காமெடி... கீமெடி..!
‘என் ராசாவின் மனசிலே' படத்திலேயே தன் தனித்துவமான மதுரைத்தனங்களோடு பெயரெடுத்தவர் வடிவேலு. நண்பர் புவி. உமாசந்திரன் இணைத் தயாரிப்பாளராக இருந்த 'ஒருவழிப் பாதை’ படத்திலேயே அவரை நடிக்க வைத்தார். சொல்லப் போனால் வடிவேலு ஆரம்பத்தில் மிகவும் வயதானவராக இருந்து மெல்ல, மெல்ல இளைஞரானதுபோல இருக்கிறது. தோற்றத்தில் அந்த மாற்றம்.
நான் அவரை ராஜ்கிரணின் ரெட் சன் ஆர்ட் கிரியேஷன் நிறுவனத்தில் முதன் முதலாகச் சந்தித்தேன். வடக்கு உஸ்மான் சாலையில் அந்த அலுவலகத்துக்குச் செல்லும் படியில் அவர் நின்று சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். அந்த வாரம் வெளியாகியிருந்த ‘தேவர் மகனி'ல் அவர் நடிப்பு பிரமாதம் என்று சொன்னேன். மிகவும் சந்தோஷப்பட்டார். அண்ணே ரொம்ப சந்தோஷம்ணே... நம்மளப் பத்தி ஏதாச்சும் செய்தி போடுங்கண்ணே..'' என்று ஆசையாகக் கேட்டார். "உங்கள் புகைப்படம் ஒன்று தாருங்கள்'' என்றேன். "அதாண்ணே கையில இல்ல... நீங்க... இதோ இங்கிட்டு நேரா போனீங்கன்னா... ஒரு ஸ்டுடியோ வரும். எம் பேரைச் சொல்லி ஒரு போட்டோ வாங்கிக்கங்க... நீங்க காசு எதுவும் கொடுக்க வேணாம்'' என்று ரெட் சன் அலுவலகத்துக்கு எதிரில் இருந்த தெருவைக் காட்டினார். அவர் சொன்ன இடத்தில் ஒரு போட்டோ ஸ்டுடியோ இருந்தது. நான் இவர் பெயரைச் சொல்லி போட்டோ கேட்டேன். "என்ன சைஸ்'' என்றார். "ஃபைவ் பை செவன் போதும்'' என்றேன். "இருபது ரூபாய் ஆகும்" என்றார். என்னிடத்தில் அப்போது காசு இல்லை. அதுவும் இல்லாமல் வடிவேலுதான் சொன்னார் என்று நான் சொன்னதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வேண்டுமானால் அவரை வந்து சொல்லச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டார். ‘தேவர் மகன்' படத்தில் கமல்ஹாசனோடு அவர் இருந்த படத்தையே வெட்டி எடுத்து வண்ணத்திரையில் பயன்படுத்தினேன். ‘மகராசன்' படப்பிடிப்பில் அவரைச் சந்தித்தபோது "பார்த்தேண்ணே... ரொம்ப சந்தோஷம்'' என்று நெகிழ்ந்தார்.
அந்தக் கிராமத்து மனசு அவருக்கு இப்போதும் இருப்பதால்தான் அவர் தொடர்ச்சியாக வெற்றிக் கொடி நாட்டிய வண்ணம் இருக்கிறார். ‘அன்பு' என்ற படத்தின் படப்பிடிப்பு. ஊட்டியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பத்திரிகையாளர்களில் சிலர் அவரை நெருங்கி, ”விவேக் காமெடியைவிட உங்க காமெடிதாண்ணே சூப்பர். டி.வி.யைக் கிண்டல் பண்றது. போலீஸ் கான்ஸ்டபிளை வைத்துக் கிண்டல் பண்றதெல்லாம் ரொம்ப நாளைக்கு நிக்காதுண்ணே'' என்றனர். வடிவேலு பூரித்துப் போவார் என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர், "விவேக்கை அப்படிச் சொல்லாதீங்கண்ணே... அவனைப் போல வருமா... ரசனைக்காரண்ணே அவன்... பெரிய ரசனைக்காரன்'' என்றார் வடிவேலு.
நகைச்சுவை நடிகராக மிக உச்சத்துக்கு வந்த பின்னும் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கிறார் என்று வியப்பாக இருந்தது.
இந்த விஷயத்தில் அவரை வைத்து காமெடி, கீமெடி பண்ணிட முடியாது என்றுதான் தோன்றுகிறது.
பானுப்ரியம்!
தினமணி அலுவலகத்துக்கு பானுப்ரியா வீட்டில் இருந்து எனக்கு ஒரு போன் வந்தது.
அவருடைய பத்திரிகை தொடர்பாளர் நெல்லை சுந்தர்ராஜன் பேசினார். "மேடம் பேசணும்னு சொன்னாங்க'' என்றார். ரிஸீவர் பானுப்ரியாவின் கைக்கு மாறுகிறது.
"வணக்கம் சார்... இந்த வருஷம் வந்த தீபாவளி மலர் எனக்கு ஒண்ணு கிடைக்குமா? அதில சிவாஜி சார் என்னைப் பத்தி சொல்லியிருக்கறதா சொன்னாங்க. எனக்கு இங்க எங்கயும் பத்திரிகை கிடைக்கல'' என்றார்.
"கொடுத்தனுப்புகிறேன்'' என்றேன்.
"என்னைப் பத்தி என்ன சொன்னார்னு சொல்ல முடியுமா?'' என்றார்.
"இப்போது நடிக்கும் நடிகையரில் திறமையான நடிகையாக நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள் என்று கேட்டோம். அவர் உங்களைச் சொன்னார்'' என்றேன்.
"அது சரி. என்னைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்?'' என்றார் ஆர்வமாக.
"புத்தகமே அனுப்புகிறேன்'' என்றேன் மறுபடியும்.
"அனுப்புங்கள். என்ன சொன்னார் என்று சொல்லுங்கள்'' மீண்டும் ஆர்வம்.
"விஸ்வாமித்ரா' படத்தில் நீங்கள் அவருடன் நடித்தபோது உங்கள் நடிப்பை மிகவும் வியந்ததாகச் சொல்லியிருக்கிறார்'' என்றேன்.
ஆனால் அது அவருக்கு முக்கியமில்லை. அவர் வார்த்தையால் என்ன சொன்னார் என்று மீண்டும் கேட்டார்.
விஸ்வாமித்திரர் வாயால்(?) பிரம்மரிஷி பட்டம் வாங்குகிற தவிப்பு.
நான் தீபாவளி மலரை எடுத்து அந்தப் பகுதியை அப்படியே வாசித்துக் காண்பித்தேன். அவருக்குச் சந்தோஷம் தாளவில்லை.
அப்போது இன்னொரு சம்பவம் ஞாபகம் வந்தது.
நண்பர் ஒருவர் அவரைப் பேட்டி எடுக்கச் சென்ற போது கேள்விக்குத் தான் சொன்ன பதிலை திரும்பச் சொல்லுமாறு கேட்டிருக்கிறார். அது அப் படத்தில் அவர் பேசிய வசனம் பற்றியது. அவர் சொன்னதைக் குறிப்பெடுத்து வைத்திருந்த நிருபர் தோராயமாக அதைத் திருப்பிச் சொல்லியிருக்கிறார். பானுப்ரியா அவருக்குப் பேட்டி கொடுக்க மாட்டேன் என்று திருப்பி அனுப்பிவிட்டார். "இப்போதுதான் சொன்ன ஒன்றையே ஒழுங்காகக் குறிப்பெடுக்காத நீங்கள், இந்தப் பேட்டியை எப்படியெல்லாம் திரித்து எழுதுவீர்களோ.. மன்னிக்கவும்'' என்று சொல்லிவிட்டார். சிவாஜி என்ன சொன்னார் என்பதில் அவர் எடுத்துக் கொண்ட பிரியம் சரிதானே?
கவுண்டமணி... செந்தில்!
கவுண்டமணி - செந்தில் காமெடி சினிமாவுக்கு மிகவும் தொன்மையான பாணி. லாரல்- ஹார்டி, டாம் அண்ட் ஜெர்ரி டைப். வலுத்தவர் இளைத்தவர்... ஒருவருக்கு விஷயம் தெரிந்தவர் என்ற அடையாளம்.. இன்னொருவருக்கு அப்பாவித் தோற்றம். இந்த இருவருக்கும் ஓயாமல் அடிநாதமாக ஒரு விரோதம் இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால் இருவரும் பிரிவதே இல்லை.
செந்திலை கவுண்டமணி எல்லை மீறிப் பேசுகிறார் என்றுகூட பத்திரிகையில் எழுதினார்கள். கவுண்டமணி கண்டு கொள்வதாக இல்லை. அவர் சுமார் நூறு படங்களுக்கு மேல் செந்திலை விதம்விதமாகத் திட்டித் தீர்த்தார். செந்திலும் அவரை எடக்கு மடக்காக மாட்டிவிட்டுக் கொண்டிருந்தார். மக்களும் ரசித்துக் கொண்டிருந்தார்கள். எட்டி உதைப்பதும், பன்றி, ஆமைத் தலையன், சொறி நாய் என்றெல்லாம் செந்திலை விளிக்க ஆரம்பித்தார். பத்திரிகை கண்டிப்பது இருக்கட்டும். செந்தில் வீட்டில் இதைத் தடுக்க முனைய மாட்டார்களா? இப்படியெல்லாம் நடிக்காமல் இவர் தவிர்க்கலாமே என்றும் தோன்றியது.
‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்' படத்தின் படப்பிடிப்பில் நானும் இன்னொரு பத்திரிகையாளரும் தைரியமாக கவுண்டமணியிடம் இதைப் புகாராகவே சொன்னோம்.
"அவரை ஏன் அப்படியெல்லாம் திட்டுகிறீர்கள்?''
சற்று தூரத்தில் நாற்காலியிலேயே உட்கார்ந்து கண்ணயர்ந்து கொண்டிருந்த செந்திலைக் காட்டி கவுண்டமணி சொன்னார்: "இவனைப் பாருங்க. இவன் தலையைப் பாருங்க. நான் சொல்றது சரியா... தப்பா? நீங்களே சொல்லுங்க '' என்றார் சலிப்புடன். கவுண்டமணி ஏற்கெனவே செந்திலைப் பற்றி ஏற்படுத்தி வைத்திருந்த சித்திரத்தின் காரணமாகவோ, செந்தில் அப்படி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சாய்ந்திருந்த நிலையைப் பார்த்தோ எங்களுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
"சிரிப்பு வருதில்ல... போய்ட்டு வாங்க'' அனுப்பிவிட்டார்.
செந்திலை அவர் சினிமாவில் மட்டும் கிண்டல் செய்யவில்லை, நிஜத்திலும்தான். அவரும் அதை ஏற்றுக் கொண்டுதான் அண்ணே... அண்ணே என்று அவரிடம் பழகிக் கொண்டிருந்தார்.
எப்படி சுயமரியாதை பற்றி யோசிக்காமலேயே அவரால் இருக்கமுடிகிறது என்று யோசித்துப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.
2 கருத்துகள்:
"NINAIVALAIGAL"...."ARUMAI" SIR..
சுயமரியாதை?
அதை விட மனிதர்களுக்கு பணம் தானே முக்கியமாகி விட்டது?
மேலும் கவுண்டமணி செந்திலை கேலி செய்வதையோ, திட்டுவதையோ நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளத்தான் வேண்டுமே ஒழிய அதில் பெரிதாய் ஆராய்ச்சி செய்ய தேவையில்லை.
கருத்துரையிடுக