிர்பார்ப்பாளோ அத்தகையவனாக கியோஃப் இல்லை. ஒரு விஷயம் அவன் எய்மியைவிட இளையவன். அவனுக்கு 28, அவளுக்கு 43. இன்னொன்று அவன் அமைதியானவன். மூன்றாவது எடுப்பான தோற்றமும் தோள்வரை சரிந்து விழும் பட்டு போன்ற அடர்த்தியான தலைமுடி கொண்டவன். சவரம் செய்யப்பட்ட அவனுடைய தாடையின் விளிம்புகள் பளிச்சென தெரியும். அதிகம் சிரித்தாலும் அடிக்கடி சிரிக்காதவனாக இருந்தான்.

சரித்திரத்தில் டிகிரி முடித்திருந்த கியோஃப்பை அவள் ஒரு பைக் மெக்கானிக்காகத்தான் மோன்டானா கண்காட்சியில் சந்தித்தாள். நிகழ்ச்சி முடிந்ததும் எய்மமிக்கு வேலை எதுவும் இல்லாததால் அவன் பியர் சாப்பிட வருகிறாயா என்றதும் சம்மதித்தாள். அது அதிகாலை 4 மணி, அவர்கள் இருவரும் பஸ்ஸýக்குள் முத்தம் கொடுத்துக் கொண்டனர். குரங்குகள் தங்கள் படுக்கைக்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் இவர்கள் எய்மமியும் கியோஃப்பும் காதலிக்க ஆரம்பித்தனர்.

காலை உணவு முடிக்கும்போது குரங்குகள் ஒவ்வொன்றாக மேலே வந்து அவனுக்குக் கை கொடுத்தன, பிறகு அவற்றுடன் நன்கு பழகவும் ஆரம்பித்தான். அவள் அவனுடைய காமிரா துணிமணிகள், மற்றும் அவனுடைய சகோதரி கடந்த கிருஸ்துமஸ்ஸýக்கு அன்பளிப்பாகக் கொடுத்த ஓவியம் தீட்டப்பட்ட வண்ணப் பலகை ஆகியவற்றை பராமரிக்க உதவினாள். அவளுடைய இடத்தில் அந்த ஓவியப் பலகையை வைக்க இடம் ஏதும் இல்லாததால் பஸ்ஸின் மேற்கூரையாக பயன்பட்டது. சில சமயங்களில் அணில்வால் குரங்குகள் அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும்.

எய்மியும் கியோஃப்பும் அவர்கன் காதல் குறித்து ஒருபோதும் பேசிக் கொண்டதில்லை.

கியோஃப் மூன்றாம் வகுப்பு டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தான். ஆனால் அது தண்டனை பெற்றதாக இருந்தது.

12

ஜெப் இறந்து கொண்டிருந்தது.

பொதுவாக பேசும்போது, குரங்குகள் குறிப்பிடும்படியான உடல் உறுதி பெற்றதாகக் கூறுவர். எய்மி அவ்வப்போது அவற்றின் சைனஸ் பிரச்சனைகளையும் வாய்வு கோளாறுகளையும் தொற்று நோய்களையும் சரி செய்து வந்தாள். மிகவும் மோசமான தருணங்களில் சில மருத்துவமனைகளையும் சிறப்பு மருத்துவர்களையும் நாடுவாள்.

ஆனால் ஜெப் இருமலால் அவதிப்பட்டது. முடி முற்றிலும் உதிர்ந்துவிட்டது. மெதுவாக நகர்ந்தது, நிகழ்ச்சிகளின் போது தடுமாறியது. செயிண்ட் பாலில் ஆறு மாதங்களுக்கு முன் நிகழ்ச்சி நடந்தபோது கோமோ உயிர்காட்சிசாலையின் மருத்துவர் வந்து குரங்குகளைப் பரிசோதித்தார். பொதுவாக குரங்குகள் நலமாக இருப்பதாகக் கூறி ஜெப்பை மட்டும் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டுச் சென்றார்.

மருத்துவர் கினா, "இதற்கு என்ன வயதாகிறது?'' என்று கேட்டார்.

"எனக்குத் தெரியாது'' இந்த நிகழ்ச்சியை யாரிடமிருந்து வாங்கினாளோ அவருக்கும்கூட இது தெரிந்திருக்கவில்லை.


"இதற்கு மிகவும் வயதாகிவிட்டது.. அதாவது மிகவும் மோசமான அளவுக்கு'' என்றார் கினா.

செனைல் டெமென்டியா, ஆர்த்ரிட்டிஸ், இதயக்கோளாறு. எப்போது நடக்கும் என்று கினா சொல்லவில்லை. "இது மகிழ்ச்சியான குரங்கு'' என்றாள் அவள். "அது போகிறபோது போகட்டும்''

13

எய்மி இதைப் பற்றி நிறைய நினைத்தாள். ஜெப் இறந்து போனால் நிகழ்ச்சி என்னாகும்? எல்லா நிகழ்ச்சியின் போதும் ஒளி வெள்ளம் பாயும் நாற்காலியில் அது அமைதியாகஅமர்ந்து பார்த்துக் கொண்டிருக்குமே. இந்தக் குரங்கினால்தான் மற்ற குரங்குகள் கட்டுப்பட்டு நிகழ்ச்சியில் பங்கு பெறுவதாக அவள் நினைத்தாள். குரங்குகள் மறைவது பற்றியும் திரும்பி வருவது பற்றியும் அவளுக்கு மிகுந்த யோசனையாக இருந்தது.

ஏனென்றால் எல்லாவற்றுக்குமே ஒரு காரணம் இருந்தது. அப்படித்தானே? அப்படியொரு காரணம் இல்லாத பட்சத்தில் ஒருவர் எப்படி நோய்வாய் படமுடியும்? அல்லது உங்கள் கணவர் உங்களிடம் அன்பு செலுத்தாமல் போய்விட முடியும்? நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரணமடைய முடியும்? காரணமே இல்லாமல் இதெல்லாம் எப்படி நடக்கும்? எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஜெப்பின் மரணத்துக்குப் பின்னும் ஒரு காரணம் இருக்கும்.

14

எய்மி இந்த வாழ்க்கையை எதற்காக நேசிக்கிறாள்:

அதற்கு ஒரு அர்த்தமும் இருக்கவில்லை. அவள் கண்ட இடத்தில் வாழ முடியாது. அவளுடைய உலகம் 38 அடி அகலமும் 127 காட்சிகளினால் ஆன நீளமும் இப்போது 26 குரங்குகளால் ஆன ஆழமும் கொண்டது. இதுதான் முடிந்தது.

அவள் நடத்தும் காட்சிகளுக்கு ஒரு அர்த்தமும் இல்லை. அவை வேறு இடங்களுக்குச் செல்லும்போது அவளுடைய சிறிய உலகம் சற்றே விரிவடையும். அதே காட்சிகள்தான், இடம் மட்டுமதான் மாறிக் கொண்டிருக்கும். சமயங்களில் அவள் செல்லும் புதிய ஊர்களின் வித்தியாசமான இரவு நேர சீதோஷ்ண நிலை, மேடு பள்ளமான நிலம், மலைகள், சமவெளிகள், வான விளிம்பு... இவற்றில்தான் வித்தியாசத்தை உணர்கிறாள். மற்றபடி எப்போதும் போல்தான்.

கண்காட்சியின் உலகம் இவ்வளவுதான்: விழா, விலங்குகளை அடைத்துவைக்கும் கூடாரம், கலைநிகழ்ச்சி, கார் ரேஸ், கருகிய சர்க்கரையின் மணம், கேக்கின் மணம், விலங்குகளின் படுக்கை.

இதில் கியோஃப் மட்டும் ஒரு வித்தியாசம்: தாற்காலிகமான, அர்த்தமற்ற, காதலற்ற உறவு.

15

இவை எய்மியின் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களாவன:

1. அவள் கால் எலும்பு சில ஆண்டுகளுக்கு முன் முறிந்து கொண்டது. அதனால் எலும்பில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக பத்து மாதங்களுக்கு மேலாக வதைபட்டாள். அதன் பிறகும் அவளுக்கு வலி இருந்தது.

2. அவளுடைய கணவன் அவனுடைய அலுவல் உதவியாளரிடம் காதல் வயப்பட்டு விலகிச் சென்றுவிட்டான்.

3. அவளுடைய சகோதரிக்கு கேன்ஸர் என்று தெரிந்த அதே வாரத்தில் அவளுடைய வேலையில் இருந்து நீக்கப்பட்டாள்.

4. பல்வேறு கேள்விக்குரிய வாய்ப்புகளுக்குப் பிறகு அவள் தனிமையாக்கப்பட்டு வரைபடத்தில் இல்லாத இடத்தில் அமைந்த அடுக்குமாடி குடியிருப்பில் பைத்தியக்காரியைப் போல இருக்கிறாள்.

எதுவுமே நிரந்தரமில்லை. எதையும் நீங்கள் இழக்கக் கூடும். அப்படியே நீங்கள் அதிர்ஷ்டக்காரராக இருந்தாலும் இறப்பதன் மூலம் எல்லாவற்றையும் இழக்கத்தான் செய்கிறீர்கள். சில பொருளையோ, சில மனிதர்களையோ இழக்கும்போது எய்மியின்கவலை தோய்ந்த அடிபட்ட மனம் அவளை விஷமூட்டி பயமுறுத்தி இருட்டில் அடைத்துவிடும்.

16.

எய்மி நிறைய படித்தாள், இந்த முரண்பாடுகள் பற்றி அவள் நிறையவே தெரிந்து வைத்திருந்தாள்.

கூண்டுகளில் எதற்கும் பூட்டுகள் இல்லை. குரங்குகள் அதை படுக்கை அறையாகப் பயன்படுத்தி வந்தன. ஏதாவது தனிப்பட்ட வசதி தேவைப்படும்போது அவை அங்கிருந்து வெளியேறிக் கொண்டன. அதாவது பெரும்பாலும் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், சுற்றி புல்வெளியாக இருப்பின் அவை அப்படி நடந்து கொண்டன.

தற்போது மூன்று குரங்குகள் படுக்கை மீது அமர்ந்து வண்ணப் பந்துகளைப் பொருத்தி விளையாடும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தன. சில கம்பள நூல் உருண்டைகளோடு விளையாடிக் கொண்டிருந்தன, திருப்புளியை வைத்து தரையைக் குத்திக் கொண்டிருந்தன. சில எய்மி மீதும் கியோஃப் மீதும் பழுதான சோபாமீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தன. சில திருட்டுத்தனமான கேபிள் லைனில் வந்த குழந்தைகள் விளையாட்டை கம்ப்யூட்டரில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தன.

கருப்பு கோலுபஸ் குரங்கு மர சட்டங்களை வைத்து சமையல் டேபிளின் மீது விளையாடிக் கொண்டிருந்தது. அதை வைத்து கடந்த வாரத்தில் வளைவை உருவாக்கியிருந்தது, அதை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் இப்போது ஈடுபட்டுக் கொண்டிருந்தது. எய்மி அதற்கு சில முறை கற்பிக்க முயற்சித்தும்கூட அதற்கு அது கூடி வரவில்லை. பொறுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது.

கியோஃப் பேங்கோவுக்கு நாவல் ஒன்றைப் படித்துக் காண்பித்துக் கொண்டிருந்தான். அதுவும் அதைத் கூடவே வாசிக்கிற தொனியிலேயே அந்தப் பக்கத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. சில சமயங்களில் ஒரு வார்த்தையை தன் பிரகாசிக்கும் விழிகளோடு அது சுட்டிக் காட்டும். கியோஃப் மீண்டும் அந்த வார்த்தையைச் சிரித்துக் கொண்டே படித்துக் காட்டிவிட்டு நாவலைத் தொடருவான்.

ஜெப் அதன் கூண்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்தது: தன் போர்வையையும் பொம்மையையும் இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கும். சமீப காலமாக அது அப்படித்தான் செய்கிறது.

17

ஜெப்பை இழந்தபின் எய்மிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மற்ற குரங்குகளுக்கு என்ன ஆகும்? 26 குரங்குகள் என்பது பெரிய எண்ணிக்கை, ஆனால் அவை ஒன்றை ஒன்று நேசித்தன. மிருகக் காட்சிச்சாலை அல்லது சர்க்கஸ் நடத்துபவர் யாராவது கிடைத்தால்தான் இவற்றை பராமரிக்க முடியும். தனிப்பட்ட யாரும் சரிபட்டு வராது. அதுவுமில்லாமல் இவற்றை அவை விரும்புகிற இடத்தில் உறங்குவதற்கு அனுமதிப்பார்களா என்றும் விடியோவில் குழந்தைகள் சானலைப் பார்ப்பதற்கு விடுவார்களா என்றும் அவளுக்கு யோசனையாக இருந்தது. ஜெப் இல்லாமல் போனால் இவை எங்கே போகும்.. பாத் டப்புக்குள் சென்ற பின்பு அந்தப் புதிரான பயணம் எப்படி நடக்கும்? அவளுக்கு இன்னமும் அவளுக்கு உறுதியாகத் தெரியவில்லை, இது எல்லாமே ஜெப் இருப்பதால்தான் நடைபெறுகிறதா?

அப்புறம் எய்மி? இந்த செயற்கையான உலகில் அவளுடைய பாதுகாப்பு: அந்த பஸ், அவளை அடையாளம் கண்டு கொண்ட காட்சிகள், அர்த்தம் புரிபடாத அந்த பாய்ஃப்ரண்ட். இந்தக் குரங்குகள்... அப்புறம் என்ன?

18

இந்தக் காட்சியை எடுத்து நடத்த ஆரம்பித்த சில மாதங்களில் அவளுக்கு வாழ்வோ, சாவோ ஒரு பொருட்டாக இல்லை. அப்போது நடந்த சம்பவம் இது. நிகழ்ச்சியின் கடைசி அம்சம். குரங்குகள் ஏணியில் ஏறிக் கொண்டிருந்தன. ஜெப் ஏணியில் ஏறி பாத் டப்பில் குதித்தது, நுரையீரலில் காற்றை நிரப்பி சப்தம் எழுப்பியது. இவள் ஓடிச் சென்று பாத் டப்புக்குள் பார்த்தாள். குரங்குகள் கசப்பான ஒரு சிரிப்பை உதிர்ந்தன. இவள் என்ன செய்யப் போகிறாள் என்று அவற்றால் யூகிக்க முடிந்தது. இவளும் அந்த பாத் டப்புக்குள் இறங்கி பாத் டப்பின் வளைந்த பகுதியைப் பிடித்து இறுகப் பிடித்துக் கொண்டாள்.

சட்டென அது நடந்தது. செயின் ஒளி வெள்ளத்தினிடையே பாத் டப்பைக் கீழே கவிழ்ந்தது.

அவள் பத்தடி உயரத்தில் இருந்து பொத் என்று கீழே விழுந்தாள். அவளுடைய கால் எலும்பு முறிந்தது. மேடையில் அவள் விழுந்தாலும் சட்டென சுதாரித்து எழுந்தாள்.

குரங்குகள் மட்டும் காணாமல் போயிருந்தன.


அரங்கில் மயான அமைதி. அது அவள் சொதப்பிய நிகழ்ச்சிகளில் ஒன்று.

19

எய்மியும் கியோஃப்பும் சாலினா கண்காட்சியினூடே நடந்து கொண்டிருந்தனர். அவளுக்குப் பசியெடுத்தது, சமைக்க விருப்பமில்லாததால் நாலரை டாலரில் ஹோல்டாக்ஸýம் மூன்றேகால் டாலரில் கோக்கும் விற்கும் கடையைத் தேடிக் கொண்டிருந்தனர். அப்போது எய்மமியை நோக்கி கோயிஃப் கேட்டான்: "இதென்ன கொடுமை? நாம் ஏன் நகரத்துக்குச் சென்று வசிக்கக் கூடாது? நிஜமான உணவு உண்டு சராசரி மனிதர்கள் போய் வாழலாமே?''


"ஐரினாவின் வில்லா' என்ற உணவகத்துக்குச் சென்று "பாஸ்தா'வும் "ஒயினு'ம் உட்கொண்டார்கள். ""நீ எப்போதுமே ஏன் எல்லோரும் இங்கே வருகிறார்கள் என்கிறாய்'' என்றான் கியோஃப். பாட்டிலில் பாதி அவனுள்ளே போயிருந்தது. நீலமா, சாம்பலா என்று தீர்மானிக்க முடியாத வண்ணத்தில் அவன் கண்கள் மாறியிருந்தாலும் விளக்கு வெளிச்சத்தில் கறுப்பாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் தெரிந்தன.

"இதோ பார் என்ன நடக்கிறது என்பதை நம்மால் ஒரு போதும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரை அதுவல்ல கேள்வி. எனது கேள்வியெல்லாம் அவை ஏன் ஒழுங்காகத் திரும்பி வருகின்றன என்பதுதான்''

எய்மி வெளிநாட்டு நாணயங்களையும் மரச் சட்டகம் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தாள். சட்டென நினைவுக்குத் திரும்பியவளாக ""எனக்கும் தெரியாது... எதற்காகத் திரும்ப வரவேண்டும்?'' என்றாள்.

அன்று பின் இரவு பஸ்ஸýக்குத் திரும்பியதும் கியோஃப் "எங்கேயாவது போகட்டும். என் தத்துவம் இதுதான். எங்காவது போகட்டும். ஆனால் இதுதான் அவர்கள் வீடு. எங்கு சென்று சுற்றிப் பார்த்தாலும் தாமதமாகவோ, சீக்கிரமாகவோ வீடு வந்து சேருவதைத்தான் விரும்புகிறார்கள்'' என்றான்.

"ஆனால் அவர்களுக்கெல்லாம் வீடு என்று ஒன்று இருக்கிறது.'' என்றாள் எய்மி.

"எல்லோருக்கும் வீடு என்று ஒன்று இருக்கிறது. அதில் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ'' என்றான் கியோஃப்.

20

அன்று இரவு, கியோஃப் ஒரு மக்காக்கைக் கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான். எய்மி ஜெப்பின் கூண்டுக்குள் போய் "நீ போவதற்குள் பாத்டப்புக்குள் எப்படி மறைந்து போகிறாய் என்பதைக் காட்டுவாயா?'' என்றாள்.

ஜெப் தன் நீல நிற போர்வைக்குள் இருந்து நிச்சயமற்ற பார்வை பார்த்தது, காட்சி நடந்துவரும் அரங்கு நோக்கி நடந்தது.
ஏராளமான ட்ரெய்லர்களும் பஸ்ஸýம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சிலரது குரல் மட்டும் திரைச்சீலைகளுக்குப் பின்னே மெல்ல கேட்டுக் கொண்டிருந்தது. வானம் கருநீல வண்ணத்தோடு நட்சத்திரங்களின் மினுக்கலோடு இருந்தது. நிலவு அவர்களை நோக்கி நேரடியாக ஒளி வீசிக் கொண்டிருந்தது. ஜெப்பின் முகத்தில் நிழல் படிந்திருந்தது.

பாத் டப் அரங்கத்துக்குப் பின்னே இருந்தது. அடுத்து காட்சி நடப்பதற்கு தயார் நிலையில் இருந்தது. இருண்டு இருந்த அரங்கில் "வெளியே' என்ற பலகை மட்டும் சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஒரே ஒரு மங்கிய சோடியம் வேப்பர் விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. பாத் டப்பின் மேலே ஏறி வளைந்த அதன் விளிம்புகளில் அவளுடைய கையைத் தடவி அழைத்துச் சென்றது. உள்ளே இருந்த மங்கிய பகுதியை அவளுக்குக் காட்டியது.

கயிறைப் பிடித்து இழுத்து டப்பை மேலே இழுத்தது. அதனுடைய பிரத்யேக ஓசையை எழுப்பிக் கத்தியது. பாத் டப் கீழ்புறமாகக் கவிழ்த்துக் காட்டியது, அது காலியாக இருந்தது.

அது இல்லாமல் போனதை அவள் பார்த்தாள். அது இருந்தது, மறைந்தது. வேறு எதுவும் இல்லை. கதவு இல்லை இல்லை, எந்த ஒளிர்வும் இல்லை, சிறிய வெடிச்சத்தம் இல்லை, காற்று பலமாக வீசவில்லை. அதில் ஒரு அர்த்தமும் தோன்றவில்லை. அதற்கான பதில் ஜெப்புக்கு மட்டுமே தெரிந்ததாக இருந்தது.

அவள் பஸ்ஸýக்குள் நுழைந்தபோது ஜெப் ஏற்கெனவே தன் போர்வைக்குள் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்ததது.

21

பிறகு ஒரு நாள்.

எல்லோரும் அரங்கத்தின் பின் புறம் இருந்தனர். எய்மி தன் மேக்கப்பை முடித்துக் கொண்டிருந்தாள். கியோஃப் எல்லாவற்றையும் இரண்டாவது முறையாக பரிசோதித்துக் கொண்டிருந்தான். ஒப்பனை அறையில் குரங்குகள் வட்டவடிவில் ஆடை அணிந்து அமர்ந்திருந்தன. ஜெப் நடுவில் அமர்ந்திருந்தது. பக்கத்தில் பேங்கோ தன் சிறிய பச்சை நிற உடுப்பில் அமர்ந்திருந்தது. எல்லா குரங்குகளும் வரிசையாக வந்து ஜெப்பிடம் கைகுலுக்கின. மலர் கண்காட்சியின் நடுவில் அமர்ந்திருக்கும் இளவரசி போல அது எய்மிக்குத் தோன்றியது.

அன்று இரவு காட்சியில் ஜெப் ஏணியில் ஏறவே இல்லை. நாற்காலியிலேயே அமர்ந்துவிட்டது. பேங்கோ கடைசி குரங்காக மேலே ஏறியது. குரலெழுப்பியது. எய்மிக்கு ஜெப் இல்லாமல் நிகழ்ச்சி நடக்குமா என சந்தேகமாகத்தான் இருந்தது. கியோஃப் தைரியமாக இருந்தான். பேங்கோ கத்தி முடித்ததும் கியோஃப் பாத்டப்பின் மீது ஒளிவெள்ளத்தைத் திருப்பினான். பாத் டப் காலியாக இருந்தது.

ஜெப் நாற்காலியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளனைப் போல அமர்ந்து காட்சி தந்தது. அரங்கச் சீலை கீழே இறக்கப்பட்டதும் எய்மமி அதைக் கட்டி அணைத்துக் கொண்டாள். கியோஃபின் கைகள் அவர்கள் இருவரையும் அணைத்துக் கொண்டிருந்தது.

ஜெப் இவர்கள் இருவருக்கும் இடையில் மெத்தையில் படுத்து உறங்கியது. காலையில் எழுந்தபோது ஜெப் தன் கூண்டுக்குள் தனக்குப் பிடித்தமான பொம்மையை அணைத்தபடி படுத்திருந்தது. அதன் பிறகு அது எழுந்திருக்கவில்லை. சுற்றிலும் குரங்குகள் சூழ்ந்திருந்தன.

அன்று முழுதும் எய்மமி அழுது கொண்டே இருந்தாள்.

கியோஃப் அவளைத் தேற்றினான். "நிகழ்ச்சி நடந்து ஜெப்பினால் இல்லை'' என்றாள்.

"எனக்குத் தெரியும்'' என்றான் அவன்.

22

பாத் டப் சாகஸம் என்று எதுவும் இல்லை. குரங்குகள் ஏணியில் ஏறி பாத் டப்புக்குள் குதிக்கின்றன, காணாமல் போகின்றன. உலகமே இப்படியான பிரமிப்பானவற்றால் நிகழ்ந்ததுதான். இதற்கு ஒரு பொருளும் இல்லை. அதில் இதுவும் ஒன்று. ஒருவேளை குரங்குகளுக்கு இது தெரிந்திருக்கும், பகிர்ந்து கொள்ள அவற்றுக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம். அவற்றை அதற்காகக் கடிந்து கொள்ளவா முடியும்?

ஒருவேளை இது குரங்குகளின் புதிராக இருக்கலாம். மற்ற குரங்குகளிடம் பகிர்ந்து கொள்ள கூடியதாக இருக்கலாம். எய்மியும் கியோஃப்பும் அவற்றுக்கு வந்து போகும் விருந்தாளிகளாகத் தோன்றலாம். நிகழ்ச்சியின் போது மட்டும் தேவைப்படும் நபர்களாக இருந்திருக்கக் கூடும்.

23

ஆறு வாரங்களுக்குப் பிறகு, ஒருவன் எய்மியை நோக்கி வந்தான், நிகழ்ச்சி முடிந்து எய்மியும் கியோஃப்பும் முத்தமிட்டு முடிந்த நேரத்தில். குள்ளமாகவும் வெளிறிய தோற்றத்தோடும் வழுக்கையாகவும் இருந்தான். உள்ளே இருந்து உறிஞ்சப்பட்டுவிட்ட மனிதனைப் போல இருந்தான். அவளுக்கு அவனுடைய பார்வையைத் தெரிந்தது.

"நான் இந்த நிகழ்ச்சியை வாங்கிக் கொள்ள விரும்புகிறேன்'' என்றான்.

எய்மி சொன்னாள்: "நீங்கள் வாங்கிக் கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியும்''

அவள் அவற்றை ஒரு டாலருக்கு விற்றாள்.

24

மூன்று மாதங்களுக்குப் பிறகு, எய்மியும் கியோஃப்பும் பெல்லிங்காம் அடுக்கு மாடி குடியிருப்பில் முதல் முறையாக விடெடுத்துத் தங்கினர். சமையலறையில் ரெபிஜிரேட்டர் திறந்து மூடப்படும் சப்தம் கேட்டது, பேங்கோ அதிலிருந்து ஆரஞ்சு பழச்சாறை எடுத்து டம்பளரில் நிரப்பிக் கொண்டிருந்தது.

அதை அவர்கள் ஒரு சீட்டுக் கட்டு கேமைக் கொடுத்து அதனுடைய இருப்பிடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

சனி, ஜூலை 18, 2009

கையேடுகளின் நிரந்தர ஆட்சி!





உலகின் எத்தனையோ தத்துவம மரபைப் போலவே திராவிட இயக்க சிந்தனைக்கும் ஆழமான ஒரு தத்துவ தரிசனம் உண்டு. அது இப்போது தடம் மாறி சாதீய மதவாத கட்சிகளோடு தேர்தலுக்காகக் கூட்டணி வைத்துக் கொள்ளும் அளவுக்கு நீர்த்துப் போயிருப்பதாகக் கூறினாலும் அதன் ஆரம்ப குறிக்கோள்கள் வீரியத்தோடுதான் இருந்தன.

"பரத்தியாவதேதடா பனத்தியாவதேதடா' போன்ற சித்தர் சித்தாந்தமும் "சாதி சமய சழக்கை ஒழித்தேன் அருட் சோதியைக் கண்டேனடி' என்ற வள்ளலாரின் சிந்தனையும் பெüத்த சிந்தனை மரபும் ஊறித் திளைத்து விளைந்த ஒரு இயக்க ரீதியான செயல் தத்துவம் இது.

பெண் விடுதலை, தன்மான உணர்வு, சடங்கு சம்பிரதாய எதிர்ப்பு, நாத்திகவாதம், இன உணர்வு, சமுதாய சமத்துவம் ஆகியவற்றின் கூட்டுத்தன்மையோடு திராவிட இயக்கம் உருவானது.

மேடைப் பேச்சு, பிரசுரங்கள் மூலமே கட்டப்பட்ட ஒரு இயக்கமாகத்தான் இதைச் சொல்ல வேண்டும். உரம் ஏறிப் போயிருந்த இன்னொரு எழுச்சியைப் பிளந்து கொண்டு பிறந்த இந்த இயக்கத்தின் பெரும் பலம் பிரசுரங்கள்தான். சுதந்திர உணர்வும் நாட்டுப் பற்றும் எழுச்சி பெற்றிருந்த மக்கள் மத்தியில் தன்னந்தனியராக எழுந்தவர் பெரியார். மிகவும் உண்மையானவராகவும் மக்கள் மீது அதீத அக்கறை கொண்டவராகவும் இருந்ததால்தான் சுதந்திரத்துக்கு மாற்றாகவும் அல்லது சுதந்திரத்தைவிட உடனடிதேவையாகவும் "மக்கள் இழிவு இன்றி வாழ வேண்டும்' என்பதை முக்கியம் என்று அவரால் வலியுறுத்த முடிந்தது.

இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்பதைவிட ஒவ்வொரு மனிதனும் சுதந்திரம் அடைய வேண்டும் என்ற அவருடைய பேச்சில் மக்களுக்கு இன்னமும் நெருக்கம் அதிகமாக இருந்தது. சுதந்திர வேட்கைக்கு சமமான ஒரு ஆதரவோடு, எழுச்சியோடு திராவிட இயக்கம் தமிழகத்தில் வளர்ந்தது. மகாத்மா காந்தியின் அர்ப்பணிப்போடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய உழைப்பும் கண்மூடித்தனமான பழக்க வழக்கங்களை ஒட்டு மொத்தமாகத் தூக்கி எறிந்த துணிச்சலும் பெரியாருக்கு மக்களிடம் செல்வாக்கை உயர்த்தியது.

அவருடைய மிக நேர்மை தொனிக்கும் எளிமையான பேச்சில் மக்கள் ஈர்க்கப்பட்டனர். எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் அவரே இருக்க முடியாத சூழலைத் துண்டுப் பிரசுரங்கள் தீர்த்து வைத்தன. அவருடைய பேச்சும் எழுத்தும் சிறிய சிறிய பிரசுர நூல்களாக வந்தன. அது ஒவ்வொரு முறை படிக்கும்போதும் படிப்பவரைத் தூப்பாக்கியில் இருந்து சீறிப்பாயும் தோட்டாக்களின் நிலைக்குத் தள்ளியது.

அவருடைய சுயமரியாதை பிரசார வெளியீடுகள் மிக மலிவான விலையில் வெளியாகின. மக்களுக்குப் புதிய சிந்தனையை -மாற்று சிந்தனையை - ஊற்றெடுக்க வைப்பதாக அவை அமைந்தன.

"சோதிடப் புரட்டு' என்ற நூலில் சோதிடம் கணிப்பவர்கள் பூமியை மையமாக வைத்து சூரியன் அதைச் சுற்றி வருவதாகச் சொல்கிறார்கள். உண்மையில் சூரியனைத்தான் பூமி சுற்றி வருகிறது. இந்த அடிப்படை ஞானம் கூட இல்லாத ஒரு விஷயத்தை மக்கள் நம்புவது முட்டாள்தனமாக இல்லையா? என்ற நுணுக்கமான கேள்வியை பெரியார் முன் வைத்தார்.

கைரேகை பார்த்து சோதிடம் சொல்வதென்றால் குரங்குகளுக்கும் கையில் ரேகை இருக்கின்றதே, அதற்கும் வேலை வாய்ப்பு, சொத்து வரவு எல்லாம் உண்டா? என்பார்.

மக்களின் சந்தேகங்களைத் தீர்த்து கைபிடித்து அழைத்துச் செல்லும் பணியை, அவர்களுக்கு விஞ்ஞானபூர்வமாகச் சிந்திக்க வேண்டிய அவசியத்தை கல்வியின் அவசியத்தை அந்தத் துண்டுப் பிரசுரங்கள் செய்தன. ஒரேயடியாக மூடநம்பிக்கை புரையோடிப் போயிருந்த சூழ்நிலையில் சாதி, மத பிரிவினையால் ஒருவரை ஒருவர் இழிவு படுத்திக் கொண்டிருந்த வேளையில் அந்தப் பிரசுரங்கள் அதிரடி வைத்தியமாக இருந்தன. வேதங்கள் பெண்களை ஐந்தாம் வர்ணமாக பிரிவினை செய்திருப்பதை அவை தோலுரித்துக் காட்டின. திருமண மந்திரங்கள் என்ற பெயரில் உச்சரிக்கப்படும் பிற்போக்குத்தனங்களை மக்கள் அறிந்தார்கள். சுயமரியாதைத் திருமணங்கள், சாதி மறுப்புத் திருமணங்கள் வேகமாக நடந்தன.

கலப்பு மணம் என்ற வார்த்தையையே அவர் கிண்டல் செய்கிறார். "நான் என்ன மாட்டுக்கும் மனுஷனுக்குமா திருமணம் செய்கிறேன். மனிதனுக்கும் மனிஷிக்கும்தான் திருமணம் செய்கிறேன். இது எப்படி கலப்பு மணம் ஆகும்' என்ற நியாயமான கேள்வியில் மக்கள் ஆர்ப்பரித்தார்கள். மறுமணங்களை ஆதரித்தும் தாலி என்ற லைசென்ஸ் அடையாளத்தை நீக்கியும் அவர் மறுமலர்ச்சி செய்தார். இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்த இந்த சடங்குகளை சில ஆண்டு பிரசாரத்தின் மூலம் அவர் ஆட்டம் காணவைத்தார்.

தத்துவவிளக்கம் என்ற அவருடைய சிறிய துண்டு பிரசுரம் வேதங்களும் மதகுருமார்களும் என்னென்ன சொல்லி வந்திருக்கிறார்கள். அதில் எத்தனை முரண்பாடுகள் இருக்கின்றன என்று தோலுரித்தன. அவர் இசை, கலை, இலக்கியம் சம்பந்தமான கருத்துகளைப் பேசுவதினும் முக்கியமாக சமத்துவத்தைப் போற்றியதால் இவற்றை அவர் தன் வாழ்நாளில் இருந்து தியாகம் செய்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் அன்னா கரீனினாவையோ ஆன்டன் செகாவையோ படிக்காமல் போனது தமிழகத்துக்கு நேர்ந்த இலக்கிய இழப்புதான். ரத்தமும் சதையுமாக உண்மை சொட்டும் அவருடைய நடையில் அவருடைய ஆர்வம் இன்றியே இலக்கியத் தன்மை இருந்தது. எழுத்தாளர் க.நா.சு இவருடைய எழுத்து நடையைச் சிலாகித்திருப்பது இங்குச் சுட்டிக் காட்டத்தக்கது.

சிலப்பதிகாரத்தைப் பற்றி அவர் சொல்கிறார்: இது விபச்சாரத்தில் ஆரம்பித்து, பத்தினித்தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில் - மூட நம்பிக்கையில் முடிந்த பொக்கிஷம்; என்று விமர்சிக்கிறார்.

ராமாயணம், பெரியபுராணம், திருக்குறள் போன்ற தமிழின் தலைசிறந்த நூல்களாக எண்ணுகின்ற அனைத்தைப் பற்றியும் அவருக்கு இப்படியான கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. மனிதன் சாதி வாரியாக கேவலப்பட்டுக் கொண்டிருப்பதையும் புரோகிதர்களின் புரட்டுகளையும் கண்டிக்காமல் என்ன ரசனை வேண்டிக்கிடக்கிறது என்பதுதான் அவருடைய கோபத்துக்குக் காரணம். இது குறித்து "தமிழர், தமிழ் இலக்கியங்கள்' என்ற வெளியீடு ஒன்று வெளியாகியுள்ளது.

அவருடைய அறிவு விருந்து என்ற பிரசுரத்தில் "கடவுளும் தண்டிக்கிறான், மனிதனும் தண்டிக்கிறான். கடவுளும் பழி வாங்குகிறான், மனிதனும் பழி வாங்குகிறான். இவையெல்லாம் மனிதன் கற்பித்தவை என்பதாலேயே இப்படி மனித குணத்தோடு இருக்கின்றன' என்கிறார்.

"புரட்டு இமாலய புரட்டு', "நீதி கெட்டது யாரால்?', "காந்தியாரின் படத்தை எரிப்பது ஏன்?', "புரட்சி அழைப்பு', "சுதந்திர தமிழ்நாடு ஏன்?', "பாரத ஆராய்ச்சி' போன்ற பல தலைப்புகளில் வெளியீடுகள் வந்துள்ளன. இந்த வெளியீடுகள் 1930-களின் துவக்கத்தில் இருந்து இப்போதும் .. இன்றைய பிரச்னைகளான இட ஒதுக்கீடு, இலங்கைத் தமிழர் உரிமை போன்ற தலைப்புகளில் வெளியீடுகள் பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியீடாக வந்து கொண்டிருக்கின்றன.

பெரியார் தவிர கைவல்ய சாமி, குத்தூசி, அறிஞர் அண்ணா, சிங்காரவேலர் போன்றவர்களின் பேச்சுகள்- எழுத்துகளும் இத்தகைய பிரசார வெளியீடுகளாக வந்திருப்பதைக் காண முடிகிறது.
அறிஞர் அணண்ணாவின் "தீபரவட்டும்', "ஆரிய மாயை' போன்ற பேச்சு வெளியீடுகள் அன்றைய இளைஞர்களுக்கு ஆவேசத்தை வளர்த்தெடுக்கக் காரணமாக இருந்தன. இந்தப் பிரசுரங்களில் பல பல்வேறு ஆட்சிச் சூழல்களில் தடைசெய்யப்பட்ட நூல்களாகவும் அதனாலேயே அதிகம் பரபரப்புக்கு ஆளான நூல்களாகவும் விளங்கின.

பகுத்தறிவு பிரசார வெளியீடு, திராவிடப் பண்ணை, நாத்திகம் வெளியீடு, பெரியார் மையம், சிந்தனையாளன் வெளியீடு போன்ற பல அமைப்புகளும் இத்தகைய துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டன.

ரேடியோ, தொலைக்காட்சி, அலை பேசி, தொலைபேசி, வாகன வசதி, சாலை வசதி, கமம்ப்யூட்டர் தொழில்மமநுட்பம், இண்டர் நெட் போன்றவை அறவே õல்லாத நிலையிõல் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்தியதில் இந்தத் துண்டுப் பிரசுரங்களின் பங்கு மகத்தானது.

தமிழரின் பேச்சில் எழுத்தில் வாழ்வில் இந்தத் துண்டுப் பிரசுரங்கள் ஏற்படுத்தியிருக்கும் மகத்தான மாற்றம் என்ன வென்றால் இப்போது பக்கத்து மாநிலங்களான ஆந்திரத்திலும் கேரளத்திலும் கர்நாடகத்திலும் நாயுடு என்றும், நாயர் என்றும் ராவ் என்றும் ஆட்சியாளர்களேகூட பெயருக்குப் பின்னால் சாதியைப் போட்டுக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது. தமிழகத்தில் அப்படி வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதில் சகலருக்கும் கூச்சம் இருக்கிறது. மறைவில் சாதி அதன் வன்மத்தோடு தயாராகக் காத்திருப்பதை மறுக்கவில்லை. ஓட்டுக்கு ஏங்கிகளால் அது எப்படியெல்லாம் எண்ணெய் ஊற்றி வளர்க்கப்படுகிறது என்பது தெரிந்ததுதான். ஆனாலும் சாதியை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில் காட்டுகிற தயக்கம், சாதி மறுப்பு, மறுமணம் போன்றவற்றில் ஏற்பட்ட சிறிய வெற்றியை இந்த பிரசுரங்கள் சாத்தியமாக்கின. ஆட்சிக்கு வந்தவர்கள் செய்த சில மாற்றங்களுக்குப் பின்னும் இந்த காலணா கையேடுகளின் உத்வேகம் இருப்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில் இக் கையேடுகளின் ஆட்சி நிரந்தமானது.

சமரசம் செய்ய வேண்டிய இந்த ஆட்சி அதிகாரத்தைப் பெரியார் உதறித்தள்ளியதற்கான கணிப்பையும் இப்போது தெளிவாகவே உணர முடிகிறது.

புத்தகம் பேசுது சிறப்பு மலர்- 2009

வெள்ளி, ஜூலை 10, 2009

நாகரீகம் உடையும் விளிம்பு!





சுதந்திரம் மட்டுமே மனிதனின் ஆதார பிடிமானமாக இருக்கிறது. சொல்லப் போனால் அது உயிரினங்கள் அனைத்தின் அடிப்படை கூறாக இருக்கிறது. அந்தச் சுதந்திரம் ஏற்படுத்தும் நேரமாறான விளைவு பக்கத்தில் இருப்பவரின் சுதந்திரத்தைப் பறிப்பதில் வந்து முடிகிறது. யாரையாவது தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் அலாதி ஏற்படுகிறது. அது ஒரு பயத்தின் வெளிப்பாடுதான். எங்கே தன் பாதுகாப்புக்குப் பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சம்தான் அதற்குக் காரணம். மனிதர்களுக்குள் என்றும் மறைந்திருக்கிற அவநம்பகத்தன்மை இறுதியில் தன் சுதந்திரத்தை கூட அனுபவிக்க விடாமல் பிறர் சுதந்திரத்தையும் பாதிப்பதாக மாறிவிடுகிறது.


ஒரு இனம் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்துவதும் ஒரு நாடு இன்னொரு நாட்டை அடக்க முனைவதும் ஒரு மதம் இன்னொரு மதத்தைக் கட்டுப்படுத்த நினைப்பதும் ஒரு மொழி இன்னொரு மொழியின் மீதி ஆதிக்கம் செலுத்துவதும்.. அவநம்பிக்கையினால்தான். நம்பிக்கை இல்லாதவனும் நிறைவடையாதவனும் பேராசை கொள்கிறார்கள். ஹிட்லர் தன் நாஜி படையின் மூலம் இந்தப் பேராசையை விரிவுப்படுத்தினார். எதிர்ப்பவர்களையெல்லாம் கொல்வதும், வதைப்பதும் அந்தப் பேராசையின் தேவையாக மாறி இருந்தது. குறிப்பாக யூதர்கள் மீது அவர் நடத்திய வன்முறை அட்டகாசங்கள் இன்னுமொரு நூற்றாண்டுக்கு அழுது அழிக்க முடியாத களங்கமாக வரலாற்றின் மீது படிந்து கிடக்கிறது. 1986ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற எலீ வீஸல் எழுதிய சுயசரிதை நூல் "இரவு'.

ஹங்கேரியில் பிறந்த இவர் தன் பன்னிரெண்டாம் வயதில், சிகெட் நகரத்தில் உள்ள மோசே என்பவனிடம் நெருங்கிப் பழகுகிறான். அவன் யாருமற்றவனாகவும் பிறருக்கு உதவி செய்து வாழ்பவனாகவும், பார்த்ததும் இரக்கம் சுரக்க வைக்கக் கூடியவனாகவும் இருந்தான். யூதமத நம்பிக்கைகள், தெய்வக் கோட்பாடுகள் பற்றியெல்லாம் சொல்பவனாக இருக்கிறான். 1942ம் ஆண்டின் இறுதியில் ஒரு நாள் சிகெட் நகரத்தில் வாழும் வெளிநாட்டு யூதர்களை போலிசார் அப்புறப்படுத்துகிறார்கள். வேன்களில் அடைத்து ஏற்றிச் செல்லப்பட்ட அவர்கள், வேறு ஒரு நகரத்தில் சுகமாக வாழ்ந்து கொண்டிருப்பதாக எல்லோரும் நினைக்கிறார்கள். சிறிது நாளில் கோவில்கார மோசே திரும்பி வருகிறான். உயிர் பிழைத்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வந்து சேருகிறான். வந்தவன் கூட்டிச் சென்ற எல்லோரையும் போலிசார் சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்கிறான். சரியாக சாகாதவர்களைத் திரும்பத் திரும்பச் சுட்டதாகவும் குற்றுயிரும் குலையுயிருமாக வீசப்பட்டவர்கள் இரண்டு மூன்று கதறியபின் இறந்ததாகவும் சிலர் தங்கள் குழந்தைகளைக் கொல்லுவதற்கு முன் தங்களைச் சுட்டுவிடுமாறு கெஞ்சியதாகவும் சொல்கிறான். தனக்குக் காலில் குண்டடிப்பட்டு மயங்கிப் போனதால் செத்துப் போய்விட்டதாக விட்டுவிட்டார்கள் என்கிறான். ஊர் அவனைப் பைத்தியக்காரன் என்கிறது. இப்படியும் ஒரு கட்டுக் கதையைச் சொல்ல முடியுமா என்று எள்ளி நகையாடுகிறது. யாரும் நம்பவில்லையே என்று அழுதுப் புலம்புகிறான். அவனுக்குப் பைத்தியம் முற்றிவிட்டதாக நினைக்கிறார்கள்.



ஆனால் கோயில்கார மோசேவைப் பைத்தியக்காரன் என்றவர்கள் எல்லாம் கற்பனையிலும் நடக்க முடியாதென்று நினைத்த அந்தச் சித்திரவதைகள் கூடிய சீக்கிரமே சிகெட் நகர மக்களுக்கு ரத்தமும் சதையுமாக உணர்த்தப்பட்டது. சுற்றி வளைத்த நாஜி படையினர் மூன்று நாள் அவகாசத்தில் எல்லோரும் அங்கிருந்து வேறு இடத்துக்குச் செல்ல வேண்டும் என்று பணிக்கப்படுகிறார்கள். பணம், நகை, பொக்கிஷங்கள் எல்லாம் நாஜிக்கள் ஆக்கிரமிக்கிறார்கள். குடிக்கக் கொஞ்சம் தண்ணீர், சிறிது ரொட்டியோடு எல்லோரும் விரட்டிச் செல்லப்படுகிறார்கள். பெண்கள் குழந்தைகள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். ஆண்கள் தனிக் கொட்டடிக்கு. பிரிக்கப்பட்ட பெண்களும் குழந்தைகளும் சித்திரவதைகளுக்குப் பிறகு உடனடியாகவே கொல்லப்பட்டுவிட்டனர் என்று ஆண்கள் தாமதமாகவே உணருகிறார்கள். எலீ வீஸலின் சகோதரியும் அம்மாவும் பிரித்துச் செல்லப்பட்ட பின்பு என்ன விதமாகக் கொல்லப்பட்டார்கள் என்பதைக்கூட தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை. ரயிலுக்குள் திணித்து ஏற்றப்பட்டவர்களில் முதியவர்கள், நோயாளிகள் மூச்சுதிணறல்காரணமாக இறக்கிறார்கள். அப்படி இறக்கவில்லையாயினும் அவர்கள் உடனடியாக நாஜிக்கள் கொன்றுத்தள்ளுகிறார்கள். கொஞ்சம் ரொட்டியும் தண்ணீரும் சாப்பிட்டாலே உயிர்பிழைத்து உழைக்க உகந்தவர்களாக இருப்பவர்கள் மட்டும்தான் அவர்களுக்குத் தேவை. மற்றவர்கள் அவர்களுக்கு மனிதக் குப்பைகளாக இருக்கிறார்கள். அறையும் குறையுமாக எரித்துப் போடுவதன் மூலம் அவர்கள் உலகத்தினடமிருந்து எதையும் எதிர்பார்க்காத நிலைக்கு மாற்றப்படுகிறார்கள்.

தான் சிறுவன் இல்லை என்பதை நிலை நாட்டுவதும் தன் தந்தை முதியவர் இல்லை என்பதை நிலை நாட்டுவதும் எலீ வஸீலுக்குப் போராட்டமாக இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் சிறுவர்களையும் முதியவர்களையும் பயனற்றவர்கள் பட்டியலில் சேர்த்து அவர்களை தினம், தினம் கொன்று வருகிறார்கள். இந்த நேரத்தில் அவனுடைய அப்பாவுக்கு சீதபேதி கண்டு உயிருக்குப் போராடுகிறார். அவர் துடிப்பாக இருப்பதாகக் காட்டுகிறான் எலீ. அவனுடைய முழு சக்தியையும் திரட்டி அவருக்காகப் போராடுகிறான். தன் கண் முன்னாலேயே மனித நேயம் நிலைகுலைவதைப் பார்த்து பேதலிக்கிறான்.

ஒரு வயதான தந்தை சிறு ரொட்டித் துண்டை மறைத்துவைத்துச் சாப்பிடுவதைப் பார்த்த அவருடைய மகனே, அவரை அடித்துக் கொன்றுவிட்டு அவருடைய இறுகிய கைவிரலுக்கிடையில் இருந்து ரொட்டியைப் பிய்த்துத் தின்பதைப் பார்க்கிறான். ஆனால் ரொட்டி அவன் கைக்கு வந்ததும் இன்னும் சிலர் அவன் கையில் இருந்து ரொட்டியைப் பறிக்கப் போராடுகிறார்கள். தந்தை, மகன் இருவருமே ஒருவரைத் தொடர்ந்து இன்னொருவருர் பலியாகிறார்கள். சாப்பாடும், தண்ணீரும் கண்ணில் படுவதே அரிதாக இருக்கிறது. இத்தனைக்குப் பின்னால் கடவுள் என்றொருவர் இருக்க வாய்ப்பில்லை என்று மக்கள் புலம்புகிறார்கள். புதிய வகை முகாம்களுக்குச் செல்லும்போது அங்கே சீவிப் போட்ட உருளைக்கிழங்கு தோல் போன்றவைதான் மகத்தான உணவாக அவர்களுக்குக் கிடைக்கிறது. தந்தையைப் பாதுகாக்க இறுதிவரை சிரமப்படுகிறான்.

நாஜி படையின் துப்பாக்கிகளிடம் இருந்து காப்பாற்றும் மரண ஒத்திகைகள் நடக்கின்றன. ஆனால் குளிரும் பசியும் நோயும் அவரை உருக்குலைக்கிறது. இரவு அவரைப் பார்த்துவிட்டு உறங்குகிறான். காலையில் அவர் படுத்திருந்த படுக்கை காலியாக இருக்கிறது. எரிப்பதற்காக அவர் கொண்டு செல்லப்பட்ட போது ஒருவேளை அவர் உயிருடன் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறான் அவனால் அழக்கூட முடியவில்லை. அவனிடம் அன்புக்காக அழுவது போன்ற ஆடம்பரத்திற்கெல்லாம் திராணியில்லை. மூச்சுவிடுவது, நகர்வது போன்ற முக்கியமான செயல்களுக்கு சக்தி தேவையாக இருக்கிறது. ஹிட்லர் வீழ்ந்தான் என்ற செய்தி கிடைக்கிறது. மிஞ்சி உயிருடன் இருந்தவர்களை வதை முகாமிலிருந்து மீட்கிறார்கள். நீண்ட நாள்களுக்குப் பிறகு அவர்கள் சாப்பிடுகிறார்கள். விலங்குகள் போல வெறித்தனத்துடன் பிடுங்கித் தின்கிறார்கள். எலீ வீஸல் போல பல அனாதைகள்.. குடும்பம், வீடு, சொத்து இழந்தவர்கள்.. அன்பு, ஆதரவு இழந்தவர்கள். வயிறு நிரம்பிய பின் அதற்கெல்லாம் வருத்தப்படுவதற்கு அவர்களுக்கு பிரக்ஞையும் நேரமும் கிடைத்தது. இப்போது அமெரிக்காவில் இதழாளராக இருக்கிறார். 150 பக்க அளவிலேயே அமைந்த இந்தச் சிறிய நூல் மனிதத் தன்மையை மிகப் பெரிய கேள்விக்குறி ஆக்குகிறது.

போற்றுகிற அத்தனை நாகரீகமும் கலாசாரமும் பண்பாடும் போர்க்கால அச்சுறுத்தலின் முன்பு எப்படி ஆட்டம் காண்கிறது என்று இதயத்தில் குத்தி உணர்த்தச் செய்கிறது. ரவி இளங்கோவன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நூல் மூலநூலின் அவலத்தை அப்படியே படம் பிடித்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு நேரடியாக தமிழிலேயே எழுதப்பட்ட வதைமுகாம் சித்திரவதை அனுபவங்கள் கிடைக்கும், அது இலங்கைத் தமிழர்கள் எழுதியதாக இருக்கும். மனிதர்கள் அனைவரும் வெகு சீக்கிரமே ஒருத்தரை ஒருத்தர் மதித்துக் கொண்டும் நம்பிக்கையோடும் வாழ ஆரம்பித்து இந்த மாதிரி நூல்கள் வராமல் இருக்க வழி ஏற்பட வேண்டும் என்பதுதான் இப்போதைய கோரிக்கையாக நிற்கிறது.

பதிப்பகம்:
யுனைட்டட் ரைட்டர்ஸ்,
எலீ வீஸல்,
தமிழில்: ரவி இளங்கோவன்,
130/2 அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை- 86.
ரூ.70

செவ்வாய், ஜூலை 07, 2009

சென்ட்ரல் ஸ்டேஷன் ஷெர்லாக் ஹோம்ஸ்!


கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பலாத்காரம், பயங்கரம், திருடன், போலீஸ், ரத்த வெள்ளம், கள்ளக் காதல், பலான பார்ட்டி, அஜால் குஜால் உள்ளிட்ட வார்த்தைகளையே உள்ளடக்கிய செய்திகளைப் படிப்பதும் அதே போன்ற வாக்கியங்களுடன் செய்திகளை எழுதுவதுமாக மூன்றாண்டுகளுக்கு மேல் வாழ்ந்தேன். போலீஸ் செய்தி என்ற கிரைம் டிடெக்டிவ் வார இதழின் பொறுப்பாசிரியர் பணி.

என் சுபாவத்துக்குச் சற்றும் பொருத்தமில்லாத வேலை. 89ஆம் ஆண்டில் சுமார் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பத்திரிகை வேலை கிடைப்பதென்பது நினைத்துப் பார்க்க முடியாதது. நண்பர் கவிதா பாரதி மேற்படி வார்த்தைகளின் சுமை தாங்க முடியாமல் அவருக்குப் பதிலாக, என்னை அங்கே பணயம் வைத்துவிட்டார்.

காலையில் அலுவலகம் சென்றதும் அன்று வெளியான செய்திகளில் ரத்தத்தின் சூடு ஆறாத, குரோதம் கொப்பளிக்கிற, துரோகம் நிறைந்த செய்திகளைக் குறித்துக் கொண்டு அதை நிருபர்களிடம் தெரிவித்து பின்னணித் தகவல்களைத் திரட்டச் சொல்கிற வேலை எனக்கு. செய்தித் தாளைத் திறந்ததுமே பளீர் பளீரென்று அத்தகைய செய்திகள்தான் கண்களை ஈர்க்கும். பக்கத்தில் இருக்கும் லா.ச.ரா.வுக்கு சாகித்ய அகாதமி விருது என்ற செய்தி உள்மனத்தின் அதீத பிரயத்தனத்துக்குப் பிறகுதான் மெல்ல பலகீனமாக ஒளிரும். அப்படிப் பழகிப் போயிருந்தது.

ஒருநாள் அலுவலகம் சென்றதும் ஒரு ரகசிய போன். "ஒரு குற்றவாளியை போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பிலேயே அடித்துக் கொன்றுவிட்டார்கள். பிணத்தை இன்று இரவு வேறு இடத்துக்கு மாற்ற இருக்கிறார்கள். இரவு சரியாக பனிரெண்டு மணிக்கு நீங்கள் சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய வாசலில் இருந்து பார்த்தீர்கள் என்றால் தெரியும். அங்கே எடைமிஷின் அருகே நில்லுங்கள் நேரில் வந்து தகவல் சொல்கிறேன்.''

"நீங்கள்?''




டொக்.

அடுத்த நிமிஷம் அலுவலகம் சுறுசுறுப்பாகிவிட்டது. அடுத்தவார அட்டைச் செய்திக்கு ஒரு பிரத்யேகச் செய்தி கிடைத்துவிட்டது என்று பரபரப்பாகிவிட்டோம்.

கிளம்பும்போது தனியாக உங்களை அங்கே வரவழைத்துத் தீர்த்துக் கட்டுவதற்கு யாரேனும் முடிவு செய்திருக்கலாம் என்று பீதியைக் கிளப்பிவிட்டார் ஒரு நிருபர். எவனோ சும்மா உளறிக் கொட்டியிருக்கிறான் இதைப் போய் பெரிதாக எடுத்துக் கொண்டு போகிறீர்களே.. வேலையைப் பாருங்கள் என்றார் இன்னொருவர். ஆனாலும் உண்மையாக இருந்து செய்தியை விட்டுவிட வேண்டியதாக ஆகிவிட்டால்?

போய்ப் பார்த்துவிடுவது என்பதற்கு அதிக வாக்குவிழுந்ததால் ஜனநாயகப்படி கிளம்ப வேண்டியதாகிவிட்டது. இப்போது ஆனந்தவிகடன் தலைமை வடிவமைப்பாளராக இருக்கும் பாண்டியன், வண்ணத்திரையின் பொறுப்பாசிரியராக இருக்கும் நெல்லை பாரதி ஆகியோரும் அங்கு அந்த நேரத்தில் பணியாற்றி வந்தனர். அவர்களும் எனக்குத் துணையாக வந்தனர். இரவு 11.30க்கு ஆட்டோ பிடித்துப் போய் இறங்கினோம். பாதுகாப்புக்காக இரண்டு இரண்டு பேராகப் போனோம்.

எடை மிஷின் அருகே நான் நின்றேன். என்னை யாராவது தாக்க முற்பட்டால் காப்பாற்றும் தூரத்தில் மற்றவர் அமர்ந்திருந்தனர். நான் அங்கிருந்து மாடியில் இருக்கும் சென்ட்ரல் ஸ்டேஷன் காவல் நிலையத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். யாராவது மாடியில் இருந்து இறங்கினால் ஏறினால் எல்லாமே சந்தேகத்தைக் கிளப்பிக் கொண்டிருந்தது. மணி பன்னிரண்டு ஆனது. மறுநாளுக்கான கால்மணியும் அரைமணியும் நகர்ந்து கொண்டிருந்தது. எதிர்பார்த்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. யாரும் வந்து சந்திக்கவும் இல்லை. விடிய, விடிய அமர்ந்து பார்த்துவிட்டு டீ குடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினோம். அதற்கு மேல் அங்கு நின்றிருந்தால் சந்தேக கேஸில் எங்களை அந்த ஸ்டேஷனுக்குள் அழைத்துச் சென்று இருப்பார்கள். அப்படி ஒரு பிணம் இருந்திருந்தால் எங்கள் கண்களுக்குச் சிக்கியிருக்கும்.

யாரோ ஏமாற்றிவிட்டார்கள் என்றும் நாம் வருவதைத் தெரிந்து அவர்கள் நேரத்தை மாற்றிக் கொண்டார்கள் என்றும் பேசி ஓய்ந்துபோனோம்.

அங்கிருந்து வேறு பத்திரிகைக்குப் போய், வெகு ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென்று ஒருநாள் அங்கு வேலை பார்த்த ஒரு நிருபரின் விளையாட்டு இது என்று தோன்றியது. இப்படியான சுவாரஸ்யமான சில செய்திகளைக் கற்பனையாக உருவாக்கி நிஜம் போலவே தந்தவர் அவர். எனக்கு அந்த ஞானோதயம் வந்து அவரை எப்படியாவது கேட்டு உண்மையைத் தெரிந்து கொள்ள ஆவல் கொண்டேன். தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசரம் தீவிரமாகத் தொற்றிக் கொண்டது. இருபது வருடம் ஓடிப் போன பின்பு நான் யூகித்தது சரியா என்று தெரிந்து கொள்ளும் பரபரப்பு. விசாரணையின் நுனியில் அவர் இறந்து போய்விட்டதாக அறிந்தேன்.

அடடா எப்படி இறந்துபோனார் என்று அடுத்து ஆரம்பமானது இன்னொரு விசாரணை.

செவ்வாய், ஜூன் 30, 2009

யாகவா முனிவர் சுனாமியை அறிந்திருந்தாரா?





சமீபத்தில் ஜெயக்குமார் என்ற நண்பர் கடலில் படகில் சென்று வருவதற்கு அழைத்தார். அவர் என் ‘மீனவ நண்பர்'. கடலையும் சினிமாவையும் இணைத்து வைத்ததில் அவருடைய பங்கு ஏராளம். சினிமாவில் தமிழகக் கடல் சம்பந்தப்பட்டிருக்குமானால் அதில் அவர் சம்பந்தப்பட்டிருப்பார். ‘தசாவதாரம்’ படத்தில் கமல்ஹாசனைப் படகில் கட்டி, கடலில் தூக்கி எறியும் காட்சியில் அவருடைய படகுதான் பயன்படுத்தப்பட்டது. சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்டவர் அவர். ஓர் இழையில் உயிர் தப்பியவர். அவரைச் சார்ந்திருந்த பலரும் உயிரையும் உடமையையும் இழந்தனர். இனிக் கடல் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டார் போலத்தான் நினைத்தேன். சில நாள்களிலேயே அவர் மீண்டும் கடலுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்.

அவர்களின் வாழ்க்கை கடலால் ஆனது. அதற்கு முன்னால் தேவாரம் காவல் அதிகாரியாகப் பணியாற்றியபோது மீனவக் குடியிருப்புகளை அகற்ற முனைந்த போதும் மீனவர்கள் துப்பாக்கிக்கு அஞ்சாமல் உயிரைக் கொடுத்தார்களே அன்றி கடலைவிட்டு அகலவில்லை. நிலத்தையும் நீரையும் படகால் பாவு பின்னிக் கொண்டிருக்கும் தீரமிக்க வாழ்க்கை அவர்களுடையது. கால் பங்கு நிலத்தைச் சுற்றி எப்போதும் சூழ்ந்திருக்கும் கடலின் ஆபத்து, ஒரே ஒரு டாடாவையும் அவரைச் சுற்றியிருக்கும் அவருடைய ஒரு லட்சம் தொழிலாளர்களையும் போன்றது.

நண்பரின் கடல் உலா அழைப்புக்கு இன்னும் நான் செவி சாய்க்கவில்லை. காரணம் மேற் சொன்ன ஆபத்தின்பால் அல்ல. சுனாமிக்கு முன்பு இருந்தே அவர் அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார், நான் ஏதோ ஒரு காரணம் சொல்லி, தவிர்த்து வந்திருக்கிறேன். அதற்கு நிஜமான காரணம், நான் கடற்கரையில் காற்று வாங்காமல் வெற்றிடம் வாங்குபவனாக இருப்பதுதான்.

கடற்கரைக்குச் செல்வதற்கு எனக்குத் துணிச்சல் இருந்ததில்லை. மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதும் தினமும் ஜன்னல் வழியாகவே பார்க்க முடிகிற கடலை, நெருங்கிச் சென்று பார்த்தது ஓரிரு முறையாகத்தான் இருக்கும். இத்தனைக்கும் சென்னையிலேயே பிறந்து வளர்ந்து கடற்கரை ஓரக் கல்லூரியில் படித்தும் ஒட்டு மொத்தமாக இருபது அல்லது முப்பது முறைதான் கடற்கரைக்குச் சென்றிருப்பேன். கடற்கரைக்குச் சென்று மணலில் விளையாடுவதோ, பஜ்ஜி சாப்பிட்டு பலூன் சுடுவதோ, காற்று வாங்குவதோ, வாக்கிங் செல்வதோ கடலை ‘மிஸ் யூஸ்' செய்வதாகத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. இது ஒரு வகை மன நோயாக இருக்கலாம்; அல்லது ஒருவகை மரியாதையாகவும் இருக்கலாம்.

உதாரணத்துக்கு பாரதியாரைப் பார்க்கச் சென்று "கொஞ்சம் வத்திப் பெட்டி இருந்தா கொடுப்பா" என்று கேட்டால் எப்படி இருக்கும்? பெரிய மனிதரை ஒரு தகுந்த காரணத்துடன் சந்திக்க வேண்டும் என்பது போன்றதொரு தயக்கம். கடலுடனான நெருக்கம் அப்படி ஆகிவிடக்கூடாதென்று பயப்படுகிறேன். நான் இப்படி நினைப்பதெல்லாம் கடலுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

கடல் எதிரில் நிற்கும்போது எதிரில் இருக்கும் பிரமாண்ட பரப்பைப் போல மனதுக்குள் ஒரு மகா வெற்றிடம் ஏற்படுகிறது. சொல்லப் போனால் அது கடலைவிடப் பெரியதாக இருக்கிறது. மனதில் உருவாகும் சுனாமி, வலிக்காமல் விழுங்குகிறது. கொஞ்ச நஞ்ச அகந்தையும் அழிந்து போய் கடல் துளி போல அங்கே கிடக்க வேண்டியதாக இருக்கிறது. சுற்றியிருப்பவர்களை எல்லாம் மறந்து கடலே பிரதானமாக ஆக்கிரமித்துவிடுகிறது. கடற்கரையிலிருந்து வீடு திரும்பிய பின்னும் அந்த வெறுமை, நிரப்ப வசதியின்றி அப்படியே இருக்கிறது. கடலின் பிரமாண்டம் அத்தகையது. சிலரைச் சந்தித்து கோடி விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்று யோசித்துவைத்து, நேரில் பார்க்கும்போது வெறுமனே வணக்கம் மட்டும் சொல்லிவிட்டு வந்துவிடுவதில்லையா அத்தகைய நிறைவுறா ஏக்கம்.

இந்த எண்ணம் மாறிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் சிறுவயதில் குடும்பத்தினருடன் அண்ணா சமாதி பார்த்துவிட்டு கடற்கரைக்குச் சென்ற தருணத்தில் நான் பார்த்த கடல், வேறு யோசனையை முன் வைத்தது.

நான் பணக்காரனாவது இந்தக் கடலின் கையில்தான் இருக்கிறது என்பதுதான் அந்த யோசனை. கடல் நீரில் இருந்து உப்பு தயாரிக்கப்படுவது பற்றிப் படித்திருந்தாலும் கடலைப் பார்த்தபோது, அதை வற்றச் செய்தால் ஏகப்பட்ட உப்பு தயாரிக்க முடியும் என்று தெரிந்தது. கடல் நீரை உப்பாக்கி விற்றுப் பணக்காரர் ஆகாமல் மக்கள் ஏன் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியாமல் தவித்தேன்.

வயதுக்கு ஏற்ப கடலை அனுபவிக்க முடிவது சாத்தியமாக இருக்கிறது. காலம் இன்னொரு அனுபவத்தைத் தரலாம்.

இன்னும் ஒரு விஷயத்தையும் சொன்னால் இந்தக் கட்டுரை நிறைவாக இருக்கும் என்று தோன்றுகிறது.


90களின் ஆரம்பத்தில் யாகவா முனிவர் என்று ஒருவர் உலக நடப்புகளை முன் கணித்துச் சொல்லிக் கொண்டிருந்தார். எதைப் பற்றிக் கேட்டாலும் அவர் யோசிக்காமலேயே பதில் சொல்பவர் போல சொல்லுவார். சந்தித்துவிட்டுத் திரும்பியவர்கள் சிரித்துச் சிரித்துச் சொல்லுவார்கள். சதா சிகரெட்டைப் பிடித்தபடி இனன்ய மொழி என்ற இலக்கணத்துக்கு அடங்காத பாஷையைப் பேசுவார். காக்கா, குருவி பாஷையெல்லாம் தெரியும் என்பார். அவர் கணித்துச் சொன்னதில் சில..

கலைஞர் அடுத்த ரவுண்டு ஆட்சிக்கு வருவார். டெல்லியே இவர் பேச்சுக்குக் கட்டுப்படும் என்றார். தேவையான அளவுக்குக் கட்டுப்பட்டதாகத்தான் தெரிகிறது.

2007க்குப் பிறகு இந்தியாவிடம் அமெரிக்கா கடன் கேட்கும் நிலைமை வரும் என்று சொல்லியிருந்தார். அங்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சரிவு இதையும்கூட பலிக்க வைக்கலாம்.

கடல் பொங்கி மயிலாப்பூர் வரைக்கும் பாயும் என்று அவர் சொன்னது சுனாமி உருவான அன்று ஞாபகம் வந்தது.

அவரைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ எனப் பேதலித்துத் தவித்தேன்.

இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு இன்னொன்றைச் சொல்லியிருந்தார். அதை வைத்து உணர்ச்சி வசப்படுவதைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

"எனக்கு இப்போது இரண்டாயிரம் வயசாகிறது... இன்னும் இரண்டாயிரம் வயசு இருப்பேன்.''

வியாழன், ஜூன் 25, 2009

பல நேரங்களில் பல மனிதர்கள்!




தவறு செய்யாமல் இருப்பதுதான் மனிதப் பிறவியின் நோக்கமாக இருக்கமுடியும். அதற்கு நிறைய அனுபவம் தேவைப்படுகிறது. அந்த அனுபவத்தைப் பெறுவதற்கு நாம் சில தவறுகள் செய்ய வேண்டியிருக்கிறது.. எண்ணிறந்த மனித விசித்திரங்களின் சுழற்சி இது.

ஒரு சிலர் முதலில் இருந்து ஆரம்பிக்கிறார்கள்; அதாவது தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதாக. சிலர் சில தவறுகளைக் கடந்த அனுபவங்களில் இனி இது போல நடந்து கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு வருகிறார்கள். பலர் தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறார்கள், திருத்திக் கொள்வதற்கு நேரம் இருப்பதில்லை. சிலருக்கு திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே தெரிவதில்லை. தெரிந்தாலும் ஏன் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற வித்தியாசமானவர்களும் இருக்கிறார்கள். மொத்தத்தில் தவறு தவிர்க்க முடியாத உலக இயல்பாக இருக்கிறது. பொது அர்த்தத்தில் தவறு என்பது அறியாமல் செய்யப்படுவது எனப்படுகிறது. அல்லது அவசரத்தில். புத்துயிர்ப்பு நாவலின் அடிநாதமாக இருப்பது தவறுக்கு வருந்தி அதற்கு பிராயசித்தம் தேடுவதுதான்.

உண்மையில் தவறு தனியாகவும் பிராயசித்தம் தனியாகவும் இருக்கிறது. பிராயசித்தத்தின் மூலம் தவறை சரி செய்துவிட முடிவதில்லை என்பது நாவல் நம் மன ஆழத்தில் குருதிக் கசிவோடு உணர்த்தும் பாடம்.

டால்ஸ்டாய் எழுதிய புத்துயிர்ப்பு நாவலின் கதாநாயகன் நெஹ்லூதவ், பெரிய பணக்காரர். பெரும் பண்ணையார். அவருக்கு ஒரு நாள் காலை நீதி மன்ற வழக்கு ஒன்றில் ஜூரியாகப் பங்கேற்பதற்கு அழைப்பு வருகிறது. நகரின் முக்கியமான பிரஜைகளை வழக்கை விசாரிக்கும்போது உடனிருந்து கேட்க வைத்து தீர்ப்புக்கு முன் அபிப்ராயம் கேட்கும் வழக்கம் அப்போது இருக்கிறது. நெஹ்லூதவ் போலவே இன்னும் சிலரும் நீதிமன்றத்தில் இருக்கிறார்கள்.

மாஸ்லவா என்ற விபச்சாரி விசாரணைக்கு அழைக்கப்படுகிறாள். அவள் பணத்துக்காக ஒருவனைக் கொன்றுவிட்டதாக வழக்கு. அவளைப் பார்த்த மாத்திரத்தில் நெஹ்லூதவ் நிலை குலைந்து போகிறார். ஏனென்றால் அவள் தன் அத்தை வீட்டில் வேலைபார்த்து வந்த கத்யூஷா என்ற கள்ளம்கபடமற்ற சிறுமி. இளைஞனாக ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஒரு ஈஸ்டர் தினத்தில் அவளை வலுக்கட்டாயமாக இணங்க வைத்து உறவு வைத்துக் கொள்கிறார். காமப் பித்து தலைக்கேறி ஆடுகிறது. உயிருக்குயிராகக் காதலிப்பதாக, திருமணம் செய்து கொள்வதாகப் பிதற்றுகிறார். செலவுக்கு நூறு ரூபிளைத் திணித்துவிட்டுச் செல்கிறார். ஆனால் அவர் ராணுவப் பணி முடிந்து அடுத்த ஆண்டுகளில் வந்த போது அங்கே கத்யூஸூ இல்லை. அவள் கர்ப்பம் தரித்து, பிரசவித்து, குழந்தையை நோய்க்குப் பறிகொடுத்துப் பிழைப்புக்கு வழியில்லாமல் ஆசை நாயகியாக அவதாரமெடுக்கிறாள். அப்படித்தான் இப்போது கைதியாகி, விசாரணைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறாள்.

தீர்ப்புக்கு அபிப்ராயம் சொல்வதற்கு வந்த பெரிய மனிதரான நெஹ்லூதவ், எங்கே அவள் தம்மைப் பார்த்துவிடுவாளோ என்று பதட்டமாகிறார். அவள் எல்லா ஜூரிகளையும் ஏதேச்சையாகப் பார்க்கிறாள். ஆனால் நெஹ்லூதவ் பதைக்கிறார். இதோ இவன்தான் என் வாழ்க்கை சீரழிந்ததற்குக் காரணம் என்று கத்தி விடுவாளோ என்று நடுங்குகிறார். ஆண்டுகள் பல ஆகிவிட்டதால் அவளுக்கு நெஹ்லூதவ்வின் முகம் நினைவில் இல்லை.

விசாரணை பிறிதொருநாள் தொடரும் என்று அறிவிக்கப்படுகிறது. சிறையில் கத்யூஸூவைச் சந்திக்க ஓடுகிறார். சிறைக் கைதிகளைப் பார்க்க வந்த பலரும் கம்பிச் சட்டங்களுக்கு மறுபக்கத்தில் இரைச்சலாகக் கத்திக் கொண்டிருக்கிறார்கள். கத்யூஷா வுக்கு அந்தச் சத்தத்தில் நெஹ்லூதவ் சொல்லும் எதுவும் சரியாகக் கேட்கவில்லை. உன்னை இந்த அளவுக்கு ஆளாக்கினவன் நான்தான் என்பதை எடுத்துச் சொல்கிறான். ஞாபகம் வந்தாலும் அவளுக்கோ அவன் மீது கோபம் ஏதும் வரவில்லை. பெரிய பணக்காரன் சிக்கியிருக்கிறான். ஆன வரைக்கும் பணத்தைக் கறந்துவிட வேண்டியதுதான் என்று தீர்மானிக்கிறாள். செலவுக்கு ஏதாவது பணம் கொடுத்துவிட்டுப் போ என்கிறாள். குறுக்கும் நெடுக்குமாகக் காவல்காரன் சுற்றுவதால் அவன் மறு முனைக்குச் சென்று திரும்புவதற்குள் கொடு என்கிறாள். அவரோ குற்ற உணர்வால் அவளையே மணந்து கொண்டுவிட வேண்டும் என்பதாகத் துடிக்கிறார். மாஸ்லவாவாக பெயரை மட்டும் மாறிவிடவில்லை, அவளே மாறிப் போய் இருக்கிறாள். அவளுக்குப் பணம்தான் குறிக்கோளாக இருக்கிறது.

ஆனால் அவளுக்கு சிறை தண்டனை உறுதியாகிறது. சைபீரியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறாள். குற்ற உணர்வுக்கு ஆட்பட்ட நெஹ்லூதவ்வும் அவளுடனேயே சைபீரியாவுக்குப் பிரயாணிக்கிறார். கைதிகள் ஆடு மாடுகள் போல சைபீரியாவுக்கு ஓட்டிச் செல்லப்படுகிறார்கள். இவரும் அவர்களுடன் சேர்ந்து வதைபடுகிறார். ஜெயிலுக்குப் பக்கத்திலேயே தங்கியிருந்து சிரமங்களை ஏற்றுக் கொள்கிறார். கடைசிவரை கத்யூஷா வுக்கு நெஹ்லூதவ்மீது காதல் ஏற்படவே இல்லை. அவரை கணவராக ஏற்றுக் கொள்ளவும் அவளுக்கு விருப்பமே இல்லை.

எனக்காக குற்ற உணர்வுக்கு ஆளாக வேண்டாம். நீங்கள் என் வாழ்க்கையைப் பாழாக்கவில்லையென்றாலும் வேறு யாராவது இப்படித்தான் என்னை ஆளாக்கியிருப்பார்கள் என்கிறாள். ஏதோ ஒரு கட்டத்தில் என் போன்ற ஆதரவற்ற பெண்ணின் வாழ்க்கை அப்படித்தான் ஆகும். அதற்கு நீங்கள் பொறுப்பேற்று வருந்த வேண்டாம் என்கிறாள். சிறையிலேயே வேறு ஒருவரை அவள் விரும்ப ஆரம்பிக்கிறாள். ஏதோ ஒரு புள்ளியில் அவருக்குத் தன் குற்றத்துக்கான தண்டனை பூர்த்தியடைந்துவிட்டதாக மனம் தேறுகிறார்.

சுமார் 850 பக்கங்கள் கொண்ட இந்த நாவல் துன்பியல் காவியச் சுவையை அளிக்க வல்லது. மனிதர்களின் குற்ற உணர்வை ரணச் சிகிச்சை செய்து ஆற்றும் திறம் படைத்தது இந்த நாவல். செய்த தவறுகளுக்காக வேதனைப்படும் இதயங்களுக்கு மிகவும் நெருக்கமான உணர்வைத் தருவதாக இருக்கும். அல்லது செய்த தவறுக்கு வருந்த செய்யும் மாயவித்தையை இந்த நாவல் செய்யும். அதனாலேயே உலகம் முழுதும் உள்ள பல இன, மத, மொழியினரையும் வாசகராக பெற்ற மகத்தான நாவலின் பட்டியலில் இது இருக்கிறது.

ஈஸ்டர் தினத்தன்று அந்த அதிகாலைப் பொழுதில் கத்யூஷாவையும் நீதிமன்றத்தில் இருந்து அழைப்பு அனுப்பப்படும் நாளின் நெஹ்லூதவ்வின் காலைப் பொழுதையும் மிக அற்புதமான ஓவியமாகத் தீட்டியிருக்கிறார் பிரபல ஓவியர் பாஸ்தர்னாக். நாவல் படிக்கும் வாசகனுக்குக் கிடைக்கும் மனச்சித்திரத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தவல்லது அது.

துன்பியலுக்கு முக்கியத்துவம் தரும் நாவலாக இருப்பினும் டால்ஸ்டாய்க்கே உரிய நகைச்சுவையும் ஆங்காங்கே இதில் உண்டு. அது மேட்டுக்குடி மனப்பான்மையைக் கிண்டலடிக்கும் வகையைச் சேர்ந்தது.

உதாரணத்துக்கு நீதிமன்றத்துக்கு வரும் நீதிபதி கோர்ட் அரங்கத்துக்குள் வரும்போது வாசலில் நின்று இப்படியோசிப்பார். தாம் சாப்பிட்டு வரும் வயிற்றுக்கடுப்புக்கான சூரணம் நல்ல குணம்தருமா? வாசலில் இருந்து தம் இருக்கைக்குச் செல்லும் வரை தாம் எத்தனை அடிகள் வைக்கிறோமோ அது மூன்றால் முழுதுமாக வகுபடும் எண்ணாக இருந்தால் தம் வயிற்றுக்கடுப்பு நீங்கும் என்று வரையறுத்துக் கொள்வார். கோர்ட்டில் இவருடைய தீர்ப்புக்காக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கைதிகள் இருப்பார்கள். இவருக்கோ இப்படி ஒரு யோசனை. ஒவ்வொரு அடியாக எண்ணிக் கொண்டே வருவார். இருபத்தாறு அடிகள்தான் வரும். அது மூன்றால் வகுபடாத எண். அவசரமாக இருக்கைக்குப் பக்கத்தில் ஒரு சிறிய அடியை எடுத்து வைத்து 27 அடியாக மாற்றிவிடுவார்.
இந்த மாதிரியான மனித குணங்களின் அரிய படப்பிடிப்பு இதில் நிறையவே உண்டு. அது வேடிக்கையாகவும் வேதனையாகவும் வியப்பாகவும் இது எப்படி இவருக்குத் தெரியும் என்று ஆச்சர்யப்படுவதாகவும் இருக்கும்.

ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவலுக்கும் இதற்கும் பல ஒற்றுமைகள் எனக்குத் தென்பட்டன. ஆனால் புத்துயிர்ப்பைப் பொறுத்தவரை பல நேரங்களில் பல மனிதர்களை பாதிப்பதாக இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எல்லோரும் வாழ்வில் ஒரு தரமாவது படிக்க வேண்டிய நாவல்.

புத்துயிர்ப்பு,
லியோ டால்ஸ்டாய்,
என்.ஸி.பி.எச். வெளியீடு,
41 பி, சிட்கோ இண்டஸ்ட்ரீஸ்,
அம்பத்தூர்,
சென்னை- 98.
போன்: 26359906, 26251968.
ரூ. 275

செவ்வாய், ஜூன் 23, 2009

பங்கு ஆட்டோ பயணம்!




சென்னையில் ஷேர் ஆட்டோவில் பிரயாணிக்கிற மனிதர்களுக்கு சொந்த பந்தத்தோடு இன்பச் சுற்றுலா வந்தது மாதிரி ஒரு உணர்வு இருக்கும். அப்படி ஒரு நெருக்கம். பஸ்ஸில் நாம் ஒரு பெண்ணின் அருகில் அமரத் தயங்குவோம். அல்லது நம் அருகில் ஒரு பெண் வந்து அத்தனை சுலபத்தில் அமர்ந்துவிட மாட்டாள். ஷேர் ஆட்டோவில் இந்த இலக்கணம் இல்லை.

ஒருவரோடு ஒருவர் இணக்கமாக அமர்கிறார்கள். எதிரே அமர்பவரின் கால் முட்டி நம் காலின் மீது படும். ஒரு சிலர் மட்டும் "சாரி" சொல்கிறார்கள். பலர் சொல்வதில்லை. அது தேவைப்படுவதும் இல்லை. "இந்தப் பையைக் கொஞ்சம் அப்படி வையுங்களேன்'' என்று நம்மிடம் கொடுத்து பாரத்தை இறக்கி வைக்கிறார் ஒரு பெண்மணி. "ப்ளூ ஸ்டார் வந்தா நிறுத்தச் சொல்லுங்களேன்'' என்கிறார் ஒரு பெண்மணி நம் முதுகைத் தொட்டு. ஐந்து பேர்தான் அதில் ஏற்றப்பட வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது போலும். அதைப் பின்பற்றுவதை பார்க்கவே முடியாது. ஒன்பது பேர் வரை ஏறிக் கொள்கிறார்கள். ஒருவர் மூச்சை மற்றவர் பெற்றுக் கொள்ளாமல் எந்த ஷேர் ஆட்டோ பயணமும் முடிவுக்கு வருவதில்லை. எல்லாவற்றையும் ஷேர் செய்து கொள்வதால் இதற்கு இந்தப் பெயர் பொருத்தமாகத்தான் இருக்கிறது.

எதிரே வரும் ஷேர் ஆட்டோக்காரர் "பார்த்துப்பா ரவுண்டானாவுல போலீஸ் நிக்கிறான்'' என்று தகவல் கொடுக்கிறார். நம் ஆட்டோக்காரர் சில பல சந்துகள் வழியாக நுழைந்து ரவுண்டானாவைத் தவிர்த்து வேறு பக்கமாகச் செல்கிறார். ஆட்டோவில் இருப்பவர்கள் மார்க்கம் எதுவாக இருந்தாலும் அடையப் போகும் இலக்கு ஒன்றுதான் போன்ற ஒரு சரணாகதி தத்துவத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். ஆட்டோக்காரர் தடம் மாறிப் போவதை அவர்கள் தட்டிக் கேட்பதில்லை.

பாயிண்ட் டு பாயிண்ட் பயணிப்பவர்களாக இருந்தால் வார இதழை மடக்கிப் பிடித்துப் படித்துக் கொண்டு வருகிறார்கள். சிலர் செல் போனில் எஃப்.எம். வைத்து காதில் ஹெட் போன் செருகி பாடலில் கண் சொருகி வருகிறார்கள். சிலருக்கு எஸ்.எம்.எஸ். பணிகளை முடிக்க ஷேர் ஆட்டோ பயணம் தோதாக இருக்கிறது. சிலர் ஏறி உட்கார்ந்த மறுவினாடி போனைப் போட்டு ஒன்பது பேருக்கும் கேட்க சப்தமாகப் பேசுவோரும் உண்டு. சிலர் பக்கத்தில் இருப்பவர்க்கும் கேட்காதவாறு பேசுவார்கள். ட், ச் போன்ற சில வல்லின ஒற்றெழுத்துகள் மட்டும் கேட்கும். பக்கத்தில் இருப்பவர்களைத் தவிர்க்க விரும்புபவர்களுக்குச் செல்போன்தான் சிறந்த ஆயுதம். தானுண்டு தன் செல்போனுண்டுபோல இருப்பார்கள்.

முகப்பேரில் இருந்து ஜெமினி போகிற ஆட்டோ. எனக்குப் பக்கத்தில் நாமம் போட்ட ஒருவர் ஏறி அமர்ந்தார். "எபோவ் சிக்ஸ்டிலாம் ட்ரெய்ன்ல பாதி டிக்கெட்தான் தெரியுமோல்யோ?'' என்று கேட்டார் ஆட்டோ ஓட்டுநரிடம். அவர் "தெரியாது சாமி'' என்றார் ஆரம்பத்தில். "ஷேர் ஆட்டோவில மட்டும் அநியாயமா வாங்றேளே. நான் பாதிக் காசுதான் தருவேன்.''

சட்டென்று எல்லோரும் முன்னே உந்தப்பட்டோம். ஆட்டோவை அப்படியே சரக்கென பிரேக் போட்டு நிறுத்தி "காசே தரவேணாம். நீ இங்கியே எறங்க்கோ.. சாவுகிராக்கி. காலங்காத்தால'' என்றார்.

"ஏடாகூடமா பேசப்படாது.. எப்படி சாவுகிராக்கினு சொல்லலாம்? திருப்பதியிலேயே வயசானவாளுக்கு தனிக் க்யூல பிரியாரிட்டி கொடுத்து அனுப்பறா... நீ என்னடானா லோகத்தில எதுக்கும் கட்டுப்படமாட்டேன்னு சொன்னா எப்படி?''

"ஐயரே.. நீ எறங்கப் போறீயா, இல்லையா?'' - ஆட்டோவின் கியர் லிவரை மூர்க்கமாகப் பார்த்தபடி கேட்டார் ஓட்டுநர்.

டயம் ஆகுதுப்பா என்று அதற்குள் ஆட்டோவில் குரல்கள். "அங்க வந்து தகராறு பண்ணே.. அவ்வளவுதான்'' என்று மட்டும் சுருக்கமாகச் சொல்லிவிட்டு ஆட்டோவைக் கிளப்பினார்.

முழுக்கட்டணத்தையும் கொடுத்துவிடுவாரா, பாதிக் கட்டணம்தான் தருவாரா? சேரும் இடத்தில் இது எப்படி முடியும் என்று எனக்கு ஆர்வமாகிவிட்டது.

"நீங்க எங்க போறேள்?''- இது என்னைப் பார்த்து. எதற்காக என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதற்குள் நான் பதிலைச் சொல்லிவிட்டிருந்தேன்.

"நீங்க என்ன பண்ணுங்க. ஸ்டெர்லிங் ரோட் கார்னர்ல எறங்கி அங்கிருந்து 47 புடிங்க... ஏ,பி,சி எதுவாக இருந்தாலும் போவும். பச்சையப்பாஸ் காலேஜ் கேட்டு இறங்கிடுங்க'' கேட்காமலேயே வழி சொன்னார்.

"இல்லை சூளை மேட்ல இறங்கி நடந்து போயிடுவேன்'' என்றேன்.

"சூளைமேட்ல இறங்கி எப்படிப் போவீங்க?''

வலிந்து வழி சொல்ல வந்தவர் என்னிடம் வழி கேட்டுக் கொண்டார். ஆனாலும் இது அவர் எனக்கு உதவி செய்த லிஸ்டில்தான் அடங்கும் போல் இருந்தது.

"என்னைப் போய் ஐயருங்கிறான்.. அவன் கிட்ட என்ன பேசறது?'' என்றார் இறுக்கிப்பிடித்த தடித்த குரலில். அது ஆட்டோக்காரருக்கு நிச்சயம் கேட்டிருக்கும். என்னையும் ஐயங்காரரின் உடந்தையாக நினைத்துவிடுவான் போல பயமாக இருந்தது. அந்த இடுக்கான இடத்தில் சற்றே தள்ளி உட்கார முயன்றேன்.

ஆட்டோக்காரர் சட்டைசெய்யவில்லை. அவர் ‘சிவனே' என்று வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார், வண்டியில் இருக்கும் வைணவரை மறந்து.

"குடும்பத்தில பையன், பொண்ணு, பேரன், கொள்ளுப் பேரன் எல்லாரையும் ஆட்சியில கொண்டாந்து வுக்கார வெச்சுட்டான். ஜனங்க அவனுக்குத்தான் ஓட்டுப் போடுது. ஒண்டிக்கட்டையா ஒருத்தி இருக்கா அவளுக்குப் போடமாட்டேங்கிறா'' என்ன தைரியத்திலேயோ சத்தமாகச் சொன்னார். திடுக்கிட்டு அவரைப் பார்த்தேன். "வளர்ப்பு மகனும்கூட இல்லையே..'' எனக்கு அதில்தான் சந்தேகம் போல தெளிவுபடுத்தினார்.

எதைச் சொன்னாலும் பெருத்த விவாதமாக மாற்றுவதற்குத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். தலையசைத்தால்கூட அதைப் பெரிய வாய்ப்பாக்கிக் கொண்டு பேசுவார் என்று அசையாமல் இருந்தேன். உறங்கும் நேரம் தவிர எல்லா நேரத்திலும் பேசுவார் போல. நானும் என் செல் போனைத் துணைக்கு எடுத்தேன். அவர் என்ன விலை? என்று ஆரம்பித்தார். "நான் செல் வைச்சுக்கறதில்லே'' என்றார் தொடர்ந்து.

நான் சூளைமேட்டுக்கு முன்னாடியே இறங்கிவிட்டேன், "இங்க ஒருத்தரைப் பார்க்க வேண்டியிருக்கிறது'' என்று வாய் உளறலோடு ஒரு பொய்க் காரணத்தைக் கூறிவிட்டு.

ஜெமினியில் ஜெயித்தது ஆட்டோக்காரரா? ஐயங்காரா? என்பது மட்டும் எனக்கு பதில் கிடைக்காத கேள்வியாகவே இருக்கிறது இன்றுவரை

ஞாயிறு, ஜூன் 21, 2009

குடும்ப எண் 18!



ஒரு மனிதன் தன் வாழ்நாளில் மீண்டும் ஒரு தரம் மனிதனாவது என்று சொன்னால் கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும். புக்கர் டி வாஷிங்டன் சுயசரிதையைப் படிக்கும் போது ஆறறறிவு ஆடு மாடு போல நடத்தப்பட்ட ஒருவர் எப்படி மனிதராகப் பரிணமிக்கிறார் என்பதை உணரமுடிகிறது. கரியால் ஒரு கோடு போடுவதற்குக்கூட தெரிந்திருக்காத அந்தக் குடும்பச் சூழலில்} சமூக சூழலில் இருந்துதான் புக்கர் வாஷிங்டன் தஸ்கேஜீ பல்கலைக் கழகத்தை உருவாக்கி மாமனிதனாக உருவாகிறார்.
பார்ப்பதற்கு மனிதர்கள் போல இருப்பதனால் மட்டும் ஒருவரை இன்னொரு மனிதன் என்று மனிதனென்று ஏற்றுக் கொள்வதில்லை. ஆப்ரிக்காவில் இருந்து "ஓட்டிச்' செல்லப்பட்ட ஒரு மனிதக் குழு அமெரிக்காவில் எப்படி விலங்குகள் போல நடத்தப்பட்டது என்பதைச் சொல்லி ஆரம்பிக்கிறது "அடிமையின் மீட்சி' என்ற பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்ட இந்த நூல்.

ஆடு மாடுகளுக்காவது ஓரளவுக்குப் பாதுகாப்பான இடம் இருக்க முடியும், அவற்றின் விலைக்காக. ஆடு மாடுகள் சித்திரவதைக்குப் பயந்து பணிந்து போகத் தெரியாதவை. மனிதனுக்கோ அது தாங்க முடியாத உயிரின் வலி. நம் குழந்தையை சுட்டுவிடுவார்கள், தம்மைச் சிறையில் அடைத்துவிடுவார்கள் என்ற பயம் மனிதனுக்கு இருப்பதால் அவனைப் பணியவைப்பது சுலபம். எந்தவித உரிமை குறித்தும் தெரியாமல் கொட்டடியில் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் மக்களில் ஒருவராக வளர்ந்த புக்கர் டி வாஷிங்டனுக்கு மனிதர்களுக்குப் பெயர் இருப்பதுகூட அதிசயமாக இருக்கிறது. இவர்கள் குடும்பத்துக்கென்று பண்ணையில் ஒரு எண் உண்டு. அது 18. சிறுவயதில் அந்த எண்ணை எங்கு பார்த்தாலும் தன்னால் அடையாளம் கண்டுவிட முடிந்தது என்று அவர் கூறுவதில் இருந்து இதைப் புரிந்து கொள்ள முடியும்.

பள்ளியில் சேரும் ஆர்வம் இவருள் தீயாய் பெருகிக் கொண்டிருக்கிறது. பள்ளியிலோ எல்லோருக்கும் இரண்டு பெயர்கள் அல்லது மூன்று பெயர்கள் இருக்கின்றன. இவரை எல்லோரும் புக்கர் என்று மட்டுமே அழைத்துக் கொண்டிருந்ததால் தனக்குப் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுவிடுமோ என்னும் அளவுக்கு அஞ்சுகிறார். ஆசிரியர் ஒவ்வொருத்தராக பெயர் கேட்டுக் கொண்டே வருகிறார். திடீரென்று புக்கர் வாஷிங்டன் என்கிறார். நெடுநாளாக தனக்கு அந்தப் பெயர்தான் போல அவருக்கே அப்போது தோன்றுகிறது. அந்தப் பெயரே அவருக்கு இறுதி வரை நிலைத்துவிட்டது. ஏனென்றால் புக்கருக்கு அவருடைய தந்தையைத் தெரியாது. பின்னாளில் தன் தாய்க்கும் ஒரு வெள்ளையருக்கும் தாம் பிறந்ததாகத் தெரிந்து கொள்கிறார். உள் நாட்டு அரசியல் போர்கள் முடிந்து ஆபரகாம் லிங்கன் ஆட்சிக்கு வந்து சுதந்திரப் பிரகடனம் அறிவிக்கும் வரை நீக்ரோக்கள் அங்கு விலங்குகள் போலத்தான் வாழ்கிறார்கள்.

வெர்ஜினியாவின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதியில் இருக்கும் ஹாம்டன் கல்வி மன்றத்துக்கு இவர் கல்வி கற்கப் பிரயாணிப்பதை விவரிக்கும் புத்தகத்தின் எழுத்துக்களை, நம் கண்ணீர் திரையிட்டு மறைப்பதைத் தவிர்க்க முடியவில்லை. சரியான துணி மணி இல்லை. மரநாரில் இருந்து பின்னி தயாரிக்கப்பட்ட ஆடை, மரப்பட்டையும் பதப்படுத்தாத தோலும் சேர்ந்து உருவாக்கப்பட்ட மடங்காத காலணி, சாக்குப் பை சகிதம் 800 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து போகத் துணியும் ஒரு கறுப்பின சிறுவன், இனவெறி தலைதூக்கி ஆடிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் எத்தனைத் துன்பங்கள் அனுபவத்திருப்பான் என்பதை கற்பனை செய்து பாருங்கள். வண்டியில் ஏற்றிக் கொள்ள மறுக்கிறார்கள், ஓட்டலில் சாப்பிட அனுமதிக்கவில்லை, தங்குவதற்கு அனுமதிக்கவில்லை... ஏறத்தாழ முக்கால் வாசி தூரத்தை நடந்தே கடக்கிறான். பசியிலும் பனியிலும்.

அவ்வளவு தூரம் கடந்து ஹாம்டன் கல்வி மன்றத்தை அடைந்து அங்கு படிப்பதற்கு அனுமதி கேட்கிறார். பஞ்சத்தாலும் பசியாலும் வாடிப் போய் அழுக்காக கோணிப் பையுடன் நின்று கொண்டிருக்கும் புக்கரை யாரும் ஏறிட்டும் பார்க்கவில்லை. இவருக்குப் பின்னால் வந்தவர்களுக்கெல்லாம் அனுமதி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நமக்கு பள்ளியில் இடம் கிடைக்காமல் போய்விடுமா என்று பதறுகிறார். அந்த நேரத்தில் அங்கிருந்த ஆசிரியருக்கு வழிபாட்டுக் கூடம் சுத்தம் செய்ய வேண்டும் என்று ஞாபகம் வருகிறது. அங்கே நின்று கொண்டிருந்த புக்கரை சுத்தம் செய்ய பணிக்கிறார்.

"இதுதான் வாய்ப்பு என எனக்குப் பட்டது. அது போன்ற ஓர் உத்தரவை அத்தனை குதூகலத்துடன் நான் ஏற்றது இல்லை. கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்யும் பணியை மிகத் திறமையாகச் செய்பவன் நான். வழிபாட்டுக் கூடத்தை மூன்றுமுறைக் கூட்டினேன். பழந்துணி பெற்று நான்கு முறை துடைத்தேன்' என்கிறார்.

இந்த செய் நேர்த்திக்காகத்தான் அங்கு அவருக்குப் படிக்க அனுமதி கிடைக்கிறது. அந்தக் கறுப்புச் சிறுவன் அங்கே இருக்கும் உப்பளத்தில் காலையும் மாலையும் வேலை பார்த்து இடையே படிப்பைத் தொடர்கிறான். உப்பளத்தில் வேலை பார்த்து அதே ஆடையில் படிப்பது சிரமமாக இருக்கிறது. சாமுவேல் ஆம்ஸ்ட்ராங் என்ற ஆங்கிலேயர் அவருக்கு ஆடை கொடுத்து உதவுகிறார். (அந்த நெருக்கம் வாழ்நாள் முழுக்கத் தொடர்கிறது.) அங்கு அவருக்கு இரண்டு போர்வைகள் தருகிறார்கள். அது நாள் வரை அந்த மாதிரி ஒரு ஆடம்பரத்தை அவர் அனுபவித்திராதவர். சுதந்திரம் பெறும் வரை படுக்கை என்பது கூட அவருக்குத் தெரியாது. தரையில் தூசியிலும் தும்பிலும் ஈரத்திலும் ஒரு பன்றியைப் போலவோ மாட்டைப் போலவோதான் உறங்கி வந்தவர். அதனால் இரண்டு போர்வைகளை எப்படிப் பயன்படுத்துவதென்று அவருக்குத் தெரியவில்லை. முதல் நாள் இரண்டு போர்வைகளையும் தரையில் போட்டு அதன் மேல் படுத்துக் கொள்கிறார். இரண்டாம் நாள் இரண்டு போர்வைகளையும் போர்த்திக் கொள்கிறார். மூன்றாவது நாளில்தான் அதை கீழே ஒன்றும் போர்த்திக் கொள்ள ஒன்றுமாகப் பயன்படுத்தியதாகச் சொல்கிறார்.

இப்படியாகப் படித்து ஆசிரியர் பயிற்சி மேற் கொண்டு தன் கிராம மக்களுக்குக் கல்வியின் அவசியத்தைப் போதிக்கிறார். இத்தனை துன்பத்திலும் அவர் ஒரு இடத்திலும் வெள்ளை இனத்தவரின் முரட்டுக் குணத்தைப் பழிக்கவே இல்லை. படிப்பின் மூலமாக அவர் எல்லோரையும் விட சிறந்தவராக மாறுகிறார். ஜனாபதி ரூஸ்வெல்ட் அவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து கெüரவிக்கிறார். உலகம் முழுக்க அவருடைய பேச்சைக் கேட்க மக்கள் திரள்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் அவருடைய சுற்றுப் பயணமும் பேச்சும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது.

இறுதி வரி இப்படி முடிகிறது...

எந்த மாநிலத்தில் நான் பிறந்தேனோ, அந்த மாநிலம் என்னை வரவேற்று உபசரித்ததற்காக இரு இனத்தவர்க்கும் என் இதயபூர்வமான நன்றி.
என வரவேற்பளித்த வெள்ளை இனத்தவருக்கும் சேர்த்தே நன்றியைத் தெரிவிக்கிறார். வன்முறையைக் கையில் எடுக்க மிக நேர்மையான காரணம் இருந்தாலும்
ம.ந.ராமசாமியின் இயல்பான மொழி பெயர்ப்பில் நெஞ்சைத் தைக்கும் நூல் இது.

அடிமையின் மீட்சி
புக்கர் டி. வாஷிங்டன்,
நிவேதிதா புத்தகப் பூங்கா,
14, இரண்டாம் தளம், பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை- 14

விலை: ரூ.120

வியாழன், ஜூன் 18, 2009

ஒன்று முதல் பூஜ்ஜியம் வரை




தினமணிக்கு ஒரு சினிமா நிருபரின் தேவை இருந்தபோது சுகுமாரனை ராஜமார்த்தாண்டனும் என்னைப் புகழேந்தியும் சிபாரிசு செய்தனர். இறுதியில் நான் சேருவதாக முடிவானபோது, சுகுமாரனை சிபாரிசு செய்வர் என்ற காரணத்துக்காக அவரிடம் பேச சிறு தயக்கம் இருந்தது. ஆனால் தினமணியில் எனக்கு முதல் நண்பர் அவர்தான். வண்ணத்திரை போன்ற சினிமா பத்திரிகைகளை அவர் ஆர்வத்தோடு வாங்கிப் படிப்பதைப் பார்த்து எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நான் வண்ணத்திரையில் இருந்து வேலைக்கு வந்தவன் என்பதால் என் மீது அவருக்கு ஈர்ப்பு அதிகமாக இருந்தது. அதற்காக என்னை அவர் கூடுதலாக மதித்தார். கேன்டீனிலும் அலுவலகத்தின் பின் பக்க மொட்டை மாடியிலும் பிரபு, சிவாஜிகணேசன் பற்றி பேச எங்களுக்கு நிறைய விஷயமிருந்தது. நான் அவரை உரிமையாகக் கிண்டல் செய்பவனாக இருந்தேன். சிவாஜியையும் பிரபுவையும் கிண்டல் செய்தால் அதை அவர் பொறுத்துக் கொள்வது எனக்குப் பிடிக்கும். சண்டைக்கு வராமல் அவர் நாகர்கோவிலில்தான் பிரபுவுக்கு அதிகமான ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன என்ற புள்ளிவிவரத்தைப் பதிலாகத் தருவார்.

அதே நேரத்தில் என் கதைகளைப் படித்துவிட்டு வெகுகாலமாக ஒரு அபிப்ராயமும் சொல்லாமல் இருந்தார். எட்டாயிரம் தலைமுறை சிறுகதை தொகுதிக்காக அவரிடம் முன்னுரைக்கு அணுகியபோது அவர் மிகவும் காலம் தாழ்த்தியபோது எனக்கு சந்தேகம் வந்தது அவருக்கு விருப்பமில்லையோ என. நான் அதை அவரிடம் கொண்டிருந்த உரிமையும் கிண்டலுமான நட்புடனே தெரிவித்தேன். ஏதாவது விளக்கம் தர முற்படும்போது சீரியஸôன குரலில் பேசுவார். "உங்க கதைகள் ஏதும் மோசமா இல்லை... உங்க கதைக்கு ஒரு இடம் இருக்கு... எனக்கு வேலை அப்படி...'' மீண்டும் தன் வழக்கமான குரலில் "இன்னும் ஒரு வாரம் டயம் கொடுங்க வோய்... முடிச்சுத் தந்திட்றேன். ஆபீஸ்ல ஜி.பி.எஃப். பணம் வராம இருக்கு சீக்கிரம் சொல்லி ஏற்பாடு செய்யுங்க வோய்'' என்று முடித்தார்.

"நீங்க முன்னுரை எழுதி அனுப்புங்க. ஜி.பி.எஃப். வேலையை முடிக்கிறேன்''

வெளிப்பார்வைக்கு பலவீனங்கள் நிறைந்தவராகவும் நெருங்கிப் பார்க்கும் போது விட்டுக் கொடுக்க விரும்பாத தீவிரமான இலக்கியக் கோட்பாடும் கொண்டவராக இருந்தார் ராஜமார்த்தாண்டன். முன்னுரை எழுதி அனுப்பி வைத்தார், அது என் ஜி.பி.எஃப். மிரட்டலுக்காக இல்லை. கடைசி கொஞ்ச நாளில் என்னிடம் அடிக்கடி பேசினார். பென்ஷன் பணம் இன்னும் கைக்குக் கிடைக்கவில்லை என்பதற்காக. அவருடைய மகன் கிருஷ்ண ப்ரதீப் திருமணத்துக்கு அலுவலக நண்பர் சூரிய நாராயணனுடன் சென்று அவர் வீட்டுக்கும் போய் வந்தேன். மாடியில் அவருக்கு மரத்தாலான அழகான அறை. அங்கே அமரச் செய்தார். எனக்குச் சரியான தலைவலி. தைலம் கொண்டு வரவும் மாத்திரை கொண்டு வரவும் ரசம் சாதம் கொண்டு வரவும் ஸ்பைரைட் கொண்டுவரவும் என ஐந்தாறு முறை மாடிக்கும் கீழுக்கும் ஓடியலைந்தார். விடைபெறும்போது எங்களைப் போலவே அவரும் அந்த வீட்டுக்கு வந்திருக்கும் ஒரு விருந்தாளிபோலவே ஒட்டமால் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவருடைய தம்பியும் ராஜமார்த்தாண்டனின் மனைவியும் அடுத்து குடும்பத்தோடு வர வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்துக் கொண்டிருந்தார்கள். ராஜ மார்த்தாண்டன் புன்னகையுடன் கண்கள் மின்ன விலகி நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.

இறப்பதற்கு நான்கு நாள்களுக்கு முன்பு அவர் பென்ஷன் விஷயமாக சென்னை வந்திருந்தார். அலுவலகத்துக்கும் பென்ஷன் ஆஃபிஷுக்குமாக இரண்டு மூன்று முறை அலைந்தபோது "உன்னை ரொம்பத் தொல்லை பண்றேன்'' என்றார். விடைபெறும்போது "அடுத்த மாசம் ஒண்ணாந்தேதி உங்களுக்குப் பென்ஷன் கிடைத்துவிடும்'' என்று உறுதிகூறி அனுப்பி வைத்தேன். இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வேலை பார்க்கும் சாஜி என்பவரின் செல் நம்பரைக் கேட்டிருந்தார். நண்பர் அரவிந்தன் யாரையோ பிடித்து அவருடைய நம்பரைக் கொடுத்து அதை ராஜமார்த்தாண்டனிடம் சேர்த்துவிடும்படி சொல்லியிருந்தார். சனிக்கிழமை காலை அந்த நம்பரை அவருக்குக் கொடுக்க போன் செய்ய நினைத்தேன். வேறு வேலைகள் காரணமாக சற்றே தாமதமாகிவிட்டது. ராஜமார்த்தாண்டனின் மரணச் செய்தி முந்திக் கொண்டது.

ஒன்று முதல் பூஜ்ஜியம் வரையிலான எண்களுக்குள் அவருடைய செல்போன் எண் இருக்கிறது. இப்போது அவற்றை அழுத்தினால் யாரெடுத்துப் பேசுவார்கள் என்று தெரியவில்லை. நான் உரிமையோடு கிண்டல் செய்தால் அதைப் பொறுத்துக் கொள்ளக் கூடியவர்களாக அவர்கள் இருப்பார்களா என்பது எனக்குத் தெரியாது.

புதன், ஜூன் 17, 2009

படித்தேன் ரசித்தேன் -1

உலக மனிதர்களின் வீடியோ ஆல்பம்



மிக சுவாரஸ்யமான நாற்பத்தியாறு சிறுகதைகளை படிக்கிறீர்கள். ஒவ்வொரு சிறுகதையும் மலைக்க வைக்கின்றன. அதில் இடம் பெறும் சம்பவங்களும் அதை விவரித்திருக்கும் முறையும் இப்படியெல்லாம் நாம் வாக்கியங்கள் அமைக்கவில்லையே என்று ஏங்க வைக்கின்றன. படைப்பின் பிரமிப்பே இதுபோல் நாம் ஏன் உருவாக்கவில்லை என்ற ஏக்கத்தை உருவாக்க வைப்பதுதானே? இந்த நூல் அதைச் செய்கிறது.

ஆனால் இந்த நூல் அவருடைய சிறுகதைத் தொகுதி அல்ல. எல்லா அத்தியாயங்களுக்குள்ளும் இழையாக ஒரு தொடர்பு இருக்கிற போதும் இது நாவலும் அல்ல. இது சுயசரிதை. எல்லோருக்குமே பிறந்து, வளர்ந்து, சாதித்து, தவறி வீழ்ந்து, எழுந்து என்று எத்தனையோ அனுபவங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

நாற்பத்தியாறு அத்தியாயங்கள் கொண்ட சுயசரிதை என்று தெரிந்துதான் வாசிக்க ஆரம்பித்தேன். அது ஒருபோதும் ஞாபகத்தில் தங்கவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒரு சுவாரஸ்யமான ஆரம்பமும் அதன் பிறகு திருப்பங்களும் ஒரு எதிர்பார்க்காத முடிவும் இருந்ததுதான் அதற்குக் காரணம்.

சூடானில் ஒரு இரவு விருந்துக்குப் போய் வந்ததை எழுதியிருக்கிறார்.

ஒரு சோறு பதம்போல அதை இங்கே பார்ப்போம்.

"இடம் சூடான். வருடம் 1989. மாதம் ஞாபகமில்லை. ஒரு சனிக்கிழமை இரவு. நேரம் 7.58." முதல் வரி இப்படி ஆரம்பிக்கிறது.

சம்பவம் நடந்த இடம் எல்லோருக்கும் ஞாபகமிருக்கும். அதிலும் ஒரு நாட்டில் வேலை பார்த்தபோது நடந்த சம்பவமென்பதால் அதில் பிசகு இருக்காது. ஆண்டும் அப்படித்தான். இவர் அங்கு பதவி ஏற்ற ஆண்டு அது. மாதம் ஞாபகமில்லை ஆனால் கிழமை ஞாபகமிருக்கிறது. ஏனென்றால் ஒரு வார இறுதி நாளின்போதுதான் அந்த விருந்து நடைபெற்றது. இரவு என்பதும் ஓ.கே. நேரம் 7.58..? அவருக்கு முன்னால் கடிகாரம் ஒளிந்து கொண்டிருந்திருக்க வேண்டும். எவ்வளவு நம்பகத்தன்மையோடும் நுட்பமாகவும் இருக்கிறது பாருங்கள்.

புதிதாக குடிவந்த நாட்டில் வழக்கம் போல அவருடைய மனைவிதான் இந்தப் புதிய நட்பை உருவாக்கக் காரணமாக இருக்கிறார்.

ஒரு பெரிய பிளேட்டில் உணவு அவருக்கு வைக்கப்பட்டிருந்தது. அவர் சாப்பிடப் போவதை மூன்று ஜோடிக் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன என்கிறார். ஒன்று அவருடன் வந்த அவருடைய மனைவியினுடையது. இரண்டாவது விருந்துக்கு அழைத்த எலேனாவின் கண்கள். மூன்றாவது கண்களுக்குச் சொந்தக்காரர் யாரென்று அவர் சொல்லவில்லை.

எலேனா சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதையும் அவர் ஒரு உடற்பயிற்சி ஆசிரியர் என்பதையும் சொல்லிச் செல்கிறார். நடந்து வருவதைப் பார்த்தாலே அவர் ஒரு உடற்பயிற்சி நிபுணர் என்பது தெரிந்துவிடும் என்கிறார். சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு விளையாட்டு வீராங்கனை அவருக்கு ஞாபகம் வருகிறார். அவர் மார்ட்டினா ஹிங்கிஸ் என்ற டென்னிஸ் வீராங்கனை. "209 வாரங்களுக்கு டென்னிஸ் உலகத்தில் பெண்களுக்கான முதலாம் இடத்தைக் கைப்பற்றியவர் அவர். அவரைப் போலவே தோற்றம் எலேனாவுக்கும்' என்கிறார்.

எலேனாவின் கணவர் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டியுள்ள ஒரு என்ஜினியர். இவர்கள் விருந்துக்குப் போன போதும் அவர் ஏதோ நாட்டுக்குப் போயிருக்கிறார்.

இரண்டு முறை எலேனா இவர்கள் வீட்டிக்கு விருந்துக்கு வந்திருக்கிறார். இது இவர்கள் முறை. மரக்கறிக்குப் பழகியிருந்த முத்துலிங்கம் புதுப்புதுவிதமான கற்பனைகளை ஜோடித்து விருந்துகளில் இருந்து தப்பித்து வருகிறார். ஆனால் எலேனா பிடிவாதக்காரியாக இருக்கிறார். இவருடைய வீட்டுக்குத் தொலைபேசி வருகிறது. இவருக்கு என்னென்ன காய்கறிகள் பிடிக்கும், என்னென்ன பிடிக்காது என்று இவருடைய மனைவியிடம் புள்ளி விவரங்கள் சேகரிக்க ஆரம்பிக்கிறார். இவர் பியர் குடிப்பாரா என்பது அதில் ஒரு கேள்வி. பதில் ஆம் என்று தெரிவிக்கப்படுகிறது.

விருந்துக்குக் கிளம்புகிறார்கள். ஒம்டுர்மான் நகரத்தில் நைல்நதிக் காற்றி வீசும் தூரத்தில் எலேனாவின் வீடு இருக்கிறது. எலேனா வாசல் வரை வந்து வரவேற்கிறார். அவருடைய புஜங்கள் வசீகரமானவை. ஆனால் அன்று அவர் அணிந்திருந்த பட்டு ஆடை, புஜங்களை மறைத்ததோடு அல்லாமல் அவருடைய அழகிய பாதங்களையும் மறைத்து தரையில் தவழ்ந்து கிடக்கிறது. அவர் கடந்து போன சில வினாடிகள் கழித்து அவர் அணிந்திருந்த ஆடையின் கடைசி நுனி கடந்து போகிறது.

முகமன் கூறும் முன்னரே பாதையில் அவர்கள் பார்த்த வயலட் பூ கன்றுகள் பற்றி பேச்சு ஆரம்பமாகிவிடுகிறது. உலகத்தில் காணப்படும் அத்தனை வண்ணங்களிலும் அவரிடம் பூச்செடிகள் இருப்பதாகக் கூறுகிறார் எலேனா.

இப்போது மூன்றாவது ஜோடி கண்ணுக்குச் சொந்தக்காரர் அறிமுகமாகிறார். அவர் பீட்டர். அந்த வீட்டின் வேலைக்காரன். கென்யா நாட்டைச் சேர்ந்தவன். யாரோ பொருத்திவிட்டது போல தலையை ஒரு பக்கம் சாய்த்தபடி எல்லா வேலைகளையும் செய்கிறான். பூப்பபோட்ட சட்டையும் கண்களைக் கூச வைக்கும் நீலநிற பேண்டும் சாலையோரத்தில் வாங்கப்பட்டதாக இருக்க வேண்டும். வசதி குறைந்தவர்களுக்கு அங்குதான் வியாபாரம். எத்தனையோ விருந்தினருக்குப் பணிவிடை செய்த அனுபவம் அவனிடமிருக்கிறது. எலேனாவின் உபசாரம் சற்றே சுணங்கும் இடங்களில் அதை நிவர்த்தி செய்பவனாக இருக்கிறான்.

தான் உணவு தயாரிக்க எடுத்த முயற்சியை விவரிக்கிறார் எலேனா. சுவிஸ் உணவில் பியர், முட்டை, தக்காளி, காளான் போன்ற கூட்டுப் பொருள்கள் கலக்கப்பட்டு இருந்தன. ஆனால் அதன் இறுதி வடிவம், பதம் தப்பிப் போன உளுத்தம் களி போல தென்படுகிறது.

அப்போது அங்கு சாதிக் அல் மாஹ்டியின் ஆட்சி நடக்கிறது. மது வாங்க, விற்க, குடிக்க தடை. சுவிஸ் உணவைப் பரிமாற வேண்டும் என்ற ஆசையில் எங்கிருந்தோ இருபது மடங்கு விலை கொடுத்து பியர் வாங்கி அதைத் தயாரித்திருக்கிறார். முதல் துண்டை வாயில் போட்டதும் அம்மா மூக்கைப் பிடித்துக் கொண்டு வாயில் ஊற்றிய ஆமணக்கு எண்ணெய்யின் மணம் ஞாபகம் வருகிறது. உணவை உண்ணும் கஷ்டத்தோடு வாயில் புன்னகையைத் தவழவிடுவது பெரிய கஷ்டமாக இருக்கிறது அவருக்கு. மனைவியைக் கடைக்கண்ணால் பார்க்கிறார். அவர் வழக்கமாகச் சாப்பிடும் உணவைப் போலவே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

வயிற்றுக்குள் செலுத்தப்பட்ட உணவு திரும்பி வருவதற்கு விருப்பம் காட்டுகிறது. நல்ல சிந்தனைகளையும் நல்ல வாசனைகளையும் நினைத்து அதைக் கட்டுப்படுத்துகிறார். தக்காளி கிச்சப்பையும் கோக்கையும் குடித்து சமாளிக்கப் பார்க்கிறார். முடியவில்லை. குமட்டல் அபாயகரமான கட்டத்தைத் தாண்டுகிறது. தன்னுடைய நாட்டவர், மூதாதையர், வேலை செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், மனைவி, பிள்ளைகள் எல்லோருடைய கௌரவமும் வாயின் நுனியில் அந்தக் கணம் நிற்கிறது. இனி எழுந்து கொள்ளலாம் என்று நினைத்த நேரத்தில் பீட்டர் தோன்றுகிறான். சொர்க்கத்தின் கதவின் சாவியை யேசுவிடம் பெறுவதற்கு ஓடியவரின் வேகத்தோடு ஓடிவந்து மீதி உணவையும் முத்துலிங்கத்தின் தட்டில் பிரியத்தோடு பரிமாறுகிறான். எலேனாவின் உபசாரம் சுணங்கிய தருணங்களில் பீட்டர் அதை இட்டு நிரப்புவான் என்றாரே, அதுதான் இது.

தாம் ஆசையாகச் சாப்பிட்ட உணவை பார்சலும் செய்து தருகிறார் எலேனா. பியர் ஊற்றி தயாரிக்கப்பட்ட அந்த உணவு புளிக்கப் புளிக்க சுவை கூடும் என்கிறார். அதை ஒரு கையிலும் ஆப்ரிக்க வயலட் செடிக் கன்று மறுகையிலுமாக காரை நோக்கி நடக்கிறார். கார் சாவி அவருடைய வாயிலே தொங்கிக் கொண்டிருக்கிறது.

அன்றைய விருந்தில் அவருடைய வாயின் உச்சபட்ச பயன்பாடு அதுதான்.... இப்படி முடிகிறது அந்த அத்தியாயம்.

இதிலே நாம் கவனிக்க வேண்டியது அவருடைய நகைச்சுவை உணர்வு. அதை அவர் பிரத்யேகமான ஒரு நடையில் சொல்வது அடுத்தது. மூன்றாவது நைல் நதிக்காற்று வீசும் வீடு போன்ற நுணுக்கமான கவனிப்பு.

இது மூன்றும் இவருடைய மிகப் பெரிய பலம். அவருடைய நண்பர் ஒருவரை டொராண்டோவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வைத்தியம் பார்க்கக் கொண்டு செல்கிறார்கள். அற்பக் காரியத்துக்காகவும் வேறு ஒருவருடைய உதவியை எதிர்பார்க்கும் நிலைமை. கண்கள் மட்டுமே இப்படியும் அப்படியும் அசைகின்றன. அங்கே சென்று வைத்தியம் பார்த்த பிறகும் இறந்து போகிறார். டொரான்டோவுக்கும் கலிபோர்னியாவுக்கும் மூன்று மணி நேர வித்தியாசம். அன்றைக்கு அவர் சாதித்ததெல்லாம் ஒரே நாளில் மூன்று மணிநேரம் அதிகமாக வாழ்ந்ததுதான் என்கிறார்.

ஆப்ரிக்காவில் இவர் தலைமையில் நடந்த பஞ்சாயத்து வேடிக்கையானது. ஆழ்ந்து யோசித்தால் அது நம் கற்பு பற்றிய கற்பிதங்களைத் தூள் தூள் ஆக்குகிறது.

முயலைப் பார்க்க வரும் பெண்ணை ஒரு ஆப்ரிக்கன் விரட்டி அடிக்கிறான். கொஞ்ச நாளில் அவள் கர்ப்பமாக இருப்பது தெரியவருகிறது. அவள் தாய்மை அடைந்ததற்கு விரட்டி அடித்த ஆப்ரிக்கன்தான் காரணம்.

எப்போது அவளை நீ கர்ப்பமாக்கினாய் என்று விசாரிக்கிறார் முத்துலிங்கம். அவனோ அவளை விரட்டும் போது அவள் சிக்கிக் கொண்ட போதெல்லாம் அப்படிச் செய்தேன் என்கிறான். போததற்கு அவளாகவே சில நேரம் சிக்கிக் கொண்டதாகவும் சொல்கிறான்.

எங்கே உறவு வைத்துக் கொண்டாய்? என்று கேட்கிறார். ஆனால் இது அவசியமற்ற கேள்வி என்பது அ.மு.வுக்குத் தெரிகிறது. அங்கேதான் நிற்கிறார் முத்துலிங்கம். அவருடைய ஆப்ரிக்க அனுபவங்கள் வேறெங்கும் படித்திருக்க முடியாதவை. ஏரோப்ளேனில் துண்டு போட்டு சீட்டு பிடிக்க முடியுமா? நடக்கிறது. பாஸ் போர்ட்டை ஒருத்தனிடம் கொடுத்துவிட்டு அதற்கான ரசீதாக ஏதோ தினசரியின் ஒரு துண்டு மூலையில் பெற்றுக் கொண்டு திண்டாடுவது, மலேரியா காய்ச்சல் என்று ஆப்ரிக்கா அனுபவங்கள் அனைத்தும் படிக்கத் திகட்டாதவை.

தஸ்தயேவஸ்கியின் சூதாடி நாவலில் வரும் கதாநாயகன் பற்றிய குறிப்பு, சினுவா ஆச்சுபியின் சிதைவுகள் நாவலில் வரும் கதாபாத்திரம் பற்றிய குறிப்பு என அனைத்து விதத்திலும் ஆச்சர்யம் தருகிறார். இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஆப்ரிக்கா, கனடா என அவருடைய அனுபவப் பரப்பு விரிந்து கொண்டே போயிருப்பது அனைவருக்கும் கிடைக்க முடியாத சிறப்பம்சம்.

மனிதர்களையும் சம்பவங்களையும் ஒரு விடியோ ஆல்பம் போல மனக்கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிற இவர், தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷம்.

நூல்: உண்மை கலந்த நாட்குறிப்புகள்
ஆசிரியர்: அ. முத்துலிங்கம்

உயிர்மை வெளியீடு,
11/29 சுப்ரமணியம் தெரு, அபிராம புரம்,
சென்னை- 18.
விலை: 170

www.thamizhstudio.com இல் இந்தப் பகுதி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுப்பிக்கப்படும்.

செவ்வாய், ஜூன் 16, 2009

காந்தமுள்

மு.க. அழகிரி திருமணம்!





பெரியார் திடலுக்குள் முதல் முறையாக நான் சென்றது என்னுடைய ஏழாவது வயதில். இரண்டாம் வகுப்பு படிக்கும்போது. 72}ஆம் ஆண்டு. மிகச் சரியாக தேதியோடு சொல்ல வேண்டுமானால் மு.க. அழகிரியின் திருமணநாளில். அங்குதான் அவருக்குத் திருமணம் நடந்தது. முகப்பிலேயே வரவேற்க நின்றிருந்தார் கலைஞர். பெரிய கட்டுப்பாடெல்லாம் கிடையாது. அவருக்குப் பக்கத்தில் காவலுக்கு ஒரு போலீஸ்காரர் நின்றிருந்ததாக ஞாபகம்.

என் தாத்தாவோடு இராமகிருஷ்ண மடத்துக்குச் செல்லும்போது பெரியவர்களைப் பார்க்கும்போது காலில் விழுந்து நமஸ்கரிக்க வேண்டும் என்று கற்பிக்கப்பட்டிருந்ததால் அவரைப் பார்த்ததும் அப்பாவின் கையிலிருந்து விடுவித்துக் கொண்டு அவர் காலை நோக்கி ஓடினேன். கலைஞர் என்னைத் தடுத்தது ஞாபகமிருக்கிறது. அதற்குள் அப்பா ஓடிவந்து என்னைப் பிடித்துக் கொண்டார். அதற்குச் சில நாள்களுக்கு முன்னர்தான் தமிழ்நாடு மின்வாரிய செயலக சங்கத்தின் 5-ஆம் ஆண்டுவிழாவை அதன் தலைவராக இருந்த என் தந்தை க.பாலகிருஷ்ணன், அன்றைய முதல்வரான கலைஞரின் தலைமையில் நடத்தியிருந்தார். இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்.

அன்றைய விழா என் வாழ்வில் மறக்க முடியாததாக பின்னாளில் மாறியது. நாங்கள் அரங்கத்தின் ஓரத்தில் ஓர் இருக்கையில் இருந்தோம். வந்த பிரபலங்கள் எல்லோரும் எங்களை ஒட்டியே கடந்து போயினர். பெரியார் நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். பாபு ஜெகஜீவன்ராம், காமராஜர் போன்றவர்கள் என்னைக் கடந்து போன போது மிக அருகில் அவர்களைப் பார்க்க முடிந்தது. ஆனாலும் அப்பாவுக்குப் பக்கத்தில் இருந்தவர் எம்.ஜி.ஆர் வருவாரா என்று கேட்டுக் கொண்டிருந்தார். "கட்சியிலிருந்து பிரிஞ்சு போனா என்ன, கல்யாணத்துக்குக் கண்டிப்பா வருவாரு'' என்று என் தந்தை அவருக்கு மட்டுமன்றி தனக்காகவும் ஆறுதலாகச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு பிரபலம் உள்ளே நுழையும்போதும் மக்கள் பின்னால் திரும்பி ஆரவாரக்குரல் எழுப்பினர். எம்.ஜி.ஆர்.தான் வந்துவிட்டதாக ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த வயதில் அங்கு மேடையில் இருந்தவர்கள் எல்லோரையும்விட எம்.ஜி.ஆர்தான் எனக்கும் முக்கியமானவராக இருந்தார்.



சிறை வாழ்க்கைக்குப் பிறகு எம்.ஆர்.ராதா அந்தத் திருமணத்துக்கு வந்தார். "ராதா வந்துட்டாரா... போச்சு. அப்ப எம்.ஜி.ஆர். வரமாட்டாரு'' என்று ஒருவர் குண்டைத் தூக்கிப் போட்டார். எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டுப் பிரிந்திருந்தாலும் உதிர்ந்த இலையின் தழும்பு ஆறாத நிலைமை அது என இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. எல்லோரும் வாழ்த்திப் பேச ஆரம்பித்தனர். இனிமேல் எம்.ஜி.ஆர் வரமாட்டார் என்று சமாதானமாகிவிட்டனர். என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எம்.ஜி.ஆர். வருவார் என்றுதான் என்னை அழைத்து வந்திருந்தார் என் தந்தை. பெரியவர்களைப் போல என்னால் சட்டென மாறிக் கொள்ள முடியவில்லை. கடைசியாக ரிக்ஷாக்காரன் மற்றும் நல்லநேரம் ஆகிய எம்.ஜி.ஆரின் படங்களை எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் முறையே பாலாஜி, மேகலா திரையரங்குகளில் பார்த்ததோடு சரி. அதன் பிறகு எம்.ஜி.ஆர். படங்களுக்கு என்னை அழைத்துச் சென்றதில்லை. என்னையும் பார்க்க அனுமதிக்கவில்லை. எம்.ஜி.ஆர். மீது கடும்கோபம் இருந்தது என் தந்தைக்கு. எம்.ஆர்.ராதாவையும் திட்டினார், சரியாகச் சுடவில்லை என்பதற்காக. பிஜு பட்நாயக் எம்.ஜி.ஆரையும் கலைஞரையும் இணைக்கும் முயற்சியில் இறங்கியபோது என் தந்தைக்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு கொஞ்ச நஞ்சமல்ல. மிக அற்ப காரணத்துக்காக அது நிறைவேறாமல் போய்விட்டதும் அவர் உடைந்து போய்விட்டார். கலைஞரையும் எம்ஜிஆரையும் நேசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இருந்த மிகப் பெரிய மனப் போராட்டத்தை நான் கண்கூடாகப் பார்த்தேன். எந்த நேரத்திலும் இருவரும் இணைந்து மீண்டும் ஒரு ‘மலைக்கள்ளனை'யோ, ‘அரசிளங்குமரி'யையோ, ‘புதுமைப்பித்தனை‘யோ இணைந்து வழங்குவார்கள் என்று தவித்தனர். பலருக்கு எம்.ஜி.ஆர் இறந்த பின்னர்தான் இனி அது நடக்காது என்ற உண்மை உறைத்தது என்பது எனக்குத் தெரியும். அத்தகையவர்களின் பாசத்தை எம்.ஜி.ஆரும் கலைஞரும் கண்டு கொள்ளாதது ஏன் என்ற துயரம் தோய்ந்த கேள்வி அந்தப் பாசக்காரர்களின் பிள்ளைகளாக இருந்த என் போன்ற சிறுவர்களின் புரிந்து கொள்ள முடியாத பிரச்சினையாக இருந்தது.



அழகிரியின் திருமணத்துக்கு வந்தவர்களுக்குச் சாப்பாடு போடவில்லை. கலைஞர் இறுதியாக மைக்கைப் பிடித்து "கையில் கொண்டு வந்திருக்கும் மொய்ப் பணத்தை தமிழகத்தின் எந்த ஓட்டலிலும் செலுத்தலாம். அங்கேயே சாப்பிடலாம்'' என்று கூறி அரங்கத்தில் சிரிப்பொலியை எழுப்பினார். அப்பா என்னை எழும்பூரில் இம்பாலா ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிட வைத்தார். அழகிரிக்கான மொய்ப் பணத்தை நாங்கள் அங்குதான் செலுத்தினோம். எம்.ஜி.ஆர் வராத வருத்தம் பாசந்தி சாப்பிடும் போது மறைந்தது.

சமீபத்தில் அழகிரி, தமக்கு வருத்தமாக இருக்கும் சமயங்களில் எம்.ஜி.ஆர். பாடல்களைக் கேட்பதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

எனக்கு அழகிரியை நினைக்கும்போது எம்.ஜி.ஆரைப் பார்க்க முடியாத வருத்தம் வந்து போகும்.

திங்கள், ஜூன் 15, 2009

காந்தமுள்

ஹலோ ‘பைக்' டெஸ்ட்டிங்!




புதுக்கருக்குக் குறையாத பாத்திரம் போலவும் அப்போதுதான் நெய்து மடித்த துணியைப் போலவும் இருந்தது என் புதிய பைக். முழுசாக ஒரு மாசம்தான் ஆகியிருந்தது அதை வாங்கி. அத்தனை நாளாக ஸ்கூட்டரில் திரிந்து கொண்டிருந்தவனுக்கு பைக்கில் இருந்த சொகுசு திளைத்துத் தீர முடியாத சந்தோஷமாக இருந்தது.

ஆறாம்திணை இணைய இதழில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். எழும்பூர் நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள சாலையில் காவல்துறை இணை இயக்குநர் அலுவலகம் அருகே இருந்தது எங்கள் பத்திரிகை அலுவலகம். நீதிமன்றமும் காவல்துறையும் பத்திரிகையும் சூழ இருந்த இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என் புதிய பைக், நிமிட நேரத்தில் திருடு போய்விட்டது. அலுவலகம் இருந்த மூன்றாவது மாடிக்குப் போய்விட்டு திரும்ப வருவதற்குள் காணவில்லை. முதலில் நாம் இன்று பஸ்ஸில் வந்தோமா என்று நினைத்தேன். வண்டியை வேறு எங்கோ நிறுத்தினோமா, பக்கத்தில் பார்க் செய்திருந்த பைக் காரர் வண்டியை எடுக்க வசதி இல்லாமல் நம் பைக்கை வேறு இடத்தில் இழுத்துப் போய் நிறுத்திவிட்டாரா என்று நல்லவிதமாகத்தான் நினைத்தேன். என் அனைத்து நல்லவிதமான யோசனைகளையும் நிராகரித்துவிட்டு பைக் காணாமல் போயிருந்தது.

பிரக்ஞையே இல்லாமல் மீண்டும் மாடிக்கு ஓடினேன். யாரிடம் இதைச் சொல்வதென்று தெரியவில்லை. அங்கே எம்.ஆர்.ராதாவுக்கு நினைவு நாளோ, பிறந்தநாளோ வரப்போவதை ஒட்டி ஆவேசமான ஒரு கட்டுரை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். குறுக்கே புகுந்து என் பைக்கைக் காணவில்லை என்று சொல்வதற்குத் தயக்கமாக இருந்தது. என் முக லட்சணத்தைப் பார்த்து அவர்களாகவே ""என்னாச்சு உங்களுக்கு'' என்றனர். இதற்காகவே காத்திருந்தது போல் பதட்டத்துடன் விஷயத்தைச் சொன்னேன். உடனே போலீஸுக்குத் தகவல் கொடுக்கச் சொன்னார்கள். நான் அதுவரை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனதில்லை. தலைகீழாகக் கட்டி வைத்து அடிக்கும் இடம் என்பதாக எனக்கு போலீஸைப் பற்றிப் பதிந்திருந்தது. துணைக்கு ஒரு நண்பரை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்துக்குப் போனேன்.



ஆண்ட்ரூஸ் என்று நினைக்கிறேன். அவர்தான் வரவேற்றுப் பேசினார். அவர் ஏட்டா, எஸ்.ஐ.யா என்றெல்லாம் தெரிந்து கொள்வதற்கும் பயமாக இருந்தது. பத்திரிகை என்பதால் உட்கார வைத்து பொறுமையாகக் கேட்டார். யாரையாவது கட்டி வைத்து அடிக்கிறார்களா என்று ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தேன். டீ வந்தது. எனக்கு ஒரு டம்ளரை நீட்டினார். பயத்தில் வாங்கிக் கொண்டேன். அடுத்து "டீ குடிக்கிறியாடா?'' என்றார் ஏகவசனமாய். மறுபடியும் பயந்து போய் டீயை டேபிளில் வைத்துவிட்டேன். ""குடிக்கிறன் சார்'' என்று என் காலுக்குக் கீழே டேபிளுக்கு அடியில் இருந்து சன்னமாய் ஒரு குரல் வந்தது. அலறி எழுந்துவிட்டேன். ஒருவன் என் காலுக்கு அருகில் டேபிள் காலோடு விலங்கிடப்பட்டு வெறும் ஜட்டியுடன் அமர்ந்திருந்தான். ஆண்ட்ரூஸ் "அவன் கிடக்கிறான் நீங்க உக்காருங்க சார்'' என்றார்.

எனக்குக் கீழே, மேலே என எல்லா பக்கமும் பயமாக இருந்தது.

கொஞ்ச நேரத்தில் சரி வாங்க என்று என்னை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார். ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டார். அது புதுப்பேட்டைக்குள் அவர் சொல்கிற சந்துகள் வழியாக நுழைந்து அவர் நிறுத்தச் சொன்ன வீட்டின் முன்னால் நின்றது. வெளியே இருந்தபடியே "டேய் ரியாஸ்'' என்றார்.

ரியாஸ் என்பவர் வெளியே வந்தார். "டேய் இன்னிக்கு பைக் எதுவும் எடுத்தியா? சார்

பத்திரிகைல இருக்காரு. பைக் காணமாம்..''

"எங்க ஸார்?'' என்றார் ரியாஸ்.

"கமாண்டர் இன் சீஃப் ரோட்ல''

"ஐயோ.. அங்க நான் எடுக்கல ஸார்''

வேறு எங்கு, யார் வண்டியை எடுத்தாய் என்பதை போலீஸ்காரர் விசாரிக்கவில்லை. "உண்மையைச் சொல்லுடா டேய்'' போலீஸ்காரர் விசாரிக்கிறாரா, கெஞ்சுகிறாரா என்று புரியாத தொனி.

"சொல்றனே ஸார்..'' என்று அலுத்துக் கொண்டான். இப்படி நம்பிக்கை இல்லாமல் துருவித் துருவிக் கேட்பது அவனுக்கு வருத்தமாக இருந்திருக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில் திருடன் போலீஸ் விளையாட்டுதான் ஞாபகம் வந்தது.

"பொய் சொல்ல மாட்டான் ஸார்.. '' என்றார் போலீஸ் என்னைப் பார்த்து.

விசாரணை முடிந்துவிட்டது. இப்போது மூவருமாக சேர்ந்து "பைக் எங்கே போயிருக்கும்" என்று வருந்தினோம். மூன்று வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த மூவர் ஒரு விஷயத்துக்காக ஒன்றாக வருந்தியது அந்த நேரத்தில் அது மத நல்லிணக்கத்தின் அடையாளமாக இருந்தது.

கிளம்பும் போது "இன்னா பைக் ஸார்'' என்றார் ரியாஸ்.

டி.வி.எஸ். மேக்ஸ் 100 ஆர் என்ற என் வண்டியின் தயாரிப்பின் பெயரைச் சொன்னேன்.

"ஸார் அது இன்னேரம் கடல்ல இருக்கும் ஸார்...''

"கடல்லயா?''

"போட்ல மாட்டினா ஈரமா இருந்தாலும் ஓடுறது டி.வி.எஸ். ஒண்ணுதான்... அதுக்குத்தான் ஸார் இப்ப கிராக்கி. கிடைக்கவே கிடைக்காது ஸார்'' என்று தீர்மானமாகச் சொன்னான்.

நாளைக்கே திருடப் போவது போல நானும் ஆண்ட்ரூஸும் "அப்படியா?'' என்று கேட்டுக் கொண்டோம்.

செவ்வாய், ஜூன் 09, 2009

மெஹர்

"நீங்கள் மதராஸியா?' என்று அவள் கேட்டபோது, "இல்லை நான் தமிழ்நாடு' என்று சொல்லியிருக்க வேண்டாம் என்று இப்போது தோன்றியது. இப்படியொரு விளக்கம் கொடுத்து அவளுடைய கேள்வியை மறுத்துவிட்டோமே என்று வருத்தமாக இருந்தது. சலீமுடன் காஷ்மீர் வருவது உறுதியானதும் இங்கே எனக்கான ஒரு காதலி பிறந்து வளர்ந்து கொண்டிருக்கிறாள் என்று என்னால் எப்படி யோசித்திருக்க முடியும்? ஒரு தேசத்தின் இரு எல்லையில் பிறந்தவர்களுக்கு ஏற்படப் போகும் பிணைப்பை நினைத்தபோதே சிலிர்த்தது. ஒருவாரம் கல்லூரி விடுமுறை என்ற காரணத்தால்தான் வந்தேன். இங்கு வருவதற்கு வேறு ஒரு காரணமும் எனக்கு இருக்கவில்லை. சலீமுக்கு மிகப்பெரிய பூ வனம் சொந்தமாக இருந்தது. அதில்தான் நான் மெஹரைச் சந்தித்தேன். கை நிறைய பூக்களோடு அவள் அந்தப் பூவனத்தில் இருந்தாள். சலீம் என்னை அவளுக்கு அறிமுகப்படுத்தினான். செக்கச் சிவந்த அவளுடைய முகத்தில் கரிய இமைகளோடு அந்த விழிகளைப் பார்த்தேன். வியப்பும் வினாக்களும் பொதிந்து கிடந்த அபூர்வமான கண்கள்.
பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும் மிகச் சிறந்த யோசனை ஒன்று அப்போது தோன்றியது. நாம் இங்கேயே தங்கிவிடலாமா, அல்லது அவளை அழைத்துச் சென்றுவிடலாமா?.. படபடவென அவள் இமைச் சிறகு அடித்துக் கொண்ட அந்த நொடியில் மிக இயல்பாக ஏற்பட்ட யோசனை அது.
காஷ்மீரில் சம்பிரதாயமான சில நடவடிக்கைகளை செய்ய வேண்டியிருந்தது. அங்கிருக்கிற தால் ஏரி, ரோஜா தோட்டம், அரசு வனப் பூங்கா, படகு சவாரி, ஹூக்கா என.. ஆனால் எனக்கு மெஹர் இருக்கும் இடத்தைவிட்டு அதிகதூரம் விலகியிருக்கும் எந்த இடத்தையும் பிடிக்கவில்லை. சலீம் காட்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் எல்லாம் எனக்குச் சாதாரணமாக இருந்தன. பனித் தொப்பி அணிந்த மலைச் சிகரங்கள், ஸ்வெட்டர் போட்ட மனிதர்கள், ஆவி பறக்கும் ஆனால் சூடாக இல்லாத டீ... எல்லாமே சாதாரணமாகத்தான் இருந்தது. "மோதிலால் நேரு படித்த பள்ளி இதுதான்' என்றான்.
எல்லோரும் எங்காவது படிக்கத்தானே செய்கிறார்கள்? நானும் சலீமும் இப்போது தில்லிக்கு வந்து படிப்பதுமாதிரி. "இது எந்தப் பிரபலமும் படிக்காத பள்ளிக்கூடம்' என ஒன்றைக் காட்டினாலாவது ஆச்சர்யப்பட்டிருப்பேன். புத்தி பேதலித்துதான் போய்விட்டது எனக்கு. அவன் மெஹர் படித்த பள்ளியைக் காட்டியபோது அதை ஆச்சர்யமாகவும் தவிப்புடனும் பார்க்கத் தவறவில்லை. "தினமும் இந்தப் பள்ளிக்குத்தான் போவாளா?' என்ற அசட்டுத்தனமான கேள்வியைக் கேட்டுவிட்டு சலீம் பார்த்த பார்வையை எதிர் கொள்ள முடியாமல் வெட்கத்தால் திக்கிப் போனேன். மேற்கொண்டு இது போன்ற உளறல்களைத் தவிர்க்க நான் அங்கிருந்த அத்தனை நாளும் படாத பாடுபட்டேன்.
எனக்கு ஏற்பட்ட மாதிரி மெஹருக்கும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவளை வசீகரிக்கக் கூடிய சிறந்த அம்சம் எதுவும் என் தோற்றத்தில் இல்லை. அவளுடைய அழகின் முன்னால் எனக்கு இவ்வளவு நாளாய் இருப்பதாக நினைத்திருந்த திறமையும்கூட துச்சமாக இருந்தது. சலீம் என்னை அறிவாளியாகப் போற்றிப் பழகி வருகிறான். அதற்காக நான் அவள் தங்கைக்கு அறிவாளியாகத் தோன்ற வேண்டுமா என்ன? அவள் மீது காதல் கொள்வதற்கு என்னிடம் என்னதான் தகுதி இருக்கிறது என்று தத்தளித்தேன். அவளோ தேவதையாகத் தோன்றினாள். கவிஞர்கள் பொய்யாக வர்ணிக்கவில்லை என்பதைச் சத்தியமாக இதோ என் இருபத்தி இரண்டாவது வயதில்தான் முதல் முறையாக ஏற்றுக் கொள்கிறேன். அவளைச் சுற்றி எப்போதும் ஒளிவீசிக் கொண்டிருந்தது. பெரும்பாலும் எனக்கு எதிர்பட்ட நேரங்களில் அவள் கருப்பு அங்கி அணிந்திருந்ததால் நான் அவள் விழிகளை மட்டும்தான் பார்க்க முடிந்தது. அதைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நான் துடித்தேன். ஆனால் ஒரு வினாடியில் பத்தில் ஒரு பகுதி நேரம்கூட அவள் விழியை நான் பார்க்க முடிந்ததில்லை.
பூர்வீகமான பழைய வீடு. பூந்தோட்டத்தை ஒட்டி அமைந்திருந்தது. மெஹர், அவளுடைய அப்பா, அம்மா, தம்பி ஆகியோர் பின் கட்டில் இருந்தனர். சலீமின் அறை முகப்பிலேயே இருந்தது. அதிலேதான் நானும் இருந்தேன். வந்த மூன்றாம் நாள்தான் அவள் "நீங்கள் மதராஸியா?' என்று கேட்டது. ஆனால் நான் அந்த வாய்ப்பை அப்படியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? ஏதாவது முக்கியமான ஒரு சொல்லை அந்த நேரத்தில் நான் பதிலாகத் தந்திருக்க வேண்டாமா? எனக்கு அறிவு அவ்வளவுதான். காதலின் தெய்வீகத்தைச் சுருக்கமாகச் சுண்டக் காய்ச்சிய "ஒரு சொல் கவிதை' ஒன்றைச் சொல்லியிருக்க வேண்டும். தமிழ்நாடு என்று திருத்துவதுதான் அத்தனை முக்கியமா? அவளுக்குத் தமிழ்நாடு எந்தத் திசையில் இருக்கிறது என்பதுகூட அத்தனை உறுதியாகத் தெரியுமா என்று தெரியவில்லை. சரி என்று தலையசைத்து... தலையசைத்தாள் என்று சொல்ல முடியாது.
சரி என்றது போல ஏதோ ஒரு எதிர்வினை அவளிடம் வெளிப்பட்டது. "பேச்சுக்குக் கேட்டேன்... இவ்வளவு உறுதியாக எனக்குத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை' என்ற எள்ளல் பாவனை போலவும் இருந்தது. அடுத்த நாள் அவளைப் பார்க்க முடியவில்லை. அவள் காலடி ஓசையை நான் சுலபமாகக் கணிக்கக் கூடியவனாக மாறியிருந்தேன். அவளது குரலும்கூட எனக்கு நன்றாக அடையாளம் தெரிந்தது. மொழி புரியவில்லை. ஆனால் அவள் என்ன பேசினாலும் கேட்டுக் கொண்டிருக்கலாம். அது இசையின் ஒரு வடிவம்.
நீங்கள் மதராஸியா என்பதை அவள் எனக்காக இன்னொருதரம் சொல்வதாக இருந்தால் அதை ஒலி நாடாவில் பதிவு செய்து வைத்துக் கொள்ளச் சித்தமாக இருந்தேன். அல்லது அது போல ஏதாவது வேறு ஒரு வார்த்தை என்னிடம் பேச வேண்டியிருந்தால் அதை...
ஐந்தாவது நாள் அவளைத் தோட்டத்தில் பார்த்தேன். பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். பூக்கள் அவளால் பறிக்கப்படுவதை எதிர்பார்த்துக் கிடப்பதை நான் பார்த்தேன். அந்த விரல்கள் பூக்கள் பறிப்பதற்கென்றே பிரத்யேகமாக உருவானவை போல இருந்தன. மிக நளினமான, மென்மையான விரல்கள். அது அசைவது வழக்கமாக எல்லோரது விரல்களின் அசைவு போல இல்லை. பூக்களுக்கும் அந்த விரல்களுக்குமிடையே சிறிய உடன்பாடு இருப்பதாகத் தோன்றியது. இல்லையென்றால் அத்தனை மென்மையான விரல்களால் அந்தப் பூக்களைப் பறித்திருக்க முடியாது என்பது என் எண்ணம். பூக்கள் தானாகவே தங்களை அவளிடம் வழங்கிக் கொண்டிருந்தன. அத்தகைய விரல்களை நான் வெகு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிற வாய்ப்பு கிடைத்தது. சலீம் கடைக்குப் போயிருக்கிறான் இப்போது வந்துவிடுவான் என்ற தகவலை இந்தியில் சொன்னபடி அவனுடைய அம்மா தேநீர் கோப்பையை என்னிடம் கொடுத்தார். ""உன் அம்மா, அப்பால்லாம் மதராஸ்லதான் இருக்காங்களா?'' }இதுவும் இந்தியில். மற்றபடி அவர்கள் வீட்டில் எப்போதும் உருது பேசினார்கள். சாப்பிடும்போதும் அவர்கள் வரை உருதிலும் சப்பாத்தி வேண்டுமா என்பது போன்றவற்றை என்னிடம் இந்தியிலும் பேசினார்கள்.
ஆறாவது நாள்...
அறையில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று பார்த்து தூர்தர்ஷனின் மதிய ஒளிபரப்பாக ஒரு பாடாவதி தமிழ்ப் படத்தைப் போட்டிருந்தார்கள். ஆனாலும் அப்போது அதை நான் இப்போது போல பாடாவதி படம் என்று நினைக்கவில்லை. 80 களில் அதை வரம் போல பார்த்தேன். அசாமி படம் போட்டாலும் அதை நகராமல் பார்த்துக் கொண்டிருப்பேன்.
மெஹர் வந்து அண்ணன் இல்லையா என்று கேட்டுவிட்டு அதற்கான பதிலை அறையில் தேடித் தெரிந்து கொண்டு புறப்பட்டாள். அண்ணன் வந்ததும் சொல்கிறேன் என்ன விஷயம் என்றேன்.
"இல்லை எழுதுவதற்கு பேனா வேண்டும், அதற்காகத்தான்'' என்றாள்.
அவளுடைய சிவந்த உதடுகள் அந்த வார்த்தைகளை எப்படித் தயாரிக்கின்றன என்று ஆழ்ந்து பார்த்தேன்.
"என்னிடம் கேட்டால் தரமாட்டேனா?'' என்று என் சட்டைப் பையில் இருந்து பேனாவை எடுத்துக் கொடுத்தேன்.
பெண்கள் நாணத்தால் கால் விரல்களால் தரையில் கோலமிடுவது பொது அம்சம் போலிருக்கிறது. அவள் பாதங்களில் மிளகாய்ப் பழச் சிவப்பில் மிளகாய் போலவே மருதாணி அலங்காரம். பேனாவை வாங்கிக் கொண்டு "ஏன் என்னை அப்படிப் பார்க்கிறீர்கள்?'' என்றாள்.
என்னால் தகுந்த பொய்யைத் தயாரிக்க முடியவில்லை. உண்மையையும் சொல்ல முடியவில்லை. தலையிறங்கி நின்றேன். நான் வித்தியாசமாகப் பார்க்கவில்லையே... சாதாரணமாகத்தான் பார்த்தேன் என்று சொல்ல நினைத்தேன். அதைச் சொல்வதற்கு எனக்கு இந்தியில் புலமை போதாது என தயங்கினேன்.
காஷ்மீரில் இருந்து ஏழாம் நாள் நானும் சலீமும்தான் புறப்படுவதாக இருந்தோம். மதப் பிரச்சினை முற்றிக் கொண்டிருப்பதாகக் கூறி என்னை மட்டும் பாதுகாப்பாக டாக்ஸி பிடித்து அனுப்பி வைக்க முடிவெடுத்தான்.
தயாராக இருக்கச் சொல்லிவிட்டு டாக்ஸிக்கு ஓடினான். அவனுடைய அம்மா அந்த நேரத்திலும் குங்குமப் பூ, ஸ்வெட்டர், பாதாம் இருந்தால் வாங்கி வா என்றார்கள். சலீம் சற்று நேரம் நின்றான். "கடையெல்லாம் அடைத்துவிட்டார்கள்' என்ற தகவலைச் சொன்னான். "எங்காவது இருக்கிறதா பார்' என மெஹரும் "எதற்கு அதெல்லாம்?' என நானும் ஒரே நேரத்தில் சொன்னோம். எனக்குச் சிலிர்ப்பாக இருந்தது.
மெஹர் என்னைவிட மூன்று வயதாவது இளையவளாக இருக்கக் கூடும். ஆனால் அவள் பார்வையில் என்னைப் பணிய வைத்துவிடும் மிடுக்கு இருந்தது. "மெஹர் சொல்கிறபடியே செய்' என்று சலீமை அழைத்துச் சொல்லிவிடுவேன் போல இருந்தது. நல்லவேளையாக அப்படி நான் சொல்வதற்குள் சலீம் அங்கிருந்து போய்விட்டான்.
நான் துணிகளை எல்லாம் சுருட்டி பைக்குள் சொருகிவிட்டு, தோட்டத்தில் போய் நின்றேன். காஷ்மீரையும் மெஹரையும் அப்படியே மனதுக்குள் பருகிவிடவேண்டும் என்று பரபரத்தது.
உடனே ஒரு சிகரெட் பிடிக்க வேண்டும்போல இருந்தது. புகையோடு சேர்த்து நினைவுகளையும் உள்வாங்கிக் கொள்ளும் அரிய அனுபவம். பாக்கெட்டைத் துழாவிய போது சிகரெட் மட்டும் இருந்தது. தீப்பெட்டி? அடடா... சலீம் வருவதற்குள் சிகரெட் குடித்தால்தான் நான் மெஹரையும் காஷ்மீரையும் மனதுக்குள் பருக முடியும் என்ற நம்பிக்கை வளர்ந்தது. ஐயோ நான் எங்கே போவேன்? சாலைக்கு மறுபுறம் ஓடி தீப்பெட்டி வாங்கிக் கொண்டு வந்து புகைக்கலாம் என்றாலும் கடைகளை அடைத்துவிட்டார்கள் என்கிறார்களே? சலீம் வந்துவடுவானோ என்ற பயமும் சூழ்ந்தது. பதட்டம்... என் நம்பிக்கை முட்டாள்தனமானதாக இருக்கலாம். ஆனால் சிகரெட்டின் மூலம் அது சாத்தியமாகும் வாய்ப்பு இருந்தால் அதைத் தவறவிடக் கூடாதல்லவா?
யாரும் எதிர்பார்க்க முடியாத ஒரு நிகழ்ச்சி அப்போது என் வாழ்வில் நடந்தது. வாயில் சிகரெட்டுடன் நான் பாக்கெட்டுகளைத் துழாவிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவளே வந்தாள். அவள் கையில் தீப்பெட்டி இருந்தது.
"ஒரு நாளைக்கு எத்தனை?'' என்றாள் கிண்டலாக. நியாயமான உண்மையான பதிலைச் சொல்வதற்காக நான் மனதில் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் நான் பதில் சொல்வதற்குள் அவள் "உங்களுக்குத் தங்கை இருக்கிறாளா?'' என்றாள். தலையசைத்தேன். "எத்தனை பேர்?'' என்றாள். "மறுபடியும் எண்ண ஆரம்பித்துவிடாதீர்கள்'' என்று சிரித்துக் கொண்டே ஓடினாள்.
வாழ்நாளெல்லாம் நான் காதலித்து மகிழ எனக்கான முகம் அது என்பதில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை. என்னிடம் கேமிரா இல்லாமலேயே அவள் முகத்தை என் கண்களால் விழுங்கிக் கொண்டேன். டேப் ரிக்கார்டர் இல்லாமலேயே அவளுடைய குரலை என் காதுகளால் பதிவு செய்து கொண்டேன். கண்களும் காதுகளும் எவ்வளவு முக்கியமானவை என்பது அந்தக் கணத்தில் எனக்கு வலுவாகப் புரிந்தது. என்னுடைய கண்களும் காதுகளும் தவம் செய்தவை என்று தோன்றியது. முக்கால் நிமிட நேரம் நாங்கள் இருவரும் பேசியிருப்போம். ஆனால் அது பொக்கிஷ நிமிடமல்லவா? யோசித்துப் பாருங்கள்.. நமக்குச் சற்றும் தேவையற்ற பேச்சை நாம் நாளெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம். எதிரில் இருப்பவர் பேசுகிறாரே என்பதற்காக நாமும் பேசுகிற பேச்சா இது? ஒரு நாளில் நாம் ஆத்ம சுத்தியோடு எத்தனை வார்த்தை பேசுகிறோம்? தினம் ஒரு வார்த்தையாவது தேறுமா? எல்லாமே யாரையோ வசை பாடுவதற்காக, தேவைக்கு அதிகமாகப் புகழ்வதற்காக, ஒருவர் பேச்சை ஒருவர் விஞ்சி நிற்பதற்காக, கூழைக் கும்பிடு போடுவதற்காக... எல்லாமே குப்பை வார்த்தைகள்.
மெஹர் என்னிடம் பேசியவை இரண்டு ஆத்மாக்களின் கோடி வாக்கியங்களின் சுருக்கம். அதை வேறு வார்த்தைகளால் விவரித்து இட்டு நிரப்பவும் வழியிருப்பதாகத் தெரியவில்லை. அந்தக் கோடி வாக்கியங்களை விஸ்தரிப்பது மொழிகள் சொல்லும் சொற்களால் சாத்தியமில்லை என்று தோன்றியது. அது மனதின் மொழி. அதாவது சம்பந்தபட்ட எங்கள் இருவரின் மனதின் மொழி. ஒருவேளை மெஹரால்கூட இது முடியுமா என்று தெரியவில்லை. என் ஒருவனுக்கான மொழி. அதே போல அந்த முகம். அது என் வாழ்நாளுக்கெல்லாம் போதுமானதாக இருந்தது.
டாக்ஸி புறப்படும்போது சலீமின் அப்பாவுக்குப் பின்னால் அவளுடைய முகம் வழியனுப்பியது. அதில் இன்னும் சொல்லப்பட வேண்டிய எத்தனையோ வார்த்தைகள் ஏக்கத்தோடு நின்றன.

LinkWithin

Blog Widget by LinkWithin