
கணவனும் மனைவியும் ஒரே துறையில் இருப்பது பல நேரங்களில் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியாக இருக்கும். சில நேரங்களில் அதுவே இடையூறாக இருக்கும். அதுவும் படைப்பு சார்ந்த துறைகளாக இருந்தால் ஈகோ எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிடும். புகழும் பணமும் செல்வாக்கும் நிறைந்த சினிமா துறையில் கேட்கவே வேண்டாம். இந்த எழுதப்படாத வரையறைகளை மீறி சில தம்பதிகள் இருக்கிறார்கள். இதோ "கண்ணாமூச்சி ஏனடா' ப்ரியாவும் அவருடைய கணவர் பூஷணும் அதற்கான உதாரண தம்பதிகள்.
தீபாவளிக்கு தம் படத்தைத் திரையிட வேண்டிய மும்முர பணியில் இருந்த ப்ரியா அத்தனை வேலை அழுத்தத்திலும் கலகலப்பாகப் பேசுகிறார்.
எப்படி இத்தனை இறுக்கமான நேரத்திலும் அமைதியாக இருக்க முடிகிறது? என்று ஆரம்பித்தோம்.
குடும்பத்தின் பக்க பலம் மிகவும் முக்கியமாக இருக்கிறது. காலையில் 9 மணிக்கு உங்களை இங்கே வரச் சொல்லிவிட்டு நான் கணவருக்கு டிபன் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தால் நான் இங்கு வர முடியுமா? இன்று என் வேலையை என் கணவர்தான் பார்த்துக் கொள்கிறார். இங்கே என் வேலையைப் பகிர்ந்து கொள்கிற உதவியாளர்கள்... அப்புறம் அமைதியாகப் பணியாற்றுவதில் என்ன சிக்கல்?
நமக்குத் தொழில் சினிமா என்று நீங்கள் இந்த வேலையைத் தேர்வு செய்த சந்தர்ப்பத்தில் உங்கள் வீட்டில் எப்படி எடுத்துக் கொண்டார்கள்?
எனக்கு ஒரு அண்ணன், இரண்டு அக்கா. அண்ணனுக்கும் எனக்கும் 14 ஆண்டு இடைவெளி. வீட்டில் எனக்குக் கடைக்குட்டிக்கான முக்கியத்துவம் இருந்தது. நானே முடிவெடுக்கிற சுதந்திரமும் இருந்தது. எங்கள் வீட்டில் எல்லாருக்கும் அந்தச் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. பள்ளிப்பருவத்தில் நாடகத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு, என்னை கிறித்துவக் கல்லூரிக்கும் அதன் பிறகு திரைப்படக் கல்லூரிக்கும் இட்டுச் சென்றது. கிறித்துவக் கல்லூரியில் படிக்கும்போது ஒரு நிகழ்ச்சிக்கு வந்த நடிகை சுகாசினி எனக்குப் பழக்கமாகி "பெண்' சீரியலில் நடிக்கவும் வைத்தார். ஆனால் எனக்கு இயக்குநர் ஆவதில்தான் விருப்பம் என்பதால் அவரிடமே உதவி இயக்குநராகி "இந்திரா'வில் பணியாற்றினேன். அதன் பிறகு "இருவர்' படத்தில் மணிரத்னத்தின் உதவியாளரானேன். அவரிடம் தொடர்ந்து நான்கு படங்கள் பணியாற்றினேன். தொடர்ந்து சிக்கல் இல்லாமல் என் பயணம் சென்று கொண்டிருந்ததால் எந்தக் கேள்வியும் எழவில்லை.
கல்யாணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா என்பது போல "கல்யாணத்துக்குப் பிறகு படம் இயக்குவீர்களா?' என்ற கேள்வியை எதிர் கொண்டீர்களா?.
இல்லவே இல்லை. என் குடும்பத்தில் எனக்குச் சுதந்திரம் கொடுத்தது போலவே என் மாமியார் வீட்டிலும் எனக்கான சுதந்திரத்தை அனுமதித்திருக்கிறார்கள். என் கணவரும் சினிமா துறையைச் சார்ந்தவர் என்பதால் அதற்கான சிரமங்களைத் தெரிந்தவர்களாக இருந்தார்கள். அவர் ஷியாம் பெனகலிடம் பணியாற்றிவிட்டு இப்போது தெலுங்கில் ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்த விதத்தில் நான் அவருக்கு சீனியர். "கண்டநாள் முதல்' படத்தைத் தொடர்ந்து "கண்ணா மூச்சி ஏனடா' படத்தையும் இயக்கிவிட்டேன் (சிரிக்கிறார்).
இந்தப் படத்தைப் பொறுத்தவரை தயாரிப்பாளர் (ராதிகா), ஒளிப்பதிவாளர் (ப்ரீதா), பாடலாசிரியர் (தாமரை) எனப் பலரும் பெண்களாக இருந்தது உங்களுக்குப் பணியாற்ற வசதியாக இருந்ததா?
முதல் படத்தில் எல்லாத் தொழில்நுட்பக் கலைஞர்களும் ஆண்கள்தான். அதிலுமே எனக்கு எந்தப் பிரச்சினையுமே இல்லையே... பெண் என்பதால் எனக்கு எந்தச் சலுகையும் இருந்ததில்லை. சங்கடங்களும் இருந்ததில்லை.
தமிழ்மகன்
படங்கள்:மீனம் மனோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக