தமிழ்மகன்
மாமியார் மருமகள் சண்டை வருவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இந்த உலகில்
உண்டு. ஆனால் வைஜெயந்தி என்ற பெயரால் ஒரு பிரளயம் ஏற்பட வாய்ப்புண்டா?
சண்முகம் வீட்டில் ஏற்பட்டது.
சண்முகத்தின் தங்கை பெயர் வைஜெயந்தி. டெலிபோன் இன்டெக்ஸ் புத்தகத்தில்
அவள் பெயரை "வி' என்ற ஆங்கில எழுத்துக் குறிக்கும் இடத்தில் குறித்து
வைப்பது நியாயந்தானே? நாத்தனாரின் பெயரை அங்குதான் எழுதி வைத்திருந்தாள்
அர்ச்சனா. சண்முகத்தின் அம்மாவுக்கு அந்த தர்க்க நியாயங்கள் புரியவில்லை.
"ஏண்டி அம்மா உன் அண்ணன் பெயரையெல்லாம் முதல் பக்கத்தில எழுதிட்டு என்
பொண்ணு பேரை கடைசி பக்கத்தில எழுதியிருக்கே'' என்று ஆரம்பித்தார்.
அர்ச்சனாவுக்குகூட இந்தக் கேள்வி கேட்கப்பட்ட ஆரம்ப நிமிடத்தில், ஏதோ
தவறாக அப்படி எழுதிவிட்டோமோ என்ற அச்சம்தான் முதலில் ஏற்பட்டது.
வள்ளியம்மாவின் குரல் தீட்சண்யம் அப்படி. கொஞ்ச நேரம் கழித்துத்தான்
அண்ணனின் பெயர் "அன்பு' என்பதே உறைத்தது.
அர்ச்சனாவுக்கு கோபமும் சிரிப்பும் சேர்ந்து வந்தது. இந்த இரண்டின் கலவை
ஒருவித அலட்சியப் போக்கை அவளிடம் ஏற்படுத்தியது. பதில் சொல்ல விருப்பமே
இல்லாமல் முந்தானையை மட்டும் ஒரு உதறு உதறி இடுப்பில் சொருகிக் கொண்டு
இரண்டு மாதங்களுக்கு முந்தைய வார இதழை எடுத்து வைத்து வாசிக்க
ஆரம்பித்தாள்.
இதன் பிறகு என்ன நடந்திருக்கும் என்று விவரிக்க வேண்டியதில்லை. இந்திரா
காந்தி} மேனகா காந்தி ஜோடியிலிருந்து இசக்கியம்மா- காந்திமதி ஜோடி
வரைக்கும் இது சற்றேறக் குறைய மனஸ்தாபமாகவோ, வார்த்தை வெடிப்புகளாகவோ
ரசாயன மாற்றமடையும். இங்கே வார்த்தை வெடிப்பு.
இந்தச் சச்சரவுகளுக்குச் சற்றும் சம்பந்தமே இல்லாத } அந்த நேரத்தில்
அவனுடைய மேலாளரிடம் ஏதோ அவசர ஆவணத்தைக் கண்டெடுத்துக் கொடுக்க முடியாத
பரிதவிப்பில் ஏச்சும் பேச்சும் வாங்கிக் கொண்டிருந்த சண்முகம், இவர்களின்
பேச்சில் சிக்கி மேலும் வதைபட்டுக் கொண்டிருந்தான்.
ஒன்றுமில்லை "வரட்டும் அவன்'' என்று வள்ளியம்மா பெருமூச்சோடு
ஆவேசப்பட்டார். அவருடைய முந்தானையை அவரும் உதறினார், சொருகினார்.
"வந்தா என்ன பண்ணிடுவாராம்?''
"வாலை ஒட்ட வெட்டச் சொல்றேன்.. இரு... இரு.''
"எங்க குடும்பத்தில யாருக்கும் வாலெல்லாம் இல்ல.. எத்தனையோ லட்சம்
வருஷமா நாங்க வால் இல்லாமத்தான் இருக்கோம். உங்க குடும்பத்தைப் பத்தி
எனக்குத் தெரியாது'' என்று பரிணாம இலக்கணப்படி அர்ச்சனா ஏதோ சொன்னாள்.
பதிலுக்குத் திட்டுகிறாள் என்று உத்தேசமாகப் புரிந்து கொண்டு
வள்ளியம்மாவும் "லட்சம் வருஷமா வாலில்லாதவளோட லட்சணம் தெரியாது? நாங்க
கோடி வருஷமா வாலில்லாமத்தான் இருக்கோம்'' என பதிலடி கொடுத்தாள்.
கோடி ஆண்டுகளுக்கு முன்னால் குரங்குகளே கிடையாது என்பது தெரிந்ததால்
அர்ச்சனாவால் மேற்கொண்டு தம் மாமியாரிடம் பேசி ஜெயிக்க முடியாது என்ற
முடிவுக்கு வந்தாள்.
அவளுக்கு பழைய வார இதழே பரவாயில்லை என்று படிக்க ஆரம்பித்தாள்.
தட்டில் மத்தியானம் சாப்பாட்டைப் போட்டு வைத்த போதும் வள்ளியம்மா
சாப்பிடவல்லை. அர்ச்சனா அதைப்பற்றிக் கவலைப்படாமல் சாப்பிட்டுவிட்டுப்
படுத்தாள். வள்ளியம்மா மகன் வருகிற வரைக்கும் சாப்பிடாமல் இருக்க
வேண்டும் என்ற வைராக்கியத்தோடு ஈ மொய்க்கும் தட்டுக்குப் பக்கத்திலேயே
சுருண்டு படுத்துக் கொண்டாள்.
அன்று பார்த்து சண்முகம் மிகவும் தாமதமாகத்தான் வீட்டுக்கு வந்தான்.
அம்மா இப்படி தன் கோபம் பொருட்டு சுருண்டு படுத்திருக்காங்களா? எப்போதும்
போல் ஏழு மணிக்கெல்லாம் தூங்கிவிட்டாங்களா என்று சந்தேகிக்க அவனுக்கு
அவகாசம் இல்லை. விட்டால் நின்று கொண்டே தூங்கிவிடும் அளவுக்கு சோர்வு.
சண்முகத்துக்கு சாப்பாடு போட்டபடி, "கோடி வருஷமா எங்க குடும்பத்தில
வாலில்லாம இருக்கோம்கிறாங்களே எனக்குத் தெரிஞ்சு வாலில்லாத டைனோஸôர்
கேள்விபட்டதே இல்ல'' என பேச்சைத் தொடங்கினாள் அர்ச்சனா. இப்படி மொட்டை
ராஜா குட்டையில் விழுந்தான் கதையாக ஆரம்பிப்பது அர்ச்சனாவின் வழக்கம்.
அதிலும் மாமியாரைப் பற்றி இப்படி ஜாடையாக ஆரம்பிக்கும் ஒரு
வழக்கம்மட்டும்தான் உண்டு.
சண்முகம் திடுக்கிட்டு சுருண்டு கிடந்த அம்மாவையும் அவருக்குப்
பக்கத்தில் உலர்ந்து ஈ மொய்த்துக் கிடந்த சாப்பாட்டுத் தட்டையும்
பார்த்தான்.
"என்னது டைனோஸôர்?''
"உங்கம்மாதான் சொன்னாங்க. உங்க குடும்பத்தில கோடி வருஷமா வால்
கிடையாதுன்னு. ஏதாவது அர்த்தமிருக்கா பாருங்க.. இப்படித்தான் பேசறாங்க''
"புரியற மாதிரிதான் சொல்லேன்?''
"நீங்க வந்ததும் என் வாலை ஒட்ட நறுக்கறேன்னு சொன்னாங்க. மனுஷனுக்கு ஏது
வாலு? மனுஷனுக்கு குறைஞ்சது லட்சம் வருஷமா வால் கிடையாது... அதாவது
வாலில்லாம போனதாலதான் அவன் மனுஷன்...''
"இன்னும்கூட எனக்குப் புரியல. என்ன பிரச்சினை?''
""எனக்குந்தான் புரியல''
சண்முகத்தின் அம்மா படுத்திருந்த இடத்தில் இருந்து குபுக் என்று
ஒருவிம்மலும் மூக்குறிஞ்சலும் கேட்டது.
"அம்மா நீயாவது சொல்லேன்...''
"நான் என்னடாப்பா சொல்றது? என்னை எங்கயாவது ஆசரமத்தில சேர்த்துடு..''
சொல்லி முடிப்பதற்குள் குபுக் என்று இன்னொரு டம்ளர் கண்ணீர் பொங்கி
முந்தானைக்குப் போனது.
"இதெல்லாம் என்னங்க?'' என்றாள் அர்ச்சனா.
"யாராவது சொன்னாத்தானே பிரச்சினை என்னன்னு தெரியும்?''
"உலகமே புரியாதவங்களா இருக்காங்க. அதுதான் பிரச்சினை'' என்பதை
ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, ""நான் பாம்பேல வளர்ந்தவ. எனக்கு மாமியார்
முன்னாடி கால் மேல கால் போட்டு உட்கார கூடாதுனு தெரியாது. அதுக்கு என்ன
பிரச்சினை பண்ணாங்கன்னு உங்களுக்குத் தெரியும்தானே? அதுமாதிரிதான்
இதுவும். ஸில்லி'' என்றாள்.
"இன்னைக்கு என்ன நடந்தது?''
"ஏபிசிடி'ல "வி' எத்தனாவது எழுத்து?''
உண்மையிலேயே சண்டையின் ரிஷிமூலம் தெரிந்து கொள்வதில் ஒரு கணம் தீவிர
ஆர்வப்பட்டான் சண்முகம். சண்டை ஒரு சுவாரஸ்யமான புதிராக இருப்பதும்
இயல்பானதாக இருப்பதும் அவனை சோர்விலிருந்து விடுவித்தது. ஆனால் இத்தகைய
தருணத்தில் சீரியஸôக இருக்க வேண்டும் போல் முகத்தை வைத்துக் கொண்டான்.
அந்த ஆர்வத்தினால் மனதுக்குள்ளேயே கூட்டி "22-வது எழுத்து'' என்றான்.
ஏதோ அந்த இருபத்து ரெண்டோட இன்னொரு இருபத்து ரெண்டைக் கூட்டி இரண்டால்
வகுக்கவும் என்று சொல்வாள் என்று எதிர்பார்த்தான். அவளோ அந்த விடையை
விட்டுவிட்டு "உங்கம்மா "வி' தான் இங்கிலீஸ் எழுத்துல முதல்ல
வரணுங்கிறாங்க''
அம்மாவுக்கு அப்படியொரு மொழி ஆர்வம் இருக்க வாய்ப்பே இல்லை என்று
அவனுக்குத் தெரியும். அப்படி அம்மா ஆசைப்பட்டால் அதற்காக அர்ச்சனாவும்
மல்லுக்கு நின்று அதற்குத் தடையாகவும் இருக்க மாட்டாள் என்பதும்
சண்முகத்துக்குத் தெரியும்.
அம்மாவிடமும் நியாயம் கேட்கிற தொனியில் ""வி'தான் முதல்ல வரணும்னு
சொன்னியாமா?'' என்றான் நம்பிக்கையே இல்லாமல்.
"இல்லாததும் பொல்லாததும் சொல்றாப்பா.. நான் அதெல்லாம் சொல்லவே இல்ல''
"வைஜெயந்தினா ஆல்பபெட் பிரகாரம் கடைசியிலதான வரும். ஏன் முதல்ல வரலைனு
கேட்கிறாங்க''
"ஏன் அர்ச்சனா இதெல்லாமா பிரச்சினை? அவங்க ஏதோ தெரியாம சொல்றாங்க.''
"அதுக்குப் பொண்ணு பொறந்தப்பவே அனுசுயா, அன்பரசினு வெச்சிருக்கணும்.''
மாமியார் பக்கம் திரும்பி ""ஏன் வையெந்தினு வெச்சீங்க?'' என்றாள்.
வள்ளியம்மாவுக்குச் சுத்தமாகப் புரியவில்லை. காலையில் என்ன நடந்தது
என்பதைத்தான் சொல்கிறாளா வேறெதாவது புதிதாகக் கதைகட்டுகிறாளா என்று
குழம்பிப் போனார். "என் பொண்ணுக்கு என்ன பேர் வைக்கணும்னுலாம் நீயொன்னும்
சொல்ல வேண்டியதில்லை'' என்றார் வெடுக்கென்று.
பிரச்சினை வேறொன்றாக மாறுவதற்குள் சண்முகம் சுதாரிக்க வேண்டியிருந்தது.
அகரவரிசைப்படி ஒரு பெயர் எந்தெந்த இடத்தில் இடம் பெறுகிறது என்பதைப்
பற்றி அம்மாவிடம் விளக்கிக் கூற ஆரம்பித்து, பாதியில் ஏற்பட்ட
அயர்ச்சியால் "இனிமேல் இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் சண்டை போடாதே
அர்ச்சனா'' என்று முடித்துவிட்டான்.
"என்கிட்ட ஏன் சொல்றீங்க? உங்க அம்மாகிட்ட சொல்லுங்க... உலகத்தில என்ன
நடக்குதுனு தெரியாம பேசறாங்க. எனக்கு அது எரிச்சலா இருக்கு. அதுதான்
பிரச்சினை''
"அதுதான் பிரச்சினைனு தெரியுதில்ல? அப்புறம் அதை சமாளிக்கிறதில என்ன கஷ்டம்?''
"அவருக்கு முன்னாடியே போய் சேர்ந்திருக்கணும். வேண்டாம்பா என்னை யாரும்
சமாளிக்க வேணாம்... நான் என் பொண்ணு வீட்லயே போய் இருந்துகிறேன்''
"அம்மா.. உன்னை சமாளிக்கிறதைபத்திச் சொல்ல. பிரச்சினையை சமாளிக்கிறதபத்தி.''
"ரெண்டும் ஒண்ணுதாம்பா'' என்று தம் சிறிய துணி மூட்டையை கையில்
எடுத்துக் கொண்டார். அர்ச்சனாவுக்கு ஏன் எரிச்சல் வருகிறது என்று
சண்முகத்துக்கு நன்றாகப் புரிந்தது.
"காலைல பேசலாம் படும்மா''
இரண்டு பேரின் கண்களிலும் சண்முகம் யார் பக்கம் என்பதைத் தெரிந்து
கொள்கிற தவிப்பு இருந்தது. ஜெயிக்கப் போவது யாரு என்று உரசிப் பார்க்கிற
உத்தி. அதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் சண்டையை ஆரம்பிக்கிறார்களா
என்பதும் பல்லாயிரம் ஆண்டு கேள்வி.
இந்தப் பிரச்சினையை எந்த இடத்தில் இருந்து களைவது... மொட்டை மாடியில்
சிகரெட் கொளுத்தி நடந்தான். சென்ற தலைமுறையாக இருந்தால் "அடிச்
செருப்பாலே நாயே'' என்று இடுப்பில் நாலு உதை உதைத்து பொண்டாட்டியை ஒரு
மூலையில் உட்கார வைத்திருப்பார்கள். இப்போது மனைவியின் கன்னத்தில்
அறைந்தால் ஓராண்டு சிறை. அம்மாவின் கடைசி காலம் நிம்மதியாக இருக்க
வேண்டும் என்று மகன் எதிர்பார்ப்பது நியாயமும் கடமையாகவும் இருக்கிறது.
ஆனால் அம்மாவின் நிம்மதி எந்தக் கிளி வயிற்றுக்குள் ஒளிந்திருக்கிறதோ?
அர்ச்சனா மாடிக்கு வந்து, "நல்லா தூங்கறாங்க. குறட்டை வேற'' என்றாள்.
"எப்படியாவது பிரச்சினையில்லாம பார்த்துக்கக் கூடாதா?''
".....''
"உலகம் புரியணும்னு சொல்றியே... அது என்ன? பிகார்ல இருக்கிற ராம்நாத்
யாதவ்ங்கிறவனோட கொலை வழக்கப்பத்தி தெரிஞ்சுக்கிறதா? இல்ல கலிபோர்னியாவில
இருக்கிற ராபர்ட்டோட கள்ளக்கடத்தல் விவகாரத்தைப் பத்தித்
தெரிஞ்சுக்கிறதா? இதோ இந்த நேரத்தில உலகத்தில ஏதோ ஒரு மூலையில நடந்த
ரயில் விபத்தில இறந்து போன ஐந்து வயசு சிறுமிக்காக வருத்தப்பட்றதா?...
சொல்லு அர்ச்சனா? இது எதுவுமே நம்ம உலகத்தில இல்ல. நம் உலகத்தில சோமாலியா
பஞ்சம் இல்ல... ஜப்பான் பூகம்பம் இல்ல... உலகம்னு நாம
சொல்லிக்கிட்டிருக்கிற "நம்ம உலக'த்தில இப்ப 600 கோடி பேரா இருக்காங்க?
மிஞ்சிப்போனா சில பத்து பேர்கள்... அல்லது சில நூறு பேர்கள்.''
அர்ச்சனா கையை மேலே உயர்த்தி உடலை முறித்துச் நக்கலாகச் சிரித்தாள்.
"இதுக்குப் போயா இவ்வளவு தீவிர சிந்தனை... வந்து படுங்க. பொம்பளைங்க
அப்படித்தான். அதிலயும் மாமியார் மருமகன்னா இப்படி ஏதாவது
இருந்துகிட்டுத்தான் இருக்கும். இதில ஆம்பளைங்க யார் பக்கமும் நிற்காம
இருந்தாலே பாதி பிரச்சினை சரியாகிடும்.''
சிகரெட்டைப் பிடுங்கி தூர எறிந்தாள். "நாட்டின் அதிபர்கள், பிரதமர்கள்
பட வேண்டிய சிந்தனையெல்லாம் நமக்கு எதுக்கு? அதுவும் இந்தியாவில இருக்கிற
என்னைப் போன்ற பெண்ணுக்கு எதுக்கு?'' என்றபடி கீழே இறங்கினாள்.
நைட்டியில் மொட்டை மாடியின் நிலவொளியில் அவள் சொல்வது தேவவாக்கு போல இருந்தது.
அவள் சொல்வதை அப்பாவித்தனமாக நம்புகிறவனைப் போல பாவனை செய்து கொண்டு
அவளுக்குப் பின்னால் நடந்தான். தான் அழைக்காமலேயே அவன் தன் பின்னால்
வருவது அவளுக்குப் பூரிப்பாக இருந்தது.
கூடத்தில் அம்மா நிம்மதியாகத்தான் தூங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது
சண்முகத்துக்கு.
tamilmagan2000@gmail.com
4 கருத்துகள்:
பெரியதொரு அரசியலை இவ்வளவு சாதாரணமா சொல்லிட்டிங்க கலக்கல் கதைங்க...
Ya, good Story.
Most of Tamil Homes have like this Problem.
Most of Tamil Gents do like this..
வரிக்கு வரி ரசித்து படித்தேன் மிக அருமை.
என்னங்க இந்த கலக்கு கலக்குறீங்க.......சூப்பர் கதை. 'வாழு யாருக்கு' என்ற வாதத்தை படிக்கும் போது அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது.
கருத்துரையிடுக