வெள்ளி, ஆகஸ்ட் 08, 2008

அடுத்த பக்கம் பார்க்க

பாவம்... இன்னும் சொல்லவில்லை. சொன்னால் இடிந்து போகும். வந்ததிலிருந்து
தவித்துக் கொண்டிருக்கிறது. முப்பது முத்தம் கணக்காயிருக்கிறது. "வீணையடி
நீ எனக்கு'' என்று பாட்டு பாடுகிறது.

`ஆடி மாதம். ஒரு மாத அஞ்ஞாத வாசம். உன்னையும் என்னையும் பிரித்து இன்றோடு
முப்பதாறு நாட்கள். உன்னைப் போல் நானும் கணக்கு வைத்திருக்கிறேன்
கண்ணா... நீ நேற்று வந்திருக்க வேண்டும். முப்பத்தாறோடு இன்னொரு மூன்று
நாள்களைக் கூட்டிக்கொள்.'
தாழ்வாரத்தில் இருந்து பார்க்கிறபோது அது படித்துக் கொண்டிருப்பது
தெரிகிறது. பாவம், வெகுநேரமாகப் படித்துக் கொண்டிருப்பது மாதிரி பாசாங்கு
செய்து கொண்டிருக்கிறது.' செண்பகத்துக்கு தன் கணவனுக்கு இன்னும் சற்று
நேரத்தில் தரப்போகிற ஏமாற்றத்தை நினைத்து கொஞ்சம் சிரிப்பாகவும்
இருந்தது.
செண்பகம் மாட்டுத் தொழுவத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்கை
அணைத்துவிட்டு, புழக்கடை கதவு பூட்டப்பட்டு விட்டதா? என்று பார்த்தாள்.
வழக்கமாக இதையெல்லாம் அவள் பார்ப்பதில்லை. செண்பகத்தின் அம்மா பார்த்துக்
கொள்கிற வேலைகள். நேரம் கடத்துவதற்காக இதையெல்லாம் செண்பகம் செய்து
கொண்டிருந்தாள். வழக்கமாகக் காலையில் தேய்க்கிற பாத்திரங்களையும்,
எடுத்துப் போட்டு இப்போதே தேய்த்தாகிவிட்டது.
கட்டிலறைக்குப் போகாமல் இருக்க இன்னும் ஏதேனும் வேலைகள் இருக்குமா?
என்றும் பார்த்தாள். அது மூடிதான் இருந்தது.
ஏற்கனவே, அவள் அம்மாவும் அப்பாவும் தூங்கியாயிற்று.
ஒன்பதாகிவிட்டது.
"தான் மட்டும்தான் இப்போது ஊரில் விழித்துக் கொண்டிருப்பவளோ'
என்று கூட தோன்றியது.
மெல்ல கட்டில் இருந்த அறைப் பக்கம் வந்து நின்றாள்.
சந்திரன் காத்திருந்தவன் மாதிரி நிமிர்ந்தான். "முடிஞ்சுதா?... இன்னும்
வேலை பாக்கியிருக்கா?'' என்றான்.
செண்பகம் இன்னமும் வாசல் படியைப் பிடித்துக் கொண்டே நின்றாள்.
"நீ
இன்னும் தூங்கலையா?'' என்றாள். அதற்குள் அவளுக்குச் சிரிப்பு வந்தது.
சந்திரன், "விளையாட்றாயா?'' என்றான்.
"இல்லப்பா... நிஜமாதான். நீ ஏன் தூங்கல?''
கொஞ்ச நேரம் பார்த்தான். "ஏன் தூங்கலையா? இங்க வா சொல்றேன்''
என்று எழுந்தான்.
இன்னும் சொல்ல முடியவில்லை. சந்திரன் எழுந்து வந்து பலாத்காரமாய்த்
தூக்கிக் கட்டிலில் போட்டான்.
"ஹேய்... நா சொல்றத....'' என்று ஆரம்பித்தவளை முத்தத்தால் அடக்கினான்.
பிறகு "சொல்லு?'' என்றான்.
"நா இன்னைக்கு கீழ படுத்துக்கிறேன். நீ மட்டும் "கட்டில்டல படுத்துக்க...''
முகம் வாடிப் போய்விட்டது. இன்னேரம் அதற்குப் புரிந்திருக்க வேண்டும்.
இருந்தாலும் சைகையிலேயே... "ஏன்?' என்றது.
தலையில் எண்ணெய் தேய்ப்பது மாதிரி பாவனை செய்தாள்.
இடுப்பைச் சுற்றியிருந்த சந்திரனின் கைகள் இறுக்கத்தைத் தளர்த்தின.
பரிதாபமாய் செண்பகத்தின் முகத்தைப் பார்த்தான்.
"ஹேய்?... பொய்தானே?''
செண்பகத்துக்கு மிகவும் பரிதாபமாய் இருந்தது. சிரிப்பு வரவில்லை.
"நிஜமாத்தான்'' என்றாள்.
அப்படியே சரிந்து தலையணையில் விழுந்தான்.
பேச்சில்லை... "வீணையடி...' பாட்டில்லை. சிரிப்பில்லை. அசையாது
படுத்திருந்தான்.
செண்பகம் தலைமாட்டில் தட்டில் இருந்த அதிரசத்தை இவன் பக்கம் எடுத்து
வைத்து "சாப்பிடு'' என்றாள்.
சந்திரன், ஏமாற்றத்தை மறைக்க முயன்று "ஏற்கனவே அஞ்சு சாப்டாச்சு'' என்றான்.
செண்பகம் எழுந்து விளக்கை அணைத்துவிட்டு ஃபேன் ரெகுலேட்டரை மூன்றுக்குத்
திருப்பிவிட்டு வந்து படுத்தாள்.
அரைமணி நேரமாய்த் தூங்குவதற்கு முயன்று, "சர்ட்டி'லிருந்து
சிகரெட்டையும், தீப்பெட்டியும் எடுத்துக் கொண்டு மாடிக்குப் போனான்.
எத்தனை சிகரெட் எடுத்துக் கொண்டு போவது என்று தெரியவில்லை. அரைமணி நேரம்
கழிச்சு திரும்பி வந்தான். மறுபடியும் புழக்கடை கதவைத் திறந்து வெளியே
போனான். இன்னொரு அரை மணிநேரம்... பக்கத்தில் வந்து படுத்தான்.
செண்பகம் "கோவமா?'' என்றாள்.
"சேச்சே... வயிறு ஒரு மாதிரியா இருந்தது... அதான் வெளிய போயிட்டு
வந்தேன்... தலைவலி வேற... நீ ஏன் தூங்கலை?''
செண்பகத்துக்குத் தூக்கம் சொக்க ஆரம்பித்தது.
ஏதோ மாடு ஒன்று கத்துவது மாதிரி கனவு கூட வந்தது. திடுக்கிட்டு
எழுந்தாள். பக்கத்தில் மறுபடியும் சந்திரன் இல்லை. பாத்திரம் தேய்க்கிற
இடத்தில் யாரோ ஓக்களிப்பது கேட்டது, செண்பகம் விளக்கைப் போட்டுவிட்டு,
பார்த்தபோது... சந்திரன்.
"என்னாச்சு?'' என்று ஓடிபோய் அவன் காதை இரண்டு கைகளாலும் அழுத்திக்
கொண்டு கேட்டாள்.
"ஒண்ணுமில்லை.... வாந்தி... நீ தூங்கறதானே?... அதர்சம்
ஒத்துக்கலை...'' என்றாள்.
"ச்சம்.... அதெல்லாம் ஒண்ணும் வேணாம்'' என்று முடிப்பதற்குள்
"இன்னாப்பா ஆச்சு?'' என்று பெரிய ரூமில் இருந்து
செண்பகத்தின்
அப்பாவும் அவருக்குப் பின்னால் புடவையைச் சரி செய்து கொண்டு அம்மாவும்
தோன்றினார்கள்.
"ஒண்ணுமில்லை... ஒண்ணுமில்லை'' என்று சுதாரித்து எழுந்தான் சந்திரன்.
"இவருக்கு வயிறு சரியில்லை'' என்று வெளியே போய்விட்டு வந்தாரு...
படுத்து கொஞ்ச நேரம் கூட ஆகலை, அதுக்குள்ள வாந்தி... அதர்சம்
ஒத்துக்கலை'' என்று விளக்கினாள் செண்பகம்.
"ஒண்ணுமில்லை'னு சொல்லிக் கொண்டிருக்கும்போதே செண்பகம் இந்த அளவுக்கு
விளக்கிக்கொண்டிருப்பது எரிச்சலாக இருந்தது.
"அஜிர்ணமாயிட்டு இருக்குது! சோடா வாங்கியாறட்டுமா மாப்பிள்ளை?''
"இந்த ராத்திரிலையா?''
"அட, கதவ தட்டினா எடுத்துக் குடுப்பான்''
"வேணாம்... வேணாம் காலைல பாத்துக்கலாம். நீங்க போய்ப் படுங்க''
ராத்திரியில் இப்படிப் பலரும் தன் விஷயமாய் கவலைப்படுவது பிடிக்காமல்
"விருட்'டென்று போய் கட்டிலில் படுத்துக் கொண்டான்.
"ஏதாவது மாத்திரை சாப்டா நல்லது'' என்றாள்.
"கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா?... "அனாசின்' மாத்திரை தவிர வேற
மாத்திரை வெச்சிருக்கானா உங்க ஊரு கடையில?''
வயிறு மறுபடி கலக்கியது. காலும் தேய்ந்து போய் கண்ணும்
கிறுகிறுத்தது. தலைவலி பின் மண்டை முழுவதும் பரவியிருந்தது. கழுத்தை
இப்படியும் அப்படியும் சொடுக்க தலையையே கழற்றிப் போட்டது மாதிரி சத்தம்.
"தைலம் தேய்க்கட்டா?'' என்று நெற்றியில் கை வைத்தவள், "ஜுரம் கூட
காயுதே'' என்றாள்.
"வேணாம்... வேணாம்'' என்று எழுந்தான். மீண்டும் வயிற்றைக் கலக்கியது.
பட்டென்று கக்கூஸில் நுழைந்து கொள்ள முடியாத
பட்டிக்காடு.... ஆற்றங்கரை... தேங்கிய ஆறு. நீர் இருக்கிற இடமாகத் தேடி
அமர வேண்டும். எழுந்திருக்கவே பிரயத்தனப்பட்டாலும்... போய்த்தானே ஆக
வேண்டும்?
"வெளிய போறீங்களா?'' என்றாள்.
"உம்''
"நானும் வரட்டமா?''
"ச்சும்...நீ தூங்கு...?''
புழக்கடை வரை சென்று விட்டவனிடம் ஓடி வந்து "டார்ச் லைட்' டைக்
கொடுத்தாள். ""பாம்பு கீம்பு கிடக்கும்'' என்றாள்.
ஸ்டார்ச் லைட் டைப் பிடுங்கிக் கொண்டு வேகமாக நடந்தான்.
வீடுகளைத் தாண்டுகிற வரை நாய்கள் தின்று விடுகிற மாதிரி சூழ்ந்து நின்று
குரைத்தன.
யாரோ ஒருத்தர் "யாருப்பா அது!?'' என்றார்.
"குப்பனா?''
சந்திரன் பதில் சொல்லவில்லை, ஆற்றில் போய் அமர்ந்தபோது "அப்பாடா'
என்றிருந்தது. "வீணையடி நீ எனக்கு... ச்சே என் பாட்டு இது இந்த
நேரத்தில். காலையில் வாயில் நுழைந்து கொண்ட பாட்டு விடவே இல்லை.
பஸ்ஸில்... பழக்கடையில்... பஸ்ûஸ விட்டு நடக்கையில், படிக்கையில்...
படுக்கையில்... முயன்று வேறு பாட்டாவது பாட வேண்டும் என்று பஸ்ஸில்
சங்கல்பம் எடுத்த போதும் மறுபடியும் இதே... எங்கே பிடித்தோம் இதை?...
உம்.. "மிண்ட் பஸ்டேண்டில்ட டீக்கடை ரேடியோவில்... தூங்கி எழுந்தாலொழிய
போகப் போவதில்லை...''
வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தபோது யாரோ எதிரில் வருவது அடர்த்தியான
கருப்பாய் தெரிந்தது.
அருகில் சென்றதும் நின்றான். செண்பகம்.
கூசிய கண்ணை முழங்கையில் மூடிக்கொண்டு, "இப்ப தேவலாமா?'' என்றாள்.
"எங்க இன்றல்ல?''
"மலர் அக்கா வூட்டுக்காருக்குக்கூட பேதி'னு நேத்து ஆஸ்பத்திரி போயிட்டு
வந்தாங்க... "மாத்திரை இருக்குதா'னு கேட்டுப் பாக்றேன்.''
"சுள்'ளென்று எரிச்சல் பரவியது. "மானத்தை வாங்குகிறாள்'.
"எனக்குப் பேதியாகறது ஊர்புல்லா தெரியணும் அதானே?'' என்றான்.
"மலரக்கா ஜென்னல் ஓரமாகத்தான் படுத்துக்குனு இருக்கும். "ஜன்னல்'ல்லையே
தட்டி வாங்கியாறேன்... நீ போ' என்றாள். கொஞ்ச நேரத்தில் ஜன்னலைத் தட்டி,
"அக்கா... மலரக்கா...'' என்று செண்பகம் அழைப்பது கேட்டது.
சந்தரன் வேகமாய் அந்த இடத்தை விட்டு அகன்றான். "வாங்கி வரட்டும். கழுதை
சொன்னா கேக்கிறாளா? வரட்டும், வீசி எறிகிறேன். என் திமிர்?
சொல்லிக்கொண்டே இருக்கிறேன் போய் தட்றாளே...?'
வீடு அதைவிட மோசமாக இருந்தது. மாமனாரும் மாமியாரும் நடு ராத்திரியில்
"தந்தி' வந்தவர்கள் மாதிரி இடிந்து உட்கார்ந்திருந்தார்கள். வீட்டில்
எல்லா லைட்டுமே எரிந்து கொண்டிருந்தது. உள்ளே நுழைவதற்கே கூச்சமாக
இருந்தது.
போதாத குறைக்கு, உள்ளே நுழைந்ததும், மாமனார் பதறி எழுந்து
"பேதியா
மாப்பிள்ளை?'' என்றார்.
"அதெல்லாம் ஒண்ணுமில்லங்க...''
"அட ரெண்டு வாட்டி போனீங்களாமே சொல்லியிருந்தா, கூட வந்திருக்க மாட்டேன்?''
"பேதியாவதைப் போய் யாராவது சொல்லிக் கொண்டிருப்பார்களா? அதுவும்
மாமனார், மாமியார் முன்னால் சொல்வார்களா? பேதியானால் ஆனது மாதிரி
போகிறது... இவர்களுக்கென்ன ராத்திரியில்?'
மாமனார் "அதர்சத்தை வாரி வாரி வெச்சிருப்பா... அதான்... அதர்சம்னா
ஒண்ணு, ரெண்டு மரியாதை... சோறா அது?'' என்று மாமியாரைக் கேட்டுவிட்டு "ஓம
வாட்டர்' வாங்கியாந்து வெச்சிருக்கேன் குடிங்கோ'' என்றார்.
"ஓம வாட்டரா?''
"ஆமா... அஜீர்ணத்துக்கு அத வுட்டா வேற வைத்தியம் கிடையாது'' என்று
தீர்மானமாகச் சொன்னார்.
சந்திரன் கட்டிலில் போய் படுத்தான். "ஊருக்கேதான் தெரிந்துவிட்டது!
நாரண்சாமி மரும்புள்ளக்கி பேதியாம்ட என்று காலையில் டீக்கடையில் பேசிக்
கொள்ளப் போகிறார்கள். இவளைச் சொல்ல வேண்டும். இவளால் தான். காலையில்
டவுனுக்குப் போய் சந்தடியில்லாமல் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
எல்லாம் கெட்டது.'
அவசரமாய் உள்ளே வந்த செண்பகம் " இது நல்ல மாத்திரையா பாருங்க...?''
என்று மாத்திரை பட்டையை நீட்டினாள்.
"டமாரம் கட்டிக்குனு அடிக்கிறதானே? ச்சே... இப்படியா அசிங்கப்படுத்தர்து?''
அவனது கோபத்தை மதிக்காமல் "நல்ல மாத்திரையானு பாருங்கனா?'' என்றாள்.
சந்திரன் திரும்பிப் படுத்துக் கொண்டான்.
"இதல கோச்சிக்கறதுக்கு என்னா இருக்கு... நம்ம உடம்பு. நம்ம
பாத்துக்கறோம். ஊருக்குத் தெரிஞ்சா என்ன?''
"அதான் விடிஞ்சதும் போய் எல்லார்க்கும் சொல்லிட்டு வா''
கொஞ்ச நேரம் பேசிக் கொள்ளவில்லை. தூக்கம் வரவில்லை. அசதியாகவும்,
எரிச்சலாகவும் இருந்தது. சந்திரன் எழுந்து பார்த்தபோது, பெரிய ரூமில்
விளக்கை அணைத்து விட்டது தெரிந்தது. மாடியில் போய் கொஞ்ச நேரம் உலாவலாம்
என்றிருந்தது. தூக்கம் வந்தபின் படுத்தால் போதும் என்று நினைத்தான்.
எழுந்தான்.
"மறுபடியும் போறீங்களா?''
சந்திரன் பதில் சொல்லவில்லை. நடந்தான்.
"போறதானா பேக்கடை'ல போங்க''
"அசிங்கம்... அசிங்கம் என்றால் என்னவென்றே இவர்கள் குடும்பத்துக்குத்
தெரியாதா?... இந்த மாதிரி நிலைமை ஒருத்தனுக்கு எவ்வளவு எரிச்சலா
இருக்கும்னு புரிஞ்சுக்க முடியாதா? ச்சே...
"எனக்கு வர்ல'' மாடியில் ஏறினான்.
இருட்டும் ஈரக்காற்றும் பிசைந்து கொண்டு இருந்தது. அமாவாசை போய்
நான்காவது நாள். நடக்க முடியாமல் ஒரே சோர்வாக இருந்தபோதும் உலவினான்.
வாய் "வீணையடி நீ எனக்கு' என்று முணுமுணுத்துக் கொண்டிருப்பதை
உணர்ந்தான்.
"அடுத்த வரி... மீட்டும் விரல் நானுனக்கு... யார் வீணை? யார் விரல்?
பொம்பளை... வீணை. ஆம்பளை விரலா? பொம்பளை ஜடம். ஆம்பளை ஜீவனா? ச்சே...
யாரோ ஒருத்தர் வீணை... யாரோ விரல்... இந்த நேரத்தில் இது வேறயா?'
எக்கச்சக்கமாய்க் குளிரியது. உடம்பு அனலாய் கொதித்தது. படிக்கட்டில்
இறங்கிய போது செண்பகம் சால்வையை எடுத்துக் கொண்டு மேலே வருவது தெரிந்தது.
சந்திரன் இறங்கி வருவது கண்டு நின்றாள்.
திரும்பி அறைக்குள் வந்து படுத்தனர். செண்பகம் விரோதமாய்
கட்டிலின் மறுகோடியில் போய் முதுகைக் காட்டிக் கொண்டு படுத்துக்
கொண்டாள்.
"எல்லாம் இயற்கை செய்கிற சதி இவள் என்ன செய்வாள்' என்று தேற்றிக்
கொண்டான் சந்திரன்.
சந்திரன் டேபிளின் மீதிருந்த ஓம வாட்டரை எடுத்துப் பார்த்தான்.
குடித்ததும் தெம்பாய் இரண்டு "ஏப்பம்' வரும் என்பதை நினைக்கவே
கிளுகிளுப்பாய் இருந்தது. மாத்திரை பட்டையை எடுத்துப் பெயரைப்
பார்த்தான். "ஸ்டேப்ரோ பாராக்சின்'. பரவாயில்லை அவசரத்துக்குப் போட்டுக்
கொள்ளலாம்.
பெருமிதமாய் செண்பகத்தைத் திருப்பிப் பார்த்துவிட்டு மாத்திரை ஒன்றைப்
போட்டுக் கொண்டான். ஒரு மொணறு "ஓம வாட்டரை' குடித்தான்.
கட்டிலில் படுத்து அவள் வரை உருண்டு போனான். செண்பகம் அசையாமல்
படுத்திருந்தாள்.
"செல்லி...'' மெல்ல கூப்பிட்டான். திரும்பியவளின் கண்களில் ஈரம்
துடைத்து விட்டான்.





tamilmagan2000@gmail.com

ஞாயிறு, ஆகஸ்ட் 03, 2008

நேசம்

தமிழ்மகன்

திடுக்கிட்டு விழித்தபோது கதவை யாரோ தட்டிக் கொண்டிருப்பது கேட்டது. எழுந்திருக்க மனம் இன்றி இன்னொரு முறை தட்டுகிறார்களா என்று காத்திருந்தான் சிவா.

நாய்களும் குலைக்காத அமைதி, இப்படிப்பட்ட அமைதி சாத்தியப்பட வேண்டுமானால், நேரம் இரண்டு மணியாய் இருக்கலாம்.

இந்த முறை கதவு தட்டப்பட்டு கூடவே, ''சிவா... ஆ'' என்ற குரலும் கேட்டது.

கேட்ட குரல் போல இருந்தும், யூகிக்க முடியவில்லை. விளக்கைக் கூடப் போடாமல் ஜன்னலைத் திறந்தான்.

எதிரிலிருக்கும் டீக்கடை மூடப்பட்டிருந்தது. திறந்த ஜன்னலுக்கு எதிரே வந்து நின்றபடி ஒருவன், ''இன்னா சிவா... நல்ல தூக்கமா?'' என்றான்.

யாரென்று தெரியாமலேயே... ''ஆ...ங்'' என்றான் சிவகுமார்.

விஜயா படுக்கையில் புரண்டு, ''யாருங்க. அண்ணாவா?'' என்றாள்.

சிவகுமார் பெருத்த அவசரமாய் நினைவுபடுத்தி பார்த்தான். உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள்... ஒருவரும் தாடி வைத்திருப்பதாய் நினைவில்லை.

''அட்ரஸ் கண்டுபிடிக்கறதுகுள்ள போதும், போதும்னு போச்சப்பா.''

சிவகுமாருக்கு திடீரென்று யாரென்று புரிந்து போய், ''மணி... நீயா? அடையாளமே தெரியலை? இரு கதவு திறக்கறேன்'' என்று பரபரப்பாகிக் கதவைத் திறந்து தெருவுக்கே வந்து கையைப் பிடித்துக் குலுக்கினான்.

''ஊரில் இருந்து எப்ப வந்தே?''

''மெட்ராஸ்ல தாம்ப்பா இருக்கேன்''

''நிஜமாவா?'' என்று கேட்டபடி உள்ளே அழைத்து, கதவைத் தாழிட்டு, நடையின் விளக்கைப் போட்டான்.

பரபரப்பாய் அறையின் டியூப்லைட்டைப் போட்டு விட்டுப் பார்த்தபோது சுவரில் மணி 11.20-

''பத்து மணிக்குக் கிளம்பினேன்''

''எங்க இருந்து?'' நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார வைத்தான்.

''வள்ளுவர் கோட்டம் இல்ல... அதுக்குப் பக்கத்துலதான்... ஒரு ரூம்ல தங்கியிருக்கிறேன்.''

''யார் ரூம்ல?''

''சினிமா டைரக்டர்து''

''பேரு?''

''பழனிராஜ்''

''எத்தன படம் எடுத்திருக்கிறாரு?''

''அட!... அவரால ஒரு படம்கூட எடுக்க முடியாது சிவா... அதவுடு எப்படியிருக்றே எங்க வேல செய்ற?''

''நா அங்கேயேதான் வேல செய்றேன்... பர்மனன்ட் பண்ணிட்டான். ஆயிரத்தி நூர் ரூபா தரான்'' மணி சிரித்தான்.

''எப்படி இருக்கிறே சிவான்னு கேட்டா ஆயிரம் ரூபா தரான்றியே... எப்படி இருக்கே?'' என்றான் மறுபடி.

''பாதி ராத்திரில வந்துருக்கே. நான்தான் உன்னை விசாரிக்கணும். சாப்டியா?''

''பரவால்ல சிவா... பையன் எப்படியிருக்கான்? பேரென்ன சொன்னே?''

''முத்துக்குமார்... டீக்கடை இருந்தா பன்னாவது வாங்கி தருவேன், இந்த ராத்திரில ஏன் வந்தே...?''

''நானா கிளம்பினேன்...? கிளம்பிப் போக சொன்னாங்க'' என்று சிரித்தான்.

''ரூமைக் காலி பண்ணச் சொன்னாங்களா?''

''அதவிடு சிவா... நாளைக்குப் போய் சரி பண்ணி விடுவேன்.''

கல்லூரி வாழ்விலிருந்தே இப்படித்¡ன்... பேச்சுக்குப் பேச்சு ''சிவா''... எல்லா உணர்ச்சிகளையும் அழுத்திக் கொண்டு ஒரு சிரிப்பு.

சிவா எழுந்து சமையல் அறையில் எதையோ உருட்டி விட்டுத் திரும்பி வந்தான்.

''சோத்ல தண்ணி ஊத்திட்டாங்க''

''சாப்பாட்ல பிரச்சனை இல்லை சிவா, நீங்க வேஸ்ட்டா வொர்ரி பண்ணிக்காதீங்க...''

விஜயா எழுந்து வந்து, ''பிழிஞ்சி போடட்டுமான்னு கேளுங்க... இப்பதான் தண்ணி ஊத்தினேன்'' என்றாள்.

மணி, ''நலந்தானே?'' என்றான் விஜயாவை.

இப்படிக் கேட்டதால் விஜயாவிற்குச் சிரிப்பு ஏற்பட்டு, ''ம்...'' என்று சொல்லிவிட்டு அவசரமாய் உள்ளே போனாள்.

''எவ்வளவு நாளா அங்க தங்கியிருக்க?''

''ரெண்டு மாசமாச்சு சிவா.''

''சாப்பாட்டுக்கு என்ன பண்றே?''

மணி இதற்குப் பதில் சொல்லவில்லை. எல்லாம் பேசியானது போல் எதிரில் கிடந்த பழைய தந்திப் பேப்பரை எடுத்துப் படிக்கத் துவங்கினான்.

மணியின் சொந்த ஊர் திருப்பத்தூர். ஹாஸ்டலில் தங்கிப் படித்தான். மூன்று வருடத்தில் மறந்துகூட ஊர்ப்பக்கம் போகவில்லை.

சுரணையற்ற மெஸ் சாப்பாட்டையும், தனிமைச் சிறை மாதிரி இருந்த அந்த மக்கிய ஹாஸ்டலையும் அவன் விரும்பி விடுகிற அளவுக்கு அவனது வீட்டு நிலைமை இருந்தது.

நாற்பது பேர் கொண்ட கூட்டுக் குடும்பம் இப்போதைய அவசர யுகத்தில் கூட்டெல்லாம் சாத்தியமில்லை என்பது புரிந்தும், குடும்பத்தை உடைக்கிற அவலம் நாம் இருக்கிறவரை நிகழ்ந்துவிடக்கூடாதென்று நோக்கம் கொண்ட மணியின் அப்பா... மூத்தவர். அவருக்கு இளையவர்கள் மூவர் ஆளுக்கு அரை டஜன் வாரிசுகள் என்று சராசரியாகக் கொண்டாலும், அவர்களில் பாதி பேருக்குத் திருமணமாகி இனப்பெருக்கம் செய்திருந்தார்கள்.

மணிக்கும் போன ஆகஸ்ட்டில் திருமணம் நடந்தது.

சிவா, ''ஒய்·ப்பையும் கூட்டிக்கிட்டு வந்துட்டியா?'' என்றான்.

''இல்லை...'' என்றான் நிதானமாய்.

''என்னது இல்லையா?... ஊர்ல இருந்து வந்து ரெண்டு மாசமாச்சுன்றே... கல்யாணமான மறுநாளே வந்துட்டியா?''

மணி வேகமாக எழுந்து சிவாவின் வாயைப் பொத்தினான். ''மெதுவா கேளேம்பா.''

''சண்டையா?'' என்றான் மெதுவாய்.

''அதெல்லாம் ஒண்ணுல்ல எங்க ஊர்ல இருந்து யாராச்சும் என்னைத் தேடி வந்தாங்களா?''

''இல்லையே''

''நல்லதாப் போச்சு''

''ஏய்... என்ன விஷயம்னு ஏதாவது சொல்றியா?''

''ஏன் சிவா அவசரப்படறே...? நைட்டு ·புல்லா இங்கதானே இருக்கப்போறேன். நிதானமாப் பேசவும்... அப்பா அம்மால்லாம் செளக்கியம்தானே?''

சிவா சலித்துக் கொண்டான்.

''நல்லாருக்றாங்க... விஷயத்த சொல்லுய்யா''

''மாடிக்கு போய் படுத்துக்கலாமா?''

சிவா யோசித்தான். 'ஏடா கூடாமாய் ஏதோ நடந்திருக்கிறது. மாமியார் மருமகள் சண்டை... சொத்தைப் பிரிக்கச் சொல்லிச் சண்டை... கல்யாணம் பண்ண ஒரு மாதத்தில் ஓடி வந்திருக்கிறான் என்றால்...? இன்னும் சிக்கலான சண்டை ஏதோ நடந்திருக்கிறது. ஹாஸ்டலில் இருந்து ஊருக்கு அனுப்பி வைக்கும்போதே பெரும்பாடாய் இருந்தது.

''எங்க வீட்ல அன்பு பாசம் இதுக்கெல்லாம் இடமே இல்ல சிவா... ஏன்... ஒருத்தர் முகத்திலையும் இயற்கையான சிரிப்பையே பார்க்க முடியாது. வீட்ல இருக்கிற பெண்களுக்கெல்லாம் நாள் முழுக்க சமைக்கிற வேலை.

ஆம்பளைங்களுக்கு, பத்து ஏக்கர் நிலம் பம்ப்-செட்டோட வெலைக்கு வருதான்னு பாக்கிற வேலை. இல்லாட்டி பஸ்-ஸ்டேன்ட் பக்கமா நாலு கிரவுண்டு வாங்கிப் போட்டா பின்னாடி நல்ல விலைக்கு விக்கலாம்... இப்படி... நாள் முழுக்க பணம் பண்ற வேலை.''

''தனித்தனியா சொத்தைப் பிரிச்சிட்டா...?''

''முடியாது சிவா... இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்துட்டா... ஒரு தியேட்டர் கட்டி விடலாம்னு ஐடியால இருக்காங்க... பிரிச்சிட்டா சொத்தினுடைய வீரியம் கொறஞ்சிடும்.

அவங்களுக்கு ரெண்டே ரெண்டு எண்ணம்தான் வாழ்க்கைல. ஒண்ணு பணம் சேக்கறது.

இன்னொன்னு சேத்த பணத்தை அதிகப்படுத்தறது'' சிரிப்பான்.

மூணு வருஷக் கல்லூரி வாழ்க்கையில் ஊரிலிருந்து பணம் வருவதில் ஒரு சமயத்திலும் தாமதம் இருந்ததில்லை.

''பணம் மட்டும் கரக்டா வருதே?''

''படிச்ச மாப்பிள்ளைனு சொல்லி எவன் கிட்டயாவது நூறு சவரன் பிடுங்குவானுங்க... சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீன் பிடிப்பானுங்க...''

அவன் வீட்டைப் பற்றி ஒரு முறையும் பெருமைப்பட்டுக் கொண்டதில்லை.

''ஒவ்வொரு மனுசனும் ஒவ்வொரு தூண்டிலைப் போட்டுட்டு ஒக்காந்திருக்கானுங்கப்பா...

சிவா உடனே இப்படிக் கேட்டான்.

''அது சரி... நம்ம முரளி காதலிக்காக உயிரே தருவேன்றானே... உயிர் என்ன சின்ன மீனா?''

மணி பெரிதாகக் கைதட்டிச் சிரித்தான்.

சிவா உள்ளே போய் ஒரு பாயையும், இரண்டு தலையணையைம் அக்குலில் இடுக்கிக் கொண்டு வந்தான்.

மொட்டை மாடியின் நட்ட நடுவே, பாயை விரித்து, தலையணையைப் பொருத்துவதற்குள், சர்ர்... எனத் தீக்குச்சிக் கிழித்தான் மணி.

''பீடியா பிடிக்கிறே?''

''ஆமா... ஒரு கட்டு நாப்பது பைசா...''

''ச்சே...''

''என்னையா பண்றது... சிகரட் விக்கிற வெலைல இதுதான் வசதி''

''சரி சொல்லு ஊர்ல என்னாச்சு?''

மணி, வேறெதொ பேச இருந்தவன், சிவா இப்படிக் கேட்டதில் சட்டென்று அதை நிறுத்திக் கொண்டு விஷயத்தைக் கோர்வைப்படுத்துவது போல் பீடியை ஆழமாக உறிஞ்சினான்.

''என் பெட்டிக்குள்ள உன்னுடைய அட்ரஸ் எங்கயாவது இருக்கறதுக்கு 'சான்ஸ்' இருக்கு... என் பெட்டிய யாராவது கிளறி சப்போஸ் உன் அட்ரஸ¤ம் கிடைச்சா... என்னைப் பத்தி தெரிஞ்சுக்கறதுக்கு இங்க வரலாம்...''

''ஊர்ல இருந்தா?''

''ஆமாம்... அப்படி யாராச்சம் வந்தா நாங்க நல்லாருக்கறதா சொல்லணும்...''

''நாங்கன்னா...?''

''நானும் என் ஒய்·பும்''

''...ஒய்·ப்?''

''இப்ப அவ என் ஒய்·ப் இல்ல... பெங்களூர்ல வேறு ஒருத்தர் கூட இருக்கிறா...''

சிவா அதிர்ந்து எழுந்து அவன் தோளைக் குலுக்கி ''சினிமாவுக்கு 'ஒன்லைன்' எதாவது எழுதிறியா?'' என்றான்.

எப்போதும் போன்ற குரலில், ''உண்மையாதான் சிவா... கல்யாணமான மறு வாரமே எனக்கு அவ வேற ஒருத்தரைக் காதலிச்ச விஷயம் தெரிஞ்சு போச்சு... நம்ம நாட்டு வழக்கப்படி காதலர்களை அவசர அவசரமாப் பிரிச்சு எனக்குக் கட்டி வெச்சிருக்காங்க... ஒரு நாள் 'மன்னிச்சுக்க' சொல்லி ஒரு லட்டர் எழுதி வெச்சிட்டு கிளம்பிப் போயிட்டா...'' இந்த இடத்தில் மணி சிறிது நிறுத்தினான்.

சிவாவோ அறையப்பட்டவன் மாதிரி சிந்தனை இயக்கம் இழந்து கிடந்தான்.

''விஷயம் வெளிய தெரியறதுக்கு முன்னாடி... நானும் வீட்டை விட்டுக் கிளம்பிட்டேன். அவ எழுதின லட்டரைக் கிழிச்சுப் போட்டுட்டு 'எங்களுக்கு இந்த வீட்டில் இருக்க விருப்பமில்லை. எங்காவது போய்ப் பிழைத்துக் கொள்கிறோம். எங்களைத் தேட வேண்டாம்'னு ஒரு லட்டர் எழுதி வெச்சிட்டேன்... இப்ப நானும் அவளும் ஒண்ணா இருக்கிறதாதான் எல்லாரும் நினைச்சுக்குனு இருக்காங்க... நா செய்தது சரிதானே சிவா...?

சிவா பிரயோசிக்க நினைத்த வார்த்தைகள் உதட்டருகே மூர்ச்சையாகிப் போகவே, ஆகாயம் நோக்கி வெறித்தான்.

மணி இயல்பாய், ''எங்க வீட்ல தேட ஆரம்பிச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன்... தினத்தந்தி பேப்பர்ல கால் பக்கத்துல ஒரு விளம்பரம் கொடுத்திருக்காங்க 'எங்க இருந்தாலும் உடனே தகவல் கொடுக்கும்படி'...

அதான் சொல்ல வந்தேன்... அப்படியவங்க உங்கிட்ட விசாரிக்க வந்தா... எங்க ரெண்டு பேரையும் ஒரு தியேட்டர்ல பார்த்ததா சொல்லு... நல்லா இருக்கிறதா சொல்லு... நாங்க நல்லா இருக்கறதுக்கு நீ ஒரு சாட்சி மாதிரியும் இருக்கும்... சொல்லுவியா சிவா?'' என்றான்.

சனி, ஆகஸ்ட் 02, 2008

கற்றதனால்

"அப்புறம்'' என்றேன்.

"அட, எல்லாத்தையும் விளாவாரியாச் சொல்லணும் உனக்கு... அப்புறம் அவ்வளவுதான்'' என்றான் சிதம்பரம்.

"அடச்சீ... அப்புறம் இன்னா ஆச்சு சொல்லுடா?''

அர்த்தமாய் என்னைக் கூர்ந்துவிட்டு "பீடிக்கு ஒரு ரூபா தர்றியா'' என்றான்.

"ம்...''

சிதம்பரம் சுற்றிலும் ஒரு நோட்டம் பார்த்துக் கொண்டு, வடிகட்டிய குரலில், "நைட் ஒம்போது மணிக்கு அவன் வாழைத் தோப்புக்கா போறதைப் பார்த்தேன். கொஞ்ச நேரங்கழிச்சு அந்தப் பொண்ணு...''

"நைட்ல்யா?''

"பகல்லகூடத்தான் நடக்குது. அதுக்கு வேற இடம் இருக்குது.''

"அது எங்கடா?''

"இன்னா நீ...? நானும் வந்ததில இருந்து பாக்றேன். கிளறிக்கினே இருக்கியே. பட்டணத்தில் நீ பாக்காத ஆளா?''
பட்டணத்தில் பார்க்கத்தான் முடியும். பத்து பேராய்ச் சேர்ந்து நின்று கொண்டு போகிற, வருகிற பெண்களுக்கு மார்க் போடமுடியும். கவலையே இல்லாமல் தொளதொளவென்று பனியன் போட்டுக்கொண்டு ஆறடி உயரத்தில் செவேல் என்று போய்க் கொண்டிருக்கும் மேற்கத்திய பெண்கள் தாராளமாய் எண்பது, தொண்ணூறுரென்று மார்க் வாங்கியிருக்கிறார்கள். இந்தியப் பிரஜைகள் எங்களின் அளவு கோலில் ஐம்பதைத் தாண்டியதில்லை.

பஸ்ஸில் அவசரத்தில் இடித்துவிட்டதாகப் பாசாங்கு செய்வோம்.
ஹாஸ்டலில் நடிகைகளின் படங்களை ஒட்டி வைப்போம்.
எனது சர்வீஸில் வேறு ஒன்றும் முடிந்ததில்லை. முடிய வைக்கத் தைரியமில்லை.

"பட்டணத்தில் இந்த அளவுக்கு முடியாதுடா... சரி சொல்லு'' என்றேன்.

"காது குத்தறியே..? சரி துட்டு குடு. நிறைய வேல நடக்குது பழனிக்கிட்ட சொல்லு நாளலர்ந்து மாட்டுக்கு நா தண்ணி காட்ட மாட்டேன். கதயா இருக்குதே? மாட்டைப் புடிச்சிக்கட்டிட்டுப் போய்க்கினேகிறாரு ஐயா... மாட்டுக்காரன் தானே மாட்டுக்கு தண்ணி காட்டணம்?''

"பழனிகிட்ட சொல்றேன்... அப்புறம்?''

"என்னது அப்புறம்? உனக்கு வேற வேல கிடையாது. மாட்டுக்குத் தவுடு வெக்கணும்... ஐய துட்டு குடு.. நாளிக்குச் சொல்றேன்'' என்றான்.

சிதம்பரம் சுவாரஸ்யம் இழந்துவிட்டான். இனி சொல்ல மாட்டான். சமயத்தில் அப்படி லேசாக உலுக்கினால் போதும் கதையாகக் கொட்டுவான். ஐம்பது வயசு ஆறுமுக நாயகரிலிருந்து பதினைஞ்சு வயது குமார் வரைக்கும் சொல்லுவானó.

அவனை அனுப்பினேன்.

மணி மூன்றிருக்கும். மேகத்தின் அடர்த்தியால் ஆறு மணி மாதிரி இருந்தது. உடம்பு சூடாக இருந்தது. கிளைமேட் காரணமாகவா சிதம்பரம் சொன்னா சாமாச்சாரங்கள் காரணமாகவா தெரியவில்லை.
பம்ப்}செட்டிலிருந்து வெளியே வந்து சிறுநீர் கழிந்துவிட்டு சுற்றிலும் பார்த்தேன். அரை கிலோ மீட்டர் சுற்றுப் பரப்புக்குப் பச்சை.

வரப்பில் நோக்கமில்லாமல் மெல்லச் சுற்றிக் கொண்டு வந்தபோது கொஞ்ச தூரத்தில் வளையல் சத்தம் கேட்டது. புல்லறுக்கும் சத்தம். எங்கிருந்து வருகிறதென்று கண்டுபிடிக்க முடிந்தது.
அவள் புல்லறுத்துக் கொண்டிருந்த வரப்பில் நானும் நடக்க ஆரம்பித்தேன். சிதம்பரம் சொன்ன கதைகள் என்னை முடுக்கி விட்டுக் கொண்டிருப்பதாக உணர முடிந்தது. இருந்தாலும் திரும்பிச் செனஅறு விட முடியவில்லை.

புல்லறுத்துக் கொண்டிருந்தவளின் பின்னால் போய்ச் சப்தமின்றி நின்றேன். கண்ணாடி இல்லாமலேயே என் முகம் சிவந்து போயிருப்பதை உணர முடிந்தது. லப்}டப் ஓசைதான் பிரதானமாக இருந்தது.
திடுக்கிட்டவள் மாதிரி திரும்பிப் பார்óத்தாள். "அப்பப்பா... யாரோனு பயந்துட்டேன்'' என்று ஒதுங்கி நின்றாள்.
புல்லறுக்கிறியா?'' என்றேன். எனக்குள்ளே வேறு எவனோ புகுந்துகொண்டு பேசுவது மாதிரி இருந்தது.

"பார்த்தாயா தெர்லயா?'' என்று சிரித்து விட்டு மறுபடி அறுக்க ஆரம்பித்தான்.

நானும் நடக்க ஆரம்பித்தேன். அவளை விட்டு விலக, நல்ல வாய்ப்பு நழுவி விட்டது மாதிரி இருந்தது. சட்டென்று திரும்பி அழைக்கலாமா என்றிருந்தது.

பம்ப் -செட்டில் யாருமில்லை. இனி யாரும் வருவதற்கும் இல்லை. இதெல்லாம் ஊரில் சகஜமாக நடக்கிறதென்று சிதம்பரம் உறுதியாகச் சொல்கிறான்.

ஒருமுறை கனைத்துக் கொண்டேன். எங்கே கூப்பிட்டு விடுவேனோவென்று எனக்கே பயமாக இருந்தது.
பயப்படாமல் கூப்பிட்டுக் பார்க்கலாமா? நீ கூடவா இப்படி? என்று அவள் கேட்டுவிட்டால்? ச்சே... அப்படியெல்லாம் கேட்பதற்கு அவளுக்குத் தெரியாது. ஊரில் யாரிடமாவது சொல்லி விடுவார்களா?
எனக்கும் அவளுக்கும் இடைவெளி அதிகரித்துக் கொண்டிருந்தது. சட்டென்று கால்களை நிறுத்த முடியவில்லை. கால் ஒருபுறமும், மனசு மறுபுறமும் நடந்து கொண்டிருந்தது.

மழை சடசடவென்று தூற ஆரம்பித்தது. வேகமாக செட்டை நோக்கி ஓடினேன்... அதானே óமழைக்கு ஒதுங்குவதற்கு இதை விட்டால் வேறு எந்த இடம் இருக்கிறது? அவளும் இங்கு தானó வந்தாக வேண்டும்.
திரும்பிப் பார்த்தேன். அவளும் ஓடிவருவது தெரிநóதது. கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.

மழை பிடித்துக் கொண்டால் யாரும் வருவதற்கில்லை. திக்திக்கென்றிருந்தது.

இனóனும் சிறிது நேரத்தில் உள்ளே நுழைவாள். எப்படிப் பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்று உடனே தயாரிக்க முடியவில்லை.

ஒரு பத்து ரூபாய்த்தாளை எடுத்துக் காட்டலாமா? வேறு நல்ல யோசனையாய்த் தோன்றவில்லை. நாகரிகமாய் ஏதாவது? இதில் நாகரிகம் என்ன வேண்டியிருந்தது?

காலேஜில் பெண்களை வசியம் பண்ண சில உத்திகளை கணேசன் சொல்லியிருக்கிறான். ஒன்றுமே ஞாபகத்துக்கு வரவில்லை.

யாரோனு பயந்திட்டேன் என்றாளே... அப்படியென்றால் நான் என்றால் பயப்பட மாட்டாளா? வரட்டும்...
மழை சோவென்று பொழிந்து கொண்டிருந்தது.

இனóனும் என்ன செய்றா?

மெல்ல வாசல் பக்கம் போய் எட்டிப் பார்த்தபோது தொப்பலாக நனைந்தபடி பக்கத்திலிருந்த மரத்தடியில் நின்றிருந்தாள். கையிரண்டையும் மார்புக்குக் குறுக்கே இறுக்கமாகக் கட்டிக்கொண்டு கால்களைச் சேர வைத்தபடி குளிரிக்கொண்டிருந்தாள்.

பதினேழு வயதிருந்தால் அதிகம். ஏன் இப்படித் தயங்குகிறாள் என்று தெரியவில்லை. நானும்தான்!
கட்டிலில் அமர்ந்து ஏதோ வார இதழை இப்படியும், அப்படியும் திருப்பினேன். மனது இன்னும் என்னிடம் வந்து சேரவில்லை.

புத்தகத்தைப் புரட்டுவதை நிறுத்திவிட்டுக் கூர்ந்து கவனித்தேன். சடசடவென்று சேறு தெறிக்க ஓடிவருகிற சத்தம் கேட்டது. எழுந்து நின்று கொண்டேன்.

"அப்பாடி'' என்று ஓடிவந்து நினóறவர் முருகேச முதலியார்.
நல்லவேளையாகத் தப்பித்தோம்!

"இன்னாப்பா நீ மட்டுந்தான் இருக்கியா?'' என்றார்.

"ஆமா''

"பட்டணத்துல படிச்சியே... அங்கேயே ஒரு வேலை பாத்து சேர்ந்துடக்கூடாது?... எங்க பொழைப்புதான் நாய்ப் பொழப்பா இருக்குது. மழைல மோட்டார் பத்திக்கப் போதுனு ஓடியாந்தேன்... நீயேன் நிறுத்தாத இருக்குறே... நிறுத்திடு'' என்றார்.

அவள் போய் விட்டிருப்பாளா?

"பி.ஏ... தானே?'' என்றார்.

"ஆமா''

"வேலைக்கு டிரை பண்ணியா?'' எனóறார்.

"ட்ரை பண்றேன்...''

"அபóபப்பா... இன்னா குளிரு'' என்று வாசல் பக்கம் போய் நின்றவர், அது யாரு? நம்ம ஏழுமலை பொண்ணு இல்ல?''

அப்போதுதான் கவனித்தவன் மாதிரி பாவனஐ செய்தேன்.

"ஏம்மா மீனாட்சி...'' என்று உரக்கக் கூப்பிட்டுவிட்டு, ""இன்னாப்பா நீ? மழைய நனைஞ்சிங்கடக்குது பேசாம இருந்திட்டியே?...'' என்று என்னிடம் கேட்டார்.

மறுபடியும், அவள் பக்கம் திரும்பி, "உள்ள வாம்மா'' என்றார் அவள் வருவது தெரிந்து.

"அதுதான் படிக்காத பொண்ணு... நீ மட்டும் தனியா இருக்கிறேன்னு வெக்கப்படுது... படிச்சவன உனுக்கினனா வெட்கம்? உள்ள வந்து நில்லும்மானு சொல்றதானே?... இடி கிடி உழுந்தா என்னா ஆவறது?'' எ
"அதுதான் படிக்காத பொண்ணு... நீ மட்டும் தனியா இருக்கிறேன்னு வெக்கப்படுது... படிச்சவனஅ உனுக்கினóனா வெட்கம்? உள்ள வந்து நில்லும்மானு சொல்றதானே?... இடி கிடி உழுந்தா என்னா ஆவறது?'' என்றார் பதட்டமாய்.

"சாரி. நா கவனிக்கவே இல்ல'' என்றேன்.

ரஷ்ய நூல்கள்

சிலர் மனிதர்கள் ஆனார்கள்!


தமிழ்மகன்

உலகத்தின் தலைசிறந்த 100 எழுத்தாளர்களைப் பட்டியலிட்டால் அதில் குறைந்த பட்சம் ஒரு டஜன் எழுத்தாளர்களையாவது ரஷ்யா மொழிக்கு ஒதுக்கித் தரவேண்டியிருக்கும். ஒருவேளை இந்தப் பட்டியலைத் தயாரிக்கும் பணியை ஒரு முரட்டுத்தனமான முதலாளித்துவ சிந்தனையாளனும் கூடவே பிற்போக்குவாதியாகவும் இருப்பவனிடம் காலம் ஒப்படைக்குமாயின் மேலே சொன்ன கணக்கில் ஒன்றிரண்டைத்தான் குறைக்க முடியும்.
வெளிநாட்டு இலக்கியங்கள் என்றாலே ஆரம்ப தரிசனமாக ரஷ்ய இலக்கியங்களை மட்டுமே படிக்க முடிந்த என் போன்ற ஆசாமிகளுக்கு இந்தப் பட்டியல் இன்னமும் நீளமானதாக இருக்கும்.
இந்த மூன்று தரப்பு எழுத்தாளர் பட்டியலிலும் தவிர்க்கமுடியாத படைப்பிலக்கியங்களை அல்லது எழுத்தாளர்களைப் பார்போம்.

"குற்றமும் தண்டனையும்', "வெண்ணிற இரவுகள்', "சூதாடி'} தஸ்தயேவஸ்கி

"போரும் அமைதியும்', "அன்னா கரீனினா', "புத்துயிர்ப்பு', இரண்டு ஹூஸôர்கள்} டால்ஸ்டாய்

செம்மணி வளையல்} அலெக்ஸôண்டர் குப்ரின்

மேல்கோட்டு} நிகோலய் கோகல்

தந்தையும் தனயரும், வசந்த கால வெள்ளம்} இவான் துர்கேனிவ்

அலெக்சேய் டால்ஸ்டாய்} நிகிதாவின் இளம்பருவம்

நாய்க்கார சீமாட்டி உள்ளிட்ட சிறுகதைகளும் குறுநாவல்களும்} ஆன்டன் செகாவ்

புரட்சிக்கு முந்தைய எழுத்தாளர்களில் இந்த ஏழுபேரை தவிர்த்துவிட்டு யாருமே பட்டியல் தயாரிக்க முடியாது. இந்த எழுத்தாளர்களின் கதைகளில் ஒரு பொதுத் தன்மையாக உள்மனசிக்கல்கள், நினைவோட்டம், ஆறா மனத்துயர், நேர்மைக்கும் குற்ற உணர்வுக்குமான போராட்டம் ஆகியவை மிக ஆழ்ந்த தத்துவப் பார்வையோடும் அதே சமயம் தேவையான கிண்டலோடும் சொல்லப்பட்டிருக்கிறது.

தஸ்தயேவஸ்கியின் மன உலகம் வறுமையும் ஏராளமான மனசிக்கலும் நிறைந்ததாக இருக்கிறது. அள்ள அள்ளக் குறையாத காதல் பித்து தலைக்கேறித் தவிக்கும் நாயகர்கள் இவருடைய பாத்திரங்களாக இருக்கிறார்கள். காதலியின் அன்புக்காகக் காதலியையே இழக்கத் துணிபவனும் (வெண்ணிற இரவுகள்), காதலிக்காக மலை உச்சியிலிருந்து கீழே குதிப்பதாக வாக்குறுதி தருபவனும் (சூதாடி) இவருடைய கதை மாந்தர்களாக இருக்கிறார்கள்.

டால்ஸ்டாய் மேட்டுக்குடியில் பிறந்து அங்கு நிலவும் போலித்தனமான நாகரீக வேடிக்கைகளையும் பணமிருந்தும் நிராசைகளும் குற்ற உணர்வால் நிம்மதியில்லாமல் இருக்கும் போக்கும் இவரது களம். வேட்கை காரணமாக வாழ்வில் இடறி அதைத் தொடர்ந்து ஏற்படும் சிடுக்குகள் நிறைந்த படிநிலைகளை அன்னா கரீனினாவிலும் புத்துயிர்ப்பிலும் மிகச் சிறப்பாகச் சித்திரித்திருக்கிறார் டால்ஸ்டாய். ஒரு வாழ்க்கை முறை ஒருவரின் குணத்தை எந்த அளவுக்குத் தூக்கிப் போடுகிறது என்பது நெஹ்லூதவ் மீசை அரும்பிய இளைஞனாய் இருக்கும்போது கத்யூஷாவிடம் ஏற்படும் காதலுக்கும் பிறகு ராணுவப் பயிற்சிக்குப் போய் வந்த பிறகு அவளை அவன் எதிர் கொள்வதற்கும் இருக்கும் வேறுபாடு உணர்த்துகிறது. ராணுவம் அவனுக்குள் இருந்த காதலை காமமாக உருமாற்றி அனுப்பும் ரசாயனத்தை என்னவென்பது? கத்யூஷாவும் வேசையாக மாறி மாஸ்லவாவாக மாறும்போது ஒரு மலர் கருங்கல்லாக மாறிப்போனதை உணர முடிகிறது. எப்படிப் பழகிக் கொள்கிறோமோ அதுதான் வாழ்க்கையாகவும் எப்படி வாழ்கிறோமோ அதுதான் பழக்கமாகவும் மாறிப்போகிற விந்தை அது.
"செம்மணி வளையல்', "வசந்தகால வெள்ளம்' கதைகளும் காதலின் வலியைப் பிரிவின் துயரைச் சொல்லும் வலிமையான கதைகள். இந்தக் கதைகளின் இறுதிப்பக்கங்களை ஏதேச்சையாகப் புரட்டும்போதும் மனம் கனத்துப் போய் கண்ணீர் துளிர்ப்பது அனிச்சை செயல்போலவே ஆகிவிட்டது எனக்கு. தந்தையரும் தனயரும் கதையின் நாயகன் பஸôரவ் பாத்திரத்தைப் படைப்பதற்காக என்னிடமிருந்த அனைத்து வண்ணங்களையும் இழந்துவிட்டேன் என்று துர்கேனிவ் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பார். எவ்வளவு உண்மையான வார்த்தைகள் என்பது நாவலைப் படித்தோருக்குத் தெரியும். பஸôராவ்வின் மிடுக்கு நம்மை வியப்பில் ஆழ்த்தும். நோய் முற்றி இறக்கும் தறுவாயில் கடுமையான ஜுரத்தில் பேசிக் கொண்டிருப்பான் பஸôரவ். அப்போது, ""ஜுரத்தில் நான் உளறுவதுபோல் இருந்தால் தயவு செய்து எனக்கு நினைவூட்டுங்கள். நிறுத்திக் கொள்கிறேன். எனக்கு உளறுவது பிடிக்காது'' என்பான். நாவலைப் படித்து முடிப்பவர் இரண்டு நாளைக்காவது பஸôரவ் போல இருப்பார்கள். அல்லது இருக்க நினைப்பார்கள். தலைமுறை இடைவெளியை மிகச் சிறப்பாக சித்தரித்த நாவல்களில் இதுவும் ஒன்று.
புரட்சிக்குப் பிந்தைய காலகட்டத்தில் கார்க்கியின் "பிறந்தான் மனிதன்', "வழித்துணைவன்', "கிழவி இùஸரிக்கில்' உள்ளிட்ட பல சிறுகதைகளையும் "தாய்' நாவலையும் நிச்சயம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிங்கிஸ் ஐத்மாத்தவ், பாஸý அலியவா, மிகைல் ஷோலகவ் போன்றவர்கள் அன்பையும் காதலையும் போராட்ட வாழ்வையும் சொன்ன மிக முக்கியமான எழுத்தாளர்கள். வஷிலி வஷிலியேவிச் எழுதிய "அதிகாலை அமைதியில்', ஓஸ்திரோவிஸ்கியின் "வீரம் விளைந்தது', மற்றும் "உண்மை மனிதன் கதை', "போர் இல்லாத இருபது நாட்கள்' போன்ற பல நாவல்கள் புரட்சிக்குப் பிந்தைய அல்லது நாஜி படையெடுப்பு காலத்தை ரத்தமும் சதையுமாகக் கண் முன் காட்டுபவை.
அதிலும் அதிகாலை அமைதியில் நாவலில் ஆறு பெண்கள் ஒரு நாஜி ராணுவப் பிரிவை எப்படி எதிர் கொண்டு போராடுகிறார்கள் என்பது உள்ளத்தை உலுக்கும். பார்வை இழந்த ஓஸ்திரோவ்ஸ்கியின் முதல் கையெழுத்துப் பிரதி தொலைந்து போன நிலையில் மீண்டும் எழுதப்பட்டது என்ற செய்தி போரின் கொடுமையினும் கொடுமை. விமானவிபத்தில் காலிழந்து பனியில் தவழ்ந்து வந்து மீண்டும் விமான ஓட்டியாக மாறும் உண்மை மனிதனின் கதை மட்டும் என்னவாம்? உலகின் சிறந்த படைப்புகளைச் சேகரிக்கும் முரட்டு முதலாளித்துவ சிந்தனையாளருக்கு இந்தப் பாராவில் உள்ள சிலரைச் சேர்த்துக் கொள்வதில் சங்கடங்கள் இருக்கலாம்.
என்னுடைய அனுபவத்தில் இன்றைய (40 வயதுக்கு மேற்பட்ட) தமிழ் எழுத்தாளர்களில் இந்தப் படைப்புகளைத் தவறவிட்டவர்கள் சொற்பமானவர்களே இருப்பர். காரணம் இந்த அத்தனைப் புத்தகங்களுமே சோவியத் ரஷ்யாவால் மிகக் குறைந்தவிலையில் மிகத் தரமான புத்தக ஆக்கங்களாக அளிக்கப்பட்டவை. இந்தியாவின் பல மொழிகளில் இந்தப் புத்தகங்களை அவர்கள் மொழியாக்கம் செய்திருப்பதன் காரணமாக இந்தியா முழுவதிலுமே 40 வயதைக் கடந்த எழுத்தாளர்களின் ஆதார நூல்களாக இவை இருக்கும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு.
இப்போது அவர்கள் காப்காவையும் கார்ஸியா மார்க்வெஸ்ûஸயும் சார்த்தர், ஆல்பெர் காம்யு, சினுவ ஆச்சிபி, ஓரான் பாமுக் பற்றியும் பேசுபவர்களாக இருக்கலாம். ஆனால் இவர்கள் எல்லோரும் (வீக்கோ வஜ்ரதந்தி விளம்பரத்தில் சொல்வதுபோல) இதிலிருந்து வந்தவர்கள்தான். (இல்லை என்பவர்கள் தகுந்த ஆதாரத்துடன் வந்து இந்தக் கூடாரத்திலிருந்து விலகிக் கொள்ளலாம்.)


படைப்பிலக்கியம் மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் ரஷ்ய நூல்களே எனக்குப் பெரிய ஆதரவாக இருந்தன. "இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்', "நன்னம்பிக்கைக்கு ஆதாரங்கள்', "மக்கள் தொகைத் தந்துவத்தின் அடிப்படைகள்' போன்ற நூல்கள் பலமான தத்துவ பலத்தையும் விஞ்ஞான அடிப்படையிலான சமூகப் பார்வையும் எனக்குள் ஏற்படுத்தியது.
"மனித இனங்கள்', "நான் ஏன் என் தந்தையைப் போல இருக்கிறேன்', "தேனிக்கள்', யா.பெரல்மானின் "பொழுது போக்கு பெüதீகம்', "பொழுதுபோக்கு வானவியல்', "சார்பியல் தத்துவம்தான் என்ன?' போன்ற விஞ்ஞான நூல்கள் எனக்கு அறிவியல் மீது இருந்த அச்சத்தைப் போக்கி வாழ்வின் சுவாரஸ்யங்களாக்கின. "ஹிஸ்ட்ரி ஆஃப் த ஏன்ஸியன்ட் வேர்ல்ட்', "குடும்பம் தனிச் சொத்து அரசு' போன்ற நூல்களை கண்ணைத் திறந்துவிட்ட நூல்கள் என்று எப்போதும் சொல்வேன்.


குழந்தைகளுக்கான நூல்களும் ரஷ்யா வெளியிட்டதுபோல் வெறெந்த நாடும் அத்தனை குறைந்த விலையில் வெளியிட்டிருப்பார்களா என்று தெரியவில்லை. நிறைய புத்தகங்கள் 50 காசிலிருந்து ஒரு ரூபாய்க்குள். டால்ஸ்டாய் எழுதிய குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் என்ற சிறுநூல் என் மனதில் ஓவியமாகப் பதிந்து கிடக்கிறது. இரண்டு நண்பர்கள், அக்ரூட் கொட்டை திருடிய சிறுவன், காளான் பொறுக்கும் சிறுமிகள், சிங்கமும் நாய்க்குட்டியும் போன்றவை வார்த்தைகளும் சித்திரங்களுமாக பதிவாகியுள்ளன. இயற்கை விஞ்ஞானிகளின் கதைகள் நூலில் காகங்களுக்கு மூன்றுக்கு மேல் எண்ணத் தெரியுமா? போன்ற சுவாரஸ்யமான சந்தேகங்கள், எலியை வளர்த்த பூனைகள் போன்ற இயற்கை ஆய்வுகள் மறக்கவும் கூடுமோ? சிறுவயதில் "அப்பா சிறுவனாக இருந்தபோது' நூலைப் படிக்கக் கொடுத்து வைக்காதவர்கள் தங்கள் மகிழ்ச்சியின் ஒரு பகுதியை இழந்தவர்கள்தான்.
இப்போது இதில் பல புத்தகங்கள் என்னிடம் கைவசம் இல்லை. பல நூல்கள் படித்து பல ஆண்டுகள் ஆனவை. ஆனால் இந்தக் கட்டுரையை எழுத உட்கார்ந்ததும் அத்தனையும் அந்த நூல்களை வாங்கிய தருணத்திலிருந்து அவற்றை தாகத்தோடு படித்த காலங்கள் வரை கண்முன் வந்துவிட்டுப் போகின்றன. நூலாசிரியரின் பெயரோ, கதாபாத்திரங்களின் பெயரோ, நூலின் பெயரோ சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றுகூட தோன்றவில்லை. அப்படிச் செய்வது என்னை வளர்த்த அந்த நூல்களுக்கு செய்யும் அவமானம் என்று தோன்றியது. இது உணர்ச்சிவசப்பட்ட (உணர்ச்சியை வசப்படுத்த முடியாத?) நிலையில் சொல்லப்படுவதாக நினைக்கவும் வேண்டியதில்லை.
சோவியத் ரஷ்யர்கள் அமெரிக்காவுடன் போட்டியிட்டு அவர்களுக்குச் சவாலாக வானிலிலும் செயற்கை கோள் சாதனைகளிலும் ராணுவக் கருவிகள், நீர் மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றிலும் கல்வியுலும் மின்மயமாக்கல் விஷயத்திலும் அணுக்கரு உலை, ஆகாய விமானம் போன்ற இதர தொழில்நுட்பங்களிலும் அளப்பறிய சாதனை புரிந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் சாதனையில் எல்லாம் பெரிய சாதனையாக அவர்கள் வெளியிட்ட புத்தகங்கள்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் உலகமெங்கும் இருந்த எத்தனையோ பேரை மனிதர்களாக்குவதற்கு அவை உதவியிருக்கின்றன.... உதவிக் கொண்டிருக்கின்றன.

ஜெயந்தி

தமிழ்மகன்


மாமியார் மருமகள் சண்டை வருவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இந்த உலகில்
உண்டு. ஆனால் வைஜெயந்தி என்ற பெயரால் ஒரு பிரளயம் ஏற்பட வாய்ப்புண்டா?
சண்முகம் வீட்டில் ஏற்பட்டது.
சண்முகத்தின் தங்கை பெயர் வைஜெயந்தி. டெலிபோன் இன்டெக்ஸ் புத்தகத்தில்
அவள் பெயரை "வி' என்ற ஆங்கில எழுத்துக் குறிக்கும் இடத்தில் குறித்து
வைப்பது நியாயந்தானே? நாத்தனாரின் பெயரை அங்குதான் எழுதி வைத்திருந்தாள்
அர்ச்சனா. சண்முகத்தின் அம்மாவுக்கு அந்த தர்க்க நியாயங்கள் புரியவில்லை.
"ஏண்டி அம்மா உன் அண்ணன் பெயரையெல்லாம் முதல் பக்கத்தில எழுதிட்டு என்
பொண்ணு பேரை கடைசி பக்கத்தில எழுதியிருக்கே'' என்று ஆரம்பித்தார்.
அர்ச்சனாவுக்குகூட இந்தக் கேள்வி கேட்கப்பட்ட ஆரம்ப நிமிடத்தில், ஏதோ
தவறாக அப்படி எழுதிவிட்டோமோ என்ற அச்சம்தான் முதலில் ஏற்பட்டது.
வள்ளியம்மாவின் குரல் தீட்சண்யம் அப்படி. கொஞ்ச நேரம் கழித்துத்தான்
அண்ணனின் பெயர் "அன்பு' என்பதே உறைத்தது.
அர்ச்சனாவுக்கு கோபமும் சிரிப்பும் சேர்ந்து வந்தது. இந்த இரண்டின் கலவை
ஒருவித அலட்சியப் போக்கை அவளிடம் ஏற்படுத்தியது. பதில் சொல்ல விருப்பமே
இல்லாமல் முந்தானையை மட்டும் ஒரு உதறு உதறி இடுப்பில் சொருகிக் கொண்டு
இரண்டு மாதங்களுக்கு முந்தைய வார இதழை எடுத்து வைத்து வாசிக்க
ஆரம்பித்தாள்.
இதன் பிறகு என்ன நடந்திருக்கும் என்று விவரிக்க வேண்டியதில்லை. இந்திரா
காந்தி} மேனகா காந்தி ஜோடியிலிருந்து இசக்கியம்மா- காந்திமதி ஜோடி
வரைக்கும் இது சற்றேறக் குறைய மனஸ்தாபமாகவோ, வார்த்தை வெடிப்புகளாகவோ
ரசாயன மாற்றமடையும். இங்கே வார்த்தை வெடிப்பு.
இந்தச் சச்சரவுகளுக்குச் சற்றும் சம்பந்தமே இல்லாத } அந்த நேரத்தில்
அவனுடைய மேலாளரிடம் ஏதோ அவசர ஆவணத்தைக் கண்டெடுத்துக் கொடுக்க முடியாத
பரிதவிப்பில் ஏச்சும் பேச்சும் வாங்கிக் கொண்டிருந்த சண்முகம், இவர்களின்
பேச்சில் சிக்கி மேலும் வதைபட்டுக் கொண்டிருந்தான்.
ஒன்றுமில்லை "வரட்டும் அவன்'' என்று வள்ளியம்மா பெருமூச்சோடு
ஆவேசப்பட்டார். அவருடைய முந்தானையை அவரும் உதறினார், சொருகினார்.
"வந்தா என்ன பண்ணிடுவாராம்?''
"வாலை ஒட்ட வெட்டச் சொல்றேன்.. இரு... இரு.''
"எங்க குடும்பத்தில யாருக்கும் வாலெல்லாம் இல்ல.. எத்தனையோ லட்சம்
வருஷமா நாங்க வால் இல்லாமத்தான் இருக்கோம். உங்க குடும்பத்தைப் பத்தி
எனக்குத் தெரியாது'' என்று பரிணாம இலக்கணப்படி அர்ச்சனா ஏதோ சொன்னாள்.
பதிலுக்குத் திட்டுகிறாள் என்று உத்தேசமாகப் புரிந்து கொண்டு
வள்ளியம்மாவும் "லட்சம் வருஷமா வாலில்லாதவளோட லட்சணம் தெரியாது? நாங்க
கோடி வருஷமா வாலில்லாமத்தான் இருக்கோம்'' என பதிலடி கொடுத்தாள்.
கோடி ஆண்டுகளுக்கு முன்னால் குரங்குகளே கிடையாது என்பது தெரிந்ததால்
அர்ச்சனாவால் மேற்கொண்டு தம் மாமியாரிடம் பேசி ஜெயிக்க முடியாது என்ற
முடிவுக்கு வந்தாள்.
அவளுக்கு பழைய வார இதழே பரவாயில்லை என்று படிக்க ஆரம்பித்தாள்.
தட்டில் மத்தியானம் சாப்பாட்டைப் போட்டு வைத்த போதும் வள்ளியம்மா
சாப்பிடவல்லை. அர்ச்சனா அதைப்பற்றிக் கவலைப்படாமல் சாப்பிட்டுவிட்டுப்
படுத்தாள். வள்ளியம்மா மகன் வருகிற வரைக்கும் சாப்பிடாமல் இருக்க
வேண்டும் என்ற வைராக்கியத்தோடு ஈ மொய்க்கும் தட்டுக்குப் பக்கத்திலேயே
சுருண்டு படுத்துக் கொண்டாள்.
அன்று பார்த்து சண்முகம் மிகவும் தாமதமாகத்தான் வீட்டுக்கு வந்தான்.
அம்மா இப்படி தன் கோபம் பொருட்டு சுருண்டு படுத்திருக்காங்களா? எப்போதும்
போல் ஏழு மணிக்கெல்லாம் தூங்கிவிட்டாங்களா என்று சந்தேகிக்க அவனுக்கு
அவகாசம் இல்லை. விட்டால் நின்று கொண்டே தூங்கிவிடும் அளவுக்கு சோர்வு.
சண்முகத்துக்கு சாப்பாடு போட்டபடி, "கோடி வருஷமா எங்க குடும்பத்தில
வாலில்லாம இருக்கோம்கிறாங்களே எனக்குத் தெரிஞ்சு வாலில்லாத டைனோஸôர்
கேள்விபட்டதே இல்ல'' என பேச்சைத் தொடங்கினாள் அர்ச்சனா. இப்படி மொட்டை
ராஜா குட்டையில் விழுந்தான் கதையாக ஆரம்பிப்பது அர்ச்சனாவின் வழக்கம்.
அதிலும் மாமியாரைப் பற்றி இப்படி ஜாடையாக ஆரம்பிக்கும் ஒரு
வழக்கம்மட்டும்தான் உண்டு.
சண்முகம் திடுக்கிட்டு சுருண்டு கிடந்த அம்மாவையும் அவருக்குப்
பக்கத்தில் உலர்ந்து ஈ மொய்த்துக் கிடந்த சாப்பாட்டுத் தட்டையும்
பார்த்தான்.
"என்னது டைனோஸôர்?''
"உங்கம்மாதான் சொன்னாங்க. உங்க குடும்பத்தில கோடி வருஷமா வால்
கிடையாதுன்னு. ஏதாவது அர்த்தமிருக்கா பாருங்க.. இப்படித்தான் பேசறாங்க''
"புரியற மாதிரிதான் சொல்லேன்?''
"நீங்க வந்ததும் என் வாலை ஒட்ட நறுக்கறேன்னு சொன்னாங்க. மனுஷனுக்கு ஏது
வாலு? மனுஷனுக்கு குறைஞ்சது லட்சம் வருஷமா வால் கிடையாது... அதாவது
வாலில்லாம போனதாலதான் அவன் மனுஷன்...''
"இன்னும்கூட எனக்குப் புரியல. என்ன பிரச்சினை?''
""எனக்குந்தான் புரியல''
சண்முகத்தின் அம்மா படுத்திருந்த இடத்தில் இருந்து குபுக் என்று
ஒருவிம்மலும் மூக்குறிஞ்சலும் கேட்டது.
"அம்மா நீயாவது சொல்லேன்...''
"நான் என்னடாப்பா சொல்றது? என்னை எங்கயாவது ஆசரமத்தில சேர்த்துடு..''
சொல்லி முடிப்பதற்குள் குபுக் என்று இன்னொரு டம்ளர் கண்ணீர் பொங்கி
முந்தானைக்குப் போனது.
"இதெல்லாம் என்னங்க?'' என்றாள் அர்ச்சனா.
"யாராவது சொன்னாத்தானே பிரச்சினை என்னன்னு தெரியும்?''
"உலகமே புரியாதவங்களா இருக்காங்க. அதுதான் பிரச்சினை'' என்பதை
ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, ""நான் பாம்பேல வளர்ந்தவ. எனக்கு மாமியார்
முன்னாடி கால் மேல கால் போட்டு உட்கார கூடாதுனு தெரியாது. அதுக்கு என்ன
பிரச்சினை பண்ணாங்கன்னு உங்களுக்குத் தெரியும்தானே? அதுமாதிரிதான்
இதுவும். ஸில்லி'' என்றாள்.
"இன்னைக்கு என்ன நடந்தது?''
"ஏபிசிடி'ல "வி' எத்தனாவது எழுத்து?''
உண்மையிலேயே சண்டையின் ரிஷிமூலம் தெரிந்து கொள்வதில் ஒரு கணம் தீவிர
ஆர்வப்பட்டான் சண்முகம். சண்டை ஒரு சுவாரஸ்யமான புதிராக இருப்பதும்
இயல்பானதாக இருப்பதும் அவனை சோர்விலிருந்து விடுவித்தது. ஆனால் இத்தகைய
தருணத்தில் சீரியஸôக இருக்க வேண்டும் போல் முகத்தை வைத்துக் கொண்டான்.
அந்த ஆர்வத்தினால் மனதுக்குள்ளேயே கூட்டி "22-வது எழுத்து'' என்றான்.
ஏதோ அந்த இருபத்து ரெண்டோட இன்னொரு இருபத்து ரெண்டைக் கூட்டி இரண்டால்
வகுக்கவும் என்று சொல்வாள் என்று எதிர்பார்த்தான். அவளோ அந்த விடையை
விட்டுவிட்டு "உங்கம்மா "வி' தான் இங்கிலீஸ் எழுத்துல முதல்ல
வரணுங்கிறாங்க''
அம்மாவுக்கு அப்படியொரு மொழி ஆர்வம் இருக்க வாய்ப்பே இல்லை என்று
அவனுக்குத் தெரியும். அப்படி அம்மா ஆசைப்பட்டால் அதற்காக அர்ச்சனாவும்
மல்லுக்கு நின்று அதற்குத் தடையாகவும் இருக்க மாட்டாள் என்பதும்
சண்முகத்துக்குத் தெரியும்.
அம்மாவிடமும் நியாயம் கேட்கிற தொனியில் ""வி'தான் முதல்ல வரணும்னு
சொன்னியாமா?'' என்றான் நம்பிக்கையே இல்லாமல்.
"இல்லாததும் பொல்லாததும் சொல்றாப்பா.. நான் அதெல்லாம் சொல்லவே இல்ல''
"வைஜெயந்தினா ஆல்பபெட் பிரகாரம் கடைசியிலதான வரும். ஏன் முதல்ல வரலைனு
கேட்கிறாங்க''
"ஏன் அர்ச்சனா இதெல்லாமா பிரச்சினை? அவங்க ஏதோ தெரியாம சொல்றாங்க.''
"அதுக்குப் பொண்ணு பொறந்தப்பவே அனுசுயா, அன்பரசினு வெச்சிருக்கணும்.''
மாமியார் பக்கம் திரும்பி ""ஏன் வையெந்தினு வெச்சீங்க?'' என்றாள்.
வள்ளியம்மாவுக்குச் சுத்தமாகப் புரியவில்லை. காலையில் என்ன நடந்தது
என்பதைத்தான் சொல்கிறாளா வேறெதாவது புதிதாகக் கதைகட்டுகிறாளா என்று
குழம்பிப் போனார். "என் பொண்ணுக்கு என்ன பேர் வைக்கணும்னுலாம் நீயொன்னும்
சொல்ல வேண்டியதில்லை'' என்றார் வெடுக்கென்று.
பிரச்சினை வேறொன்றாக மாறுவதற்குள் சண்முகம் சுதாரிக்க வேண்டியிருந்தது.
அகரவரிசைப்படி ஒரு பெயர் எந்தெந்த இடத்தில் இடம் பெறுகிறது என்பதைப்
பற்றி அம்மாவிடம் விளக்கிக் கூற ஆரம்பித்து, பாதியில் ஏற்பட்ட
அயர்ச்சியால் "இனிமேல் இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் சண்டை போடாதே
அர்ச்சனா'' என்று முடித்துவிட்டான்.
"என்கிட்ட ஏன் சொல்றீங்க? உங்க அம்மாகிட்ட சொல்லுங்க... உலகத்தில என்ன
நடக்குதுனு தெரியாம பேசறாங்க. எனக்கு அது எரிச்சலா இருக்கு. அதுதான்
பிரச்சினை''
"அதுதான் பிரச்சினைனு தெரியுதில்ல? அப்புறம் அதை சமாளிக்கிறதில என்ன கஷ்டம்?''
"அவருக்கு முன்னாடியே போய் சேர்ந்திருக்கணும். வேண்டாம்பா என்னை யாரும்
சமாளிக்க வேணாம்... நான் என் பொண்ணு வீட்லயே போய் இருந்துகிறேன்''
"அம்மா.. உன்னை சமாளிக்கிறதைபத்திச் சொல்ல. பிரச்சினையை சமாளிக்கிறதபத்தி.''
"ரெண்டும் ஒண்ணுதாம்பா'' என்று தம் சிறிய துணி மூட்டையை கையில்
எடுத்துக் கொண்டார். அர்ச்சனாவுக்கு ஏன் எரிச்சல் வருகிறது என்று
சண்முகத்துக்கு நன்றாகப் புரிந்தது.
"காலைல பேசலாம் படும்மா''
இரண்டு பேரின் கண்களிலும் சண்முகம் யார் பக்கம் என்பதைத் தெரிந்து
கொள்கிற தவிப்பு இருந்தது. ஜெயிக்கப் போவது யாரு என்று உரசிப் பார்க்கிற
உத்தி. அதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் சண்டையை ஆரம்பிக்கிறார்களா
என்பதும் பல்லாயிரம் ஆண்டு கேள்வி.
இந்தப் பிரச்சினையை எந்த இடத்தில் இருந்து களைவது... மொட்டை மாடியில்
சிகரெட் கொளுத்தி நடந்தான். சென்ற தலைமுறையாக இருந்தால் "அடிச்
செருப்பாலே நாயே'' என்று இடுப்பில் நாலு உதை உதைத்து பொண்டாட்டியை ஒரு
மூலையில் உட்கார வைத்திருப்பார்கள். இப்போது மனைவியின் கன்னத்தில்
அறைந்தால் ஓராண்டு சிறை. அம்மாவின் கடைசி காலம் நிம்மதியாக இருக்க
வேண்டும் என்று மகன் எதிர்பார்ப்பது நியாயமும் கடமையாகவும் இருக்கிறது.
ஆனால் அம்மாவின் நிம்மதி எந்தக் கிளி வயிற்றுக்குள் ஒளிந்திருக்கிறதோ?
அர்ச்சனா மாடிக்கு வந்து, "நல்லா தூங்கறாங்க. குறட்டை வேற'' என்றாள்.
"எப்படியாவது பிரச்சினையில்லாம பார்த்துக்கக் கூடாதா?''
".....''
"உலகம் புரியணும்னு சொல்றியே... அது என்ன? பிகார்ல இருக்கிற ராம்நாத்
யாதவ்ங்கிறவனோட கொலை வழக்கப்பத்தி தெரிஞ்சுக்கிறதா? இல்ல கலிபோர்னியாவில
இருக்கிற ராபர்ட்டோட கள்ளக்கடத்தல் விவகாரத்தைப் பத்தித்
தெரிஞ்சுக்கிறதா? இதோ இந்த நேரத்தில உலகத்தில ஏதோ ஒரு மூலையில நடந்த
ரயில் விபத்தில இறந்து போன ஐந்து வயசு சிறுமிக்காக வருத்தப்பட்றதா?...
சொல்லு அர்ச்சனா? இது எதுவுமே நம்ம உலகத்தில இல்ல. நம் உலகத்தில சோமாலியா
பஞ்சம் இல்ல... ஜப்பான் பூகம்பம் இல்ல... உலகம்னு நாம
சொல்லிக்கிட்டிருக்கிற "நம்ம உலக'த்தில இப்ப 600 கோடி பேரா இருக்காங்க?
மிஞ்சிப்போனா சில பத்து பேர்கள்... அல்லது சில நூறு பேர்கள்.''
அர்ச்சனா கையை மேலே உயர்த்தி உடலை முறித்துச் நக்கலாகச் சிரித்தாள்.
"இதுக்குப் போயா இவ்வளவு தீவிர சிந்தனை... வந்து படுங்க. பொம்பளைங்க
அப்படித்தான். அதிலயும் மாமியார் மருமகன்னா இப்படி ஏதாவது
இருந்துகிட்டுத்தான் இருக்கும். இதில ஆம்பளைங்க யார் பக்கமும் நிற்காம
இருந்தாலே பாதி பிரச்சினை சரியாகிடும்.''
சிகரெட்டைப் பிடுங்கி தூர எறிந்தாள். "நாட்டின் அதிபர்கள், பிரதமர்கள்
பட வேண்டிய சிந்தனையெல்லாம் நமக்கு எதுக்கு? அதுவும் இந்தியாவில இருக்கிற
என்னைப் போன்ற பெண்ணுக்கு எதுக்கு?'' என்றபடி கீழே இறங்கினாள்.
நைட்டியில் மொட்டை மாடியின் நிலவொளியில் அவள் சொல்வது தேவவாக்கு போல இருந்தது.
அவள் சொல்வதை அப்பாவித்தனமாக நம்புகிறவனைப் போல பாவனை செய்து கொண்டு
அவளுக்குப் பின்னால் நடந்தான். தான் அழைக்காமலேயே அவன் தன் பின்னால்
வருவது அவளுக்குப் பூரிப்பாக இருந்தது.
கூடத்தில் அம்மா நிம்மதியாகத்தான் தூங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது
சண்முகத்துக்கு.

tamilmagan2000@gmail.com

வெள்ளி, ஆகஸ்ட் 01, 2008

பொறாமைப்பட வைக்கும் புத்தகம்

வியத்தலும் இலமே (அ.முத்துலிங்கம்)

தமிழ்மகன்



தமிழ் மொழிக்கு காலம் தோறும் புது ரத்தம் பாய்ச்சிக் கொண்டிருக்கும் அரிய பணியை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவர் செய்து வந்திருக்கிறார்கள். சங்கப் புலவர்கள், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்ற பக்தி இலக்கியகர்த்தாக்கள், பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், லா.ச.ரா., கருணாநிதி, ஜெயகாந்தன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் என பலரும் படைப்பிலக்கியங்கள் மூலம் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். ஒவ்வொருவர் படைப்புக்கும் பின்னணியில் ஏதோ நோக்கமும் கொள்கையும் இருந்தன. பக்தியை வளர்த்தார்கள், தேசியத்தை வளர்த்தார்கள், தமிழினத்தை வளர்த்தார்கள், மனித நேயத்தை வளர்த்தார்கள், கலையை வளர்த்தார்கள் போன்ற ஒன்றில் இவர்களில் பலர் பொருந்திவிடுகிறார்கள். ஏதோ ஒருவிதத்தில் தமிழைத் தக்க வைக்கிற வேலையைச் செய்தார்கள் என்பதும் பொருந்தும்.

ஓலைச் சுவடிகளையெல்லாம் திரட்டி தமிழருக்கு அறிமுகம் செய்த தமிழ்த் தாத்தா உ.வே.சா, பிறமொழி இலக்கியங்களைத் திரட்டித் தந்த க.நா.சு. போன்ற பலர் இந்த மொழியின் சுறுசுறுப்புக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

பல ஆங்கில எழுத்தாளர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர்கள் இருக்கிறார்கள். ஆங்கில எழுத்தாளர்கள் பலரை, அவர்களை நேர்காணல் செய்து அவர்கள் வார்த்தைகளாலேயே அவர்களை அறிமுகம் செய்யும் ஓர் அரிய பணியைச் செய்திருக்கிறார் அ.முத்துலிங்கம். காலச்சுவடு வெளியீடான "வியத்தலும் இலமே' அந்த விதத்தில் தமிழில் புது முயற்சி. இதுவரை இத்தனை விஸ்தாரமாகச் செய்யப்படாத சாதனை.

இவர் நேர்காணல் செய்திருக்கும் பலர், நம்மில் பலருக்கு அவர்களின் ஒரு சில படைப்புகள் மூலமாகவோ, அல்லது பெயரளவிலோதான் அறிமுகமாகியிருப்பார்கள். ஆனால் முத்துலிங்கமோ அவர்களையெல்லாம் நேரில் சந்தித்து அவர்களின் இலக்கியக் கொள்கைகள், சிறுகதைக் கோட்பாடுகள், அவர்களுடைய படிப்பு ரசனை, அவர்களின் எழுத்து பாணி என்று இங்கு எழுதும் இளம் படைப்பாளிகளின் விருப்பத்தை உணர்ந்து கேள்வி கேட்டு விளக்கம் பெற்று எழுதியிருக்கிறார். இவ்வளவு பேரையும் நேரிலேயே சந்தித்திருக்கிறாரே எனப் பொறாமையாக இருக்கிறது.


"எத்தனை தடவை வேண்டுமானாலும் திருத்தி எழுத தயங்க மாட்டேன். நீங்கள் பார்ப்பது செதுக்கப்பட்ட சிலையின் இறுதி வடிவம்தான்' என்கிறார் டேவிட் செடாரீஸ். இவர் துப்பரவு பணியாளராக வேலை செய்தவர். எதற்காக பிரபலமான பின்னும் வேலை . செய்தீர்கள் என்ற கேள்விக்கு நான் இரவில்தான் எழுதுகிறேன். பகலில் செய்வதற்கு எனக்கு ஒன்றுமில்லை. அதனால் வேலைக்குப் போனேன் என்கிறார். அகில் சர்மாவோ "வாழ்வது ஒரு முறைதான். இப்போது எழுதவில்லை என்றால் வேறு எப்போது எழுதுவது' என்று பல லட்ச ரூபாய் சம்பாத்தியம் செய்யும் வேலையை உதறிவிட்டு இந்த நான்கு ஆண்டுகளில் ஒரே ஒரு சிறுகதையை மட்டும் எழுதியவர்.

""ஒரு எழுத்து ஒருமுறை எழுதிவிட்டால் எழுதியதுதான் திருத்தி எழுதுகிற பேச்சுக்கே இடமில்லை'' என்கிறார் டெவிட் பெஸ்மாஸ்கிஸ்.

இளம் எழுத்தாளர் நஸீகு அலி முதல் 80 களில் இருக்கும் ஆலீஸ் மன்றோ வரை பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பேட்டிக்கான நேரம் கொடுத்துவிட்டோம் என்ற நியாயத்தில் மனைவியின் பிரசவ நேரத்தையும் பொறுத்துக் கொண்டு இயல்பாக பேசிய கிறிஸ் ஃபிலார்டி. வெறுப்பும் சலிப்புமாகப் பேசும் ஃப்ராங்க் மக்கோர்ட் எல்லோரையும் தேடித் தேடி பேட்டி கண்டிருக்கிறார்.

ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தையாகப் போற்றப்படுகிற சினுவ ஆச்சிபிக்கு பெரிய அளவில் விருது கெüரவங்கள் கிடைக்கவில்லை ஆனால் அவரைப் பார்த்து மலைத்து எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களுக்கு மகத்தான கெüரவங்கள் கிடைத்திருக்கின்றன. அதைப் பற்றி நஸீகு அலியிடம் கேட்கிறார். முப்பது பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியிருப்பதும் 28 வயதில் அவர் எழுதிய "திங்ஸ் ஃபால் அபார்ட்' என்ற முதல் நாவல் 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று பிரமிக்கிறார் நஸீகு. சினுவா அச்சுபி மீது அப்படியொரு மரியாதை. அவர் படிப்பதற்காக நஸீகு ஒரு சிறுகதையை அனுப்பியிருந்தாராம். படிக்க நேரமில்லை என்பதை விளக்கி ஒரு நீண்ட கடிதம் அனுப்பியிருந்தாராம். பொக்கிஷம் போல அந்தக் கடிதத்தைப் பாதுகாத்து வருகிறாராம். அப்படி மதிக்கிறார்.

அதே போல் ஒரு எழுத்தாளரை மதிப்பதில் சிகரம் தொட்ட இன்னொரு எழுத்தாளர் டேவிட் செடாரிஸ். இவர் போற்றுவது டோபையாஸ் வுல்ஃப் அவர்களை. "நான் இன்னும் தற்கொலை செய்து கொள்ளாமல் இருப்பதற்குக் காரணமே நான் இறந்த பிறகு டோபையாஸ் எழுதும் கதையை படிக்க முடியாமல் போய்விடுமே என்பதால்தான்' என்கிறார் செடாரிஸ்.

ஆலிஸ்மன்றோவின் சிறுகதைகள் 40லிருந்து 70 பக்கங்கள் இருக்கும். இங்கே சிலர் அதை நாவல் என்றோ குறுநாவல் என்றோ சொல்கிறார்கள். (பிப்.11 - 2008 நியூ யார்க்கர் இணைய இதழிலும் அவருடைய "ஃப்ரீ ராடிகல்' என்ற சிறுகதை இடம் பெற்றிருக்கிறது.)

சிறுகதையின் வடிவம் குறித்த அவர்களின் பார்வை, தரிசனம் அனைத்தும் நம்முடைய கொள்கைகளுக்கும் விருப்பங்களுக்கும்கூட பொருந்தி வருவது ரசிக்கும்படியாக இருக்கிறது. அது மனித வாழ்வின் பரந்துவிரிந்த பொதுத் தன்மையையும் அடையாளப்படுத்துவதாக இருக்கிறது.

கலிபோர்னியாவின் பேர்க்லி பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருக்கும் ஜார்ஜ் எல் ஹார்ட் (hart) சொல்லும் தமிழ் சாதிய நடைமுறைகள் ஆச்சர்யமான புதிய சந்தேகங்களை விதைக்கின்றன. ஆர்யர்களின் வருகைக்குப் பின்னர்தான் சாதி முறை ஏற்பட்டதென்றால் அது அவர்களின் சமூகத்தில் இல்லையே என்கிறார். அவர்களின் வருகைக்கு முன்பே இந்திய சமூகத்தில் சாதி முறை இருந்தது என்பதும் ஆரியர்களின் வருகைக்குப் பிறகு அந்த வர்ண பேதங்கள் வளர்ந்தற்குக் காரணம் அந்த வாழ்வுமுறை ஏற்கெனவே இருந்ததன் காரணத்தால்தான் என்பது அவருடைய கூற்று. ரஷ்யன், லத்தீன், ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம், ஜெர்மன், பிரெஞ்சு, கிரேக்கம் என பூமிப் பந்தின் பிரபல மொழிகள் பலவற்றை அறிந்தவராக இருக்கிறார் ஜார்ஜ் எல் ஹார்ட். அவருடைய கருத்துகளை நாம் அவ்வளவு எளிதில் புறக்கணிக்க முடியாததாகவும் உள்ளது. வேதங்களிலும் அர்த்த சாஸ்திரத்திலும் வர்ண பேதங்களுக்கான இலக்கணங்களும் சாதி ரீதியாக மனிதர்களை இழிவுபடுத்தியிருப்பதும் தெளிவாகிற அளவுக்கு பண்டைய தமிழ்நூல்களில் குறிப்படப்படவில்லை. தமிழ் சமூதாயத்தில் இப்படியொரு வாழ்வியல் முறை இருந்திருப்பின் அவை தமிழ்நூல்களில் வலியுறுத்தப்படாமல் ஆரிய நூல்களில் வலியுறுத்தப்பட்டிருப்பது ஏன் என்பதும் கேள்வி.

களவு ஒழுக்கம் குறித்து அகப் பாடல்களில் வருகிறது. ஆனால் கர்ப்பமான பெண்கள் சம்பந்தமாகவோ, கர்ப்பிணி பெண்ணின் பாடலாகவோ எதுவும் இடம்பெறவில்லையே என்ற முத்துலிங்கத்தின் கேள்வியே புதிய கோணத்தைத் தருகிறது. அதற்கு ஹார்ட் தரும் பதில் இது: "சங்க காலத்தில் இன்று போல அன்றும் பழமையான சம்பிரதாயங்களையே கடைப்பிடித்தனர். ... கவிகள் சமூகம் ஏற்காத ஒன்றையே வர்ணித்தனர், இப்போதைய தமிழ் சினிமா போல.'

அவருடைய பல்கலை கழகத்தில் தமிழ்த்துறை உருவாவதற்கு பாடுபட்டவர் ஹார்ட். 9 ஆண்டுகாலமாக அதன் தலைவராகவும் இருந்துவருகிறார்.

இதில் இரண்டொரு "ஒரு பால்' எழுத்தாளர்களைச் சந்தித்து செவ்வி கண்டிருக்கிறார் முத்துலிங்கம். அதில் ஒருவர் ஷ்யாம் செல்வதுரை. "சினமன் கார்டன்' என்ற அவருடைய பரபரப்பான நாவலில் ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பித்திலும் பொருத்தமான திருக்குறளைக் கையாண்டிருக்கிறார். அவருக்குத் தமிழில் ஒருவார்த்தையும் தெரியாது என்பது வெளிநாட்டில் குடியேறிய தமிழர்களுக்கேயான வேதனை. காம இலக்கியம் படைக்கும் இலங்கையைப் பூர்வீகமாகமாகக் கொண்ட மேரி ஆன் மோகன்ராஜ் என்பரை பேட்டி கண்டிருக்கிறார். அவருக்கும் தமிழ் மறந்தே போய்விட்டது.

மார்க்ரெட் அட்வூட், பிரிஸ்கி, எலெய்ன் பெய்லின், டேவிட் ஓவன், வார்ரென் கரியோ போன்ற பலரது பேட்டிகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. மிகவும் எளிமையான கேள்விகள் மூலம் ஆச்சர்யமான விஷயங்களைக் கொண்டுவருவது முத்துலிங்கத்தின் பாணியாக இருக்கிறது. உங்கள் சிறுவயது ஞாபகங்கள் என்ன? இப்போது என்ன எழுதுகிறீர்கள்? போன்ற கேள்வியைக் கேட்கிறார். அதே போல் நம் புதுமைப்பித்தன், பாரதி, நம்முடைய பழமொழி போன்றவற்றை அவர்களிடம் நினைவூட்டுகிறார். பெருமையாக இருக்கிறது.

இந்தப் பேட்டிகளில் (சற்றே) விலகி நிற்பது மாரத்தான் ஓட்டப் பந்தய வீராங்கனை ஜெனிவீவ் கெல்லியின் பேட்டி. அந்தப் பெண்ணே ஒரு ஓடும் இலக்கியமாக இவருக்குத் தெரிந்திருக்கலாம். இந்த ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறாள். முத்துலிங்கத்தின் வீட்டுக்கு விருந்தினராக வந்து தங்குகிறார். அவளுடைய ஆங்கில உச்சரிப்பு தேனில் கலந்ததுபோல மிருதுவாக இருந்தது என்று வர்ணிக்கிறார் முத்துலிங்கம். கனடாவை இரண்டுநாளில் சுற்றிப் பார்த்துவிட வேண்டும் என்பது அவருடைய திட்டம். உலகின் மூன்று மகா சமுத்திரத்தால் சூழப்பட்ட கனடாவை மூன்றுநாளில் சுற்றிப் பார்க்க நினைப்பது அவளுடைய அறியாமையா, பேராசையா என்று இவருக்கு விளங்கவில்லை என்று எழுதியிருக்கிறார்.

நம்மிடம் இருப்பது ஒரே ஒரு உடம்புதான். அதை பத்திரமாக பேண வேண்டும். 26 மைல் ஓட வேண்டுமானால் 30 மைலோ, 35 மைலோ ஓட வேண்டும் அப்போதுதான் மாரத்தானில் ஓடுவதற்குச் சுலமாக இருக்கும் என்பது ஜெனிவீவ் கருத்து.

வியப்பூட்டும் பெண். நிச்சயம் இந்த ஆண்டு மாரத்தானில் வெல்லப் போவது அவள்தான்.. அல்லது வெல்ல வேண்டியவள் அவள்தான்.

விடைபெறும்போது ஏர்போர்ட்டில் முத்துலிங்கத்துக்கு அவள் ஒரு முத்தம் கொடுத்துவிட்டுச் சென்றாள். ஏதோ முத்தம் கொடுப்பதற்கு நாளைமுதல் தடைவிதித்துவிட்டதுபோல் அந்த முத்தம் மிக நீண்டதாக இருந்தது என்கிறார் அ.மு. இப்படி பலவிதங்களில் நம்மை பொறாமைப்படுத்துகிறார். ஆரம்பத்தில் ஆங்கில பாணியில் சிந்திக்கும் ஒரு தமிழர் என அவரை நினைத்தேன். பிறகு அதை மாற்றிக் கொண்டேன்.

அவருக்கு முதன்முதலாக எழுதிய கடிதத்தில் "நீங்கள் பழந்தமிழ் ஆர்வம் கொண்ட ஓர் ஆங்கிலேயரைப் போல சிந்திக்கிறீர்கள்' என்று எழுதியிருந்தேன்.

"எதற்காக அப்படிச் சொல்கிறீர்கள், எனக்கு சிரிப்புதான் வருகிறது' என்று பதில் அனுப்பியிருந்தார்.

அவருடைய வெட்கமும் பொறாமையாகத்தான் இருக்கிறது.


வியத்தலும் இலமே

அ.முத்துலிங்கம்

காலச்சுவடு வெளியீடு.

வார்த்தைகளால் அல்ல; வாழ்க்கையால்!

நூல்விமர்சனம்: சாமிநாத சர்மாவின் காரல் மார்க்ஸ்



தமிழ்மகன்

மறைந்தபோன ஒரு மேதையின் வாழ்க்கை வரலாறை எழுதும்போது உணர்ச்சுவசப்பட்டு மிகைப்படுத்திவிடாமல் எழுத வேண்டிய கட்டாயம் உண்டு. அதே நேரத்தில் அந்த மேதையை இன்னொருமுறை சாகடிக்கும் விபரீதமும் நடந்துவிடக்கூடாது. செய்ய வேண்டியதெல்லாம் உண்மையை எழுத வேண்டும், அது எளிமையாக இருக்க வேண்டும், சுருக்கமாக இருக்க வேண்டும்.

காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு குறித்து தமிழில் நான்கு நூல்களைப் படித்திருக்கிறேன். மார்க்ஸ் பிறந்தார், காரல் மார்க்ஸ் சுருக்கமான வரலாறு} இவை இரண்டும் சோவியத் நாட்டின் வெளியீடுகள். இது தவிர பிரேமா பிரசுரம் வெளியிட்ட சிந்தனையாளர் வரிசை நூலில் இவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றும் வெளியானது. இவையாவற்றிலும் அவருடைய வாழ்க்கையையும் தத்துவங்களையும் சற்றே எளிமையான நடையில் விளக்க முற்பட்டிருப்பதன் மூலம் வெ. சாமிநாத சர்மாவின் "காரல் மார்க்ஸ்' முதலிடத்தைப் பிடித்துவிடுகிறது.

நூல் எழுதப்பட்டதற்கான நோக்கம், அவருடைய வாழ்க்கையையும் அவர் பெற்ற தத்துவார்த்த வளர்ச்சியையும் சொல்வது என்பதில் தெளிவாக இருப்பது இந் நூலின் தனிச் சிறப்பு. மார்க்úஸ அவரைப் பற்றிச் சொல்லியிருப்பது போல் இரண்டு மனிதரின் வாழ்க்கையை வாழ்ந்த அவரை இத்தனைச் சுருக்கமாக விவரிக்க முடிந்திருப்பது மிகப் பெரிய சாதனையாக இருக்கிறது. மார்க்ûஸயும் அவருடைய தத்துவங்களையும் பற்றி பல நூல்களைப் படித்து அதில் இருந்து சாறு பிழிந்த நூலாக இது இருக்கிறது. ஒரு தனி நூலை மொழி பெயர்த்த நூல் இல்லை இது என்பதாலேயே இந்தச் சுருக்கம் சாத்தியமாகியிருக்கிறது.

மார்க்ûஸப் பற்றி அவருடைய பெற்றோர்களின் கனவு எப்படி இருந்தது, மார்க்ஸ் எப்படி மாறுகிறார், ஏன் மாறுகிறார், எதற்காக நாடு கடத்தப்படுகிறார் என்பதைப் படிப்படியாகச் சொல்கிறார் சாமிநாத சர்மா. ஜென்னிக்கும் மார்க்ஸýக்குமான அன்பு எத்தகையது , அவர்களின் காதல் வாழ்க்கை எவ்வளவு பிரிவு நிறைந்ததாக இருந்தது, திருமண வாழ்க்கை எவ்வளவு துயரங்களுக்கிடையே பாசத்தைத் தக்க வைத்துக் கொண்டிருந்தது என விவரிக்கிறார். அடுத்து மார்க்ஸýக்கும் ஏங்கெல்ஸýக்குமான நட்பு. இவை நூலின் பிரதான அத்தியாங்கள். இவற்றைப் படிக்க... இப்படியான ஒரு வாழ்க்கையை உணர யாரும் கம்யூனிஸ்டாகவோ அல்லது அதைப் பற்றி முன்னே பின்னே தெரிந்தவராகவோகூட இருக்க வேண்டியதில்லை. படிக்கத் தெரிந்த எந்த மனிதரும் மனதைப் பறிகொடுத்துப் படிக்க இயலும். ஒரு அசல் மனிதனின் சரித்திரம் என்ற அளவிலேயே அது ஒரு சாகா இலக்கியத்தின் அத்தனை பெருமைகளுடனும் இருக்கிறது.

மார்க்ஸின் சமரசமற்ற போக்கு அவருக்கு ஏற்படுத்தும் பல்வேறு இடர்பாடுகள் அவருடைய வாழ்க்கையின் பிரதானமான பின்னணியாக அமைந்துவிடுகிறது. உற்ற தோழராக இருக்கும் ஏங்கெல்ஸிடமேகூட ஆரம்பத்தில் "புரிதல்' பிணக்குகள் ஏற்படுகின்றன. மார்க்ஸின் மேதமைதான் அந்தப் பிணக்குகள் நீங்குவதற்கும் காரணமாகிறது. ஜென்னியிடமோ அந்த மாதிரி "அபுரிதலு'ம் இல்லை. இரவோடு இரவாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று பிரெஸ்ஸல்ஸிலிருந்து துரத்தும் போதும் விபச்சாரிகளோடு அடைத்துவைத்து துன்புறுத்தும்போதும் மூன்று குழந்தைகள் பசியாலும் நோயாலும் இறக்கும்போதும் குழந்தையின் காலணிகளை அடகு வைத்து சாப்பிட நேரும்போதும் அவர் மார்க்ஸின் நிலைப்பாடுகளில் அதிருப்தி அடைந்தவராகத் தெரியவில்லை. இந்த ஒவ்வொரு நிகழ்வின் போதும் அவர் யாருக்காவது எழுதிய கடிதங்களில் இந்தச் சோகங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். கூடவே மார்க்ûஸ இந்த உலகம் இன்னும் புரிந்து கொள்ளவில்லையே என்ற வருத்தமும் அந்தக் கடிதத்தில் இடம் பெற்றிருப்பதன் மூலம் அந்த பெருமை மிகு பெண்மணிமீது மார்க்ஸýக்கு நிகரான மரியாதை கூடுகிறது.

ஏங்கெல்ஸின் மனைவி இறந்த செய்தி கேட்டு மார்க்ஸ் ஒரு இரங்கல் கடிதம் எழுதுகிறார். இரங்கல் என்பது பெயருக்குத்தான். அதில் தான்படும் அவஸ்தைகளும் பொருளாதார நெருக்கடிகளையும் அதிகமாக எழுதிவிடுகிறார். ஏங்கெல்ஸýக்கு இது பெரிய வருத்தமாகிவிடுகிறது. நண்பன் தன் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்ளாமல் இப்படி ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறானே என்று. ஆனால் ஏங்கெல்ஸின் மனைவி இறந்துவிட்டதைவிடவும் மார்க்ஸ் லண்டனில் குழந்தைகளோடு பட்டினியோடு போராடிக் கொண்டிருந்தது பெருந்துயரமானது என்பது தெரிய வருகிறது. மார்க்ஸ் மன்னிப்பு கேட்கிறார். ஏங்கெல்ஸýம் தான் வருத்தப்பட்டதைத் தவறு என்று உணர்கிறார். உணர்ச்சிகரமான நட்பை உணர முடிகிறது.

புத்தகத்தில் ஒரு இடம் வருகிறது. ஹெகல் சாகும் தறுவாயில் தன் சிஷ்யர்களிடம்: ""என்னை யாருமே புரிந்து கொள்ளவில்லை. மிஷெலே ஒருவன்தான் அறிந்து கொண்டான். ஆனால் அவனும் என்னைத் தவறாக அறிந்து கொண்டிருக்கிறான்''

"ஒரு தத்துவாதிக்கு இதைவிட வேறென்ன சோகம் இருக்கமுடியும்? ஆனால் மார்க்ஸýக்கு அப்படியொரு வருத்தம் இருக்க வாய்ப்பில்லை எனென்றால் அவனுக்கு ஏங்கெல்ஸ் இருந்தான்' என்று எழுதுகிறார் நூலாசிரியர். அந்த இடத்தில் ஜென்னியை சேர்த்துக் கொள்ளலாம்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, மூலதனம் ஆகிய நூல்கள் பற்றிய விளக்கங்கள் மிகவும் எளிமையாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. இது சற்று மார்க்ஸ் பற்றி தெரிந்தவர்களுக்கான பகுதிதான்.

முக்கியமாக ஹெகலிடமிருந்து மார்க்ஸ் எந்தவிதத்தில் வேறுபடுகிறார் என்ற மகத்தான விஷயத்தைச் சொல்லி "ஹெகலை தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறார் மார்க்ஸ்' என்கிறார். அதாவது கருத்து முதல் வாதம் பொருள்முதல்வாதம் என்று அடிக்கடி பிரயோகிக்கும் கம்யூனிஸ சித்தாந்தத்தை கீழ்கண்டவாறு ஒரு உதாரணம் கொடுத்து விளக்கியிருக்கிறார்.

""செடி, கொடிகள் எப்படி வளர்கின்றன என்பதைப் பற்றி நம் மனத்தில் சில கருத்துகள் படிகன்றன. இந்தக் கருத்துகளின் தொகுப்பைத் தாவர சாஸ்திரம் என்று பெயரிட்டு அழைக்கிறோம். சரி; இந்தத் தாவர சாஸ்திரம் முந்தையதா, செடி கொடிகள் முந்தையவையா? தாவர சாஸ்திரம் படித்துவிட்டு செடி கொடிகளை வளர்க்கிறோமா அல்லது செடி கொடிகளைப் பயிரிட்டு வளர்த்துக் கொண்டு பிறகு அதைப் பற்றிய சாஸ்திரத்தை எழுதுகிறோமா? அதாவது பொருள் முந்தையதா அல்லது அந்தப் பொருளைப் பற்றிய கருத்து முந்தையதா?''

ஹெகல் பொருள் தோன்றுவதற்கு முன்பிருந்தே கருத்து இருக்கிறது என்கிறார். மார்க்ஸ் பொருள் தோன்றிய பின்புதான் கருத்து தோன்றியது என்கிறார்.

நூலின் கடைசி சில அத்தியாயங்கள் மார்க்ஸிய இலக்கிய கோட்பாடுகள், மார்க்ஸியத்தின் தவறான புரிதல்கள் போன்றவற்றையும்கூட எடுத்துச் சொல்கின்றன. ""மார்க்úஸô, ஏங்கெல்úஸô குறிப்பிட்ட ஒரு சமுதாய அமைப்பானது, அந்தச் சமுதாயத்தின் பொருளாதார அம்சம் ஒன்றையே கொண்டு இயங்குகிறது என்று சொல்லவில்லை'' என்கிறார் உறுதியாக.

உற்பத்தி உறவு முறை எப்படி மானுட சமுதாயத்தின் எல்லா தர்ம நியாயத்துக்கும் ஒழுக்கத்துக்குமான அடிப்படையாக இருக்கிறது என்பது போன்ற மார்க்ஸியத்தின் அடிப்படைகள் அவருடைய வரலாறினூடே விளக்கப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது.
மார்க்ஸின் தத்துவங்களாவன, பொன்மொழிகளாவன என பிரித்துக் கூறாமல் அவருடைய வாழ்வின் பயணமாகச் சொல்லியிருக்கிறார் சர்மா.

மார்க்ஸ் கல்லூரியில் சேர்ந்தான். அங்கிருந்து பாரிஸýக்குப் போனான். மூலதனத்தை எழுதினான் என்று "ன்' விகுதியில் சொல்லியிருப்பது நெருடலாக இருக்கிறது. "ர்' என்றே போட்டிருக்கலாம். மார்க்ஸினுடைய அப்பாவாக இருந்தாலும் ஜென்னியாக இருந்தாலும் ஏங்கெல்ஸôக இருந்தாலும் இந்தநிலைமைதான் (அவன், அவள்). இப்படி எழுதியிருப்பதால் குறிப்பாக ஒரு நன்மையும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஜென்னி இறந்ததும் மூரும் (மூர் மார்க்ஸýக்கு செல்லப் பெயர்) இறந்துவிட்டார். அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகள் அவர் உயிருடன் இருந்தார்; ஆனால் வாழ்ந்தார் என்று சொல்ல இயலவில்லை. ஜென்னி மீது அவர் அவ்வளவு காதலாக இருந்தார் என்பது அவருடைய வார்த்தையால் அன்றி, வாழ்க்கையாலேதான் உணர்த்தப்பட்டிருக்கிறது, பிற சமூக உணர்வுகளைப் போலவே. அதாவது அவர் எதை விரும்பினாரோ அதைப் படித்தார். அவருடைய கால சூழலில் ஒரு தத்துவ ஞானி எப்படி இருக்க முடியுமோ அப்படி வாழ்ந்தார். காரல் மார்க்ஸ் ஒரு மூர்க்கராக இருந்திருக்கிறார். அவருடைய காதல் விஷயத்திலும்கூட அவரிடம் ஒரு பித்து இருந்ததற்கான தடயம் குறைவாகவே இருக்கிறது. அவர் முன்கோபியாகவோ, எப்போதும்கோபியாகவோ இருந்திருக்கக் கூடும் என்று தெரிகிறது. ஆனால் அவருடைய கோபம் எல்லாம் அளவுக்கு அதிகமான அன்பில் இருந்து உதித்தவையாக இருக்கிறது என்று நூலாசிரியர் கூறியிருப்பது நூறு சதவீதம் நிஜமென்று யூகிக்க முடிகிறது.

LinkWithin

Blog Widget by LinkWithin