வியாழன், அக்டோபர் 09, 2008

திரைக்குப் பின்னே - 2

அந்திமத்தில் அணையும் விளக்குகள்





நடிகர் சிவாஜி கணேசனோடு எனக்கு நீண்ட சம்பந்தம் உண்டு. அவ்வளவு நேரடியானதாக இல்லையென்றாலும் சுற்றி வளைத்தவாக்கிலோ பக்க வாக்கிலோ இந்தத் தொடர்புகள் ஏற்பட்டிருந்தன. 87,88 வாக்கில் சிவாஜி கணேசன் நடித்த ஒரு படத்துக்குத் தோழர் சுபவீரபாண்டியன் வசனம் எழுதினார். அது பின்னர் 'முதல்குரல்' என்ற பெயரில் வெளியானது. நான், கவிதாபாரதி, இயக்குநர் செல்வபாரதி ஆகியோர் வசனத்தில் உதவி என்ற அளவில் பணியாற்றினோம். சிவாஜி பேசிய வசனத்தில் நான் பகிர்ந்து கொண்ட வாக்கியம் ஏதேனும் இடம்பெற்றிருக்கலாம். ('பத்திரிகைகாரன் நினைச்சா எதையும் சாதிக்க முடியும்' டைப்பில்). ஏதோ அப்படிச் சம்பந்தம் இருக்கிறது.


நான் பத்திரிகை நிருபரானபோது பல திரைப்படப் படப்பிடிப்பில் அவரைச் சந்திக்க முடிந்தது. குறிப்பாக 'ஒன்ஸ்மோர்', 'என் ஆச ராசாவே', 'பூப்பறிக்க வருகிறோம்', 'மன்னவரு சின்னவரு,' 'படையப்பா' போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது படப்பிடிப்பிலேயே பார்க்கிற பேசுகிற வாய்ப்புகள் கிடைத்தன. பெரும்பாலும் 'அலை ஓசை' மணி, 'குமுதம்' செல்லப்பா, 'தேவி' மணி போன்றவர்களிடம்தான் கிண்டலாக ஏதாவது பேசுவார். நாங்கள் ஏதாவது கேட்டாலும் ஏடாகூடமாக பதில் வரும். (அந்தக் காலத்தில் நடித்த படத்துக்கும் இப்போது நடிப்பதற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்...? பதில்: "தெரிஞ்சு என்ன பண்ணப்போறே?'') கும்பலாகச் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்பவர்களைப் பார்க்கும்போது அவருக்கு எப்படி இருந்ததோ? அலுப்பாகவோ அசட்டையாகவோ பதில் சொல்லுவார். உங்களுக்குப் பிடித்த வெளிநாட்டு நடிகர் யார் என்றெல்லாம் கேட்பதில் ஏற்படும் எரிச்சலாகக்கூட இருக்கலாம். நாம் ரொம்பவும் ரசித்த பெரிய மனிதர் என்பதற்காகவே அவர் சொல்லுவதற்கெல்லாம் சிரிப்போம்.


இது தவிர அவருடைய பிறந்த நாள், திருமண நாள் சமயங்களில் அவர் வீட்டில் விருந்து வைப்பார். பத்திரிகைக்காரர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம். அவருக்கு நிருபர் கூட்டத்தின் மீது கொஞ்சம் அன்பும் அலட்சியமும் இருப்பதைக் காணமுடியும். எல்லோரும் சாப்பிட்டாச்சா என்று தனித்தனியே விசாரிப்பதில் அன்பு. "சாப்பிட்டோம் சார்'' என்றால் "ஆமா. அதை முடிக்கணும் முதல்ல'' என்பதில் கிண்டல்.


ஆனால் நானும் நண்பர் இளையபெருமாளும் தினமணி தீபாவளி மலருக்காக சிவாஜிகணேசனைப் பேட்டி கண்டோம். அதில் வழக்கமான சிவாஜி இல்லை. தனிப்பட்ட முறையில் எங்களை மிகவும் விசாரித்தார். டேப் ரெகார்டரை ஆன் செய்வதற்கு முன்பும் ஆஃப் செய்த பின்னும் வெகுநேரம் பேசினார். கலைஞர், ஜெயலலிதா, பெரியார், தினமணி, பிரபு, வளர்ப்பு மகன், இதயம் பேசுகிறது மணியன் என்று பல விஷயங்கள் குறித்துப் பேசினார். அதையெல்லாம் வெளியே சொல்வதற்கான நேரம் இன்னும் வரவில்லை. பல உள்ளக் குமுறல்களை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் ஒரு குடும்பத் தலைவராகத் தெரிந்தார். சுமார் மூன்றரை மணி நேரப் பேட்டி. சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று வற்புறுத்தினார். வேண்டாம் என்று கூறிவிடவே "நம்ம வீட்டு காபி சாப்பிட்டிருக்கீங்களா நீங்க?'' என்றார். "உங்க பிறந்த நாளுக்கு வந்தபோது சாப்பிட்டோம் சார்'' என்றேன். "அதெல்லாம் ஓட்டல்ல ஆர்டர் பண்ண காபி.'' என்றபடி கமலம் அம்மாவை அழைத்து "பசங்க நம்ம வீட்டுக் காபி சாப்பிட்டதில்லையாம்'' என்றார். சிறிது நேரம் கழித்து மற்றொரு காபிக்கு ரெடியா என்றார். நாங்கள் வேண்டாம் என்றதும் மனைவியை அழைத்து "இவங்களுக்கு உன் காபி பிடிக்கலை போல இருக்கு. ஜூஸ் ஏதாவது குடு'' என்றார். ஜுஸ் கொண்டு வந்த முருகனை "நல்லா சூடா இருக்கா?'' என்று வம்பு செய்தார்.


பேசிவிட்டு வெளியேறும்போது எங்களை எழுந்து நின்று வழியனுப்பினார். நாங்கள் வெளி வாசலைக் கடக்கும் வரை அந்த இடத்திலேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தார். எதற்காக நின்று கொண்டிருக்கிறார், நாங்களும் தயங்கித் தயங்கி நகர்ந்து கொண்டிருந்தோம். பிறகு நிதானமாக ஃபேன், ட்யூப் லைட் ஸ்விட்சுகளை நிறுத்திவிட்டு எல்லாம் அணைந்துவிட்டதா என்று அண்ணாந்து பார்த்துவிட்டு உள்ளே போனார். ஏனோ கண்கள் பனித்தன.

ஸ்ரீவித்யாவின் பிடிவாதம்

'சங்கமம்' படத்தின் படப்பிடிப்பில் விந்தியாவைப் பேட்டி காண வாசன் ஹவுஸுக்குப் போயிருந்தேன். பெரிய நட்சத்திரப் பட்டாளம். ரகுமான், 'வெண்ணிற ஆடை' மூர்த்தி, டெல்லி கணேஷ், விஜயகுமார், ஸ்ரீவித்யா இன்னும் சில உப நடிகர்கள் சூழ்ந்திருந்தனர். சுரேஷ்கிருஷ்ணா இயக்கம். விஜயகுமார் ஏதோ கோபமாகச் சொல்ல எல்லாக் கலைஞர்களும் நாதஸ்வரம், தவில் போன்ற தம் இசைக் கருவிகளையும் மூட்டை முடிச்சுகளையும் எடுத்துக் கொண்டு கிளம்புவதாகக் காட்சி.


ஒத்திகைக் காட்சியின்போது எல்லோரும் இயக்குநர் சொன்னது மாதிரி நடித்துக் காண்பித்தனர்.அடுத்து டேக்.. 'வெண்ணிற ஆடை' மூர்த்தி அவராக ஒரு வசனம் பேசினார்.
"என்ன எல்லாரும் அவங்கவங்க சாமான்களைக் கையில புடிச்சிக்கிட்டுக் கிளம்பிட்டீங்க?'' என்றார். இது அவருடைய டிரேட் மார்க் வசனம்.


எல்லோரும் சிரித்து ரசித்தனர். சுரேஷ்கிருஷ்ணாவும் நகைச்சுவையாக இருக்கும் என்று சம்மதம் போல விட்டுவிட்டார்.


ஸ்ரீவித்யா மட்டும் சம்மதிக்கவே இல்லை. "வேண்டாம்ணே... இந்த வசனம் இந்தக் காட்சிக்கு இருக்கிற சீரியஸ்னஸையே கெடுத்திடும்'' என்றார் வெ.ஆ. மூர்த்தியிடம். கடைசியில் அந்த வசனத்தை நீக்கிவிடுவதாக சுரேஷ்கிருஷ்ணா உறுதியளித்தார்.படத்திலும் அக் காட்சி இடம்பெறவில்லை.


ஆய்த எழுத்து

சூர்யா - ஜோதிகா காதல் விவகாரம் பற்றி பத்திரிகைகள் எல்லாம் மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருந்த நேரம். சூர்யாவின் அப்பா சிவகுமார் இப்படி அவர்களின் காதலைப் பற்றி எழுதிய ஒரு வார இதழுக்கு போன் செய்து கெட்ட வார்த்தையில் அரைமணி நேரம் திட்டியதாகவும் செய்திகள் பத்திரிகையாளர்கள் மத்தியில். இந்த நேரத்தில் என்னை சூர்யாவைச் சந்தித்து அவர்களின் காதலைப் பற்றிக் கேட்கச் சொல்லியிருந்தார்கள்.


வேறு எந்தப் பத்திரிகையாளருக்குமே சந்திக்க நேரம் கொடுக்காதவர் எனக்கு மட்டும் நேரம் கொடுத்திருந்தார். அவருக்குப் பிடிக்காத இந்தக் கேள்வியைக் கேட்டு அவர் நம் மீது வைத்திருக்கும் மரியாதையைக் கெடுத்துக் கொள்ள வேண்டுமா என்று யோசனையாக இருந்தது.


அவருடைய வீட்டில் அவருடைய அம்மா தயாரிப்பில் அருமையான காபி ஒன்றைக் குடித்துவிட்டு பேச அமர்ந்தோம். சூர்யாவுக்கு ஒரு போன் வந்தது. "சரி காரில் போய்க்கிட்டே பேசுவோமா?'' என்றார்.




காரில் கிளம்பினோம். அபிராமபுரம் கடந்து கார் போய்க் கொண்டிருந்தது. நான் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அலுவலகம் எதிர்பார்க்கிற கேள்வியை இன்னும் கேட்காமலேயே வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் ஜோ பற்றியெல்லாம் கேட்க வேண்டாம் என்ற ஒப்புதலோடுதான் பேசுவதற்கே சம்மதித்திருந்தார். ஒரு வீட்டின் முன்பு கார் நின்றது. "இதோ வந்திட்றேன். இது யார் வீடு தெரியுமில்லே..?'' என்றார்.


"தெரியவில்லை'' என்றேன்.


"இது மணிரத்னம் வீடு. 'ஆய்த எழுத்து' சம்பந்தமா பேசணும்னு வரச் சொன்னார் அதான் அவசரம்'' என்றபடி காரிலேயே உட்கார்ந்திருக்கும்படி சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
கார் சீட்டில் அவருடைய பர்ஸ். கத்தையாகப் பணம். துருத்திக் கொண்டு தெரிகிறது. கார் ஏசி போட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு நம்பிக்கையாகப் பழகுகிறார் என்று பெருமையாக இருக்கிறது.


ஆனால் இனி நேரமில்லை அவர் வந்ததும் மெல்ல கொக்கி போட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். வந்தார். தி. நகர் நோக்கி கார் போய்க் கொண்டிருந்தது.


"நீங்க தப்பா நினைக்கலனா'' என்று என் கேள்வியை ஆரம்பித்தேன். அவர் புரிந்து கொண்டு திரும்பிப் பார்த்தார். நானும் அதைப் பற்றித்தான் என்பதுபோலப் பார்த்தேன்.


கொஞ்ச நேரம் கார் அமைதியாகப் போய்க் கொண்டிருந்தது. இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு சங்கடப்படுத்துகிற வேலையை நினைத்து வருத்தமாகவும் இருந்தது. "உங்களுக்கு விருப்பமில்லையென்றால் வேண்டாம்'' என்றேன்.


அவர் முகத்தில் ஒரு வினாடி வாட்டம். பின் சுதாரித்து "இந்த மாதிரி கேட்பதுதான் உங்க வேலை... ஆனா எனக்கும் கல்யாண வயசில் தங்கை இருக்கிறா. ஆனா என்னவெல்லாமோ எழுதறாங்க. நிறைய பொய் எழுதிடறாங்க. விஷயம் என்னோட முடிஞ்சுடில. வீட்ல எவ்வளவு பிரச்சினை ஏற்படுது தெரியுமா?'' என்றார்.


அலுவலக எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக 'காதல் பற்றி சூர்யா' என்று தலைப்பிட்டு அவர் கடைசியாகச் சொன்னதையே பதிலாக எழுதினேன்.


பேட்டி நன்றாக இருந்ததாக சூர்யா சொன்னார். அலுவலகத்திலும் 'சூப்பர்' என்றார்கள்.

தமிழ்மகன்

திங்கள், அக்டோபர் 06, 2008

திரைக்குப் பின்னே- 1

உயிரோசையில் என் சினிமா அனுபவ தொடர் வேலையாகிறது. அது இங்கே...

நடிகர் விஜய்யின் அப்பாவிடம் கேட்ட மறக்க முடியாத கேள்வி!




நான் சினிமா நிருபராகப் பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்கள் சுவையானவை.

தினமணியில் திரு. சம்பந்தம் ஆசிரியராக இருந்த நேரம். நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்..சந்திரசேகரன் (அப்போது எஸ்.. சந்திரசேகர்) ஆசிரியரைப் பார்க்க வந்திருந்தார்.

விஜய்யின் மூன்று படங்கள் ஒரே நேரத்தில் வெள்ளி விழா கொண்டாடிய நேரம். `பூவே உனக்காக', `ப்ரியமுடன்', `ஒன்ஸ்மோர்' என்று படங்களின் வெற்றிப் பட்டியல் வளர்ந்து கொண்டிருந்தது. அந்தச் சரியான சந்தர்ப்பத்தில் மகனுக்குத் திருமணம் வைத்திருந்தார். திருமணத்துக்கு ஆசிரியரை வரவேற்கத்தான் அவர் வந்திருந்தார்.

``பையனுக்கு கல்யாணம் வைத்திருக்கிறேன்.அவசியம் நீங்கள் வந்திருந்து வாழ்த்த வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். ``இவர் எங்கள் சினிமா எடிட்டர். இவர் வருவார். எனக்கு நேரம் இருக்குமானு தெரியலை'' என்று என்னைக் கைகாட்டினார்.

பிறகு பொதுவாக சினிமா பற்றி பேசினார்கள். எடிட்டர் ஒரு முறை சிவாஜிகணேசனைச் சந்தித்திக்க நேர்ந்ததைப் பற்றிப் பேசினார். கிளம்பும்போது சிவாஜி ``தீர்த்தம் சாப்பிட்டுட்டுப் போறீங்களா'' என்றாராம்.




அவரும் சிவாஜிகணேசன் பற்றி ஏதோ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

கிளம்பும்போது எடிட்டர் மறக்காமல் ஒரு கேள்வி கேட்டார். அந்தக் கேள்வியை எஸ்..சந்திரசேகரன் ஜென்மத்துக்கும் மறந்திருக்க மாட்டார், அவருடைய ஞாபக சக்தி வலுவானதாக இருந்தால்.

எடிட்டர் கேட்ட கேள்வி: ``பையன் என்ன பண்றாரூனு சொல்லவேயில்லையே''



சன் டி.வி. நடிகைகளும் நானும்!


சன் டி.வி. ஆரம்பித்த நேரம். சன் டி.வி. பார்க்க வேண்டுமானால் அதற்கான ஆண்டெனா ஒன்றும் வாங்க வேண்டும். அதன் விலை 12 ஆயிரம். அப்போது டி.வி.யின் விலை சுமார் 4 ஆயிரம் சன் டி.வி. பார்க்க ஆன்டெனா வாங்க 12 ஆயிரம் என்றால் யார் டி.வி. வாங்குவார்கள்? சன் டி.வி. பரவலாக அறியப்படாமலேயே இருந்தது. அந்த நேரத்தில் சன் டி.வி.க்கு பேட்டி கொடுப்பதென்றால் யாரும் சம்மதிக்கவே மாட்டார்கள். நான் அப்போது வண்ணத்திரையில் பொறுப்பாசிரியராக இருந்தேன். என்னை அணுகி நடிகைகளிடம் அனுமதி வாங்கித் தருமாறு டி.வி.யில் நிகழ்ச்சி தயாரிப்பவர்கள் கேட்பார்கள். நானும் அப்போது வளர்ந்து வரும் நிலையில் இருந்த சில நடிகைகளிடம் சன் டி.விக்குப் பேட்டியளிக்குமாறு கேட்டுக் கொண்டேன். அப்போது பல நடிகைகள் என்னிடம் வைத்த கோரிக்கை: ``வண்ணத்திரையிலும் அந்தப் பேட்டியைப் பிரசுரிப்பீர்களா?''

வண்ணத்திரையில் பேட்டி வெளியிட்டால்தான் சன் டி.வி.க்கு பேட்டி தருவேன் என்றவர்களும் உண்டு.



என் ஞாபகம் சரியாக இருந்தால் செண்பகா, வினோதினி, யுவராணி, சொர்ணா, ரேஷ்மா, மடிப்பு அம்சா உள்ளிட்ட பலர் அப்படிக் கேட்டிருக்கிறார்கள்.

தினமணிக்குப் பிறகு மீண்டும் ஒரு நடை வண்ணத்திரையில் பணியாற்றப் போனேன். வண்ணத்திரையை விளம்பரப்படுத்த சன் டி.வியில் ஏற்பாடு செய்ய வேண்டும் என இதழின் நிர்வாக இயக்குநர் தயாநிதிமாறனிடம் கோரிக்கை மேல் கோரிக்கையாக வைத்தேன். பலமுறை நோட் எழுதினேன். ஒருமுறை அவர் தோள்மீது கை போட்டபடி தெளிவாகச் சொன்னார். ``வண்ணத்திரை விளம்பரமெல்லாம் சன் டி.வி.யில போட்டா நல்லா இருக்காது தமிழ்''

உண்மைதான். வண்ணத்திரையில் பேட்டி போட்டால் சன் டி.வி.க்கு பேட்டி தருவேன் என்றவர்களில் முக்கால் வாசிப்பேர் சன் டி.வி. சீரியல்களில் பத்தோடு பதினொன்றாக நடிக்கப் போய்விட்டதை நானும் புரிந்து கொண்டேன்.




அவதாரங்களின் பின்னால்...

திரைத்துறையில் பல அரிய சாதனைகளை நிகழ்த்திவிட்டு மிக அமைதியாக இருப்பவர்களில் ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் ஒருவர். அவர் படத்தின் விளம்பரங்கள் தொடர்ந்து பத்திரிகைகளில் வெளியாகும். ஆனால் அவர் படம் எந்தப் பத்திரிகையிலும் வெளியானதில்லை. இதுவரை பலநூறு படங்களை விநியோகித்தவர். பல திரைப்படங்களைத் தயாரித்தவர். சசியை இயக்குநராக அறிமுகப்படுத்திய "ரோஜாக்கூட்டம்', விஜயகாந்தின் மார்க்கெட்டை உயர்த்திய "வானத்தைப் போல', "ரமணா', ஷங்கர், சுஜாதா, விக்ரம் கூட்டணியில் தயாரான "அந்நியன்', கமலின் "தசாவதாரம்' உள்ளிட்ட பல படங்கள் உலக அளவில் பிரபலம். ஆனால் இவர் எப்படியிருப்பார் என்று யாருக்கும் தெரியாது. "வானத்தைப் போல' திரைப்படம் ஜனாதிபதி விருது பெற்றது. அப்போதும்கூட இவர் சார்பாக இவருடைய தம்பிதான் அந்த விருதைப் பெற்றுக் கொண்டார். அவ்வளவு ஏன் ஜாக்கிசானின் நெருங்கிய நண்பர் இவர். அவருடைய ஆரம்பக்கால திரைப்படங்களில் இருந்து இந்திய வெளியீட்டு உரிமையை வாங்கித் திரையிட்டு வருகிறார். இவருடைய அழைப்பை ஏற்றுத்தான் சென்னையில் நடைபெற்ற தசாவதார பாடல் கேசட் வெளியீட்டு விழாவுக்கு அவர் வந்திருந்தார். அந்த விழா மேடையில்கூட அவர் இடம் பெறவில்லை. ஏன் விழாவுக்கேகூட வந்தாரா என்று தெரியவில்லை.



திரைப்படங்கள் தயாரிப்பது பெயருக்காகவும் புகழுக்காகவும்தானே? அது இரண்டையும் இப்படி உதறித் தள்ளுகிறாரே என்று இவரைப் பார்க்கும்போதெல்லாம் ஆச்சர்யப்பட்டுக் கேட்பேன்.

"படம் எடுப்பது நம் வேலை, அவ்வளவுதான்'' என்பார்.

சரி சினிமா எடுத்து ஆடம்பரமாக வாழ்வதில் ஆர்வம் இருக்குமா என்றால் அதுவும் இல்லை. மிக எளிமையான உடை. சாதாரண டீ சர்ட். சாதாரண பேண்ட். கைகளில் மோதிரங்கள் மின்னாது. இவ்வளவு ஏன் அவர் திருமணமும் செய்து கொள்ளவில்லை. பகட்டாகச் சுற்றித் திரிவதும்கூட இல்லை. பெரும்பாலும் பச்சை கேரட்டும் கறிவேப்பிலையும் காலை ஆகாரம்.

ஒருமுறை அவரும் நானும் வடபழனி சரவணபவன் ஓட்டலுக்குச் சென்றோம். காலை நேரம் பொங்கலும் காபியும் சாப்பிடுவதாக உத்தேசம். எங்களுக்கு பரிமாறுவதற்காக வந்த ஓட்டல் ஊழியர், வணக்கம் சார் என்றார் ஆஸ்கார் ரவியைப் பார்த்து. வணக்கமும் பொங்கலும் சொல்லி அனுப்பிவிட்டு பதற்றத்தோடு என்னிடம் கேட்டார்: "அவருக்கு என்னை எப்படித் தெரிந்தது?.. விசாரித்துச் சொல்லுங்களேன்'' என்று கேட்டுக் கொண்டார்.

காபி வைக்கப்பட்டதும் சாதாரணமாக விசாரித்தேன். இவரை உங்களுக்குத் தெரியுமா?

சர்வர் "தெரியுமே'' என்றார்.

"எப்படி?''

"டைரக்டர் சசி சாரோட கார் ஓட்டிக்கிட்டு வருவாரே?'' என்றார்.

சர்வர் போனதும் ரவி நிதானமாக விவரித்தார். "ரோஜாகூட்டம் நேரத்தில நானும் சசியும் அப்பப்ப இங்க சாப்பட வருவோம். நான் டிரைவர் வெச்சுக்கிறதில்லை. எப்பவும் நான்தான் ஓட்டிக்கிட்டு வருவேன். சசியோட டிரைவர்னு நினைச்சுட்டார் போலருக்கு'' என்றார்.
பலகோடிகள் போட்டு அவர் தயாரிக்கும் படங்களைவிட பிரமிப்பாக இருந்தது.

திங்கள், செப்டம்பர் 22, 2008

நோக்கம்

தமிழ்மகன்

உயிரோசை இதழில் கடந்தவாரம் வெளியான சிறுகதை.

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=166


அலை அடிக்கும் கடலோரம் ஆயாசமாக அமர்ந்தான் ராமன். கடல் கடந்து வருகையில் தண்ணீருக்குத் தவித்துப் போய்விட்டாள் சீதை. நடுவிலே இளைப்பார வசதியில்லா வெயில். சிவனை பூஜித்துப் புறப்படுவதாக எண்ணம் ராமனுக்கு. லட்சுமணன் இந்தப் பிராந்தியம் பாதுகாப்பானதுதானா? காட்டுவிலங்குகள் தாக்கக் கூடிய இடமா என்பதிலேயே கவனமாக இருந்தான். அவன் சற்றுத் தள்ளி நின்றவாறு இலங்காபுரி நோக்கி பார்வையிட்டுக் கொண்டிருந்தான். வானரங்கள் அங்கும் இங்கும் மரத்தடிகளிலே களைப்பாறிக் கொண்டிருந்தன.



மணல் வெளியில் ஊற்றெடுத்து சீதாபிராட்டிக்கு சுரைக்குடுவையில் நீர் முகர்ந்து கொடுத்தான் ஹனுமன். அமர்ந்து நீரை கையேந்திக் குடித்தாள் சீதா.
அவள் அருந்திய இடத்தில் மணலில் சிந்திய நீர், திட்டாகப் பரவி நின்றது. அதைக் கையால் அள்ளித் திரட்டி குழவி போலாக்கினாள் சீதா. மணலில் விளையாட விரும்பாத மனிதர் உண்டா? இல்லை எனத் தெரியும். கடவுளும் இல்லையென்று சிரித்துக் கொண்டான் ராமன்.

"ஏன் சிரிக்கிறீர்கள்? மிதிலா புரியிலோ, அயோத்தியிலோ கடற்கரையே இல்லை. இப்போது விட்டால் பிறகு எப்போது இப்படி கடற்கரையில் விளையாட முடியும்? பாற்கடலிலோ பாம்பே கதி...''

"சிரித்தது உன் விளையாட்டைப் பார்த்தல்ல. சிவபூஜையில் ஈடுபட விரும்பினேன். திரும்பிப் பார்த்தால் நீ லிங்கேஸ்வரனை கையில் ஏந்தியிருக்கிறாய்?''

"இல்லை. ராமநாதீஸ்வரன்'' ஹனுமன் உரிமையோடு பெயரிட்டான். ராமனிடம் அதே மாறாத புன்னகை.

சற்றைக்கெல்லாம் "ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய..'' ராமனின் உதடுகள் மென்மையாக உச்சரிக்கத் தொடங்கின. இமைகள் மூடியிருந்தன. ஒருக்களித்து அவனருகில் அமர்ந்து நிஷ்டையில் ஆழ்ந்தாள் சீதா. மனிதப் பிறவியெடுத்து வந்து இறைவன் தன்னைத்தானே வணங்கி மகிழும் நாடகத்தை ரஸித்துக் கொண்டிருந்தான் ஹனுமன். அவனுடைய இமைகளும் மெல்ல திரையிட்டன. ராமனின் மென்குரல் மட்டும் ஏகாந்த வெளியெங்கும் பரவி ஓடிக் கொண்டிருந்தது. யுகங்களே கரைந்து கழிந்தது போல காலம் கடந்து கரைபுரண்டு கொண்டிருந்தது. மூவருமே பிரபஞ்மெங்கும் வியாபித்து பொருளற்ற ஓர் உருவாய் எங்கும் நிறைந்து கிடப்பதாய் நினைத்தான் ஹனுமன். அக்கணமே பிரபஞ்சத்தின் ஒரு துளியாய் எங்கோ ஒரு புள்ளியாக மாறியும் தோன்றியது.

"இரவு இங்கேயே தங்கி காலை அயோத்தி நோக்கிப் புறப்படுவோமா?'' ராமன் குரல் குளிர்த் தென்றல் போல தழுவியது. சீதையும் லட்சுமணனும் ஹனுமனும் ஆமோதித்தனர்.

காலை-

வானரங்களுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு நால்வரும் வடதிசை நோக்கிப் பிரயாணத்தை ஆரம்பிக்க இருந்த நேரத்தில், இந்த வனாந்திரத்தில் லிங்கத்தை அப்படியே விட்டுவிட்டுப் போவது உசிதமில்லையென தன் வாலால் சுழற்றி இழுக்க எத்தனித்தான் ஹனுமன். மணல் லிங்கம்தானே என்ற அசிரத்தை அவன் வால் வழியே வெளிப்பட்டது. லிங்கம் உறுதியாக இருந்தது. அதீத ஆவேசத்துடன் இழுத்துப் பார்த்தான். அசைவதற்கான அறிகுறியே இல்லை. அட மணலுக்கு இத்தனை வலிமையா?

மானிட அவதாரமாயினும் முக்காலம் உணர்ந்த ராமன், இந்தச் செயலை ரசித்துக் கொண்டிருந்தான். ஹனுமன் ஆவேசத்துக்கு வால் அறுந்ததுதான் மிச்சம்.

அறுந்த வாலை மீண்டும் ஒட்ட வைத்தபடி ராமன் கேட்டான். "எதற்கிந்த ஆவேசம் ஹனுமா?''

வெட்கித் தலைகுனிந்து, "வழிபடும் நோக்கம் முடிந்தபின்பு வழியில் இப்படியொரு விக்ரகம் இருக்க வேண்டாமே என்று நினைத்தேன். இந்த மணல் திட்டை அகற்றிவிடலாம் என்று...''

"லங்காபுரிக்குச் செல்வதற்காகப் பாலம் அமைத்தோம். அதற்கான நோக்கமும் முடிந்துவிட்டது. இனிமேல் பாலம் அவசியம் என்று நினைத்தாயா?''
ஹனுமன் அலைகளுக்கிடையே கோடுபோல கிடந்த கடற்பாதையைப் பார்த்தான். எத்தனை உழைப்பு... எத்தனை உழைப்பு... எவ்வளவு பாறைகள், எவ்வளவு மணல் குவியல், எத்தனை ஆக்ரோஷமாக உருவானது இந்த பாலம்... இதையும் இந்த மணல் லிங்கத்தையும் ஒன்றென்பதா?

"ராமா நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இந்த லிங்கமும் இறைவன்தான் என்பதை அறியாமல் இல்லை. இந்த ஆளற்ற மணல் பூமியில் பராமரிக்க யாருமின்றி ஈசனை விட்டுச் செல்வதை விரும்பாமல்தான் அதை அகற்ற எண்ணினேன். அது அறியாமல் செய்த பாபம்தான். அதற்காக நல்ல நோக்கத்துக்காக உருவான பாலத்தைக் களைய நினைப்பதுபற்றி யோசிக்க முடியுமா? எதற்காக இரண்டையும் ஒப்பிட்டீர்கள் என்று எனக்கு விளக்க வேண்டும்'' தலைவணங்கி வினவினான் ஹனுமன்.

"எந்த நோக்கத்துக்காக எது உருவாக்கப்பட்டதோ அது நிறைவேறியவுடன் உருவாக்கப்பட்ட அம்சம் நோக்கத்துக்கு விரோதமாக மாறிக் கொண்டிருப்பதை நீ கவனிக்கவில்லையா? இறைவன் சிருஷ்டியில் எல்லாமே அவன் நோக்கத்துக்கு விரோதமாக மாறிக் கொண்டுதான் இருக்கிறது?''

"என்ன சொல்கிறீர்கள் பிரபோ...?''

"பதறாதே வாயு புத்ரா... இதோ இந்த வில் எதற்காக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது?''

"பாதுகாப்புக்கு..''

"யாருடைய பாதுகாப்புக்கு?''

"பிரபோ என்னைச் சோதிக்காதீர்கள்... வில்லை சிங்கமும் புலியுமா பிரயோகிக்கின்றன. மனிதன்தான் பிரயோகிக்கிறான். அவனுடைய பாதுகாப்புக்குத்தான்...''

"மனிதர்களை அழிக்கவும் அதே வில்லைத்தான் மனிதன் பயன்படுத்துகிறான்.. நடப்பது திரேதா யுகம். துவாபர யுகத்தில் ஆயுதத்தின் நோக்கம் காத்துக் கொள்வதில் இருந்து அழித்துக் கொள்வதற்காக என்று மாறிவிடும். கலியுகத்தில் ஆயுதம் செய்வது, அதை விற்பது அதை விற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது, அதற்கான சந்தையை ஏற்படுத்துவது, அப்படியான அரசியல் சூழலை நியாயப்படுத்துவது, புதிய ஆயுதங்கள் உருவாக்கும் சிந்தனையாளர்களை உருவாக்குவது, போர் செய்வது, போர் செய்யாமல் இருப்பது குறித்து விவாதிப்பது, அமைதிக்காகப் போராடுவது, போராடாமலேயே அழிப்பது, அழியாமல் இருப்பதற்கான அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவது... என ஆயுதத்தை மையப்படுத்திதான் உலகமே இயங்கும்...''

"எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரிய வேண்டாம். இந்த லிங்கமும் இந்த பாலமும்... நோக்க முரண்களாக மாறிப் போகுமா?'' கலக்கத்துடன் கேட்டான் காற்றின் மைந்தன்.

சுற்றும் முற்றும் பார்த்தான் ராமன். வனவிலங்குகள் ஏதும் தாக்க வருமோ என்பதில் கவனமாக இருந்தான் லட்சுமணன். சீதா தேவி போகும் தூரம் எண்ணி மரநிழலில் துயில் கொண்டிருந்தாள்.

"இந்த பாலம் வேண்டுமா, வேண்டாமா என கலியுகத்தில் விவாதம் பிறக்கும்... அப்போது நாம் பேசிக் கொண்டது போல அத்தனை எளிமையான விஷயமாக இது இருக்காது''


சபர்மதி ஆஸ்ரமத்தில் நேரு, படேல் இருவருமே மகாத்மா காந்தியிடம் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.

"சுதந்திரத்தை அடைவதுதான் நம் நோக்கமாக இருந்தது. அதற்காகத்தான் இந்தப் பேரியக்கம். சுதந்திரம் கிடைத்ததுமே நாம் அதை கலைத்துவிடுவதுதான் சரி. இதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை''

"ஏற்றுக் கொள்கிறோம். இப்போது ஆட்சி அமைப்பது யார்? புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கி அதை மக்கள் மத்தியில் பதியச் செய்து ஆட்சியைப் பிடிப்பது சாத்தியமா?'' நேரு தன் குல்லாவைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு தலையைத் தடவிக் கொண்டார். அவருடைய வழுக்கைத் தலை வியர்த்திருந்தது.

"இப்போது சாத்தியமில்லை போலத் தோன்றும். பின்னர் இதே கட்சி நூறு கட்சியாக சிதறுண்டு போகும். காங்கிரஸ் பேரியக்கம். வேறு அற்பக் காரணங்களுக்காக - தனிமனித விருப்பு வெறுப்புகளுக்காக வெவ்வேறு தலைமையில் துண்டுபட்டு நிற்கும். அப்போது மக்கள் தங்களுக்குப் பாடுபடப் போகிறவர்கள் யார் என்று தீர்மானிக்கத்தான் போகிறார்கள். அதை இப்போதே செய்துவிட்டால் காங்கிரஸýக்கு நற் பெயர் மிஞ்சும்.'' காந்தி தீர்மானமாகச் சொன்னார். நேரு, படேலைப் பார்த்தார். தனித் தனி ராஜாங்கமாகச் சிதறுண்டு கிடந்த மாநிலங்களை ஒன்று சேர்த்த இரும்பு மனிதர் படேல், மகாத்மாவின் தர்மத்தையும் நேருவின் நியாயத்தையும் மனத்தராசில் நிறுத்திப் பார்த்தார். விவாதம் முற்று பெறாமலேயே பிரிந்தனர்.

இந்தியச் சுதந்திரம் இந்து} முஸ்லிம் கலவரத்துக்கிடையே பிறந்தது. காந்தி கசப்பான சூழலில் எல்லோரையும் போல அவராலும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை. தில்லியில் நேரு சுதந்திரக் கொடியை ஏற்றும்போது கல்கத்தாவில் வகுப்புக் கலவரம் நடந்து கொண்டிருந்த பகுதியில் அவர் அமைதிக்காகப் போராடிக் கொண்டிருந்தார்.

பாகிஸ்தானில் இருந்து அகதியாக இந்தியா வந்தவர்கள், இந்தியாவில் இருந்து அகதிகளாக பாகிஸ்தான் சென்றவர்கள் என்று நாட்டில் ரத்த ஆறு ஓடியது. இரு தரப்பு இழப்புகளுக்கும் அவர் வருந்தினார். "பாகிஸ்தான் சென்று அங்குள்ள இந்துக்களுக்கு ஆறுதல் சொல்லலாம் என்றால் இங்கும் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே... நான் எந்த முகத்தோடு பாகிஸ்தான் இந்துக்களுக்கு ஆறுதல் சொல்ல முடியும்?'' உலக உத்தமரின் பேச்சில் அதீத வருத்தம் வெளிப்பட்டது.

பிர்லா மாளிகையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மகாத்மா மீது சிலருக்குக் கோபம். ஒருவன் மாளிகைக்கே வந்து குண்டு வீசிவிட்டுப் போனான். அவர் இந்துக்கள் மீதுமட்டும் பரிவு காட்ட வேண்டும் என்பது அவனுடைய ஆசை. அடுத்த சில நாளில் பாகிஸ்தானில் இருந்து வந்திருந்த அகதிகள் காந்தியைச் சந்தித்தனர். கூட்டத்தில் இருந்த ஒரு கோபக்கார இளைஞன். ""உங்களால்தான் நாங்கள் இப்படி ஆனோம். நீங்கள் பேசாமல் இமயமலைக்குப் போய்விடுங்கள்'' என்று கத்தினான். அவனை சமாதானம் செய்து அழைத்துப் போனார்கள்.
""வெள்ளையனை இந்தியாவைவிட்டு வெளியேற்றுவதற்காகப் பாடுபட்டவரை இந்தியாவைவிட்டு வெளியேற்றப் பார்க்கிறார்களே'' பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்த புண்ணியவான் ஒருவர் மனம் நொந்து புலம்பினார்.
மறுநாள் ஜனவரி 30, 1948. உலகப்பிதா காந்தியை முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற காரணத்துக்காக கோட்சே என்பவன் சுட்டுக் கொன்றுவிட்டான். இறக்கும்போது "ஹேராம்' என்றபடி தரையில் சாய்ந்தார் மகாத்மா.

"இந்த பூமியில் இப்படியொரு மகாபுருஷர் ஒருவர் வாழ்ந்தார் என்பதை வருங்காலத் தலைமுறையினர் நம்புவதுகூடச் சிரமமானதாக இருக்கும்'' என்றார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

"சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் இருக்கக் கூடாது என்றார் காந்தி. அவரையே இருக்கக் கூடாதுனு சொல்லிப்புட்டான் நம்ம ஆளு. இந்தியாவுக்கு காந்திதேசம்னு பெயர் வைக்கச் சொல்லி தலையங்கம் எழுதப் போறேன்'' என்று தம் தோழர்களிடம் கூறிக் கொண்டிருந்தார் பெரியார்.


மனிதனுக்குத்தான் திரேதாயுகம் கலியுகம் எல்லாம். மகாவிஷ்ணுவுக்கு...? ஹனுமனை அழைத்துச் சொன்னார்: "ராம அவதாரத்தில் சொன்னது ஞாபகம் இருக்கிறதா? பூலோகத்தில் நடப்பதைப் பார்த்தாயா?''

"கொடுமை.. இறைவனுடைய நோக்கம் என்று ஒன்று இல்லையா? எல்லாமே மனிதர்களின் செயலாக அல்லவா இருக்கிறது?''

"இறைவன் நோக்கமற்றவன். இல்லையென்றால் கொலைகளுக்கும் பூகம்பத்துக்கும் மதக் கலவரத்துக்கும் அவன் பொறுப்பேற்க வேண்டியதாகிவிடும். மனித சாபம் பொல்லாதது ஹனுமா''

"அப்படியானால் இறைவனின் வேலை?''

"இறைவனாக இருப்பதுதான்''

மகாவிஷ்ணுவின் மாறாத புன்னகை. ஹனுமன் "சரி நான் கிளம்புகிறேன்'' என்றான்.

"நாளை வா... இன்னொரு காட்சியிருக்கிறது''

"சரி'' வாயு மகன் விரைந்தான்.


அரசு உறுதியாக இருந்தது. "சேது சமுத்திர திட்டம் நிறைவேறியே தீரும். சேது மணல் திட்டு பகுதியில் 300 மீட்டர் பகுதியை ஆழப்படுத்துவதன் மூலம் கப்பல் போக்குவரத்து நடைபெறும். இந்தியா முன்னேறும். இது ஒரு தொலை நோக்குத் திட்டம். சற்றேறக் குறைய 150 ஆண்டுகளாகவே சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற பல அரசுகள் போராடி வந்திருக்கின்றன. எங்கள் ஆட்சியில் இது நிறைவேறுகிறது என்பதுதான் இவர்களின் ஆத்திரத்துக்குக் காரணம்.''- முதல்வர் அறிக்கை சூடாக இருந்தது.

"இந்து மக்களின் புனிதச் சின்னமான ராமர் பாலத்தை இடித்தால் கலவரம் வெடிக்கும். உலமெங்கும் இருக்கும் ஹிந்துக்களின் புனிதச் சின்னமான இதை இடிப்பதால் இவர்கள் அரசியல் செல்வாக்கு சரிந்துவிட்டது. உடனே ஆட்சியைக் கலைக்க வேண்டும். மறு தேர்தலுக்கு உத்தரவிடவேண்டும்.'' -எதிர்க் கட்சிகளும் ஹிந்து அமைப்புகளும் பதில் அறிக்கை வெளியிட்டன.


"ராமேஸ்வரம் பகுதியில் கப்பல் போக்குவரத்து துவங்குவதன் மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று அந்தமான் நிக்கோபார் பகுதிவரை சென்று மீன் பிடிக்கலாம். சர்வதேச கப்பல்கள் வருவதால் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கும். தமிழகம் சிங்கப்பூராகும். அது ராமர் கட்டினார் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. சின்னச் சின்ன மணல் திட்டுகள் அவ்வளவே.''- ஓர் அறிஞர்.

"கப்பல் வந்தால் ராமேஸ்வரம் கடற்பகுதி பவழப் பாறைகள் பாதிக்கப்படும்.பல கடல் உயிரினங்கள் செத்து மடியும். அதில் சிறிய கப்பல்கள் மட்டுமே செல்ல முடியும். சர்வதேச கப்பல்கள் அவ்வளவு குறைந்த ஆழத்தில் பயணிக்க முடியாது.'' - தினமானி நாளிதழ் கட்டுரை வெளியிட்டது.



(மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில் இருவர்)
"நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்துனு கடற்படை அதிகாரி சொல்லியிருக்கிறாரு. அப்படியிருந்தும் இந்தத் திட்டத்தை அமல் படுத்துவதில் முதல்வருக்கு ஏன் இவ்ளோ அக்கறை? இதனால பல கோடி கொள்ளை அடிக்கலாங்கிற திட்டம்தான் அது.''

"அதான் ஒரு ஆபத்தும் இல்லனு அமைச்சர் சொல்லிட்டாரே. திட்டம் முடிவாகி ரெண்டு வருஷம் கழிச்சி எதிர்த்துக் குரல் கொடுக்கிறாங்களே.. இவனுங்களுக்குப் பங்கு சரியா வந்து சேரலைனு இப்படி தகராறு பண்றானுங்களோ என்னமோ?''

"என்ன பிரபோ இந்தக் காட்சிகளைப் பார்க்கவா என்னை வரச் சொன்னீர்கள். பெருங்கவலையாக இருக்கிறது. அப்போதே இந்தப் பாலத்தை அகற்றியிருக்கலாம் என்று தோன்றுகிறது.''

"கடவுளாகவே இருந்துவிடுவதுதான் கவலையை மறப்பதற்கு ஒரே வழி'' விஷ்ணு புன்னகைத்தார். பல நெடுங்காலமாய் படுத்துக் கொண்டே இருக்கும் அவருக்குக் கால்களைப் பிடித்துவிட்டு பணிவிடை செய்து கொண்டிருந்தாள் மகாலட்சுமி. "ஏன் இப்படி கால் அழுத்திக் கொண்டிருக்கிறீர்கள் தேவி?'' என்று ஹனுமன் பேச்சை மாற்றினார்.

"பார்க்கிறாய் அல்லவா, சினிமாவிலும் காலண்டிரிலும் என்னை இப்படித்தான் படம் போடுகிறார்கள். எனக்கும் அதைப் பார்த்து அதே பழக்கம் வந்துவிட்டது.'' தேவி சிரித்தபடியே "உள்ளங்கையில் இருந்து பொற்காசுகளாக பிரவகிப்பதற்கு இது எவ்வளவோ மேல். வேறு என்னதான் செய்வதென்று எனக்கும் புரியவில்லை.''

இறைவியின் கிண்டலை ரசித்தபடி அங்கிருந்து புறப்பட்டான் ஹனுமன்.

""அந்த இடத்துக்கு நேரே வானத்திலேயே பெர்னூலியா சற்று நேரம் நின்றது. அது ஒரு விண் கப்பல்.
""இவ்வளவு பணம் கட்டி வந்து பார்த்துவிட்டுப் போவது நாகரீகமாகிவிட்டது. குளோபல் வார்மிங் நிலப்பரப்பைச் சுருக்குவிட்டபின், மூழ்கிப் போன ஏராளமான கடற்கரைகளைக் காட்டி பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்'' முதியவர் வேண்டா வெறுப்பாகப் பேசினாலும் கோவிலின் கோபுரம் தெரிகிறதா என்று பார்த்தார். ஆழ்கடலில் எல்லாமும் ஒரே மாதிரிதான் தெரிந்தது.
""பூம்புகார் கடல் கொண்டபோது செட்டியார் வம்சத்தினர் நீரே இல்லாத மேடான இடத்தில் குடியேற விரும்பி சிவகங்கை பகுதிக்குப் போய், பத்துபடி உயரத்தில்தான் வீட்டையே கட்டினார்கள். அவர்கள் கணித்தபடி இப்போது கடல், சிவகங்கை பகுதி வரை வந்து நிற்கிறது. இதோ இதுதான் ராமேஸ்வரம்.. சென்ற முறை வந்த போது ஓரளவுக்குத் தெரிந்தது'' என்றார் கைடு.
கீழே கடலில் வழக்கமான கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது.

நாராயணன் அப்போதும் கடவுளாகவே இருந்தார்.

tamilmagan2000@gmail.com

சனி, செப்டம்பர் 13, 2008

காலபிம்பம்

இம்மாத உயிர் எழுத்து இதழில் வெளியான என் சிறுகதை


கொஞ்ச காலமாகத்தான் இப்படியெல்லாம். நான் காலமில்லாதவனாக மாறிவிட்டதாக ஒரு உணர்வு. காலமில்லாதவனுக்கு கொஞ்ச காலம் ஏது?

பைக்கில் சென்று கொண்டிருக்கும் போதுதான் முதன்முதலில் இத்தகைய உணர்வு ஏற்பட்டதாக ஞாபகம்.ரெட்ஹில்ஸிலிருந்து காரனோடைக்குப் போகும் வழியில் இப்படி ஏற்பட்டது. காரனோடையிலிருந்து ரெட்ஹில்ஸ் போகிறோமா, அல்லது ரெட்ஹில்ஸிலிருந்து காரனோடைக்குப் போய்க் கொண்டிருக்கிறோமா என்ற குழப்பம். சுமார் 35 ஆண்டுகளாகப் போய் வந்து கொண்டிருக்கிற ஒரு சாலையில் எனக்கு இப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டது அசாதாரணமாகப்பட்டது.

வீட்டுக்கு வந்ததும் ஜானகிராமனைச் சந்தித்துச் சொன்னேன். ""ஞாயிற்றுக் கிழமை அடிச்சது தெளியலையா'' என்று அவன் அடித்தக் கிண்டலுக்கு நானும் சேர்ந்து சிரித்துவிட்டு மறந்துவிட்டேன்.

அடுத்து அதே அனுபவம். ஆனால் இந்த முறை திசைக் குழப்பத்தோடு நான் போய்க் கொண்டிருப்பது இன்றிலா, நேற்றிலா என்ற குழப்பம். எதிரில் வரும் லாரி, பஸ், சைக்கிள் காரன் எல்லோரையும் மலைத்துப் போய் பார்க்கிறேன். இவர்கள் எல்லாம் நேற்று மனிதர்களா, நாளை மனிதர்களா என்று அலை பாய்ந்தது மனம்.

இந்த முறை ஜானகிராமனிடம் சொல்வதற்குப் பயமாக இருந்தது. மனைவியிடம் சொன்னேன். "இந்த மாதிரி புக்கையெல்லாம் படிச்சா இப்படித்தான் உளறுவீங்க'' என்று "கேஸ் ஹிஸ்ட்ரி ஆஃப் சிக்மண்ட் பிராய்டை'க் காண்பித்தாள். அதில் லெஸ்பியன் பற்றியும் ஹோமோ செக்ஸ் பற்றியும்தான் நிறைய அலசியிருந்தார். அதற்கும் நேற்று மனிதர்களுக்கும் சம்பந்தமிருப்பதாகத் தெரியவில்லை.

சைக்யாட்ரிட்ரிஸ்ட் மீதிருந்த அவநம்பிக்கை காரணமாக மாற்று மார்க்கங்கள் குறித்தே யோசிக்க ஆரம்பித்தேன். "பெரிய பாளையம் பக்கத்தில் ஒரு மூனீஸ்வரன் கோவில் இருக்கிறது. தாயத்து மந்தரித்துக் கட்டினால் நான்கு வாரத்தில் எப்பேர் பட்ட பேயும் தலைதெறிக்க ஓடிடும்' என்றான் கருணாகரன். இந்த மாதிரி அதீத குழப்பங்களுக்கு யாரை அணுகுவது என்பதற்கே வழி தெரியாத நிலையை முதன் முறையாக உணர்ந்தேன். இத்தகைய மனப் பிம்பங்கள் இப்போதுதான் உலகத்தில் முதன் முறையாக ஏற்படுகிறதா? இல்லை எல்லா விஷயத்திலும் பின் தங்கியிருப்பதுபோல இந்தப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் இந்தியாவில் இன்னும் எட்டப்படவேயில்லையா? நான்தான் பலிகடாவா?

"அதெல்லாம் ஒன்றும் இல்லை. சரியாகத் தூக்கமில்லையென்றால் இப்படி ஆவது சகஜம்தான்'' என்று தேற்றினாள் அலுவலகத் தோழி. இதிலே சற்றே நியாயம் இருப்பதாக ஏற்று ஒரு வாரம் நகர்ந்தது.

இந்த முறை மேலும் வித்தியாசமான கால ஊர்வலம். என்னுடைய பொது மேலாளர் எங்களின் போட்டியாளர்கள் மேற் கொண்டுவரும் புதிய உத்திகள் பற்றியும் அதை எதிர் கொள்வது சம்பந்தமாகவும் பேச அழைத்திருந்தார்.
நீரேற்று மோட்டர் வகைகளில் சப் மெர்ஸிபள் மோட்டர்களுக்குத்தான் அதிக மவுசு ஏற்பட்டிருப்பதையும் விரைவில் அரை குதிரைத் திறன் மோட்டர்களும் உருவாக்குவது நல்லது என்றும் கூறிக் கொண்டிருந்தேன்.

"எப்படி சொல்கிறாய்?'' என்றார்.

"சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லார் வீட்டிலேயும் ஒரு ஆறு அங்குல போர் போட்டு நீர் எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. சென்னையின் இட நெருக்கடி அப்படி.... அதனால்'' இப்படி நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதுதான் அந்த நிலைமை ஏற்பட்டது. என் பொது மேலாளர் எனக்கு ஐந்து வயது சிறுவனாகவும் 90 வயது கிழவராகவும் கணப் பொழுதில் மாறி மாறித் தோன்றினார்.

அவருடைய முன் வழுக்கையும் தொப்பையும் ப்ரெஞ்ச் பேட் தாடியும் ரேமண்ட் சூட்டும் சட்டென மறைந்து அரை நிஜார் போட்டு பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனாக அவரைப் பார்த்தேன். தொண்டு கிழமாக அப்பல்லோ ஹாஸ்பிடல் ஸ்ட்ரெச்சரில் இருப்பதாக இன்னொரு தரிசனம். இதென்ன விபரீதம் என்று தோன்றியது. அலுவலக ரிஸப்னனிஸ்ட் ஜட்டி அணிந்த குழந்தையாகவும் ஐம்பது வயது பெண்ணாகவும் 75 வயது மூதாட்டியாகவும் ஏடாகூடமாகத் தோன்றி மறைந்த போது எனக்கு ஏற்பட்டிருக்கும் அடுத்த சங்கடத்தைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

இது தூக்கக் குறைவினால் அல்ல.

நிலை கொள்ளாமல் தவித்தது மனசு. அஞ்சுவதா, மகிழ்வதா என்று தெரியவில்லை. யாரிடம் சொன்னாலும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். நாள்போக்கில் நானாகவே யாரிடமும் இதைப் பற்றிச் சொல்ல வேண்டாம் என்று தவிர்த்துவிட்டேன். சாலையில் நடக்கும் போது கரண்ட் பில் கட்டும்போது டி.வி. பார்க்கும்போது என்று எந்த சமயம் என்று இல்லாமல் நான் கால ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தேன்.

ஒரு நப்பாசைதான்... மேடவாக்கம் மனநோய் மருத்துவமனைக்குச் சென்று அவுட் பேஷண்ட் க்யூவில் நின்று டாக்டரைச் சந்தித்தேன். குடியை நிறுத்த, பதட்டம் குறைய, தூக்கமில்லாமல் தவிப்பதைத் தவிர்க்க என.. பைத்தியம் என்று ஓரங்கட்டுவதற்கு முந்தைய நிறைய பிரிவுகள் இருக்கத்தான் செய்தன.
டாக்டர் பொதுவாக ""என்ன செய்கிறது'' என்றார்.

"காலம் குழப்பமா இருக்கு.. உதாரணத்துக்கு''

"ஏம்பா டீ சொன்னனே'' என்றார் கதவுப்பக்கம் பார்த்து. "சொல்லுங்க''

அந்த அவகாசத்தில் வார்த்தைகளை இன்னும் கொஞ்சம் சரி செய்து "எனக்குக் கொஞ்ச நாளா விநோத பிரச்சினை சார். மூன்று காலங்களும் ஒரே நேரத்தில தெரியுது''

"மூன்று காலம்னா?''

"உதாரணத்துக்கு நீங்கள் குழந்தையில் இரண்டாவது படிக்கிற சிறுவனாக எப்படி இருந்தீர்கள் என்று தோன்றுகிறது. கொஞ்ச நேரத்தில் ரிடையர்ட் ஆகி பார்க்கில் வாக்கிங் போய்விட்டு ஓர் ஓரமாக உட்கார்ந்திருக்கிற முதியவராகத் தெரிகிறீர்கள். இதோ எதிரில் இப்போதிருக்கிறமாதிரியும் தெரிகிறீர்கள். குழந்தையின் புன்னகையும் முதியவரின் முகச் சுருக்கமும் ஒரே...''
எந்தவித சலனமும் காட்டாமல் ஏதோ எழுதினார். அதே நிலையில் "எவ்ளோ நாளா?'' என்று தெரிந்து கொண்டு "மூணாவது கவுண்டர்ல காட்டுங்க'' என்று ரசீது கொடுத்தார்.

"நீங்கள் சரியாக உள்வாங்கிக் கொண்டீர்களா? என்னை நிமிர்ந்துகூட பார்க்காமல் சீட்டு கொடுக்கறீர்களே?''

"இங்கு வருகிறவர்கள் எல்லாருக்கும் நமக்கு மட்டும் ஏதோ விபரீதமாக நடப்பதாக நினைக்கிறார்கள். நான் உங்களை மாதிரி ஒரு நாளைக்கு நூறு பேரை பார்க்கிறேன்''

"நிஜமாக என்னை மாதிரி நூறு பேர் இருக்கிறார்களா?... அது போதும் எனக்கு. எனக்கு மட்டும்தான் இப்படி இருக்கிறதென்று நினைத்து பயந்துவிட்டேன்.''

என்ன நினைத்தாரோ ""என்ன நடக்குது உங்களுக்கு முழுசாகச் சொல்லுங்கள்'' என்றார்.

"போன வாரம் கிருஷ்ண ஜெயந்தி. வீட்ல கட்டில்ல படுத்துகிட்டு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தேன். "கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்'னு ரேடியோவில பாட்டு. திடீரென்று கண்ணன் இறந்தக் காட்சி ஞாபகம் வந்தது. பாரதப் போரும் பகவத்கீதையும் உலகுக்குத் தெரிவித்த மகா உண்மைகளின் அசை போடலோடு கண்ணன் ஒரு வனத்தில் படுத்திருக்கிறார். கால்மேல் கால் போட்டு படுத்தபடி காலாட்டிக் கொண்டிருக்கிறார். அவருடைய கால் கட்டை விரலைப் பார்த்து வேடன் ஒருவன் பாம்பென்று நினைத்து அம்பெய்துகிறான். கண்ணன் எதிர்பார்த்திருந்த தனக்கான முடிவை ரசித்து புன்னகையுடன் கண்ணை மூடுகிறான். கண்ணன் இறந்து விட்டான் என்ற செய்தி அறிந்து மதுராவே கொந்தளிக்கிறது. கொன்ற வேடனை கொலை வெறியோடு துரத்துகிறது.....''

"கற்பனை உலகில் சஞ்சரிக்கிற இந்த மனநோய் நீங்கள் நினைக்கிற மாதிரி ரொம்ப புதுசானது இல்லை. டான் க்விக் ஸôட் படித்திருக்கிறீர்களா?''

"அவன் கதைக்கும் எனக்கும் முக்கிய வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறேன். நான் எந்த விஷயத்திலும் மூன்று காலங்களோடு ஊடாடுகிறேன்''

"ஈ.எஸ்.பி. சம்பந்தமாக ஏதாவது புத்தகம் படித்தீர்களா?''

"இல்லையே... எனக்கு அதில் நம்பிக்கையும் இல்லை''

"எல்லாவற்றையும் முன்கூட்டியே கணித்துவிடுவதாக ஏதாவது சம்பவம் நடந்திருக்கிறதா?''

"அதையெல்லாம் நான் கவனிக்கவில்லை. அது சோதிடம் பார்ப்பதுபோல ஆகிவிடும்.''

"எதிர்காலத்தை முன்கூட்டியே திறந்து பார்த்துவிடுவதில் மனிதனுக்கு ஒரு ஆசைதான். அது மாதிரி உங்களுக்கு ஏதாவது இருக்கலாம். நீங்கள் மூன்றாவது கவுண்டருக்குப் போய் மாத்திரை வாங்கிச் செல்லுங்கள். தேவைப்பட்டால் அடுத்த மாதம் வாருங்கள்''

டாக்டருக்கு அதற்கு மேல் பொறுமையில்லை. மூன்றாவது கவுண்டருக்குச் செல்லாமலேயே வெளியே வந்தேன். பெசன்ட் நகரில் ஆன்மீக ஞானி அஷ்வகோஷ் வந்திருப்பதாக அங்கு செல்லும் பஸ் ஒன்றிலேயே சின்னதாக போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். அவர் யாரென்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அந்தப் போஸ்டரில் என்னைக் கவரும் அம்சம் ஒன்று இருந்தது. அவர் முக்காலமும் உணர்ந்தவர் என்று போட்டிருந்தது.
மாலை ஆறுமணிக்குத்தான் அவருடைய பிரசங்கம் என்றார்கள். நான் அவரைத் தனிமையில் சந்திக்க வேண்டும் என்றேன். "நீங்கள் "ஈஷா யோக சம்பூர்ணா' முடித்தவரா?'' என்றார்கள். அவர்கள் கேட்பது பற்றி எனக்கு ஒன்றும் புரியவில்லை.

""வருகிற வழியில் பரங்கி மலையைப் பார்த்தேன். கண நேரத்தில் அது அங்கு தோன்றாத காலத்தையும் தோன்றி பின் இல்லாமல் போன காலத்தையும் பார்த்தேன். எனக்கு பயமாகவும் பரவசமாகவும் இருக்கிறது. அதை ஞானியிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்''

ஆழ்ந்து பார்த்தார் வெள்ளுடை தரித்து நரைத்த தாடியும் தாழ்ந்து நோக்கும் பார்வையும் கொண்ட அந்த ஆஸ்ரமவாசி. "இங்கே அமர்ந்திருங்கள். சுவாமிகள் பார்க்க விரும்பினால் அழைக்கிறேன்'' என்றார்.
நான் அமர்ந்திருந்தேன்.

இருபது நிமிடங்கள் கழித்து உள்ளே அழைக்கப்பட்டேன். சற்றே இருளும் குளுமையுமான அறை. எங்கிருந்து கசிகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாத நீலநிற ஒளிக்கிரணம் வியாபித்திருந்தது.

"ஆங்கிலத்தில் பேசுவீர்களா?''
தலையசைத்து, "என்னையும் கடந்து நான் இயங்குகிறேன். நான் என்பது இந்த உடலுக்கு வெளியிலும் செயல்படுவதாக உணர்கிறேன். அதாவது நான் இந்த அறைக்கு வெளியிலும் பிரக்ஞை கொள்கிறேன்.''

"அறைக்கு வெளியில் நடக்கும் சம்பவம் உங்களுக்குத் தெரிகிறதா?''

"இடத்தைப் போலவே காலமும் எனக்கு ஒரு பொருட்டாக இல்லை. மனித இனம் தோன்றிவிட்டதா?, ராஜராஜசோழன் காலமா? என்பதெல்லாம் ஒரு பொருட்டாக இல்லாத மனநிலை ஏற்படுகிறது. பொதுவாக வெளியே என்ன நடக்கிறதோ அது மனப்புயல் பிம்பமாக சுழல்கிறது. வெளியே யாரோ சிலர் உங்களைப் பார்க்க வருகிறார்கள். சோனியா காந்தி காங்கிரஸ் உயர் மட்டக் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். குடகுமலையில் ஒரு ஆதிவாசி தேனெடுத்துக் கொண்டிருக்கிறான். கங்கையில் மீன்கள் துள்ளுகின்றன. சாதிக் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. அலுவலகத்தில் யாரையோ யாரோ புறம் பேசுகிறார்கள். நியூஜெர்ஸியில் ஒரு சாலை விபத்து. எங்கோ எதற்கோ சதி திட்டம் தீட்டுகிறார்கள். ராக்கெட் விடுகிறார்கள். இன விடுதலைக்காகப் போராடுகிறார்கள். தங்கள் மொழியே சிறந்தது என்கிறார்கள். வரதட்சணை, சினிமா ரசிகன், இண்டெர்நெட்...டிசம்பர்}6, செப்டம்பர்}11 எல்லாமே அந்தச் சுழலில் துகள்கள் போல சிக்கிச் சுழல்கின்றன.''

ஞானி சிரித்தார். "ஒன்றின் ஒரு கோடி மாயத்தோற்றங்கள்'' என்றார்.

"ஒரு கணத்தில் ஒரு யுகம்... ஒரு யுகத்தில் ஒரு கணம்'' என்றேன். அவர் என்னைப் புரிந்து கொள்வது தெரிந்தது.

நெருங்கி வந்து தோளில் வாஞ்சையுடன் தொட்டார்.

"இணையத்தில் எல்லாம் இருக்கிறது, பரமாத்மா போல. நாம் அதன் பலகோடியில் ஒரு துகளைத் துய்க்கும் ஜீவாத்மாக்கள்...''

ஞானி மீண்டும் சிரித்தார்... "உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை, அப்படித்தானே?''

"ஆமாம்''

"உங்களைப் போன்ற ஒருவரைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். என்னுடன் அமெரிக்கா வருகிறீர்களா ஆஸ்ரம வேலைகளுக்கு?'' என்றார்.

"நானா?''

"முக்காலம் உணர்தல் என்பதே அறியாமைதான்... நான்கு காலம் உணர்ந்தவர் நீங்கள்... நான்காவது காலமான இடைதூரம் பிடிபட்டிருக்கிறது உங்களுக்கு..''
நான் ஆச்சர்யமாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் புன்னகையுடன் வெளியே சென்றார். தியான அமைதியா, மயான அமைதியா என்று புரிபடவில்லை.

வெள்ளி, ஆகஸ்ட் 08, 2008

அடுத்த பக்கம் பார்க்க

பாவம்... இன்னும் சொல்லவில்லை. சொன்னால் இடிந்து போகும். வந்ததிலிருந்து
தவித்துக் கொண்டிருக்கிறது. முப்பது முத்தம் கணக்காயிருக்கிறது. "வீணையடி
நீ எனக்கு'' என்று பாட்டு பாடுகிறது.

`ஆடி மாதம். ஒரு மாத அஞ்ஞாத வாசம். உன்னையும் என்னையும் பிரித்து இன்றோடு
முப்பதாறு நாட்கள். உன்னைப் போல் நானும் கணக்கு வைத்திருக்கிறேன்
கண்ணா... நீ நேற்று வந்திருக்க வேண்டும். முப்பத்தாறோடு இன்னொரு மூன்று
நாள்களைக் கூட்டிக்கொள்.'
தாழ்வாரத்தில் இருந்து பார்க்கிறபோது அது படித்துக் கொண்டிருப்பது
தெரிகிறது. பாவம், வெகுநேரமாகப் படித்துக் கொண்டிருப்பது மாதிரி பாசாங்கு
செய்து கொண்டிருக்கிறது.' செண்பகத்துக்கு தன் கணவனுக்கு இன்னும் சற்று
நேரத்தில் தரப்போகிற ஏமாற்றத்தை நினைத்து கொஞ்சம் சிரிப்பாகவும்
இருந்தது.
செண்பகம் மாட்டுத் தொழுவத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்கை
அணைத்துவிட்டு, புழக்கடை கதவு பூட்டப்பட்டு விட்டதா? என்று பார்த்தாள்.
வழக்கமாக இதையெல்லாம் அவள் பார்ப்பதில்லை. செண்பகத்தின் அம்மா பார்த்துக்
கொள்கிற வேலைகள். நேரம் கடத்துவதற்காக இதையெல்லாம் செண்பகம் செய்து
கொண்டிருந்தாள். வழக்கமாகக் காலையில் தேய்க்கிற பாத்திரங்களையும்,
எடுத்துப் போட்டு இப்போதே தேய்த்தாகிவிட்டது.
கட்டிலறைக்குப் போகாமல் இருக்க இன்னும் ஏதேனும் வேலைகள் இருக்குமா?
என்றும் பார்த்தாள். அது மூடிதான் இருந்தது.
ஏற்கனவே, அவள் அம்மாவும் அப்பாவும் தூங்கியாயிற்று.
ஒன்பதாகிவிட்டது.
"தான் மட்டும்தான் இப்போது ஊரில் விழித்துக் கொண்டிருப்பவளோ'
என்று கூட தோன்றியது.
மெல்ல கட்டில் இருந்த அறைப் பக்கம் வந்து நின்றாள்.
சந்திரன் காத்திருந்தவன் மாதிரி நிமிர்ந்தான். "முடிஞ்சுதா?... இன்னும்
வேலை பாக்கியிருக்கா?'' என்றான்.
செண்பகம் இன்னமும் வாசல் படியைப் பிடித்துக் கொண்டே நின்றாள்.
"நீ
இன்னும் தூங்கலையா?'' என்றாள். அதற்குள் அவளுக்குச் சிரிப்பு வந்தது.
சந்திரன், "விளையாட்றாயா?'' என்றான்.
"இல்லப்பா... நிஜமாதான். நீ ஏன் தூங்கல?''
கொஞ்ச நேரம் பார்த்தான். "ஏன் தூங்கலையா? இங்க வா சொல்றேன்''
என்று எழுந்தான்.
இன்னும் சொல்ல முடியவில்லை. சந்திரன் எழுந்து வந்து பலாத்காரமாய்த்
தூக்கிக் கட்டிலில் போட்டான்.
"ஹேய்... நா சொல்றத....'' என்று ஆரம்பித்தவளை முத்தத்தால் அடக்கினான்.
பிறகு "சொல்லு?'' என்றான்.
"நா இன்னைக்கு கீழ படுத்துக்கிறேன். நீ மட்டும் "கட்டில்டல படுத்துக்க...''
முகம் வாடிப் போய்விட்டது. இன்னேரம் அதற்குப் புரிந்திருக்க வேண்டும்.
இருந்தாலும் சைகையிலேயே... "ஏன்?' என்றது.
தலையில் எண்ணெய் தேய்ப்பது மாதிரி பாவனை செய்தாள்.
இடுப்பைச் சுற்றியிருந்த சந்திரனின் கைகள் இறுக்கத்தைத் தளர்த்தின.
பரிதாபமாய் செண்பகத்தின் முகத்தைப் பார்த்தான்.
"ஹேய்?... பொய்தானே?''
செண்பகத்துக்கு மிகவும் பரிதாபமாய் இருந்தது. சிரிப்பு வரவில்லை.
"நிஜமாத்தான்'' என்றாள்.
அப்படியே சரிந்து தலையணையில் விழுந்தான்.
பேச்சில்லை... "வீணையடி...' பாட்டில்லை. சிரிப்பில்லை. அசையாது
படுத்திருந்தான்.
செண்பகம் தலைமாட்டில் தட்டில் இருந்த அதிரசத்தை இவன் பக்கம் எடுத்து
வைத்து "சாப்பிடு'' என்றாள்.
சந்திரன், ஏமாற்றத்தை மறைக்க முயன்று "ஏற்கனவே அஞ்சு சாப்டாச்சு'' என்றான்.
செண்பகம் எழுந்து விளக்கை அணைத்துவிட்டு ஃபேன் ரெகுலேட்டரை மூன்றுக்குத்
திருப்பிவிட்டு வந்து படுத்தாள்.
அரைமணி நேரமாய்த் தூங்குவதற்கு முயன்று, "சர்ட்டி'லிருந்து
சிகரெட்டையும், தீப்பெட்டியும் எடுத்துக் கொண்டு மாடிக்குப் போனான்.
எத்தனை சிகரெட் எடுத்துக் கொண்டு போவது என்று தெரியவில்லை. அரைமணி நேரம்
கழிச்சு திரும்பி வந்தான். மறுபடியும் புழக்கடை கதவைத் திறந்து வெளியே
போனான். இன்னொரு அரை மணிநேரம்... பக்கத்தில் வந்து படுத்தான்.
செண்பகம் "கோவமா?'' என்றாள்.
"சேச்சே... வயிறு ஒரு மாதிரியா இருந்தது... அதான் வெளிய போயிட்டு
வந்தேன்... தலைவலி வேற... நீ ஏன் தூங்கலை?''
செண்பகத்துக்குத் தூக்கம் சொக்க ஆரம்பித்தது.
ஏதோ மாடு ஒன்று கத்துவது மாதிரி கனவு கூட வந்தது. திடுக்கிட்டு
எழுந்தாள். பக்கத்தில் மறுபடியும் சந்திரன் இல்லை. பாத்திரம் தேய்க்கிற
இடத்தில் யாரோ ஓக்களிப்பது கேட்டது, செண்பகம் விளக்கைப் போட்டுவிட்டு,
பார்த்தபோது... சந்திரன்.
"என்னாச்சு?'' என்று ஓடிபோய் அவன் காதை இரண்டு கைகளாலும் அழுத்திக்
கொண்டு கேட்டாள்.
"ஒண்ணுமில்லை.... வாந்தி... நீ தூங்கறதானே?... அதர்சம்
ஒத்துக்கலை...'' என்றாள்.
"ச்சம்.... அதெல்லாம் ஒண்ணும் வேணாம்'' என்று முடிப்பதற்குள்
"இன்னாப்பா ஆச்சு?'' என்று பெரிய ரூமில் இருந்து
செண்பகத்தின்
அப்பாவும் அவருக்குப் பின்னால் புடவையைச் சரி செய்து கொண்டு அம்மாவும்
தோன்றினார்கள்.
"ஒண்ணுமில்லை... ஒண்ணுமில்லை'' என்று சுதாரித்து எழுந்தான் சந்திரன்.
"இவருக்கு வயிறு சரியில்லை'' என்று வெளியே போய்விட்டு வந்தாரு...
படுத்து கொஞ்ச நேரம் கூட ஆகலை, அதுக்குள்ள வாந்தி... அதர்சம்
ஒத்துக்கலை'' என்று விளக்கினாள் செண்பகம்.
"ஒண்ணுமில்லை'னு சொல்லிக் கொண்டிருக்கும்போதே செண்பகம் இந்த அளவுக்கு
விளக்கிக்கொண்டிருப்பது எரிச்சலாக இருந்தது.
"அஜிர்ணமாயிட்டு இருக்குது! சோடா வாங்கியாறட்டுமா மாப்பிள்ளை?''
"இந்த ராத்திரிலையா?''
"அட, கதவ தட்டினா எடுத்துக் குடுப்பான்''
"வேணாம்... வேணாம் காலைல பாத்துக்கலாம். நீங்க போய்ப் படுங்க''
ராத்திரியில் இப்படிப் பலரும் தன் விஷயமாய் கவலைப்படுவது பிடிக்காமல்
"விருட்'டென்று போய் கட்டிலில் படுத்துக் கொண்டான்.
"ஏதாவது மாத்திரை சாப்டா நல்லது'' என்றாள்.
"கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா?... "அனாசின்' மாத்திரை தவிர வேற
மாத்திரை வெச்சிருக்கானா உங்க ஊரு கடையில?''
வயிறு மறுபடி கலக்கியது. காலும் தேய்ந்து போய் கண்ணும்
கிறுகிறுத்தது. தலைவலி பின் மண்டை முழுவதும் பரவியிருந்தது. கழுத்தை
இப்படியும் அப்படியும் சொடுக்க தலையையே கழற்றிப் போட்டது மாதிரி சத்தம்.
"தைலம் தேய்க்கட்டா?'' என்று நெற்றியில் கை வைத்தவள், "ஜுரம் கூட
காயுதே'' என்றாள்.
"வேணாம்... வேணாம்'' என்று எழுந்தான். மீண்டும் வயிற்றைக் கலக்கியது.
பட்டென்று கக்கூஸில் நுழைந்து கொள்ள முடியாத
பட்டிக்காடு.... ஆற்றங்கரை... தேங்கிய ஆறு. நீர் இருக்கிற இடமாகத் தேடி
அமர வேண்டும். எழுந்திருக்கவே பிரயத்தனப்பட்டாலும்... போய்த்தானே ஆக
வேண்டும்?
"வெளிய போறீங்களா?'' என்றாள்.
"உம்''
"நானும் வரட்டமா?''
"ச்சும்...நீ தூங்கு...?''
புழக்கடை வரை சென்று விட்டவனிடம் ஓடி வந்து "டார்ச் லைட்' டைக்
கொடுத்தாள். ""பாம்பு கீம்பு கிடக்கும்'' என்றாள்.
ஸ்டார்ச் லைட் டைப் பிடுங்கிக் கொண்டு வேகமாக நடந்தான்.
வீடுகளைத் தாண்டுகிற வரை நாய்கள் தின்று விடுகிற மாதிரி சூழ்ந்து நின்று
குரைத்தன.
யாரோ ஒருத்தர் "யாருப்பா அது!?'' என்றார்.
"குப்பனா?''
சந்திரன் பதில் சொல்லவில்லை, ஆற்றில் போய் அமர்ந்தபோது "அப்பாடா'
என்றிருந்தது. "வீணையடி நீ எனக்கு... ச்சே என் பாட்டு இது இந்த
நேரத்தில். காலையில் வாயில் நுழைந்து கொண்ட பாட்டு விடவே இல்லை.
பஸ்ஸில்... பழக்கடையில்... பஸ்ûஸ விட்டு நடக்கையில், படிக்கையில்...
படுக்கையில்... முயன்று வேறு பாட்டாவது பாட வேண்டும் என்று பஸ்ஸில்
சங்கல்பம் எடுத்த போதும் மறுபடியும் இதே... எங்கே பிடித்தோம் இதை?...
உம்.. "மிண்ட் பஸ்டேண்டில்ட டீக்கடை ரேடியோவில்... தூங்கி எழுந்தாலொழிய
போகப் போவதில்லை...''
வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தபோது யாரோ எதிரில் வருவது அடர்த்தியான
கருப்பாய் தெரிந்தது.
அருகில் சென்றதும் நின்றான். செண்பகம்.
கூசிய கண்ணை முழங்கையில் மூடிக்கொண்டு, "இப்ப தேவலாமா?'' என்றாள்.
"எங்க இன்றல்ல?''
"மலர் அக்கா வூட்டுக்காருக்குக்கூட பேதி'னு நேத்து ஆஸ்பத்திரி போயிட்டு
வந்தாங்க... "மாத்திரை இருக்குதா'னு கேட்டுப் பாக்றேன்.''
"சுள்'ளென்று எரிச்சல் பரவியது. "மானத்தை வாங்குகிறாள்'.
"எனக்குப் பேதியாகறது ஊர்புல்லா தெரியணும் அதானே?'' என்றான்.
"மலரக்கா ஜென்னல் ஓரமாகத்தான் படுத்துக்குனு இருக்கும். "ஜன்னல்'ல்லையே
தட்டி வாங்கியாறேன்... நீ போ' என்றாள். கொஞ்ச நேரத்தில் ஜன்னலைத் தட்டி,
"அக்கா... மலரக்கா...'' என்று செண்பகம் அழைப்பது கேட்டது.
சந்தரன் வேகமாய் அந்த இடத்தை விட்டு அகன்றான். "வாங்கி வரட்டும். கழுதை
சொன்னா கேக்கிறாளா? வரட்டும், வீசி எறிகிறேன். என் திமிர்?
சொல்லிக்கொண்டே இருக்கிறேன் போய் தட்றாளே...?'
வீடு அதைவிட மோசமாக இருந்தது. மாமனாரும் மாமியாரும் நடு ராத்திரியில்
"தந்தி' வந்தவர்கள் மாதிரி இடிந்து உட்கார்ந்திருந்தார்கள். வீட்டில்
எல்லா லைட்டுமே எரிந்து கொண்டிருந்தது. உள்ளே நுழைவதற்கே கூச்சமாக
இருந்தது.
போதாத குறைக்கு, உள்ளே நுழைந்ததும், மாமனார் பதறி எழுந்து
"பேதியா
மாப்பிள்ளை?'' என்றார்.
"அதெல்லாம் ஒண்ணுமில்லங்க...''
"அட ரெண்டு வாட்டி போனீங்களாமே சொல்லியிருந்தா, கூட வந்திருக்க மாட்டேன்?''
"பேதியாவதைப் போய் யாராவது சொல்லிக் கொண்டிருப்பார்களா? அதுவும்
மாமனார், மாமியார் முன்னால் சொல்வார்களா? பேதியானால் ஆனது மாதிரி
போகிறது... இவர்களுக்கென்ன ராத்திரியில்?'
மாமனார் "அதர்சத்தை வாரி வாரி வெச்சிருப்பா... அதான்... அதர்சம்னா
ஒண்ணு, ரெண்டு மரியாதை... சோறா அது?'' என்று மாமியாரைக் கேட்டுவிட்டு "ஓம
வாட்டர்' வாங்கியாந்து வெச்சிருக்கேன் குடிங்கோ'' என்றார்.
"ஓம வாட்டரா?''
"ஆமா... அஜீர்ணத்துக்கு அத வுட்டா வேற வைத்தியம் கிடையாது'' என்று
தீர்மானமாகச் சொன்னார்.
சந்திரன் கட்டிலில் போய் படுத்தான். "ஊருக்கேதான் தெரிந்துவிட்டது!
நாரண்சாமி மரும்புள்ளக்கி பேதியாம்ட என்று காலையில் டீக்கடையில் பேசிக்
கொள்ளப் போகிறார்கள். இவளைச் சொல்ல வேண்டும். இவளால் தான். காலையில்
டவுனுக்குப் போய் சந்தடியில்லாமல் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
எல்லாம் கெட்டது.'
அவசரமாய் உள்ளே வந்த செண்பகம் " இது நல்ல மாத்திரையா பாருங்க...?''
என்று மாத்திரை பட்டையை நீட்டினாள்.
"டமாரம் கட்டிக்குனு அடிக்கிறதானே? ச்சே... இப்படியா அசிங்கப்படுத்தர்து?''
அவனது கோபத்தை மதிக்காமல் "நல்ல மாத்திரையானு பாருங்கனா?'' என்றாள்.
சந்திரன் திரும்பிப் படுத்துக் கொண்டான்.
"இதல கோச்சிக்கறதுக்கு என்னா இருக்கு... நம்ம உடம்பு. நம்ம
பாத்துக்கறோம். ஊருக்குத் தெரிஞ்சா என்ன?''
"அதான் விடிஞ்சதும் போய் எல்லார்க்கும் சொல்லிட்டு வா''
கொஞ்ச நேரம் பேசிக் கொள்ளவில்லை. தூக்கம் வரவில்லை. அசதியாகவும்,
எரிச்சலாகவும் இருந்தது. சந்திரன் எழுந்து பார்த்தபோது, பெரிய ரூமில்
விளக்கை அணைத்து விட்டது தெரிந்தது. மாடியில் போய் கொஞ்ச நேரம் உலாவலாம்
என்றிருந்தது. தூக்கம் வந்தபின் படுத்தால் போதும் என்று நினைத்தான்.
எழுந்தான்.
"மறுபடியும் போறீங்களா?''
சந்திரன் பதில் சொல்லவில்லை. நடந்தான்.
"போறதானா பேக்கடை'ல போங்க''
"அசிங்கம்... அசிங்கம் என்றால் என்னவென்றே இவர்கள் குடும்பத்துக்குத்
தெரியாதா?... இந்த மாதிரி நிலைமை ஒருத்தனுக்கு எவ்வளவு எரிச்சலா
இருக்கும்னு புரிஞ்சுக்க முடியாதா? ச்சே...
"எனக்கு வர்ல'' மாடியில் ஏறினான்.
இருட்டும் ஈரக்காற்றும் பிசைந்து கொண்டு இருந்தது. அமாவாசை போய்
நான்காவது நாள். நடக்க முடியாமல் ஒரே சோர்வாக இருந்தபோதும் உலவினான்.
வாய் "வீணையடி நீ எனக்கு' என்று முணுமுணுத்துக் கொண்டிருப்பதை
உணர்ந்தான்.
"அடுத்த வரி... மீட்டும் விரல் நானுனக்கு... யார் வீணை? யார் விரல்?
பொம்பளை... வீணை. ஆம்பளை விரலா? பொம்பளை ஜடம். ஆம்பளை ஜீவனா? ச்சே...
யாரோ ஒருத்தர் வீணை... யாரோ விரல்... இந்த நேரத்தில் இது வேறயா?'
எக்கச்சக்கமாய்க் குளிரியது. உடம்பு அனலாய் கொதித்தது. படிக்கட்டில்
இறங்கிய போது செண்பகம் சால்வையை எடுத்துக் கொண்டு மேலே வருவது தெரிந்தது.
சந்திரன் இறங்கி வருவது கண்டு நின்றாள்.
திரும்பி அறைக்குள் வந்து படுத்தனர். செண்பகம் விரோதமாய்
கட்டிலின் மறுகோடியில் போய் முதுகைக் காட்டிக் கொண்டு படுத்துக்
கொண்டாள்.
"எல்லாம் இயற்கை செய்கிற சதி இவள் என்ன செய்வாள்' என்று தேற்றிக்
கொண்டான் சந்திரன்.
சந்திரன் டேபிளின் மீதிருந்த ஓம வாட்டரை எடுத்துப் பார்த்தான்.
குடித்ததும் தெம்பாய் இரண்டு "ஏப்பம்' வரும் என்பதை நினைக்கவே
கிளுகிளுப்பாய் இருந்தது. மாத்திரை பட்டையை எடுத்துப் பெயரைப்
பார்த்தான். "ஸ்டேப்ரோ பாராக்சின்'. பரவாயில்லை அவசரத்துக்குப் போட்டுக்
கொள்ளலாம்.
பெருமிதமாய் செண்பகத்தைத் திருப்பிப் பார்த்துவிட்டு மாத்திரை ஒன்றைப்
போட்டுக் கொண்டான். ஒரு மொணறு "ஓம வாட்டரை' குடித்தான்.
கட்டிலில் படுத்து அவள் வரை உருண்டு போனான். செண்பகம் அசையாமல்
படுத்திருந்தாள்.
"செல்லி...'' மெல்ல கூப்பிட்டான். திரும்பியவளின் கண்களில் ஈரம்
துடைத்து விட்டான்.





tamilmagan2000@gmail.com

ஞாயிறு, ஆகஸ்ட் 03, 2008

நேசம்

தமிழ்மகன்

திடுக்கிட்டு விழித்தபோது கதவை யாரோ தட்டிக் கொண்டிருப்பது கேட்டது. எழுந்திருக்க மனம் இன்றி இன்னொரு முறை தட்டுகிறார்களா என்று காத்திருந்தான் சிவா.

நாய்களும் குலைக்காத அமைதி, இப்படிப்பட்ட அமைதி சாத்தியப்பட வேண்டுமானால், நேரம் இரண்டு மணியாய் இருக்கலாம்.

இந்த முறை கதவு தட்டப்பட்டு கூடவே, ''சிவா... ஆ'' என்ற குரலும் கேட்டது.

கேட்ட குரல் போல இருந்தும், யூகிக்க முடியவில்லை. விளக்கைக் கூடப் போடாமல் ஜன்னலைத் திறந்தான்.

எதிரிலிருக்கும் டீக்கடை மூடப்பட்டிருந்தது. திறந்த ஜன்னலுக்கு எதிரே வந்து நின்றபடி ஒருவன், ''இன்னா சிவா... நல்ல தூக்கமா?'' என்றான்.

யாரென்று தெரியாமலேயே... ''ஆ...ங்'' என்றான் சிவகுமார்.

விஜயா படுக்கையில் புரண்டு, ''யாருங்க. அண்ணாவா?'' என்றாள்.

சிவகுமார் பெருத்த அவசரமாய் நினைவுபடுத்தி பார்த்தான். உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள்... ஒருவரும் தாடி வைத்திருப்பதாய் நினைவில்லை.

''அட்ரஸ் கண்டுபிடிக்கறதுகுள்ள போதும், போதும்னு போச்சப்பா.''

சிவகுமாருக்கு திடீரென்று யாரென்று புரிந்து போய், ''மணி... நீயா? அடையாளமே தெரியலை? இரு கதவு திறக்கறேன்'' என்று பரபரப்பாகிக் கதவைத் திறந்து தெருவுக்கே வந்து கையைப் பிடித்துக் குலுக்கினான்.

''ஊரில் இருந்து எப்ப வந்தே?''

''மெட்ராஸ்ல தாம்ப்பா இருக்கேன்''

''நிஜமாவா?'' என்று கேட்டபடி உள்ளே அழைத்து, கதவைத் தாழிட்டு, நடையின் விளக்கைப் போட்டான்.

பரபரப்பாய் அறையின் டியூப்லைட்டைப் போட்டு விட்டுப் பார்த்தபோது சுவரில் மணி 11.20-

''பத்து மணிக்குக் கிளம்பினேன்''

''எங்க இருந்து?'' நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார வைத்தான்.

''வள்ளுவர் கோட்டம் இல்ல... அதுக்குப் பக்கத்துலதான்... ஒரு ரூம்ல தங்கியிருக்கிறேன்.''

''யார் ரூம்ல?''

''சினிமா டைரக்டர்து''

''பேரு?''

''பழனிராஜ்''

''எத்தன படம் எடுத்திருக்கிறாரு?''

''அட!... அவரால ஒரு படம்கூட எடுக்க முடியாது சிவா... அதவுடு எப்படியிருக்றே எங்க வேல செய்ற?''

''நா அங்கேயேதான் வேல செய்றேன்... பர்மனன்ட் பண்ணிட்டான். ஆயிரத்தி நூர் ரூபா தரான்'' மணி சிரித்தான்.

''எப்படி இருக்கிறே சிவான்னு கேட்டா ஆயிரம் ரூபா தரான்றியே... எப்படி இருக்கே?'' என்றான் மறுபடி.

''பாதி ராத்திரில வந்துருக்கே. நான்தான் உன்னை விசாரிக்கணும். சாப்டியா?''

''பரவால்ல சிவா... பையன் எப்படியிருக்கான்? பேரென்ன சொன்னே?''

''முத்துக்குமார்... டீக்கடை இருந்தா பன்னாவது வாங்கி தருவேன், இந்த ராத்திரில ஏன் வந்தே...?''

''நானா கிளம்பினேன்...? கிளம்பிப் போக சொன்னாங்க'' என்று சிரித்தான்.

''ரூமைக் காலி பண்ணச் சொன்னாங்களா?''

''அதவிடு சிவா... நாளைக்குப் போய் சரி பண்ணி விடுவேன்.''

கல்லூரி வாழ்விலிருந்தே இப்படித்¡ன்... பேச்சுக்குப் பேச்சு ''சிவா''... எல்லா உணர்ச்சிகளையும் அழுத்திக் கொண்டு ஒரு சிரிப்பு.

சிவா எழுந்து சமையல் அறையில் எதையோ உருட்டி விட்டுத் திரும்பி வந்தான்.

''சோத்ல தண்ணி ஊத்திட்டாங்க''

''சாப்பாட்ல பிரச்சனை இல்லை சிவா, நீங்க வேஸ்ட்டா வொர்ரி பண்ணிக்காதீங்க...''

விஜயா எழுந்து வந்து, ''பிழிஞ்சி போடட்டுமான்னு கேளுங்க... இப்பதான் தண்ணி ஊத்தினேன்'' என்றாள்.

மணி, ''நலந்தானே?'' என்றான் விஜயாவை.

இப்படிக் கேட்டதால் விஜயாவிற்குச் சிரிப்பு ஏற்பட்டு, ''ம்...'' என்று சொல்லிவிட்டு அவசரமாய் உள்ளே போனாள்.

''எவ்வளவு நாளா அங்க தங்கியிருக்க?''

''ரெண்டு மாசமாச்சு சிவா.''

''சாப்பாட்டுக்கு என்ன பண்றே?''

மணி இதற்குப் பதில் சொல்லவில்லை. எல்லாம் பேசியானது போல் எதிரில் கிடந்த பழைய தந்திப் பேப்பரை எடுத்துப் படிக்கத் துவங்கினான்.

மணியின் சொந்த ஊர் திருப்பத்தூர். ஹாஸ்டலில் தங்கிப் படித்தான். மூன்று வருடத்தில் மறந்துகூட ஊர்ப்பக்கம் போகவில்லை.

சுரணையற்ற மெஸ் சாப்பாட்டையும், தனிமைச் சிறை மாதிரி இருந்த அந்த மக்கிய ஹாஸ்டலையும் அவன் விரும்பி விடுகிற அளவுக்கு அவனது வீட்டு நிலைமை இருந்தது.

நாற்பது பேர் கொண்ட கூட்டுக் குடும்பம் இப்போதைய அவசர யுகத்தில் கூட்டெல்லாம் சாத்தியமில்லை என்பது புரிந்தும், குடும்பத்தை உடைக்கிற அவலம் நாம் இருக்கிறவரை நிகழ்ந்துவிடக்கூடாதென்று நோக்கம் கொண்ட மணியின் அப்பா... மூத்தவர். அவருக்கு இளையவர்கள் மூவர் ஆளுக்கு அரை டஜன் வாரிசுகள் என்று சராசரியாகக் கொண்டாலும், அவர்களில் பாதி பேருக்குத் திருமணமாகி இனப்பெருக்கம் செய்திருந்தார்கள்.

மணிக்கும் போன ஆகஸ்ட்டில் திருமணம் நடந்தது.

சிவா, ''ஒய்·ப்பையும் கூட்டிக்கிட்டு வந்துட்டியா?'' என்றான்.

''இல்லை...'' என்றான் நிதானமாய்.

''என்னது இல்லையா?... ஊர்ல இருந்து வந்து ரெண்டு மாசமாச்சுன்றே... கல்யாணமான மறுநாளே வந்துட்டியா?''

மணி வேகமாக எழுந்து சிவாவின் வாயைப் பொத்தினான். ''மெதுவா கேளேம்பா.''

''சண்டையா?'' என்றான் மெதுவாய்.

''அதெல்லாம் ஒண்ணுல்ல எங்க ஊர்ல இருந்து யாராச்சும் என்னைத் தேடி வந்தாங்களா?''

''இல்லையே''

''நல்லதாப் போச்சு''

''ஏய்... என்ன விஷயம்னு ஏதாவது சொல்றியா?''

''ஏன் சிவா அவசரப்படறே...? நைட்டு ·புல்லா இங்கதானே இருக்கப்போறேன். நிதானமாப் பேசவும்... அப்பா அம்மால்லாம் செளக்கியம்தானே?''

சிவா சலித்துக் கொண்டான்.

''நல்லாருக்றாங்க... விஷயத்த சொல்லுய்யா''

''மாடிக்கு போய் படுத்துக்கலாமா?''

சிவா யோசித்தான். 'ஏடா கூடாமாய் ஏதோ நடந்திருக்கிறது. மாமியார் மருமகள் சண்டை... சொத்தைப் பிரிக்கச் சொல்லிச் சண்டை... கல்யாணம் பண்ண ஒரு மாதத்தில் ஓடி வந்திருக்கிறான் என்றால்...? இன்னும் சிக்கலான சண்டை ஏதோ நடந்திருக்கிறது. ஹாஸ்டலில் இருந்து ஊருக்கு அனுப்பி வைக்கும்போதே பெரும்பாடாய் இருந்தது.

''எங்க வீட்ல அன்பு பாசம் இதுக்கெல்லாம் இடமே இல்ல சிவா... ஏன்... ஒருத்தர் முகத்திலையும் இயற்கையான சிரிப்பையே பார்க்க முடியாது. வீட்ல இருக்கிற பெண்களுக்கெல்லாம் நாள் முழுக்க சமைக்கிற வேலை.

ஆம்பளைங்களுக்கு, பத்து ஏக்கர் நிலம் பம்ப்-செட்டோட வெலைக்கு வருதான்னு பாக்கிற வேலை. இல்லாட்டி பஸ்-ஸ்டேன்ட் பக்கமா நாலு கிரவுண்டு வாங்கிப் போட்டா பின்னாடி நல்ல விலைக்கு விக்கலாம்... இப்படி... நாள் முழுக்க பணம் பண்ற வேலை.''

''தனித்தனியா சொத்தைப் பிரிச்சிட்டா...?''

''முடியாது சிவா... இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்துட்டா... ஒரு தியேட்டர் கட்டி விடலாம்னு ஐடியால இருக்காங்க... பிரிச்சிட்டா சொத்தினுடைய வீரியம் கொறஞ்சிடும்.

அவங்களுக்கு ரெண்டே ரெண்டு எண்ணம்தான் வாழ்க்கைல. ஒண்ணு பணம் சேக்கறது.

இன்னொன்னு சேத்த பணத்தை அதிகப்படுத்தறது'' சிரிப்பான்.

மூணு வருஷக் கல்லூரி வாழ்க்கையில் ஊரிலிருந்து பணம் வருவதில் ஒரு சமயத்திலும் தாமதம் இருந்ததில்லை.

''பணம் மட்டும் கரக்டா வருதே?''

''படிச்ச மாப்பிள்ளைனு சொல்லி எவன் கிட்டயாவது நூறு சவரன் பிடுங்குவானுங்க... சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீன் பிடிப்பானுங்க...''

அவன் வீட்டைப் பற்றி ஒரு முறையும் பெருமைப்பட்டுக் கொண்டதில்லை.

''ஒவ்வொரு மனுசனும் ஒவ்வொரு தூண்டிலைப் போட்டுட்டு ஒக்காந்திருக்கானுங்கப்பா...

சிவா உடனே இப்படிக் கேட்டான்.

''அது சரி... நம்ம முரளி காதலிக்காக உயிரே தருவேன்றானே... உயிர் என்ன சின்ன மீனா?''

மணி பெரிதாகக் கைதட்டிச் சிரித்தான்.

சிவா உள்ளே போய் ஒரு பாயையும், இரண்டு தலையணையைம் அக்குலில் இடுக்கிக் கொண்டு வந்தான்.

மொட்டை மாடியின் நட்ட நடுவே, பாயை விரித்து, தலையணையைப் பொருத்துவதற்குள், சர்ர்... எனத் தீக்குச்சிக் கிழித்தான் மணி.

''பீடியா பிடிக்கிறே?''

''ஆமா... ஒரு கட்டு நாப்பது பைசா...''

''ச்சே...''

''என்னையா பண்றது... சிகரட் விக்கிற வெலைல இதுதான் வசதி''

''சரி சொல்லு ஊர்ல என்னாச்சு?''

மணி, வேறெதொ பேச இருந்தவன், சிவா இப்படிக் கேட்டதில் சட்டென்று அதை நிறுத்திக் கொண்டு விஷயத்தைக் கோர்வைப்படுத்துவது போல் பீடியை ஆழமாக உறிஞ்சினான்.

''என் பெட்டிக்குள்ள உன்னுடைய அட்ரஸ் எங்கயாவது இருக்கறதுக்கு 'சான்ஸ்' இருக்கு... என் பெட்டிய யாராவது கிளறி சப்போஸ் உன் அட்ரஸ¤ம் கிடைச்சா... என்னைப் பத்தி தெரிஞ்சுக்கறதுக்கு இங்க வரலாம்...''

''ஊர்ல இருந்தா?''

''ஆமாம்... அப்படி யாராச்சம் வந்தா நாங்க நல்லாருக்கறதா சொல்லணும்...''

''நாங்கன்னா...?''

''நானும் என் ஒய்·பும்''

''...ஒய்·ப்?''

''இப்ப அவ என் ஒய்·ப் இல்ல... பெங்களூர்ல வேறு ஒருத்தர் கூட இருக்கிறா...''

சிவா அதிர்ந்து எழுந்து அவன் தோளைக் குலுக்கி ''சினிமாவுக்கு 'ஒன்லைன்' எதாவது எழுதிறியா?'' என்றான்.

எப்போதும் போன்ற குரலில், ''உண்மையாதான் சிவா... கல்யாணமான மறு வாரமே எனக்கு அவ வேற ஒருத்தரைக் காதலிச்ச விஷயம் தெரிஞ்சு போச்சு... நம்ம நாட்டு வழக்கப்படி காதலர்களை அவசர அவசரமாப் பிரிச்சு எனக்குக் கட்டி வெச்சிருக்காங்க... ஒரு நாள் 'மன்னிச்சுக்க' சொல்லி ஒரு லட்டர் எழுதி வெச்சிட்டு கிளம்பிப் போயிட்டா...'' இந்த இடத்தில் மணி சிறிது நிறுத்தினான்.

சிவாவோ அறையப்பட்டவன் மாதிரி சிந்தனை இயக்கம் இழந்து கிடந்தான்.

''விஷயம் வெளிய தெரியறதுக்கு முன்னாடி... நானும் வீட்டை விட்டுக் கிளம்பிட்டேன். அவ எழுதின லட்டரைக் கிழிச்சுப் போட்டுட்டு 'எங்களுக்கு இந்த வீட்டில் இருக்க விருப்பமில்லை. எங்காவது போய்ப் பிழைத்துக் கொள்கிறோம். எங்களைத் தேட வேண்டாம்'னு ஒரு லட்டர் எழுதி வெச்சிட்டேன்... இப்ப நானும் அவளும் ஒண்ணா இருக்கிறதாதான் எல்லாரும் நினைச்சுக்குனு இருக்காங்க... நா செய்தது சரிதானே சிவா...?

சிவா பிரயோசிக்க நினைத்த வார்த்தைகள் உதட்டருகே மூர்ச்சையாகிப் போகவே, ஆகாயம் நோக்கி வெறித்தான்.

மணி இயல்பாய், ''எங்க வீட்ல தேட ஆரம்பிச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன்... தினத்தந்தி பேப்பர்ல கால் பக்கத்துல ஒரு விளம்பரம் கொடுத்திருக்காங்க 'எங்க இருந்தாலும் உடனே தகவல் கொடுக்கும்படி'...

அதான் சொல்ல வந்தேன்... அப்படியவங்க உங்கிட்ட விசாரிக்க வந்தா... எங்க ரெண்டு பேரையும் ஒரு தியேட்டர்ல பார்த்ததா சொல்லு... நல்லா இருக்கிறதா சொல்லு... நாங்க நல்லா இருக்கறதுக்கு நீ ஒரு சாட்சி மாதிரியும் இருக்கும்... சொல்லுவியா சிவா?'' என்றான்.

LinkWithin

Blog Widget by LinkWithin