புதன், அக்டோபர் 10, 2007
மஸ்தானா... சரிதானா?
அலசல்:
திரைப்படத்தில் ஒரு காட்சி...
மூன்று பெண்கள் மிகுந்த பதட்டத்துடன் வந்து ஆட்டோ பிடிக்கிறார்கள். என்னவோ ஏதோ என்று பதறிப் போகிறார் ஆட்டோ டிரைவர்.
""சூர்யாவ கடத்திகிட்டுப் போயிட்டாங்க. அவ வாழ்க்கை என்ன கதியாகும்னே தெரியல...''
""ஆமா... அவ அண்ணனும் ஜெயில்ல இருக்கான்... தூக்குல போட்டுடுவாங்க போல இருக்கு''
ஆட்டோ டிரைவர் மேலும் பதறுகிறார்.
""மாமியார்காரியும் அவளோட புருஷன் கிட்ட இருந்து பிரிச்சுட்டா. சொந்தமா தொடங்கிய பிசினஸýம் சரியா வரலை. எதிரிங்க ஒரு பக்கம் கொலை செய்ய அலையறாங்க''
இவ்வளவு பிரச்சினைகளுடன் இருக்கும் அந்தப் பெண்ணைச் சமாளிப்பதற்காகச் செல்பவர்களை உடனே அவர்கள் சொல்லும் இடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டுமே என்று வேகவேகமாக ஓட்டிச் செல்வார். இறங்கும்போது ""பரவாயில்லை முன்னாடியே கொண்டு வந்து விட்டுட்டான் அம்பி... இன்னும் பத்து நிமிஷம் இருக்கு சீரியல் ஆரம்பிப்பதற்கு'' என்றவாறு இறங்கிச் செல்வார்கள்.
""அடிப்பாவிகளா சீரியலுக்கா இந்த டென்ஷன் பண்ணீங்க'' என்று அலுத்துக் கொள்ளுவார் ஆட்டோ டிரைவர். ஆட்டோ டிரைவராக நடித்தவர் விவேக். இப்போது மனத்திரையில் அந்த ஆட்டோவை ஓட்டிப் பாருங்கள்...
ஆனால் இப்படிக் காமெடியாகத்தான் இருக்கிறது சீரியலுக்கும் மக்களுக்குமான உறவு.
எந்த சானல் என்றில்லாமல் எல்லா சானல்களுக்கும் பொது அம்சமாக இருக்கிறது இந்த மெகா தொடர்கள். எல்லா தொடர்களிலும் கோர்ட்- கேஸ், போலீஸ், ஆள் கடத்தல், பரம்பரைப் பகை, கொலை வெறி, பழி வாங்கல், அளவுக்கதிகமான நேர்மை எல்லாமே இருக்கிறது. நடிகர்கள், தயாரிப்பு நிறுவனம்தான் வித்தியாசம்.
தமிழக சானல்களுக்கு இலக்கணம் வகுத்த பெருமை சன் டி.வி.யைத்தான் சேரும். அதைப் போலவே செய்தி, அதைப் போலவே சீரியல்கள், அதைப் போலவே சினிமா விமர்சனம், அதைப் போலவே காமெடி நிகழ்ச்சிகள், அதைப் போலவே "டாக் ஷோ' என்றே எல்லோரும் பாதை வகுத்துக் கொண்டார்கள். எல்லோரும் அதைப் போல செய்வதில் ஆர்வம் காட்டி இந்தப் போராட்டத்தில் தோல்வி கண்டிருந்த நேரத்தில் எங்கள் வழி தனிவழி என இலக்கணம் வகுத்தது விஜய் டி.வி.
இவர்கள் போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தினார்கள். "கலக்கப் போவது யாரு', "ஜோடி நம்பர் ஒன்', "சூப்பர் ஸிங்கர்' போன்ற நிகழ்ச்சிகளைத் தொடங்கினர்.
விளைவு? அதே நிகழ்ச்சிகள் இப்போது ஏறத்தாழ எல்லா சானல்களிலும். "ஜோடி நம்பர் ஒன்' சன் டி.வி.யில் "மஸ்தானா மஸ்தானா'வாக மாறியிருக்கும். கலைஞர் டி.வி.யாக இருந்தால் "மானாட மயிலாட'வாக மாறியிருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம்.
இந்த ஸ்டீரியோ-டைப் இழுவைகளுக்கு தனித்துவமாக முயற்சி செய்யும் தன்மை இல்லாததுதான் காரணம். வெற்றி பெற்ற நிகழ்ச்சியை உல்டா செய்வதிலேயே சானல்கள் அக்கறை காட்டுகின்றன. ஒரு காலத்தில் தமிழில் வெளிவந்து கொண்டிருந்த வார இதழ்களின் அட்டையைப் பிரித்துவிட்டால் எல்லா இதழ்களும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன என்று சொன்ன நிலை இன்று சானல்களுக்கு.
வெற்றி பெற்ற சானல்களில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தவர்களையே எவ்வளவு செலவானாலும் சரி நம் சானலுக்கு இழுத்துவா என்ற போக்கும் இருக்கிறது.
இதற்கு என்ன காரணம்...? ""தமிழ் சானல்கள் எல்லாம் பெரும்பாலும் முதலாளிகளின் கையிலேயே இருக்கிறது. அவர்களின் ரசனை எப்போதும் வெற்றி பெற்ற விஷயங்களைப் பின் தொடர்வதிலேயே இருக்கும். படைப்பாளிகளை நம்பி நிகழ்ச்சிகளை ஒப்படைக்கும் நிலை இன்னும் இங்கு வரவில்லை. மக்கள் தொலைக்காட்சி ஓரளவுக்கும் அதிகமாகவே தமிழர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது.
காப்பியடிப்பது தப்பில்லை. வெளிநாட்டு சானல்களில் இருந்து காப்பியடிக்க நினைத்தாலாவது இந்த நிலைமை மாறும். தமிழக காடுகளைப் பற்றியும் அங்கிருக்கும் உயிரினங்கள் பற்றியும் நிகழ்ச்சிகளைத் தயாரித்தால் யாரும் பார்க்க மாட்டார்களா என்ன? போட்டியில் தோல்வி அடைந்த சிறுவர்கள் கதறி அழுது கொண்டு செல்வதும், எங்கோ அவர்களின் பெற்றோர்கள் கோவிலில் விழுந்து புரண்டு அழுது கொண்டிருப்பதும் என்ன கேலி கூத்து இது என்றே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை'' என்கிறார் சமூக ஆர்வலர் ஒருவர்.
""கடந்த பொது தேர்தலின் போது ஜெயலலிதாவுக்காகப் பிரசாரம் செய்த சிம்ரன், கோவை சரளா போன்ற பலரும் இப்போது கலைஞர் டி.வி.யில் நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். சன் டி.வி.யில் புறக்கணிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த், சரத்குமார் போன்றவர்கள் இப்போது அங்கே பிரதான செய்தி ஆதாரங்களாக இருக்கிறார்கள்.
தொலைக் காட்சிகளில் பளிச் சென்று தெரிகிற புதுமை இது ஒன்றுதான்!'' -தொலைக்காட்சி சானலில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊழியர் ஒருவரின் புலம்பல் இது.
""சீக்கிரத்திலேயே இந்தத் தொடர்கள் மக்களுக்கு போரடித்துவிடும். அல்லது இதுமாதிரி நன்கு விற்கக்கூடிய நிகழ்ச்சிகளை ஒன்று போல எல்லோரும் தயாரிக்க ஆரம்பிப்பார்கள்'' என்கிறார் லயோலா கல்லூரியின் காட்சித் தகவலியல் பேராசிரியர் ச.ராஜநாயகம்.
""பொதுவாக மக்களும் சேர்ந்து செயல்படும் நிகழ்ச்சிகளுக்கு இப்போது பெரிய வரவேற்பு இருப்பதால் எல்லோருமே அதையே செய்கிறார்கள். ஒரு சினிமா ஓடினால் அதே போல சினிமா தொடர்ந்து வருவதுபோலத்தான் இதுவும். இது இங்கு மட்டுமல்ல, லாப நோக்கமுள்ள அனைத்து நாடுகளிலும் இதே நிலைதான். இது தமிழ்நாட்டுக்கானது இந்தியாவுக்கானது என்று நினைக்க வேண்டியதில்லை. சொல்லப் போனால் சில நாடுகளில் வெற்றி பெற்ற ஃபார்முலாவைப் பின்பற்றி அதே போல படம் எடுப்பதும் நிகழ்ச்சி தயாரிப்பதும் இந்தியாவைவிட அதிகமாகவே இருக்கிறது'' என்கிறார் அவர்.
""படைப்புக்கும் வணிகத்துக்குமான பொதுவான போராட்டம்தான் இப்போது டி.வி.யின் போக்குக்கும் காரணமாக இருக்கிறது. தரமான சினிமாக்கள் என்று ஒருபக்கம் முயற்சிகள் நடப்பதுபோல இதிலும் தரமான நிகழ்ச்சிகள் என்று கலந்து உருவாகும்'' என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார் ஒரு சினிமா இயக்குநர்.
அப்படி நடந்தா சரிதான்.
தமிழ்மகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
தமிழ்ஜி எப்படி இருக்கீங்க? வேலையெல்லாம் எப்படி போகுது? முதல்ல சொன்ன காமெடியில ஆட்டோ டிரைவர் வடிவேலு என்பதுதான் சரி. மற்றபடி நன்றாக இருந்தது.
http://aadumaadu.blogspot.com
கருத்துரையிடுக