நடிகைகள் கைது!
சமீபத்தில் தொலைக்காட்சி நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டார். இது போன்ற செய்திகளின் போதெல்லாம் இந்தச் செய்தியின் பின்னணி என்ன என்ற யோசனை ஓடும்.
நடிகைகளை மிரட்டுவதற்கு இது ஒரு வழி என்பார்கள் சிலர். அவர்கள் யாருக்கு இணங்க மறுத்தார்கள் என்பதைப் பொறுத்து அந்த மிரட்டல் அமையும். அது காவல்துறை சம்பந்தமானதா, அரசியல் சம்பந்தமானதா, செல்வந்தர்கள் சம்பந்தப்பட்டதா, இல்லை சினிமா துறையினரே ஒருத்தருக்கு ஒருத்தர் விரோதித்துக் கொண்டு ஏற்பட்டதா என்பது சாவகாசமாகத் தெரியவரும்.
2003 அல்லது 04 என்று நினைக்கிறேன்.
வரிசையாக தமிழ்ப்பட நடிகைகள் விபசார வழக்கில் கைதானார்கள். கோர்ட், பத்திரிகை என்று செய்திகள் ஆளுக்கொரு தினுசாக எழுதித் தீர்த்தார்கள். ‘சின்ன ஜமீன்' படத்தில் அறிமுகமான நடிகை வினிதா. தொடர்ந்து சரத்குமாருடன் ‘வேலுச்சாமி', பிரபுவுடன் ‘வியட்நாம் காலனி' போன்ற அப்போதைய முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். அவரை சாலையில் நின்று விபசாரத்துக்குக் கூவி அழைத்தவர் போல கைது செய்தார்கள். தொடர்ந்து மாதுரி என்ற நடிகையும் பிறகு லாவண்யா, புவனேஸ்வரி, விலாசினி என்று ஆவேசம் வந்தது போல கைது செய்தபடி இருந்தார்கள். பத்திரிகைகளுக்குக் கொண்டாட்டம். காவல்துறை லிஸ்டில் அடுத்து இருக்கும் நடிகைகள் என்று கிட்டத்தட்ட அப்போதிருந்த அத்தனை கதாநாயகிகளையும் பட்டியல் போட்டார்கள்.
நடிகைகள்தான் திடீரென்று தொழிலை மாற்றிக் கொண்டார்களா? இல்லை காவல்துறைதான் தீவிர நேர்மையாகிவிட்டதா? வீண்பழி சுமத்தி வலையில் வீழ்த்தும் சதியா, இடைத்தரகர்கள் சரியாக லஞ்சம் தரவில்லையா?
விபசாரம் செய்ததால்தான் கைதானார்களா? விபசாரம் செய்ய மறுத்ததால் கைதானார்களா என்று ஏராளமாக யோசிக்க வைத்தது அந்தக் கைது சம்பவம்.
இவர்களில் சிலர் மீண்டும் நடிப்பதற்கு வரவேயில்லை. பிறந்த நாளுக்கு கேக் வெட்டினார் என்றெல்லாம் தினம் தினம் நாள்களைக் கொண்டாடிக் கொண்டிருந்தவர்கள் அதன் பிறகு கொண்டாட்டம் அற்றவர்களானார்கள். அதன் பிறகு வந்த பிறந்தநாள்கள், குடும்ப விழாக்கள் எல்லாமே எந்தத் தடயமும் இல்லாமல் போயின. சினிமா நிகழ்ச்சிகளிலோ, வேறு பொது நிகழ்ச்சிகளிலோகூட அவர்கள் தென்படவில்லை. சிலர் மீண்டு வந்தார்கள். முன்பு போன்ற கலகலப்பான இடங்களைத் தவிர்த்தார்கள். பத்திரிகை என்றால் இன்னும் விலகிப் போனார்கள்.
எதற்கான பலிகடா இவர்கள் என்பது மட்டும் கடைசி வரை புரியவே இல்லை.
பேக் அப்!
சினிமாத் துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சினிமாப் படைப்பாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பிரச்சினை வலுத்திருந்த நேரம் 1997-ஆம் ஆண்டு.
இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஒரு தரப்பாகவும் மற்றத் தொழில் பிரிவினர் இன்னொரு பிரிவாகவும் செயல்பட்டனர்.
பாலுமகேந்திரா இயக்கிய ‘ராமன் அப்துல்லா' படத்தில் துணை நடிகர்கள் சங்கத்தில் பதிவு பெறாதவர்கள் நடித்துக் கொண்டிருப்பதாகத் தகவல் வந்து அப்போதைய பெப்ஸி தலைவர் விஜயன் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்தார். பாலுமகேந்திராவும் விஜயனும் விவாதித்தனர். விவாதம் வளர்ந்தது. "ஷூட்டிங் பேக் அப்'' என்று அறிவித்தார் விஜயன்.
பேக் அப் சொல்வது இயக்குநரின் உரிமை. படப்பிடிப்பு முடிந்தது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கும் அறிவிப்பு. படத்தின் கேப்டன் சொல்ல வேண்டிய வார்த்தையை அவர் எப்படிச் சொல்லலாம் என்று பிரச்சினை வெடித்தது. "எங்கள் தொழிலாளர்களான லைட்மேன், கேமிராமேன், செட் கலைஞர்கள், போன்றவர்கள் மேற் கொண்டு பணியாற்ற வேண்டாம் என்பதற்கான அறிவிப்பு அது. அதைச் சொல்வதற்கு எனக்கு உரிமை உண்டு'' என்றார் விஜயன்.
இயக்குநரின் பணியில் தலையிட்டது தவறு என்று இணைந்தார்கள் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும்.
"யாருமே வேலை செய்யாதீர்கள் என்று சொல்லியிருந்தால் தவறில்லை, பேக் அப் என்று சொல்வதுதான் தவறா? வார்த்தையில் என்ன இருக்கிறது'' என்றார் விஜயன்.
மூன்று ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருந்த தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினையும் சேர்ந்து கொள்ள ஒரு வருடத்துக்கும் மேலாக சினிமா ஸ்ட்ரைக். பத்திரிகையாளர்களுக்கு சினிமாப் பக்கத்தில் பிரசுரிக்க புகைப்படம் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. சினிமாப் பத்திரிகைகள் சிலவற்றைத் தற்காலிகமாக மூடினர்.
படைப்பாளிகள் தனியாக தொழிலாளர் சங்கங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கினர். டப்பிங், சண்டைப் பயிற்சி, கேமிரா, இசை, லைட் மேன், நடனக் கலைஞர்கள், சமையல் கலைஞர்கள் என எல்லாத் துறையும் உருவாக்கப்பட்டது. விஸ்வாமித்திரர் கடவுளுக்குப் போட்டியாக இன்னொரு உலகத்தைச் சிருஷ்டித்ததாகச் சொல்லுவார்கள். கடவுள் படைத்தது துளசி என்றால் விஸ்வாமித்திரர் படைத்தது நாய்த் துளசி. பார்ப்பதற்கு துளசி மாதிரியே இருக்கும் அதுவும்.
கோபத்தில் தொழிலாளர்கள் பாரதிராஜாவின் காரை அடித்து நொறுக்கினர். ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இறுதியில் தொழிலாளர்கள் - தயாரிப்பாளர்கள் உடன்பாடு ஏற்பட்டு பிரிந்தவர் கூடினர்.
இப்போதும் பேக் அப் என்று ஏதாவது படப்பிடிப்பின் முடிவில் இந்த வார்த்தையைக் கேட்கும் போது இந்த ஓராண்டு பிரச்சினையும் ஓடி மறையும் மனதுக்குள்.
ரவி- ஷங்கர்!
காமெடி நடிகர்களாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டு வேறொரு துறையில் புகழின் உச்சிக்குப் போனவர்கள் இருவரை எனக்கு நன்கு தெரியும். ஒருவர் இயக்குநர் ஷங்கர். இவருடைய அதிக பட்ச ஆசை எஸ்.வி. சேகர் போல நாடகம் போட வேண்டும் என்பதாக இருந்ததாக என்னிடம் கூறியிருக்கிறார். அது போல சில படங்களில் நகைச்சுவை பாத்திரங்களிலும் நடித்தார்.
இன்னொருவர் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். சில படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களைக் கொண்டு வந்து வண்ணத்திரையில் பிரசுரிக்கவும் கேட்டிருக்கிறார். அப்போதெல்லாம் அவர் ரவி என்ற பெயரில் எனக்கு அறிமுகம்.
இருவருமே தங்கள் திறமையின் இன்னொரு பக்கத்தை வாழ்வின் முக்கிய முடிவாக திசை திருப்பியவர்கள். உயரத்தின் உச்சிக்குப் போனவர்கள். இருவருக்குமே பொது அம்சமாக தந்தையின் பிரிவு இருந்தது. இளமையில் வறுமையும்.
"இளம் வயதில் பக்கத்துவீட்டு தெலுங்குக் குடும்பத்தினருடன் சேர்ந்து சீட்டு ஆடுவது வழக்கமாக இருந்தது. தினமும் ஜெயிப்பவர்கள் யாராவது பிரியாணியோ, டீ பிஸ்கட்டோ வாங்கித் தருவார்கள். பழங்கள் வாங்கித் தருவார்கள். உலகிலேயே சுகமான வாழ்க்கை அதுதான் என்று நினைத்தேன். தினமும் சீட்டு விளையாட பணம் வேண்டுமே? சொந்த வீட்டிலேயே திருட ஆரம்பித்தேன். கஞ்சா வியாபாரம் செய்ய ஆந்திராவுக்குப் போனேன்'' என்று ஷங்கர் என்னிடம் கூறியிருக்கிறார்.
"வறுமையின் உச்சத்தில் தினமும் சென்னையில் உள்ள கோவில்களில் மதியம் தரும் அன்னதானத்தில் தினமும் கலந்து கொள்வேன். கோடம்பாக்கத்தில் உள்ள கோயில்களில் நான் பலமுறை அப்படிச் சாப்பிட்டு நாள்களை ஓட்டியிருக்கிறேன். ஒருமுறை கோவில் சாப்பாடு கிடைக்காமல் போய்விட்டது. பசி தாளவில்லை. ஒரு டீக்கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை அணுகி ‘பசிக்குது எனக்கு ஒரு பன் வாங்கித் தரமுடியுமா?' என்று கேட்டேன்'' என்று ரவிவர்மன் சொன்னார். இந்த இருவரின் வாழ்க்கைச் சுருக்கத்தையும் நான் பத்திரிகையில் தொடராக எழுதியிருக்கிறேன்.
இருவருமே ஒரு கட்டத்தில் சுதாரித்தார்கள். வெற்றி என்றால் இந்திய அளவில் வெற்றியை நிலை நாட்டினார்கள். நம்மிடம் இருக்கும் திறமையை இனம் காணாமலேயே முயற்சி செய்து கொண்டிருப்பது எத்தனை விரயமானது என்பதற்கு நல்ல உதாரணமாக இருந்தது இந்த இரு தொடர்களும்.
2 கருத்துகள்:
** நம்மிடம் இருக்கும் திறமையை இனம் காணாமலேயே முயற்சி செய்து கொண்டிருப்பது எத்தனை விரயமானது என்பதற்கு நல்ல உதாரணமாக இருந்தது இந்த இரு தொடர்களும். **
தமிழ் மிகப்பெரிய தத்துவத்தை எவ்வளவு எளிதாக எழுதி விட்டீர்கள்.
"நடிகைகள், அவர்களுக்கு என்ன படம் இல்லையென்றாலும் படுத்து சம்பாரித்து விடுவார்கள்" என்று சாதாரணமாக பேசி போகின்றவர்களையும், ஒரு நிமிடம் அதன் பின் இருக்கும் அரசியலையும் சிந்திக்க வைத்த ஒரு பதிவு.
பாராட்டுக்கள்!
கருத்துரையிடுக