வியாழன், ஜூலை 27, 2006
சின்னத்திரை சித்திகளின் கையில்...
சின்னத்திரை சித்திகளின் கையில்
''அகநானூறு, புறநானூறு போல சித்தி நானூறு'' என்று 'சித்தி' தொலைக்காட்சி தொடரை வாயாரப் புகழ்ந்திருக்கிறார் (முன்னால்) முதல்வர் கலைஞர்.
'சித்தி' தொடர் நானூறு நாட்களாக - விறுவிறுப்பாகத் தமிழர்களின் -ல்லங்களில் வெளியானதை அகநானூறுடன் ஒப்பிட்டது அவருடைய சமயோசித புத்திக்கு உதாரணமாக இருக்கலாம். ஆனால் ஏறத்தாழ எல்லா தொடர்களுமே சித்திக்கு அடுத்தபடியாகத் தமிழர்களால் ஏகமனதாக வரவேற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை. தொடர்களுக்கு இல்லங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஏகபோக வரவேற்பைத் தொடர்ந்து பல ரிடையர்ட் நடிகைகள் களமிறங்கியிருக்கின்றனர்.
குட்டி பத்மினி, கே.ஆர். விஜயா, ஸ்ரீ ப்ரியா, ராதிகா, ரேவதி, நளினி, யுவராணி, ரூபஸ்ரீ, தாரணி, அனுஷா, ராகசுதா உள்ளிட்டோர் பட்டியலின் சமீப வரவு, குஷ்பு. மருமகள், கோடீஸ்வரி தொடர்கள் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
சராசரியாக இவர்கள் நடிக்கும் எந்தத் தொடருக்கும் காலவரையறை நிர்ணயிக்கப்பட்டதாகத் தகவல் -ல்லை. ஆரம்பத்தில் எல்லா மெகா தொடரையும் 52 வாரம் என்று அறிவிக்கிறார்கள். ஆனால் அவற்றுக்கு ஏற்படும் விளம்பரமும் பரபரப்பும் 40 வாரங்களுக்குப் பின்புதான் சூடு பிடிக்கிறது. ஆகவே மேற்கொண்டு 50 வாரங்களாவது தொடராவிட்டால் டிவி தயாரிப்பாளர்களின் ஆத்மா சாந்தியடையும் வாய்ப்பு இல்லை.
ஆகவே எல்லா தொடருமே நூற்றுக்கணக்கான வாரங்களுக்குத் தொடர்கிறது.
'மங்கை', 'அண்ணி', 'சொந்தம்', 'வாழ்க்கை', 'குடும்பம்', 'கோகிலா எங்கே போகிறாள்?', 'கிருஷ்ணதாசி', 'தோழிகள்' உள்ளிட்ட பெண்ணுரிமைத் தொடர்கள் எல்லாவற்றையும் ஒரு பொதுத் தன்மையில் அடைக்கலாம்.
எல்லாவற்றுக்கும் ஏறத்தாழ ஒரு குடும்பப் பாடல் உண்டு. பெரும்பாலும் அத் தொடரின் தலைப்பை பலமுறை வலியுறுத்துவதாக இருக்கும். (மக்கள் மனத்தில் பதிய வேண்டாமா?)
எல்லா தொடரிலும் துன்பங்களைச் சுமக்கும் ஒரு இளம்பெண்ணோ, அல்லது தனக்கு இழைக்கும் அநீதிக்குப் பழிவாங்கும் இளம்பெண்ணோ அவசியம். சில நேரங்களில் இரண்டு பெண்களும் ஒரே தொடரில் இருப்பார்கள்.
தன்னால் தட்டிக் கேட்க முடியாத அநீதிகளையெல்லாம் எம்.ஜி.ஆர். போன்ற ஒரு கதாநாயகன் தட்டிக் கேட்கும்போது இளவட்டங்கள் எப்படி ஆர்ப்பரித்தனரோ அதே நிலை இப்போது வீட்டில் உள்ள பெண்களுக்கு. மாமியாரைத் தட்டிக் கேட்கும் தொடர்கள், காதலித்து ஏமாற்றியவனைப் பழிவாங்கும் தொடர்கள், பெண்குழந்தையை வெறுக்கும் ஆண்களைத் தோலுரிக்கும் தொடர்கள் உள்ளிட்ட பெண்களுக்கான பிரச்சனைகளின் மாயத் தீர்வாக -ன்றைய தொடர்கள் உள்ளன. பெண்களுக்கு உளவியல் ரீதியான மன நிறைவையும் சில நேரங்களில் பழிவாங்கிய திருப்தியையும்கூட இத்தகைய தொடர்கள் தருகின்றன.
ஆண்கள் ஸ்டார் மூவிஸையும் பெண்கள் 'சித்தி' தொடரையும் ஒரே நேரத்தில் ஒரே டிவியில் பார்க்கப் போட்டி போட்டு பல வீடுகளில் உள்வீட்டுக் குழப்பங்கள். இறுதியில் தொடரைப் பார்ப்பதில் பெண்களே வெற்றி பெற்று ஆண்களைப் பழிதீர்க்கிறார்கள் என்பது என் அக்கம்பக்கத்து விசாரணையில் தெரியவந்த உண்மை. (என்னுடைய சொந்த அனுபவமும்தான்.)
இத்தகைய தொடர்களால் பெண்களின் மன உணர்வுகளில் சற்றே போராட்ட உணர்வுகள் ஊட்டப்பட்டு, பின்னர் அதற்கு ஒரு மானசீகமான தீர்வும் வழங்கப்பட்டுவிடுகின்றன. சின்ன வயசிலேயே காணமல் போய் வெளிநாட்டிலிருந்து திரும்பிவரும் கோடீஸ்வர சித்தப்பா மூலமாக எல்லா பிரச்சனையும் தீர்ந்ததாகவோ, அவளுடைய நல்ல மனதைப் புரிந்து கொண்டு குடும்பமே அவளிடம் மன்னிப்பு கேட்பது போலவோ காட்டி சீரியலை முடிக்கிறார்கள்.
சினிமா ஆண்கள் கையில் என்றால் சின்னத்திரை பெண்கள் கையில்... அது ஆண்களால் தயாரிக்கப்பட்டலும்.
சினிமாவில் கதாநாயகனுக்குக் கிடைக்கிற வெற்றி போல, சின்னத்திரையில் பெண்களுக்கு வெற்றி நிச்சயம்.
-தமிழ்மகன்
(2001)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக