தமிழ்மகன்
"கடவுள் இருக்கிறாராப்பா?'' என்றான் மகன்.
பொதுவாக இந்த வயசில் இப்படியான எண்ணம் தோன்றும் என்று நினைக்கிறேன். பத்தாம் வகுப்பு படிக்கும் நேரத்தில்தான் எனக்கும் அப்படியான சந்தேகம் எழுந்தது.
பால் போடாமல் போய்விட்ட பால்காரனிடம் சண்டை போட்டுவிட்டு அப்படியே இன்றைக்கான பாலை வாங்கிக் கொண்டு வருமாறு சொல்லிக் கொண்டிருக்கும் மனைவியின் எரிச்சல் இந்தக் கடவுள் சர்ச்சையால் மேலும் அதிகமாகும் என்று தோன்றியது. பையன் கேட்ட கேள்விக்கும் நான் அதற்கு பதில் அளிப்பதற்குத் தயாராவதையும் அவள் கவனித்துவிட்டாள். அந்த கவனிப்பில் "ஆரம்பிச்சிட்டீங்களா?' என்ற முறைப்பும் இருந்தது.
"பால் வாங்கிட்டு வரலாம் வர்றீயா?'' - பையனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தேன்.
"கடவுள் இப்ப என்னப்பா செய்வாரு?'' என்றான் ஆர்வமாக.
"நிச்சயமா பால் வாங்கிட்டு வர போய்க்கிட்டு இருக்க மாட்டாரு'' சிரித்தான்.
"எப்ப கேட்டாலும் கடவுள் பத்தி சரியாகவே சொல்ல மாட்டேங்கிறியேப்பா... அவர் காபி சாப்பிடுவாரா?'' குரலில் அலுப்பு தெரிந்தது.
"எனக்கும் சரியா தெரியலைப்பா... காபி சாப்பிடுவாரா? வெண் பொங்கல் சாப்பிடுவாரா? பிட்சா சாப்பிடுவாரான்னுலாம் கேட்கக் கூடாது. சாமியை நீ உன்னை மாதிரி ஸ்கூல் போய்ட்டு வர்றவர்னு நினைச்சியா? அவரை நம்ம ஸ்கேல்ல அளக்கக் கூடாது... புரியுதா? அது நம்ம கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது''
"எல்லாரும் கும்பிட்றாங்களே?.. ''
"நீயும் கும்பிடேம்பா''
"எதுக்கு கும்பிடணும்?''
"நல்லா படிப்பு வரணும்னு கும்பிடு''
"அப்ப படிக்க வேண்டியதில்லையா?''
பால்காரனிடம் விவரத்தைச் சொல்லி பால் பாக்கெட் வாங்கிக் கொண்டு திரும்ப ஆரம்பித்தோம்.
"ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிறியேப்பா''
"என்னடா?''
"சாமி கும்பிட்டா பாஸ் ஆகிட முடியுமா? படிக்க வேண்டியதில்லையா?''
"நம்ம முயற்சியும் இருக்கணும். கடவுள் நம்பிக்கையும் இருக்கணும்''
"சாமி கும்பிடாமயே நல்லா படிச்சா பாஸôக முடியாதா?''
"பெசாம வாடா... இதப்பத்தியெல்லாம் ஆராய்ச்சி பண்றதுக்கு இன்னும் அனுபவம் வேணும்.''
பையன் போட்ட அதட்டல் காரணமாகவோ, பதிலில் சற்றே சமாதானமாகியோ அமைதியாக வந்தான். அடுத்து அவன் ஏதோ யோசித்து கேள்வி ஆரம்பிக்கும் போது நல்லவேளையாக வீடு வந்துவிட்டது.
"அப்பாவும் புள்ளையும் இப்படி அன்ன நடை போட்டுகிட்டு வந்தா நேரமாகுதில்ல'' என்று மனைவிகாட்டிய வெறுப்பில் அவனும் அல்ஜீப்ரா படிக்கப் போய்விட்டான். ஏதோ அவள் போடுகிற இப்படியான அதட்டிலில்தான் குடும்பமே நடப்பதாக எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. இல்லாவிட்டால் நானும் குழம்பி, குடும்பத்தையும் குழப்பி விடுவேனோ என்று பயம் வந்துவிட்டது எனக்கு.
எதிலும் தீர்மானமான அபிப்ராயம் ஏற்படுவதில்லை. எது நல்லது என்பதில் ஏகப்பட்ட குழப்பம். இருக்கிறதா இல்லையா குழப்பம். வேண்டுமா வேண்டாமா என்பதில் குழப்பம். அதிகமா கம்மியா என்பதில் குழப்பம்.
போன வாரம் இருந்திருந்து சட்டை எடுக்கப் போய் எந்த நிறம் எடுப்பது என்பதில் ஏகப்பட்ட குழப்பம்.
வெளிர் நீல சட்டை விரும்புபவர்கள் உண்மையை நேசிப்பவர்களாக இருப்பார்கள் என்று படித்திருந்ததால் நான் அந்த நிறத்தில் எடுத்துக் கொள்ளலாம் என்று ஆசைப்பட்டேன். மனைவியோ "அழுக்குத் தாளாது வீட்டில மஞ்சள் கலர்ல தண்ணி வருது... ஒரு தடவை துவைத்ததும் இந்தக் கலரே இருக்காது. பெசாம நம்ம தண்ணி ஏத்தா மாதிரி செம்மண் கலர்ல எடுத்துக்கங்க'' என்றாள்.
அவள் சொல்வதில் நியாயம் இருந்தது. அதிலும் வெளிர் நீலத்தில் செம்மண் நிறமும் கலந்து என்னை வேறொரு குணவானாகக் காட்டுவதையும் தவிர்க்கலாம். செம்மண் நிறம் என்பது ஏறத்தாழ நரேந்திர மோடியை ஞாபகப்படுத்த, "இன்னும் கொஞ்சம் டார்க்கா இருந்தா நல்லது'' என்றேன்.
அவன் சிவப்பு நிறத்தை எடுத்துப் போட்டான். அது கம்யூனிஸ்ட் அடையாளமாக இருந்தது. இது பரவாயில்லை. மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் தோரணையில் அதை நான் என் மீது போர்த்திப் பார்த்த போது, "இதையா எடுத்துக்கப் போறீங்க?'' என்ற மனைவியின் கேள்வியில் எதிர்ப்பு வெளிப்பட்டது.
"ஏதோ ஒண்ணு...'' எந்தவித நோக்கமும் இல்லாமல்தான் இதை நான் தேர்வு செய்தேன் என்பதைப் போல் அலட்சியமாகச் சொன்னேன்.
"ஏதோ ஒண்ணுனு சொல்லாதீங்க... காசு என்ன மரத்திலா காய்க்குது?... ஆள் பாதி... ஆடை பாதி. ட்ரஸ்ஸýதான் முக்கியம். உங்க நிறத்துக்கு ஏத்ததா எடுத்துக்கங்க'' ஆடைவிஷயத்தில் நாம் இவ்வளவு அலட்சியமாக இருக்கக் கூடாது என்று நானே ஒரு கணம் வருத்தப்பட்டேன். அவளுடைய பேச்சில் பொதிந்திருந்த அக்கறைதான் அதற்குக் காரணம்.
கடைக்காரன் வேறொரு உத்தி சொன்னான். "பேண்டுக்கு மேட்சா எடுத்துக்கங்க சார்...''
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். ஏனென்றால் நாங்கள் எடுக்கப் போனது ஒரே ஒரு சட்டை மட்டுமே. வெறும் சர்ட் மட்டும் எடுப்பது நாகரீகமற்ற செயலோ? இப்போது இந்தச் சூழ்நிலையை எப்படி சமாளிப்பது. தரமான துணியாக இல்லை என்று சாக்கு போக்கு சொல்லி வெளியேறி விடலாமா? இல்லை போனால் போகிறது என்று ஒரு பேண்டையும் எடுத்துவிடலாமா? உண்மையில் நம்மிடம் உள்ள பேண்டுகள் எல்லாம் கேசவன் கல்யாணத்துக்கு முந்தையவை. கடைசியாக கேசவன் கல்யாணத்துத்தில்தான் சம்பந்தி சீர் என்று எனக்கும் ஒரு பேண்ட் சர்ட் எடுத்துத் தந்தார்கள். கேசவனுக்குக் கல்யாணமாகி என்ன ஐந்து வருஷம் இருக்குமா? அதற்கு மேலேயே இருக்கலாம். அவனோட பையனே இப்ப மூணாவது படிக்கிறானே... அஞ்சு வயசுல ஒண்ணாவது சேர்ந்திருந்தாக்கா இப்ப... எட்டு வயசு... இப்பல்லாம் நாலு வயசிலயே ஒண்ணாவது போட்டுட்றாங்க. என்னோட கணக்கு வாத்தியாருக்கு சர்க்கஸ் புலினு பேரு. எப்பப் பார்த்தாலும் ஆ..ஆ...ஆ...வ்வ்வ் கொட்டாவி விடுவாரு. சர்க்கஸ்ல புலி வாயைத் திறந்து காட்டச் சொல்லி ரிங் மாஸ்டர் குத்தும் போது அப்படித்தான் திறக்கும். பாவம் புலிகள். முண்டந்துறைல ஒரு தரம்...
"பார்த்துக்கிட்டே இருந்தா எப்படி? ஏதாவது ஒரு கலர் எடுங்க''
நான் சட்டென்று பச்சை நிறத்தில் பெரிய பெரிய கட்டமாகப் போட்ட சட்டையைத் தேர்ந்தெடுத்தேன்.
"இது என்ன லுங்கி மாதிரி''
நமக்கு சட்டை எடுக்கக்கூடத் தெரியவில்லையே என்ற வருத்தமும் மனைவி என்னை மிகவும் ஆட்சி செய்வதாக ஏற்பட்ட எரிச்சலும் சேர்ந்து கொண்டது. இத்தகைய உணர்வுகளால் நான் மேலும் அமைதியாகிவிட்டேன்.
"இதப் போட்டுக்கங்க'' கருப்புச் சட்டையில் கிளிப்பச்சை நிறத்தில் பூப் போட்ட சட்டையை எடுத்துத் தீர்மானமாக என் முன் நீட்டினாள். அது மாதிரி சட்டையை நான் என் வாழ்நாளில் போட்டதே இல்லை. நமக்குப் பழக்கமே இல்லாத சட்டைப் பொருந்துமா என்று தெரியவில்லை. இப்படித் திடீர் என்று வித்தியாசப்படுத்திக் காட்டினால் நன்றாகத்தான் இருக்கும் என்றும் தோன்றியது.
இவ்வளவு கதையும் எதற்காகச் சொல்கிறேன் என்றால் எனக்கு எதிலுமே தீர்மானமான முடிவுகள் இருந்ததில்லை., கடவுள் உட்பட.
சட்டையைத் தேர்ந்தெடுப்பதிலாவது ஏதோ ஒரு சட்டையைத் தேர்ந்தெடுத்தே தீர வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. கடவுள் விஷயத்தில் அவர் இல்லாமலேயே இருப்பதிலும் சங்கடம் எதுவும் இல்லாததால் சட்டையைவிட மேலும் ஒரு வாய்ப்பு அதிகரித்துவிட்டது.
மனித நாகரீகத்தில் மனிதர்களைவிட அதிகமான கடவுள் தொகை இருந்திருப்பதாகப் படிக்கிறோம். ஒவ்வொரு நூற்றாண்டிலும் விதம்விதமான கடவுள்கள். ஒவ்வொரு பிராந்தியத்தில் ஒவ்வொரு கடவுள். கொஞ்சமாவது மனிதன் மனசாட்சிக்குப் பயப்படுகிறான் என்றால் அது கடவுள் என்ற சித்தாந்தம் இருப்பதால்தான் என்றார் என் நண்பர். அப்படியானால் அப்படி ஒரு சித்தாந்தம் இருப்பது நல்லதுதான் என்று நான் முடிவெடுத்திருந்த நேரத்தில்தான் இந்தியாவில் எங்கு பார்த்தாலும் எங்கள் கடவுளே சிறந்தவர் என்பதை நிரூபிக்கும் பொருட்டு குண்டு வெடிப்புகளும் ரயில் எரிப்புகளும் நடந்தது. கடவுள் சித்தாந்தம் இருப்பதால்தான் வன்முறைகள் நடப்பதாக நான் நண்பரிடம் வாதிட்டேன்.
"இது பரவாயில்லை. மதம் மட்டும் மக்களை இப்படி ஆவேசமாகக் கட்டி வைக்கவில்லையென்றால் பொம்பளைக்காகவும் பொருளுக்காகவும் அடிச்சுக்கிட்டு மனித இனமே அழிஞ்சு போயிருக்கும். பரவால்ல சார்.. ஒரு பாபர் மசூதி... இரட்டை கோபுரம்னு சின்னச் சின்ன விஷயத்தோடு முடிஞ்சிடுது ...'' என்றார். சரி கடவுள் சித்தாந்தமும் ஒரு பக்கம் இருந்துட்டுதான் போகட்டுமே நமக்கென்ன என்று விட்டுவிட்டேன்.
இப்போது மகன் ஆரம்பிக்கிறான்.
இரவு படுக்க வந்த பிறகு "கடவுள் தூங்குவாரா? அவருக்கும் கனவு வருமா? அப்துல் கலாம் கனவு காண சொல்றாரே... கடவுளும் காணுவாரா?''
"மனிதர்கள் மாதிரியே கடவுளைப் பொருத்திப் பார்க்கக் கூடாதுனு சொன்னேனா இல்லையா''
"பின்னே?''
"அவருக்கு உருவமில்லை, பெயரும் இல்லை. அவர்னு சொல்றதே இல்லை. அதாவது அவர் என்பதே இல்லை. ஆணல்லன், பெண்ணல்லன் அல்லாது அலியுமல்லன்னு பாடி வெச்சிருக்காங்க''
"பார்க்க முடியுமா?''
"கண்டவர் விண்டிலர்.. விண்டவர் கண்டிலர்... பார்த்தவர்கள் சொல்வதில்லை... பார்த்ததாகச் சொல்றவங்க பார்த்ததே இல்லை''
"அதனாலதான் நீ பார்த்ததா சொல்ல மாட்டறீயா?''
"......''
இந்த முறையும் மனைவிதான் என்னைக் காப்பாற்றினாள். "ஏய்... பெசாம தூங்குங்க... குழந்தைங்க குழந்தைங்களா பேசணும். முன்னேர் சரியா போனா பின்னாடி வர்ற ஏரும் சரியா வரும்''
அதன் பிறகு யாரும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் தூங்கிவிட்டோம் என்று சொல்வதற்கில்லை. மகன் வெகு நேரம் புரண்டு கொண்டிருந்தான். குழந்தையை நாம் சரியாக வளர்க்கத் தெரியவில்லையோ என்று கவலையாக இருந்தது.
அவன் குட்டி சாமியாராகவோ, குட்டி நக்ஸலைட்டாகவோ ஆவது பொருத்தமில்லாததாக இருந்தது.
பத்தாவதில் நல்ல மார்க் எடுத்தால்தான் ப்ளஸ் ஒன் சேர்த்துக் கொள்வேன் என்று பள்ளியின் தாளாளர் சர்க்குலர் அனுப்பியிருந்தார்.
தினமும் பிள்ளையார் பூஜை செய்யச் சொல்லி, திருப்பாவை முப்பதும் ஒப்பிக்கச் சொல்லலாமா? மகன் மீது கடவுளைத் திணிப்பது சரியா? சின்னக் குழந்தையை இப்படி இம்சைக்கு ஆளாக்கிவிட்டோமே... மற்ற குழந்தைகள் மாதிரி கிரிக்கெட் பேட் கேட்டு அடம்பிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நானும் புரண்டு கொண்டிருந்தேன்.
காலையில்தான் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்ததாக நினைத்த என் மனைவிதான் இரவெல்லாம் ஆடாமல் அசையாமல் மனதுக்குள்ளாகவே புரண்டு கொண்டிருந்தது புரிந்தது.
"என்ன நினைச்சுகிட்டிருக்கீங்க மனசுல... இதென்ன வீடா மடமா?... ராத்திரியெல்லாம் குழந்தைகிட்ட என்ன பேசறீங்க... பைத்தியக்காரனாக்கிடுவீங்க போலருக்கே... நாளையிலிருந்து நீங்கதான் குழாய்ல போய் தண்ணி புடிச்சுகிட்டு வரணும். ரேஷன் கடைக்குப் போகணும்... கரெண்ட் பில் கட்டணும்... காய்கறி வாங்கியார்றது... கேபிள் டி.வி. சரியா தெரியலைனா போய் சொல்லிட்டு வர்றது... ஒட்ரை அடிக்கிறது எல்லாம் நீங்க ரெண்டு பேரும்தான் செய்யணும்... சும்மா இருந்து இருந்து கொழுப்பேறிப் போச்சி ரெண்டு பேருக்கும். கடவுள் ஆராய்ச்சி பண்றீங்களா? கடவுள் ஆராய்ச்சி...'' ... பொரிந்து தள்ளினாள்.
நான் கிணற்றில் இருந்து தண்ணீர் சேந்துகிற வேலையைச் செய்தேன். அவன் பிஸிக்ஸ் புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். பள்ளிக் கிளம்பியவனின் நெற்றியில் விபூதி வைத்து "கண்டதையும் நினைச்சு மனசைக் குழப்பிக்காதடா... நல்லா படி'' என்று தலைவாரிவிட்டாள்,
நான் அவன் பேனாவில் இங்க் இருப்பது தெரியாமல் மேலும் இங்க் ஊற்றி... தரையைத் துடைக்கத் துணியைத் தேடினேன்.
"நான் துடைச்சுக்கிறேன் விடுங்க... இந்த மாதிரி விதண்டா வாதம் பேசிக்கிட்டிருந்தா நான் எங்க போவேன்'' என்றாள்.
அவனைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். சைக்கிளில் இருந்து இறக்கிவிட்டுவிட்டு "நல்லா படிப்பா'' என்றேன். என் குரலே எனக்கு வேறு மாதிரி கேட்டது. அவன் என்னை ஏற இறங்க பார்த்தான்.
"சரிப்பா''
"இப்போதைக்குக் கடவுள் இருக்கார்னு வெச்சுக்கோ. அதுக்கு மேல கேட்காதே... யோசிக்காதே''
பரிதாபமாகப் பார்த்தான்.
"நல்ல மார்க் எடுத்தாத்தான். நல்ல வேலை கிடைக்கும். நீ சம்பாரிச்சாத்தான் வீட்டு மேல வாங்கின கடனை அடைக்க முடியும். அம்மாவுக்கு அந்தக் கஷ்டம்தான்''
"சரிப்பா'' என்று பள்ளிக்குள் நுழைந்தான். குழந்தையின் கழுத்தில் நுகத்தடி சுமத்திய வலி.
தெருமுனை முருகனுக்குச் சந்தனாபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. எனக்குக் கண்ணீர் வந்தது. சுலபத்தில் அடக்க முடியவில்லை.
tamilmagan2000@gmail.com
1 கருத்து:
nice story
i read all ur stories
all are very good
கருத்துரையிடுக