தமிழ்மகன்
கிழவி அநாவசியத்துக்குப் பயந்தாள். நகரத்தின் வேகம் அவளை மூச்சுத் திணற வைத்தது. அந்த இடத்தில் இவ்வளவு நெரிசலையும் வாகனங்களின் அடர்த்தியையும் அவள் எதிர்பார்க்கவில்லை.
குருவியூர் நகரத்தைப் பற்றி சமீபத்தில் தான் குப்பம்மா மூலம் கேள்விப்பட்டிருந்தாள்.
"ஏண்டியம்மா உம்புள்ள அங்கதான் காய்கறிக் கடை வெச்சிருக்கான்... என்னடா எப்படியிருக்கேன்னு விசாரிக்கலாம்னு பார்த்தா அதுக்குள்ளே டபாஞ்சிட்டான்''
கிழவிக்கு ஜெயராமனை நேரிலேயே பார்த்துவிட்டது போல் இருந்தது. "நெசமாவா?'' என்றாள்.
"ஐய... உங்கிட்ட பொய் சொல்லித்தான் மெத்த வூடு கட்டப்போறேன்... மெய்தான்றேன்...''
"எங்க இருக்குது அந்தக் குருவியூரு?'' என்று விசாரித்தாள் கிழவி.
குப்பம்மாள் வழித்தடம், இறங்க வேண்டிய ஸ்டாபóபிங் எல்லாவற்றையும் அக்கறையாகச் சொல்லி பஸ் ஸ்டாண்ட் வரை வந்து வழியனுப்பியும் வைத்தாள்.
பஸ்ûஸ விட்டு இறங்கியதும் நகரத்து நெரிசலைப் பார்த்து மிகவும் குழம்பிப் போனாள். யாரை, எப்படி விசாரிப்பது என்று புரியாமல் இரண்டு முறை குடுமியை அவிழ்த்து முடிந்து கொண்டு பிரமித்து நின்றாள். முதல் அடியை எந்தத் திசை நோக்கி வைக்கலாம் என்பது அவளுக்குப் புரியவில்லை.
வாகனங்களின் புயல் வேகங்களுக்குப் பயந்து பின் வாங்கி, ஒரு டீக்கடை ஓரம் அடித்துச் செல்லப்பட்டாள். அங்கே அனல் பறக்க டீ குடித்துக் கொண்டிருந்தவனை விவரம் கேட்க எத்தனித்தாள்.
அவன் ஒரே வாயாக டீயைச் சாய்த்துக் கொண்டு, "சில்ற இல்ல...'' என்று சொல்லிவிட்டு, வேகமாக ஒரு பஸ்ûஸ நோக்கி ஓடினான்.
கிழவிக்கு அவன் சொன்னது கொஞ்ச நேரத்துக்குப் புரியவே இல்லை.
"ஜெயராமா நா உனக்கு என்ன பாவம்டா செஞ்சேன்.... 'என்று ஹீனமாக முனகிக் கொண்டு ஏதோ தீர்மானத்தோடு நடக்க ஆரம்பித்தாள்.
காலும், கண்ணும் துவண்டு போகும் வரை நடந்தாள். அவளுக்கு எல்லாமே ஜெயராமனாகத் தெரிந்தது. சிலரைச் சற்றே திடுக்கிட்டு "டேய்' என்று கூப்பிட்டு விடும் கடைசித் தருணத்தில் சுதாரித்தாள். அவர்களெல்லாம் ஜெயராமன்கள் இல்லை.
பசி மயக்கம் கீழே தள்ளப் பார்த்தது. இருக்கிற கொஞ்சம் சில்லறையில் எதையாவது வாங்கிச் சாப்பிடத் துணிவில்லை.
சாப்பிடலாமா? வேண்டாமா? என்று யோசித்து யோசித்தே சோர்ந்து போனாள்.
சுருண்டு, ஒரு இடத்தில் உட்கார்ந்தே விட்டாள். உச்சி வெய்யில் பிளந்தது. காலையில் ஒரு வாய் கூழாவது குடித்திருந்தால் அவளால் சமாளித்திருக்க முடியும்.
மரத்து நிழலில் அரைமணி நேரம் உட்கார்ந்ததில் கொஞ்சம் சாப்பிட்ட திருப்தி.
புடவையிலிருந்த கிழிசலைப் பார்த்து அலுத்துக் கொண்டு, கிழிந்த இரு பகுதியையும் சேர்த்து முடிப் போட்டுக் கொண்டாள். இந்தக் கோலத்தில் பையன் நம்மைப் பார்த்தால் துடித்துப் போய் விடுவான்.
"தேய்... கட்டிக்கிறதுக்கு வேற புடவையே கிடைக்கலையா உனக்கு?''
"நீ போயிட்டதுக்கப்புறம் நெலம ரொம்ப மோசமாயிடுச்சு நைனா.''
"இந்தப் புடவை புடிச்சிருக்குதா பாரு.''
"ம்...''
"இந்த டிசைன்ல ரெண்டு புடவ குடுப்பா''
மரத்தின் நிழல் நழுவி வேறு பக்கம் போயிருந்தது.
கிழவி மீது வெயில்... கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்தாள்.
ஜெயராமனைப் பார்த்துவிட்டால் நமக்கு ஒரு குறைவும் இல்லை. அந்தச் சிறுக்கியும் கூடதான் இருப்பாள்.... அவளாலதான் எல்லாமே... அடியோட மாத்திப்புட்டா... ச்
எழுந்து பக்கத்திலிருந்த டீக்கடைக்குப் போய், ""பன்னு ஒண்ணு குடுக்குறியாப்பா?'' என்றாள்.
"போ...போ... வேற வேலையில்ல'' என்று விரட்டினான் கடைக்காரன்.
அவன் தவறாகப் புரிந்து கொண்டதை உணர்ந்து, அவசரமாக, "துட்டு இருக்குதுப்பா' என்று முந்தானை முடிச்சை அவிழ்த்தாள்.
கடைக்காரன் ஒரு மாதிரியாக ஏறிட்டுப் பார்த்துவிட்டு, பெரிய கண்ணாடி புட்டியைத் திறந்து பன்-ஐ எடுத்த போது அதிலிருந்து ஈயொன்று அவசரமாகத் தப்பியது.
ஞாபகமாகப் பன்னீர்ப் புகையிலை வாங்கி கடைவாய்ப் பற்களில் இடுக்கிக் கொண்டாள். அதுதான் வைத்தியம். பசிக்கிறதே என்று அடிக்கடி பன் சாப்பிட முடியுமா?
கிழவி புதுத் தெம்புடன் தேட ஆரம்பித்தாள். லாரிகள் ஏடாகூடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் தயங்கி நின்றாள். ஜெயராமன் இங்குதான் எங்கோ ஒளிந்திருப்பதாக நினைத்து லாரிகளுக்கு இடையில் கூர்மையாகத் தேடினாள். லாரி எடை தளத்தில் நின்று கிழநரி மாதிரி சுற்றிலும் பார்த்தாள்.
கண்ணாடி அறையில் இருந்து ஒருவன் அதட்டினான். "ஏய்... கெழவி... இன்னா? உன்னை எடை போடணுமா?'' என்றான்.
கிழவிக்கு ஒன்றும் புரியவில்லை. "எம்புள்ள ஜெயராமன ஒரு மாசமா காணலப்பா...'' என்றாள்.
ஒரு கிளீனர் பையன் ஆவேசமாக வெளியே வந்து, "இது நாப்பது டன் எடை போடற மிஷின்... கொஞ்ச தூரம் போனா நடராஜா தியேட்டர் வரும். அங்கே போய் நாலணா போட்டு உன் எடையைக் கண்டுக்கலாம்...'' என்று சொல்லிவிட்டு ஓஹோவென்று சிரித்தான்.
கிழவி பதிலுக்கு, "காய்கறிக்கடை வெச்சிருக்கான் தம்பி... ஜெயராமன்னு பேரு...'' என்றாள்.
"த்தேய்... போன்னா போவியா, உன்னை மாதிரி ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் பார்க்கறேன்... பிச்சை எடுக்கறதுல இதுலாம் ஒரு தினுசு'' என்றபடி கிழவியைத் தரதரவென்று இழுத்து வந்து நடு ரோட்டில் தள்ளினான்.
ஆத்திரமும், இயலாமையும் சேர்ந்து கிழவி அழ ஆரம்பித்தாள். ரோட்டில் போய்க் கொண்டிருந்த ஒருவனை நிற்க வைத்து, "என்னைப் போய் பிச்சைக்காரினு சொல்றானுங்களே... அவனுக்கென்ன கண்ணு அவிஞ்சிப் போச்சா? எம் மூச்சியப் பாரு நா பிச்சைக்காரியா? என் காதைப் பாரு... ம் தெரிதில்லை...?'' என்றாள்.
அவள் காதில் கம்மல் மாட்டும் இடத்தில் இருந்த பிரம்மாண்டமான துளையைப் பார்த்துவிட்டு, அவன் சற்றே திகைத்தாற்போல், "என்னது?'' என்றான்.
"எங் காதைப் பார்த்தா தெரியலை? எவ்வளவு ஓட்டைக் கிடக்கு... கொப்பு போட்டிருந்தேன். நடுக்காது போட்டிருந்தேன். தண்டட்டி போட்டிருந்தேன். மூக்குல ரெண்டு பேஸ்ரி... எல்லாந்தா போட்டிருந்தேன். குடிகார ஆம்பளை எல்லாத்தையும் அழிச்சிட்டு சேர வேண்டிய எடத்துக்குப் போய் சேர்ந்துட்டான்'' என்றபடி ஒரு கட்டத்தில் அழ ஆரம்பிக்கவே, "எனக்கு டயமாச்சி'' என்று அவளிடமிருந்து கையை உதறிக் கொண்டு நழுவினான் அவன்.
கத்தரிக்காய் கூடையைத் தூக்கிக் கொண்டு, நடையில் கட்டுப்படாத ஒருவித மாரத்தான் ஓட்டத்தில் போய்க் கொண்டிருந்தான் ஜெயராமன். அவனை ஒட்டி கொஞ்சம் ஓட்டம், கொஞ்சம் நடை என்று மாறி, மாறி வந்து கொண்டிருந்தாள் ராசாத்தி. ஜெயராமனை முதுகில் சீண்டி, "அங்க பாருங்க உங்கம்மா...'' லாரி ஷெட் பக்கம் கையைக் காட்டினாள்.
ஜெயராமன் திரும்பிப் பார்த்து "தெரியும்... பேசாம வா'' என்றான்.
tamilmagan2000@gmail.com
7 கருத்துகள்:
O My God!!!!!
Loveable mother...
Dangerous world...
O My God!!!!!
Loveable mother...
Dangerous world...
//கத்தரிக்காய் கூடையைத் தூக்கிக் கொண்டு, நடையில் கட்டுப்படாத ஒருவித மாரத்தான் ஓட்டத்தில் போய்க் கொண்டிருந்தான் ஜெயராமன். அவனை ஒட்டி கொஞ்சம் ஓட்டம், கொஞ்சம் நடை என்று மாறி, மாறி வந்து கொண்டிருந்தாள் ராசாத்தி. ஜெயராமனை முதுகில் சீண்டி, "அங்க பாருங்க உங்கம்மா...'' லாரி ஷெட் பக்கம் கையைக் காட்டினாள்.
ஜெயராமன் திரும்பிப் பார்த்து "தெரியும்... பேசாம வா'' என்றான்.//
என் வாழ்வு இறுதி வரையிலும் என்னை இது போன்ற மனிதர்களை நிஜத்தில் மட்டும் காட்டிவிடாதே ஆண்டாவா என்று பிரார்த்தனை செய்யத்தான் மனம் நினைக்கிறது!
சில வரிகளில் கண்களில் கண்ணீர் துளிகள் வந்து விழுகின்றது!
/
ஜெயராமனை முதுகில் சீண்டி, "அங்க பாருங்க உங்கம்மா...'' லாரி ஷெட் பக்கம் கையைக் காட்டினாள்.
ஜெயராமன் திரும்பிப் பார்த்து "தெரியும்... பேசாம வா'' என்றான்.
/
வருத்தமான ஆனால் யதார்த்தமான முடிவு
:((((
ஆயில்யா ஓவர் ஃபீலிங் உடம்புக்காவாது பாத்து.
கதைய கதையா படிக்கணும். ஓகே!
ஜீப்பரு... இதயம் மிகவும் கனமாகி விட்டது.. நல்ல கதை
இந்த கதையை நேற்று தூங்குவதற்கு முன்பு படித்தேன்.......வெகு நேரம் என் தூக்கத்தை கெடுத்துவிட்டது. இருந்தும் இன்று மறுமுறை படித்தேன்.
கருத்துரையிடுக