என் மகள் கொண்டு வந்த அந்த அழகிய சிறிய புத்தகம் குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் அடங்கிய புத்தகமாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பள்ளியிலிருந்து கொண்டுவரப்பட்டதிலிருந்து என் மகளால் படிக்கப்படாமல் டேபிளின் மீதே மூன்று நாள்களாகக் கிடந்ததால் அது ஒருவேளை பெற்றோர்களுக்கான புத்தகமோ என்று தோன்றியது. இரவு சாப்பாடு முடிந்து தூங்குவதற்கு முந்தைய ஒரு அசமந்தமான நேரமாக இருந்ததால் அந்தப் புத்தகத்தைக் கண்ணுற்றேன்.
ஏனென்றால் பெற்றோர்}ஆசிரியர் கூட்டத்தில் அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது. அந்தப் பள்ளியின் தாளாளர் எழுதிய புத்தகம் என்றும் அதற்காக குழந்தைகள் எல்லோரும் தலா 25 ரூபாய் கொண்டு வர வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
ஆசிரியர்களைச் சந்திப்பது என்பது நான் குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே பிடிக்காமல் போய்விட்டதால் நான் ஒவ்வொரு முறையும் எப்படியாவது அந்தக் கூட்டங்களைத் தவிர்த்துவிடுவேன். குழந்தைகளின் படிப்பு மேம்படுவதற்காக அவர்கள் சொல்கிற ஒவ்வொரு உத்தியையும் மீற வேண்டும் என்று தோன்றுவதுதான் முதல் காரணம். உதாரணத்துக்கு "தினமும் இரவு 10 மணிவரை படிக்க வேண்டும். காலையில் நான்கு மணிக்கு எழுந்திருந்து படிப்பைத் தொடர வேண்டும்' என்பது குழந்தைகள் படிப்பதற்கான ஓர் உத்தி.
""நானெல்லாம் படித்த காலத்தில் பள்ளிக்கூடத்தில் படித்ததோடு சரி'' என்று மனைவியிடம் சொல்வேன்.
""அதான் இப்படி இருக்கிறீர்கள்'' என்பாள் வெடுக்கென.
""வீட்டில் இத்தனை மணி நேரம் படிப்பதற்கு பள்ளிக்கூடம் எதற்காக?''
""பசங்க நல்லா படிக்கறதுக்குத்தான்''
""கொஞ்சமாகப் படித்தால் போதும்''
""நல்லது என்றாலே பிடிக்காதே''
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விஷயம் நல்லதாக இருக்கிறது. எனக்கு நல்லதாக இருப்பது பெரும்பாலும் கெட்டது என்பது என் மனைவியின் சுலப அபிப்ராயம்.
இப்படியான எண்ண ஓட்டத்தோடுதான் அந்தப் புத்தகத்தை எடுத்தேன். புத்தகத்தின் தலைப்பு "சவீதா முத்துகிருஷ்ணன் சிந்தனைகள்'.
சவீதா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் முத்துகிருஷ்ணன் எழுதிய சிந்தனைத் துளிகள் என்பது புரிந்தது. குழந்தைகள் படிப்பைக் குறித்த உத்திகள் அதில் இருக்கும் என்று நான் நம்பினேன். ஆனால் அதில் அப்படியில்லை.
உழைத்தால் உயர்வு கிட்டும், உண்மை பேசு, அன்பே சிறந்தது, கூடி வாழ்ந்தால் குடி உயரும்,எளியவர்க்கு உதவினால் தர்மம் தலை காக்கும் என்ற ரீதியில் அவர் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருந்தார். இது எதிர் பார்க்காத திருப்பம். என்னால் நம்பவே முடியவில்லை. மனித இனம் தோன்றிய காலம் தொட்டுச் சொல்லப்பட்டு வருகிற இத்தகைய அறிவுரைகளை ஒரு மனிதர் தம்முடைய சிந்தனைகளாக சொல்லிக் கொள்வதும் புத்தகமாகப் பிரசுரிப்பதும் மிகப் பெரிய அநீதியாக இருந்தது.
பள்ளி மாணவர்கள் 848 பேரும் அந்தப் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். யாருக்குமே இந்த அக்கிரமத்தைத் தட்டிக் கேட்க முடியவில்லையா என்பது மேலும் அதிர்ச்சியாக இருந்தது எனக்கு. ஒரே நாளில் 848 பிரதிகள் விற்பது என்பது தமிழ் நூல் உலக வரலாற்றில் ஒரு மகத்தான சாதனை. சொல்லப் போனால் முதல் சாதனையாகவும் இருக்கும் என்று நினைத்தேன்.
ஒரு சிறுகதை தொகுதி வெளியிட்டுவிட்டு நூலக ஆணை கிடைக்கப் பெறாமல் அந்த ஆயிரம் பிரதிகளையும் இண்டு இடுக்கு வீட்டில் வைத்து கரையானுக்குப் பாதி, அன்பளிப்பு மீதி என்று அவதிப்பட்டவனுக்குத்தான் சவீதா முத்துகிருஷ்ணன் என்ற எழுத்தாளனுக்குள் ஒளிந்திருக்கிற சாமர்த்தியம் தெரியும்.
""என்னது "என்ன இது அநியாயம்?' அவன் பண்ணினதும்தான் அநியாயம்'' என்று என் மனைவி தொலைக்காட்சி சீரியலைப் பார்த்து ஏதோ சொன்னாள். நான் மனதுக்குள் நினைத்தது வாய்வழி முணகலாகவே வெளிப்பட்டிருக்கிறது. டி.வி.யில் வேறு ஏதோ அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது போலும்.
""இந்தப் புத்தகத்தை ரமேஷ் வீட்டிலும் வாங்கினாங்களா?''
""எந்த புத்தகம்?''
""சவீதா முத்துகிருஷ்ணன் சிந்தனைகள்''
அப்போதுதான் ஞாபகம் வந்தவளாக என் கையில் இருந்த புத்தகத்தை கவனமாகப் பார்த்தாள்.
""எல்லோரும்தான் வாங்கியாகணும்''
""சட்டமா?''
""உன் கிட்ட பேசி ஜெயிக்க முடியாது''
""ரமேஷ் அப்பா இந்தப் புத்தகத்தைப் பார்த்தாரா?''
""அதெல்லாம் எனக்குத் தெரியாது''
ரமேஷ் வீடு எங்கள் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளிதான். நான் நேராகவே ரமேஷ் வீட்டுக்குப் போய் அவருடைய அப்பாவைத் துணைக்கு அழைத்தேன். அவர் மேற்படி புத்தகத்தை அவர் வீட்டில் இருந்த இரண்டே புத்தகங்களான விநாயகர் அகவல், திருப்பாவை ஆகியவற்றுக்கு அடுத்து இந்தப் புத்தகத்தையும் வைத்திருந்தார். புத்தகத்தின் சைஸ் காரணமாக அங்கு அடுக்கியிருக்கலாம்.
விஷயத்தை விளக்கி, காலம் காலமாக புத்தரும் ஒüவையாரும் திருவள்ளுவரும் இரண்டாயிரம் ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருப்பதை ஒரு மனிதர் தன்னுடைய சிந்தனைகளாகப் புத்தகம் எழுதி வெளியிட்டிருப்பதுடன் அதை வாங்கியே ஆக வேண்டும் என்று 25 ரூபாய் வேறு வாங்கிவிட்டதைச் சொன்னேன்.
""பரவாயில்லை விடுங்க. எவ்வளவோ செலவு பண்றோம். வீட்டில் புக்குனு ஒண்ணு இருக்கறது நல்லதுதானே?'' என்றார். இரண்டே புத்தகங்கள் உள்ள தம் பூஜையறை நூலகத்தில் மூன்றாவதாக இப்படியொரு புத்தகம் சேர்ந்த மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது.
அவருக்கும் மெகா சீரியல் கவலைதான் அதிகமாக இருந்தது. ""இவ்வளவுக்கும் காரணம் இந்த இன்ஸ்பெக்டர்தான்'' என்றார் டி.வி.யைக் காட்டி.
மக்களின் அறியாமை, அலட்சியம், கொடுமை கண்டு பொங்காத மனநிலை, சகிப்புத் தன்மை, அக்கறை இன்மை எல்லாமுமாகச் சேர்ந்து என்னுடைய ஆவேசத்தை அதிகப்படுத்தியது. இதற்காக சுப்ரீம் கோர்ட் வரைகூட சென்று வாதாடுவது என்று தீர்மானித்தபோது மணி இரவு 12}ஐக் கடந்துவிட்டது.
காலை நான் பள்ளிக் கூடத்துக்குள் நுழைந்து பள்ளியின் தாளாளர் அறையை நோக்கி வேகமாக நடைபோட்டேன். தாளாளரின் கார் பிரமாண்டமாக நின்றிருந்தது. சில வாரங்களுக்கு முன்பு அவர் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி நினைவுக்கு வந்தது. வேலை ஏதும் கிடைக்காமல் தாம் பட்ட கஷ்டத்தையும் பிறகு பள்ளிக் கூடம் தொடங்க முடிவெடுத்து வாழ்க்கையில் முன்னேறியது பற்றியும் அவர் அதில் கூறியிருந்தார். "வாழ்க்கையில் வென்றவர்கள்' என்ற தன்னம்பிக்கைத் தொடரில் அது வெளியாகியிருந்தது. இரவு ஏற்பட்ட ஆவேசம் சற்றும் குறையவில்லை எனக்கு. அவருடைய காரைப் பார்த்ததும் அது அதிகரித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
நான் தாளாளர் அறை நோக்கி வேகமாக நடைபோடுவதைப் பார்த்த காவலாளி படுவேகமாக வந்து என்னைத் தடுத்தான். ""யாரைப் பார்க்கணும்?''
""கரஸ்பாண்டன்ட்''
""அதெல்லாம் சாயங்காலம் நாலு மணிக்கு மேலதான். கிளம்புங்க''
""வழி விடுய்யா''
""யோவ் நில்லுய்யா'' என்றான் அதே மரியாதையுடன்.
எங்கே கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுவானோ என்று சற்றே தயக்கமாக இருந்தது. அவமானப்படுத்திவிட்டான் என்றால் பிறகு எல்லாமே ஏடாகூடமாகிவிடுமே!
சட்டென என் விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினேன்.
இரவு நேரங்களில் வீடு திரும்பும்போது போலீஸ்காரன் சந்தேக கேஸ் என்று மடக்கினால் காட்டுவதற்காக அச்சடித்து வைத்திருந்த விசிட்டிங் கார்டு. அதைப் பார்த்து அவன் உடனடியாக மரியாதை கொடுத்தான் என்று சொல்ல முடியாது. என் பெயருக்கு முன்னால் எழுத்தாளர் என்று அதில் போட்டிருந்தேன். ""இதைச் சொல்ல வேண்டியதுதானே? என்னமோ புர்ர்ருனு போறீயே? இங்கயே நில்லு கேட்டுட்டு வந்து சொல்றேன்'' என்றான்.
விசிட்டிங் கார்டுக்கு நல்ல மரியாதை இருந்தது. போன வேகத்தில் காவலாளி வந்து அழைத்தான். காவாளியிடம் அலட்சியத்தைக் காட்டிவிட்டு தாளாளர் அறைக்குள் நுழைந்தேன். அவரைத் தவிர அங்கு மூன்று பேர் இருந்தார்கள். இருவர் பணியாட்கள். அவருடைய சிந்தனைகள் நூலின் வெளியீட்டுவிழா படத்தை பெரிய சைஸில் ஃபிரேம் போட்டு, அதைச் சுவரில் மாட்டுவதற்கான வேலை நடந்து கொண்டிருந்தது.
""வாங்க, எழுத்தாளர். இந்த ஃபோட்டோவை இங்கே மாட்டலாமா பாருங்கள்'' என்று அபிப்ராயம் கேட்டார் தாளாளர். முரட்டு உருவம். பில்டிங் மேஸ்திரி ஆறுமுகம் ஞாபகத்து வந்தார். விபூதியும் குங்குமமும் நெற்றி நிறைய ஆக்ரமித்திருந்தன. அவருக்கு எதிரில் வேறொருவர் உட்கார்ந்திருந்தார். ""இவர்தான் கவிஞர் கவிமுகிலன்'' என்னை நோக்கிச் சொல்லிவிட்டு, ''இவர்....'' என்றபடி என் விசிட்டிங் கார்டில் பெயரைத் தேடினார். கார்முகிலன் அந்தப் போட்டோவில் புத்தகம் வெளியிட்டுக் கொண்டிருந்தார்.
""உங்களோட புத்தகத்தைப் பார்த்தேன்''
அவருடைய மேஜை அறையைத் திறந்து அவருடைய புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாகத் தருவதற்கு எத்தனித்தவர், நான் இப்படிக் கூறியதும் அதை மறுபடி உள்ளே வைத்துவிட்டு ""எப்படி இருந்தது சொல்லுங்க'' என்று பெருமிதம் பொங்க பாராட்டுகளைப் பெறுவதற்காகக் காத்திருந்தார்.
அந்தச் சூழ்நிலையை எதிர் கொள்ள முடியாமல் தவித்தேன்.
""உண்மை பேச வேண்டும் என்பதும் உழைத்து முன்னேற வேண்டும் என்பதும் எப்படி உங்களுடைய சிந்தனையாகும்?'' என்றேன் ஒரு திடீர் உந்துதலில்.
அந்த அறையில் இருந்த நான்கு பேருமே அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தனர். தாளாளரும் இதை எதிர்பார்க்கவில்லை. ஃபோட்டோ மாட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு என்ன சைகை செய்தாரோ இருவரும் வெளியேறினர்.
""நீ மட்டும் என்ன பிரமாதமா எழுதிட்டே?'' ஒருமையில் கேட்டார்.
""நான் உங்களைவிட சிறப்பா எழுதுவேன் என்று நிரூபிப்பதற்காக வரவில்லை. எழுத்தாளர் என்ற முறையிலும் வரவில்லை. என் குழந்தையிடம் இந்தப் புத்தகத்தைக் கொடுத்து 25 ரூபாய் வாங்கியிருக்கிறீர்கள். இந்தப் புத்தகத்தை வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை''
""இப்ப என்ன 25 ரூபாய் வேண்டுமா?'' என்றபடி ஆவேசமாக பர்ûஸ எடுத்து ஒரு நூறு
ரூபாய் தாளை எடுத்து என் முன் வீசினார்.
""எனக்கு 25 ரூபாய் தந்தால் போதும்'' என்றேன்.
""ஃபிஸ் கவுண்டரில் போய் வாங்கிக்க'' என்றபடி இண்டர்காமில் தகவல் சொன்னார்.
""நீங்க போகலாம்... வயிற்றெரிச்சல் கிராக்கிங்க''
""புலவர்களுக்குள் சச்சரவு ஏற்படுவது சகஜம்தான்... கம்பனுக்கும் ஒட்டக்கூத்தனுக்கு ஏற்படாத சச்சரவா?'' தாளாளர் முன் அமர்ந்திருந்தவர் சமாதானம் செய்து கொண்டிருந்தார்.
தமிழ்மகன்,
tamilmagan2000@gmail.com
2 கருத்துகள்:
Great
nice
Wow
Super
Simple concept, Very good story.
nallasudar@gmail.com
me first...?
கருத்துரையிடுக