வெள்ளி, செப்டம்பர் 08, 2006

பெரியார் சிந்தனைகள் மீண்டும் வெளிவரும்

பெரியாருடன் பழகிவந்த தொண்டர்களில் குறிப்பிடத் தக்கவர், சிந்தனையாளர் தோழர் ஆனை முத்து. பெரியார் எழுதிய கட்டுரைகள், பேசிய சொற்பொழிவுகளைப் புத்தகங்களாகப் பதிவு செய்த பெருமை அவருக்கு உண்டு.
"பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்' என்ற தலைப்பில் வெளியான அந்த மூன்று தொகுதிகள் இன்றும் பெரியாருக்கான ஆதார பொக்கிஷமாக விளங்கி வருகின்றன. ஜெராக்ஸ் போன்ற வசதி இல்லாத காலகட்டத்தில் கைகளால் எழுதி, தொகுத்து வெளியிடப்பட்ட சுமார் 3400 பக்கங்கள் கொண்ட நூல் அது. அந்தத் தொகுதிகளை பெரியார் சரிபார்த்துக் கொடுத்த அந்த நெகிழ்ச்சியான, முப்பதாண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார் அவர்.

பெரியாருடைய எழுத்துக்களையும், பேச்சுக்களையும் பதிப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி எற்பட்டது?

1970-ம் ஆண்டு திருச்சியில் சிந்தனையாளர் கழகம் என்ற அமைப்பை ஆரம்பித்தோம். அதை பெரியார்தான் துவக்கி வைத்தார். (07.03.1970)
பெரியாரை தலைப்புவாரியாகப் பேசவைத்து அதைப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்பதுதான் அந்த அமைப்பின் நோக்கம். மீண்டும் 72-ல், அதையே விரிவாகச் செய்யலாம் என்று தீர்மானித்தோம். பெரியாரின் பேச்சு, எழுத்து அனைத்தையும் தொகுத்து வெளியிடலாம் என்று சிந்தனையாளர் கழகம் மூலம் தீர்மானம் போட்டோம்.
பொருளடக்கம் ஒன்றைத் தயாரித்து அவரிடம் காண்பித்தேன். அது அவருக்கு அவ்வளவு திருப்தியாக இல்லை என்பது தெரிந்து, மீண்டும் ஒரு மாதம் ஆலோசித்து மற்றொரு பொருளடக்கம் தயாரித்துக் காண்பித்தேன். அது அவருக்கு திருப்தியாக இருந்தது. "ஆரம்பிச்சுடுங்க' என்றார்.
திருச்சி பெரியார் மாளிகையில் இருந்து தேவையானவற்றை எடுத்துக் கொள்ள அனுமதி தந்தார்.
72 ஜனவரியில் ஆரம்பித்து 73 செப்டம்பர் 13-ல் முடித்தேன்.
இடைவிடாமல் படித்து எதை எதை பதிப்பிக்க வேண்டும் என்று குறிப்பெடுத்துக் கொள்வேன். அச்சுக்குப் போகவேண்டிய பத்திகளை சிவப்பு மையால் "மார்க்' செய்து விடுவேன். அவ்வளவையும் நானே எழுத வாய்ப்பில்லையே. அவற்றையெல்லாம் நகல் எடுக்கிற வேலையை 73 பேரை வைத்து செய்தோம். அதை பெரியாரிடம் காட்டினேன். அதை சில இடங்களில் படிக்கச் சொல்லிக் கேட்டார். அவர் அப்படி கேட்ட 500 பக்கங்களில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்தார். கடைசி பக்கத்தில் "சிந்தனையாளர் கழகம் இதை நூலாக வெளியிட உரிமை அளிக்கிறேன்' என்று எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். உரிமை எழுதிக் கொடுத்தது ஆகஸ்டில். அச்சுக்குக் கொடுத்தது செப்டம்பர் 17-ல்.
நவம்பர் 30-ம் தேதி வாக்கில் 400 பக்கங்கள் அச்சாகியிருந்தது. இந்தப் பக்கங்கள் வரை பெரியார் பார்த்து விட்டார். இந்தப் பக்கங்களைப் பெரியார் பார்த்தது கடலூரில் வக்கீல் ஜனார்த்தனம் வீட்டில். பின்னர் அவர் ஐகோர்ட் ஜட்ஜ் ஆகி, இப்போது சென்னையில்தான் இருக்கிறார்.
அடுத்த 25 நாட்களில் பெரியார் இறந்துவிட்டார் (24.12.73).
பிறகு 74-ஜூலையில் "ஈ.வெ.ரா. பெரியார் சிந்தனைகள்' மூன்று தொகுதிகளை வெளியிட்டோம். புத்தகம் தயாரிக்க நாங்கள் இரண்டு முறைகளைக் கையாண்டோம். ஒன்று நன்கொடை வசூலிப்பது. இரண்டு, முன்பதிவு செய்வது. முன்பதிவு செய்வதற்கு ரூ.100 கட்டணம். இரண்டுக்குமே ஒத்துழைப்பு இல்லை. வேறு வழி இல்லாமல் கடன் வாங்கித்தான் அச்சிட வேண்டியதாக இருந்தது. மூவாயிரம் பிரதிகள் அடிக்க 60 ஆயிரம் ரூபாய் ஆனது. இரண்டு ரூபாய் வட்டி. புரோநோட்டு எழுதிக் கொடுத்து தலைவர், பொருளாளர், செயலாளர் கையெழுத்துப் போட்டோம்.
79- ஆண்டுதான் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. கடனை அடைத்து, மீதி இருந்த பணத்தில் ஒரு பகுதியை எடுத்து மலையாளத்தில் 200 பக்க அளவில் பெரியார் சிந்தனைகளை வெளியிட்டோம். அதற்குத் தலைப்பு "நானும் நீங்களும் -பெரியார் ஈ.வெ.ரா.' திருவனந்தபுரத்தில் வெளியிட்டோம். விற்பனை உரிமையை அங்கிருந்த புத்தக விற்பனையாளர் ஒருவரிடம் கொடுத்தோம். 2000 பிரதிகளுக்கு 20 அயிரம் ரூபாய் கொடுத்திருக்க வேண்டும். அவரோ, ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்துவிட்டு ஏமாற்றி விட்டார். இதனாலும், பொருளாதார வசதி இல்லாததாலும் நாங்கள் தொடர்ந்து செயல்பட முடியாமல் போனது.
1980 -ல் நிறையபேர் ஈ.வெ.ரா. சிந்தனைகளை மீண்டும் வெளியிட வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தார்கள். எப்படியும் அடுத்த அண்டில் "பெரியார் சிந்தனைகள்' தொகுதிகள் மறுபதிப்பு உறுதியாக வெளிவரும்.

பிற்படுத்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீடு சம்பந்தமாக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்தவர் நீங்கள். அந்த அனுபவங்களையும் அதன் பயன்களையும் விவரிக்க முடியுமா?

மத்திய அரசு பதவிகளில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் இருந்தது. ஆனால், சட்டத்திலேயே அதில் இடம் இருப்பதை முதன்முத-ல் நான்தான் எடுத்துச் சொல்ல அரம்பித்தேன். சட்ட நூல்களில் எனக்கிருந்த ஆர்வம்தான் இதற்குக் காரணம். 1975-ல் இதைச் சொன்னேன். அதை யாரும் அப்போது காதில் போட்டுக்கொள்ளவில்லை.
1978ல் இந்தியா முழுக்க இது சம்பந்தமாக ஆர்வம் உள்ளவர்களைச் சந்தித்துப் பேசினேன். 1982 வரை நான்கு அண்டுகள் இடைவிடாமல் இந்தியா முழுவதும் சுற்றினேன். எல்லா கட்சித் தலைவர்கள், மந்திரிகள், எம்.பி.க்களைச் சந்தித்து இப்படி சட்டத்தில் இடம் இருப்பதையும், நாம் முயற்சி செய்தால் பெற்றுவிடலாம் என்றும் விளக்கிச் சொன்னேன்.
பி.பி. மண்டல் என்பவரைத்தான் முதலில் சந்தித்தேன். அரியானாவைச் சேர்ந்தவர். அவர் அப்போது எம்.பி.யாக இருந்தார். அடுத்து தனிக்லால் மண்டல் என்ற மாகாண அமைச்சரைச் சந்தித்தேன். அவர் பீகார் ஜமீந்தார். ஜனதாதள அமைச்சர். அமைச்சர் நான் சொன்ன கருத்தை எற்றுக்கொண்டு, நான் சென்னையில் போட்ட மாநாட்டிலும் கலந்து கொண்டார். அடுத்து பானுபிரதாப் சிங் என்ற விவசாய அமைச்சரைச் சந்தித்தேன். அரியானா, பஞ்சாப், உ.பி., பீகார் எம்.பி.க்களை எல்லாம் சந்தித்துப் பேசினேன்.
எங்களின் மார்க்சிய, பெரியாரிய பொது உடைமைக் கட்சிதான் சென்னையில் 78-ம் அண்டு ஜூன் 24-ந் தேதி பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல் மாநாட்டை நடத்தியது. பிறகு 79 மார்ச்சில் புதுடில்யில் பெரிய ஊர்வலம் நடத்தினேன். அதே அண்டு நவம்பரில் சிறை நிரப்பும் போராட்டம் ஒன்றும் டில்லியில் நடத்தினேன். 2000 பேர் கைதானோம்.

வடமாநிலங்களில் இருந்தபோது எங்கு தங்குவீர்கள்?

சத்திரங்களிலும், நண்பர்கள் வீடுகளிலும், எம்.பி. வீடுகளிலும் தங்கினோம். ரோட்டு கடைகளில் சாப்பிட்டோம். நான்கு ஆண்டுகள் ஓடின. சந்நியாசி வாழ்க்கைதான். எப்படியாவது இட ஒதுக்கீடு சம்பந்தமான விழிப்புணர்வை எற்படுத்தவேண்டும் என்று போராடினேன்.

இங்கிருந்து இதற்காகப் புறப்பட்டுப் போனது எத்தனை பேர்?

சேலத்தில் சித்தையன் என்று ஐரு பெரியவர் இருந்தார். இப்ப இறந்து விட்டார். பெரியாருடைய அண்ணனின் மருமகன் சேலம் ராஜு, முத்துச்சாமி என்று ஒருவர், இவர்களுடன் நான். நான்கு பேரும்தான் சுற்றுவோம். அதற்காக லாபம் என்னவென்றால் வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது. இப்போது கல்வியில் இட ஒதுக்கீட்டுக்காக 1991-ல் இருந்து போராடி வருகிறோம்.

"திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்றும், பெரியாருடைய கருத்துகள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தாது என்றும், பெரியார் ஒரு பிற்போக்குவாதி என்றும் கூற அரம்பித்திருக்கிறார்களே?

(அடுத்த வாரம்)

2 கருத்துகள்:

கடற்கரய் சொன்னது…

பெரியாரின் பேச்சுகளை திரித்தும் வெட்டியும் வெளியிட்டு பெரியாரை கொச்சைப் படுத்தும் முயற்சி திட்டமிட்டே ஒரு வன்முறைப் போல நடத்தப் படுகிறது. அதே போல பவேந்தர் பாரதிதாசனும். முடங்கிகிடந்த ஓர் சமூகத்தை சினமுறச் செய்தவன் பாவேந்தன். இப்படி தன் சமூகத்தாலேயே அசிங்கப்படுத்தப்பாடும் தலைவர்கள் வேறு சமூகத்தில் காண இயலாது.

கடற்கரய் சொன்னது…

பெரியாரின் பேச்சுகளை திரித்தும் வெட்டியும் வெளியிட்டு பெரியாரை கொச்சைப் படுத்தும் முயற்சி திட்டமிட்டே ஒரு வன்முறைப் போல நடத்தப் படுகிறது. அதே போல பவேந்தர் பாரதிதாசனும். முடங்கிக் கிடந்த ஓர் சமூகத்தை சினமுறச் செய்தவன் பாவேந்தன். இப்படி தன் சமூகத்தாலேயே அசிங்கப்படுத்தப்படும் தலைவர்களை வேறு சமூகத்தில் காண இயலாது.

LinkWithin

Blog Widget by LinkWithin