சனி, அக்டோபர் 06, 2007
சரண்யாவாகிய நான்...
"காதல் கவிதை', "நீ வருவாய் என' படத்திலிருந்து சுமார் ஒரு டஜன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பவர் "காதல்' சரண்யா.
"காதல்' படத்தில் சந்தியாவின் தோழியாக வந்தவர் இப்போது கதாநாயகி ஆகியிருக்கிறார். குழந்தை நட்சத்திரம் டு கதாநாயகி வரையான பயணத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்...
சினிமாவுக்கு வருவதற்கு எல்லாருக்கும் ஏதாவது சந்தர்ப்பம் இருந்திருக்கும்... உங்களுக்கு?
அகத்தியன் சார் இயக்கிய காதல் கவிதை படத்தில் இஷா கோபிகருடன் நடிப்பதற்கு நான்கைந்து சிறுமிகள் தேவைப்படுகிறார்கள் என்று எங்கள் குடும்ப நண்பர் சொன்னார். அப்படித்தான் சினிமாவுக்கு நான் அறிமுகமானேன்.
காதல் படத்தில் முதலில் நீங்கள்தான் நாயகியாகத் தேர்வானீர்களாமே?
ஆமாம். "காதல்' படத்தில் நாயகியாக என்னைத்தான் தேர்வு செய்தார்கள். நான் அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பிறகு சந்தியாவைப் பார்த்ததும் படக்குழுவினர் அவர் அந்த வேடத்துக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்துவிட்டார்கள். படத்தில் முதல் பகுதியில் பள்ளிக்கூட மாணவியாக நடிப்பதற்கு வேண்டுமானால் நான் பொருத்தமாக இருப்பேன். பிற்பகுதியில் மணமானப் பெண்ணாக நடிப்பதற்கு என்னுடைய தோற்றம் சரியாக இருக்காது என்று கூறிவிட்டனர்.
அந்தப் படத்திலேயே கதாநாயகியின் தோழியாக நடிப்பதற்குச் சம்மதித்திருக்கிறீர்கள். எப்படி?
வருத்தம் இல்லாமல் இருக்குமா? அதே படத்தில் ஃப்ரண்ட் வேடம் இருக்கிறது என்று கேட்டபோது அழுகையே வந்துவிட்டது. நல்ல கதை- நல்ல பேனர்... ஏதோ ஒரு வேடத்தில் நடித்தால் போதும் என்ற ஆசையும் இருந்தது. சம்மதித்து மதுரைக்கு ரயிலேறி விட்டோம். தூக்கமே இல்லை. அழுதபடியே ஷூட்டிங் போன முதல் பெண் நானாகத்தான் இருக்கும். படம் நடிக்க ஆரம்பித்ததும் அது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டது.
சந்தியாவும் என் வயது தோழியாக மாறிவிட்டார். செம ஜாலியாக அரட்டை அடித்து கதாநாயகி வேடம் கிடைக்காத துக்கம் முழுக்கவே மறைந்துவிட்டது எனக்கு. படம் வெளியீட்டுக்கு நெருங்க நெருங்க படத்தைப் பற்றி வந்த எதிர்பார்ப்புகள் மறுபடி எனக்குள் ஏமாற்ற உணர்வை உண்டாக்கின. அதுவும் படம் வெளியாகி மகத்தான வெற்றி பெற்றதும் ஒவ்வொருவரும் படத்தைப் பற்றிப் பாராட்ட பாராட்ட எனக்கு மீண்டும் தாளமுடியாத துக்கம்.
இப்போதாவது அந்தத் துக்கத்தில் இருந்து வெளியே வந்து விட்டீர்களா இல்லையா?
"காதல்' திரைப்படம் தெலுங்கிலும் ரிலீஸ் ஆனது. தெலுங்கிலும் வெற்றி. அந்தப் படத்தைப் பார்த்து தெலுங்கு படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் பரத்துடன் நடிக்க முடியாமல் போன ஏக்கம் அங்கு தெலுங்கு பரத்துடன் கதாநாயகியாக நடித்தபோது தீர்ந்தது. இப்போது தமிழில் "திருத்தம்', "இளவட்டம்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறேன்.
இப்போது ப்ளஸ் டூ முடித்துவிட்டு அஞ்சல் வழியில் பிபிஏ படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இனி முழு மூச்சாக நடிக்க முடியும் என்ற தீவிரம் வந்திருக்கிறது. பரீட்சை லீவில் நடிப்பதற்கும் முழு நேரமாக நடிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நிறைய வேடங்களில் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் அதற்கான நேரம் இருக்கிறது என்ற நிதானமும் மனதில் இருக்கிறது. துக்கமெல்லாம் போயே போச்சு...
என்ன மாதிரி வேடங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
"அம்முவாகிய நான்' படத்தில் பாரதி ஏற்றிருந்த பாத்திரம் துணிச்சலானதாக இருந்தது. அது போன்ற கான்ட்ரோவர்ஸியான வேடங்களை நான் எதிர்பார்க்கிறேன்.
-தமிழ்மகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
பத்திரிக்கையாளரா நீங்க ???
ஆமாம் தினமணியில் பணியாற்றி வருகிறேன்
கருத்துரையிடுக