செவ்வாய், நவம்பர் 25, 2008

வியாழக்கிழமை

சரியாக நான்கு மணி சுமாருக்கு முதல் தேதி அதன் முழு அர்த்தத்தையும் அடைந்தது. சம்பளம் கைக்குக் கிடைத்த மறுவினாடி ஒவ்வொருவருமே மேஜை அறையைத் திறந்து வைத்து அதனுள் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு சற்றே மறைவாய்} பணத்தை எண்ணினார்கள்.

ரயில்வே துறையின் அந்த எளிய அறையில் லட்சுமிபதியோடு சேர்த்து ஆறுபேர் இருந்தார்கள். வரிசைக்கு மூன்றாய் இரண்டு வரிசை மேஜைகள். இவர்கள் வரைக்கும் ஒரு பிளைவுட் தடுப்பு. ஆறுபேருமே அப்படித்தான் எண்ணினார்கள். எண்ணிக் கொண்டே ஒருவரை ஒருவர் பார்க்க நேர்ந்ததால் சிரித்துக் கொண்டார்கள்.

பிடித்ததெல்லாம் போக லட்சுமிபதியின் பே ஸ்லிப்பில் போட்டிருந்த தொகை ஆயிரத்து முன்னூற்று இருபத்தொன்று. இது அப்படியே முழுசாக வந்து சேர வேண்டும் என்ற மனைவியின் கண்டீஷனை மீறியே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார் அவர்.

காலையில் ஆபிஸýக்கு வந்ததும் சங்கீதராவ் நூறு ரூபாய் கைமாற்றாய் கேட்டிருந்தார். எத்தனையோ முறை கொடுத்து உதவியிருக்கிறார். முடியாது என்று சொல்ல முடியவில்லை. அதுவும் பொண்டாட்டி ஆஸ்பத்திரியில் இருப்பதாலும் உறவினர் வந்துவிட்டதாலும் சமாளிக்க முடியாமல் கேட்டிருந்தார். சொசைட்டியில் லோன் போட்டிருப்பதால் பத்து தேதிக்குள் கிடைத்துவிடும் திருப்பித் தருகிறேன் என்று வேறு சொன்னார்.

மனைவி சொல்லை மீறி நூறு ரூபாய் தாளைத் தனியே எடுத்து மேல் பாக்கெட்டில் வைத்தார். மீதியை பாண்ட் பாக்கெட்டில் வைத்தார்.

இப்படி ஒவ்வொருவரும் முதல் தேதி பணத்தை இந்தப் பாக்கெட்டும் அந்தப் பாக்கெட்டும் மாற்றி வைப்பதும்கூட முதல் தேதியின் சகஜம்.

சரியான நேரத்தில் நுழைந்தார்கள் கூட்டமாக ஐந்து பேர். கையில் நீண்ட லிஸ்ட்.

லட்சுமிபதி "என்னது?'' என்றார்.

"நம்ம அக்கெüண்ட் சேக்ஸன் எழுமலை பொண்ணுக்கு இந்த மாசம் கல்யாணம் இல்ல...'' என்று நினைவுபடுத்தினார் ஒருவர்.

இது வழக்கம். அலுவலக ஊழியர் வீட்டில் திருமணம் என்றால் அதற்கு எல்லோருமாகச் சேர்ந்து பணம் போட்டு ஒரு பிரஸர் குக்கரோ} பெரும்பாலும் அதுதான்} அல்லது டேபிள் ஃபேனோ வாங்கி "அன்பளிப்பு ரயில்வே ஊழியர்கள்' என்று பெயர் போட்டுக் கொடுப்பது நெடு நாளைய நடைமுறை.

லபக் முதல் தேதியில் பிடித்துவிட்டார்கள்.

லட்சுமிபதி பத்து ரூபாயை பேண்டிலிருந்து எடுத்துக் கொடுத்து "எம் பேரை டிக் பண்ணிடுங்கப்பா'' என்றார்.

இப்படி யாராவது ஒருவர் கல்யாணம் செய்வதும் ரிடையர்ட் ஆவதும் அதற்கான பணம் சேகரிப்பதும் முதலீடு செய்வது மாதிரி அனைவரும் பணம் கொடுப்பதும் சராசரியாய் எல்லா மாதமும் நிகழும்.

பஸ் ஸ்டாப்பில் நின்ற போது "கட்ச்சி டிக்கெட் சார். சீக்கிரம் சார்'' என்று சீட்டாடுபவன் மாதிரி விசிறியாக லாட்டரி சீட்டை நீட்டினான் ஒருவன்.

லட்சுமிபதியின் கட்டுப்பாடெல்லாம் குலைந்தது. காலையிலேயே பேப்பரில் இந்த வாரம் எப்படி? இருக்கும் என்று தனுசு ராசியில் போட்டிருந்ததை மனப்பாடமாய் படித்திருந்தார்.

கணவன் மனை உறவு அன்புடையதாக இருக்கும் என்பதற்கும் கீழ் "மொத்தத்தில் சுமாரன வாரம் அதிர்ஷ்ட எண் 1' என்று போட்டிருந்தான்.

லாட்டரி சீட்டை ஆர்வமாகப் பார்த்தார். எல்லாச் சீட்டிலும் முதல் இலக்கம் ஒன்று. முதல் பரிசும் ஒரு லட்சம் இன்று தேதியும் ஒன்று. எல்லாமே கூடி வந்தது.

"எத்தினி டிக்கெட் இருக்கும்?''

"எட்டு சார். கண்டிப்பா அடிக்கும் சார்''

"என்னைக்கு குலுக்கல்?''

"இன்னைக்கு நாளைக்கு ரிசல்ட். நாளைக்கு நெறைஞ்ச வெள்ளி. லட்ச ரூபா உங்களுக்குத்தான் சார்''

இப்படிப்பட்ட நல்ல டிக்கெட்டை அவன் வைத்துக் கொள்ளாமல் நமக்கேன் கொடுக்கிறான் என்றெல்லாம் லட்சுமிபதியால் யோசிக்க முடியவில்லை.

வாங்கிக் கொண்டார்.

"ஒண்ணாந்தேதி சம்பளத்தைச் சாமி படத்தாண்ட வச்சிட்டு செலவு பண்ணனும்னு எத்தினா வாட்டி சொல்லி அனுப்பிச்சேன்?' என்று மனதில் திட்டினாள் மனைவி.

"ஒரு லட்சம் வேண்டாம். அம்பதாயிரம் இருந்தா போதும் பொண்ணு கல்யாணத்தை முடிச்சிட்லாம். நாளைவரை காத்திருக்கணும்.

"போன வாரம்கூட மெட்ராஸ்தான் ஒருத்தன் லக்கா அடிச்சுக்குனு போனான்.' பரிசுத் தொகையில் கல்யாணத்தை முடித்துவிட்டால் ரிடையர்ட் ஆகிற பணத்தில் வீட்டைக் கட்டி விடலாம் என்று திட்டம் தீட்டினார்.

பணம் எடுத்தே எடுத்தாகிவிட்டது. ஒட்டலுக்குப் போய் ஒரு தோசையும் காப்பியும் சாப்பிடலாம் என்று நினைத்து கீதா கஃபேவில் நுழைந்து ஃபேன் சுற்றுகிற இடமாகப் பார்த்து அமர்ந்தார்.

வீட்டு வாடகை, மளிகை, ரேஷன், பஸ் பாஸ், பால் அட்டை போன்ற ஆயுள் தண்டனைகள் போக ஜுரம், சளி, விருந்தினர் வருகை, கோவில், பயணம் போன்ற லாக்-அப் விஷயங்கள் சர்வர் வருவதற்குள் தோராயமாக ஒரு கணக்குப் போட்டு மிரண்டார்.

சர்வர் "என்ன சார் வேணும்'' என்றான்.

லட்சுமிபதி கல்யாண வயதில் இருக்கிற பெண்ணையும் பையனையும் உத்தேசித்து "ஒரு காப்பி மட்டும் கொடுப்பா'' என்றார் நிதானமாய்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin