வெங்கட் பிரபு என்கிற தனுஷ்!
நல்ல மழைநாள். 2002 ம் ஆண்டு என்று ஞாபகம். சாலிக்கிராமத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் வீட்டுக்குத் திரைத்துறை தொடர்பாளர் மெளனம் ரவியுடன் சென்றிருந்தேன். கஸ்தூரிராஜா அப்போது இயக்கியிருந்த "துள்ளுவதோ இளமை' படத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
"எல்லாருமே புதுமுகம்தான். சினிமாவில் சம்பாதிச்ச காசையெல்லாம் சினிமாவிலேயே விட்டாச்சு. இந்தப் படமும் காலை வாறிட்டா சொந்த ஊர்லபோய் செட்டில் ஆக வேண்டியதுதான்'' என்றார்.
மகள் டாக்டருக்குப் படித்திருப்பதாகவும் மகன் செல்வராகவன் என்ஜினீயரிங் படித்திருப்பதாகவும் இன்னொரு மகன் வெங்கட் பிரபுவை இந்தப் படத்தில் நடிக்க வைத்திருப்பதாகவும் சொன்னார். மகனின் படத்தைக் காட்டி "தேறுவானா?'' என்றார். மீசை முளைக்காத மெலிந்த சிறுவன். "ஸ்கூல் படிக்கிறமாதிரி கேரக்டர்லதான் நடிக்கிறான்'' என்று அவசரமாக விளக்கினார். படித்துக் கரையேறிவிட்ட மற்ற குழந்தைகளைவிட வெங்கட் பிரபு குறித்து அவருக்குக் கவலை அதிகமாக இருந்தது.
"கங்கை அமரன் பையன் பெயரும் வெங்கட் பிரபுதான். வேறு பெயர் வைத்தால் நன்றாக இருக்கும்'' என்றேன்.
"அவர் நடிப்பதாகத் தெரியவில்லையே?”
"அவர் நடித்து பாதியில் நின்று போன படம் ஒரு வேளை வந்தாலும் வரலாம். அதுவும் இல்லாமல் பெயர் சின்னதாக இருந்தால் சுலபமாக இருக்கும்'' என்று கருத்து சொன்னோம்.
வெங்கட் பிரபு என்றே இருக்கட்டும் என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டார். மாடியில் இருந்து கீழே வரும்போது வெங்கட் பிரபுவும் செல்வராகவனும் செஸ் ஆடிக் கொண்டிருந்தனர்.
வெளியே வந்து மழைக்காக ஒதுங்கிக் கொண்டிருந்தபோது இந்த வீட்டை அடமானம் வைத்துத்தான் படத்தை எடுத்திருக்கிறார் படம் ஓடவில்லை என்றால் கஷ்டம்தான் என்று மெளனம் ரவி சொன்னார். காரும் பங்களாவும் பேரும் புகழும் இழந்து மீண்டும் சொந்தக் கிராமத்தில் போய் வாழ நேர்வது எவ்வளவு துயரமானது. இந்த அவஸ்தையெல்லாம் இல்லாமல் சாதாரணமாகவே இருந்துவிட்டால் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நம்மைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினோம்.
வெங்கட் பிரபு நடிக்கும் "துள்ளுவதோ இளமை'என்றுதான் எழுதினேன்.
படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் மகனின் பெயரை தனுஷ் என்று மாற்றினார் கஸ்தூரிராஜா. படம் அபார வெற்றி. தனுஷ் அடுத்த இரண்டு படங்களில் இரண்டு கோடி சம்பளம் வாங்குவதாகச் சொன்னார்கள். "சுள்ளான்' படப்பிடிப்பில் இருந்த தனுஷுக்கு போன் செய்து, "நீங்கள் ரஜினி மகளைக் காதலிப்பதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. உண்மையா?'' என்றேன்."சார் அப்படிலாம் எழுதிடாதீங்க. ரஜினி ரசிகர்கள் என்னைச் சுளுக்கெடுத்துடுவாங்க. அதெல்லாம் ஒண்ணுமில்ல, விட்டுடுங்க சார்'' என்று கேட்டுக் கொண்டார்.
அடுத்த சில மாதங்களில் ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கும் தனுஷ் என்கிற வெங்கட் பிரபுவுக்கும் திருமணம் நடந்தது.
பொதுவாக தடாலடியாக மாற்றங்கள் நிகழ்ந்தால் சினிமாவில் நடப்பது மாதிரி இருக்கிறது என்று சொல்வது வழக்கம். அதிலும் சினிமாவில் இருப்பவர்களுக்குத்தான் அப்படிச் சினிமாவில் நடப்பது மாதிரி நடக்கிறதோ என்று தோன்றுகிறது.
ஒரு கோடீஸ்வரனின் கதை!
தயாரிப்பாளர் குஞ்சுமோன் சினிமாவின் உச்சபட்ச வெற்றியைக் கண்டவர். சூரியன், ஜென்டில் மேன், காதலன் என்று அவருடைய படங்கள் வரிசையாக மெகா வெற்றி பெற்று சாதனை படைத்தன. நடிகர்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் என்று பலரை அறிமுகப்படுத்தியவர்.
இயக்குநர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் ஜீவா, நடிகர் அப்பாஸ், இயக்குநர் பவித்ரன், நடிகராக பிரபுதேவா என்று நிறைய சொல்லலாம். பாலிவுட் நடிகைகளை லட்சம் லட்சமாகச் செலவு செய்து தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். நக்மா, தபு, சுஷ்மிதா சென், மதுபாலா போன்றவர்கள் தமிழுக்கு உதடசைத்தார்கள். பெரிய பெரிய நகரங்களை செட்டுகளில் உருவாக்கினார். கோடி, கோடி ரூபாய்கள் செலவாகின.
மைசூரில் ‘காதலன்’ படத்தின் படப்பிடிப்பு. கவர்னர் வீடாக அப்படத்தில் மைசூரின் அரண்மனை ஹோட்டல் ஒன்று காட்டப்பட்டது. கவர்னர் மகள் மான்குட்டியைத் துரத்தி விளையாடுவதாகக் காட்சி. சென்னையில் கவர்னர் இல்லத்தில் மான்கள் இருக்கும் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும். கவர்னர் வீடு என்ற நம்பகத் தன்மைக்காக அப்படி மான் துரத்தல் காட்சி வைத்திருந்தார் ஷங்கர்.
ஆனால் மைசூரில் மான் ஏற்பாடு செய்ய முடியவில்லை. நாய்க்குட்டியோடு விளையாடுவதாகவோ, பூனைக் குட்டியோடு விளையாடுவதாகவோ காட்சியை மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று சென்னையில் இருந்த குஞ்சுமோனிடம் கருத்து தெரிவித்தார் தயாரிப்பு நிர்வாகி. குஞ்சுமோனுக்கு அந்தக் காட்சியில் மான் இருந்தால் நம்பகத்தன்மையாக இருக்கும் என்ற விவரம்கூட தெரிந்திருக்க நியாயமில்லை.
"ஷங்கர் மான் கேட்டா மான் கொண்டுவந்து கொடு'. அது பூனை கேட்டா மட்டும் பூனை கொடுத்தா மதி'' என்று போனை வைத்துவிட்டாராம் குஞ்சுமோன்.
அப்படி தாராளமாகச் செலவு செய்து படம் எடுத்தவர் குஞ்சுமோன். தன் மகன் அபியை கதாநாயகனாக்கி கோடீஸ்வரன் என்று ஒரு படத்தை எடுத்தார். நந்தகுமார் என்பவர் இயக்கத்தில், ரஹ்மான் இசையில், சிம்ரன் நாயகியாக நடிக்க படம் ஆடம்பரமாக உருவாகியது. படத்தை முடித்து இப்போது பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது இன்றும் அந்தப் படம் மட்டும் வெளியாகவே இல்லை. அப்படியொரு பொருளாதாரச் சிக்கல். அதன் பிறகும் கடந்த பத்தாண்டுகளில் அவரால் வேறு படங்களையும் தயாரிக்க முடியவில்லை.
தனுஷுக்கு ஏற்பட்ட திருப்புமுனை அபிக்கு ஏற்படாமல் போனதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?
ரோஜாவின் கண்ணீர்
நடிகை ரோஜா மிகக் குறுகிய காலம் மேற்கு மாம்பலத்தில் ஒரு சின்னஞ்சிறு ப்ளாட்டில் இருந்தார். ஏறத்தாழ 90 படங்களில் நடித்து முடித்திருந்த அவர் வாழ்வில் அப்போது அப்படியொரு துயரமான சூழ்நிலை. அவருடைய அண்ணன் கையெழுத்து போட்டுக் கொடுத்திருந்த ஒரு காசோலைதான் அவரை அப்போது அப்படி வாட்டியெடுத்துக் கொண்டிருந்தது. படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அவர், ஐந்து லட்ச ரூபாய் காசோலை ஒன்றை முன் தேதியிட்டுக் கொடுத்து கடன் வாங்கியிருந்ததாகவும் அதை அவர் செலுத்தாததால் பணம் கொடுத்திருந்த நபர் கோர்ட்டுக்கு இழுத்திருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகிக் கொண்டிருந்தது.
ரோஜா செக் மோசடி என்றே எல்லோரும் அதை எழுதினார்கள். அதைப் பற்றி வருத்தத்துடன் பேச ஆரம்பித்தவர். தொலைக்காட்சிகளில் செக் மோசடி செய்தியை நிமிடத்துக்கொரு தரம் தன்னுடைய போட்டோவைப் போட்டுக் கேவலப்படுத்துவதாகவும் கூறியவர், சட்டென அழ ஆரம்பித்துவிட்டார்.
அந்த ஹாலில் நானும் ரோஜாவும் ஒரு சமையல்கார அம்மாவும் மட்டும் இருந்தோம். ரோஜா அழுகையை நிறுத்த முடியாதவராகச் சிரமப்பட்டார். மன உறுதியோடு அந்த வழக்கைத் தான் எப்படி எதிர் கொள்ள இருக்கிறேன் என்று பேசிக் கொண்டிருந்தவர் இயல்பு மாறிப் போனார். முகம் சிவக்க, உதடுகள் துடிக்க கேவினார். "நான் இவங்களுக்கெல்லாம் என்ன பாவம் பண்ணேன். ஏன் என் வாழ்க்கையை இப்படி கேலியா பாக்றாங்க?''
எத்தனையோ துயரமான காட்சிகளில்கூட ரோஜா அப்படி அழுது நடிப்பதைப் பார்த்ததில்லை. கிளிசரின் இல்லாமல் நிஜமாக அவர் என் முன்னால் அழுது கொண்டிருந்தார். ஸ்டார்ட், கேமிரா, ஆக்ஷன் சொல்லாமலேயே ஒரு நடிகை அழுவது ஏறத்தாழ ஒரு ரசிகன் மனநிலையில் இருந்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. "கட்' சொன்னால் ஒருவேளை நிறுத்திவிடுவாரோ? என்ற குழப்பம்கூட எனக்கு இருந்தது. "தயவு செய்து அழாதீங்க. தைரியமா இருங்க' என்று மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தேன். டேப்பில் அத்தனையும் பதிவாகியிருந்தது. குமுதத்தில் அதைப் போட்டுக் கேட்டுவிட்டு நான் ஆறுதல் சொல்லும் தர்மசங்கடமான நிலைமையை எண்ணி பலரும் சிரித்தனர். ரோஜாவின் அழுகையில் நாடகத்தன்மை இருந்ததாகச் சிலர் நினைத்தனர்.
எனக்கு அப்படித் தோன்றவில்லை. "உடைந்து நொறுங்கும் தருணம்' என்பது எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது.
4 கருத்துகள்:
தமிழ்மகன்,
மிகச் சுவாரஸ்யமான தொடர், புதிய பார்வையாக இருக்கிறது, நன்றி, வாழ்த்துகள், பாராட்டுகள் :)
ஒரே ஒரு சின்னத் திருத்தம் - கோடீஸ்வரன் படத்துக்கு இசை ரஹ்மான் இல்லை என்று நினைக்கிறேன், வேறு யார் என்று நினைவில்லை, ஆனால் ரஹ்மான் இல்லை என்பதுமட்டும் நன்றாக நினைவிருக்கிறது :)
ஏனெனில், அந்தக் காலகட்டத்தில் நாங்கள் இளைய ராஜாப் பிரியர்கள் ரஹ்மானைத் திட்டுவதற்காகவே அவர் படப் பாடல்களைத் தேடிப் பிடித்துக் கேட்போம், ‘சூப்பர் போலீஸ்’ போன்ற தெலுங்கு டப்பிங் பாடல்களைக்கூடக் கேட்டிருக்கிறோம், இந்தப் படம் அப்படி அலைந்து திரிந்து கேட்கவில்லை, ஆகவே, ரஹ்மான் இல்லை என்றுதான் நினைக்கிறேன் :)
- என். சொக்கன்,
பெங்களூர்.
kodeeswaran Film's Music is by AA-Go-SH(Anand-Gopal-Sha). as I remember..
Raja Rasigan
திரு. சொக்கன்,
தாங்கள் சுட்டிகாட்டியது சரிதான். அதற்கு ராஜா ரசிகன் பதில் அளித்து விட்டார். தங்கள் பாராட்டுக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன்.
சுவாரசியமாக இருக்கிறது.
குஞ்சுமோனின் மகன் பெயர் அபி அல்ல, எபி.
கருத்துரையிடுக