செவ்வாய், பிப்ரவரி 08, 2011

ஒரு பழைய செய்தி

மணிக்கொடி இதழை நடத்திய ஸ்டாலின் சீனிவாசன்தான் பராசக்திக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கிய தணிக்கை அதிகாரி என்பது ஆச்சரியமாக இருந்தது. ஆகவே அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
``பராசக்திக்கு தடை போடும் முயற்சி தோல்வி!- படம் நன்றாக இருப்பதாக தணிக்கை அதிகாரி பாராட்டு!
"பராசக்தி"க்கு தடை விதிக்க, பலமுனைகளில் இருந்தும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. படத்தைப் பார்த்த தலைமை தணிக்கை அதிகாரி, படம் நன்றாக இருப்பதாகப் பாராட்டினார்!
``பராசக்தி" படத்துக்கு கூட்டம் அதிகரிக்க, அதிகரிக்க, ஒரு தரப்பினரின் எதிர்ப்பும் வலுத்தது. படத்தில் நாத்திக கருத்துக்கள் அதிகம் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.அந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம், பத்திரிகை வாயிலாக உடனுக்குடன் பதில் கொடுத்துக்கொண்டிருந்தார், கருணாநிதி.
"பராசக்தி"க்கு தடை விதிக்க வேண்டும் என்பதை ஒரு இயக்கமாக சிலர் நடத்திக் கொண்டிருந்தனர். தடை விதிக்கக்கோரி, தலைமை தணிக்கை அதிகாரிக்கு தந்திகள் குவிந்தன. அப்போது தணிக்கை குழுவின் தலைமை அதிகாரியாக `ஸ்டாலின்' சீனிவாசன் இருந்தார். இவர், ``மணிக்கொடி" என்ற இலக்கியப் பத்திரிகையை நடத்தி, புதுமைப்பித்தன் போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள், புகழ்பெறக் காரணமாக இருந்தவர். அவர் ஸ்டாலினைப் போன்ற மீசை வைத்திருந்ததால் `ஸ்டாலின்' சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார்.
அவர் ``பராசக்தி" படத்தைப் பார்த்தார். சாதாரணமாகப் பார்க்கவில்லை. கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு பார்ப்பது என்பார்களே, அந்த மாதிரி பார்த்தார். கடைசியாக அவர் வழங்கிய தீர்ப்பு: ``பராசக்தியில் ஆட்சேபகரமான காட்சி எதுவும் இல்லை. எனவே, படத்துக்கு தடை விதிக்கவோ, காட்சிகளை வெட்டவோ வேண்டிய அவசியம் இல்லை".இப்படி அறிவித்த தணிக்கை அதிகாரி, படம் நன்றாக இருப்பதாகவும் பாராட்டினார்!
``பராசக்தி" பற்றி பத்திரிகைகளில் நடந்த விவாதமும், அதற்கு தடை வரலாம் என்ற எதிர்பார்ப்பும், ``பராசக்தி"க்கு பெரிய விளம்பரமாக அமைந்தது. எனவே, தியேட்டர்களில் முன்னிலும் அதிகக் கூட்டம் சேர்ந்தது. தினமும் ``ஹவுஸ்புல்" தான்.
படத்தின் ``கிளைமாக்ஸ்", பராசக்தி கோவிலிலேயே சிவாஜியின் தங்கையாக நடிக்கும் ஸ்ரீரஞ்சனியை பூசாரி கற்பழிக்க முயலும் காட்சியாகும். நடந்ததை அறிந்த சிவாஜி, பூசாரியை பழிவாங்க பராசக்தி சிலைக்கு பின்னால் பதுங்கியிருப்பார்.
``நீ தீர்க்காயுசா இருப்பே" என்று ஒரு பக்தனிடம் பூசாரி கூறும்போது, ``ஏய், பூசாரி! முதலில் உன் ஜாதகத்தை கணித்துக்கொள்" என்ற குரல் அசரீரி மாதிரி கேட்கும்! சிவாஜியின் குரல்தான் அது!
பூசாரி: யார் அம்பாளா பேசுவது?
சிவாஜியின் குரல்: அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?
பூசாரி: தாயே! பராசக்தி!
சிவாஜி (வெளியே வந்து): இந்த பராசக்தி உனக்குத் தாய். என் தங்கை கல்யாணி உனக்கு தாசி! அப்படித்தானே! மானங்கெட்டவனே!
பூசாரி: அப்பனே! இது என்ன விபரீதம்?
சிவாஜி: விபரீதம் வராது என்று எண்ணித்தானே என் தங்கையோடு விளையாடி இருக்கிறாய்?
பூசாரி (பராசக்தி சிலையைப் பார்த்து): தாயே, பராசக்தி!
சிவாஜி: அது பேசாது. பேசமுடியும் என்றால், நீ என் தங்கையின் கற்பை சூறையாடத்துணிந்தபோது, ``அடே பூசாரி! அறிவு கெட்ட அற்பனே! நில்" என்று தடுத்திருக்கும். உன்னிடம் சிக்கிய போது, இந்தப் பராசக்தியை என் தங்கை ஆயிரம் முறை அழைத்தாளாமே! ஓடி வந்து அபயம் அளித்தாளா?

பூசாரி (கூட்டத்தினரைப் பார்த்து): பக்த கோடிகளே! பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களே!
சிவாஜி: தேவி பக்தனே! மனித உதவியை ஏன் நாடுகிறாய்? உன் தேவியின் கையில் சூலம் இருக்க, சுழலும் வாள் இருக்க ஏன் பயந்து சாகிறாய்? (இந்த சமயத்தில், சிவாஜியை வெட்டுவதற்கு அரிவாளை பூசாரி ஓங்க, சிவாஜி அதைப்பிடுங்கி பூசாரியை வெட்டுவார்.)
சிவாஜி மீதான வழக்கு விசாரணை படத்தில் ஏறத்தாழ கால்மணி நேரம் இடம்பெறும். குற்றச்சாட்டுகளை மறுக்காமல் சிவாஜி சொல்வார்:
`கோவிலில் குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில், கொடியவர்களின் கூடாரமாக இருக்கக்கூடாது என்பதற்காக! பூசாரியைத் தாக்கினேன் அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி, பகல் வேஷமாக ஆகிவிட்டதை கண்டிப்பதற்காக!"
இவ்வாறு சிவாஜி கூறும்போது, ரசிகர்களின் கைதட்டலும் ஆரவாரமும் தியேட்டரை குலுங்கச் செய்யும். ``பராசக்தி"யின் வசனம் புத்தகமாக வெளிவந்து பரபரப்பாக விற்பனையாகியது. வசனம் முழுவதும் இசைத்தட்டுகளாக வெளிவந்து சக்கை போடு போட்டது.
``காலத்தை கணிக்க, கி.மு., கி.பி. என்று கூறுவது போல, தமிழ்த் திரைப்பட வரலாற்றை எழுத வேண்டுமானால் பராசக்திக்கு முன், பராசக்திக்குப்பின் என்று பிரிக்கலாம்" என்று சில விமர்சகர்கள் எழுதினர்.
``பராசக்தி" படத்தில் நடிக்க, சிவாஜி கணேசனுக்கு மாதம் ரூ.250 சம்பளம் கொடுக்கப்பட்டது. இதை சிவாஜியே குறிப்பிட்டிருப்பதுடன், ``பராசக்தியில் இலவசமாக நடிப்பதற்குக் கூட தயாராக இருந்தேன்" என்றும் கூறியுள்ளார்.
``பராசக்தி" படத்துக்குப்பின் சிவாஜியின் ஊதியம் பல்லாயிரக்கணக்கில் உயர்ந்தது. அட்வான்ஸ் கொடுக்க அவர் வீட்டு முன் பட அதிபர்கள் குவிந்தனர்.

திங்கள், ஜனவரி 31, 2011

மாதொரு பாகன்



அவன் அவள் அது என்று ஒரு கதை. சிவசங்கரி எழுதி தொடர் கதையாகவும் பிறகு சிவகுமார், ஸ்ரீபிரியா, லட்சுமி நடிக்க சினிமாவாகவும் வந்தது.

குழந்தையில்லாமல் வருந்தும் தம்பதியினர். மலடி என்ற பட்டம்.. வாரிசு இல்லாத வருத்தம்.. தன் கணவன் தாதுவை இன்னொரு பெண்ணின் கருப்பையில் சுமக்க வைத்து குழந்தையைப் பெற்றெடுக்கிறாள் மனைவி. எண்பதுகளின் துவக்கத்தில் பெரிய வட்டமிட்டு அதில் ஏ குறியிட்டு போஸ்டர் ஓட்டப்பட்டபடம்.

பெருமாள் முருகனின் மாதொரு பாகன் அப்படியான விஞ்ஞான முறையெல்லாம் தெரியாத கணவன் மனைவி பற்றியது. சமூகம் அங்கீகரித்த ஒரு கலாசார அதிர்ச்சி வைத்தியம்தான் கதையின் மையம். தமிழகத்தின் ஒரு சிறு பகுதியில் அது பெண்ணின் மாமியாரும் தாயாரும் ஏற்றுக் கொள்ளும் ஒருவகை தெய்வீக உத்தியாக அது இருந்திருக்கிறது. தமிழ் நாட்டில் நூறாண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒரு நடப்பை நமக்குத் தெரிவிக்கிறது.

கதையின் ஆரம்பத்தில் இருந்தே வருவதுதான் சரியாக இருக்கும். காளி- பொன்னா திருமணம் நடக்கிறது. காளி மாமனார் வீட்டின் வாசலில் தோதான இடம் பார்த்து பூவரசு மரக் கிளை ஒன்று நடுகிறான். அதுவும் கிளைவிரித்து, பூத்து நிழல் பரப்பி நிற்கிறது. ஆனால் பொன்னாவோ குழந்தை பாக்கியம் இல்லாமலேயே ஆண்டுகளைக் கடத்துகிறாள். அவளுக்கு முதல் மாசம் தீட்டுப் பட்டதுமே முகம் சுளிக்கிறாள் மாமியார். அறிவுரைகள் ஆரம்பமாகின்றன. தீட்டுப் பட்ட மூணாம் நாளு இந்த சாறைக் குடி.. இந்த மூலிகையைக் கரைத்துக் குடி என்று அவளுக்கு நாக்கையே மறக்கடிக்கிறார்கள். காலம் ஓடுகிறது.என்னத்த கண்டே இருக்கிற வரைக்கும் நல்லா சாப்பிட்டுட்டுப் போ என்கிறார்கள். உனக்கென்ன குழந்தையா குட்டியா என்கிறது ஊர். வேர்க்கடலை விதைக்கப் போனால், மலடியின் கை பட்ட விதை முளைக்க வில்லை என்று கதை சொல்கிறார்கள். ஊரும், உறவும், சொந்த தாயும்கூட மலடியாக இருப்பவளை மன்னிப்பதாக இல்லை. மருமகனை வேறு கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லுகிறாள். மறு கல்யாணம் செய்து கொள்வதில் காளிக்கும் விருப்பமில்லை. ஆம்பளையா பொறந்தா ஒழுங்கா தண்ணிப் பாய்ச்சணும்டா
என்பது போன்ற ஜாடை மாடையான எகத்தாளப் பேச்சுகள். காளியின் வீட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டு பொன்னாத்தாவை மடக்கப் பார்க்கும் இளசுகள் என்று காளியின் ஆண்மையை உரசிப் பார்க்கும் சங்கடங்கள் தொடருகின்றன.

ஒரு குழந்தை பிறந்தால் எல்லா பிரச்சினையும் சரியாகிவிடும் என்ற நிலமை. குழந்தை என்பது ஒரு அங்கீகாரம். குலம் தழைக்க வந்த வம்ச விளக்கு. வாரிசு.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் கோவில் பதினாலாம் நாள் தேர் திருவிழாவில் அதற்கு ஒரு விடிவுகாலம் இருப்பதாக காளியின் தாயே வழி சொல்கிறாள்.

குழந்தை பிறப்பதற்கான உபாயத்தை தாயிடமிருந்தே மகன் கேட்பது கதையின் உலுக்கலான பக்கங்கள். மகனுக்குத் தெரியாமல் தாயும் தாய்க்குத் தெரியாமல் மகனும் கள் குடிப்பது இருவருக்கும் தெரிந்த விஷயம்தான். தன்னிடம் ஏதோ பேச வந்து தயங்கிக் கொண்டிருக்கும் தாய்க்கு கள் இருக்கு குடிக்கிறியா என்று காளி குடிக்கக் கொடுக்கிறான். மெல்ல மெல்ல பேச்சு வருகிறது. எல்லாம் குழந்தை பிறப்பது பற்றித்தான். யார் மேல குறையோ எதற்கும் திருவிழாவுக்குப் பொன்னாவை ஒரு நடை அழைத்துக் கொண்டு போய் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதாகச் சொல்கிறாள். இடிந்து போகிறான் காளி.

பதினாலாம் திருவிழாவில் குழந்தையில்லாத பெண்கள் அங்கே ஆண்களோடு கூடி குழந்தை பெற்றுக் கொள்ளலாம். அந்த தினத்தில் அங்கு இருக்கும் எல்லா ஆண்களுமே சாமிகள்தான் என்பது ஐதீகம். காளியும் அவனுடைய மைத்துனனுமே திருமணத்துக்கு முன்பு இந்தத் திருவிழாவுக்கு வந்து பெண்களை வலம் வந்தவர்கள். இந்த ஐதீகம் ஆண்களுக்குத் தெரிந்திருப்பதுபோலவே பெண்களுக்கும் தெரிந்திருக்கிறது. அதாவது மகனுக்குத் தெரிந்திருந்தது, அம்மா மூலம் தெரியவருகிறது.

சிக்கலான கதை.

முதல் சிக்கல் தமிழகத்தில் இப்படியொரு வழக்கம் இருந்ததாக எழுதுவது. அதை அம்மாவும் மகனும் பேசுவதாக எழுதுவது.. அதுவும் மாமியாரே தன் மருமகளை அதற்கு ஆட்படுத்துவது பற்றி பேசுவது.. எப்படிப்பட்ட சிக்கலான முடிச்சையும் நேர்மையான நடையின் மூலம் அவிழ்க்க முடியும் என்பதுதான் பெருமாள் முருகன் அவருடைய செறிவான நடையின் மூலம் நமக்குத் தெரிவிக்கும் செய்தி. சவாலான கதையம்சம் பொதிந்திருக்கும் கரு. வலிந்து ஆபாசம் எழுதும் கதை போக்கு இருந்தும்கூட இயல்பான தொனியில் கதையைக் கொண்டு சொல்லியிருக்கிறார். நல்லுப் பையன் சித்தப்பா போன்ற ஏட்டிப் போட்டியான கதாபாத்திரங்கள், அவர்களுக்கான ஆபாச மொழிகளை பேசுகிறார்கள். அது முற்றிலும் கதையில் இருந்து விலகாத இயல்பான மொழியாகவும் இருக்கிறது.

காளி தன் மனைவியிடம் கருத்து கேட்கிறான். திருவிழாவுக்கு நீ போகப் போகிறாயா என. உனக்கு விரும் என்றால் போய் வருகிறேன் என்கிறாள். காளிக்கு இரண்டாவது இடி. நான் போக மாட்டேன் என்று சொல்லுவாள் என பெரிதும் நம்பிக்கையோடு அவளிடம் கேட்டதற்கு அவள் சொன்ன பதில் அது.

உற்ற தோழனாக பழகிய மைத்துனன் பொன்னாவின் அண்ணன்- அவனும் தன் தங்கை போய்விட்டுவந்தால் குழந்தை பாக்கியம் கிட்டுமே என்கிறான்.

குழந்தை என்றால் குலம் தழைக்க வந்த வாரிசு. இதிலே குலம் எங்கே இருக்கிறது. பிறக்கப் போவது யாருடைய வாரிசு?... காளியின் ஆண்மைக்கு இதைவிட இழுக்கு இருக்க முடியாது. பொன்னாவை அனுப்பிவைக்க முடியாதென மறுக்கிறான். காளிக்கு விருப்பமில்லை என்ற செய்தியையே மறைத்து பொன்னாவை விழாவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். பொன்னாவும் காளியும் என்ன முடிவுகள் எடுத்தார்கள் என்பது கதையின் முடிவு... அல்லது கதையின் முடிச்சும்கூட.

தமிழகத்தில் இப்படியொரு முறை இருந்ததாக எங்கேனும் பதிவுகள் இருந்ததா என்று தெரியவில்லை. பெருமாள் முருகன் அப்படியான ஒரு ஆதாரச் செய்தியின் அடிப்படையில்தான் இந்தக் கதையை எழுதத் துணிந்திருக்கிறார் என்றே நம்புகிறேன்.

கதை வெள்ளையர் ஆட்சி காலத்தில் நடைபெறுவதாக இருந்தாலும் அந்தக் காலக்கட்டத்தைச் சொல்லும் சூழல்கள் கதையில் வலுவாக இடம் பெறவில்லை. குளத்தின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு கல் எறியும் போட்டி ஒன்றை ஒரு வெள்ளைக்கார துரை நடத்துகிறார். என் கவனத்தில் அந்தக் காலத்துக் காசுகள், நோட்டுகள், உடை போக்குவரத்துகள் விவரிக்கப்படவில்லை.

காலம் பற்றிய குறிப்புகள் நாவலை பெரும்பகுதி வாசித்த பின்னரே உணர வேண்டியிருக்கிறது. எல்லோரும் குடுமி வைத்திருந்தார்கள் என்பது அத்தகையதோர் குறிப்பு. ஆனால் இது நாவலின் மையத்தில்தான் கண்டெடுக்க முடிந்தது.

குழந்தையில்லாத ஒரு கணவன் மனைவியின் கதையாக மாதொரு பாகனைப் பார்க்க முடியவில்லை. பல நூறு கணவன்- மனைவிகள் அதில் தெரிகிறார்கள். ஒரு கதையின் பின்னால் பல கதைகள் இருந்திருக்கும் அதிர்வை ஏற்படுத்தும் நாவல்.

மாதொரு பாகன்,

பெருமாள் முருகன்,

காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி.சாலை
நாகர்கோவில் 629 001
விலை: 140
email: kalachuvadu@sancharnet.in

வியாழன், ஜனவரி 27, 2011

சிறுகதை உலகம்




சிறுகதை உலகம்

தமிழ் ஸ்டூடியோ டாட் காம் நிகழ்த்திய சிறுகதை குறித்த இரண்டு நாள் பயிற்சிப்பட்டறையில் வகுப்பெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக சுவாரஸ்யமமான அனுபவம். இரண்டு நாளும் காலை முதல் மாலை வரை நான் படித்த சிறுகதைகள் குறித்து பேசிக் கொண்டே இருந்தேன். ஐந்து நிமிடங்களுக்குப் பேசுவதே சிரமம் என்ற எண்ணத்தில்தான் போனேன். பேசுவதற்கு விஷயங்கள் இருப்பதை அறிந்தேன். படித்தவற்றை நினைவூட்டும் விதமாக இருந்தது. பேசுவதற்காக நான் கையில் குறிப்பெடுத்துச் சென்றேன். அந்தக் குறிப்பு இதுதான்:

தமிழ் மொழியில் இலக்கியம் என்பவை செய்யுள் இலக்கியமாகத்தான் இருந்தன. சங்க இலக்கிய நூல்கள் தொடங்கி கண்ணகி -கோவலன் கதை, ராமன் }சீதை கதை எல்லாமே நமக்கு செய்யுளாகத்தான் கிடைத்தன. ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகுதான் எப்படி பேசிக் கொள்கிறோமோ அதே பாணியில் எழுதுவதும் இலக்கியம்தான் என்ற முடிவுக்கு வந்தோம்.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழின் முதல் நாவலை எழுதினார். பிரதாப முதலியார் சரித்திரம் என்று அந்த நாவலுக்குப் பெயர். வ.வே.சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதை தமிழின் முதல் சிறுகதை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்கு முன்னரோ அதற்கு சம காலத்திலோ ஆ.மாதவையா, மகாகவி பாரதி போன்றோர் சிறுகதைகள் எழுத ஆரம்பித்திருந்தாலும் வடிவம் கூடிவரப் பெற்றது குளத்தங்கரை அரசமரம்தான். இதை ஆமோதிக்கிறார் மணிக்கொடி எழுத்தாளர் சி.சு. செல்லப்பா.
நாம் இன்று எத்தனையோ நாவலாசிரியர்களையும் சிறுகதையாசிரியர்களையும் பெற்றிருக்கிறோம்.
மணிக்கொடி இதழ் நமக்கு அரிய சிறுகதையாசிரியர்களைத் தந்தது. புதுமைப்பித்தன், கு.பா.ரா., மெüனி, கு.அழகிரிசாமி, ந.பிச்சமூர்த்தி, க.நா.சு., லா.ச.ரா., போன்ற பலர் அதில் இருந்து புறப்பட்டவர்கள்தான். தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, சுஜாதா, பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா போன்ற பல முக்கிய எழுத்தாளர்கள் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கின்றனர்.
இவ்வளவு பேரும் எதற்காக எழுதினார்கள் என்பது எவ்வளவு நியாயமான கேள்வியாக இருந்தாலும் எத்தனையோ ஆயிரம் பேர் இவர்களை வாசித்தார்கள் என்பதே அதற்கு நியாயமான பதிலாக இருக்கிறது. படிக்கிற ஆர்வம் மிக இயல்பான மனப்போக்காக இருக்கிறது. இசை மீது ஆர்வம் கொள்கிறவர்களும் ஓவியத்தின் மீது ஆர்வம் கொள்வபவர்களும் போலவே எழுத்தின் மீது ஆர்வம் கொள்பவர்களும் உருவாகிறார்கள். ஒரு தாய் வயிற்றின் பிள்ளைகளான ஆர்.கே. நாராயண் எழுத்தாளராகவும் ஆர்.கே. லஷ்மண் ஓவியராகவும் தீர்மானமானது அவர்களின் எத்தனையாவது பிராயத்தில்.. அதில் எந்த தருணத்தில் என்பது புதிர் நிறைந்த கேள்வியாகத்தான் இருக்கிறது.
நீங்கள் கதைகள் பற்றி தெரிந்து கொள்ள குழுமியிருப்பதும் அத்தகைய ஒரு புதிர்தான். நீங்கள் ஏன் ரியல் எஸ்டேட் பிஸினஸ் வேலையோ, கார் டீலராகவோ இல்லாமல் புத்தகம் படிப்பது தொடர்பாக தெரிந்து கொள்ள விரும்பியிருக்கிறீர்கள்?
சினிமா இசையில் உங்களுக்கு இளையராஜாவையோ, ரஹ்மானையோ பிடிக்கலாம். தேவாவையோ சங்கர் கணேஷையோ பிடிக்கும் என்று கூறுபவர்கள் குறைவு. நாம் பல தரப்பட்ட ரசனை கொண்டவர்களாக இருந்தாலும் தனித்தன்மை இல்லாதவர்களைப் பின் தொடர்வதில்லை.
பாடகர்களில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? பெரும்பாலும் டி.எம்.எஸ்., பி.பி. சீனிவாசுலு, எஸ்.பி.பி., ஜேசுதாஸ் பெயரைச் சொல்லுபவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்குத் தனித்தன்மை இருந்தது. இவர்களைப் போல பாடுகிறவர்கள் சிலர் வந்தார்கள் அவர்கள் எடுபடாமல் போனார்கள். எந்தத் துறையிலும் தனித் தன்மை தேவை. பத்திரிகை ஓவியங்களை எடுத்துக் கொண்டால் சிலருக்கு ம.செ., சிலருக்கு மாருதி, சிலருக்கு ஜெயராஜ், சிலருக்கு கோபுலு சிலருக்கு அரஸ், சிலருக்கு ஷ்யாம்.. இப்படி ரசனை மாறுகிறது. எழுத்துலகில் அது மிகவும் முக்கியமாக இருக்கிறது. அதற்காகத்தான் இத்தனை பரீட்சார்த்த முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
சிலருக்கு கல்கி பிடிக்கும். சிலருக்கோ அவரை ப் பிடிக்கவே பிடிக்காது. சுந்தர ராமசாமிதான் சிறந்த எழுத்தாளர் என்பார்கள். சிலருக்கோ சுஜாதாதான் படிக்கப் பிடிக்கும். ஜெயமோகனைப் பிடிப்பவர்களுக்கு சாருநிவேதிதாவைப் பிடிக்காமல் இருக்கும். ரசனை மாறுபாடு இருப்பது வாடிக்கை. எம்.ஜி.ஆருக்கு ஒரு ரசிகக் கூட்டம் இருந்தது போலவே சிவாஜிக்கு ஒரு ரசிகக் கூட்டம் இருந்தது அல்லவா?.
மொத்தத்தில் ரசனைகள் மாறுவது இயல்பு. ஒரே மாதிரிதான் இருக்க வேண்டுமானால் உலகில் ஒரே ஒரு நடிகரும் ஒரே ஒரு நூலும் ஒரே ஒரு இசைக் கலைஞருமாகத்தான் இருக்க முடியும். அது சாத்தியமில்லை; அது சரியுமில்லை.
கணம்தோறும் மாறிக் கொண்டிருக்கும் வளர்ந்து கொண்டிருக்கும் அதிசய பொக்கிஷமாக கலைகள் இருக்கின்றன. மனிதனின் அரிய கண்டுபிடிப்பாக கலை இருக்கிறது. குகையில் வாழ்ந்த நாளில் சுவரில் கிறுக்கிய நாளில் உருவான படைப்பாற்றல். விலங்குகளிடமிருந்து மனிதனைப் பிரித்தது அவனுடைய உழைப்பும் கலையும். மனிதன் வேட்டையாட ஆரம்பித்தான். அதற்கான கருவிகள் கண்டுபிடித்தான். அதோடு நிற்கவில்லை. அதை சுவையாக சமைக்கவும் கற்றான். புலியும் வேட்டையாடுகிறது. அது ஒரு போதும் மானை வேட்டையாடி மான் பிரியாணி செய்யப் போவதில்லை. மனிதனின் உழைப்பும் கலையும் ஒன்றாக வளர்ந்தவை.
படைப்பிலக்கியத்தில் இத்தனை வகைகள் இருக்கின்றன. அல்லது இத்தனைவிதமாக எழுதுகிறார்கள் நான் யாரைப் பின்பற்றுவது, யாரைப்படிப்பது என்ற கேள்வி எழலாம். எப்படி டி.எம்.எஸ்.ஸýக்கோ, சிவாஜிக்கோ, ரஹ்மானுக்கோ ரசிகர் ஆனீர்களோ அதுபோலத்தான் இதுவும். உங்கள் மன இயல்புக்கும் உங்கள் அனுபவத்துக்கும் உங்கள் சுபாவத்துக்கும் நெருக்கமான படைப்புகள் உங்களைத் தொடும். அப்போதுதான் அதை உங்களுக்கான இலக்கியமாக ஏற்றுக் கொள்கிறீர்கள். அட, நாம் நினைத்தது போலவே இருக்கிறதே என்றோ, இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் பட்ட அனுபவம்போலவே இருக்கிறது என்றோ, இந்த மாதிரி சந்தர்ப்பம் ஏற்பட்டால் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்றோ ஒரு இலக்கியத்தைப் படிக்கும்போது நாம் நினைக்கிறோம்.
எந்த நூலைப் பற்றியும் உங்கள் அபிப்ராயம் மாறுபடலாம். அதற்கு உங்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. ஆனால் அந்த அபிப்ராயம் உங்கள் சொந்த அபிப்ராயமாக இருக்க வேண்டும். இன்னொருத்தரின் அபிப்ராயத்தை பிரதிபலிக்காதீர்கள்.
மணிக்கொடி காலத்தில் தழைக்கத் தொடங்கிய சிறுகதை உலகம் தமிழில் தானே ஒரு தடத்தைப் போட்டு அதில் முன்னேறத் தொடங்கியது. மனிதர்களின் அவலங்களை, சந்தோஷங்களை, இயலாமையை, முயற்சியை அவை சொல்ல ஆரம்பித்தன. புதுமைப்பித்தனின் கிண்டல் தொனிக்கும் நடை, கு. அழகிரிசாமியின் கரிசனமான நடை, கு.பா.ரா.வின் மனித சபலங்களைச் சொல்லும் உளவியல் நடை என வாசகர்களின் பல்வேறு மனநிலைகள் அலசப்பட்டன. ந.பிச்சமூர்த்தி, மெüனி, க.நா.சு., லா.ச.ரா., தி.ஜானகிராமன் என வாசகர்களைச் சுழற்றிப் போட்ட எழுத்தாளர்கள் வரிசையாக உருவாகினர். தமிழ் சிறுகதை உலகின் பொற்காலம் அது.
பெரும்பாலும் கல்கி, நா.பார்த்தசாரதி, மு.வரதராசன், அகிலன் போன்றோரின் கதைகளில் வரும் லட்சிய நாயகர்களுக்கு அப்படி ஒரு வரவேற்பு இருந்தது. பலருடைய வீட்டில் கதாபாத்திரங்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுவது வழக்கமாக இருந்தது. ஆனால் அந்த லட்சியக் கதைகள் எதார்த்தமான உலகத்தைப் படைப்பதில் தவறு செய்தது. அது உருவாக்கப்பட்ட புதிய சூழ்நிலையில் புதிய லட்சியத்தோடு செயல்படுபவர்களைக் காட்டியது. சுதந்திரம் வாங்கிய கையோடு அதற்கு காந்திய சமூக சீர்திருந்த தேவையிருந்தது. அவர்கள் உண்மை பேசினார்கள். தியாகம் செய்தார்கள். குற்ற உணர்வு கொண்டு வருந்தினார்கள். அவையெல்லாம் மிகையாக இருந்தன. தேசியம் பேசிய இவர்களுக்குப் போட்டியாக தமிழ் தேசியம் பேசிய அல்லது திராவிடம் பேசிய சிறுகதைகள் உருவாகின. அண்ணா, கருணாநிதி, எஸ்.எஸ். தென்னரசு, டி.கே. சீனிவாசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, முரசொலி மாறன் போன்ற பலர் அவற்றைச் செய்தனர். தமிழ் தேசிய லட்சிய வாதம், பகுத்தறிவு வாதம், மிராசுதார் எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு போன்றவை இக் கதைகளின் அடி நாதமாக இருந்தன. இன்னொரு பக்கம் டி.செல்வராஜ், தனுஷ்கோடி ராமசாமி, கு.சின்னப்ப பாரதி, ஜெயகாந்தன், பொன்னீலன் போன்றவர்கள் கம்யூனிச சித்தாந்தத்தை வலியுறுத்தும் கதைகளோடு வந்தனர். இவர்களில் ஜெயகாந்தன் தன் தனித்துவமான கருத்துப் போக்கினால் அவர்களில் இருந்து விலகியே இருந்தார். அவருடைய கதைகள் அடித்தட்டு மக்கள் பிரச்சினையை பேசுவதில் தொடங்கி, மேல்தட்டு மக்களின் பிரச்சினைக்குக் கைமாறியது. பாரிஸýக்குப் போ, பிரம்மோபதேசம், சிலநேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள், ஜெயஜெய சங்கர என்று திசைமாறலின் உச்சத்துக்குப் போனார்.
இந்த சமயத்தில்தான் சுஜாதாவின் வருகை. ஏறத்தாழ இந்தக் காலத்தில்தான் நான் படிக்க ஆரம்பித்தேன். மேற் சொன்ன எல்லோரையும்விட அடுத்து வந்த இவரின் ஆதிக்கம் எனக்குள் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. ஏறத்தாழ அவருடைய எல்லா நூலையும் நான் வாசித்தேன். விஞ்ஞானம், புதுமை, எள்ளல், துறுதுறுப்பு, சுறுசுறுப்பு எல்லாம் இருந்தது இவருடைய கதைகளில். அவரை ஒரு சங்குக்குள் அடக்கமுடியவில்லை. புலனாய்வு கதைகள் எழுதுவார், ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்று காதல் கதைக்குத் தாவுவார், தலைமைச் செயலகம் என மூளை இயக்கம் பற்றி எழுதுவார், ஆழ்வார் பாசுரம் பற்றி எழுதுவார், சினிமா விமர்சனம் எழுதுவார், விஞ்ஞான கதைகள் எழுதுவார், வரலாற்றுக் கதை எழுதுவார்... மருத்துவம், காபி கொட்டை, சினிமா, இசைக் கச்சேரி, கவிதை எல்லாவற்றையும் எழுதினார். சுமார் 40 ஆண்டுகாலம் தமிழில் அவருடைய ஆட்சி நடைபெற்றது. இப்போதும் அவருடைய பாதிப்பு இல்லாமல் எழுத முடியாத எழுத்தாளர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். நிறைய வெளிநாட்டு நடப்புகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர், தமிழில் புதிதாக} தரமாக எழுதுபவர்களை இனம் கண்டு அறிவித்தவர் அவர்.
பிறகு தலித் இலக்கியம் என்ற பிரிவில் பாமா, சிவகாமி, ஆதவன் தீட்சன்யா போன்ற பலரது கதைகள் தமிழில் புதிய பாட்டையை ஏற்படுத்தின.
சுந்தரராமசாமியைத் தொடர்ந்து நாஞ்சில்நாடன், சாருநிவேதிதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், யூமா.வாசுகி, பாவண்ணன், பெருமாள்முருகன், எஸ்.சங்கரநாராயணன் போன்ற பலர் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் யாரையும் நீங்கள் படிக்கலாம். யாரைப் பற்றியும் அபிப்ராயம் ஏற்படுத்திக் கொள்ளலாம். முன்னரே சொன்னது போல அது உங்கள் சொந்த அபிப்ராயமாக இருக்க வேண்டும். ஒருவர் ஆதரிக்கிறார் என்பதற்காக யாரையும் நீங்கள் கண்மூடித்தனமாக ஆதரிக்கக் கூடாது.
எல்லோரையும் படியுங்கள். அது ஒரு பரவசமான அனுபவம். நீங்கள் கவனித்த அல்லது கவனிக்கத் தவறிய தருணங்களைப் படைப்பிலக்கியங்கள் உங்களுக்கு ஓர் உயரிய தரிசனத்தோடு தட்டில் வைத்துத் தருகிறது.
படைப்பிலக்கியங்கள் ஒரு காலத்தின் கண்ணாடியாக இருக்கின்றன. அ. மாதவய்யாவின் குசிகர் குட்டிக் கதைகளையோ, புதுமைப்பித்தனையோ படிக்கும்போது நாம் அந்தக் காலத்தைத் தரிசிக்கிறோம். அப்போதைய சமூகச் சூழல், சமூகப் பழக்க வழக்கம், பேச்சுமுறை எல்லாவற்றையும் பார்க்கிறோம். ஆனால் அவை சரித்திர சம்பவங்கள் இல்லை. புனைவுகள்.
சமஸ்கிருதம் கலந்த தமிழ் நடை அப்போதைய வழக்கமாக இருந்தது. முதல் சிறுகதையான குளத்தங்கரை அரசமரமாகட்டும் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரமாகட்டும் அதில் மணிப்பரவாளம் இருந்தது. தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம் தமிழின் போக்கை மாற்றின. பாரதிதாசன் தனித்தமிழில் கவிதை எழுதும் மரபை உருவாக்கினார்.
எதற்காக மனிதன் எழுதவும் படிக்கவும் ஆரம்பித்தான் என்று சிந்திக்கலாம்?
மனிதன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் நோக்கத்தோடுதான் குகைச் சுவற்றில் கிறுக்க ஆரம்பித்தான். விதம் விதமாக ஒலி எழுப்ப ஆரம்பித்தான். அவனுடைய கிறுக்கல்தான் இப்போது படைப்பிலக்கியமாகவும் ஓவியமாகவும் மாறியிருக்கிறது. விதம்விதமான ஒலிகளின் உருமாற்றம்தான் இன்றைக்கு இசையாகியிருக்கிறது. அனைத்துக்கும் மூல நாயகன் குகைச் சுவற்றில் முதன் முதலில் கிறுக்கிய அந்த மேதைதான்.
நெருப்பை உருவாக்கியவன் விஞ்ஞானியாகவும் குகையில் கிறுக்கியவன் கலைஞனாகவும் வளர்ந்தான்.

தான் அறிந்ததை, உணர்ந்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மனிதன் நினைத்தான். கூவி கத்தி அழைத்து தகவல்களைச் சொன்னான். புகையை உருவாக்கித் தகவல்களைச் சொன்னான். அது நிரந்தரமாகவும் இன்னும் நீண்ட தூரத்துக்குச் செல்லவும் முடியாததை உணர்ந்து ஓலை அனுப்ப ஆரம்பித்தான். கடிதம் முதல் படைப்பிலக்கியம். கடித இலக்கியம் என்று கி.ராஜநாராயணன், டி.கே.சி. போன்றவர்களின் எழுத்துகளைத் தொகுத்திருக்கிறார்கள். அறிஞர் அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்களையும் கலைஞர் உடன் பிறப்புக்கு எழுதிய கடிதங்களையும் இங்கே கவனிக்கலாம். கடிதங்கள் ஆச்சர்யங்களை, சோகங்களை, சந்தோஷங்களைச் சுமந்துவருபவை. என்னுடைய இளம் பிராயத்தில் வீட்டுக்குக் கடிதம் வந்தால் அதை யார் முதலில் ஓடிச் சென்று வாங்குவது என்பதில் தொடங்கி அதை யார் முதலில் படிப்பது என்பதவரை ஏகப் போட்டியிருக்கும். கடிதங்கள் சுவாரஸ்யமான தகவல்களைத் தாங்கி வருவதாக மனதில் பதிந்திருந்தது. இப்போது அது எஸ்.எம்.எஸ். ஆக சுருங்கிப் போய்விட்டது. இருந்தாலும் கடிதங்கள்தான் சிறுகதைகளின் ஆரம்பம். அதில்தான் மிகச் சில சம்பவங்களையும் சொன்னார்கள். ஒரு நபருக்கு இன்னொரு நபர் தெரிவிக்கும் செய்தி கடிதம். காலப்போக்கில் ஒரு செய்தியைப் பலருக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் எற்பட்டது. அவையே இலக்கியமாகின. ஹோமர் இலியட் எழுதினார். வியாசர் பாரதம் எழுதினார். மு.மேத்தா கண்ணீர் பூக்கள் எழுதினார். நாஞ்சில் நாடன் எட்டுத் திக்கும் மதயானை எழுதினார். ஒவியங்கள் டாவின்ஸியாகவும் டாலியாகவும் வான்காவாகவும் பரிணமித்தன.

சிறுகதைக்கான இலக்கணங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. ஆரம்பத்தில் 25 பக்கங்களுக்கு இருக்க வேண்டும் என்றார்கள். பத்து பக்கமாகவும் ஐந்து பக்கமாகவும் சிறுகதை சுருங்கிவிட்டது. கதாபாத்திரங்களும் சம்பவமும் படிப்பவர் மனதில் இடம்பிடிக்க தோராயமாக சுமார் 5 பக்கத்திலிருந்து பத்து பக்க விவரணை வரை தேவைப்படுகிறது. ஒரு பக்கக் கதை, இரண்டு பக்கக் கதை என்பவை திடுக்கிட வைக்கும் ஒரு சம்பவத்தை மட்டுமே முன் வைக்கின்றன. அதற்கு நம்மை பழகிக் கொள்வது பிற தரமான கதைகளைப் படிப்பதற்குத் தடையாக மாறிவிடும் அபாயம் உண்டு.
இறுதியாக... படித்தால் மூளை குழம்பிவிடும் என்ற கருத்து தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதுமே உண்டு. இறைநூல்களுக்கு விரோதமாக இருப்பதாகக் கருதி பல நூலகங்கள் எரிக்கப்பட்ட சம்பவங்கள் உண்டு. எண்பதுகளில் யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சம் புத்தகங்கள் எரிக்கப்பட்ட சம்பவம் நினைவிருக்கலாம். புத்தகங்களுக்கும் மத அமைப்புகளுக்கும் பல வேளைகளில் ஏழாம் பொருத்தம்தான்.
ஆனால் மக்களுக்கு ஒரு பைபிளோ, ஒரு குரானோ, வேதங்களோ மட்டும் போதுமானதாக இல்லை. ஒரு நம்பிக்கை சார்ந்து அவற்றைப் பாதுகாப்பதோடு சமூக வளர்ச்சியைப் பின்தொடர, தொடர்ந்து பல அறிவுச் செல்வங்களைத் தேட வேண்டியிருக்கிறது. திரைப்படம், தொலைக்காட்சியைவிட அறிவைத் தேடுவதற்கு புத்தகங்கள்தான் இன்றும் முன்னணியில் இருக்கின்றன.
ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான மொழிகள் இப்போது உலகில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்லுகிறது. அவற்றில் பல மொழிகளுக்கு எழுத்துவடிவம் கிடையாது. பல மொழிகளைப் பேசுவதற்கு ஆட்கள் கிடையாது. அதாவது அந்த மொழி பேசுகிறவர்கள் சிதறி வாழ்வதனாலோ, ஆட்சிமொழியாக வேறொரு மொழி அமைந்திருப்பதனாலோ வேறு மொழியைத் தொடர்ந்து பேச வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஏசு பேசிய மொழியோ, புத்தர் பேசிய மொழியோ, சாக்ரடீஸ் பேசிய மொழியோ இன்று உலகில் இல்லை. ஆனால் வள்ளுவன் பேசிய மொழி இப்போதும் இருக்கிறது. அதுதான் பெருமை. அதனால் ஒரு நூலை தமிழில் எழுத வேண்டியதும் தமிழில் படித்திட வேண்டியதும் முக்கியம் என்பதை உணர வேண்டும். தமிழும் வேறு மொழியும் தெரிந்தவர்கள் தமிழிலிருந்து வேறு மொழிக்கும் வேறு மொழிகளிலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்க்கிற கடமையைச் செய்ய வேண்டும்.



மேலும் படங்கள்
தமிழ் ஸ்டுடியோ டாட் காமில்


வியாழன், ஜனவரி 13, 2011

தூவும் மழை



அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வெளியிட்டுள்ள இருவாச்சி திரட்டு நூலில் என் கட்டுரை

இது என் ஏரியா.. அத்துமீறி உள்ளே நுழையாதே என்பதற்கு விலங்குகள் சில அடையாளங்களைப் பதிக்கின்றன.
சிறுத்தைகள் நகங்களால் மரங்களில் கீறிவைக்கும். புலிகள் தம் பிராந்தியத்தை சிறுநீர் தெளித்து அடையாளப்படுத்தும். நாய்களுக்கும் இந்தச் சிறுநீர் பயன்பாடு உண்டு. பிரத்யேக வாசனைகளாலும் தங்கள் இருப்பிடத்தை வகுத்துக் கொள்ளும் விலங்கினங்கள் உண்டு. மனிதர்களுக்கு இப்படி எல்லைக் கோடு வகுத்துக் கொள்ளும் உரிமை என்றோ மறுக்கப்பட்டுவிட்டது. இனக்குழுக்கள், அரசுகள் தோன்ற ஆரம்பித்த நாளிலேயே இது நிகழ்ந்துவிட்டிருக்க வேண்டும். இருப்பினும், பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் எல்லை வகுக்கும் தன் மிருக குணத்தை மனிதனால் மறக்க முடியவில்லை. துப்பும் பழக்கத்தை அவனால் இன்றும் மீற இயலவில்லை.
துப்புவதற்கான காரணங்கள்தான் மாறிப்போய்விட்டன. பெரும்பான்மையான மனிதர்கள் துப்புவதை மிக இயல்பாகச் செய்கிறார்கள். வெகுநாள் கழித்து நண்பனைச் சந்தித்தால் பேசுவதற்கு ஆயத்தமாவதற்கு துப்புகிறார்கள். முகவரி தேடி அலுத்துப் போனால் துப்புகிறார்கள். முகவரி கிடைத்துவிட்டாலும் சந்தோஷத்தில் துப்புகிறார்கள். பஸ்ûஸவிட்டு இறங்கியதும் துப்புகிறார்கள். பஸ்ஸிலும் போகும்போது ஜன்னல் ஓர இருக்கை கிடைத்துவிட்டால் துப்பிக் கொண்டே செல்வதற்கு வசதியாக இருக்கிறது. பஸ்ஸில் ஏறுவதற்கு முன்பு படிக்கட்டுக்கு இரண்டடி முன்பு, ஓர் அவசரப் பணியாகத் துப்பிவிட்டு ஏறிக் கொள்வதைப் பார்க்கிறேன். சிலர் கோபம் வந்தால் துப்புகிறார்கள். துப்புவது சந்தோஷம், வெட்கம், துக்கம், ஏமாற்றம், மோனநிலை, ஏகாந்த நிலை என்று அனைத்துப் மெய்ப்பாடுகளுக்கும் ஏற்புடையதாக இருக்கிறது.
என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர் என்னைப் பார்த்ததும் ஒவ்வொரு நாளும் பரவசம் பொங்கும் முகத்தோடு எதிர் கொள்வார். அதே பரவசத்தோடு சட்டென இடப்பக்கமோ, வலப்பக்கமோ திரும்பி பிளிச் என்று துப்புவார். என்னிடம் பேசுவதற்கு முன்பு வாயைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்கு அவர் செய்து கொள்ளும் உபாயமாக அது இருக்கலாம். ஒருவகையில் அது எனக்குத் தரும் மரியாதை என்று கருதுகிறார் போலும். அவமரியாதையே மரியாதை செயலாய் மாறிவிடும் விந்தைத் தருணம் அது. அவருடைய முகக் குறிப்பை வைத்து நான் இதை ஆழமாக உணருகிறேன்.
சில மனிதர்கள் துப்புவதை தங்கள் சுய உரிமையாக கருதுகிறார்கள். இந்த உரிமைப் பிரச்னையைப் புரிந்து கொள்ள இங்கே துப்பவும் என்று போர்டு எழுதி தொட்டி வைத்திருக்கும் இடத்தைப் பார்த்தால் தெரியும். தொட்டிக்குள் துப்புவதைவிட அதன் பக்கத்தில் இருக்கும் சுவரிலோ, தரையிலோ துப்புவதுதான் அதிகமாக இருக்கும்.
வெறும் எச்சிலை மட்டும் துப்பவது சிரமமான வேலை. வெற்றிலை போட்டு துப்புவதோ, புகையிலை போட்டு துப்புவதோ துப்புவதை வேகப்படுத்துவதற்கு உகந்த வழியாக இருக்கிறது. வாய் நிறைய சுமார் அரை டம்ளர் கொள்ளளவுள்ள புகையிலைச் சாறை வைத்துக் கொண்டு.. அதே நிலையில் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி, அல்லது கேள்வி கேட்டுவிட்டு மொத்தமாகத் துப்புபவர்கள் உண்டு.
பான்பராக் விற்பனைக்கு வந்தபோது இந்தத் துப்பல் கலாசாரம் வண்ணமயமாகியது, வாசனை மயமாகியது. வீட்டைவிட்டு வெளியே வந்ததும் ஒரு சரம் பான்பராக்கை வாங்கி பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டால் அந்த நாளில் தன் கண்ணில் படுகிற மரம், போஸ்ட் கம்பம், குப்பைத் தொட்டி, வாஸ் பேஸின், சிறுநீர் கழிக்கும் பீங்கான் எல்லாவற்றிலும் "எச்சில் இலக்கம்' பொறிக்கத் தொடங்கிவிடுகிறான் மனிதன். எச்சில் இலக்கியம் என்று பொருள் கொண்டாலும் பிழையில்லை.
மனிதன் மனிதன் என்று வலியுறுத்திச் சொல்லுவதற்குக் காரணம் இருக்கிறது. தம் உமிழ் நீரைப் பயன்படுத்தி இத்தனை பெரிய சாம்ராஜ்ஜியத்தை அமைக்கும் திறன் மனிதனுக்கு மட்டுமே உண்டு.
பொது இடங்களில் கைதட்டி அழைப்பது, எச்சில் துப்புவது குற்றம் என்று காவல்துறை சொல்கிறது. பொது இடங்களில் புகைப்பிடிப்பது குற்றம் என்றும் ஒரு சட்டம் காற்றிலே பறக்கவிட்டது போல அவையும் இருக்கின்றன. இவையெல்லாம் மனிதர்களின் ஆதி உரிமைகள் என்பது அரசுக்கும் போலீஸôருக்கும் புரியாதா என்ன?
அவர்களின் பெருந்தன்மையை அவர்கள் போட்டிருக்கும் சட்ட நுணுக்கங்கள் மூலமாகவே நாம் அறிந்து கொள்ள முடியும்.
எல்லா பொது இடங்களிலும் சிகரெட்டை எல்லா பெட்டிக் கடைகளிலும் விற்கலாம். ஆனால் அதை பொது இடத்தில் பயன்படுத்தக் கூடாது. பான்பராக்கை விற்பதற்குத் தடை, ஆனால் அதை மென்று கொண்டிருக்கும் மனிதனின் வாய்க்கு எந்தவிதத் தடையும் இல்லை. எங்கும் பான்பராக் விற்பதில்லையே நீ எப்படி பான்பராக் மென்று கொண்டிருக்கிறாய் என்று எந்த போலீஸ்காரரும் கேட்பதில்லை. இந்தச் சட்டங்கள் வினோதமாக இருக்கலாம். ஆழ்ந்து யோசித்தால் "இந்த' மனித உரிமை குறித்து அரசு கொண்டிருக்கும் அக்கறை புரியும். மறைமுகமாக ஆதரிப்பது புரியும். அதனால்தான் போலீஸ்காரர்கள் தங்கள் பணிகளையும் "துப்பு'த் துலக்குவதாகவே சொல்லுகிறார்கள்.
துப்புவதால் நோய் பரவுவதாகச் சொல்லுகிறார்கள். அதற்கும் ஆதாரபூர்வமாக கதை வைத்திருப்பார்கள். ஆண்டுக்கு 10 லட்சம் பேர் எச்சிலால் பரவும் நோயால் செத்துப் போவதாக. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத அத்தகைய மக்களை இனங்கண்டு அழிப்பது அவசியம் என்று உணராதவர்கள் பேச்சு அது. துப்புபவரை நோய் பரப்புபவர் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஏனென்றால் துப்புபவரே துப்புறவாளர்கள். துப்புறவாளன் என்பதின் வேர் சொல் எது? துப்புதானே?

துப்புதல் யார்க்கும் இயல்பாம். சில ஆண்டுகளுக்கு வெளியாகி சக்கைபோடுபோட்ட டைட்டானிக் படம் நினைவிருக்கலாம். அதில் கதாநாயகன் ஜாக் கப்பலின் மேல் தளத்தில் இருந்து கடல் நீரை நோக்கித் துப்புவான். கப்பலில் இருந்து எவ்வளவு தூரத்துக்குத் துப்ப முடியும் என்பது போட்டி. அதை நாயகி ரோஸýம் மிகுந்த ஈடுபாட்டுடனும் மகிழ்ச்சியுடனும் செய்வாள். இயக்குநர் ஜேம்ஸ் காமரூனுக்கு இப்படிகாட்சி வைக்க வேண்டும் என்று எப்படி தோன்றியிருக்க முடியும்? தன் முனைப்பான இயல்பூக்கம் காரணமாகத்தான் இந்தக் காட்சி படத்தில் புகுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
சில துப்பார்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் துப்புபவரை கேவலமாகவோ, எரிச்சலாகவோ பார்க்கிறார்கள். அதற்கு பண்படாத மனம்தான் காரணம். அவர்களைப் பண்படுத்த இந்தக் கட்டுரையில் ஆயப்பட்டிருக்கும் சில துப்புகள் பயன்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

எஞ்சியிருக்கும் எச்சில் குடிகளே... துப்புபவர்களே.. நீங்கள் எல்லாம் சேர்ந்து இந்தத் துப்பார்க்கு ஒரு தண்டனையை வழங்குங்கள். நீங்களும் துப்பாமல் இருந்து அந்த மரபை அழித்துவிடுங்கள். அப்போதாவது சிட்டுக்குருவிகள் அழிந்துவிட்டன, சிங்கங்கள் அழிந்துவிட்டன என்று புலம்பும் துப்பார்கள், துப்புபவர் விஷயத்தில் தப்பு செய்துவிட்டதை உணரட்டும்.

ஞாயிறு, ஜனவரி 09, 2011

இரவு வேஷம்!


எழுத்தாளர் மதுமிதா இரவு குறித்து தமிழ் படைப்பாளிகள் முப்பத்தி ஏழு பேரிடம் சுவையன் அனுபவங்களைத் தொகுத்திருக்கிறார். அதில் இடம்பெற்றுள்ள எனது கட்டுரை இது.

ரவு எனக்கு மிகவும் சொந்தமானதாக இருக்கும் பெரும்பாலும். அதில் நானே ராஜா. தூக்கத்தை எந்த அளவுக்கு மிச்சம் பிடிக்கிறேனோ அதற்கான விகிதத்தில் யோசிக்கவும் எழுதவும் படிக்கவும் தீர்மானிக்கவும் யாருக்கும் கட்டுப்படாமலும் சுதந்திரமாகவும் இருக்கலாம். பகல் என் கையில் இல்லை. பல நேரத்தில் அது மற்றவர் ஏவலுக்கு நான் அடிபணியும் தருணங்களாக இருக்கும்.
இரவு பெரும்பான்மையினருக்குப் பொதுவானதாக இருக்கிறது. ஏனென்றால் பெரும்பான்மையினர் இரவில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இரவு ஒரு சமத்துவன்.
இரவில் தூங்குகிற எல்லோரும் பகலில் உழைக்கிறார்கள் என்று கணக்கிட முடிவதில்லை. இரவில் தூங்குகிற சிலர் பகலிலும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் உழைக்காமல் சும்மா இருக்கிறார்கள். சிலர் உழைப்பைச் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் கல்லுடைக்கிறார்கள். சிலர் கம்ப்யூட்டருக்கான ஆணை எழுதுகிறார்கள். இரவு ஏற்படுத்தித் தந்திருந்த உறக்க ஒற்றுமை பகலில் இல்லை. பகல் பகட்டானது. பகல் மனிதர்களுக்கு "பகல் வேஷத்தை' தந்துவிடுகிறது. இருட்டுக்கு வேஷமில்லை. வண்ணங்கள் இல்லை. சாம்பல் நிறத்தின் பல்வேறு ஷேடுகள்தான் இருட்டில் தெரிகிறது. மனிதர்களின் பல்வேறு குணாதிசியங்கள் போல இந்த இருட்டின் சாயங்கள் இருக்கின்றன.
பூமிப் பந்தின் ஓர் அரைக்கோளம் எப்போதும் இரவாக இருக்கிறது. இருள் என்பது குறைந்த வெளிச்சம் என்பான் பாரதி. ஒளி என்பது குறைந்த இருள் என்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை. நிழல்கள் என்பவை என்ன? பகல் நேர இரவுத் துண்டுகள் தானே?
இரவு ஓயாமல் பகலைத் துரத்துகிறது. என்னதான் சூரியன் தன் ஒளிக்கரணத்தால் பூமியை கிச்சு கிச்சு மூட்டினாலும் வெளிச்சம் இருக்கும் இடங்களில் எல்லாம் நிழல் நிச்சயப்பட்டுவிடுகிறது. சூரியனுக்கு ஆயுள்காலம் உண்டு. இருளுக்கு இல்லை. இருள் நிரந்தரம். பகல் நிச்சயமற்றது. பிரபஞ்சமே இரவுதான். பிரபஞ்சத்தில் புள்ளிகளாக இருக்கின்றன வெளிச்சங்கள். இரவின் முன்னால் வெளிச்சம் பலவீனமானது. இரவு இயற்கை. ஒளி செயற்கை. ஒளியால் விளைந்த உயிர்கள், வனங்கள், ஆறுகள், அருவிகள் மட்டும் எப்படி இயற்கையாகிவிடும்? இயற்கையாவும் செயற்கையின் சேட்டைகள்..
இரவில் குறைகள் தெரிவதில்லை. இரவில் கறைகள் தெரிவதில்லை. இரவு களங்கமற்றது. ஒரு கவிஞனை இரவு எழுத வைக்கிறது. திருடனை திருட வைக்கிறது. வேசிகளுக்கு வேலை கிடைக்கிறது. அரசியல்வாதிகள் சதியாலோசனை மண்டபத்தில் சங்கமமாகிறார்கள். மாலை மங்கியதும் கலைகள் கண் விழிக்கின்றன. இரவு படைப்பாளிகளுக்கான பொழுது. பொழுது விடிந்ததும் யாரும் கலைநிகழ்ச்சி நடத்துவதில்லை எந்த தேசத்திலும்.
இரவை மிகைப்படுத்திப் புகழ்வதாக நினைக்க வேண்டாம். இரவு மிகையின் வடிவமல்ல. குறைவின் வடிவம். எல்லா வண்ணங்களும் இழந்த நிலைதான் இருள். காலி கோப்பை. வெற்றிடம். அதுதான் அதன் பலம்.

ரவைப் பற்றி எழுதவதென்றால் சந்தோஷமாக இருக்கிறது. தஸ்தயேவஸ்கியின் வெண்ணிற இரவுகள், அண்ணாவின் ஓர் இரவு, என்னுடைய முதலிரவு, பம்பு செட்டு காவலுக்குப் போன இரவுகள். கோழிப் பண்ணியில் கோழிகளுக்கு பாதுகாப்பாக இருந்த இரவுகள், பஸ் இல்லாமல் பத்து மைல் தனிமையில் நடந்துபோன இரவுகள், பத்திரிகையில் இதழ் பொறுப்புகளை முடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிய இரவுகள், "லைட்டை நிறுத்திட்டுப் போடான்னா, ஃபேனை நிறுத்திட்டுப் போறீயே... என்னடா யோசனை உனக்கு எப்பப்பார்த்தாலும்... போடா போய் தூங்கு' என்று இரவில் அனுப்பி வைத்த அப்பா நிரந்தரமாய் உறங்கிப் போன இரவு. இரவைப் பற்றி யோசிக்க நிறைய இருக்கின்றது.



சென்னை அண்ணா சாலை தினமணி அலுவகத்தில் இருந்து ஒருநாள் இரவு வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். ஸ்கூட்டர் என் களைப்புக்கு ஏற்ற நிதானத்துடன் போய்க் கொண்டிருந்தது.அதன் சராசரி வேகம் அவ்வளவுதான். அண்ணா நகர் ரவுண்டானா அருகே சிறுவன் ஒருவன் பதறியபடி ஓடி வந்து கை நீட்டினான். நிறுத்தினேன்.
"அண்ணா திருமங்கலத்தில் இறங்கிக்கட்டுமா?'
அவ்வளவு சிறிய தம்பி எனக்கு எந்தவிதத்திலும் பொருத்தமாகவே இல்லை. பத்து வயதுக்குள்தான் இருக்கும். மெல்லிய மாநிற உடம்பு. அரை டவுசர், அரைக் கை பனியன். நான் சம்மதிப்பதற்குள் ஏறிக் கொண்டான்.
கடிகாரத்தின் சின்ன முள் 12 க்கு பக்கத்தில் இருந்தது. புது நாள் பிறந்துவிட்டதா அல்லது நாள் தன் கடைசி மணித்துளியை எண்ணிக் கொண்டிருக்கிறதா என்பது அவ்வளவு முக்கியமாகத் தெரியவில்லை. நான் பெரிய முள்ளின் இருப்பிடத்தைப் பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை.
""எங்க தம்பி இந்த நேரத்தில''
அவன் ஓர் உருக்கமான கதையைச் சொன்னான். ""அண்ணா, எங்கம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல. அம்மா செங்கல்பட்டு ஆஸ்பித்திரில உயிருக்கு போராடிக்கிட்டு இருக்காங்கண்ணா... எங்கப்பா இங்க வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்டாரு. அவங்கள பாத்து செலவுக்குக் காசு வாங்கிட்டுப் போகத்தான் வந்தேன். சித்தி என்னை அடிச்சி விரட்டிட்டாங்க. அம்மாவுக்கு மருந்து வாங்கணும். தங்கச்சி பாப்பா காலையில இருந்தே பால் குடிக்கல. ஆஸ்பித்திரி ஆயாகிட்ட பாத்துக்க சொல்லி குடுத்துட்டு வந்தேன். எட்டு மணிக்குள்ள வந்துடச் சொல்லுச்சி... இப்ப என்ன சார் மணி?''
இப்போது பெரிய முள்ளையும் பார்த்தேன். 12.35.
காலை எட்டு மணிக்குப் போய்ச் சேருவதுகூட அவனால் முடியாது. இனிமேல் செங்கல்பட்டுக்கு பஸ் இருக்காது.
""லாரிகாரர்களை கேட்டால் ஏற்றிச் செல்வார்கள். போய் இறங்கிக் கொள். இந்தா செலவுக்கு வைத்துக் கொள்'' என்று இருந்த இருபது ரூபாயைக் கொடுத்தேன்.
"திருமங்கலம் சந்திப்பில் லாரிக்காரர்கள் டீ குடிக்க நிறுத்துவார்கள். பையன் சாமர்த்தியமாகப் போய் சேர்ந்துவிடுவான். குழந்தை காணாமல் போகாமல் இருக்க வேண்டும். அவனுடைய தாய்க்கு யாராவது தக்க சமயத்தில் மருந்து வாங்கித் தந்து காப்பாற்றி இருக்க வேண்டும்....' நான் பிரார்த்தனை செய்வதற்கு எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாதது தடையாக இருக்கவில்லை.
ஒரு பிஞ்சுக் குழந்தைக்கு இத்தனை பொறுப்பா, எல்லாம் சீராகி நல்லபடியாக வாழ்க்கை ஆரம்பிக்குமா?
களைப்போடு சமூக சோகமும் சேர்ந்து கொண்டால் தூக்கம் வருவது கஷ்டம்தான். விடியும் தருவாயில்தான் தூக்கம் வந்தது.
பிறிதொரு நாள். அதே அண்ணா நகர் ரவுண்டானா அருகில் அந்தச் சிறுவனின் குரல். எனக்கு அருகில் நின்றிருந்த பக்கத்து பைக் ஆசாமியிடம் ""அண்ணா திருமங்கலத்தில் இறங்கிக்கட்டுமா?'' என்று கேட்டுக் கொண்டிருந்தான்.
எனக்கு தீவிரமாகிவிட்டது யோசனை. அந்தப் பையன் சொல்கிற கதை உண்மையாக இருக்க வேண்டுமா? அந்தப் பையன் பொய் சொல்லி சம்பாதிப்பது உண்மையாக இருக்க வேண்டுமா? பையன் சொல்வது உண்மையாக இருந்தால் அந்தச் சிறுவனுக்கு இப்படியொரு சோகம் இருப்பது நியாயமா? அவன் பொய் சொல்லியிருந்தால் சந்தோஷம்தானே?
-தலைவெடிக்கும் வேதாளத்தின் கேள்வி ஒன்றும் இல்லை இது.
ஆனால் உறுத்தியது. வீடுக்கு வந்து சேர்ந்தேன். அம்மா மீது காலைத் தூக்கிப் போட்டபடி தூங்கிக் கொண்டிருந்த என் பையனின் வயதுதான் இருக்கும் அந்தச் சிறுவனுக்கு. என் பையன் இந்த நள்ளிரவில் யாரையோ ஏய்த்துப் பிழைக்க வேண்டியிருந்தால்? அந்த நிலைமை நம் பையனுக்கு இல்லாமல் இருப்பதற்கு யாருக்கு நன்றி சொல்வது? அந்தச் சிறுவன் அந்த நிலைமையில் இருந்து மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? இதயம் விம்முவது எனக்கு நன்றாகத் தெரிந்தது.
இரவுகள் வழக்கத்துக்கு மாறான சம்பவங்களைக் கொண்டவை. விடிந்ததும் அந்த உலகம் உறங்கிவிடுகிறது. இரவு உலகம் இரவு 10 மணிக்கு மேல் தொடங்குகிறது. குடியும் கூத்தும் கேளிக்கையும் அதிக ஆடம்பரங்களும் அதில் இருக்கும்.

ஒளியே கடவுள். சூரியன் இல்லையென்றால் உயிர் இல்லை. பசுமை இல்லை. சூரியக் கிரணங்கள் காட்டும் வண்ண ஜாலங்களைப் பாருங்கள். இதையெல்லாம் பார்க்காமல் ஒருவன் உலகத்தில் கவிஞனாக உலா வரமுடியுமா என்றெல்லாம் கேட்கிறார் பாரதியார்.
அஞ்ஞான இருளைப் போக்கி மெய்ஞான ஒளியை அடைய வேண்டும் என்று கிட்டத்தட்ட எல்லா ஆன்மீகவாதிகளும் சொல்லிவிட்டார்கள்.
அருட்பெரும் ஜோதி தனிப் பெருங் கருணை என்கிறார் வள்ளலார். இரவில் தீபமில்லாத இடத்தில் இருக்கக் கூடாது. ஏனெனில் அஃது பிராண நஷ்டம் பண்ணும் என்றும் கூறியிருக்கிறார்.
இறைவன் ஜோதி வடிவானவன்.

அப்படியானால் இருள் பேய்வடிவானதா? இறைவன் ஏன் இருள் வடிவானவனாக இல்லை? இருள்வடிவானவனாக இருந்திருந்தால் இன்னும் பலம் பொருந்தியவனாக விஸ்வரூப பலம் பொருந்தி நாட்டில் நடக்கும் அக்கரமங்களை அகற்ற முடிந்திருக்குமோ?
சிறுவயதில் கடவுளைப் பார்க்க ஆசை எழுந்த காலத்திலேயே பேயையும் சற்று தூரத்தில் இருந்து பார்த்துவிட வேண்டும் என்று ஆசைபட்டதுண்டு. இளம்பிராய இரவுகள் பயம் நிறைந்தவை.

இளம் வயதில் எங்கள் வீடு ஓட்டேரியில் இருந்தது. அங்கே சென்னையின் மிகப் பெரிய சுடுகாடு உண்டு. அந்தச் சுடுகாட்டையொட்டி மேகலா என்றொரு திரையரங்கம் உண்டு. வரிசையாக எம்.ஜி.ஆர் படங்கள் அங்கே வெற்றி விழா கொண்டாடும். படத்தில் நடித்த எம்.ஜி.ஆர். -ஜெயலலிதா, அண்ணா, கலைஞர் என்று படத்தின் வெற்றிவிழாவுக்கு நிறைய பிரபலங்கள் வருவார்கள். எம்.ஜி.ஆர். அரசியலுக்கு முழுநேரமாகப் போய்விட்டபின்பு, அதற்கு சற்று தள்ளி அபிராமி, பால அபிராமி என்று இன்னொரு பகட்டான திரையரங்கம் உருவாகிவிட்டதால் மேகலாவுக்கு மெல்ல மெல்ல மவுசு குறைந்து வந்தது. பகட்டான திரை அரங்கமாக இருந்தாலும் அங்கு ஏழைகளுக்கும் ஒரு ருபாய் டிக்கெட் இருந்ததும் ஒரு காரணம்.
இந்த நேரத்திலே அபிராமி தியேட்டரில் பேய் உலவுவதாக ஒரு செய்தி பரபரப்பாக உலவியது. இரண்டாவது ஆட்டத்துக்கு அந்தத் தியேட்டருக்குப் போக வேண்டாம் என்றும் நாங்கள் குடியிருந்த வீட்டில் வேண்டுகோள் ஒன்று இருந்தது.
அபிராமி தியேட்டரில் யாரோ ஒருத்தன் படம் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் ஒண்ணுக்கு அடிக்க டாய்லெட் பக்கம் வந்தான். அப்போது மணி 12. டாய்லெட்டில் வேறுயாருமே இல்லை. திடீரென்று பக்கத்தில் ஒரு குரல் "நெருப்புப் பெட்டி இருக்கா?' என்று கேட்டிருக்கிறது. திரும்பினால் கரடி போல ரோமம் கொண்ட ஒரு கை மட்டும் கண்ணில் பட்டிருக்கிறது. பதறி அடித்து வெளியே ஓடி வந்தான் அவன். ரிக்ஷா பிடித்துவீட்டுக்குப் போய்விட அதில் ஏறினான். உடல் தடதடவென்று நடுங்கிக் கொண்டிருந்தது.
"என்னங்க இப்படி நடுங்குறீங்க?'' என்று ரிக்ஷாகாரன் கேட்டான்.
நடந்த விஷயத்தை விவரித்தான் நடுங்கிக் கொண்டிருந்தவன். "அந்தக் கை இப்படி இருந்ததா பாருங்க?' என்று ரிக்ஷாகாரன் தன் கையை பின் புறம் நீட்டியிருக்கிறான். அதே கரடி ரோமக் கை. அவ்வளவுதான் வண்டியில் இருந்தவன் அதே இடத்தில் ரத்த வாந்தி எடுத்து இறந்து போய்விட்டான். அவன் இறந்த இடம் சுடுகாட்டுக்கு நேர் எதிரே. -இதுதான் அந்தக் கதை. எந்தப் பேப்பரிலும் பதிவு செய்யப்படாத மக்களின் வாய் வார்த்தை கதை இது. இதை மேகலா தியேட்டர்காரன்தான் தன் வருமானம் போய்விட்டதே என்பதற்காக கதை கட்டி விட்டிருக்கிறான் என்று இன்னொரு பகுத்தறிவு கோஷ்டியும் உண்டு.
பேய்கள் இருந்ததாகச் சொல்லப்பட்ட அபிராமி தியேட்டர் இப்போது அபிராமி மால் ஆகி, பேய்கள், ஏழைகள் எல்லாம் கிட்டே நெருங்க முடியாத இடமாகிவிட்டது.

சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலின் விலை. நூற்றி ஐம்பது.
www.sandhyapublications.com
email: sandhyapublications@yahoo.com

phone: 044- 24896979

செவ்வாய், டிசம்பர் 21, 2010

சொர்க்கத்தின் பாதை





என் கதைகளை ஆர்வத்துடன் மலையாளத்தில் மொழிபெயர்த்தவர் சைலஜா ரவீந்திரன். இவர் விண்வெளி ஆய்வு மய்யமான இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மாதவன் நாயரின் தங்கை மகள். பழகுவதிலும் அன்பு செலுத்துவதிலும் அத்தனை இனிமை. தமிழ்ச் சங்கத்தினர் அறை ஏற்பாடு செய்வதில் சற்றே காலம் தாழ்த்தியதை அறிந்ததும் தனது வீட்டுக்கே வந்து தங்கும்படியும் அல்லது தானே ஹோட்டலில் அறை எடுத்துத்தருவதாகவும் பேச ஆரம்பித்துவிட்டார்.
புத்தகத் தயாரிப்பு அவருக்குப் பிடித்திருந்தது. எழுத்தாளர் மாநாடு என்று அறிவித்திருந்தும் 100 பேர்தான் அரங்கத்தில் இருந்தனர். நான் பேசும்போது, தில்லி தமிழ்ச் சங்கத்தினர் போல இவர்களும் குடும்ப விழாவாக செயல்படுத்தி குழந்தைகள், மனைவயரோடு விழா எடுத்தால் கலகலப்பாக இருக்கும் என்றேன்.
பேசிவிட்டு இறங்கி வந்ததும் நீல.பத்மநாபன், சங்கத்தின் வேறு செயல்பாடுகளை வாழ்த்திப் பேசியிருக்கலாமே என்று ஆதங்கப்பட்டார்.
சங்க நிர்வாகி வானமாமலை சங்க விழாவுக்கு 50 பேர் கூடினாலே அது மகத்தான விழாதான் எங்களுக்கு என்றார்.
கேரள தமிழ் எழுத்தாளர் சங்க மாநாடு என்று அரங்கின் முன்னால் பலகை போட்டுவிட்டு இப்படி திருப்தி அடைந்துவிடுகிறார்களே என்று இருந்தது.
திட்டமிட்டால் இன்னும் சிறப்பாக செயலாற்ற முடியும் என்று தோன்றியது.
தமிழிலிருந்து மலையாளத்துக்கும் மலையாளத்தில் இருந்து தமிழுக்கும் புத்தகங்களை மொழிமாற்றம் செய்து வெளியிடுவது பரஸ்பர இலக்கிய பரிமாற்றமாக இருக்கும் என்று மேடையில் சொன்னேன். ஆண்டுக்கு பத்துப் புத்தகங்களை அப்படி வெளியிட்டால் அது தமிழுக்கு ஆற்றும் மிகப் பெரிய சேவையாக இருக்கும். ஆரம்பத்தில் தமிழ் சங்கத்துக்கென இணையதளம் ஒன்று ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் வைத்தேன்.
நீல.பத்மநாபன், ஆ.மாதவன், ஜெயமோகன், சுகுமாரன் போன்ற எழுத்தாளர்களும் காலச்சுவடு போன்ற இலக்கிய இதழும் சங்கத்தின் அருகில் இருக்கும்போது இன்னும் சிறப்பாக செயல்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது.
சனிக்கிழமை இரவு கூட்டம் முடிந்து அறைக்குச் சென்று தங்கினோம். மறுநாள் காலை சென்னையை நோக்கி பயணம்.

திருவனந்தபுரத்திலிருந்து செங்கோட்டை வழியாக மதுரையை அடைந்து சென்னைக்கு வந்து சேர்ந்தோம். திருவனந்தபுரமத்திலிருந்து செங்கோட்டை வரும்போது சாலையின் ஓரத்திலேயே ஒரு சிறிய மலையாறு நமக்கு வழிகாட்டியபடி வருகிறது. சாலைமமட்டும் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருந்தால் அதற்கு சொர்க்கப்பாதை என்று பெயர் வைக்கலாம். காரைவிட்டு இறங்கி அங்கேயே தங்கிவிடலாம் என்று கணப்பித்து ஏற்படுகிறது.
மொழிவாரி மாநிலமாக பிரிக்காமல் இனவாரி மாநிலமாக பிரித்திருந்தால் சேரநாடும் இப்போது நம்மோடு இருந்திருக்கும். "கடவுளின் சொந்த தேசம்' தமிழ்நாட்டில் இருந்திருக்கும்.


படங்கள்
ஷைலஜாவுடன்
நீல.பத்மனபானுடன்

திங்கள், டிசம்பர் 20, 2010

எழுத்தாளர் ஜெயமோகனோடு...




நாகர்கோவிலில் விஜயதா ஹோட்டலில் அதிகாலை 3 மணிக்குத்தான் போய் சேர்ந்தோம். காலை எழுந்ததும் எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசினேன். சந்தித்துப் பேச விரும்புகிறேன், நேரமமிருக்குமா என்றேன். மாலை ஏழு மணிக்கு கோவை கிளம்புகிறேன். அதுவரை வீட்டில்தான் இருப்பேன் என்றார். பார்வதி புரத்தில் அமைதியான பகுதியில் இருந்தது அவருடைய வீடு. அவருடைய துணைவியாரிடம் அறிமுகப்படுத்தும்போது வெட்டுப்புலி எழுதியவர் இவர்தான் என்றார்.
திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தில் என்னுடைய சிறுகதை தொகுதி ஒன்று மொழிபெயர்க்கப்பட்டு சனிக்கிழமை மாலை வெளியிடப்பட இருப்பதைச் சொல்லிவிட்டு, காலபிம்பம் என்ற அந்தத் தொகுதியை அவரிடம் கொடுத்தேன்.
அவர் திருவனந்தபுரத்துக்கும் தமிழுக்குமான தற்கால உறவுநிலைபற்றி சொல்ல ஆரம்பித்தார். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, வையாபுரி பிள்ளை, ஷண்முக சுப்பையா, காசியபன், நகுலன், ஆ.மாதவன், நீலபத்மநாபன் என பலரையும் பற்றி பேச்சு ஓடியது. கிட்டத்தட்ட நானும் அவரும் முதன் முதலாக சந்தித்து மாதிரிதான். இதற்கு முன்னால் புத்தக சந்தையிலும் கவிஞர் ராஜமார்த்தாண்டன் மகன் திருமணத்திலும் ஓரிரு வார்த்தைகள் பேசியதோடு சரி. ஒருமனிதரைச் சந்தித்ததும் பேச நேரம் ஒதுக்கி, இவ்வளவு தகவல்களைச் சொல்லுவது ஆச்சர்யமாக இருந்தது. சிலர் ஏதாவது கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்லுகிற மாதிரிதான் பேசுவார்கள். ஜெயமோகனிடம் அப்படி தயங்கித் தயங்கிப் பேசிக் கொண்டிருக்க நேரவில்லை.
திருவனந்தபுரத்தில் நகுலன், ஆ.மாதவன், நீல.பத்மநாபன் மூவருக்குமான நட்பை அவர் விவரித்தது நன்றாக இருந்தது. நகுலன் ஒரு நேரத்தில் மற்ற இருவரில் ஒருவருடன்தான் நட்பு பாராட்டுவார் என்றார். அதாவது நீல.பத்மநாபனிடம் பழகி வரும்போது ஆ.மாதவனிடம் பழக மாட்டார்.
சுவாரஸ்மான சுபாவங்கள்.
சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவலுக்கு உருவான ஏறுமாறான விமர்சனங்கள் பற்றி கேட்டேன். அவர் விஷ்ணுபுரம் நாவல் வெளியான நேரத்தில் இருந்து பல்வேறு சம்பவங்களைச் சொன்னார். விமர்சனங்கள் புத்தகத்தின் ஆதார சுவையை அலசுவதை விட்டுவிட்டு எழுதிய நபர், அவரோடு சம்பந்தபட்ட வேறு சம்பவங்களையும் சேர்த்துக் கொண்டு காழ்ப்புணர்வுடன் வெளியாவதாக வருத்தப்பட்டார்.
மணிக்கணக்காகப் பேசிக் கொண்டே இருக்கலாம்போல இருந்தது. என்னுடன் என்னுடைய மைத்துனர் விவேகானந்தன் வந்திருந்தார். அறையில் மற்ற நண்பர்கள் காத்திருந்தனர். அவர்களுடைய அடுத்தகட்ட திட்டங்களை உத்தேசிக்க வேண்டியிருந்தது. மீன் முட்டி, பொன்முடி போன்ற இயற்கைச் சூழலுக்குச் செல்ல வேண்டும் என்று அவர்கள் வரும் வழியில் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
விடைபெறுவதற்கு முன்பு அவர் சொன்னார்.
எழுத்தாளர்களுக்கு திடீரென்று சில கதைகள் பெரிய அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். அதை அவர்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். வாசகன் எழுத்தாளனைப் பற்றி முன்முடிவை எடுத்துவிட்டால் அதை மாற்றுவது சிரமம் என்றார். வெட்டுப்புலி எனக்கு அத்தகைய ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சொன்னார். தக்க வைத்துக் கொள்ளவேண்டும்.

நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது

அவசரத்துக்கு அவருடைய தளத்தில் இருந்து ...


தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்படும் பெரும்பாலான சமயங்களில் அது ஏமாற்றத்தையும் எரிச்சலையும் தேர்வுகளின் பின்னேயுள்ள அரசியலை நினைத்து கசப்பையுமே தரும். இங்குள்ள பட்டியலை ஒரு முறை பார்த்து நீங்களும் அதை உணரலாம்.

ஆனால் இந்த முறை அது மகிழ்விற்கான தருணம். அசலானதொரு இலக்கியப் படைப்பாளியான நாஞ்சில் நாடனுக்கு இந்த வருட சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துகள்.


நாஞ்சில் நாடன் இணையத் தளம்

ஞாயிறு, டிசம்பர் 19, 2010

மலையாளத்தில் என் சிறுகதை தொகுதி




கேரளத் தமிழ் எழுத்தாளர் சங்க மாநாடு கடந்த 16, 17, 18 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. தில்லி பல்கலைக் கழகத்தின் தமிழ் பேராசிரியர் நாச்சிமுத்து, கேரள பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலமோகன் தம்பி, திருவனந்தபுரம் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் முனைவர் நயினார், செயலர் வானமாமலை, கேரள தமிழ்ப் பேரவையின் இணைச் செயலர் வீராணம் முருகன், எழுத்தாளர் நீல.பத்மமநாபன், ச.தமிழ்ச் செல்வன், கவிஞர் அ.வெண்ணிலா... பேசியவர்களில் சிலர்.
என்னுடைய எட்டாயிரம் தலைமுறை, மீன் மலர் சிறுகதை தொகுதிகளில் இருந்து பதினோறு சிறுகதைகள் தேர்வு செய்து சைலஜா ரவீந்திரன் மலையாளத்தில் மொழிபெயர்த்திருந்தார். அவை காலபிம்பம் என்ற தலைப்பில் சிறுகதை தொகுதியாக வெளியிடப்பட்டது.
மொழிபெயர்க்கப்பட்ட விதம் தமிழுக்கு நெருக்கமாக இருப்பதாக கவிஞர் யூமாவாசுகி அபிப்ராயம் சொன்னார். என்னுடன் அவரும் திருவனந்தபுரம் வந்திருந்தார். என் மைத்துனர் விவேகானந்தன், நண்பர்கள் கோவர்தன், விஜய்தீபன் ஆகியோரும் சென்னையிலிருந்து என்னுடன் வந்திருந்து எனக்குக் கிடைத்த பெருமையால் மகிழ்ந்தனர்.


விழாவுக்குச் செல்வதற்கு முன் நாகர்கோவிலில் எழுத்தாளர் ஜெயமோகனை சந்தித்தேன். அவருடன் பேசிக் கொண்டிருந்தது இனிமையான அனுபவம். அதைப் பற்றி நாளை...

திங்கள், டிசம்பர் 13, 2010

அது இது



ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பார்த்தாலும் பளிச்சென்று தெரிகிற மாதிரி வெங்கடேஷ்வரா என்ஜினீயரிங் காலேஜ் என்று ஆங்கிலத்தில் பித்தளை போர்டு வைத்திருந்தார்கள். கல்லூரியின் முகப்பு பிரம்மாண்டமாக இருந்தது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளை இங்கே படிப்பதை விரும்பத் தூண்டுவதாக இருந்தது அது. சில பெற்றோர்களும்கூட தாங்கள் மாணவர்களாக மாறிவிடுவதற்கு ஆசைப்படுமாறு இருந்தது. கந்தசாமிக்கு நிச்சயமாக இல்லை. பையனைப் படிக்க வைக்கவே பணம் போதுமானதாக இல்லை. அந்த ஆசையை யோசிக்கக் கூட வசதியில்லை.

"அப்ளிகேஷன் எவ்வளவு சார்?'' என்றார் கந்தசாமி. கவுன்டர் வழியாக பணம் வாங்குபவரின் வழுக்கைத் தலை மட்டும்தான் தெரிந்தது.

"போர்ட்ல எழுதியிருக்கு பாருங்க. ஆயிரம் ரூபா''

கையில் அவ்வளவு பணம் இல்லாமல் போய் அவமானம் ஏற்பட்டுவிடுமோ என ஒரு கணம் பயந்து போனார். கையில் என்னமோ ஆயிரத்து இருநூறு ரூபாய் இருக்கத்தான் செய்தது. அவசரமாக எடுத்துக் கொடுத்தார்.

"அப்ளிகேஷனுக்கா ஆயிரம் ரூபா?'' பதில் வேண்டிய கேள்வியாக ஆரம்பித்து தனக்குத்தானே முனகிக் கொண்டார். தவறாக எதையாவது வாங்கிவிடப் போகிறோம் என்ற தடுமாற்றம் கந்தசாமிக்கு.

"எலக்ட்ரானிக்ஸýக்குத்தானே?'' என்று உறுதிப்படுத்திக் கொண்டார்.

"எல்லா சப்ஜெக்டுக்கும் ஒரே அப்ளிகேஷன்தான்''

எங்கே மாற்றி வாங்கிச் சென்று வீணாகிவிடுமோ என்று கடைசி நிமிடத்தில் சுதாரித்துக் கேட்டுவிட்டதில் அவரை அவரே மெச்சிக் கொண்டார்.

அப்ளிகேஷன் இந்த விலையா? அந்தக் காலத்தில் என் மொத்த கல்லூரி படிப்புக்குமே இவ்வளவு ஆகவில்லையே என்று அவர் யாரிடமும் சொல்லுவதில்லை. அந்த மாதிரி பேச்சுக்களை இக்காலப் பிள்ளைகளோ, மனைவிகளோகூட ரசிப்பதில்லை. சொல்லப் போனால் எரிச்சல் ஏற்பட்டு சீறிவிழுகிறார்கள்.

"சார்.. அப்ளிகேஷன் வாங்கிறது பெரிசில்ல. இப்பவே சீட்டு புக் பண்ணி வைக்கணும். எலக்ட்ரானிக்ஸ் சீட்டு ரொம்ப கம்மி. ஏற்கெனவே 36 பேரு புக் பண்ணிட்டாங்க. உங்களுக்கு கவர்மன்ட் கோட்டாவுல கிடைக்கும்னு நம்பிக்கை இருந்தா விட்டுடுங்க.''

"புக் பண்றதுக்கு எவ்ளோங்க?''

"ஃபிப்டி''

இன்னொரு ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்தார்.

அந்த ஐம்பது ரூபாயை கவுன்டரில் இருந்தவர் கள்ள நோட்டுபோல இப்படியும் அப்படியும் பார்த்துவிட்டு, "அம்பதாயிரம் சார்..'' எனப் பட்டென சப்தம் எழுப்பி வெளிப்பக்கமாக வைத்தார்.

எரிச்சலடைந்துவிட்டார் கவுன்டரில் இருந்தவர். கந்தசாமிக்கு ஐம்பது ஆயிரமா என்று இன்னொரு முறை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவருக்கு அது மேலும் எரிச்சல் ஏற்படுத்திவிடும் என்று தோன்றியதால் சற்று தள்ளி வந்து தயங்கி நின்றார். "என்னைக்குள்ள புக் பண்ணனுங்க?'' என்றார். விருப்பமிருந்தால் பதில் சொல்லுங்கள் என்ற தொனியில்தான் கேட்டார்.

"36 பேர் பண்ணிட்டாங்கன்னு சொன்னனே?''

அவர் சொல்கிற ஒவ்வொரு தகவலும் மிக முக்கியமானவையாகவும் இரண்டாவது முறை சொல்ல முடியாத தங்க வார்த்தையாகவும் ஒரு கர்வம் இருந்தது.பையன் சேர்ந்தால் இந்தக் கல்லூரியில்தான் சேருவேன் என்று கூறியிருந்தான். மூன்றாவது ஆண்டு முடிப்பதற்குள்ளாகவே வேலை நிச்சயம் என்றான். அவனுடைய நண்பன் ஒருவனின் அண்ணன் இந்தக் கல்லூரியில் படித்து அமெரிக்காவில் வேலையில் சேர்ந்து அங்கு அவன் செலவு போக மீதி ஒரு லட்ச ரூபாயை மாதம் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறானாம்.

பேங்க்கில் கடைசி கடைசியாக ஒரு 50 ஆயிரம் ரூபாய் இருந்தது. ஆனால் இங்கிருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பேங்குக்குப் போய் வருவதற்குள் சீட் காலியாகிவிடுமே? அதுவும் இல்லாமல் இனிமேல் போய் வருவதென்றால் பேங்க் மூடிவிடுவானே? அட இந்த யோசனை இவ்வளவு நேரமாக வராமல் போய்விட்டதே... ஆத்திர அவசரத்துக்குப் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் கார்டு வாங்கி வைத்திருந்தார் கந்தசாமி. ஆனால் அதை பயன்படுத்துவதற்கான ஆத்திர அவசரம் எதுவும் அவருக்கு ஏற்படதில்லை.

"சார் இத வெச்சி கட்ட முடியுமா?'' காசாளர் கார்டை வாங்கிப் பார்த்துவிட்டு, ""அம்பதாயிரம் இருக்கா பாங்க்ல?'' என்றார்.

"பீஸ் கட்றதுக்குத்தான் ரெடி பண்ணி வெச்சிருந்தேன்.''

"சரி. உங்களுக்கு கவர்ன்மென்ட் கோட்டாவுல இங்க இடம் கிடைச்சுட்டா ஃபீஸ்ல அட்ஜஸ்ட் பண்ணிடுவோம். போதுமா?''

இங்கேயே இடம் கிடைத்துவிட்டால் எல்லாமே திருப்திகரமாக அமைந்துவிடும். சரக்கென்று ரசீதைக் கிழித்துக் கையில் கொடுத்தான்.

கல்லூரி பொட்டல்காட்டில் அமைந்திருந்தது. எப்பாடுபட்டாவது கல்லூரிக்குள் வந்து விழுந்துவிட்டால் அங்கே சகல வசதியும் அனுபவிக்கலாம். மினி தியேட்டர், ஹாஸ்பிடல், ஹோட்டல், நீச்சல்குளம், இன்டெர்நெட் எல்லாம் வைத்திருந்தார்கள். கல்லூரியில் சேருகிற வரை இப்படி இரண்டு பஸ் பிடித்து இரண்டு கிலோ மீட்டர் நடந்துதான் கல்லூரியை அடைய வேண்டியிருக்கும். அதன் பிறகு பிரமாதமான பஸ் உண்டு. வீட்டருகே வந்து கூட்டிச் செல்வார்கள். பஸ்ஸýக்கு தனி சார்ஜ். கொள்ளைதான். ஆனால் பணம் இருக்கிறவர்களுக்கு சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கிற வசந்தகால தூண்டில் விளையாட்டு.

"என்ஜினீயர் மாப்பிள்ளை. என்னமோ நம்ம சுந்தரும் அப்படியொரு என்ஜினீயர் மாப்பிள்ளை ஆகிவிட்டால் போதும். ஏன் என்ஜீனியர் ஆகிவிட்டாலே போதும்.'

ஒரு தகப்பனாக தனக்கான பொறுப்பை மிகச் சரியான நேரத்தில் மிக கவனமாக நிலைநாட்டிய பெருமை இருந்தது. பையனுக்கு கல்லூரியில் விண்ணப்பம்தான் வாங்குவதற்கு கிளம்பினார். ஆனால் கல்லூரியில் இடமே கிடைக்க எல்லா ஏற்பாடும் முடித்துவிட்டோம் என்ற திருப்தி. "பையன் வந்தா சீட் கிடைச்சுடுச்சுன்னு சொல்லு. இங்க அங்க அல்லாடிக்கிட்டு இருந்தான்'' என்று மீனாட்சியிடம் பெருமிதமாகவும் திருப்தியாகவும் கூறினார். "என்னமோ இவ்வளவு செலவு செய்றோம். நல்லா படிச்சா சரி'' இது மீனாட்சியின் எதிர்வினை.

மத்தியானம் மூன்று மணிக்கு மேல் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் அப்படியே கண்ணயர்ந்த நேரத்தில் சுந்தரின் குரல் கேட்டது.

"யாரு வெங்கடேஷ்வரா'ல அப்ளிகேஷன் வாங்கச் சொன்னது?''

ஏதோ பெரிய தவறு நடந்திருப்பது உறைத்து கண்ணைக் கசக்கிக் கொண்டு, ""வெங்கடேஷ்வரா காலேஜ்ல தாம்பா வாங்கினேன்'' என்றார் கந்தசாமி.

"அதான் ஏன் அங்க வாங்கினீங்கனுதான் கேக்றேன்.''

"ஏன் பையன் காலையில் ஒரு மாதிரியும் மாலையில் ஒரு மாதிரியும் பேசுகிறான்' என்று சந்தேகமாகிவிட்டது.

"நீதானே ராஜா அங்க வாங்கிட்டு வரச் சொன்னே?''

"நான் சொன்னது ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ். வெங்கடேஸ்வரா காலேஜைத் தாண்டி உள்ள போகணும். இது வேஸ்ட் காலேஜ். நான் போகமாட்டேன்''

"சீட் புக் பண்ணணும்னு அம்பதாயிரம் வேற கட்டிட்டம்பா''

அலட்சியமும் திகைப்பும் என்ன அவசரம் என்பதுமாக ஒரு பார்வைப் பார்த்தான் சுந்தர். ""அங்க சேர்றதுக்கு நாலு எருமை மாடு வாங்கி மேய்க்கலாம். போன வருஷம் முழுசும் ஸ்ட்ரைக். மேனேஜ்மண்ட்ல ஏகப்பட்ட ஊழல். இடம் ஆக்ரமிச்சு பில்டிங் கட்டினதுக்காக பின்னாடி நாலு பில்டிங்கை இடிச்சுத் தள்ளிட்டாங்க. லேப் வசதியெல்லாம் அதில போச்சு. என் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு செய்றதுக்கு என்னப்பா?''

"அங்க ஒரே பேர்ல ரெண்டு காலேஜ் இருக்கும்னு எவனுக்குத் தெரியும்பா?'' அப்பாவைப் பார்க்க சுந்தரத்துக்கே பாவமாக இருந்தது. "எல்லா காலேஜும் ஒண்ணுதான். அதே புக்குதான். அதே நோட்டுதான். படிக்கிற பையன் எங்க இருந்தாலும் படிச்சுடுவான்'' என்று அம்மா இரண்டு பேருக்கும் பொதுவாக ஒரு தீர்வு சொன்னாள்.

"காலேஜே இடிச்சுப் போட்டுட்டு ஸ்ட்ரைக்ல கிடக்குதுங்கிறான். என்னமோ புரியாம பேசறியே... '' காரணமில்லாமல் அம்மாவைச் சமையல் கட்டுக்குத் துரத்தினார் அப்பா.

"திருப்பிக் கேட்டா தந்துடுவானா?'' நம்பிக்கையே இல்லாமல் பையனிடம் கேட்டார் கந்தசாமி.

"யானை வாய்ல போன கரும்புதான்.'' சுந்தருக்கு தன் வேறு வாசல்களை அப்பா அடைத்துவிட்டாரே என்ற இயலாமையும் இனி கேம்ப்ஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து வெளிநாட்டுக்குப் போவதென்பது முடியாது என்றும் கவலை ஆக்கிரமித்துக் கொண்டது. சட்டையை மறுபடி மாட்டிக் கொண்டு நண்பர்களைப் பார்க்கப் புறப்பட்டான்.

கந்தசாமி கண்ணை மூடித் தியானித்து அருட்பெருஞ்சோதி தனிப் பெரும் கருணை என்று மனதுக்குள் பிரார்த்தித்தார். லூகாஸில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற அன்று நண்பர்கள் டாக்ஸியில் கொண்டு வந்து இறக்கிவிட்டுவிட்டுச் சென்ற போது இதே மாதிரி ஒரு வெறுமையும் ஆறுதல் தேவையும் கந்தசாமிக்கு ஏற்பட்டது.

பயமெனுமோர் கொடும்பாவிப் பயலேநீ யிதுகேள்

பற்றறவென் றனைவிடுத்துப் பனிக்கடல்வீழ்ந் தொளிப்பாய்

காலையிலேயே போய் காசாளர் கவுன்டரில் நின்றுவிட்டார் கந்தசாமி. பத்தே காலுக்கு கவுன்டரைத் திறந்த காசாளர், சந்துவழியாகப் பார்த்து நட்பு புன்னகைப் புரிந்தார்.

"பையன் வேற காலேஜில சேரணும்னு நினைக்கிறான். புக்கிங்கு கட்டின பணத்தைத் திருப்பித் தந்துட்டீங்கன்னா புண்ணியமா போய்டும்''

அவன் கம்ப்யூட்டர் கடையில் ஆட்டுக் கறி அரை கிலோ கேட்டதுமாதிரி ஒன்றும் புரியாமல் பார்த்தான். "அதெல்லாம் தரமாட்டாங்க. காலைல வந்து வம்பு பண்ணாதீங்க''

"அப்ளிகேஷனுக்குக் கொடுத்த ஆயிரம் ரூபாகூட வேண்டாங்க. எனக்கு வெளியூருக்கு மாத்தலாயிடுச்சுன்னு வெச்சுக்கங்க... நான் எப்படி இங்க சேர்க்கறது''

"தரமாட்டாங்க. உங்கக்கிட்ட கொடுத்த பில்லுலயே போட்டிருக்குப் பாருங்க. வாங்கியே தீரணும்னு நினைச்சா ஆபிஸ் ரூம்ல போய் கேட்டுப்பாருங்க'' அது தலைவலியைத் திருப்பிவிடும் பாணி.

காரணமில்லாமல் ஏ.டி.எம். கார்டை எடுத்துப் பார்த்தார். நேற்று ஒரு மிஷினில் வைத்து ஒரு இழுப்பு இழுத்து 50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டது ஞாபகம் வந்தது. அதே மாதிரி ஒரு இழுப்பு இழுத்து கொடுத்த பணத்தை நம்மிடமே இழுத்துக் கொள்ள முடியுமா என்று யோசித்தார். பேங்கில் அதற்கு வசதி இருக்குமா என்று நம்பிக்கையில்லாத எதிர்பார்ப்பு ஏற்பட்டு அடங்கியது.

அலுவலக அறையில் ஐந்து பெண்களும் மூன்று ஆண்களும் தீவிரமாக கம்ப்யூட்டரில் மூழ்கியிருந்தனர். கேட்டால் பதில் சொல்கிற மாதிரி இருந்த ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து விஷயத்தைச் சொன்னார் கந்தசாமி. இந்தமாதிரி விஷயத்தை முதன்முதலாக வாழ்க்கையில் எதிர் கொள்கிற தோரணையில் "நீங்க எங்க போய் முறையிட்டாலும் பணத்தைத் திருப்பித் தரமாட்டாங்க. மேனேஜ்மண்ட் ரூல் ஸôர்'' என்றாள்.

மற்ற ஏழு பேரும் கந்தசாமியை அதிசயமாகப் பார்த்தனர். அதில் ஒருவர், "சீட் புக்கிங் பொறுத்துதான் நாங்க எவ்ளோ வேகன்ஸி இருக்குனு முடிவு செய்றோம். இப்படி ஒவ்வொருத்தரும் புக் பண்ணிக்கிட்டும் கேன்சல் பண்ணிக்கிட்டும் இருந்தா காலேஜ் ரன் பண்ண முடியுமா? நியாயத்தைச் சொல்லுங்க.''

"என் நியாயத்தையும் பாருங்க.''

"என்ன நியாயம்? சொல்லுங்க''

"பையன் வேற காலேஜில சேரணும்னு சொல்றான்.''

"பசங்களுக்கு நாமதான் எடுத்துச் சொல்லணும்''

"இல்ல சார். அவன் வேற கோர்ஸ் சேரணும்னு நினைக்கிறான். அதான்''

"அதுக்கப்புறம் உங்க இஷ்டம். நேத்து வந்து சீட்டு கேட்பீங்க. இன்னைக்கு மனசு மாறுவீங்க. இது என்ன காலேஜா?.. கட்பீஸ் கடையா வேற கலர் மாத்திக்குடுங்கன்னு கேட்கறதுக்கு... அதுகூட சரிதான். வேற டிபார்ட்மெண்ட் மாத்திக்கணும்னாகூட சொல்லுங்க. மேலிடத்தில பேசி மாத்தித் தர்றதுக்கு ஏற்பாடு பண்றேன்.''

"ரூபாயைத் திருப்பி தர்றதுக்கு ஏற்பாடு செஞ்சிடுங்க சார்''

"வயசுல பெரியவரா இருக்கீங்க. ஒரு தடவை சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே?''

"ஓனர் எங்க இருப்பார்னு சொல்லுங்க? அவர் கிட்ட கேட்டுப் பார்க்கிறேன்''

பொறுமை இழந்தவன் மாதிரி ஒருவன் ஆவேசமாக எழுந்தான். ""ஓனர் தானே வேணும்? மெல்போர்ன் போங்க. அங்கதான் இன்னும் பத்துநாளுக்கு இருப்பாரு'' என்றான்.

"எங்க இருக்கு மெல்போர்ன்' என்று கேட்க நினைத்தவர், அது பக்கத்து ஊர் பெயர் மாதிரி தெரியாததால் "பத்து நாள் கழிச்சுத்தான் வருவாரா?'' என்றார் தன் அடக்க உணர்வை வெளிப்படுத்தும்விதமாக. தன்னைச் சண்டை போட வந்தவராக நினைக்க வேண்டாம் என்பதை தன் உடற்பணிவு மூலமாகவும் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். பணத்தோடு வீட்டுக்குப் போய் இந்தப் பிரச்சினையில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். மனரீதியாகவும் அது பெரிய சுதந்திரத்தைத் தரும் என்று நினைத்தார். அவர் கேட்ட கேள்விக்கு யாரும் பதில் சொல்லாதபோதும் ""சரிங்க. பத்து நாள் கழிச்சு வந்து பார்க்கிறேன்''.. யாரும் இதற்கும் செவி சாய்க்கவில்லை.

பதில் சொல்லுவான் போல தெரிந்தவன் வெளியே நின்றிருந்த செக்யூரிட்டி மட்டும்தான்.

"இந்த காலேஜ் ஓனர் யார்னு தெரியுமா உங்களுக்கு?''

செக்யூரிட்டி இந்தப் பக்கம் அந்தப் பக்கம் பார்த்துவிட்டு "மின்னாடி மினிஸ்டரா இருந்தாரே உமாபதி... அவரோட காலேஜுங்க இது.''

"அவருடைய வீடு எங்க இருக்குனு சொல்லமுடியுமா?'' என்ற போது அதெல்லாம் தெரியாதுப்பா போ.. போ என்றவனிடம் கந்தசாமி வலிந்து தன்னுடைய பிரச்சினையைச் சொல்லி முடித்தார். ஐம்பதாயிரம் ரூபாய் என்பதன் அர்த்தமும் வலியும் தெரிந்தவனாயிருந்தான் அவன். முகவரியைச் சொன்னான். "பெசாம கால்ல விழுந்திடுங்க. அவனுக்கின்னா அம்பதாயிரம் பிஸ்கோத்து மாரி.. நம்ம கஷ்டத்துக்கு மேல ஒரு அம்பதாயிரம் போட்டுகூட தர்லாம். அவ்ளோ ரூபா இருக்கு. மனசு இருக்கணுமே?'' என்று ஆறுதலும் உபாயமும் சொன்னான்.

வெயில் உருக்கியது. தார் சாலை, மனிதர்கள், மனசுகள் எல்லாம்தான் உச்சி வெயில் நேரத்தில் உருகின. இரண்டு பஸ் பிடித்து ஜன நெருக்கடியில் கசகசப்பாகி தி.நகர். வந்து சேர்ந்தார். சோர்வாகவும் சற்று தள்ளாட்டமாகவும் இருந்தது. எப்படியும் பணத்தைத் திரும்பப் பெற்றுவிட வேண்டும் என்பதில் தீவிரம் மட்டும் அவருக்கு அதிகமாகிக் கொண்டிருந்தது.

தி. நகரில் வீட்டைக் கண்டுபிடித்து அங்கிருக்கும் செக்யூரிட்டியிடம் மாரடித்து விஷயத்தைச் சொன்னபோது, ஒருவழியாக அங்கிருக்கும் அலுவலகத்தில் ஒருவனைச் சந்திக்க அனுமதி கிடைத்தது. எதற்கும் இருக்கட்டும் என்று அவன் காலிலும் ஒரு முறை விழுந்து வைத்தார் கந்தசாமி. "படாத பாடுபட்டு சம்பாரிச்ச பணம்யா. குருவி சேர்க்கிறமாரி சேர்த்து கட்டிட்டன்யா.'' }உணர்ச்சிபூர்வமாக நடித்து பணத்தை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்றுதான் அப்படிப் பேசினார். ஆனால் தொடர்ந்து அவரால் நடிக்க முடியவில்லை. நிஜமாகவே அழ ஆரம்பித்துவிட்டார். படபடப்பாக இருந்தது. உட்கார வைத்துக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தான்.

""பெரியவரே பணம் திருப்பித் தரணும்னா போர்டு மீட்டிங்ல வெச்சுதான் முடிவு பண்ணுவாங்க. இவர் மட்டுமே ஓனர் கிடையாது. மொத்தம் எட்டு டைரக்டர்ஸ் இருக்காங்க. அத்தனை பேரும் ஒத்துக்கிட்டாதான் பணத்தைத் தரமுடியும் புரிஞ்சுதா'' சட்டத்தையும் நியாயத்தையும் கலந்து அவருக்குப் பதில் சொன்னான் அவன்.

"நீங்க மனசு வெச்சா வாங்கித் தந்துடுவீங்க. ஒரு பத்தாயிரம் எடுத்துக்கிட்டு மீதிய குடுத்தாகூட போதுங்க.''

"பெரியவரே.. அதான் சொல்லிட்டன் இல்ல. லஞ்சம் குடுக்கிறியா எனக்கு?''

"லஞ்சம் இல்லீங்க. டொனேஷனா எடுத்துக்கங்க, காலேஜிக்கு''

"சரி. லெட்டர் எழுதிக் குடுங்க. பில் ஜெராக்ஸ் எடுத்து அட்டாச் பண்ணிடுங்க. ஐயா வெளியூர் போயிருக்காரு வந்தா சொல்றேன்''

பையனை இந்தக் கல்லூரியிலேயே படிடா என்று கட்டாயப்படுத்திச் சொல்லிவிட்டால் என்ன? எதற்கு இந்த ரோதனை? மீனாட்சி சொன்னது மாதிரி படிக்கிற பையன் எந்தக் காலேஜில் படிச்சாலும் மார்க் எடுத்தா வேலைக் கிடைத்துவிடப் போகுது என்று யோசித்துப் பார்த்தார். இப்படிப் பணத்துக்காக அலைகிறவர்களிடம் சரஸ்வதி எப்படி இருப்பாள் என்றும் மறுபடி மனதை மாற்றிக் கொண்டார். தெரு முனையில் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு மறுபடி அமைச்சர் வீட்டுக்கு வந்தபோது செக்யூரிட்டி நான் கொடுத்துவிடுகிறேன் என்று வாங்கி வைத்துக் கொண்டான்.

மறுபடி எப்ப வந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளாமல் வந்துவிட்டோமே என்று இருந்தது. உள்ளே போய் மறுபடி கேட்க முடியாது என அவரும் தீர்மானமாகத் தெரிந்து வைத்திருந்ததால், அந்தக் கேள்வியை செக்யூரிட்டியிடமே கேட்டுக் கொண்டார்.

வீட்டருகே இருக்கும் மந்திரியின் கட்சியைச் சேர்ந்த வட்டச் செயலாளரிடம் ஒரு வார்த்தைச் சொல்லிவிட்டுப் போகலாம் என்றி நினைத்தார். ஐந்தாயிரம் கொடுக்கிறேன் என்றால் ஒருவேளை முடித்துத் தருவான். பாதி பணம் திருப்பி வந்தால்கூட மீதி நகை நட்டை விற்று அவன் விரும்புகிற காலேஜில் சேர்த்துவிடலாம். பாதி பணத்தைத் திருப்பித் தந்தால் போதும் என்று சொல்லிவிடலாம்.

"அப்பா அப்ளிகேஷன் வாங்கின காலேஜிலதான் சேர்ந்திடேம்பா' என்று சுந்தருக்கு நிறையபேர் அறிவுரை சொன்னார்கள். "அவன் தலைல எந்த காலேஜ்னு எழுதியிருக்கோ அதுதான் கிடைக்கும்' என்றும் விளக்கங்கள் கிடைத்தன."பெரியவங்க உனக்குக் கெட்டது செஞ்சுட மாட்டாங்கப்பா. எது செஞ்சாலும் நல்லதுக்காகத்தான் இருக்கும். இவ்வளவு நாள் வளர்த்தவங்களுக்கு உன்னை எந்த காலேஜில சேர்க்கணும்னு தெரியாதா?''என்றார் சுந்தரிடம் மீனாட்சியின் அண்ணன்.

தவறு செய்துவிட்ட மாதிரி அவர் முன்னால் சுந்தர் தலை கவிழ்ந்து அமைதியாக இருந்ததைப் பார்த்தபோது கந்தசாமிக்கு குற்ற உணர்வாக இருந்தது.

(வார்த்தை 2008)

செவ்வாய், நவம்பர் 16, 2010

கனடாகாரரின் அமெரிக்கக்காரி!

அ.முத்துலிங்கம் பயில்வது சுவாரஸ்யமான அனுபவம். ஏற்கெனவே இவரைப்பற்றி ஒரு தரம் சொன்னதுபோல இவருடைய எழுத்துகளில் அறிவியல், புவியியல், அரசியல், கணிதவியல், மொழியியல்.. இப்படி இன்னும் சில இயல்கள் கலந்து கட்டி இருக்கும். தமிழில் சிந்தித்து எழுதக் கூடிய ஒரு ஆங்கிலேய இலக்கியவாதியைப் போல இருப்பது இவருடைய நடை. சிறுகதை தொகுதி என்ற பொது அடையாளத்தோடு வெளிவந்திருக்கும் அ.மு.வின் அமெரிக்கக்காரி, அப்படித் தன் அடையாளத்தைச் சுருக்கிக் கொள்ள முடியாத நூலாகவே இருக்கிறது. இதில் சில கதைகள் "உண்மை கலந்த நாட்குறிப்பி'ல் இடம்பிடிக்க வேண்டியவை.

குறிப்பாக "உடனே திரும்ப வேண்டும்', "சுவருடன் பேசும் மனிதர்', "தாழ்ப்பாள்கனின் அவசியம்' ஆகிய கதைகள் கற்பனைகலக்காத நாட்குறிப்புகளாகவே தோன்றுகின்றன. மேலும் அந்தக் கதைகளில் உள்ள தன்மை முன்னிலை தொனியும் நம்மை அப்படி எண்ண வைக்கிறது. அதையும் மீறி அவை அவருடைய கற்பனையில் மட்டுமே உதித்ததாக இருந்தால் அது அவருடைய மிகப் பெரிய சாதனை என்றே சொல்ல வேண்டும்.தன் அனுபவத்தை சுவாரஸ்யமாக எழுதுவதைவிட தான் அனுபவிக்காததை சுவாரஸ்யமாக எழுதுவது பெரும் சாதனைதானே?

முத்துலிங்கத்துக்கு சோதனையான ஒரு சிறுகதை ஒன்று இதிலே இடம் பெற்றிருக்கிறது. அதன் தலைப்பு "பத்தாவது கட்டளை'.

லெற்றீஸியா என்ற தன் காதலிக்குக் காதலன் எழுதும் கடிதம் அது. அவளுடைய வயதை இரண்டால் பெருக்கினாலும் அதில் அடங்காத வயது காதலனுக்கு.

லெற்றீஸியா என்ற பெயரையே அப்படி நேசிக்கிறார் காதலன். அது ஒரு பெண்ணின் பெயர் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. "14 வயதிலிருந்தே அந்தப் பெயரில் எனக்குக் காதல் இருந்தது; அந்தப் பெயர் நான் பிறப்பதற்கு முன்னரே என் மரபணுவில் கலந்திருக்க வேண்டும். இத்தனை வயதுக்குப் பிறகு அப்படியொரு பெயர் தரித்த பெண்ணை காண்பேன், பேசுவேன், தொடுவேன் என்றெல்லாம் நான் நினைக்கேவேயில்லை' என்று தொடங்குகிறார்.

முத்துலிங்கத்தின் "உண்மை கலந்த நாட்குறிப்பி'ல் "பூங்கொத்து கொடுத்த பெண்' தலைப்பிட்ட அத்தியாயத்தைப் படித்தீர்களானால் அதில் ûஸராவை வர்ணிப்பதின் மிச்சத்தை இங்கே லெற்றீஸியாவுக்குத் தந்திருக்கிறார் என்பது புரியும்.

ûஸரா பாதிக்கால் தெரியும் செருப்பை அணிந்திருந்ததாகவும் பாதம் ஒளிவீசுவதை அன்றுதான் பார்த்ததாகவும் கண்டதாகவும் அவள் பேரழகி.. அதிலே துயரம் என்னவென்றால் அவளுக்கு அது தெரியாது என்றும் எழுதியிருப்பார்.

லெற்றீஸியாவுக்கு வருவோம்...

"நீ ஒரு தூக்கவியல் நிபுணி. சிலர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது அவர்கள் மூச்சு சில நிமிடங்கள் நின்றுவிடுவதுண்டு. அதுபற்றிய ஆராய்ச்சியில் இருப்பதாகச் சொன்னாய். உன்னைப் பார்க்கும் கணங்களில் என் மூச்சு பல நிமிடங்கள் நின்று போனதை நான் சொல்லலாம், நீ நம்பவா போகிறாய்?'

அவளோ குழந்தைத்தனமானவளாக இருக்கிறாள். ஒருநாள் அவளை எச்சரிக்கை செய்வதற்காக "உடனே திரும்பிப் பார்க்காதே. உனக்குப் பின்னால் பத்துமணி கோணத்தில் ஒருவன் உட்கார்ந்து உன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான்' என்கிறார். அவளோ காலை பத்துமணியா, இரவு பத்துமணியா? என்கிறாள்.

"திடீரென்று ஆப்பிள் குவியலின் மணம் எழுந்தது. நீ எலுமிச்சை பச்சை ஆடையில் நின்று கொண்டிருந்தாய். நான் திரும்பிய வேகத்தைப் பார்த்தோ என்னவோ நீ சிரித்தாய். கதவைத் திறந்துவிட்ட கிழவருக்கு கொடுத்த அதே சிரிப்பு. டொரான்டோ மாநகரத்தில் அதுவே ஆகச்சிறந்த சிரிப்பு. (கிழவருக்காக அந்தச் சிரிப்பை வீணாக்கிவிட்டதற்காக வருத்தம் வேறு.)அப்போதுதான் உன்னுடைய பெயர் லெற்றீஸியா என்றாய். நான் ஏற்கெனவே தெரியும் என்று சொன்னதை நீ நம்பவில்லை. உன்னுடைய உடல் உருவத்துக்கு வேறு என்ன பெயர் பொருத்தமுடியும், அதை யோசித்துப் பார்.' காதல் பித்து மூச்சு முட்டுகிறது.

பிறகு அவர் செய்த நல்லூழ் அவரை அந்தப் பெண்ணை மீண்டும் சந்திக்க வைக்கிறது. வீட்டுக்கு அழைக்கிறாள். அவளுடைய ஒரே மகளை பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்திருப்பதாகச் சொல்கிறாள். தனிமை. சந்தோஷமாக இருக்கிறார்கள். தினத்தந்தி பாஷையில் உல்லாசமாக இருக்கிறார்கள்.

உன்னை மீண்டும் சந்திக்க வேண்டும் என்பதாக அந்தக் கடிதம் முடிகிறது.

கடிதம் முடிந்துவிட்ட அடுத்த பாராவில் கதை முடிகிறது.

"இந்தக் கடிதம் டொராண்டோ நூலகம் ஒன்றின் பைபிள் பிரிவில் ஒரு பைபிளின் பத்துக்கட்டளைகள் பகுதியில் இருக்கிறது. "காதலனோ, காதலியோ கைமறதியாக வைத்திருக்க வேண்டும். கடிதத்தைப் படித்துவிட்டு காதலி வைத்தாளோ, கடிதத்தைக் கொடுக்கும் முன்னர் அதை காதலன் வைத்து கொடுக்க மறந்தானோ என்ற புதிர் விடுபடவில்லை...' என்று முடிகிறது கதை.

அ.மு. இந்தக் கடிதத்தை பைபிளில் இருந்து எடுத்தவர் மாதிரி தெரியவில்லை, வைத்தவர் மாதிரி தெரிகிறார்.

இதைத்தான் அவருக்கான சோதனை என்றேன். ஒரு சிறுகதையை இத்தனை நம்பகத் தன்மையோடு எழுதினால் இப்படித்தான் சந்தேகப்படுவார்கள்.

'மயான பராமரிப்பாளர்' என்றொரு சிறுகதை. உலகத்தை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுற்றியபடி வந்து ஆஸ்திரேலியாவில் இறங்கும் பயணத்தையும் பயணிகளையும் விவரிக்கும் கதை. கிரீன்விச்சைக் கடக்கும்போது ஒரு முழுநாள் எப்படி காணாமல் போகிறது என்பதையும் அதனூடே ஒரு சிறுமியின் ஏக்கத்தையும் சொல்லும் அற்புதமான கதை.

'49வது எல்லைக் கோடு'ம் இதே போல புவியியல் சம்பந்தப்பட்டது. இப்படியெல்லாம் யோசிக்க செயல்பட அவருடைய பரந்துபட்ட பட்டறிவு துணை நிற்கிறது. வேறு கதையும் களமும் தமிழுக்கு இதனால் அறிமுகமாகிறது. உலகின் பல பகுதிகளில் வாழ்ந்து இப்போது கனடாவில் வசிப்பவர் அ.மு. பல நாடுகளையும் பலநாட்டு மனிதர்களையும் வாழ்க்கையையும் நுணுக்கமாகப் பார்ப்பவர். உலகத்தை இவரைவிட அதிகதரம் வலம் வந்தவர்கள் இருக்கலாம். ஆனால் படைப்பாளியின் பார்வையில் கிடைக்கும் பலனை இந்த நூலில் தரிசிக்க முடிகிறது.

"சுவருடன் பேசும் மனிதன்' கதையில் மனிதன் தன் மொழிக்குத் தரும் முக்கியத்துவம் அலசப்படுகிறது. தனக்கென தனியே தேசமில்லாத மொழிகள் அழிந்துபோவதைத் தவிர்க்கவே முடியாது என்கிறார் அராமிக் மொழியாளன் ஒருவன். டொராண்டாவில் அந்த மொழி பேசிக் கொண்டிருந்தவர் இருவர். ஒருவன் அவன். இன்னொருத்தி அவன் மனைவி. மனைவி கொஞ்ச நாளுக்குமுன் இறந்து போய்விட்டாள். இப்போது அந்த மொழி தெரிந்தவன் அவன் ஒருத்தன்தான். அதனால் அவன் சுவருடன் தினமும் அராமிக் மொழியில் பேசுகிறான். இந்த மொழி அழிந்து போய்விடாதா என்று தன் அச்சத்தைத் தெரிவிக்கிறார். அவன் நம்பிக்கையோடு சொல்கிறான். யேசு பேசிய மொழி ஆயிற்றே என்கிறான்.

"பத்துநாட்கள்' கதையில் இந்த உலகில் அஞ்சி நடுங்கிக் கூழைகும்பிடு போட்டு வாழும் லட்சோப லட்சம் மக்களில் ஒருவனைப் பற்றி விவரித்திருக்கிறார். ஊசியை பல்லால் கடித்தபடி பேசும் தையல்காரனைப் போல பற்கள் பிரியாமல் பேசினார் என்று அந்த அதிகாரியை வர்ணித்திருப்பார்.

"மன்மதன்' கதையில் சாணை பிடிப்பவன் மாதிரி வேறு பக்கம் திரும்பிக் கொண்டு பேசினாள் என்று ஒரு உவமானம் வரும். மிகவும் ஆச்சர்யப்படவைக்கும் இத்தகைய உவமைகளுக்கு பஞ்சமே இல்லை இவருடைய படைப்பில்.

"மட்டுப்படுத்தப்பட்ட வினைச் சொற்கள்', "புவியீர்ப்பு கட்டணம்' ஆகியவை மனிதன் சட்ட திட்டங்களுக்குள் கட்டுப்பட்டிருக்க வேண்டிய வேடிக்கையான சுவையைத் தரும் கதைகள். இதில் மட்டுப்படுத்தப்பட்ட வினைச் சொற்கள் இப்போதைய சூழலில் நடக்கும் கதை, புவியீர்ப்பு கட்டணம் இனிமேல் நடக்கப் போகிற கதை.

"தாழ்ப்பாள்களின் அவசியம்', "லூஸியா', "பொற்கொடியும் பார்ப்பாள்', "அமெரிக்ககாரி' ஆகிய கதைகள் இலங்கை பின்னணியை நெருப்புபோல உரசிச் செல்கின்றன. ஏதோ ஒரு வரியில் உள்ளத்தை உலுக்கிப் போட்டுவிடும் தன்மை கொண்டவை. குறிப்பாக "பொற்கொடியும் பார்ப்பாள்' கதை. அதில் இறந்து போன ஈழத்துப் போராளி பெண்ணின் கையில் சிங்கள ராணுவத்தினர் கிரேனெட் இருந்ததைச் சொல்லி முடித்திருப்பார். அது எப்படி அவள் கைக்கு வந்தது என்பது நமக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் நமக்குள் வேறு ஒரு கதையைத் திறக்கிறது.

புகைக்கண்ணர்களின் தேசமும் லூஸியாவும் தரும் சரித்தர புனைவும் மெல்ல திறந்து காட்டும் ரகஸ்யங்களும் அலாதியும் அதிர்ச்சியும் மனத்துக்குள் நிகழ்த்தவல்லன.

இந்தத் தொகுப்பில் உள்ள அத்தனைக் கதைகளும் எனக்கு மிகவும் பிடித்தவை. எல்லா கதையிலும் ஏதாவது ஓரிடத்தில் அவர் ஒளித்து வைத்திருக்கும் அங்கதச் செறிவு வாய்விட்டுச் சிரிக்கும்படி செய்யும். "உடனே திரும்ப வேண்டும்' மற்றும் 'வேட்டை நாய்' போன்ற கதைகள் பதற்றமும் நகைப்பும் கலந்தவை. ஒவ்வொரு வரிக்கும் உரை எழுதி சிலாகிக்கலாம். அப்படி எழுதினால் அமெரிக்ககாரி புத்தகத்தைப் போல இரண்டு பங்கு நூலாகிவிடும் இந்த விமர்சனம்.

அமெரிக்ககாரி,
அ.முத்துலிங்கம்,
காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி. சாலை,
நாகர்கோவில்-1.
போன்: 4652- 278525
மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.இன்


முத்துலிங்கம் எழுதிய பிற நூல்கள் பற்றி :

உண்மை கலந்த நாட்குறிப்புகள்

வியத்தலும் இலமே



LinkWithin

Blog Widget by LinkWithin