வியாழன், மே 16, 2013

கற்றுக்கொடுத்ததும், கற்றுக் கொண்டதும்.


நண்பர்களே,

கல்லூரி பேராசிரியர் ரங்கசாமி அவர்கள் வெட்டுப்புலி நாவல் குறித்து எழுதியிருக்கும் நீளமான ஆய்வுரை இது. ஆனால் சுவாரஸ்யமாக படிக்க முடியும். நாவலின் ஒவ்வொரு வரியுமே அவருக்குள் ஏற்படுத்தியிருக்கும் அனுபவலயப்பு எழுதியவன் என்ற முறையில் மகிழ்வளித்தது. அவருடைய ஆய்வுரை உங்கள் பார்வைக்காக.

‍தமிழ்மகன்

5/14/13


வெட்டுப்புலி நாவல்- நான் கற்றுக்கொடுத்ததும், கற்றுக் கொண்டதும். Vettupuli Novel- What I taught and learnedதமிழ்மகன் எழுதிய வெட்டுப்புலி நாவல் கையில் கிடைத்தது. என்னுடைய சின்ன மகன் விக்னேஷ் வாங்கி வைத்திருந்தது. புத்தகத்தின் ஆரம்பத்தில் தமிழ்மகனைப் பற்றி எழுதப்பட்டிருந்த அறிமுகக் குறிப்புதான் புத்தகத்தைத் தொடர்ந்து வாசிக்கலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. முதல் ஐந்தாறு பக்கங்கள் எனக்கு அவ்வளவாக ஆர்வமூட்டவில்லை. ஆனால் ஏழாம் பக்கத்திலிருந்த ஒரு பத்தி என்னை புத்தகத்தோடு கட்டிப்போட்டு, நிமிர்ந்து உட்காரவைத்து, மீண்டும் முதல் பக்கத்திலிருந்து வாசிக்க வைத்தது.

vettupuliவெட்டுப்புலி தீப்பெட்டியோடு சம்பந்தப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு நீளும் சம்பவங்களே நாவலின் கதைக்களம். “ஒரு நூற்றாண்டைத் தழுவி எழுதுவதற்கே ஏராளமான நூல்களின் துணை தேவையிருந்தது. இன்னொரு பத்தாண்டுகளுக்கு பின்னோக்கிப் போகவேண்டுமானாலும் சுமார் ஆயிரம் சந்தேகங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று தமிழ்மகன் குறிப்பிடும்போது அந்த வார்த்தைகளிலிருந்த எதார்த்தமும், அனுபவ ஒத்திசைவுமே என்னை நாவலுடன் அன்யோன்யமாக்கியது. பத்தாண்டுகள் கூட வேண்டாம். சிலநேரங்களில் மாதங்களைப் பின்னோக்கிப் பார்க்கும் கட்டாயமேற்பட்டு, அது எழுப்பிய சந்தேகங்களை எதிர்கொள்ளமுடியாமல் துவண்டு போன என் அனுபவங்கள் நினைவுக்கு வந்தது. மனுஷன் ஒரு நூற்றாண்டை பின்னோக்கிப் பார்த்திருக்கின்றார் என்றால், வரலாற்றையல்ல, ஒருவகையில் வாழ்க்கையை பின்னோக்கிப் பார்த்திருக்கின்றார் என்றால்....அந்த அனுபவத்தை அவர் எப்படி எழுத்தாக்கியிருக்கின்றார் என்பதை நானும் அறிந்துகொள்ள விரும்பினேன்.
பின்னோக்குதல் என்பது சமூக முக்கியத்துவம் வாய்ந்த சொல்லாடல். சமூக முன்னேற்றம் என்பதுகூட ஒருமாதிரியான வில்வித்தைதான் - பின்னோக்குதல்தான். எவ்வளவுக்கெவ்வளவு சாதுர்யமாக நாணை பின்னோக்கி இழுக்கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு அம்பை நாம் நினைத்த தூரத்திற்குச் (குறிக்கோளை நோக்கி) செலுத்தலாம். பின்னோக்குதலென்பது, முன்னோக்குதலைவிட அதிக மதிநுட்பம் தேவைப்படும் செயலென்பது என் அனுபவம். பட்டறிவு. அதனால்தான் நமது கல்விநிலயங்கள், முன்னோக்குதலைப் (Planning) பற்றி பேசுமளவு, பின்னோக்குதலைப் பற்றி பேசுவதில்லை. பின்னோக்குதலுக்கு முறையான பயிற்சி இல்லாததால், ஒன்று நாம் நாணை அளவுக்கதிகமாகவோ, அல்லது அளவு குறைத்தோ பின்னிழுக்கும் போது, அம்பு நம் குறியிலக்கைத் தாண்டியோ, அதற்கு முன்பாகவோ விழுந்து தொலைக்கின்றது.
thamil makan2அடுத்து தமிழ்மகன் எழுதியிருந்தது, சமூக முன்னேற்றத்தைப் (community development) பற்றிய பாடத்தைக் கால்நூற்றாண்டுக்கு மேலாக கற்பித்து வந்த என்னுடைய அனுபவத்தோடு ஒத்திசைந்து சென்றது. சமூக முன்னேற்றப் பணிகளில் (Community Development), பிரச்சனைகளையோ, வாய்ப்புகளையோ கண்டறிந்து அதைச் சரியாகக் கையாள வேண்டுமென்றால் அதைப் பற்றிய தகவல்கள் வேண்டும். சமூக முன்னேற்றப் பணிக்கான திட்டமென்பது அடிப்படையில் தகவல்களால் கட்டமைக்கப்பட்டதுதான். ஒரு எழுத்தாளனும், முன்னேற்றப் பணியாளனும் ஒரு எல்லை வரைக்கும் இணைந்தே பயணிக்கின்றார்கள். தன் பயண அனுபவத்தை எழுத்தாளன் இலக்கியமாக்குகின்றான். முன்னேற்றப் பணியாளன் தன் அனுபவத்தை, சமூக மாற்றுருவாக்கதிற்கான திட்டமாக்குகின்றான். சமூக முன்னேற்றத்திற்கான தகவல் சேகரிப்பு என்பது பெரும்பாலும் நிகழ்காலத்தைப் பற்றிய தகவல் சேகரிப்புதானென்றாலும், நிகழ்காலம் பெரும்பாலும் கடந்த காலத்தின் நீட்சியாக இருப்பதால், எல்லாத் தகவல் சேகரிப்பிலும், அது இலக்கியமோ, முன்னேற்றப் பணியோ, நாம் வகுத்துக்கொண்ட குறிக்கோளிற்கேற்ப சற்று பின்னோக்கி நகரவேண்டியது கட்டாயமாகின்றது.
பின்னோக்கி நகர்தல் என்பது எளிதானதுமல்ல. தமிழ்மகன் குறிப்பது மாதிரி “இங்கிருந்து இந்த இடத்திற்குச் செல்ல சாலை இருந்ததா? அந்த இடமே அப்போது இருந்ததா? எத்தகைய வாகனத்தில் சென்றனர்? எதற்காகச் சென்றனர்? என்ன உடை உடுத்தினர்? எப்படிப் பொருளீட்டினர்? எப்படிச் சேமித்தனர்?... எப்படிப் பேசினர்? யாரை எதிர்த்துப் பேசினர்? யாருடைய பேச்சைக் கேட்டனர்? எப்படி உழைத்தனர்? எப்படி உண்டனர்?...எந்த சாமியைக் கும்பிட்டனர்? எப்படியெல்லாம் வீடு கட்டினார்? எதற்கெல்லாம் சந்தோசப்பட்டனர்? கோபப்பட்டனர்?” என்று ஆயிரம் சந்தேகங்களைக் கிளப்பும். இந்த சந்தேகங்கள் கடந்த மாதத்தைப் பற்றியோ, கடந்த ஆண்டைப் பற்றியோ, கடந்த நூறாண்டைப் பற்றியோ இருக்கலாம். ஆனால் சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டால்தான், அனைத்தையும், அனைவரையும் அரவணைத்து (integrated & inclusive) முன்னகர முடியும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆங்கிலக் குறிப்பு, community organization என்ற பாடத்தில், முதல் நிலையான தகவல் சேகரிப்பு முறை பற்றியது. கால்நூற்றாண்டுக்கு மேலாக இதைப் புரிந்துகொள்ள முயற்சித்ததிலும், என் மாணவர்களுக்குப் புரியவைக்க முயற்சித்ததிலும் எனக்கு முழுமையான திருப்தி ஏற்பட்டதில்லை. காரணம் நமது கல்விமுறை தகவலென்பதை ஜீவனற்ற புள்ளிவிவரத் தொகுப்பாக்கிவிட்டதால் கூட இருக்கலாம்.
Fact- finding
Fact-finding includes activities designed to aid the Discovery, Ascertainment, Assembling,
Compilation and Recording of Facts.
Most community problems are sustained by a wide variety of factors, and some are more influential than others. The challenge is to locate the major factors that have an effect on the problem requiring correction. To meet this challenge effectively, it is essential to gather relevant facts regarding the background of the problem. In gathering information on the problem, the Community Organizer may be faced with two difficulties: obtaining too much information that may prove to be irrelevant; identifying too little information from normal sources. Good judgment must be used to distinguish noise (meaningless data) from information that helps in analyzing a problem. Similarly when information is not easily available, concerned individuals may be required to use ingenuity, functioning like good investigative reporter by checking out leads.
தகவல் சேகரிப்பில் உள்ள சவால்கள் இதுதான். “Obtaining too much irrelevant information….identifying too little information from normal sources… distinguishing noise (meaningless data) from information” இதைப் பொட்டிலடித்தாற்போல், புரிந்து கொள்ளவும், புரியவைக்கவும் சரியான எடுத்துக்காட்டுகள் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த எனக்கு, “உதறிய கோணியில் இருந்து உமியும் வந்தது. அரிசியும் வந்தது. கவனமாகத்தான் பிரித்துக் கொள்ளவேண்டியிருந்தது” என்ற தமிழ்மகனின் வார்த்தைகளை என் புரிதலுக்காக எனக்கென்று பிரத்யேகமாக எழுதப்பட்டது மாதிரி உணர்ந்தேன்.
பூண்டி எரிக்கரையில் வைத்து சிறுத்தை சின்னாரெட்டியின் கொள்ளுப் பேரன் ஜானகிராமனுடன் உரையாடியதைச் சொல்லும்போது, ஜானகிராமன் ஜெர்மனியில் ஹிட்லர் தேர்தலில் நின்றதைப் பற்றியெல்லாம் பேசினார் என்று தமிழ்மகன் குறிப்பிடுவார். உண்மைதான். தகவல் என்ற கோணியை உதறும் போது, என்னவெல்லாம் உதிரும் என்று சொல்லமுடியாது. ஒரு கிராமத்தில் நடந்த சாதாரண “தொடுப்பு” (Extra Marital Relationship) விவகாரம். ஜாதிக்கலவரமாக உருவெடுத்து, அக்கிராமத்தையே பல ஆண்டுகள் முன்னேறவிடாமல் முட்டுக்கட்டை யானதையறிந்து, அதைப் பற்றி அறிய முயன்றபோது, “அன்னைக்கு காவல்காரன் சினிமா ரிலீஸ். காலையிலே போய்ட்டோம். இரண்டாவது ஆட்டத்துக்குத்தான் டிக்கட் கிடச்சது. பாத்துட்டு காலையிலே ஊருக்கு வந்தால், ஊரே காலியாகக் கிடக்குது” என்றார். நாம் ஒன்றைப் புரிந்துகொண்டு செயலாற்றலாம் என்று கேள்விகேட்டால், அதை நாம் எதிர்பார்க்காத வேறு ஒன்றுடன் முடிச்சிட்டுப் பதில் சொல்வார்கள். நாம் ஒன்றை புரிந்துகொள்ள எத்தனிக்கும்போது, “தனுஷ்கோடி புயலில் ஜெமினியும் சாவித்திரியும் இராமேஸ்வரத்தில் மாட்டிக்கொண்ட அன்னைக்கு” என்று அவர்கள் தகவல் கோணிகளை உதறுவார்கள். தகவல்களை அவர்களுக்குத் தோதானவைகளுடன் முடிச்சிட்டே தருவார்கள். இல்லையென்றால், “ரெண்டு நாளா சும்மா சிணுசிணுவென்று வேட்டி நனையிற மாதிரி பேஞ்சிட்டிருந்திச்சி. சரித்தான்னு இருந்தப்போ, ஓக்காளி, மூணா நாள் மழை ஊத்து ஊத்துண்ணு ஊத்தீறிச்சி. கண்மாய் உடைஞ்சு ஒருகிடை ஆடுகளை அடிச்சிட்டுப் போயிருச்சி. நான் பிழச்சது அந்த ஆத்தா புண்ணியம்” என்று தகவல்களை விட்டு வீசும்போது, பொறுமையற்ற முன்னேற்றப் பணியாளர்கள், பொச்சைப் பொத்திக்கொண்டு ஓட்டம் பிடித்து விடுவார்கள். மாறாகக் காவல்காரன் ரிலீஸ் தேதி, தனுஷ்கோடி புயல் வருஷம், வேட்டி நனையிற மாதிரி மழைன்ன அது எத்தனை மி.மீ மழையளவைக் குறிக்ககும், மழை ஊத்துச்சன்ன அது எத்தனை செ.மீ மழையளவைக் குறிக்கும் என்பது நமக்குத் தெரியவரும்போது, தகவல் முடிச்சுகளின் மர்மம் விலகும். இதைப் புரிந்து கொள்ளாமல், எதைக்கேட்டால் “...க்கா எதைச் சொல்றாணுகண்ணு பாருங்க” என்று சலிப்புத் தட்டி பேசும் முன்னேற்றப் பணியாளர்களால் எதையும் புரிந்து கொள்ள இயலாது.
“யுவ வருசமன்னு நினைக்கின்றேன்” என்று ரங்காவரம் ஜானகிராம் தாத்தா வீசிய தகவலின் நூல்பிடிக்க தமிழ்மகன் எப்படியெல்லாம் அல்லாடியிருப்பார் என்பதை என்னால் ஊகிக்க முடிகின்றது. தமிழ் வருடங்களை ஆங்கில வருடங்களோடு இணைத்து, யுவ வருடம் எந்த ஆங்கில வருடத்தில் வருகின்றது எனபதைத் தமிழ்மகன் கணக்கிட்டுப் பார்த்திருப்பார். அது ஒரு சுகமான கற்றல். தேடல்.
நாம் ஒன்றைகேட்க இவர்கள் அவர்களுக்கு தெரிந்ததையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கின்றார்களே என்று ஒரு நொடி நினைத்துவிட்டால் கூட கற்றுக்கொள்ளும்/ புரிந்துகொள்ளும் வாய்ப்பை நழுவ விட்டுவிடுவோம். அவர்கள் கோணியை உதறுவதே பெரும் பாக்கியம். பாடம் கற்றுக்கொள்வது அதைப் பார்ப்பதிலிருந்துதான் தொடங்குகின்றது. வெட்டுப்புலியில் தமிழ்மகன் அதைத்தான் செய்திருக்கின்றார். அரிசியை, தவிட்டை தனியாகப் பிரித்து, அரிசியை உலையிலிட்டு சோறாக்கி, தவிட்டை எறிந்துவிடாமல் அதையும் எண்ணையாக்கி, வெட்டுப்புலியை மிக நன்றாகவே சமைத்திருக்கின்றார்.
Development workers may be required to use ingenuity, functioning like a good investigative reporter by checking out leads…..இதைத்தான் “பின்னிய சரடை பிரித்துத் திரிக்க ஆரம்பித்தேன்” என்று தமிழ்மகன் சொல்கின்றார். வெட்டுப்புலி நாவலின் கட்டமைப்பே, உதறிய கோணியிலிருந்து எப்படி அரிசியை, உமியைப் பிரிப்பது, கயிரில் போடப்பட்ட (தகவல்) முடுச்சுகளை கவனமாகப் பிரித்து மீண்டும் எப்படித் திரிப்பது என்பதற்கு நல்ல உதாரணம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, தகவல் சேகரிப்பில் நாம் எதிர்கொள்ளும் தகவல் இடைவெளிகள் (Information Gaps) நம்மை அலைக்கழிக்கும். அந்த இடைவெளியை இட்டு நிரப்பாதவரை நம்மால் முழுமையைப் புரிந்துகொள்ள முடியாது. அந்த இடைவெளியை நிரப்ப முன்னேற்றப் பணியாளர்கள் தங்களின் உள்ளுணர்வை துணைக்கு வைத்துக் கொள்வார்கள். தமிழ்மகன் அதை மிக அழகாக, “புனைவின் சொற்கள் கொண்டு பல வெற்றிடங்களை மூட” படைப்புத் தந்திரத்தைக் கையாண்டதாகச் சொல்கின்றார். “பணம், மின்சாரம், சுதந்திரம் எதுவும் இல்லாமலிருந்த அந்தக் காலகட்டத்தை, எல்லாமே இருக்கின்ற இன்றைய சூழ்நிலையில் புரிந்துகொள்ள ஒரு கால எந்திரப் பயணம்” போய் வந்ததாகச் சொல்கின்றார். அதை நாம் இன்னும் எளிதாகப் புரிந்துகொள்ள அவர் கையாளும் உதாரணம்தான் அவர் தன்னைப் படைப்பாளியாக வெளிப்படுத்திக் கொள்ளும் அழகு. ”கிழிந்த டவுசரை எங்கள் தெரு டைலர் ரப் அடித்து தைத்துக் கொடுப்பான். கிழிந்த பகுதியை இணைத்து மேலும் கீழும் தைப்பான். டவுசரின் நிறத்திலேயே, அசப்பில் பார்த்தால் தெரியாத மாதிரி தைத்துக் கொடுப்பான். அதை இன்னும் கொஞ்சம் வாகாகச் செய்யமுடிந்தால், டார்னிங் செய்வதுபோல செய்நேர்த்தி இருக்கும்”. தகவல் இடைவெளிகளை இட்டு நிரப்ப, “புனைவுத் திறம்” வேண்டும். “கால எந்திரப் பயணம்” செய்யவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக “டார்னிங்” செய்யத் தெரிந்திருக்கவேண்டும். தமிழ்மகன் சொல்வதுபோன்று இவ்வளவு சுவாரஸ்யத்துடன் என்னால் சொல்ல முடிந்திருந்தால் என் மாணவர்கள் வகுப்பறையில் தூங்கியிருக்க மாட்டார்கள் என்று காலம் கடந்த பின்தான் எனக்குப் புரிகின்றது.
கால எந்திரப் பயணம்
ஒரு சின்ன தீப்பெட்டியைக் கருவாக வைத்துக்கொண்டு, ஒரு நூற்றாண்டுச் சரித்திரத்தைச் சுற்றி வருவதென்பது சாமான்யமானதல்ல. பல நூற்றாண்டுகளைச் சுற்றிவந்த கதைகருக்கள் நமக்கு புதியதல்ல. அதுவெல்லாம் அரசர்களைப் பற்றியது. தெய்வாம்சம் நிறைந்த, அமானுஷ்ய சக்தி படைத்தவர்களைப் பற்றியது. அவர்கள் நம்மை பிரமிக்க வைப்பதைவிட, எழுத்தாளன் தன் படைப்புத் திறனால், மொழியாளுமையால் நம்மை மயக்குகின்றான் என்பது புரியவந்ததும், அந்த கதாபாத்திரங்களிலிருந்து நாம் அன்னியப்பட்டுவிடுவோம். ஒரு படைப்பின் வசீகரமே, அதன் கதைக்கரு வாசகனுக்கு நெருக்கமானது என்று உணரவைத்தலில்தான் உள்ளது. அண்டை வீட்டுப்பெண் என்று உணரவைக்கும் தோற்றப் பொலிவே அந்த நடிகையின் வெற்றி இரகசியம் என்று சில நடிகைகளைப் பற்றி குறிப்பிடுவார்கள் வெட்டுப்புலியின் கதைகருவை, கதாபாத்திரங்களை தமிழ்மகன் நமக்கு மிக நெருக்கமாக்கி விடுவதால், அவர் தீப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு கால எந்திரப் பயணம் செய்யும் போது, நாமும் நமக்குப் பிடித்தமான பொருட்களைத் தூக்கிக் கொண்டு கால எந்திரப் பயணம் செல்ல எத்தனித்துவிடுகின்றோம். தமிழ்மகனுக்கு தீப்பெட்டி என்றால், வாசகர்கள் அவரவர்களுக்குப் பிடித்தமான பொருட்களையும், சம்பவங்களையும் தூக்கிக்கொண்டு பயணிக்க வெட்டுப்புலி நிறைய வாய்ப்புக்களைக் கொடுத்துக்கொண்டே செல்கின்றது.
மோட்டாருடன் ஒரு கால எந்திரப் பயணம்:
நானும் சில பொருட்களை, சம்பவங்களைத் தூக்கிக் கொண்டு கால எந்திரத்தில் சுகமாகப் பயணித்தேன். வெட்டுப்புலியில் வரும் மோட்டார் சமாச்சாரங்கள் அதில் ஒன்று.
முப்பதுகளில் தசரதரெட்டி டீசல் மோட்டாரை புழக்கத்திற்கு கொண்டுவருகின்றார். “சும்மா ஏரியிலே நாலு கவளை ஒட்டிக்காம, இந்த மோட்டாரை வாங்கியாந்து வெச்சிட்டு, அதுக்கு செவரட்சனை செய்றதுக்கே சரியா போவுது” என்று தசரதரெட்டியின் மனைவி மங்கம்மா தன் சகோதரியிடம் புளகாங்கிதத்தோடு புலம்புகின்றாள். ரங்காவரத்திலோ சிறுத்தை சின்னாரெட்டி ”எங்கு பார்த்தாலும் நடவு நட்டு பயிர் செய்வதும், பம்பு வைத்து நீரிறைப்பதும் அதிகமாகிக் கொண்டே வருவதாகச்” சொல்கின்றார். நாப்பதுகளில் ஜெகநாதபுரத்திலிருந்து ரங்காவரம் செல்லும் வழியில் சூரப்பேடு ராகவரெட்டி “காசு கொழுப்பெடுத்தவன் டீசல் மோட்ரு வெச்சிருக்கான். ஒரு பேரலு மூணு ரூபானு ஆயில் வாங்கி ஊத்றான். அத மனுசனுக்கு குடுத்தா ஏத்தம் ஏறச்சிட்டு போறான்” என்று சொன்னதற்கு. “மோட்ரு இருந்தா வேல சுருக்கா முடியுதில்ல” என்று லட்சுமணன் பதில் சொல்கின்றான். ஐம்பதுகளில், பூவேரியில் கிணறுவெட்டி, இருளிப்பட்டியிலிருந்து கரண்ட் இழுக்கும் செலவைக் குறைக்க, லட்சுமணரெட்டி, மணி நாயுடுவைக் கூட்டு சேர்க்க முயல, அவரும் செலம்பத்தானையும் கூட்டு சேர்த்துக் கொண்டு இன்னும் செலவைக் குறைக்கலாம் என்று சொல்கின்றார். அறுபதுகளில், பாட்டியாளுக்கு வாரீசு இல்லாததால் ஜெகநாதபுரத்தில் வந்து தங்கிவிட்ட வேலூர் சுந்தர முதலியார், “சத்தமே இல்லாம, ஒடுதா ஓடலாயான்னு” கண்டுபிடிக்க முடியாதபடி சுகுணா மோட்டார் ஓடுவதாக லட்சுமண ரெட்டியிடம் சிலாகிக்கின்றார. “மோட்டார் சமாச்சாரமன்னா சுப்ரமணிய ஐயருதான்... அவரை வுட்டா வேற ஆளு கிடையாது... நுணுப்பமான வேலக்காரன்” என்று தன் பங்குக்கு லட்சுமணரெட்டி சிலாகித்துச் சொல்கிறார். எழுபதுகளில் புது மோட்டார் போட கரண்ட் கனெக்ஷன் வாங்க லட்சுமணரெட்டி இபி ஆபீஸுக்கு அலைகிறார். மின்சாரமும், மோட்டார்களும், ரோடும், பஸ் வசதியும் நமது கிராமங்களை துயிலெழுப்புகின்றன.
ஒரு கிராமத்தில் ஒரு ஆய்விற்கான தகவல் சேகரிப்பின் போது ஒரு மூதாட்டி சொன்ன வார்த்தைகள், வெட்டுப்புலியில் மோட்டார் பற்றி உரையாடல் வரும்போதெல்லாம் என் கைபிடித்து கால எந்திரப் பயணம் கூட்டிச் சென்றது. “மோட்டார் வந்துச்சி. கமலை இறைக்கிறது நின்னுபோச்சு. தண்ணி கட்ன பொம்பளை தண்ணி கட்டிட்டிருந்தா. ஆனா கமலை இரச்ச ஆம்பளைக்கு ஒய்வு கிடச்சது. நேரம் கிடச்சது. டீக்கடையிலே உட்காந்து பேப்பர் படிச்சிட்டு, கட்சி கருமாதின்னு போனதுக பல. மந்தையிலே உட்கார்ந்து தாயம், சீட்டு விளையாண்டது சில. சிலது மட்டும் வேலை சுலுவாயிருச்சி வெளிவேலைக்கு போகலாமன்னு சுதாரிச்சிச்சு”. மோட்டார் என்பது உயிரற்ற ஒரு எந்திரம்தான். சுவிட்சைப் போட்டால் தண்ணீயைப் பீச்சியடிக்கும். ஆனால் அது கொடுத்த ஓய்வு புதிய பரிமாணங்களைக் காட்ட ஆரம்பிக்கின்றது. தன் கிராமத்தைக் கடந்து நாட்டில் என்ன நடக்கின்றது என்று புரிந்து கொள்ள, படித்தறிய அந்த ஓய்வு உதவியது. நாலு இடங்களுக்குப் போய்வர கால அவகாசம் ஏற்படுத்தித் தந்தது. இப்படித்தான் காந்தியும் பெரியாரும் அவர்களுக்கு அறிமுகமாகின்றார்கள்.
“வெள்ளைக்காரர்களால் நம் ஊர் ஆளப்பட்டுக்கொண்டிருப்பதால் நமக்கு என்ன பாதகம் வந்துவிட்டது....நாடு எப்படி ஆளப்படவேண்டுமோ அப்படித்தான் ஆளப்பட்டுக்கொண்டிருக்கின்றது....எனவே சுதந்தரம் என்பது அக்கறை கொள்ளத்தக்க விசயமாகப் படவில்லை’ என்று நாவலின் முதலில் குறிக்கப்படும் லட்சுமணனின் மனவோட்டமே மக்களுடையதாகவுமிருந்தது. வெள்ளையனையே பார்த்திராத மக்களுக்கு அவனை வெளியேற்றவேண்டுமென்ற சுதந்தர வேட்கையையும், அக்ஹிரகாரங்களே இல்லாத, பிராமண வாசனையே இல்லாத மக்களைக் கூட பார்ப்பனத் துவேஷம் கொண்டலைய வைத்தது.
இதில் மக்களிடம் சென்று பேசிய காந்தி, பெரியார் பங்கு பெரிதா? இல்லை சுந்தர முதலி சொன்ன மாதிரி “ஒடுற சத்தம் தெரியாமல் ஒடுன மோட்டார்” பங்கு பெரிதா? காங்கிரஸ், சுயமரியாதைக் கழகம் மோட்டாரைக் கொண்டுவந்ததா? இல்லை மோட்டார் காங்கிரஸ், சுயமரியாதைக் கழகத்தை வளர்த்ததா? முட்டை முதலில் வந்ததா? கோழி முதலில் வந்ததா? ஒன்றில்லாமல் ஒன்றில்லை. ஒன்றுக்கு ஒன்று அனுசரணை.
எங்க பக்கத்திலே ஐம்பது மற்றும் அறுபதுகளில் பிரபலமாயிருந்த PSG மோட்டாரையும், DPF பம்பையும் தூக்கிக் கொண்டு என்னை ரெம்ப தூரம் பயணப்பட வைத்தது வெட்டுப்புலி. எந்த வேத மந்திரங்களையும் விட தன்னுடைய கிணற்றில் ஓடிய மோட்டார் சத்தத்தை ஒவ்வொரு சம்சாரியும் மெய்மறந்து ரசித்தான். சாமிக்கு கோவில் கட்டுவது மாதிரி மோட்டாருக்கு மோட்டார்ரூம் கட்டினான். அதைத் தன் இன்னொரு இருப்பிடமாகக் கொண்டான். அதில் சந்தோஷமான நேரங்களில் தன் பெண்டாட்டியுடனோ, சில நேரங்களில் தொடுப்புடனோ சல்லாபித்தான். மோட்டார் திருட்டுபோனால் துப்புக்கூலி கொடுத்துமீட்டான். செலவுக்கு காசு இல்லாதபோது மோட்டார் மெக்கானிக்குகள் காயல் கருகுகின்றமாதிரி கள்ளத்தனம் செய்துவிட்டு நழுவ, கடன் வாங்கியோ, கடன்சொல்லியோ அவனிடமே காயில் கட்டினான். கோடையில் நீர் கீழிறங்கும் போது மோட்டாரைக் கீழிறக்கவும், மழைக்காலத்தில் அதை மேலேற்றவும் அல்லாடினான். அது எதுவும் வேண்டாம் தண்ணீருக்குள்ளே ஓடுகின்றமாதிரி சப்மெர்சிபிள் மோட்டார் வரவும், கோயம்புத்தூரை நோக்கி நன்றியுடன் வணங்கிவிட்டு அதை மாட்டிக்கொண்டான். பச்சைத் துண்டை போட்டுக்கொண்டு கூட்டம் கூட்டமாக ஜெயிலுக்குப் போய் இலவச மின்சாரத்தை வாங்கினான். நிலத்தடி நீர் கீழிறங்கவிட போர்போட்டு பூமியைத் துளைத்தான். அதிலும் மோட்டார் மாட்டி அந்த நீரை, வற்றிப்போன கிணற்றில் எடுத்துவிட்டு மறுநாள் நீர்பாய்ச்சினான். இலவச மின்சாரம் இவனுக்கெதுக்கு, அது இருக்கப்போய்த்தானே நிலத்தடி நீரை உறிஞ்சுகிறான் என்று அவனைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி மானங்கானியாய் பேசியவர்களைப் பார்த்து விக்கித்து நின்றான். கரண்ட் மோட்டார்களில் இந்த நாட்டை வசப்படுத்திய கோயம்புத்தூர், ஆயில் மோட்டார்களில் சறுக்கியதெப்படி? ஜெட்பம்ப் விஷயத்தில் மதுரை கோயம்புத்தூரைவிட வேகம் காட்டியது எதனால்?. இப்படியாக மோட்டாரைத் தூக்கிக்கொண்டு அலைந்தேன். இன்னும் இறக்கி வைக்க முடியவில்லை. பாவம் தமிழ்மகன். எத்தனை வருஷம் தீப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு அலைந்தாரோ? அவர் படைப்பாளி கடைசியில் அதை இறக்கி வைத்து விட்டார். என்னை மாதிரி ஆட்களுக்கு தூக்கத்தானே தெரிகின்றது. இறக்கி வைக்கைத் தெரியவில்லை. அதனால்தான் இந்த வம்பே வேண்டாமென்று நம்மில் பலபேர் எதையும் தூக்குவதில்லையோ என்னவோ?
குடுமியைப் பிடித்து கால எந்திரப் பயணம்.
வெட்டுப்புலியில் வரும் ஆண்களின் குடுமிகள் என்னை வெகுவாக அலைக்கழித்தது. வெள்ளைக்காரன் மாதிரி கிராப் வெட்டிக்கொள்ளாமல், ஈரோடும், பேனோடும் ஆண்கள் ஏன் அவதிப்படவேண்டும்?. ரங்காவரத்திலிருந்து, ஜெகநாதபுரத்திற்கு உறவாடி வந்திருந்த ருத்ராரெட்டிக்கு சவரம் செய்துவிட அமுட்டமூடு வருகின்றான். அப்பொழுது அக்கா-தங்கையான முத்தம்மாவும் மங்கம்மாவும் பேசிக்கொள்கின்றார்கள்.
“உங்களாவரு நல்ல வாட்டமா மொட்டைமாரி அடிச்சிக்கிறாரு. பேன் தொல்லை இருக்காது”. இது முத்தம்மா - ருத்ராரெட்டியின் பாரியாள்.
“நாத்தாங்கால் வுட்டு நாலு நாள் ஆனாப்ல இதோ இந்த அளவுக்கு வெட்டிப்பாரு” என்று ஒருவிரல் கடை அளவு காட்டினாள் மங்கம்மா, தசரத ரெட்டியின் பாரியாள்.
“எங்க வூட்லே நாலுபேரும் குடுமிதான். வேப்பெண்ணைய தடவினாலும் பேணு பிடிச்சுப் போவுது. அப்பப்ப ஒழுங்கா கசக்கினாத்தானே? சும்மாவே ஏரியில வுழுந்து எழுந்து வந்தா அப்பிடித்தான். வைத்தியருதான் (சிறுத்தை சின்னா ரெட்டி) கொஞ்சம் சுத்த பத்தமா இருப்பாரு” இது முத்தம்மா ருத்ரா ரெட்டியின் பாரியாள்
இந்தக் குடுமி விவகாரம், நான் எம்.ஏ படிக்கும் வரை உயிருடனிருந்த என் தாத்தாவின் குடுமியைப் பற்றிக்கொண்டு கால எந்திரப் பயணம் செய்ய வைத்தது. என் தாத்தா குடுமி வைத்திருந்தார். செக்கச் செவேலென்று ஆறடிக்கு மேல் கம்பீரமாக இருப்பார். படிக்கத் தெரிந்தவர். நாலு இடத்திற்குப் போய் வந்தவர். தவறான அறுவைச் சிகிச்சையால் கண் பார்வை இழந்தும், எங்களை பேப்பர் படிக்கச் சொல்லி நடப்புகளை அறிந்துகொள்ளும் ஆர்வம் அவருக்கிருந்தது. பார்வை இருந்த போது குமுதம், விகடன் கூட படிப்பார். கணக்குப் பேரேட்டில் அவரின் கையெழுத்து கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியாக அவ்வளவு அழகாக இருக்கும். 1976-ல் அவர் இறக்கும் வரை குடுமி வைத்திருந்தார். ஆனால் என் தாய்வழித் தாத்தா இதற்கு நேர்மாறானவர். குள்ள உருவம். ஆனால் கிராப் வைத்திருந்தார். என் தாய் ஊரில் வயதானவர்கள் யாரையும் நான் குடுமியோடு பார்த்ததில்லை. அந்த தாத்தா எதையாவது படித்தோ, எழுதியோ, யாரிடமும் விவாதத்தில் ஈடுபட்டோ பார்த்ததில்லை. விவசாயத்திலும், கால்நடைப் பாராமரிப்பிலும் நுணுக்கமானவர். சம காலத்தில் ஒரு எழுபது மைல் வித்தியாசத்திலிருந்த இருவருக்குள் எவ்வளவு வித்தியாசம்?. எனக்கும்கூட அரிச்சலா, நான் குழந்தையாயிருந்த போது, கொண்டையோடும் நாமத்தோடும் திரிந்தது நினைவுக்கு வருகின்றது. என் குடுமியைக் காலி செய்தது என் தாய்வழி உறவுகள்தான். வெட்டுப்புலியில் குடுமிகளைக் கண்டதும், என் தாத்தாக்களின் தலையில் இருந்த குடுமி/கிராப்புக்கு பின்னாலிருந்த வாழ்க்கை மதிப்பீடுகளை உணரத் தவறிவிட்டோமே என்று தவித்தேன். நம்மைநாமே ஊற்றுக் கவனிக்காமல், எல்லாவற்றையும் விட்டேத்தியாகப் பார்த்துப் பழகிவிட்டதால் ஏற்பட்ட சோகம் மனதைக் கவ்வியது.
ஆல், அரசு. வேம்பு. கருவேல் என்று குச்சி வச்சி பல்துலக்கினால் கல்லைக் கூட கடித்துத் தின்னலாம் என்று பழம் பெருமைப் பேச்சு வந்தபோது, காலத்திற்கேற்றாற்போல் சிந்தித்த உறவினர் ஒருவர், “:அத்தனை குச்சிகளையும் வச்சிக்கிட்டு ஊத்தைவாயோடு திரிஞ்சது எனக்கில்லை தெரியும். வொக்காளி! கோபால் பல்பொடி பொட்டணம் வந்தபிறகுதானே எல்லோரும் ஒழுக்கமா பல்தேய்க்க ஆரம்பிச்சோம். பல்பொடி வாங்கிப் போட்டே நான் நொந்துபோன. சிறுசுக பல்லு விளக்கிச்சா பொடியத் தின்னுச்சான்னு தெரியாம பாக்கட் பாக்கட்டா காலி செஞ்சது. இன்னும்கூட குச்சி கூதியண்ணு பேசிட்டு” அவர் ஆவேசப்பட்டதில் அர்த்தமிருந்தது. நேற்றைவிட இன்று முன்னகர்ந்திருக்கின்றோம் என்று நம்பியவர் அவர். அவரே இன்னொரு தடவை, “பாக்கட்டிலே மட்டும் ஷாம்பு அடைச்சி வராம இருந்திருந்தா, வொக்காளி ஊர்ப்பய தலையெல்லாம் நாறிப்போயிருக்கும்” என்று சிலாகித்தார். இவையெல்லாம் தீப்பெட்டி மாதிரி சின்னச்சின்ன விசயங்கள் தான். “நான் தீப்பெட்டியை மகிமைப்படுத்திவிட்டேன். அதைக் கொண்டாடிவிட்டேன். பல்பொடி, ஷாம்பு மாதிரி எத்தனையோ பொருட்கள் கொண்டாட்டத்துக்குரிய வஸ்துகள் தாம். முடிந்தால் கொண்டாடிப்பாருங்கள்” என்று தமிழ்மகன் வாசகனை உசுப்பேற்றுகின்றார். எத்தனை பேர் உசுப்பேறி அலைகின்றார்களோ தெரியவில்லை. ஆனால் நான் சுதாரித்துக்கொண்டேன். அழும் பிள்ளைகளை வண்டியில் வைத்து ஒரு ரவுண்டு காட்டி வருவது போல, ஏங்கிய மனசுக்கு குடுமிகளை ஒரு ரவுண்டு காண்பித்துவிட்டு ஒதுங்கிக்கொண்டேன். அவ்வளவுதான் என்னால் முடிந்தது. தமிழ்மகன் மாதிரி இலக்கியமா படைக்கமுடியும்?
முதலியாரின் வியர்வை
வெட்டுப்புலியில் வரும் ஊத்துக்கோட்டை ஆறுமுக முதலியார் சுய முயற்சியில் முன்னேறியவர். முப்பதுகாணி பட்டா நிலம். அதற்கு சமமாகச் சேர்த்துக்கொண்ட நிலம் வேறு. எண்ணை மண்டி, நெல், கொள் வியாபாரம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. அப்பொழுதே கையில் முப்பதாயிரம் வரைக்கும் ரொக்கம், சினிமா எடுக்க உத்தேசிக்கின்றார். சுயசம்பாத்தியம் தான். அவர் இஷ்டத்திற்கு எதையும் செய்யமுடியும்தான். இருப்பினும் மனைவி சுந்தராம்பாள் அனுமதித்தால்தான் செய்யவேண்டும் என்று விரும்புகின்றார். மனைவியை மதிக்கவேண்டும், அவளின் ஆலோசனையைப் பெறவேண்டுமென்று பிறர் சொல்லக் கேட்டு அப்படியெல்லாம் அவர் செய்யவில்லை. பொறுப்பான ஆண்களுக்கே இருக்கும் இயல்பூக்கம்.
ஒரு பகல் பொழுதில் தன் மனைவியுடன் சல்லாபிக்கின்றார். சல்லாபம் முடிந்து சுந்தராம்பாள் ஆறுமுக முதலி முதுகை வருடுகிறாள். முதுகில் வியர்வை. “இன்னா வேக்காடு? ஏதோ கட்டை பொளந்து போட்றா மெரி...யப்பா” என்று சலித்துக்கொள்கிறாள். மோரிஸ் மைனர் கார் வாங்கி ஒட்டுமளவு வசதி. ரைஸ் மில் வைக்குமளவு, சினிமா எடுக்குமளவு கையில் காசு இருப்பு. நமக்கே “என்ன முதலியாரே ஒரு பேன் வாங்கி மாட்டிக்கொள்ளக்கூடாதா? வியர்வையில் ஏன் இப்படி நனைய வேண்டும்? என்று கேட்கத் தோன்றுகின்றது. சினிமா எடுப்பது வேறு. சினிமாத்தனமான வாழ்க்கை என்பது வேறு என்று முதலி புரிந்திருந்தார். கடந்த கால வாழ்க்கை அப்படித்தான் ஓடியிருக்கின்றது.
நான் டிகிரி முடிக்கும் வரை எங்கள் வீட்டில் பனைநார் கட்டில் ஒன்றுதானிருந்தது. அதுகூட அடுத்தடுத்து பிரசவித்த அத்தைகள் குழந்தைகளுடன் படுத்துக்கொள்ள செய்தது. ஆனால் தசாவராத மரச்சிற்பங்களுடன் தோதஹத்தி மரத்தில் நேர்த்தியாக செய்யப்பட்ட குழந்தைகளுக்காகச் செய்த தொட்டில் இருந்தது. சேர், டேபிள் இருந்ததில்லை. ஊர் முழுக்க அப்படித்தான். ஆனால் அதையெல்லாம் செய்வதற்குரிய மரங்கள் இருந்தது. நுணுக்கமாக மரவேலை செய்யத்தெரிந்த தச்சர்கள் அருகிலே இருந்தார்கள். ஆனால் எதையும் செய்துகொள்ளத் தோன்றாமல் இருந்தார்கள். ஆளுயர உரலில் அதிகாலை எழுந்திருந்து அரைமூட்டை புன்னாக்கையும், பருத்திவிதையும் ஆட்டி மாடுகளுக்குக் நீர்விடத் தெரிந்த அவர்களால், மாவாட்டி இட்லி தோசை சாப்பிடத்தெரியவில்லை. கட்டில், நாற்காலி, மேஜைகளுக்கான தேவையை எப்போது, எதனால் உணர ஆரம்பித்தார்கள்? அதுவெல்லாம் வேண்டும் என்று அவர்களை உந்திய அந்த வினாடியை எப்படி காலங்கடந்து இப்போது தரிசிப்பது? தீப்பெட்டி மட்டுமல்ல, கால எந்திரப்பயணம் செய்யத் தீர்மானித்தால் நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல ஏராளமான பொருட்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளுடன் நம்மால் பயணிக்க முடிந்தால், நாம் வாழ்ந்த, வாழப் போகின்ற வாழ்க்கையைப் பற்றி புதிய தரிசனங்களை அவைகள் நிச்சயமாகத் தரும்.
திராவிடக் கண்ணாடியும், வெள்ளெழுத்துக்கண்ணாடியும்.
வெட்டுப்புலியை வேறு வழியில்லாமல் திராவிட இயக்க நாவலாக வடிக்க வேண்டியிருந்ததாக தமிழ்மகன் குறிப்பிடுகின்றார். “படிப்பவர்களும் திராவிடக் கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம்” என்று அவர் சொல்கின்றபோது சற்று பயந்தேன். ஆனால் அடுத்த வரியில் “முன்முடிவும் விரோத மனப்பான்மையும் இல்லாமல் வாசிக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டது எனக்கு ஆறுதலைத் தந்தது. ஏனெனில் நான் வெள்ளெழுத்துக் கண்ணாடி மட்டும் அணிந்திருப்பவன். திராவிடக் கண்ணாடி என்னிடமில்லை. லட்சுமணரெட்டி மனைவி விசாலாட்சி சொல்வதுமாதிரி, “மடத்துக்குப் போனாலும் சரி, திடலுக்குப் போனாலும் சரி அளவோடு இருக்கனும்” என்ற கருத்து எனக்குப் பிடித்தமானது. தியாகராஜன் மனைவி ஹேமலதா மாதிரி, “எதுக்கு மீட்டிங் வந்தவங்கோலாம் ஐயமாரை திட்டிகிணு இருந்தாங்க? வேறு வேலையே கிடையாதா?......ஐயருங்களைத் திட்றதை விட்டுட்டு நாமளும் அவங்க மாதிரி ஆனா என்னங்க? இது மாதிரி வெகுளித்தனமாகவும், சிலநேரங்களில் உசுப்பேற்றி விடவும் கேட்பேன். அது என்னை வரலாற்றுப் பிரக்ஞை இல்லாத பிறவியாக சிலரை எண்ணவைத்துள்ளது.
கடற்கரை மீனவர்களுக்குத்தான் சொந்தம் என்று ஒருமுறை விவாதம் வந்தபோது, என்னால் பேசாமலிருக்கமுடியவில்லை. “கடற்கரை மீனவனுக்குச் சொந்தம். காடு ஆதிவாசிகளுக்குச் சொந்தம். நிலம் உழுதவனுக்குச் சொந்தம். வீடு குடியிருப்பவனுக்குச் சொந்தம். அப்படியென்றால் என்னைமாதிரி ஆட்களுக்கு உங்க சாமானா சொந்தம்?” என்று கேட்டுவிட்டேன். ஒரு காலத்தில் வாழ்வாதார உத்தரவாதத்தின் பொருட்டு வேகமாக எழுந்த கோஷங்களை இன்னும் எத்தனை நாட்களுக்குப் போட்டுக்கொண்டிருப்போம்?. கட்டிதட்டிப் போயிருந்த சமூக அமைப்பையும், நிர்வாகத்தையும் நெகிழ்ச்சியுறச் செய்ய வலுவான கோஷங்களும், உயிர்களைப் பலிகொண்ட போராட்டங்களும் தேவைப்பட்டன. ஒரு காலகட்டம் உருவாக்கிய கருத்தாக்கங்களை, கோஷங்களை, உத்திகளை எந்த மாற்றமும் செய்யாமல், எல்லாக் காலத்திற்கும் செல்லுபடியாக்க நினைப்பது, பிடிவாதமன்றி வேறென்ன? நமது பிடிவாதம் மாறிவரும் பலவற்றை பார்க்க மறுத்து, புரிதலைத் தடுக்கும் என்றேன். கோபத்தில் வெற்றிலைச் சாறை ஹேமலதா முகத்தில் தியாகராஜன் துப்பிய மாதிரி, அவர்களால் என் முகத்தில் துப்ப முடியவில்லை மாறாக முன்பின் தெரியாதவர்களிடம் என்னைப் பற்றி தப்பபிராயத்தை விதைத்து விட்டார்கள். ஆனால், அவர்களுக்குத் தெரியாது, கணனியில் என்னுடைய கருத்துக்களை தமிழில் உள்ளிடும் ஒவ்வொரு முறையும், அந்த ஈரோட்டுப் பெரியவர் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவராமல் இருந்திருந்தால், இதுவெல்லாம் நமக்கு சாத்தியப்பட்டிருக்குமா என்ற நெகிழ்ச்சியுடனே உள்ளிடுகின்றேன் என்பது.
நடு இரவில் நகைகள் அணிந்த பெண் தனியாக சுற்றி வந்தால்தான் சுதந்தரம் என்ற காந்தியாரின் கருத்தின் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் அதற்கு மாறாக, பெண்கள் நகைகள் அணியாமல்-அலங்காரம் செய்யாமல்-ஆண்களைப் போல கிராப் வெட்டிக்கொள்ளவேண்டும் என்ற பெரியாரின் கருத்தின் மீது இன்னும் அதிக மரியாதை உண்டு. ஒவ்வொருவருக்கும் வரலாற்று உண்மைகளை அவரவர் ஆர்வங்களுக்கும், யூகங்களுக்கும் ஏற்ப புரிந்து கொள்ளும் உரிமை இருக்கின்றதல்லவா? அந்த உரிமை முன்னை விட பலதளங்களில் இப்போது மூர்க்கத்தானமாக மறுக்கப்படுகின்றது மாதிரி எனக்குப் படுகின்றது.
வெட்டுப்புலியில் சின்னச்சின்ன சம்பவங்களை தமிழ்மகன் மிக எதார்த்தமாகப் பதிவு செய்து செல்கின்றார். படிப்பவர் எல்லார் மனதிலும் ஒரே மாதிரியான மனவெழுச்சிகளை உருவாக்கியிருந்தால் அது திராவிட இயக்கப் பிரச்சாரமாகப் போயிருக்கலாம். ஆனால் தெரிந்தோ, தெரியாமலோ தமிழ்மகன் அப்படிச் செய்யவில்லை.
திராவிடஅரசியல் திராவிடசினிமாவின் தலைச்சன் குழந்தை
திரு. எஸ்.எஸ்.இராஜேந்திரனைப் பற்றி வரும் குறிப்புகள் என்னைக் கால எந்திரத்தில் பயணிக்க வைத்தாலும், அது எனக்கு அவ்வளவு சுகமானதாக இல்லை. திராவிட அரசியல் திராவிட சினிமா கூட்டணி பெற்ற முதல் குழந்தை அவர்தான். எஸ் எஸ் ஆர் தான் இந்தியாவிலே சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சினிமா நடிகர். என்னுடைய ஊரான தேனி தான் அந்த கௌரவத்தை அவருக்கு வழங்கியது. 1972 தேர்தல் நடந்தபோது மூன்றாவதோ, நான்காவதோ படித்துக்கொண்டிருந்தேன். எங்க ஊருக்கு இரண்டு மூன்று முறை பிரச்சாரத்திற்காக வந்தபோது அருகிலிருந்து பார்த்தவன். “என்னா நெறம்? என்னா பவுடரு? என்னா மேக்கப்பு? என்று பெருசுகள் வியக்கும்படி முழு ஒப்பனையோடு தான் வந்திருந்தார். நாம துடைக்கிற மாதிரி முகத்தை அழுத்தித் துடைக்காமல், கைத்துண்டை வைத்து முகத்தில் ஒற்றி, ஒற்றி எடுத்த அந்த காட்சி என் நினைவில் ஆழமாகப் பதிந்தது. அந்தக் காலகட்டத்தில் மதுரை மாவட்டத்தில் அசைக்க முடியாத காங்கிரஸ் ஆளுமையாக இருந்த தேனி என்.ஆர்.தியாகராஜனை வீழ்த்தவே எஸ்.எஸ் ஆரை களமிறக்கியதாகப் பின்னாளில் கேள்விப்பட்டேன். என்.ஆர்.தியாகராஜன் எங்கள் ஊருக்கு மிகப் பரிச்சயமானவர். சிலரின் குடும்ப விசேசங்களுக்குக் கூட வந்து செல்வார்.
எங்கள் ஊரில் செயல்பட்டுக் கொண்டிருந்த விவசாய சங்க ஆண்டு விழாவில் அவர் பேசியது எனக்கு இன்னும் நினைவிலிருக்கின்றது. “மூணு ஏக்கர், ஐஞ்சு ஏக்கர் வச்சிருக்கிற விவசாயிக்கூட, கோயம்புத்தூர், மெட்ராஸ் பக்கம் வீட்டில் லைட்டு, கிணத்துலே மோட்டார், சைக்கிள் என்று வசதியாக வாழ்கின்றான். சில பேர் மோட்டார் பைக் கூட வச்சிருக்காங்க. பத்து, இருவது, முப்பது ஏக்கர் வச்சிருக்கிற நம்மிடம் அந்த வசதியில்லை. அவன் பணப்பயிரா வெள்ளாமை செயிரான். நீங்களும் மாறனும். எதைப் பயிர் செஞ்சாலும் அதிகமா மகசூலெடுக்கணும். சங்க பொறுப்பாளர்கள் என்னை அடுத்து வந்து பார்க்கும்போது இந்த மாசம் புதுசா இரண்டு மூன்று மோட்டார்கள் எங்க ஊர்லே மாட்டியிருக்கின்றோம் என்று சொல்லணும். கிணறு வெட்டுங்க. இப்ப நில அடமான பேங்க்லே கிணறுவெட்ட, ஆழப்படுத்த கடன் கொடுக்குறாங்க. அடுத்த வருசத்திற்குள் இந்த ஊர்லே கமலை இருக்கக்கூடாது. இன்னும் நிறைய வீட்டிலே கரண்ட் இருக்கணும். நாலு பக்கம் போய்வர, நடந்து சாகாமலிருக்க, ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு, மூன்று சைக்கிள் இருக்கணும். எல்லாப் பிள்ளைகளையும் விவசாயத்தைப் பார்க்கவிடாமல், சிலபேரை படிக்க வைக்கணும்” என்றார். NRT என்று அழைக்கப்பட்ட என். ஆர். தியாகராஜன் இன்றைக்கு இல்லை. ஆனால் அவர் பேசியது நினைவில் உள்ளது. அவர் பேச்சின் எதிரொலியாக பலபேர் மோட்டார் வாங்கி மாட்டிக்கொண்டதும் நினைவில் உள்ளது.
சிறுவயதில் நான் பார்த்த அந்த எஸ்.எஸ்.ஆர் இன்றும் இருக்கின்றார். ஆனால் அவருடைய பவுடர் பூசிய அதீத ஒப்பனைதான் நினைவுக்கு வருகின்றது. அவர் அரசியல் பக்குவம் பெற்று, இன்னும் விரிவாக பல தளங்களில் பணியாற்ற அவருக்கு பலவாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் முக்கியமான அரசியல் திருத்தச் சட்டம் (பஞ்சாயத்து ராஜ்) பாராளுமன்றத்தில் தாக்கலாகி வாக்கெடுப்பு நடந்த போது, அந்தநேரம் பார்த்து SSR சிறுநீர் கழிக்க சென்று விட்டதால் அந்த சட்டத் திருத்தம் நிறைவேறாமல் போனதாக கேள்விப்பட்டபோது, முதன் முதலாக சட்டமன்றத்திற்கு அவரை அனுப்பி அழகு பார்த்த எங்கள் தொகுதி மீதும், எங்கள் மக்களின் மீதும் சிறுநீர் கழிக்கச் சென்றதாக துடித்துப் போனேன். கால எந்திரப் பயணத்தின் அனுபவங்களை அசைபோட்டுப் பார்த்தால், தமிழ்மகன் சொல்வது மாதிரி, “அப்பாவித்தனமான குடும்பங்கள் மட்டும் ஓர் இயக்கத்தின் வேர்களாக இருக்கவில்லை. அப்பாவித்தனமான சில தொகுதிகளும் அப்படி இருந்தது” என்பதையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
பிரமிக்க வைத்த பி&சி மில்
வரலாற்று உண்மைகள் அவரவர் ஆர்வங்களுக்கும் ஊகங்களுக்கும் ஏற்ப பதிவு செய்யப்படுகின்றது. புரிந்து கொள்ளப்படுகின்றது. சில நேரங்களில் நம்மையும் அறியாமலே சில உண்மைகள் பதிவு செய்யப்பட்டுவிடும். சின்னசின்ன விசயங்களைக் கூட வெட்டுப்புலியில் தமிழ்மகன் பதிவு செய்கின்றார். வெட்டுபுலியைப் பற்றிய விமர்சனமொன்றில், “எங்கே மா.பொ.சி? என்று ஒரு விமர்சகர் கோபமாகக் குறித்திருந்தார். மா.பொ.சிக்கு அந்த விமர்சகர் தந்த முக்கியத்துவத்தின் அடிப்படையில் எழுப்பப்பட்ட ஆதங்கம். எனக்குக் கூட இவ்வளவு மெனக்கெட்ட தமிழ்மகன் பஞ்சாயத்து தேர்தலைப் பற்றி சிலதைப் பதிவு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று நினைக்கத் தோன்றியது. நாம் ஆயிரம் ஆலோசனை சொல்லலாம். பின்னோக்கி நகர்வதற்கிணையாக பக்கவாட்டில் நகர்வதும் சிரமம்தான். இருந்தாலும், திராவிட இயக்க நாவலாக வடிக்கப்பட்ட வெட்டுப்புலியில், அதற்கு தொடர்பேயில்லாத பி & சி மில்லைப் பற்றி தமிழ்மகன் பதிவு செய்திருப்பது அவர் பதிவு செய்ய மறந்த பலவற்றிற்கு பிராயச்சித்தம் தேடித்தந்து விடுகின்றது. அது என்னை சுகமான கால எந்திரப் பயணத்திற்கு கூட்டிச் சென்றது.
பம்பு ஷெட் கனெக்க்ஷனுக்காக மெட்ராஸ் வந்த லட்சுமணரெட்டி ஆறுமுக முதலி மகன் சிவகுருவைப் பார்க்க நேரிடுகின்றது. லட்சுமணரெட்டி ஊத்துக்கோட்டையில் சிலகாலம் இருந்தபோது, சிவகுருவின் நிர்வாகத்தில் நடந்த முதலியாரின் டெண்ட் கொட்டகையிலிருந்த வள்ளி சாப்பாட்டுக் கடையில் வேலை பார்க்கின்றார். சிவகுரு அப்பொழுதே பொறுப்பற்று இருந்தவன். சினிமா எடுக்கின்றேன் என்று எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு இருக்கும்போது இந்த சந்திப்பு நடக்கின்றது. லட்சுமணரெட்டி தன் மாமனார் பி ஆண்டு சி மில்லில் வேலை பார்த்ததைப் பற்றி சொல்லும்போது, “பெரிய மில்லு. இர்வதாயிரம் பேர் வேல செயறான். அடடா..கம்பனி உள்ளயே கப்பல் போவுது. ரயிலு போவுது. அடேங்கப்பா இனிமே யாரலயும் அப்படி ஒரு மில்லு கட்டமுடியாது. மைல் கணக்கா இந்த நீட்டுக்கும் அந்த நீட்டுக்கும் கட்டி வெச்சிருக்கான்னா...” லட்சுமணரெட்டி பரவசப்பட்டு, தன் மாமனாரின் சொந்தக் கட்டடம் போலவே அந்த மில்லை விவரிக்கின்றார். ஐம்பதுகளில் இருபதாயிரம் பேர் வேலை பார்த்தார்கள் என்றால், அன்றைய மெட்ராஸ் ஜனத்தொகையில் இலட்சம் பேருக்கு மேல் அது ஜீவனமளித்திருக்கின்றது. மெட்ராசின் வளர்ச்சிக்கு அது அடிகோலியது. நாம் நினைவில் வைத்திருக்கும் எந்த தலைவரையும் விட, எந்த இயக்கத்தையும் விட மெட்ராஸ் வளர்ச்சிக்கும், விரிவுக்கும் அந்த மில்லின் பங்களிப்பு பெரிது.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரையும் கும்பகோணமும் மக்கள்தொகையைப் பொறுத்த மட்டில் ஓரளவு சமநிலையில் இருந்தது. ஆனால் மதுரை பாய்ச்சலெடுத்து முன்னேறியது. கும்பகோணம் பின் தங்கியது. அந்த முன்னேற்றத்திற்கு மீனாக்ஷி அம்மையின் அருள் என்பார்கள். அப்படியென்றால் கும்பகோணத்தில் இருக்கும் கோயில்களெல்லாம் சக்தியற்ற குட்டிச் சுவார்களா? அப்படி இல்லை. மதுரை பாய்ச்சலெடுத்ததற்குக் காரணம், ஹார்வி சகோதரர்கள் கட்டிய மதுரா கோட்ஸ் என்ற நூற்பாலைதான். அங்கும் இருபதாயிரம் தொழிலாளர்கள். மில்லுக்குள்ளே இரயில் போனது. ஹார்விபட்டி என்று ஒரு நகர் உருவானது. மதுரையில் மேலும் பஞ்சாலைகள் உருவாக, மதுரை ஒரு வணிக மையமாக உருவெடுக்க, தூங்கா நகர் என்று பெயரெடுக்க அந்த மில்லும் ஒரு காரணம். மில்லில் தீபாவளி போனஸ் போட்டால் மதுரை நகைக் கடைத் தெருவில் வியாபாரம் பிய்த்துக்கொண்டு போகுமாம். மதுரையை வளர்த்தெடுத்ததில் அதன் பங்கு அதிகம். அது அறம் வளர்த்த ஆலை. மதூரா கோட்ஸ் மாதிரி, டி.வி. சுந்தரம் ஐயங்கார், கருமுத்து தியாகராஜன் செட்டியார் பங்கும் மதுரையின் வளர்ச்சியில் முக்கியமானது. அவர்கள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு, மதுரை என்றால் அஞ்சா நெஞ்சன், அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் என்று நினைவு வருமாறு மாறிப்போனது ஒரு வரலாற்றுச் சோகமன்றி வேறென்ன? திராவிட இயக்க நாவலில் அழகிரியின் பெயர் விடுபட்டால், மதுரை பக்கம் வரமுடியாதென்று தமிழ்மகன் பயந்தாரோ என்னமோ – நாவலை முடித்த கடைசிப் பக்கத்தில் “அழகிரிதான் மினிஸ்டர்” என்று பதிவு செய்து தன்னை பாதுகாத்துக்கொண்டார்.
பி & சி மில் தொழிலார்கள்தான் தமிழகம் கண்ட பல தலைவர்களை தங்கள் தொழிற் சங்கங்கள் மூலம் அரவணைத்திருக்கின்றார்கள். கொச்சையாகச் சொன்னால் அன்னமிட்டு ஆதரித்திருக்கின்றார்கள். இனக்காவலர்கள், குடிதாங்கிகள், இடிதாங்கிகள், சமூகநீதிக் காவலர்கள், சிறுத்தைகள், புரட்சி புலிகள், தளபதிகள் என்று அடைமொழிகளோடு புறப்பட்ட தலைவர்களின் கவர்ச்சி வெளிச்சம் பலவற்றை மறைத்து விட்டது. சிலதை மறக்கும் போது “உபயமத்ததுகள்” வந்து அந்த இடத்தைப் பிடுங்கிக்கொள்ளும். அவர்களின் பிடியிலிருந்து, அது உருவாக்கும் மாயையிலிருந்து மீள வேண்டுமென்றால் வரலாற்றை மீளுருவாக்கம் செய்யவேண்டும் மெட்ராசின் வளர்ச்சிக்கு, விரிவுக்கு அடித்தளமிட்ட ஒரு ஆலையைப் பற்றி, லட்சுமணரெட்டியை சாக்காக வைத்து தமிழ்மகன் பிரமிப்பது அவரின் முதிர்ச்சியான வரலாற்றுப் பிரக்ஞையை காட்டுவதன்றி வேறென்ன? நன்றி தமிழ்மகன். மிக்க நன்றி.
இயல்பூக்கமும் அறிவூக்கமும்
வராலாற்றுச் சட்டகத்தில் வாழ்க்கையை பொறுத்தும் எழுத்தாளர்களுக்கு இருக்கும் கற்பனை சார்ந்த சுதந்திரம், சிலரின் வாழ்க்கையை வரலாற்றுச் சட்டகத்தில் பொறுத்துபவர்களுக்கு இருப்பதில்லை. பின்னதில் எதார்த்த எல்லைகளை மீறமுடியாது. வெட்டுப்புலி வரலாற்றுக் கற்பனையல்ல. It is an attempt to superimpose the history with the life actually lived by some. சிலவற்றைச் சொல்ல அசாதாரணமானவர்களின் பெயரைத் தமிழ்மகன் பயன்படுதினாலும், அவர்களை வெட்டுப்புலியின் கதாபாத்திரங்களிலிருந்து வேறுபடுத்தியே காட்டுகின்றார். வெட்டுப்புலியின் கதாபாத்திரங்கள் மிகச் சாதாரணமானவர்கள். சிறுத்தையை சின்னாரெட்டி வெட்டியதுகூட, சாகசத்தை விரும்பியல்ல, மாறாக தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் இயல்பூக்கத்தினாலேதான். சக மனிதர்கள் மீதான வாஞ்சையே அவரை கைராசிக்கார வைத்தியராக்கியது. சினிமா ஆர்வத்தில் தன் வைத்திய ரகசியத்தை இரண்டு ரூபாய்க்குச் சொல்லிவிடுமளவு அவர் சாதாரணமானவர்தாம். ஆனால் அவர்கள் மூலமாக தமிழ்மகன் காட்டும் வாழ்க்கை மதிப்பீடுகள் அசாதாரணமானவை.
வாழ்வின் உயர்வான மதிப்பீடுகளை மனிதர்கள் பல சமயங்களில் இயல்பூக்கமாக வெளிப்படுத்துகின்றார்களென்ன்பதே மானுடப் பிறவியின் அழகு. அந்த மதிப்பீடுகளைக் கற்றுக்கொடுக்க கல்வி நிறுவனங்களோ, குருநாதர்களோ, தலைவர்களோ தேவைப்படுவதில்லை. தசரதரெட்டியைப் பற்றிய குறிப்பில் “தெரிஞ்சோ தெரியாமலேயோ மனசில் தைரியமும், அதே சமயம் பழி பாவத்துக்கு அஞ்சுகிற தன்மையும் கொண்ட, தானே உருவாக்கிக்கொண்ட, தன்னுடைய வாழ்க்கை நெறிக்கு தன் பையன் லட்சுமணனால் குந்தகம் நேர்ந்துவிடக்கூடாதே” என்று அஞ்சுவதாகத் தமிழ்மகன் குறிப்பிடுவது அவர்கள் காட்டிச் சென்ற வாழ்க்கை மதிப்பீடுகளைத்தான்.
தேளு (தேன்மொழி) என்ற பறையர் சிறுமியிடம், “தேளு அந்தப் பானைல கொஞ்சம் கூழு இருக்கு. அதைக் குடிச்சிட்டு கழுவி வச்சிட்டுப் போறயா?” என்று தசரதரெட்டி சொன்னதைக்கேட்டு, “நாம் கஞ்சி குடித்த பானையை பறப்பிள்ளை தொடுவதா” என்று கோவித்துக்கொண்டு சென்ற பாலகிருஷ்ணரெட்டியைச் சட்டை செய்யாமல், ”நாய்க்கு ஊத்தினாலும் பரவால்லே. மனுசனுக்கு ஊத்தக் கூடாதன்றானே...எவன்யா சொன்னா இவங்கிட்டே இப்படி” என்று தசரதரெட்டி சொல்வது படித்தறிந்ததனால் வந்ததல்ல. அதே மாதிரி லட்சுமணன் பறையர் பெண் குணவதியிடம் காதல் கொண்டு, அவளுடைய தாய் நாகரத்தினத்தை அக்கா என்றும், தருமனை மாமா என்று அழைப்பதும், குணவதி சுட்டிக்காட்டியதால் மட்டுமல்ல. காதல் மயக்கத்தினால் மட்டுமல்ல. அப்படித்தான் சகமனிதர்களை அழைக்கவேண்டும் என்று அவனுக்குள்ளிருந்த மதிப்பீடு சட்டென்று மேலோங்கியதால்தான். அதுதான் பின்னாளில் பறையர் தெரு வழியாக லட்சுமணரெட்டியைச் செல்ல வைக்கின்றது. அவர்கள் தோள் மேல் கைபோட்டு பேச வைக்கின்றது. அவர்களிடம் தண்ணீர் வாங்கிக் குடிக்கச் சொல்கின்றது. அவரின் இந்த மனோபாவமே அவரை பெரியாரிடம் ஈர்க்கின்றது. தசரதரெட்டி மற்றும் லட்சுமணரெட்டி கதாபாத்திரங்களை தமிழ்மகன் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கின்றார்.
இந்த இயல்பூக்கம்தான் கடந்த காலத்தில் மாற்றங்களை முன்னெடுத்துச் சென்றது. சமூகத்தை முன்னகர்த்தியது. இந்த முன்னகர்வு மெதுவாகச் சென்றதாக நினைத்தவர்கள், முன்னகர்வை/மாற்றங்களை துரிதப்படுத்த நினைத்தவர்கள் கோட்பாடுகளை உருவாக்கினார்கள். இயக்கம் கட்டினார்கள். வெட்டுப்புலியில் இயல்பூக்கமாக எழுந்த மாற்றங்களும், இயக்கம் கட்டி எழுப்பிய மாற்றங்களும் மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. தசரதரெட்டியும், ஆறுமுக முதலியும், லட்சுமண ரெட்டியும் இயல்பாகப் பூத்தவர்கள். கணேசன் அவருடைய இருமகன்கள் – நடேசன், தியாகராஜன், லட்சுமணரெட்டியின் மகன் நடராஜன், மருமகன் பாலு இயக்கங்களால் கவரப்பட்டு, அறிவிலிருந்து பூத்தவர்கள். தமிழ்மகனும் இதில் எது பெரிது என்று எந்த இடத்திலும் சொல்ல முற்படவில்லை. அதுதான் எதார்த்தம்.
தசரதரெட்டி- லட்சுமணரெட்டியென்ற குதிரைகள்.
புத்தகத்தைப் படித்துமுடித்து அதை மீண்டும் அசைபோட்ட போது, வெள்ளைக்காரன் ஜேம்ஸின் குதிரையை லட்சுமணன் ஒட்டுவதாக வெட்டுப்புலியைத் தமிழ்மகன் தொடங்கியது அவரின் படைப்பியல் திறன். வெட்டுப்புலியில் குறிக்கப்பட்ட பயண சாதனங்களில் – குதிரை, மாட்டுவண்டி, சைக்கிள், ட்ராம், ரயில், பஸ், கார், லாரி, ஏரோபிளான் – இவைகளில் குதிரையைத் தவிர மற்றது அனைத்திற்கும் ஏதோ ஒருவகையில் முன்னரே போடப்பட்ட வழித்தடங்கள் தேவைப்படுகின்றது. தடங்கள் இருக்கும் பட்சத்தில் பயணம் வேகமானதாக இருக்கும். குதிரை மட்டும்தான் அது செல்லும் பாதையையே தடமாக்கிச் செல்லும். தசரதரெட்டியும், லட்சுமணரெட்டியும் ஒருவகையில் குதிரை போன்றவர்கள். அவர்கள் யார் போட்ட தடத்திலும் பயணப்படவில்லை. அவர்களுக்கான தடத்தை அவர்களே உருவாக்கிக் கொண்டவர்கள். அவர்களுடைய வாழ்வின் மதிப்பீடுகள் இயல்பூக்கமாகவே வருகின்றது. கடவுளைக் கருவியாக வைத்தே ஏற்றத்தாழ்வுகளை நிரந்தரப்படுத்துகின்றார்கள் என்ற கருத்தாக்கம் இவர்களின் வாழ்க்கையில் பொய்யாகின்றது. வெள்ளையர்கள் பற்றி, ஜமீன்தார் பற்றி, பிராமணர்கள் ஆதிக்கம் பற்றி தசரதரெட்டியின் கருத்துக்கள் அனுபவம் சார்ந்தவை. குளித்துவிட்டு நெற்றி நிறைய விபூதி பூசிக்கொள்ளும் பழக்கத்திற்கும், தற்போதைய பாஷையில் சொல்வதென்றால் ஹிந்துத்துவ சம்பிரதாயத்திற்கும், பறையர்களை தீண்டத்தகாதவர்களாக வைத்திருப்பதற்கும் சம்பந்தமில்லை என்று காட்டுவதாகவே அவர்களின் ஆன்மீகம் இருந்ததாக நான் புரிந்துகொண்டேன்.
அய்யா பெருசா? அம்மா பெருசா?
தியாகராஜன் ஹேமலதா திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கலும், நடராஜனுக்கு ஏற்பட்ட நிலையும் நம்மை சிந்திக்க வைக்கின்றது. தியாகராஜனும் சரி, நடராஜனும் சரி அடிப்படையில் சுயநலமில்லாத, சமூகத்தை முன்னகர்த்திச் செல்ல விருப்புடையவர்கள். மதம், அது சார்ந்த நம்பிக்கைகள், அதுசார்ந்த மனிதர்கள் குறிப்பாக பிராமணர்கள் அதற்குத் தடையாக இருப்பதாக உணர்ந்தது அவர்களுடைய நேரடி அனுபவமில்லை. அவர்களுக்கு அப்படிச் சொல்லப்பட்டது. அவர்களுடைய பிராமணத் துவேஷம் இயல்பூக்கமல்ல. மாறாக அறிவூக்கம். அதனால்தான் ஒருகட்டத்தில் பார்ப்பனனைப் பழி சொல்லிக்கொண்டிருப்பது தப்பிக்கும் குணம் என்று தியாகராஜன் உணர்கின்றான். தேவையற்ற துவேசத்தை விட்டொழிக்கின்றான். ஹேமலதா அதற்கு மாறான குணம் கொண்ட வஞ்சகமில்லாத வெகுளி. அதனால்தான் மறப்பதற்கும், மாறுவதற்கும் ஒரு வினாடி போதும் என்று அவர்களால் காட்டமுடிகின்றது. அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பத்தையோ, தன் சகோதரன் நிலைகண்டு நிலைகுலைந்த நாகம்மா சாய் பக்தையானதையோ ஆன்மீகம் பகுத்தறிவை வென்றதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. தியாகராஜனுக்கு, நடராஜனுக்கு சொல்லப்பட்ட இல்லை அவர்கள் புரிந்துகொண்ட பகுத்தறிவு சமூக முன்னகர்தல் பற்றியது. சமூக முன்னகர்வைவிட மன அமைதி பிரதானமாகத் தேவைப்பட்டபோது தியாகராஜன் அன்னையிடம் அடைக்கலமாவதும், நாகம்மை சாய் பக்தையாவதும் மிக இயல்பானது. அது யாரும், யாரையும் வெற்றிகண்டதாக ஆகாது. “எது பெரிது? என்று விவாதம் நடக்கும் போதெல்லாம், களப்பணியின் போது ஒரு கிராமத்தில், “போங்கடா உங்க கட்சியும், கடவுளும் – TVS 50 கொடுத்த சுகத்தைக்கூட அவங்கலாள கொடுக்க முடியலே” என்று முற்றுப்புள்ளி வைத்த பெயர் தெரியாத மனுசனின் குரல் மட்டும் நினைவுக்கு வந்துவிடும்.
எத்தனை சூழ்ச்சி? எத்தனை சூது? எவ்வளவு துவேஷம்?
வெட்டுப்புலியில், தமிழ்மகன் தன் படைப்பின் உச்சத்தைத் தொடுவது கிருஷ்ணப்ரியா நடராஜன் உரையாடல் மூலம்தான். கிருஷ்ணப்ரியா பிராமணப் பெண். நடராஜனுடன் MPhil படிப்பவள். நடராஜனே உணர்ந்தமாதிரி அரசகுமாரிபோல் அழகுடையவள். ஆனால் நடராஜனுக்கோ அவள் பிராமணப் பெண்ணாயிருப்பதால் துவேஷம். விலகியே நிற்கின்றான். தன்னிலை விளக்கமாக அவள் தன்னைப் பற்றி நடராஜனிடம் சொல்வது பிராமணத் துவேஷம் கொண்ட யாரையும் சற்று சிந்திக்கவைக்கும். “எங்க அப்பா கோயில் குருக்கள். அவர் கொண்டாற பிரசாதம்தான் எங்களுக்குச் சாப்பாடு. அண்ணா ஏற்பட்டு வேலைக்குப் போனப்புறம்தான், எல்லார் போலவும் காலையில, ராத்திரியெல்லாம் சாப்பிட்டோம். நா எங்க வீட்லே காபி குடிச்சது அஞ்சாங்கிலாஸ் முடிச்ச பின்னாடிதான்”....”எனக்குத் தெரிஞ்சு நானோ, எங்கப்பாவோ, அண்ணனோ, எங்கம்மாவோ யாரையும் சின்னதா தொந்தரவு செஞ்சது கிடயாது”....”ஆனா நீங்கள்லாம் பிராமானாள்னா ஏதோ சூழ்ச்சி செஞ்சு கெடுக்க வந்தவான்னே பாக்கறீங்க. எங்க குடுமபத்தில அந்த மாதிரி ஒரு சூழ்ச்சியும் செஞ்சதில்லே” நடராஜன் தன்னை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்கல்ல, ஒரு சகமனிதனிடமிருந்த தேவையற்ற துவேசத்தைப் போக்குவதற்காக கொடுக்கப்பட்ட விளக்கம். அதை நடராஜன் புரிந்து கொள்ளும் பக்குவத்தில் இல்லை. ஆனால் நிச்சயமாக, அது அவன் தாத்தா தசரதரெட்டியும், அப்பா லட்சுமணரெட்டியும் காட்டிய வழியல்ல.
தியாகராஜனும் ஹேமலதாவும் ரோட்டில் கார் ஓட்டியவர்கள். தேவை ஏற்பட்டபோது அவர்களின் வண்டியைத் (வாழ்க்கை) திருப்பிக்கொள்ள முடிந்தது. ஆனால் நடராஜன் தண்டவாளத்தில் ஓடிய ரயில். நினைத்த மாதிரி திரும்ப முடியவில்லை.
இந்தத் துவேஷம்தான் நாம் தீர்க்க நினைக்கும் பிரச்சனைகளை விட மோசமானது. அது இன்னும் ஆழமாக பல்வேறு தளங்களில் இன்று வேரூரின்றி விட்டது. ஆரியச் சூது, காலனியாதிக்கச் சூது, பன்னாட்டு நிறுவனங்களின் சூது என்பது உண்மையாகக் கூட இருக்கட்டுமே. ஆனால் அதை மிகைப்படுத்தி, நம்மை அச்சுறுத்தி, நம் பார்வையைத் திசை திருப்புவதுகூட, நம்மாலே சரிசெய்துகொள்ளக்கூடிய பலவற்றில் நம்மை ஈடுபடாமல் தடுக்க நம்மவர்களே செய்யும் சூழ்ச்சி போல் தெரிகின்றது. இந்த சூழ்ச்சிச் சூத்திரத்தின் வணிக வடிவம்தான்... குழந்தைகளை தரையில் தவழவிடாதீர்கள்....அக்குழந்தையைத் தாக்க கோடிக்கணக்கான வைரஸ்கள் உங்கள் வீட்டுத் தரையில் காத்திருக்கின்றன.... உங்கள் கழிப்பறையில் உங்களை நிலைகுலைக்க கிருமிக்கூட்டம் கூடாரமிட்டிருக்கின்றது.... தெருவிலிருக்கும் தூசியிலிருக்கின்றது உங்கள் பேரழகைச் சீர்குலைக்கும் கிருமிக் கூட்டம்..... இவைகளிலிருந்து பாதுகாக்கவே நாங்கள் பொருட்களைத் தயாரிக்கின்றோம். “நாங்க இருக்கின்றோம்” என்று நெஞ்சில் கைவைத்துச் சொல்வதும், “பத்திரமா பாத்துக்குங்க” என்ற பாசக் குரலும் பயமுறுத்தலையே உத்தியாகக் கொண்டிருக்கும் சமூக, அரசியல் இயக்கங்களின் வணிக நீட்சிதானே?
சின்னச் சின்ன உரையாடல்கள், சம்பவங்கள் மூலமாக தமிழ்மகன் நமது சிந்தனையைக் கிளறுகின்றார். அப்படியெல்லாம் கிளறவேண்டும் என்று தீர்மானித்து அவர் செய்யவில்லை. சம்பவங்களும், உரையாடல்களும் எதார்த்தமாக அப்படித்தான் நடந்திருக்கும். ஆனால் அது படிப்பவனைப் படுத்தியெடுக்கின்றது.
முப்பதுகளிலே சின்னாரெட்டியின் பையன்கள் ஓடியாடி தேடிய சம்பாத்தியத்தை நிலம் வாங்குவதில் முதலீடு செய்ய, அந்த நிலத்திலும் விதைப்பாடாக இல்லாமல் நடவு நட்டி வெள்ளாமை செய்ததால் எரு பத்தாமல் போய்விட்டதாக சின்னாரெட்டி புலம்புகின்றார். மாறிவரும் வாழ்க்கையின் ஏதார்த்தம் சின்னாரெட்டி தனக்குத்தானே பேசிக்கொள்வதிலிருந்து தெறித்து விழுகின்றது. “எல்லோருக்கும் நெல்லுச் சோறு சாப்பிட ஆசை வந்துவிட்டது. நாலு ஏக்கராவது நடவு செய்ய வேண்டும். எரு பத்தவில்லை.. கிடயமத்தணும்... ஐம்பது ஆடு வச்சிருக்கவன் பெரிய வருவாய்க்காரனாகி விட்றான். ஒரு ராத்திரி மந்தை மடக்க பத்தானா கேக்றான். இவன் என்னவோ களத்தில் இறங்கி அண்டை கழிக்கிற மாதரி கூலி பேசறான். இங்கே இல்லையென்றால் எங்காவது ஓரிடத்தில் ஆடுகளை மடக்கி இருக்கவைக்கப் போறான். அங்கயும் அவை புடுக்கை போதும். புடுக்கை போடாம இர்க்குறதுக்கு மிஷினா வச்சிருக்கான். அவனுக்கு வந்த வாழ்வு. அதில் வசூல் செய்து விடுகிறான்” ......கடைசியில் முத்தாய்ப்பாக “அப்படித்தான் ஒரு தொழிலைத் தொட்டு ஒரு தொழில் வளரவேண்டியிருக்கின்றது” என்று முடிக்கின்றார்.
நெல்லுச்சோறு சாப்பிட ஆசையை வளர்த்து, விதைப்பாடாக இல்லாமல் நடவுநட்டி வெள்ளாமை செய்ய நம் விவசாயிகளைத் திசைதிருப்பி, எருவைத் தட்டுப்பாடாக்கி, கடைசியில் யூரியா போடவைக்க எப்படியெல்லாம் பிராமணர்களும், வெள்ளையர்களும், பன்னாட்டு நிறுவனங்களும் கூட்டுச் சதியில் ஈடுபட்டிருப்பார்கள்?. அப்படித்தானே பசுமைப்புரட்சி கூட சர்வதேசச் சதியாக குறிக்கப்படுகின்றது. கோவணத்தைக் கட்டிக்கொண்டு, கூலை மட்டும் குடித்துக்கொண்டிருந்த அந்த பொற்காலத்திலிருந்து சதிசெய்தல்லவா நாசகாரக் கும்பல் நம்மை இந்த நிலைக்குத் தள்ளிவிட்டார்கள்?. நம்மைச் சுற்றி நமக்கே தெரியாமல் நாள்தோறும் சதிவலை பின்னப்படுவது மாதிரியான பிரேமை ஆழ விதைக்கப்பட்டிருப்பது பெரிய சோகம். இந்த சூழ்ச்சிகளைப் பற்றி புதுப்புது விளக்கங்களுடன் சுருதி குறையாமல் சொல்லிவருவது அச்சமூட்டுகின்றது. இதை மறுக்கக் கூடவேண்டாம், ஒப்புக்கொள்ளாமலிருந்தால், ஆதரவாகக் கையைத் தூக்காமலிருந்தால் கூட அவன் இனத்துரோகி. பார்ப்பனனுக்கு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வால் பிடிப்பவன் என்று முத்திரையிடப்படுவது அதனிலும் பெரிய அவலம்.
கொசஸ்தலை ஆற்றைப் பார்க்கும் லட்சுமணரெட்டி, ஆற்றுநீர் காற்றில் சுருண்டு கிடக்கும் போர்வை போல் மெலிந்து கிடப்பதைப் பார்த்து விசனப்படுகின்றார். மணல் குவாரி ஏலம்விட்டதால் ஆற்றின் தன்மையே மாறிவிட்டது தெரிகின்றது. ‘தெளுக்க இருந்த மணல்’ இருபது முப்பது அடி ஆழத்துக்குப் போய்விட்டதையும், ஆங்காங்கே ‘களிப்புத் திட்டுகள்’ தெரிய ஆரம்பித்துவிட்டதையும் கவலையுடன் பார்க்கின்றார். அவருடைய கிணற்றிலே முப்பது அடிக்கும் மேலாக நீர் கீழிறங்கி விட்டதை உணர்கின்றார். மணல் குவாரி ஏலம் விட்டபோது ஊருக்கு வருமானம் என்று நினைத்தவிஷயம், இப்போது ஊருக்கு நஷ்டமாக மாறிவிட்டதும் தெரிகின்றது.
லட்சுமணரெட்டி தத்வார்த்தமாக யோசிக்கின்றார். எல்லா நல்ல விஷயங்களின் முடிவிலும் ஒரு தீமை காத்திருப்பதுபோல, எல்லா தீமையின் எல்லையிலும் ஒரு நன்மை இருப்பதை உணர்கிறார். ஒரு செயல் அதனுடைய வளர்ச்சியினாலே வேறுபட்டு விலகிப்போய் முரண்பட ஆரம்பிக்கின்ற விந்தையை அவர் திராவிட இயக்கங்களோடு ஒப்பிட்டு உணர்கிறார். மணல் குவாரியை ஏலம் எடுத்திருந்த தன் சினேகிதரான மணி நாயுடுவிடம் சொல்லி மணல் அள்ளுவதை நிறுத்தச் சொல்லவேண்டும் என்று முடிவெடுத்து அவரைப் பார்க்கின்றார்.
மணிநாயுடுவோ, “நான்தான் காண்ட்ராக்ட் எடுத்தேண்ணு பேரு. இதில எத்தனை பேருக்கு பங்கு போவுது தெரீமா? அத நிறுத்துனா அத்தன பேரும் மேலே வுழுந்து பாய்வானுங்கோ..என்னோட எல்லா பிசினஸையும் பாதிக்கும் ரெட்டியாரே.....எம் பையன் மாளிவாக்கம் இஸூகூல் கட்றதுக்கு காண்ட்ராக்டு எடுத்துட்டான். அத அப்படியே விட்டுட்டு வாடாண்ணு சொல்லமுடியுமா? அதுக்கு கமிஷன் வெட்டனும். கொடுத்த கமிஷனை எடுக்க இன்னொர் காண்ட்ராக்டு எடுக்கணும். அப்படித்தான் ஆளை அப்பிடியே இஸ்துக்குனு போவுது...சட்டன்னு நின்னுட முடியுமா?..... எம்.எல்.ஏ, சேர்மேன், தாசிலு, ஆர்.ஐ எவ்ளோ பேரு இதிலே சம்பந்தப்பட்டிருக்கான்னு நினைக்றே. நீ....நீ பாட்டுக்கு சுளுவா சொல்லிட்டே.....நாளயலிருந்து நிறுத்திடுன்னு. இன்னும் ஒரு வருஷம் காண்ட்ராக்டு இருக்குது. அதக்கப்புறம் வேணா நா உட்டூர்றேன். ஒண்ணு வேணா எழுதி வச்சுக்கோ. வேற ஒருத்தன் ஏலம் எடுப்பான். அவங்கிட்டே போயி நீ இப்படியெல்லாம் உக்காந்து பேசமுடியாது. ருசி கண்டுட்டானுங்கன்னா விடுவானுங்களா? என்று சொல்கின்றார். நண்பர் சொன்ன எதார்த்தம் முகத்தில் அறைந்தது மாதிரி இருக்கின்றது. எந்தச் சூழ்ச்சி கொசஸ்தலை ஆற்றில் மணலை அள்ளச் சொன்னது? மணி நாயுடுவை அப்படிப் பேசவைத்தது? எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு லட்சுமணரெட்டி மௌனம் சாதித்தது இயலாமையினாலா அல்லது அவர் ஏதாவதொரு சூழ்ச்சியின் கைக்கூலியாகி விட்டதாலா? சம்பவங்களைத்தான் தமிழ்மகன் சொல்லிச் செல்கின்றார். நமக்குத்தான் ஆயிரம் கேள்விகள்.
கல்லூரியில் படித்தபோது தியாகராஜன் சமூகப் பிரக்ஞை கொண்ட ஒரு அற்புத ஆளுமையாக உருவாகிவந்தான். பேராசிரியர்களை கேள்விகளால் மடக்கினான். தமிழ் மன்றப் பொருப்பெடுத்து, உருவாகி வந்த தலைவர்களுடன் தோளுரசினான். அப்படிபட்டவனுக்கு ஹேமலதா மனைவியாக வாய்த்தபோது, அவள் தனக்கு மனைவியானதுகூட “பிராமணச் சூழ்ச்சியோ” என்று சந்தேகித்தான். அப்படியென்றால் தூத்துக்குடி மணிகண்டனை ஹேமலதாவுடன் சேர்த்தது எந்தச் சூழ்ச்சி?. மணிகண்டனின் சூழ்ச்சியால் சாராயம் விற்க, அது போலீஸ் கேசாகின்றது. ஸ்டேஷனில், ஹேமலதாவின் கையில் குத்தப்பட்டிருந்த அண்ணா உருவப் பச்சையைப் பார்த்த கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டரிடம் “சார் இவள் அண்ணா உருவத்தை பச்சை குத்தியிருக்கின்ற தமிழ்ப்பெண். இவளை விட்டுவிடலாம்” என்று சொல்லவில்லை. மாறாக “சார். பச்சை குத்தியிருக்கா....இவ மதுசூதனன் ஆளாகக் கூட இருக்கலாம்” என்று கான்ஸ்டபிள் எச்சரிக்க, அதனால் ஹேமலதாவை விட்டுவிடுவது, ஆயிரம் கேள்விகளை எழுப்புகின்றது. ஆரியச் சூழ்ச்சியைச் சொன்ன அண்ணாவின் பச்சைக்கு இல்லாத மரியாதை மதுசூதனனுக்கு கிடைப்பது எதனால்? யாருடைய சூழ்ச்சியால் அங்கே அண்ணா உதாசீனப்படுத்தப்பட்டு, மதுசூதனன் முன்னிற்க முடிந்தது? ஆரியச் சூழ்ச்சி என்பதே நீர்த்துபோன கருத்தாக்கமாகி விட்டதா? சின்னச் சின்ன சம்பவங்கள். உரையாடல்கள் தாம். ஆனால் தமிழ்மகன் நம் பொட்டிலடிக்கின்றார். வலிக்கத்தான் செய்கின்றது. அதை ஆரியச் சூழ்ச்சி என்று முத்திரை குத்தினால் வலி இருக்காதுதான். ஆனால் நமக்கே தெரியும். அது நாமே விரித்துக்கொண்ட வலையென்று. வலி பொறுத்துத்தான் ஆக வேண்டும். .
நாம் விதைத்த துவேசமே இன்று டிராகுலா மாதிரி பிடித்துக்கொண்டு நம்மை விடமறுக்கின்றது. வெட்டுப்புலியைப் பற்றிய இந்த வாசிப்பனுபவத்தை எழுதிக்கொண்டிருந்தபோது ஒரு நண்பர் வந்திருந்தார். என்னை விட அதிக தமிழிலக்கியப் பரிச்சயம் உள்ளவர். பொட்டிலடித்தாற்போல “நீ எழுதுவதையெல்லாம் எவனும் படிக்கமாட்டான். ஏன் தமிழ்மகனே படிக்கமாட்டார்”. மாறாக, “ஏய்! தமிழ்மகனே! திராவிட இயக்க நாவலென்ற பெயரில் ரெட்டியையும், பெட்டியையும் எழுதியிருக்கின்றாய். இப்படி ஒரு குப்பையை எழுதுவதற்கு உனக்கு யார் தைரியம் கொடுத்தது? ரெட்டி வந்தேறிகளைப் பற்றி எழுதும் நீயும் வந்தேறியா? என்று அவர் தொடர்ந்தபோது, “ஐயோ! இது தெலுங்கு ரெட்டியில்லை, தமிழ் பேசும் வன்னிய ரெட்டி” என்று நான் திருத்தமுயன்றபோது, “ரெட்டியன்னா தெலுங்கு என்றுதான் எடுத்துக் கொள்வார்கள். சும்மா வந்தேறி, சோம்பேறி, துத்தேறி என்று போட்டுத்தாக்கு. அப்படியென்றால்தான் நாலுபேர் படிப்பான். காரம் காட்டு. துவேஷத்தைக் கக்கு. அப்படி எழுதினால்தான் நீ படிக்கப்படுவாய். பாராட்டப்படுவாய்” என்றார். அதுதான் நடைமுறையாகி வருகின்றது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஏதோ விளையாட்டாக எழுத ஆரம்பித்த இந்த வாசிப்பனுபவம் இவ்வளவு நீளும் என்று நானே அறியவில்லை. ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தொழில் ரீதியான வியாதி (Occupational Hazard) உண்டு. அது ஆலைத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் பொருந்தும். வெட்டுப்புலியைப் படிக்கப் படிக்க இந்த academic concept ஐ விளக்க இந்த உரையாடலை, இந்த சம்பவத்தை உதாரணம் காட்டலாமே என்று என்னை யோசிக்க வைத்தது. சமூக மாற்றத்தை, அதன் அழகோடும், அவலட்சனத்தோடும் எதனோடும் சமரசம் செய்துகொள்ளாமல் தமிழ்மகன் ஆவனப்படுத்தியிருப்பது மாதிரிதான் என் குறைந்த வாசிப்புப் பழக்கத்திலிருந்து நான் உணர்ந்து கொண்டது.
வெட்டுப்புலியில் நான் இரசித்த, என்னைச் சிந்திக்கவைத்த உரையாடல்களும், சம்பவங்களும் நிறையவே உள்ளன. இதற்கு மேல் இதை நீட்டினால், வாசிப்பனுபவம் என்ற எல்லை கடந்து அது வரலாறு, இலக்கிய விமர்சனமாகிவிடும் ஆபத்து இருக்கின்றது. நான் விமர்சகனல்ல. அப்படி இருக்கவும் நான் விரும்பியதில்லை.
வெட்டுப்புலியில் குறிக்கப்படும் ஊர்கள் எல்லாம் உண்மையானவை. அதை கூகுள் மேப்ஸ்லில் காணலாம். ஒரு மேப்ஐ (வரைபடத்தை) வைத்து, எந்தெந்த இடங்களில் என்னென்ன சம்பவங்கள், உரையாடல்கள் நடைபெற்றது என்பதைக் குறித்தால் நாவலை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள வாய்ப்பாயிருக்கும். வெட்டுப்புலியில் குறிக்கப்படும் ஜெகநாதபுரம் கூகுள் மேப்ஸ்லில் அருமையாகத் தெரிகின்றது. ஆனால் ரங்காவரம் குறிக்கப்படவில்லை.. ரங்காவரம் என்று தேடினால், விக்கிமேப்பில் செல்வம் என்பவரின் வீட்டைக் காட்டுகின்றது. அருகிலிருக்கும் மீன் குஞ்சு பொரிப்பகம் ரங்காவரத்தை மறைத்து வைத்துள்ளது ஊத்துக்கோட்டை இன்று பெரிய நகராகிவிட்டது. சென்னை நகரத்தில் கதைக்களனை வரைபடத்தில் தேடுவது பரிச்சயமுள்ளவர்களுக்கு எளிது. முழு நாவலையும் ஒரு வரைபடத்தின் மூலமாக எளிமையாக விளக்கலாம் என்றே படுகின்றது. அதையொட்டி என் புரிதலுக்காக நானே செய்துகொண்ட சின்ன முயற்சியே இந்த வரைபட்ம்.
padamசென்ற வருடம் கிழக்குப் பதிப்பக பத்ரியவர்களுடன், திருமழிசைக்கு அருகிலுள்ள ஜமீன் கொரட்டூர் என்ற ஊரில் கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்கள் நடத்திய கிராம முகாமில் கலந்து கொண்டேன். வெட்டுப்புலியை சென்ற வருடமே படித்திருந்தால் நிச்சயமாக, ஜமீன் கொரட்டூர் அருகிலிருக்கும் பூண்டி ஏரியையும், ரங்காவரத்தையும் நிச்சயமாகப் பார்க்கப் போயிருப்பேன். ஜெகநாதபுரத்தையும், ரங்காவரத்தையும் நான் நெருக்கமாக உணர்வதால் அங்கு ஒருமுறை போய்வரவேண்டும் என்ற ஆவல் எழுகின்றது.

வெட்டுப்புலி பொருளடக்கம்
வெட்டுப்புலியில் இது மாதிரியான பொருளடக்கம் தரபடவில்லை. எண்கள் கொண்டே தலைப்புகள் அடையாளப்படுத்தப்படுகின்றது. நான் தான் எனது புரிதலின் பொருட்டு ஒவ்வொரு அத்தியாயத்தின் உள்ளடக்கத்தை வைத்து தலைப்பு கொடுத்துள்ளேன். ஒவ்வொரு வாசகருக்கும் அவர்கள் புரிந்துகொண்ட உள்ளடக்கத்தை பொறுத்து இந்த தலைப்புகள் மாறலாம்.
நாற்பதுகள்
பக். 17-20
1.லட்சுமணனின் குதிரையேற்றம் -21-29
2. சிறுத்தை சின்னாரெட்டி பற்றி மங்கம்மா லட்சுமனனிடம் சொல்லல் 30-39
3.மைலாப்பூர் உறவு 40-46
4.படவேட்டான் 47-54
5.படவேட்டான் சிலை கொண்டுவருதல் 55-63
6.லட்சுமணன் ரங்காவரம் புறப்படுதல் 64-71
முப்பதுகள்
78-80
1.வைத்தியர் சின்னாரெட்டி அறிமுகம் 81-88
2.லட்சுமணன் பிறத்தல் ருத்ராரெட்டி முத்தம்மா ஜெகநாதபுரம் வருகை  89-99
3. தசரத ரெட்டி முத்தம்மா மனத் தடுமாற்றம் 100-103
3.ருத்ராரெட்டியும் முத்தம்மாவும் ரங்காவரம் திரும்பல் 104-106
4.ஊத்துக்கோட்டை ஆறுமுக முதலியார் 107-112
5.ஆறுமுக முதலியின் சினிமா ஆசை. 113-122
6.ஆறுமுக முதலியை அலைக்கழித்த சினிமா ஆசை 123-128
7.ஆறுமுக முதலி சினிமா எடுக்க அலைதல் 129-135
8.சின்னாரெட்டி சிறுத்தையை வெட்டுதல் 136 -139
மீண்டும் நாற்பதுகள்
143-144
1.ஆறுமுக முதலி அண்ணன் கணேசன் ஊத்துக்கோட்டை வருதல் 145-151
2.சத்தியமூர்த்திக்கு கருப்புக்கொடி 152-159
3 .ரங்காவரத்தில் லட்சுமணன் - பூண்டி ஏரிப்பணி 160-164
4. லட்சுமணன் குணவதி காதல் 165 -169
5. ஜாதி பேதங்களைப் பற்றி லட்சுமணன் பிரக்ஞை 170-176
6.காதல் வெளிப்பட களேபரம்.177-187
7.குணவதியைத் தேடி ஊத்துக்கோட்டையில் லட்சுமணன் 188-194
ஐம்பதுகள்
197-199
1.நடேசனும் தியாகராஜனும் (ஆறுமுக முதலியின் அண்ணன் மகன்கள்) 200-205
2.லட்சுமண ரெட்டியும் மணி நாயுடுவும் 206-212 
3.லட்சுமண ரெட்டி- விசாலாட்சி திருமணம் 213-217
4.பெரியாரின் மனவோட்டம் 218-224
5.சிவகுரு சினிமா எடுத்தல் 225-230
6.சிவகுரு சினிமா எடுத்து நொடித்தல் 231-234
7.சிவகுருவும் லட்சுமண ரெட்டியும் சந்தித்தல்
அறுபதுகள்
241-242
1.தியாகராஜன் ஹேமலதா கல்யாணம் 243-249
2.தியாகராஜன் ஹேமலதா தம்பத்யம் 250-254
3.நாகம்மாவை படிக்க வைக்க லட்சுமண ரெட்டி தீர்மானித்தல்  255-259
4.மெட்ராஸில் லட்சுமண ரெட்டி - மாமனாரும் மருமகன் லட்சுமனரெட்டியும் 260-266
5. ஏ.ஜி.எஸ் ஆபீசில் தியாகராஜன் 267-270
6.மாம்பலம் சிவா விஷ்ணு கோவில் முன்பு சிவகுரு 271-௨௭௩
எழுபதுகள்
276-277
0.பெரியார் திடலில் லட்சுமனரெட்டியும் சௌந்தரபாண்டிய நாடாரும் 278-283
1.நாகம்மா திருமணப் பேச்சு 284-288
2.எமர்ஜென்ஸியும் தியாகராஜனும் 289-292
3.தியாகராஜன் ஹேமலதா-மணிகண்டன் மற்றும் குழந்தை 293-298
4.லட்சுமண ரெட்டி மகன் நடராஜனும் மருமகன் பாலுவும் 299-304
5.மீண்டும் எ.ஜி.எஸ்சில் தியாகராஜன் 305-308
6.கொசஸ்தலை ஆற்றின் கரையில் லட்சுமணரெட்டியின் நினைவலைகள் 309-313
7.லட்சுமணரெட்டியும் கணக்குப் பிள்ளையும் 314-319
8. தியாகராஜன் ஹேமலதா மாறிய நெஞ்சங்கள் 320-324
9. நடேசன் -ரேணுகா 325-328
எண்பதுகள்
331-333
1.பச்சையப்பன் கல்லூரியில் நடராஜன் -ஈழ ஆதரவு 334-337 
2.நடராஜனும் கிருஷ்ணப்பிரியாவும் 338-345
தொண்ணூறுகள்
349-351
1.வண்ணத்திரை இதழில் நடேசன் மகன் ரவி
பத்தாயிரம் முதல் பத்து
361-362
1.நியூயார்க்கில் நாகம்மை மகன் தமிழ் 363-368  
2.நடராஜனின் துயரம் லட்சுமண ரெட்டியின் இறுதி 369-373
பத்தாயிரம் 2009
ஏர்போர்ட்டில் கனிமொழி
எனக்குத் தெரியாது. தமிழ் எழுத்தாளர்களில் தமிழ்மகன் எந்த இடத்தை வகிக்கின்றார் என்பது. சில தமிழ் எழுத்தாளர்கள் போல் பிரபலமானவர் இல்லாததுபோல்தான் தெரிகின்றது. வெட்டுப்புலியை நான் படிக்க நேர்ந்ததும் விபத்துதான். ஆனால் வெட்டுப்புலி எனக்கு நிறைவான வாசிப்பனுபவம் தந்தது. தமிழ்மகனை நான் இப்போது எனக்கு மிக நெருக்கமானவராகவும், மரியாதைக்குரியவராகவும் உணர்கின்றேன்.

வியாழன், ஏப்ரல் 11, 2013

ஒரு இந்திய கிராமத்தின் கதை





இன்றைய முதல்வரும் சூப்பர் ஸ்டாரும் வசிக்கும் கேளம்பாக்கம், நான்கு தலைமுறைகளுக்கு முன்பு எப்படி இருந்தது? கூத்தாடிகளும் பாம்பாட்டிகளும் குறிசொல்லிகளும் மோடிவித்தைக்காரர்களும் கடந்து செல்லும் ஒரு எளிமையான கிராமமாக இருந்தது.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களுக்கு நம் இந்திய கிராமங்களைப் புரிந்துகொள்வதற்குத் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டி இருந்தது. இந்திய கிராமங்களைப் புரிந்துகொள்வதற்கு இத்தகைய புத்தகங்களை நாடினர். ஆங்கிலம் தெரிந்தவர்களை வைத்து அந்தந்தப் பகுதியின் நம்பிக்கைகளை, கலாசாரங்களை, பழக்க வழக்கங்களை, பொழுதுபோக்கு அம்சங்களைப் புத்தகங்களாகப் பெற்றே மெள்ள மெள்ள புரிந்துகொள்ள முயன்றனர்.
தமிழக கிராமங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள எழுதப்பட்டப்புத்தகமே இது. கேளம்பாக்கம் கிராமம்.
தோட்டக்காடு ராமகிருஷ்ணப் பிள்ளை பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
இவர் ஆங்கிலத்தில் நூல்கள் படைக்கும் திறமைபெற்றவர். பத்மினி: டேல் ஆஃப் இந்தியன் ரொமான்ஸ் என்ற நாவல் இந்திய அளவில் எழுதப்பட்ட இரண்டாவது நாவல். ஆனால் பதிவு செய்யப்படாத எத்தனையோ ஆவணங்களில் ஒன்றாக இதுவும் காலவெள்ளத்தில் ஓரங்கட்டப்பட்ட உண்மையாக நிற்கிறது என்கிறார் இதன் பதிப்பாசிரியர் ரெங்கையா முருகன். இந்திய அளவில் முதலில் ஆங்கிலத்தில் நாவல் எழுதியவர். கிருபாபாய் சத்தியானந்தன் எழுதிய கமலா என்ற நாவலை முதல் நாவலாகக் குறிப்பிடுபவர்கள் ஒரு தமிழர் எழுதிய இதை இரண்டாவது நாவலாகக் குறிப்பிடுவதில்லை.
நூலில் மந்திரத்தால் மாங்காய் செடி உருவாக்கி, அதில் மாம்பழமும் காய்க்க வைக்கும் மேஜிக் காட்சியை நூலாசிரியர் விவரிப்பது விறுவிறுப்பானது. பிய்ந்துபோன ஒரு மாங்கொட்டையைக் கூடைக்குள் கவிழ்த்துவைத்து அது துளிர்க்க ஆரம்பித்து, வளர்ந்து, காய்த்துப் பழுக்கிற வரைக்கும் படிப்படியாக மக்களுக்குக் காட்டி ஆர்வம் ஊட்டுவார்கள் மோடிவித்தைக்காரர்கள். விறுவிறுப்பான சிறுகதைபோல அதை விவரித்து இருக்கிறார். கிராமத்தில் நடைபெறும் கூத்துபற்றி விஸ்தாரமான ஒரு பகுதி நூலில் வருகிறது. மகாபாரதக் கிளைக் கதை ஒன்றை முழுதுமாகவே சொல்லி இருக்கிறார்.
பாம்பாட்டிகள் விஷம் உள்ள பாம்புகளைக் கையில் வைத்துக்கொண்டு அதற்கு முத்தம் கொடுப்பதும் அதைக் கையில் கொத்த வைத்து விஷத்தை முறித்துக்காட்டுவது அச்சமூட்டும் ஆபத்தான விளையாட்டாக இருந்தது என்கிறார் ராமகிருஷ்ண பிள்ளை.



தோட்டக்காடு ராமகிருஷ்ணன்
பதிப்பாசிரியர் ரெங்கையா முருகன்
தமிழில்: ச. சரவணன்

விலை: 110
பக்.160
சந்திய பதிப்பகம்
புதிய எண்: 77, 53-வது தெரு, 9-வது அவென்யூ,
அசோக் நகர், சென்னை- 83.
தொலைபேசி:044-24896979.


சனி, மார்ச் 16, 2013

கோவை... கோவை ஞானி.. குற்றச்சாட்டு




கோவையில் வனசாட்சி நாவலுக்கு அறிமுக விழா நடத்துவதாக அறிவித்த நண்பர் நந்தகுமார் பத்தாயிரம் பரிசும் தந்து பெருமைப்படுத்தினார். விழாவில் கோவை ஞானி, எஸ்.வி.ராஜதுரை, மலையக்த் தமிழர் இயக்க அமைப்பாளர் மு.சி.கந்தையா மூவரும் விமர்சனத்தோடு கூடிய அறிமுகத்தை நடத்தினார்கள்.
விஜயா வேலாயுதம், திலகபாமா, சுப்ரபாரதி மணியன், நிர்மால்யா, பால.நந்தகுமார் ஐவ‌ரும் நாவலின் நிறைகளை நிறையவே சொன்னார்கள்.
விழாவில் எழுந்த விமர்சனத்துக்கு என்னுடைய ஏற்புரையில் பதில் சொன்னேன்.
நாவல் சொல்லும் காலகட்டத்தில் ஹட்டனுக்கும் நுவரெலியாவுக்கும் ரயில்பாதை போடப்பட்டுவிட்டதாக மு.சி கந்தையா சொன்னார்.

நாவலில் கதை மாந்தர்களின் உரையாடல்கள் மூலமாகவே காலகட்டத்தை உணர்த்த முயன்று இருக்கிறேன். வேலூரில் சிப்பாய் போராட்டம் நடந்து எண்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்னமும் வெள்ளைக்காரனை விரட்ட முடியவில்லையே என்று பேசுவார்கள். ஹட்டனில் ரயில்பாதை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருவதாகவும் இன்னும் சில ஆண்டுகளில் பணி முடிந்துவிடும் என்றும் பேசுவார்கள்.
வேலூரில் சிப்பாய் போராட்டம் நடந்தது 1807‍ல் அப்படியானால் 1890 களில் அவர்கள் பேசிக்கொள்வதாக வைத்துக்கொள்ளலாம். 1890களின் கடைசியில்தான் ஹட்டனில் ரயில்பாதைப் பணி முடிந்தது.
வரலாறு கதாபாத்திரங்களின் உரையாடல் மூலமாக நகர்வதால் சில வரலாற்றுச் சம்பவங்களை ஆண்டு, தேதி வாரியாக எதிர்பார்க்க வேண்டியதில்லை என்றேன்.

நாடு சுதந்திரம் அடைந்ததும் நாவல் ஒரு பாய்ச்சலாக அறுபதுகளுக்கு வந்துவிடுவதாக அவர் சொன்னார்.

நாவலின் முதல்பகுதி இங்கிருந்து மக்கள் இலங்கையின் தோட்டத்தை அடைவதைச் சொல்கிறது. இரண்டாவது பாகம் அங்கிருந்து அவர்களில் பாதிபேர் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பட்டதைச் சொல்கிறது. அதாவது 1964‍ல் சீறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் விலைவாக ஒரு பகுதி மக்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பப்படுவதைச் சொல்கிறேன். முழுவரலாறையும் சொல்வது என் நோக்கம் அல்ல. அப்படிச் சொல்வதானால் நான் ஒரு வரலாற்று நூலையே எழுத ஆரம்பித்திருக்கலாம். வரலாற்றுப் புனைவு வரலாற்றை சிதைக்காமல் அதனுடைய அனுமதியோடு அதைக் கதைப்படுத்துவதுதான் என்று நான் நினைக்கிறேன் என்பதைச் சொன்னேன்.


எஸ்.வி.ராஜதுரை பேசும்போது சிறீமா சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி மக்களைப் ப்ரித்தபோது குடும்பங்கள் எதுவும் ப்ரிக்கப்படவில்லை என்றார். என் நாவலில் ஒரு குடும்பம் இந்தியாவுக்குக் கிளம்பும்ப்போது அந்தக் குடும்பத்தின் மூத்தமகளுக்குக் கடவுச் சீட்டு வரவில்லை என்பதால் நிறுத்திவைக்கப்படுவாள். இப்படி நடக்க வாய்ப்பு இல்லை என்றார்.
இலங்கையில் இப்படி பிரிந்துபோன குடும்பங்கள் பற்றி ஈராஸ் அமைப்பினர் வெளியிட்ட 20ம் நூற்றாண்டின் நவீன அடிமைகள் நூலில் விலாவாரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாவைச் சந்திரன் எழுதிய ஈழப் போராட்ட வரலாறு நூலிலும் இணையத்தில் பல ஆராய்ச்சியாளர்கள் எழுதிய கட்டுரைகளிலும் இலங்கையில் எம்.பி.யாக இருந்த சி.வி.வேலுப்பிள்ளை எழுதிய நாடற்றவர் கதை நூலிலும் இலங்கை எழுத்தாளர் சாரல் நாடன் நூலிலும் தகவல்கள் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இந்தத் தகவல்களுக்கு இதுவரை யாருமே மறுப்பு சொன்னதில்லை. அந்தத் தகவல்கள் தவறு என்றால் அதை இனிமேல்தான் மறுக்க வேண்டியதாக இருக்கும்.

கோவை ஞானி வைத்தது விமர்சனம் அல்ல, குற்றச்சாட்டு.
நாவலின் மூன்றாம் பாகம் நாவலுக்கு தேவையே இல்லாதது என்றார்.
'அந்தப் பகுதியில் மூன்று கோமாளிகள் வருகிறார்கள். இந்த நாவலுக்கு அந்தக் கோமாளிகளுக்கும் என்ன சம்பந்தம்' என்றார்.
இந்த உலகமே கோமாளிகளின் கூட்டமாக இருக்கும்போது நாவலில் மூன்றே மூன்று கோமாளிகள் வருவது தவறில்லை என்று நினைக்கிறேன் என்றதோடு டால்ஸ்டாய், நிகலோய் கோகல், ஆன்டன் செகாவ் கதைகளில் சீரியஸான விஷயங்கள் கோமாளிகளைக்கொண்டு நகர்த்தப்படுவதைச் சொன்னேன். அதுவுமில்லாமல் அவர் சொல்வதுபோல என் மூன்றாவது பாகத்தில் மூன்று கோமாளிகள் இடம்பெறவில்லை. ஒரே ஒரு கோமாளிதான். மற்ற இருவரும் அவனிடம் சிக்கிக்கொண்டு இருக்கும் அப்பாவிகள்.
நாவலின் கடைசி பகுதியில் இலங்கையில் நடந்த இறுதிப்போர் (இன்னொரு போர் வராதா என்ன? ப‌லரும் இறுதிப் போர் என்றே முடிவாக எழுதுகிறார்கள்.)காட்சிகள் சிலவற்றை எழுதினேன். அதை அவர் ரசிக்கவில்லை. மலையக மக்களுக்கும் இறுதிப்போரில் பெரும்பங்கு இருந்தது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்பியே நாவலை அப்படி நகர்த்தினேன் அன்று விளக்கம் கொடுத்தேன்.

நான் பத்திரிகையாளனாக இருப்பதால்தான் இப்படி கதை நீர்த்துப்போனது என்றார்.பத்திரிகையா, எழுத்தா என்று அவர் விரைவில் முடிவு செய்ய வேண்டும் என்றார் முத்தாய்ப்பாக.
பத்திரிகையாளனாக இருந்து எழுதியதுதான் வெட்டுப்புலி, ஆண்பால் பெண்பால் நாவல்கள்.. அவையெல்லாம் மிக அற்புதமானவை என்று அவர் பாராட்டினார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நான் பத்திரிகையாளந்தான். வாழ்வின் பெரும்பகுதி இது. இதில்தான் நான் இத்தனையும் எழுதினேன்.
தவிர, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, சி.சு.செல்லப்பா போன்ற பலரும் பத்திரிகையாளர்களாகவும் இருந்தவர்கள்தான்.
‍இந்தக் குற்றச்சாட்டை அவர்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மலையக் மக்களின் துயரத்தைப் பற்றி 70 ஆண்டுகளுக்கு முன் புதுமைப்பித்தன் துன்பக்கேணி என்ற கதையை எழுதினார். அதன் பிறகு தமிழ்மகன்தான் வனசாட்சி என்று ஒரு பதிவைச் செய்திருக்கிறார் என்று ஆரம்பத்தில் மு.சி. கந்தையா சொன்னார்.
''இப்படியெல்லாம் விமர்சனம் செய்தால் யார் எழுத வருவார்கள்? என்று வேடிக்கையாக சொல்லி முடித்தேன்.





சுப்ரபாரதிமணியன் எழுதியிருக்கும் செய்திக்குறிப்பு

செவ்வாய், மார்ச் 05, 2013

அழைப்பு

வணக்கம் நண்பர்களே,
வரும் 9-ம் தேதி மாலை 6 மணிக்கு கோவையில் என் வனசாட்சி நாவலை அறிமுகப்படுத்த முக்கியமான படைப்பு ஆளுமைகள் இசைந்துள்ளார்கள். கோவை ஞானி, எஸ்.வி.ராஜதுரை, சுப்ரபாரதிமணியன், நிர்மால்யா, விஜயா பதிப்பகம் வேலாயுதம், திலகபாமா, மு.சி.கந்தையா, பால நந்தகுமார் போன்ற பலர் அதில் பேசுகிறார்கள்.
பால நந்தகுமார் எனக்குக் கிடைத்த அரிய வாசகர். அவருடைய முயற்சியில்தான் அங்கு விழா ஏற்பாடுகள் நடக்கின்றன. தன் மகளுக்குத் திருமணம் செய்யும் கவனத்துடன் அவர் விழா ஏற்பாடுகளை செய்கிறார்.
அவர் தொடங்கியிருக்கும் மலைச் சொல் என்ற கலை, பண்பாட்டு சமூக அமைப்பின் முதல் நிகழ்வு இது.
வந்து வாழ்த்தி, விவாதிக்க வேண்டுகிறேன்.
இடம்: மெட்ரோ பார்க் இன், ராஜவீதி.

ஞாயிறு, பிப்ரவரி 10, 2013

அமரர் சுஜாதாவும் மகா பெரியவரும் பின்னே தமிழ்மகனும்



நேற்று (பிப்.10) மாலை 6 மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் அமரர் சுஜாதா என்ற என் அறிவியல் புனைகதை தொகுப்பின் அறிமுகவிழா. எழுத்தாளர்கள் கவிதா பாரதி, அமிர்தம் சூர்யா, சந்திரா, ராஜுமுருகன் நூலைப் பற்றி பேசினார்கள். நான் நன்றாகத்தான் எழுதிக்கொண்டு வந்திருக்கிறேன் என்பதை என் வெவ்வேறு கால கட்டக் கதைகளை எல்லாம் சுட்டிக்காட்டிப் பேசியபோது உணர முடிந்தது.


எழுத்தாளர் அஜயன் பாலா என்னோடு அவருக்கு இருக்கும் 20 ஆண்டுகால நட்பைப் பற்றிப் பேசினார். எழுத்தாளர் என்றாலும் நூலை வெளியிட்டவர் என்ற முறையிலேயே அவருடைய பேச்சு இருந்தது. என்னிடம் இருந்து அறிவியல் புனைகதைகளை வாங்கி வெளியிட்டதற்கான காரணத்தைச் சொன்னார். ‘விஞ்ஞான கதைகளை மிகச் சிலரே எழுதுகிறார்கள். சுஜாதாவுக்குப் பிறகு எனக்குத் தெரிந்து தமிழ்மகன்தான் எழுதிவருகிறார். அதனால்தான் புத்தகத்துக்கு ‘அமரர் சுஜாதா’ என்று பெயரிட்டு.. கீழே தமிழ்மகன் என போட்டேன். முதன் முதலில் என்னை உலக சினிமா பற்றி எழுத வைத்தவர் தமிழ்மகன்தான். வண்ணத்திரை இதழில் பணியாற்றியபோது, ‘பேட்டல் ஷிப் ஆஃப் பொட்டாம்கின்’ படத்தைப் பற்றி இவர் எழுதிய செய்தியைப் படித்துவிட்டு அப்போது குங்குமம் பப்ளிகேஷன் இதழ்களின் ஆசிரியராக இருந்த முரசொலி மாறன் அழைத்து அதைப் பெரிய கட்டுரையாக எழுதச் சொன்னார். அதன் பிறகு தமிழ்மகன் தினமணியில் சேர்ந்தார். அங்கும் என் உலக சினிமா கட்டுரைத் தொடர் தொடர்ந்தது. உலக சினிமா என்ற நூலை எழுதுவதற்கு அவர்தான் முதல் காரணமாக இருந்தார்’ என்று ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து வந்தவர்கள் எல்லாருமே கிட்டத்தட்ட வார்த்தைக்கு வலிக்காமல் பேசுபவர், மிகவும் நல்லவர் என்று சில நிமிடங்கள் என்னைக் குறித்து பேசிவிட்டு பிறகுதான் என் நூலை அலச ஆரம்பித்தனர். நூலை ‘வெளி’ ரங்கராஜன் வெளியிட (என்ன ஒற்றுமை?), பெற்றுக்கொண்டார் கவிஞர் கடற்கரய்.
கடற்கரய் பார்வையாளராக வந்தவர்தான். அவரையும் பேசச் சொன்னார்கள். ‘தமிழ்மகனுக்காகத்தான் முதுகுவலி இருந்தும் வெகுதூரத்தில் இருந்து வந்தேன். உடம்பு ஒத்துழைக்கவில்லை என்றாலும் மனம் ஆர்வமாக இருந்ததால் கிளம்பி வந்துவிட்டேன். தமிழ்மகன் வயது வித்தியாசம் பார்க்காமல் பழகக் கூடியவர். கடும் விமர்சனங்களை முன் வைத்தாலும் அதை புன்முறுவலோடு ஏற்றுக்கொண்டு எப்போதும் போல பேசுவார்’ என்றார்.
எனக்கு மணிவிழா, பொன்விழா போல ஏதோ நடக்கிறதோ என இருந்தது. எல்லோருமே என்னை குறிவைத்து பாராட்டினர். எல்லோரும் கலந்துபேசி ஒரு முடிவுடன் வந்தது மாதிரி இருந்தது. அதை நானே மறுபடி தொகுத்து எழுதுவதால் கொஞ்சம் கட்டுப்படுத்தித் தந்திருக்கிறேன்.
அமிர்தம் சூரியா ஏறத்தாழ எல்லா கதைகளையும் பட்டியல் போட்டு அலசினார். ‘இந்த நூலை நான் வெளியிட்டு இருந்தால் மகா பெரியவரும் அமரர் சுஜாதாவும் என பெயரிட்டு இருப்பேன். மகா பெரியவர், சுஜாதா இருவருமே நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்கள். அவர்களை மையப்படுத்திய கதைகள் இடம்பெற்று உள்ளன. மகா பெரியவர் என்ற கதை பேசும் அரசியல் நுணுக்கமானது. கல்கியில் மகா பெரியவரின் தத்துவங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். மகா பெரியவரின் தத்துவங்களை அதிகம் படித்த நவீன எழுத்தாளன் என்ற முறையிலும் இந்த நூலுக்கு அந்தத் தலைப்பு மிக பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து’’ என்றார்.
இயக்குநர் கவிதா பாரதியும் எனக்கும் அவருக்குமான இருபது ஆண்டுகால நட்பில் இருந்தே பேச்சைத் தொடங்கினார். ‘‘உங்களுக்கெல்லாம் தெரிந்த தமிழ்மகனுக்கு சற்று முந்தைய தமிழ்மகனை எனக்குத் தெரியும். எண்பதுகளின் மத்தியில் பேராசிரியர் சுப.வீரபாண்டியனோடு இணைந்து சிவாஜி கணேசன் நடித்த ‘முதல்குரல்’ படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபட்டோம். அதோடு அவரை பத்திரிகை உலகுக்கு அழைத்து வந்தவன் நான்தான். போலீஸ் செய்தி பத்திரிகையில் உதவி ஆசிரியராக வேலைக்குச் சேர்த்தேன். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து எழுதிக்கொண்டு வருபவர். சிறப்பான படைப்புகளை வழங்கியவர். அவருக்கான அங்கீகாரத்தை எழுத்துலகம் வழங்கவில்லை. இத் தொகுப்பிலே நோக்கம் என்ற சிறுகதை, ராமர் கட்டிய சேது பாலத்தையும் மகாத்மா காந்தி வளர்த்தெடுத்த காங்கிரஸ் இயக்கத்தையும் மிக சாமர்த்தியமாக இணைக்கிறது. சீதையை மீட்டு வருவதற்காக கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் பாலம் அது உருவாக்கப்பட்ட நோக்கம் முடிந்து இன்னும் பிரச்னையை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. சுதந்திரம் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட காங்கிரஸ் இன்னமும் இருந்துகொண்டு பிரச்னையை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது என்று இணைக்கிறார். தமிழ்மகன் அறிவியல் புனைகதைகளில் சுஜாதாவைப் போல என்றார்கள். சுஜாதாவின் புனைகதைகளில் இதுபோன்ற அரசியல் நுணுக்கங்கள் இருக்காது. அப்படியே இருந்தாலும் அது இவர் பேசும் அரசியலாக இருக்காது. ஒரு தீப்பெட்டிக்குள் நிகழ்கால சரித்திரத்தை அடைத்துத் தந்தார். ஆண்பால் பெண்பால் நாவலில் குடும்பச் சிக்கலில் எம்.ஜி.ஆரை புகுத்தினார். சம்பந்தமில்லாத இரண்டை சம்பந்தப் படுத்தும் ஆச்சர்யங்கள் இவருடைய கதைகள்’’ என்றார்.


சந்திரா பேசும்போது, ‘‘இந்த நூல் நேற்றுதான் என் கைக்குக் கிடைத்தது. நான்கு கதைகளைத்தான் வாசிக்க முடிந்தது. இவை வழக்கமாக நான் வாசிக்கும் கதைகளைப் போல இல்லை. சுவாரஸ்யமான கதைகளாக இருந்தன. முதலில் கதைகளைப் படிக்காமல் எப்படி விழாவுக்கு வருவது என நினைத்தேன். தலைவலியாகவும் இருந்தது. படிக்க ஆரம்பித்ததும் தலைவலி போய்விட்டது. திருவள்ளுவர் பற்றிய வீடு கதை, பல சரித்திர காலகட்டங்களைச் சொல்கிறது. அறம், பொருள், இன்பம் எழுதிய திருவள்ளுவர், இமயமலைக்குச் சென்று ‘வீடு’ என்ற அதிகாரத்தை எழுதுகிறார். அவர் திரும்பி வருவதற்கும் அவர் இறந்துவிட்டதாக முடிவு செய்துவிடுகிறார்கள். தான் எழுதிய வீடு அதிகாரத்தை உலகுக்கு வழங்க அவர்படும் துன்பம்தான் கதை. எளிமையான மொழியில் பல விஷயங்களைச் சொல்லிச் செல்லும் கதை அது’’ என்றார்.
ராஜுமுருகன் என்னுடைய எளிமையை சொல்லிவிட்டு கதைகளுக்கு வந்தார். ‘‘இவருடைய அறிவியல் கதைகள் பேசும் அரசியல் அசாதாரணமானது. இவருடைய வெட்டுப் புலி, ஆண்பால் பெண்பால் நாவல்கள் பேசும் அரசியல் இந்த அறிவியல் கதைகளில் இருக்கிறது. கேப்ரியல் கார்ஸிய மார்க்வெஸ§க்கான இடத்தை இவருக்கு எழுத்துலகம் தந்திருக்க வேண்டும்’’ என்றார்.
எல்லோருமே அன்பால் குளிப்பாட்டி விட்டதாக நான் ஏற்புரையில் சொன்னேன். ‘‘அறிவியல் கதைகள் என்பவை சமூக பிரச்னைகளுக்கு வெளியே இருப்பவை அல்ல. அதனால்தான் இந்த அறிவியல் கதைகள் அரசியல் கதைகளாகவும் இருக்கின்றன. அறிவியல் கதைகள் என்றால் செவ்வாய் கிரகம், பறக்கும் தட்டு, எதிர்காலம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அதில் திருவள்ளுவரோ, ஆதி மனிதர்களோ வரலாம். ஒரே ஒரு நிபந்தனை.. அதில் புதிதாக ஒரு உலகம் எட்டிப் பார்க்க வேண்டும்.. அதில் அறிவியல் இருக்க வேண்டும்’’ என்றேன்.
என்னையும் என் கதைகளையும் நினைவு கூர்வதற்கு இத்தனை விஷயங்களையும் நண்பர்களையும் சேகரித்துவிட்டது பெருமையாக இருந்தது.





புதன், ஜனவரி 23, 2013

36- வது புத்தகத் திருவிழா


36-வது புத்தகக் கண்காட்சியில்  இரண்டு தவணையாக வாங்கிய நூல்கள் இவை. இன்னும் இரண்டு தரம் போக வேண்டி இருக்கலாம்.
புத்தகங்களைப் பார்ப்பதும் தேர்ந்தெடுப்பதும் மனிதர்களைச் சந்திப்பதும் அவர்களில் நண்பர்களைத் தேர்வு செய்வதும் போன்றது. நம் ரசனையையும் சமூக தரிசனத்தையும் பொருத்த விஷயம் அது.

பாரதி கருவூலம்
(ஹிந்து நாளிதழில் பாரதியின் எழுத்துகள்)
அஸீஸ் பே சம்பவம் - அய்ஃபர் டுன்ஷ் (தமிழில்: சுகுமாரன்)
பட்டு - அலெசாண்ட்ரோ பாரிக்கோ (தமிழில்: சுகுமாரன்)
சித்தன் போக்கு -பிரபஞ்சன்
நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள் (தொகுப்பு: யுவன் சந்திரசேகர்)
சின்ன விஷயங்களின் கடவுள்- அருந்ததி ராய்
புகை நடுவில்- கிருத்திகா

காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி. சாலை, நாகர்கோவில்,
629001

பசுமை நினைவுகள்- ரஸ்கின் பாண்ட் (ஆங்கிலத்திலிருந்து தமிழில்: அ.சு. இளங்கோவன்)
மக்கள் குரல்- பைரேந்திரகுமார் பட்டாச்சாரியா (அஸ்ஸாமி நாவல்- தமிழில்: சரோஜினி பாக்கியமுத்து)
ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கதைகள் தொகுப்பு வெங்கட் சாமிநாதன்
சாகித்திய அகாதமி, 
குணா பில்டிங்ஸ்,
443, அண்ணாசாலை,
தேனாம்பேட்டை,
சென்னை-18

நேனோ- மோகன் சுந்தரராஜன்
ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி- சாலீம் அலி தமிழில்: நாக.வேணுகோபாலன்
தந்தைப் பெரியார் வாழ்வும் தொண்டும் - இரா.இரத்தினகிரி
தார்பாரி ராகம்- ஸ்ரீ லால் சுக்ல (தமிழில்: சரஸ்வதி ராம்நாத்)
சிக்கவீர ராஜேந்திரன் - மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் (தமிழில்: ஹேமா ஆனந்ததீர்த்தன்)
அபராஜிதா - விபூதி பூஷண் பந்தோபாத்யாய (தமிழில்: திலகவதி)


நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்தியா,
நேரு பவன்,
5, இன்ஸ்ட்டிட்யூஷனல் ஏரியா,
பேஸ்- 2
வசந்த் குஞ்ச், புது தில்லி- 110070.


இக்கால தமிழ் மரபு- கு.பரமசிவம்
சொல்வழக்கு கையேடு- மொழி அறக்கட்டளை
தமிழ் நடைக் கையேடு

அடையாளம் பதிப்பகம்,
1205/1, கருப்பூர் சாலை,
புத்தாநந்தம் -621310

ஆறாவடு - சயந்தன்
மணல் கடிகை- எம்.கோபாலகிருஷ்ணன்
மேகதூதம் - காளிதாஸர் (தமிழில்: மதுமிதா)
தமிழினி,
25 ஏ, தரைத்தளம், 
ஸ்பென்ஸர் பிளாஸா முதல் பகுதி,
769, அண்ணா சாலை,
சென்னை-2


கதிரேசன் செட்டியாரின் காதல்- மா.கிருஷ்ணன்

மதுரை பிரஸ்,
60, பி.கோதண்டராமர் கோயில் தெரு,
மேற்கு மாம்பலம்,
சென்னை-33.

தலைகீழ் விகிதங்கள்- நாஞ்சில் நாடன்

விஜயா பதிப்பகம்,
20, ராஜ வீதி,
கோயமுத்தூர்-641001.

என் கதை- வே. ராமலிங்கப் பிள்ளை

சந்தியா பதிப்பகம்,
புதிய எண்: 77, 53-வது தெரு,
9-வது அவின்யூ
அசோக் நகர்,
சென்னை-600083.

அறிஞர் அண்ணா சிறுகதைகள் தொகுப்பு: சாயுபு மரைக்காயர்

கங்கை புத்தக நிலையம்,
23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர்,
சென்னை- 17.

தானும் அதுவாக பாவித்து- எஸ்.சங்கரநாராயணன்

சொல்லங்காடி,
2/35, அறிஞர் அண்ணா காலனி,
தெற்கு மாடவீதி,
திருவொற்றியூர்,
சென்னை_ 19.

வெள்ளி, ஜனவரி 11, 2013

ரெட்டை வால் வலைப்பூவில்

ரெட்டை வால் வலைப்பூவில் வனசாட்சி நாவல் குறித்த முதல் விமர்சனம் வந்திருக்கிறது.. சிறப்பாக நாவலை உள்வாங்கி இருக்கிறார். நண்பருக்கு நன்றி.

விமர்சனத்தைப் படிக்க...

திங்கள், ஜனவரி 07, 2013

வனசாட்சி குறித்து...






ஜனவரி 6-ம் தேதி மாலை சென்னை புக் பாயிண்டில் உயிர்மையின் ஒன்பது நூல்கள் வெளியீட்டு விழா. ஒன்பது நூல்களையும் அய்யா நெடுமாறன் வெளியிட்டார். இயக்குநர் லிங்குசாமி என்னுடைய வனசாட்சி நாவலை பெற்றுக்கொண்டு பேசினார்.
அதிகார இடைத்தரகர்களின் கேவலமான சுயநலத்துக்காக மக்கள் எப்படி பலியாகிறார்கள் என்பது நாவலின் அடிநாதம்.
நாவலின் பின் அட்டைக் குறிப்பாக கவிஞர் மனுஷ்யபுத்திரன் இப்படி எழுதி இருக்கிறார்..


’’கழுத்தில் வைக்கப்படும் நுகத்தடிகளில் சர்க்கஸ் ரிங் மாஸ்டரின்
சாட்டைகளில், மணவறையில் கட்டப்படும் தாலிகளில், அலுவலகத்தில் தரப்படும்
அப்பாயின்மென்ட் ஆர்டர்களில்... எல்லாவற்றிலும் ஒளிந்திருக்கின்றன
அதிகாரத்தின் நுணுக்கமான ரேகைகள். நாம் அதை மௌனமாக அனுமதிக்கப் பழகி
இருக்கிறோம். அது அதிகார துஷ்பிரயோக மாறாதவரை நமக்குக் கவலை இல்லை. உலகமே
அதிகாரத் தரகர்களின் கையில் சிக்கிச் சிதைந்து போயிருக்கிறது.
அசடர்களிடம் அதிகாரம் குவியும்போது துயரத்தின் விளைவு அதிகமாக இருக்கும்.
கூடவே கொஞ்சம் நகைச்சுவையும்.
இந்த நாவல் சுமார் 200 ஆண்டு தேயிலைத் தோட்டப் பின்னணியில் அதை அலசுகிறது.’’

அதிகாரத்தின் ஆணவ முகம் நாளுக்கு நாள் கோராமாகிக்கொண்டே போகிறது. விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் பேசும்போது அதிகாரிகள் ஒரே நேரத்தில் ஒருத்தரிடம் பணிவாகவும் இன்னொருவரிடம் திமிராகவும் நடந்துகொள்ள வேண்டி இருக்கிறது என்றார். அவர் சிவகாமியின் உண்மைக்கு முன்னும் பின்னும் நாவல் குறித்துதான் சொன்னார். ஆனால் அவர் என் நாவல் குறித்து பேசியது போலவே இருந்தது.

அதிகார அடுக்கு ஒரு அதிகாரியை இன்னொரு அதிகாரியிடம் மண்டியிட வைக்கிறது. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதை அடிக்கொருதரம் அவர்கள் விழுந்துவிழுந்து காட்ட வேண்டி இருக்கிறது. மீசையில் மண் ஒட்டாததை நிரூபிப்பதற்காகவே அவர்கள் தொடர்ந்து குப்புற விழுகிறார்கள். அவர்கள் தங்கள் அடிமைகளை அச்சுறுத்த நினைத்து அவர்களுக்கு எல்லையற்ற நகைச்சுவையைத்தான் தருகிறார்கள். அடிமைகளில் மிகச் சிலரே அதை ரசிக்கத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.

வனசாட்சி நாவலின் முதல் பாகம்.. முன்பனிக் காலம்.
19-ம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிருந்து சாரை சாரையாக தமிழ் மக்கள் இலங்கைக்கு தோட்ட வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதைச் சொல்கிறது. ஒரு குழு இங்கிருந்து இலங்கை தோட்டத்தைச் சென்று அடைவதோடு முதல் பாகம் முடிகிறது.

இரண்டாவது பாகம் பின்பனிக் காலம்.

ஸ்ரீமாவோ- சாஸ்திரி ஒப்பந்தத்தின் படி இலங்கையில் வேலைபார்த்துவந்த பத்து லட்சம் தோட்டத் தொழிலாளர்களில் பாதிப் பேர் அங்கிருந்து திருப்பி அனுப்பப் படுவதை சொல்கிறது.

மூன்றாவது பகுதி.. இலையுதிர் காலம்.

திருப்பி அனுப்புவதில் ஏற்பட்ட கோளாறில் மகள் வேறு குடும்பவ் வேறாகப் பிரிந்து போன ஒரு குடும்பம் பற்றிச் சொல்கிறது. இலங்கையில் தொலைந்துபோன அந்தப் பெண் இயக்கத் தொடர்பு ஏற்பட்டு முள்ளி வாய்க்கால் போரில் வீரமரணம் அடைவது வரை செல்கிறது.

மீண்டும் என் நாவலில் சமகாலச் சரித்திரத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறேன். சமூகம் வேறாகவும் கதை வேறாகவும் என்னால் கற்பனை செய்யவே முடியவில்லை. புனைவும் நிஜமும் பிணையும் புள்ளியாக இருப்பதே என் படைப்புகள்.. மற்ற எல்லாரையும்விட பட்டவர்த்தனமாக அதை நான் செய்கிறேன்.

அதனால்தான் இதில் சேன நாயக்க முதல் ராஜபக்‌ஷே வரை.. சாஸ்திரி முதல் ராஜீவ் காந்தி வரையில் சொல்ல வேண்டி இருக்கிறது.

வாசகர்கள் வர வேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன்..











திங்கள், டிசம்பர் 17, 2012

தமிழ்மகனுக்கு கோவை இலக்கியப் பரிசு


சுப்ரபாரதிணியன்

கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் ரங்கம்மாள் விருது இவ்வாண்டு தமிழ்மகனுக்கு அவரின் “ வெட்டுப்புலி “ நாவலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.25,000 ரூபாய் பரிசுத்தொகை கொண்டது அப்பரிசு
( உயிர்மை வெளியீடு. பதிப்பாளருக்கும் பரிசு உண்டு ) இரு ஆண்டுகளுக்கு ஒரு நாவலாசிரியருக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. பிரபஞ்சன், சிவசங்கரி, சுப்ரபாரதிமணீயன், நாஞ்சில்நாடன், சி.ஆர். ரவீந்திரன் , வே சபாநாயகம், மோகனன், நீலபத்மநாபன் போன்றோருக்கு இவ்விருது இதுவரை வழங்கப்பட்டிருக்கிறது..

கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளைக்கு இது வெள்ளிவிழா ஆண்டு.நிரந்தரமான ஓவியக்கூடம், நூட்பாலைக்கண்காட்சி, ஆண்டுதோறும் பதினைந்து கூட்டுக் கண்காட்சிகள், ஓவியப்பட்டறைகள்., ஓவிய பயிற்சி முகாம்களை இது நடத்துகிறது. இதன் வெள்ளி விழா கொண்டாட்டம் டிசம்பரில் தொடங்கியது.அவ்விழாவில் தலைமை விருந்தினராக்க் கலந்து கொண்ட கிருஸ்ணராஜ் வாணவராயர் “ வித்தியாசமாக இருப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். எழுத்தாளர்களும் கலைஞர்களும் வித்தியாசமானவர்கள். நான் வித்தியாசமாக இருப்பதை பார்த்து சிரிக்கிறீர்கள். நாம் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதைப் பார்த்துச் சிரிக்கிறேன். என்றார் விவேகானந்தர். ஆன்மீகமும் அறிவுவியலும், பகுத்தறிவும் கலந்த சிந்தனை மிக முக்கியம். நாளைய உலகில் நல்ல பண்பு கொண்ட மனிதர்கள்தான் அதிகம் இருக்கமாட்டார்கள்.அவர்களை உருவாகுவதில் கலைக்கும், எழுத்துக்கும் பங்கு உண்டு என்றார்..
வெட்டுப்புலி நாவலுக்கு பரிசு பெற்ற தமிழ்ம்கன் பாராட்டப்பட்டார். அவரின் உரையிலிருந்து: “ வெற்றி பெற்றவர்களின் வரலாறு வெகு சாதராணமாய் நிறைய எழுதப்பட்டுள்ளன. வெட்டுப்புலி தோல்வியடைந்தவர்களின் கதை.அரசியல், திரைத்துறை, வாழ்க்கை என்று 30களில் பயணம் செய்ய ஆரம்பிக்கிற நாவல்சமீபகாலம் வரை திராவிட இயக்கவரலாறோடு சொல்லப்பட்டிருக்கிறது. உலகின் 6000 மொழிகளில் இந்த நூற்றாண்டில் அழியப் போகிற மொழிகள் 3000க்கு மேலே உள்ளது. பயன்பாட்டில் குறைந்து வருகிற தமிழை புழங்கு மொழியாக வைத்திருக்கவும் மொழியைப்புதுப்பிக்கவும் நாங்கள் எழுதிக் கொண்டிருக்கிறோம். புத்தர், யேசு பேசின மொழிகள் இன்று பய்ன்பாட்டில் இல்லை. திருவள்ளுவர் பயன்படுத்திய மொழியை வாழ வைக்க எழுதுகிறோம். மொழியை நவீனப்படுத்தவேண்டும். செய்ய்யுள் வடிவிலேயே தமிழ் இலக்கியம் நெடும்காலம் இருந்திருக்கிறது. தமிழ் சிறுகதைக்கும், நாவலுக்கும் 100 வருடமே ஆகிறது.. எழுத்தாளர்கள் வாழ்க்கையை படைப்பில் முன் மொழியும் போது மொழியையும் முன் மொழிகிறோம்.அது வெவ்வேறு வடிவங்களும், நுட்பமும் கொண்டு இலக்கியத்தை சுவாரஸ்படுத்துகிறது.. ” ஒரு ஊரில் ஒரு பாட்டி “ என்று பாட்டி வடை சுட்டதில், காக்கா திருடிக் கொண்டு போனதினை இரண்டாம் முறை சொன்னாலே அலுப்பு வந்து விடும். அதைப்போக்க சொல்லும் மூறையில் நவீனம் தேவை. நவீன வாழக்கையை கூர்ந்து சொல்லவேண்டும், காப்ரியேல் மார்க்கூஸ்ஸின் “ மறுபடியும் சொல்லப்பட்ட கதையை “கொல்லப்படப் போகிறவன் படகுக்காக்க் காத்திருக்கிறான்.” என்று ஆரம்பிக்கிறார். டால்ஸ்டாய் அன்னாகரினாவில் “ எல்லா சந்தோசமான குடும்பங்களும் ஒரே மாதிரி “ என்று ஆரம்பிக்கிறது.. ”

தமிழ்மகனின் சமீபத்திய ஆண்பால் பெண்பால் நாவல் இப்படி ஆரம்பிக்கிறது:: “ இடைப்பட்ட நீர்ப்ப்ரப்புகள் நீருக்குள் மூழ்கிப் போயின “ தமிழ் மொழி பற்றின படிமமாகக் கூட தமிழ்மகன் இந்த வரிகளை எழுதியிருக்க்க்கூடும்

தமிழ் மகனின் படைப்புலகம் : ” ஆண்பால் பெண்பால் “ நாவலை முன் வைத்து….


சுப்ரபாரதிமணியன்

Share

பொதுவாக இந்திய  வெகுஜன இதழ்களில் குடும்பம், திருமணம், மணமுறிவு, மன முறிவு, பிரிவு, கூடுதல் சம்பந்தமான லட்சக்கணக்கான தொடர்கதைகள் இது வரை வெளிவந்திருக்கும்.பெரும்பாலும் இந்துவா சிந்தனைகள், சடங்குகளின் மேன்மை, இந்தியர்களின் குடும்ப்ப் பெருமை பற்றி சிலாகிப்பவை . இது தமிழிலும்  சாத்தியமாகியுள்ளது.       தமிழ் மகனின்  “ ஆண்பால் பெண்பால்” நாவலில் மணமுறிவு சார்ந்த நுணுக்கமான உளவியல் சார்ந்த விசயங்கள் ஆக்கிரமித்திருருப்பதைக் குறிப்பிடலாம்.
பலவீனமான குடும்ப அமைப்புகளின் அடையாளம் இந்த மண முறிவு. மேற்கத்திய நாட்டுக்குடுமபங்கள் இந்த பலவீன்ங்களைக்கொண்டவை. எனவே மண விலக்கு அங்கு சாதாரணமாகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில்   5 முதல் 10 ஆண்டுகளே திருமண உறவு பெரும்பான்மையாக நீடிக்கிறது பிறகு மண விலக்கும், மறுமணமும் சாதாரணமாகிறது .இது பல இடங்களில் ஒரு முடிவு என்பதாகிறது. இன்னும் பல விசயங்களில்  புது தொடக்கம் என்றாகிறது. கருக்கலைப்பை அங்கீகாரம் செய்யாத சில கிறிஸ்துவ நாடுகளைப் போல்  மணவிலக்கை அங்கீகரிக்காத சில கிறிஸ்துவ நாடுகளும் உள்ளன. இந்தியாவின் பெருநகரங்களில் மணவிலக்கு  இது சாதாரணமாகி வருகிறது. இடம்பெயர்ந்து வந்து நகரங்களில் வாழும் தொழிலாளி வர்க்கத்தில் இது அதிகரித்து வருகிறது..எனக்குத்தெரிந்த ஒரு இளைஞன் தினமும் காதலிக்கு     நூறு குறுஞ்செய்திகளையாவது அனுப்புவான்.இரண்டாண்டுகளுக்குப் பிறகு அவர்கள் பிரிவை ஒரு குறுஞ்செய்தியால் கூட பகிர்ந்து  செய்யாமல் விலகிக் கொண்டார்கள்.
இந்த நாவலின்  மையமான இந்த மணமுறிவு சார்ந்த விசயங்கள் உளவியல் பார்வையோடு சொல்லப்படுவதற்கு ஆதாரமான கதாபாத்திரங்களாக தமிழ்மகனின் முந்திய “ வெட்டுப்புலி “ நாவலில் தியாகராஜன், ஹேமலதா மற்றும் கிருஸ்ணப்பிரியா, நடராஜன் ஆகியவற்றைக் கூறலாம். ரசனை வேறுபாடு , கொள்கை வேறுபாடு அவர்களிடம் பிரிவை உருவாக்குகின்றன.தியாகராஜன் கடவுள் மறுப்பாளன், ஹேமலதா தீவிரமான பக்தை. திருமண உறவில் இது பெரிய சங்கடம் தருகிறது. அவள் வேறு ஆண் நட்பும் கொள்கிறான். தியாகராஜன் புதுவை அரவிந்தரின் பக்தனாகிற சரிவு காட்டப்படுகிறது. தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சார்ந்த நடராஜன் தான் காதலிக்கிற பெண் கிருஸ்ணப்ரியா,  பிராமண ஜாதியைச் சார்ந்தவள் என்பதால் அவளிடமிருது விலகி வேறு பெண்ணை திருமணம் செய்து குடும்பச் சிக்கல்களால் மனப்பிறழ்வு நோய்க்கு ஆளாகிறான்.இரண்டிலும் நிகழும் சரிவுகள் எதார்த்தமாக இருந்தாலும் மனதிற்கு சங்கடம் தருகிறது. காரணம் அதை திராவிட இயக்கச் சரிவாக அடையாளம் கண்டு கொள்ள முடிவதால்தான்.
தமிழ்மகனின் நான்காவது நாவலான “ ஆண்பால் பெண்பாலி”ல் இந்த மணமுறிவு  .ரசனை வேறுபாட்டால், உடல் சார்ந்த குறையால் ( ப்ரியாவிற்கு வெண்புள்ளி, அருணுக்கு ஆண்மையில்லாத் தன்மை) அமைகிறது. அவளின் எம்ஜிஆர் பற்றிய ஈடுபாடு, எம்ஜிஆர் சிவாஜி படப்பாடல் ரசனைமுரண் , சசிரேகா, அருணா என்ற பெண்களுடன் அவனைச் சேர்த்துப் பேசுவது,  தங்க செயின் பறிப்பின் போது அவனின் கதாநாயக ஆவேசமின்மை, புலனாய்வு நிறுவனம் மூலம் அவளின் நடத்தையை அவன் அறிய முயல்வது, குழந்தைப்பேற்றுக்கான புனிதப்  பயணங்கள், எம்ஜிஆர் ஆவி ஆக்கிரமிக்கப்பட்ட ப்ரியா எம்ஜிஆர் தமிழர் எனபதை நிருபிக்க அவளின் பயணங்கள், தோல்வி என்று தொடர்கிறது. எம்ஜிஆர் ஆவியோடு ப்ரியா தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறாள். மனபிரமை. எம்ஜிஆர் படித்தப் பள்ளி, தங்க் பஸ்பம் செய்த இடங்கள், தேர்தல் கால பிரச்சார இடங்கள் என்று தீர்த்த யாத்திரை செல்கிறாள்.   அருண் ஆணின் மன்னிப்பு, பெருந்தன்மை எல்லாம் காட்டுகிறான்.உறவுச் சிக்கல்களும், உளவியல் பாதிப்புகளும் அவளை மன நோயாளியாக்குகிறது. அருண் மனவிலக்கும் பெறுகிறான். அவள் குழந்தைப் பேறு அடைய முடியாதது பற்றி அவனுக்கும் சங்கடங்கள் இருக்கின்றன.
இந்நாவலில் சுமார் 10 சம்பவங்கள் அருண், ப்ரியா  பார்வைகளில் திருமபச் திரும்பச் சொல்லப்படுகின்றன. ப்ரியாவின் பார்வை அழுத்தமாக அமைந்துள்ளது. நேர்கோட்டை சிதைக்கிறது  ப்ரியா சொல்வதாக பிரமிளா எழுதுவது, அருண் சொல்வதாக ரகு எழுதுவது என்று கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நாவலினை எழுதியவன் நானல்ல என்கிறார் தமிழ் மகன். மனுஷ்யபுத்திரனுக்கு ராயல்டி தரவேண்டியதில்லையான  மகிழ்ச்சி. இது விளையாட்டாகிறது. பிரதி மாத்திரம் பிரதானமாகிறது.  பெருங்கதையாடலினை இப்படி . கட்டுடைக்கிற பின்நவீனத்துவ அம்சங்களை இந்த நாவல் அதன் வடிவ அமைப்பில் பெற்றிருக்கிறது.
திராவிட அரசியல், திராவிட திரைப்படம், அதன் முக்கிய பிம்பமான எம்ஜிஆர், ப்ரியா அருண் திருமண வாழ்க்கை,  நவீன வாழ்க்கையின் அம்சங்கள் என்று பல அடுக்குகளை இந்த நாவல் கொண்டிருந்தாலும் அதன் ஊடாக வரும் கதாபாத்திரங்களின் எண்ணிக்கை குறைவே. இந்த அடுக்குகளில் இன்னும் நிறைய கதாபாத்திரங்கள் இணைந்திருந்து இதை வேறு பரிமாண நாவலாக்கியிருக்கும் போக்கு இல்லாமல் இரு கதாபாத்திரங்களின் குரலில் திரும்பத்திரும்ப ஒலிப்பது பலவீனமே.பல  ஆண்டுகளாக பத்திரிக்கையாளராக தமிழ் மகன் பணிபுரிவதால் கடைசி  வாசகனையும் சென்றடையும் எளிமையும், சுவாரஸ்யமும் இதிலும் உள்ளது, அதுவும் திரைப்படத்துறை சார்ந்த பத்த்ரிக்கையாளனாக இவர் பணியாற்றி பல கட்டுரைகள், நூல்கள் எழுதியிருப்பதால் இங்கு இடம் பெறும்  திரைப்பட உலகம் சார்ந்த தகவல்கள், அனுவங்கள் இந்த நாவலின்  வாசிப்பினை சுவாரஸ்யமாக்குகிறது. சுஜாதாவின் பாதிப்பில் இவரின் சிறுகதைகள் சொல்லும் தன்மை இருப்பதாய் பலர் சொல்வதுண்டு. இந்த சுவாரஸ்யத்தின் மூலம் அது போன்ற உரைநடையாலும் எள்ளலாலும் தொடர்ந்து இந்த நாவலிலும் சாத்தியமாகியிருக்கிறது. சமகால அரசியல் நிகழ்வுகள், பதிவுகளை இந்த நாவலிலும்  சரியாக அனுபவ சாத்தியமாக்கியிருக்கிறார். சரித்திரமும், தத்துவமும், அறிவியலும். சமகால அரசியலின் பதிவுகளும் இவரின் மொத்தப் படைப்புகளின் பலமாக அமைகின்றன.
பத்திரிக்கை உலகம் சார்ந்த அலுப்பான பணிகளை மீறி தமிழ் மகன் தொடர்ந்து படைப்பிலக்கிய முயற்சிகளில்  அதற்காக நேரம் ஒதுக்கி, குடுமபத்தை ஒதுக்கி விட்டு ஈடுபடுவது அவரின் 4 நான்கு நாவல்கள், இரு சிறுகதைத் தொகுப்புகளின் மூலம் வெளிப்ப்ட்டிருக்கிறது. தமிழக அரசின் விருதுகள், கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் சிறந்த நாவலாசிரியருக்கான இவ்வாண்டின் விருது, நாகர்கோவில் மணி நாவல் விருது, ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது  போன்றவை  மூலம் கவுரப்படுத்தப்பட்டிருக்கிறார். இவரின் திரைப்பட அனுபவங்களும் அது சார்ந்த திரைப்பட முயற்சிகளும் இன்னுமொரு பரிமாணமாக வெளிப்படும் சாத்தியங்கள் மகிழ்ச்சியானதே.
( கோவை இலக்கியச் சந்திப்பு  ‘ தமிழ் மகனின் படைப்புலகம்” பற்றிய நிகழ்ச்சியில் ” ஆண்பால் பெண்பால் “ நாவல் பற்றிய சுப்ரபாரதிமணீயனின் உரையின் ஒரு பகுதி இது. ” வெட்டுப்புலி “ நாவல் பற்றி எம். கோபாலகிருஸ்ணன், சி ஆர் இரவீந்திரன் ஆகியோரும், அவரின்
” சிறுகதைகள் ” பற்றி கோவை ஞானியும், அவரின் படைப்பிலக்கிய  செயல்பாடுகள் பற்றி இளஞ்சேரலும் பேசினர். சு.வேணுகோபால், அறிவன், பொதியவெற்பன், நகைமுகை தேவி, காசுவேலாயுதம், அவைநாயகன், ஆத்மார்த்தி, தியாகு உட்பட பலர் கலந்து கொண்டனர்)

திங்கள், டிசம்பர் 03, 2012

அழகான விருது.. கனமான பணமுடிப்பு.. நெகிழவைத்த அன்பு

சுதந்திரப் போராட்ட வீரரும் கம்யூனிஸ் தோழருமான ஜி.எஸ். மணி அவர்கள் நினைவாக மார்த்தாண்டம் தோழர்கள் நடத்தும் களம் அமைப்பின் சார்பாக டிசம்பர்2‍, தேதி ஆண்பால் பெண்பால் நாவலுக்கு விருது வழங்கப்பட்டது. தோழர்கள் பாபு, ஹசன், குமரவேல், மைக்கேல் போன்றவர்களின் அன்பு மறக்க முடியாதது.
தோழர் ஜி.எஸ். மணி அவர்களோடு பழகிய தோழர் எம்.எம்.அலி போராட்டக்கால நினைவுகளை பகிர்ந்துகொண்டார். போலீஸ்காரர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மணி அவர்கள் ஆற்றில் குதித்துத் தப்பிச் சென்ற நிகழ்வு சிலிர்க்க வைத்தது. தோழர் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், மணிமாறன் ஆகியோர் என் நாவல் பற்றி நன்றாகப் பேசினார்கள். எம்.ஜி.ஆர் என்பது தமிழகத்தைப் பிடித்த ஆவி என்றார். எல்லா நடிகர்களுமே தம் பங்குக்கு நம்மைப் பேயாய் பிடித்து ஆட்டுகிறார்கள் என்றது சுவாரஸ்ய்மாக இருந்தது. அவர் சொன்ன பிறகுதான் அதுவும் சரிதான் என தோன்றியது.

அழகான விருது... தோழர் குமரவேல் வடிவமைத்தது. கனமான பணமுடிப்பு.. ரூ. 15,000/‍ நெகிழவைத்த அன்பு.. என 3-‍ம் தேதி காலை சென்னை வந்து இறங்கினேன். நாள் முழுதும் என்னுடனே இருந்த பாபு அவர்களுக்கு மிகவும் நன்றி சொல்ல வேண்டும். சிதாறல் சமணக் குகைக்கும் பேச்சிப்பாறை தொட்டி பாலத்துக்கும் அழைத்துச் சென்று காண்பித்தார். சுமார் 14 மணி நேரம்தான் நான் மார்த்தாண்டத்தில் இருந்தேன். இரண்டு மூன்று நாள் இருந்த நிறைவு.

LinkWithin

Blog Widget by LinkWithin