தாத்தா பழம்போல இருந்தார். மரக் கட்டிலில் அமர்ந்து கிண்ணத்தில் பொரி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எண்பத்தைந்தாவது வயதிலும் அவருக்கு சில பற்கள் இருந்தன. பார்வை மங்கிவிட்டதால் குத்துமதிப்பாக ஓரிடத்தை நோக்கியபடி பேசினார்.
"'ஹலோ யங் கேர்ள்... பொரி சாப்பிடு'' என்று பொரியேந்திய கையோடு காற்றில் துழாவினார். நான் அவர் கையைப் பற்றி அதை வாங்கிக் கொண்டேன். ஏனோ எனக்குக் கண்களில் நீர் துளிர்த்தது.
"இங்கிலீஷ் நல்லா பேசுவியா?''
"பேசுவேன் தாத்தா...''
"வந்ததிலிருந்து பேசலையே?''
"நீங்களும்தான் பேசலை''
மடக்கிவிட்டதை ரசிப்பதுபோல் சிரித்தார்.
"இந்தக் காலத்துப் பசங்களுக்கு இங்கிலீஷ் அறிவு கம்மிதான். அவன் என்னமா பேசுவான் தெரியுமா?.. அவன் பேரு.... அட என்னம்மா இது என் பேரையே மறந்து போய்விட்ட மாதிரி... "சி.எம்." ஆகூட இருந்தானே ரெண்டு வருஷம்? ''
"அறிஞர் அண்ணாவா?''
"ஆங்... எங்க காலேஜ் ஸ்டூடண்ட்தான். இங்கிலீஷ்ல அடுக்கு மொழி பேசுவான். பிற்காலத்தில் அண்ணா ரொம்ப பிரபலமாகி காலேஜ் ஃபங்ஷன்ல பேசுவதற்கு வரும்போதெல்லாம், புரொபஸர் ராவ் சாகேப் ஆர்.கிருஷ்ணமூர்த்தில்லாம் "மை பாய்'னு அண்ணாவைக் கூப்பிடுவார். இத்தனைக்கும் கிருஷ்ணமூர்த்தி பிராமின். அண்ணா பெரியார் கட்சி'' ஞாபகப்பின்னல்கள் அறுந்துவிடாமல் இருக்க அவசர அவசரமாகக் கூறுவது மாதிரி இருந்தது.
தாத்தா மிகவும் கஷ்டப்பட்டுப் படித்து தனியாக் எதிர்நீச்சல் போட்டு முன்னுக்கு வந்தவர். படிப்பு வாசனையை தன் குடும்பத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர்.
"என்னமோ என்மேல உங்க அப்பனுக்குக் கோபம். நீ இங்க வந்திருப்பது அவனுக்குத் தெரியுமா?''
"தெரியாது. ஆனா ஒண்ணும் சொல்ல மாட்டார் தாத்தா.''
"உடம்பு எப்படி இருக்கு அவனுக்கு?''
"அப்படியேதான் இருக்கு.''
"இருமலும் சளியுமா இருக்கிறதா சொன்னாங்க. இப்பவும் சிகரெட் பிடிக்கிறானா?''
"இல்ல தாத்தா''
அவ்வளவு பெரிய வீட்டில் தாத்தா மட்டும்தான் இருந்தார். சாப்பாடெல்லாம் மாதக் கட்டணம் வாங்கிக் கொண்டு ஒரு அம்மா சமைத்துக் கொண்டு வருகிறார். துணிமணி துவைத்துப் போடுவது, தண்ணீர் பிடித்து வைப்பது இத்யாதி வேலைக்கெல்லாம் சேர்த்து அந்த அம்மாவுக்குச் சம்பளம். பீரோவைத் திறந்து செலவுக்கான பணம் எடுப்பதுவரை அந்த அம்மாவுக்கு உரிமையிருந்தது.
"தேவகி செத்து பத்து வருஷமாச்சு. அவ கூட வாழ்ந்ததே கனவு மாதிரி ஆகிடுச்சு'' என்று பாட்டியைப் பற்றி நினைவுக் கூர்ந்தார்.
"உங்கிட்ட சொல்றதுக்கு என்னம்மா. எப்ப உங்கப்பனுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சாளோ அப்பத்தலர்ந்து என்கிட்ட தாம்பத்தியம் வெச்சுகிட்டதில்ல. என்னமோ அப்படியொரு "பிரின்ஸிபிள்' அவளுக்கு. இருபத்தஞ்சு வருஷம் சன்யாசி மாதிரிதான் வாழ்ந்தா.''
தாத்தா எதைப்பற்றிப் பேசினாலும் அதைப் பற்றிக் கேட்டுக் கொண்டே உட்கார்ந்திருக்க வேண்டும் போல் இருந்தது.
வீராப்பும் தொனியும் அற்று அலங்காரம் இல்லாமல் வந்து விழும் அனுபவ உண்மைகளை, சும்மா செவி சாய்த்துக் கொண்டிருப்பதே நிம்மதியளிப்பதாக உணர்ந்தேன்.
"ஏம்மா நீ கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே? இப்ப என்ன ஏஜ் உனக்கு?'' என்றார்.
"இல்லை தாத்தா. நான் படிக்கப் போறேன்.''
"அதுக்கும் இதுக்கும் என்னம்மா. கல்யாணம் பண்ணிக்கிட்டுகூடத்தான் படிக்கலாம்? நா படிக்கலையா?''
"உங்க காலம் வேற. இப்பக் கூட படிக்கிறவங்களலாம் கிண்டல் பண்ணுவாங்க''
"எது நல்லதோ அது எல்லாம் கிண்டலாப் போச்சு ''
பொரிக்கிண்ணத்தை வைத்துவிட்டு "போதும்மா. கொஞ்சம் தண்ணிகுடு'' என்றார்.
பானையில் இருந்த தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன்.
"ஹாட் வாட்டர் இருக்குமே?... சரி பரவால்ல'' அதையே குடித்தார்.
"உங்கப்பன் மேல எனக்குக் கோபம்லா இல்லம்மா. இன்னொரு பொண்ணுகூட தொடர்பு வெச்சிருக்கான்னு தெரிஞ்சதும் "இனிமே என் முகத்தில முழிக்காதடா, போயிடு'ன்னு சொல்லிட்டேன். ரோஷக்காரன். அப்ப போனவன்தான். அந்தப் பொண்ணுக்குக் குழந்தைக் குட்டி எதுவும் கிடையாதாமே?...''
"ஒரே ஒரு குழந்தை பொறந்து இறந்துடுச்சு தாத்தா. அப்புறம் குழந்தை வேணாம்னு முடிவு பண்ணிக்கிட்டாங்களாம். போன வருஷம் அவங்களும் இறந்துட்டாங்க''
"ச்சோ.. தெரியாதே'' என்றார் தாத்தா.
"அதுக்கப்புறம் உங்கப்பா என்னைப் பார்க்க வந்ததில்ல. முப்பது வருஷமாச்சு அவனைப் பார்த்து. "முகத்தில முழிக்காதடா'னா என்ன அர்த்தம்னு இப்ப யோசித்துப் பார்த்தா வேடிக்கையா இருக்கு. ஒரே வார்த்தைக்கு அத்தனை வலிமை. என்னமோ அது வலிமை மாதிரிகூட தெரியல. "முழிச்சா' என்னன்னு நினைக்கும்போது அதற்கு அவசியம் இல்லாமப் போயிருக்கும். தயக்கம் இருந்திருக்கும். அப்புறம் அதுவே பழக்கமாயிடும். வாழ்க்கையே ஒரு பழக்கம்தானேம்மா?''
வார்த்தை ஜோடனைக்காக ரொம்ப சிரமப்படாமல் இதைச் சொன்னார். ""கல்யாணம் பண்ணி வெச்சு அஞ்சு வருஷமா குழந்தை பொறக்காம இருந்தது. குழந்தை பெத்துக்கணும்னு இப்படி கல்யாணம் பண்ணக்கிட்டான். இதெல்லாம் உனக்குத் தெரிஞ்சிருக்கும். ஏதோ தாத்தா சொல்றார்னு கேட்டுக்கிட்டு இருக்கே. இல்லையா மீனா?'' என்றார்.
நான் முதலில் தலையசைத்தேன். தாத்தா பார்வைக்கு நான் ஆமோதித்தது தெரிந்திருக்காது என்பதை உணர்ந்து, "ஆமா'' என்று சிரித்தேன்.
"என் தங்கம். கிழவன் சொல்றதைச் சொல்லட்டும். கேட்டு வைப்போம்னு கேட்டுக்கிற?''
"இல்லை தாத்தா. இது வரைக்கும் அப்பா சொன்னதைத்தான் கேட்டிருக்கேன். நீங்க எப்படிச் சொல்றீங்கனு பார்க்கிறேன்.''
"யார் பக்கம் நியாயம் இருக்கு?'' குழந்தைத்தனமான குதூகலத்துடன் சவால் விடுவதுமாதிரி கேட்டார்.
"இதில இரண்டு பக்கம் இருக்கிற மாதிரியே தெரியலை. இரண்டும் ஒரே பக்கம்தான்""
"பிரில்லியண்ட் கேர்ள். அந்தந்த இடத்தில் இருந்து பார்த்தால்தான் புரிஞ்சுக்க முடியும்'' என்றார். "இதில் காலத்தையும் இடைவெளியையும் மறந்துவிடக்கூடாது'' என்று ஆங்கிலத்தில் சொன்னார்.
ஆழ்ந்த யோசனையில் சிறிது நேரம் இருந்தார். நான் அவர் கட்டிலில் இருந்த திருமூலர் நூலை எடுத்து மெல்ல இங்கும் அங்குமாகப் புரட்டிப் படித்துக் கொண்டிருந்தேன்.
கண்தான் தெரியவில்லையே அப்புறம் எதுக்கு புத்தகத்திலேயே வைத்திருக்கிறார் என்று புரியவில்லை.
"உன்னோட சித்தி இறந்து போனது தெரியவே தெரியாதும்மா. புண்ணியவதி... அவ முகத்தை ஒரு தடவைக்கூட பார்த்ததில்லை'' என்று கண்களைத் துடைத்துக் கொண்டார்.
மூடிய மேல் துண்டுக்குள் அவர் உடல் குலுங்குவது தெரிந்தது.
2 கருத்துகள்:
//"உன்னோட சித்தி இறந்து போனது தெரியவே தெரியாதும்மா. புண்ணியவதி... அவ முகத்தை ஒரு தடவைக்கூட பார்த்ததில்லை''//
சொல்லப்போனால் உலகத்தில் எல்லோரும் நல்லவர்களே........ சந்தர்ப்ப சூழ்நிலை சிலரை நம் கண்களுக்கு கெட்டவர்களாக காட்டுகிறது. காலப்போக்கில் அந்த எண்ணம் மாறவும் செய்கிறது.
Thanks Raja
கருத்துரையிடுக