திங்கள், நவம்பர் 12, 2007
சர்ச்சை: அட்வான்ஸ் நிகழ்ச்சிகள்... ஆட்டம் கண்ட திரைத்துறை!
விருதுகள் என்பவை சாதனை படைத்தவர்களைக் கெüரவிக்கவா, வேறு ஆதாயங்களை எதிர்பார்க்கவா என்பது காலம் காலமான கேள்வி.
ஃபைன் ஆர்ட்ஸ்- சபாக்கள் வழங்கும் விருதுகளில் இருந்து நோபல்- ஆஸ்கர் விருதுகள் வரை இந்த சர்ச்சை பொருந்தும்.
விருது அறிவிப்பு விஷயத்தில் சர்ச்சை என்ன தெரியுமா?
""ஒரு சமூக அவலத்தை எதிர்த்துப் போராடும் போராளியாக- நாயகனாக "ஈ' படத்தில் நடித்திருந்தார் பசுபதி. அந்தப் படத்தில் அவருக்கு எதற்கு வில்லன் விருது என்று விருது கமிட்டிக்கு எப்படிப் புரியாமல் போனதோ? அதே போல் ஒவ்வொரு தேர்விலும் ஒரு காரணம் இருக்கிறது. எல்லோரையும் திருப்திபடுத்த வேண்டும் என்ற நோக்கமும் இதிலே இருப்பதால் விருது பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகமாகி விருதின் கெüரவத்தை நீர்த்துப் போகவைப்பது வாடிக்கையாகிவிட்டது. ஆடல் பாடல் கச்சேரியாகவும் டி.வி. சானல்களுக்கான பொழுது போக்கு நிகழ்ச்சியாகவும் வணிகரீதியான போக்கும் விருது வழங்கும் விழாவில் கலந்து விட்டதால் பலருக்கு விருது வழங்குகிறார்கள் என்றால் ஒரு ஆயாசம் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது'' என்கிறார் ஒரு தயாரிப்பாளர்.
சர்ச்சைக்குள் ஒரு சர்ச்சையான விஷயம் ஒன்று தமிழக திரைப்பட விருது சம்பந்தமாக நடந்தது. சர்ச்சை பற்றிய சிறுகுறிப்பு இதுதான்: கடந்த ஆண்டுக்கான திரைத்துறை விருதுகள் வழங்கியபோது அதை ஒளிபரப்புவதற்கான உரிமையை கலைஞர் டி.வி. பெற்றிருந்தது. தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பாவதாகவும் ஒப்பந்தமாகியிருந்தது. ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை சன் டி.வி.யில் தமிழ்த் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பான போது பலருக்கு அதிர்ச்சி. அடுத்த அதிர்ச்சி கலைஞர் டி.வி.யில். விஜய் நடித்த "கில்லி' படத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அது, தீபாவளிக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்புவதாக இருந்தது.
சரியாக அரைமணி நேரத்துக்கு இந்தச் சானலில் வெளியாக வேண்டிய நிகழ்ச்சி அந்தச் சானலிலும் அந்தச் சானலில் ஒளிபரப்பாக வேண்டிய நிகழ்ச்சி இந்தச் சானலிலும் ஓடிக் கொண்டிருக்க, "கில்லி' படத்தைத் தயாரித்த ஏ.எம். ரத்னம், தயாரிப்பாளர் சங்கத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார். அவர் ஒரு சானலுக்கு ரைட்ஸ் கொடுத்திருக்க இன்னொரு சானலில் படம் ஓடிக் கொண்டிருந்தால்... ஓடமாட்டாரா பின்னே? பிறகு சட்டு புட்டென்று இரண்டு சானல் தரப்பும் சமரசமாகி, வடிவேலு பாணியில் சொல்ல வேண்டுமானால் "அப்ரூட்டாக' அடுத்த நிகழ்ச்சிக்குத் தாவினர்.
சன்னில் பூவெல்லாம் உன் வாசம் படமும் கலைஞரில் பைரவி படமும் சடாரென்று ஒளிபரப்பாகத் தொடங்கியது. மக்களும் கண நேர குழப்பத்துக்குப் பிறகு அந்தப் படங்களைப் பார்க்கத் தொடங்கினர்.
இது குறித்துப் பேச இரண்டு தரப்புமே தயாரில்லை. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணனிடம் ""கில்லி திரைப்படம் ஒளிபரப்பானது குறித்தும், விருது வழங்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பானது குறித்தும் சங்கத்தின் நிலைப்பாடு என்ன, ஏ.எம். ரத்னம் தரப்பு புகார் குறித்து நடவடிக்கையில் இறங்குவீர்களா?'' என்றோம்.
""இது குறித்துக் கருத்து கூற வேண்டியது நானல்ல, சானல்களிடம் பேசுங்கள். நான் கருத்துகூற விரும்பவில்லை'' என்றார் சுருக்கமாக.
எது எப்படியோ தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் ஒருவாரம் முன்னதாகவே மக்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சிதான்.
தமிழ்மகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக