செவ்வாய், ஏப்ரல் 28, 2009

அன்பால் ஆனதொரு மருத்துவம்!

"வசூல்ராஜா' எம்.பி.பி.எஸ். பார்த்திருந்தால் அதில் கமல்ஹாசனின் கட்டிப்பிடி வைத்தியத்தை மறந்திருக்க மாட்டீர்கள். நோயாளிகள் மீது நாம் காட்டும் அக்கறைதான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மருந்தைவிட முக்கியமானது என்பது கதையின் முடிச்சு. அது நகைச்சுவைப் படம். பாலியேடிவ் கேர் என்று அழைக்கப்படும் இதன் நிஜ வடிவத்தில் காமெடிக்கு இடமில்லை. அரவணைப்பும் ஆறுதலும் நிறைந்த இந்த வைத்திய உலகம் நெகிழ்ச்சியானது.



சென்னையில் தன் "லஷ்மி பாலியேடிவ் கேர் கிளினிக்' நடத்திவரும் டாக்டர் மல்லிகா திருவதனனைச் சந்திக்கச் சென்றபோது அந்த நெகிழ்ச்சியை ரத்தமும் சதையுமாக உணரமுடிந்தது.

"என்னம்மா நீ கொடுத்த மருந்து வலியைக் குறைக்கவேயில்லையே. ரெண்டே நாள்ல மறுபடி வலிக்க ஆரம்பிச்சுடுச்சே'' என்கிறார் கேன்சர் வலியால் அவதிப்படும் ஒரு பெரியவர். "அடடா'' என்று அன்பாகக் கேட்கிறார். வயிற்றைப் பிடித்துக் கொண்டு வளைந்து அமர்ந்து மீண்டும் அந்தப் பெரியவர் சொல்கிறார்...

"ரொம்ப வலிக்குதும்மா...'' என்று கண்களில் பயம் கொப்பளிக்க இறைஞ்சும் குரல். கேட்கும் நமக்கே வலிக்கிறது. நம்மை பக்கத்து அறையில் உட்கார வைத்துவிட்டு அவரிடம் ஆதரவோடு விசாரித்துவிட்டு வந்து பேச ஆரம்பித்தார். "வழக்கமாக மருத்துவத்துக்கும் இதற்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம். அவர்கள் cure என்பதில் கவனமாக இருப்பார்கள். நாங்கள் care என்பதில் கவனமாக இருக்கிறோம்'' என்று ஆரம்பித்தார். "பாலியம் என்பது ஓர் அரபுச் சொல். அதற்கு அணைத்துக் கொள்ளுதல் என்பதுதான் பொருள். பாலியேடிவி கேர் என்பது அதிலிருந்து உருவாக்கப்பட்ட வார்த்தை.

கேன்சர், நுரையீரல் நோய், இதய நோய், இளம்பிள்ளை வாதம், கிட்னி பாதிப்பு, அல்சைமர், கணையம் பழுதடைதல், பக்கவாதம், ஆஸ்துமா போன்ற எத்தனையோ பாதிப்புகளால் மக்கள் வலியில் துடிக்கிறார்கள். இவர்களில் சிலருக்கு ஒரு கட்டத்துக்கு மேல் குணமாக்குதல் என்பதைவிட, வலிநிவாரணமளிப்பதுதான் முக்கியம். இந்த மருத்துவ முறை மேலை நாடுகளில் வழக்கத்துக்கு வந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்தியாவில் 1986 முதல் இந்த மருத்துவம் செயல்படுகிறது. பேராசிரியர் எம்.ஆர்.ராஜகோபால் என்பவர்தான் இதை முதலில் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர். இந்தியாவைப் பொறுத்தவரை பாலியேடிவ் கேரின் தந்தை என்று அவரைச் சொல்லலாம். கேரளத்தைச் சேர்ந்த அவரால்தான் இப்போதும் இந்தியாவிலேயே அங்கு இது பிரபலமாகச் செயல்பட்டு வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை இரண்டாயிரம் ஆண்டின் துவக்கத்தில் இதற்கான ஆரம்பங்கள் செயல்பட்டன. எங்கள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒன்பதாண்டுகள் ஆகின்றன. ஆர்.எம்.டி., டீன் பவுண்டேஷன், ஜீவோதயா, வேலூர் சி.எம்.சி. போன்றவை பேலியேடிவ் கேருக்காக அக்கறை எடுத்துச் செயல்பட்டு வருகின்றன.

இதற்கான வலி போக்கும் மருந்தாக மார்ப்பைன் வழங்குகிறோம். ஓபியம் வகைசார்ந்த இந்த மருந்தை, எல்லா மருத்துவரும் தருவதற்கு அனுமதியில்லை. இதற்கான பயிற்சி பெற்ற மருத்துவரே வழங்க முடியும். ஆகவே இதற்கான எட்டுவாரப் பயிற்சி எடுத்துக் கொள்வது அவசியம். அதில் மூன்று நாள்கள் மட்டுமே நேரடிப் பயிற்சிக்கு அழைக்கப்படுகிறார்கள். ஒரு நாள் தேர்வு இருக்கும். அவ்வளவுதான். இதற்கு ஆயிரம் ரூபாய்தான் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஓபியம் கலந்த மருந்து என்பதால் இதில் போதைக்கு அடிமையாகிவிடுவார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. நோயாளிகளின் உடல்நிலை, வலி ஆகியவற்றைப் பொறுத்தே இது வழங்கப்படுகிறது. மேலும் இதை ஊசி மூலம் செலுத்துவதில்லை. மாத்திரையாகத்தான் வழங்குகிறோம். நிம்மதியான தூக்கமும் வலியற்ற நிலையுமே இதில் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

நோயாளிகள் மீது அக்கறை உள்ள மருத்துவர் எவரும் எங்களிடம் தொடர்பு கொள்ளலாம். நோயாளிகள் என்றதும், அவர்களைக் குணப்படுத்துவது மட்டுமே டாக்டர்கள் நோக்கமாக இருக்கிறது. இன்னும் சில நாளில் இறந்துவிடக் கூடியவருக்கும் தொடர்ந்து லட்சக் கணக்கில் செலவு செய்து மருத்துவம் பார்க்கிறார்கள். பலர் நிலம், வீடு விற்று வைத்தியம் பார்க்கிறார்கள். நகைகளை விற்கிறார்கள். குழந்தைகள் பள்ளியைவிட்டு நிறுத்தப்படுகிறார்கள். ஒரு வாரம் உயிரைத் தக்க வைப்பதற்கு இப்படி வைத்தியம் செய்வதைவிட, ஆறுதல் வைத்தியமான இது மிக்க பலன் அளிப்பதைக் கவனிக்கிறோம்.

வலி இல்லாமல் இருப்பதால் அவர்கள் தாம் ஆரோக்கியமாக இருப்பதாக நினைக்கிறார்கள். அதனாலேயே சாப்பிடவும் நம்பிக்கை பெறவும் ஆரம்பித்து புத்துணர்வு அடைகிறார்கள். சிகிச்சையால் கிடைக்காத பலன், சில சமயங்களில் இந்த நம்பிக்கையால் கிடைத்துவிடுகிறது.

உள்ள ரீதியான, உடல் ரீதியான, சமூக ரீதியான, நம்பிக்கைகள் ரீதியான ஓர் அரவணைப்பாக இருக்கும் இச் சிகிச்சை, எல்லா மருத்துவமனையிலும் செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம். மருத்துவப் படிப்பிலும் இது சப்ஜெக்டாக நடத்தப்பட்டால் மக்களுக்குப் பெரிய அளவில் பலன் கிடைக்கும்'' என்று அவர் சொல்லி முடித்ததும் நோயாளிகள் சார்பாக நிம்மதி பெருமூச்சுடன் விடைபெற்றோம்.

contact nos: 2532 2684, 2641 1597 (Laxmi paliyative care centre)

திரைக்குப் பின்னே- 30

டி.வி. சானல் நதியா!

‘சின்னமேடம்' முடிந்து அமெரிக்காவுக்குச் சென்று செட்டில் ஆகிவிட்டார் என்பது உறுதியானதும்தான் எனக்கு நதியா அறிமுகம். அவரைப் பார்க்காமலேயே அவரைப் பற்றிய செய்திகளை எழுத ஆரம்பித்தேன். நதியாவுக்குக் கிடைத்த ஒரு ரசிகர்தான் காரணம். சலபதி என்ற அந்த ரசிகர் தன் பெயரையே நதியா சலபதி என்று மாற்றி வைத்துக் கொண்டவர்.

நதியாவை மீண்டும் நடிக்க வைக்க வேண்டும் என்பதுதான் அவருடைய வாழ்க்கையின் ஒரே குறிக்கோள். "அக்கா இப்போது முன்பைவிட அழகாக இருக்கிறார். சென்ற வாரம் மும்பை வந்த போது பார்த்தேன்'' என்றோ, "அங்கே டி.வி. சானலில் பணியாற்றி வருகிறார். அவரை அங்கே நாடகத்தில் நடிக்க அழைக்கிறார்கள்'' என்றோ நதியாவைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருப்பார். அவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து என்னைச் சந்திக்க பத்திரிகை அலுவலகத்துக்கு வந்து இப்படி ஏதாவது ஒரு வரி தகவலையோ அவருடைய சமீபத்திய போட்டோவையோ கொடுத்துவிட்டுச் செல்ர். நதியா நாய் வளர்க்கிறார், பூனை வளர்க்கிறார், அமெரிக்க சானலைவிட்டு பிரிட்டன் சேனலில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்... இப்படி வாசகர்களுக்கும் பிடித்தமான செய்தியாகத்தான் இருக்கும் அவர் சொல்லும் செய்தியெல்லாம்.

பெரும் பிரயத்தனங்களுக்குப் பிறகு எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் அவருக்கு முக்கியமான வேடமும் சம்பளமும் வாங்கித் தருவதற்கு காரணமாக இருந்தார். அந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் நதியாவை நான் ஒரே ஒரு முறை சந்தித்தேன்.

"டி.வி. சானல் வேலையை விட்டு விட்டீர்களா?" என்றேன்.

"அதுதான் எனக்குப் புரியவில்லை. பார்க்கிற பலரும் இதையே கேட்கிறார்கள். நான் எந்த சேனலிலும் வேலை பார்த்ததில்லையே.. எப்படி இப்படியொரு செய்தி பரவிற்று என்றே தெரியவில்லை. ஆனால் நான் தமிழகம் வந்ததும் நூறு பேராவது என்னிடம் கேட்டிருப்பார்கள்'' என்றார்.

நான் பக்கத்தில் இருந்த ’நதியா சலபதி'யைப் பார்த்தேன். அவர் என்னுடைய அதிர்ச்சியை மிகச் சாதாரணமாகப் பார்த்தார். "டீ சாப்பிட்றீங்களா?'' என்றார் அந்தச் செய்திக்குச் சம்பந்தமே இல்லாதவராக.



ஒரு புறக்கணிக்கப்பட்ட பாட்டு!



ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்கப்பட்ட ஒரு பாடல் ஒரு படத்தையே தூக்கி நிறுத்தியதோடு அதில் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகையர், இயக்குநர் உள்ளிட்ட பலரின் வெற்றிக்கும் காரணமாக இருந்தது என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். ’திருடா திருடி' படத்தில் இடம்பெற்ற ’மன்மதராசா மன்மதராசா' சுமார் ஓராண்டுக்காலம் தமிழகத்தை ஆட்டம் போட வைத்துக் கொண்டிருந்த பாடல். ஆனால் அந்தப்பாடலை கவிஞர் யுகபாரதி வேறொரு படத்துக்காகத்தான் எழுதினார். அந்தப் படத்தில் பயன்படுத்த இயலாத இந்தப் பாடலை ’திருடா திருடி' படத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இயக்குநர் சுப்ரமணியம் சிவாவும் இசையமைப்பாளர் தினாவும் யுகபாரதியும் விரும்பினர்.

என்ன காரணத்தாலோ தயாரிப்பாளருக்கு இதில் அத்தனை ஆர்வம் ஏற்படவில்லை. எல்லாம் பொருளாதார நெருக்கடியால்தான். வெளிநாட்டிலோ, வெளிமாநிலத்திலோகூட படப்பிடிப்பை நடத்த இயலாத நிலை. நெய்வேலி அனல் மின் நிலையத்தின் நிலக்கரி வெளியில்தான் படப்பிடிப்பு நடத்த வேண்டியதாக இருந்தது. ஆடை அணிகலன்களிலும்கூட செலவு செய்ய முடியாமல் இருந்ததால் படத்தில் அப் பாடலில் பயன்படுத்திய கறுப்புத் துணியை மலிவுவிலைக் கடையான சரவணா ஸ்டோர்ஸில்தான் வாங்கினார்கள். உடன் ஆடுவதற்கு நடனக் கலைஞர்கள் அமர்த்தவும் யோசனை. சரி... தனுஷ், சாயாசிங் இருவர் மட்டுமே போதும் என்று முடிவாகியது. பாடகி? புதிய பாடகிதான். மாலதி அறிமுகப்படுத்தப்பட்டார். பாடகர் மாணிக்க விநாயகம். எல்லாவிதத்திலும் ஒரு மாத்து கம்மிதான் என்று தெரிந்தே உருவாக்கப்பட்ட அந்தப் பாடல் காட்சிதான் தமிழகத்தின் அனைத்துத் திரையரங்குகளிலும் ஒன்ஸ்மோர் கேட்கப்பட்டது. டி.வி. சேனல்களில் லட்சம் தடவைக்கு மேல் ஒளிபரப்பாகியது. படம் ஓடியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. பாடகர், பாடல் எழுதியவர், இயக்குநர். நடிகர்- நடிகை, இசையமைப்பாளர், நடனக் கலைஞர் என எல்லோர் வாழ்க்கையையும் சில அடி உயர்த்தியது.

தமிழ் சினிமா எல்லார் கணிப்பையும் ஏமாற்றி கண்ணில் மண் தூவி கரகாட்டம் ஆடிவிடும் என்பதற்கு ஓர் எளிய உதாரணம்தான் ’மன்மதராசா'.


எம்.ஜி.ஆருக்கு தெரியுமா?



தமிழ் சினிமாவின் ஆதாரமான செய்திகளைச் சேகரித்து வைத்திருப்பதில் மக்கள் தொடர்பாளர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் பங்கு மகத்தானது. பாகவதர் காலத்துக்குப் பிந்தைய காலத்தில் இருந்து இவர் தமிழ் சினிமாவில் பத்திரிகைத் தொடர்பாளராகப் பணியாற்றி வருகிறார். சொல்லப் போனால் தமிழ் சினிமாவில் முதல் பத்திரிகைத் தொடர்பாளர் இவர்தான். இதற்குமுன்னர் இப்படி ஒரு பதவியும்கூட தமிழ்சினிமாவில் இல்லை. எல்லா திரைப்படம் பற்றியும் ஆவணப்படுத்தும் எண்ணம் இவருக்கு எப்படி ஏற்பட்டிருக்கும் என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. திரைப்படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், சென்சார் செய்யப்பட்ட தேதி, திரையிடப்பட்ட செய்தி, ஓடிய நாள்கள், கிடைத்த விருதுகள் என எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறார். ஏதாவது தகவலைக் கேட்டால் அவருடைய ஞாபகத்திலிருந்தே அவரால் பல விஷயங்களைச் சொல்ல முடிவது மிகவும் ஆச்சரியம். குறைந்த பட்சம் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஒரு புகைப்படமாவது இவரிடம் இருக்கும்.

அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு அதிர்ச்சியான செய்தி இது.

எம்.ஜி.ஆருக்கு ’ரிக்ஷாகாரன்' படத்துக்கு பாரத் விருது கிடைத்தது பற்றியது. உண்மையைச் சொன்னால் யாராவது அடிப்பார்கள் என்ற தயக்கம் இருப்பதால் அந்த உண்மையை சம்பந்தப்பட்டவர்கள்கூட இப்போது மறுக்கக்கூடும். ஏனென்றால் இதை இவர் வேறு எங்கும் இச் செய்தியைப் பதிவு செய்யவும் இல்லை.

72 ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு திரைக்கலைஞருக்கு பாரத் விருது வழங்க இந்திய அரசு முடிவு செய்திருந்தது. அப்போது இந்திய திரைப்பட விருது கமிட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த செளந்திரா கைலாசம் இடம் பெற்றிருந்தார். கமிட்டியில் இப்படி ஒரு கருத்துத் தெரிவிக்கப்பட்டதும் பட்டென்று அவர் "தமிழகத்தில் என்றால் எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாருக்கு வழங்க முடியும்'' என்று உடனடியாகத் தெரிவித்தாராம். தமிழகத்தைச் சேர்ந்த வேறு சிலரும் அங்கே இருந்தார்கள். அவர்களுக்கு ஆச்சரியம். எப்படி எம்.ஜி.ஆருக்குத்தான் என்று இவர் உறுதியாகச் சொல்கிறார் என்று.

வெளியே வந்து இதை அவரிடம் கேட்டனர். அவரும் "அவரைத் தவிர வேறு யாரைச் சொல்ல முடியும்'' என்று கேட்டிருக்கிறார் மீண்டும்.

"ஏன் சிவாஜியைச் சொல்லியிருக்கலாமே?'' என்றனர் மற்றவர்கள்.

"அடக் கொடுமையே.. நான் அவரைத்தானே சொன்னேன்? சிவாஜி என்று சொல்வதற்குப் பதிலாகத்தான் எம்.ஜி.ஆர்.. எம்.ஜி.ஆர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேனே'' என்று புலம்பியிருக்கிறார்.

மீண்டும் உள்ளே சென்று "நாங்கள் சொல்ல வந்தது சிவாஜியைத்தான். நா பிரண்டு எம்.ஜி.ஆர் என்று சொல்லிவிட்டோம்.'' என்று சொல்வதற்கு அனைவருக்கும் தயக்கம். எம்.ஜி.ஆர் பெயரை பரீசிலித்துவிட்டு பிறகு சிவாஜியின் பெயரை மாற்றிச் சொன்னதாகத் தெரிந்தால் எம்.ஜி.ஆரின் வருத்தத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். சரி கிடக்கட்டும் விடுங்கள் என்று மனதைத் தேற்றிக் கொண்டனர்.

-இதுதான் அவர் சொன்ன சம்பவம்.

இது உண்மையாக இருந்தால் சிவாஜிக்கு நேர்ந்த எப்பேர்பட்ட கொடுமை இது?

செவ்வாய், ஏப்ரல் 21, 2009

திரைக்குப் பின்னே- 29

பழைய ஞாபகங்களும் புதிய ஞாபகங்களும்

எல்டாம்ஸ் சாலையில் உள்ள அன்னை இல்லத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களைச் சந்திக்கப் போனேன். இன்னமும் லட்சிய நடிகரின் கணீர் குரல் ‘பூம்புகாரை', ‘வானம்பாடி'யையோ நினைவு படுத்தியது. அவருக்குக் கலைஞரைப் பற்றி நிறைய விரோதமான கருத்துகள் இருந்தன. அவரைப் பற்றிக் கிண்டலாக சில விஷயங்களைச் சொன்னார். அண்ணாவுக்கும் அவருக்குமே கருத்துவேறுபாடுகள் இருந்ததாகவும் கலைஞர் மீது அண்ணா பல முறை கோபமுற்று இருந்ததாகவும் கூறினார். தி.மு.க.வில் இருந்து கலைஞரும் முரசொலி மாறனும் விலகிக் கொள்ள முடிவெடுத்த நேரத்தில் அதைத் தாம்தான் மறுத்து பிரச்சினையை சரி செய்ததாகவும் கூறினார்.

இதையெல்லாம் புத்தகமாகப் போடும் நோக்கத்தோடு அதை டைப் செட் செய்து வைத்திருந்தார். (இப்போது புத்தகமாக வந்திருக்கக் கூடும்.) அதில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பக்கம் பக்கமாக வாசித்துக் காட்டினார். நான்கு, ஐந்து மணி நேர சந்திப்புக்குப் பின் அந்தச் சந்திப்பு முடிந்தது. அவரிடம் எதைப்பற்றிk கேட்பதற்காகச் சென்றேனோ அது முடியவில்லை. அதைத் தவிர வேறு விஷயங்களையெல்லாம் பேசிவிட்டு வந்ததாகத் தோன்றவே மீண்டும் மறுநாள் சந்திப்புக்கு நேரம் கேட்டேன்.

மறுநாளும் சந்திப்பு தொடர்ந்தது. நேற்றைய சந்திப்பின் ஜெராக்ஸ் போல மீண்டும் பேசிக் கொண்டு போனார். மீண்டும் அதே பக்கங்களை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். பழைய சம்பவங்களை அவர் அத்தனை ஞாபகமாக நேற்று நடந்தது போல சொன்னார். ஆனால் என்னிடம் நேற்று சொன்னதை முழுதுமே மறந்து விட்டார் என்று தெரிந்தது. நடுநடுவே எனக்கான தகவல்களை கிரகித்துக் கொண்டு விடைபெற்றேன்.

கிளம்பும்போது "நேற்று யாரோ ஒருத்தர் வந்து இதே மாதிரி கேட்டாரே'' என்றார் என்னிடமே.


ஒரு நடுநிசியில் ரஹ்மானுடன்!



"முட்டாள்கள்தான் இரவிலே தூங்குவார்கள்" என்று எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு சொன்னதாகச் சொல்வார்கள். கரிச்சான் குஞ்சுவின் கணிப்பின்படி ஏ.ஆர். ரஹ்மானும் அவரிடம் இசை கேட்டு வரும் திரைப்படத் துறையினரும் அதிமேதாவிகள். ஏனென்றால் ரஹ்மானின் உலகம் இரவு பத்துமணிக்கு மேல்தான் விடியும். இந்தியாவில் முக்காவாசிப்பேர் உறங்க ஆரம்பித்து மீதி இருப்பவரும் அதற்கான முயற்சியில் இருக்கும்போது அவர் விழிப்பார். அவர் விழித்திருக்கும் நேரத்தில் அவரைச் சந்திக்க வேண்டியவர்களும் விழித்திருக்க வேண்டியிருக்கிறது.

நான் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தபோது இரவு பதினொன்று. இன்னும் எழுந்திருக்கவில்லை. "லேட்டாத்தான் தூங்கினார்'' என்றனர். அதாவது எல்லோரும் விழித்த பின்னர் தூங்கியிருப்பார் என்று புரிந்தது. அவரை எதிர்பார்த்து இந்திப் பட உலகினர் சிலரும் பாடகர் ஹரிகரனும் வசந்த் (ரிதம்), ராஜீவ் மேனன் (கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்) ஆகிய இயக்குநர்களும் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தின (பாய்ஸ்)மும் காத்திருந்தனர். பத்திரிகையாளர்களில் நானும் தினத்தந்தி நிருபர் பழனிகுமாரும்.

ரஹ்மானின் அம்மா வந்து எல்லாரையும் சாப்பிடச் சொன்னார். அவருடைய வீட்டின் ஒரு பக்கத்தில் சிறிய தோட்டமும் பக்கத்தில் சமையல்கூடமும் உண்டு. அங்கு பொதுவாக எல்லா இரவிலும் பிரியாணி தயாராக இருக்கும் என்றார்கள். காத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும் அங்கே சம பந்தி போஜனம்தான். சமயத்தில் தோட்டக்காரனுக்குப் பக்கத்தில் அமீர்கான் அமர வேண்டியிருக்கும் எனவும் சொன்னார்கள்.

சாப்பிட்டுவிட்டு வந்த சிறிது நேரத்தில் ரஹ்மான் வந்தார்.

வரவேற்பறையில் அவருக்காகக் காத்திருந்த பூங்கொத்துகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தார். அனுப்பியிருப்பவர்களின் பெயரைப் பார்த்து உதடுகளில் புன்னகை மலர்கிறது. காத்திருந்த மனிதர்களைப் பார்த்தபோது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு புன்னகைவீதம் வழங்கினார். எதிர்பார்க்காதவராகவோ, மிகவும் நெருக்கமானவராகவோ இருந்தால் கண்கள் விரிய சிறிய ஆச்சரியத்தைக் காட்டினார். அவருக்குப் பழனிகுமாரைத் தெரிந்திருந்தது. முதலில் அவரிடம் பேசினார். "இவருக்கு ஒரு பேட்டி வேணும், ரொம்ப நாளா கேட்டுகிட்டிருக்கார்" என்றார் என்னைக்காட்டி.

"என்னைப் பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு? எல்லாம்தான் நீங்க எழுதிடறீங்களே.. என்னைப் பத்தி என்னைவிட உங்களுக்குத்தான் நல்லா தெரியுது'' என்றார். பொதுவாக பத்திரிகைகளைப் பற்றி அவர் அப்படிச் சொன்னார்.

அவருடைய குடும்பச் சூழல், அவருடைய அடுத்த திட்டங்கள், ஒப்பந்தமாகியிருக்கும் படங்கள் போன்றவற்றில் ரகசியம் எதுவும் இருப்பதில்லை. அது தானாகவே செய்தியாகிவிடுகிறது. இசையைப் பற்றியோ, சில நபர்களைப் பற்றியோ அவருடைய தனிப்பட்ட அபிப்ராயங்கள், அவருடைய பிரத்யேகக் கனவுகள், வதந்திகளுக்கான விளக்கங்கள் போன்றவற்றுக்குத்தான் அவருடைய நேரடியான பதில் தேவையாக இருந்தது.

"இவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள்... இன்னொரு நாள் பேசலாமா?'' என்றார்.

வந்தததற்கு ஒரே ஒரு கேள்வியைக் கேட்டு வைக்கலாம் போல, "எதற்கு இவ்வளவு முடி வளர்த்து வைத்திருக்கிறீர்கள்?'' என்றேன்.

சிரித்தார். "அதான் சொல்லிட்டேனே'' என்றார்.

எந்தப் பத்திரிகைக்காக எப்போது சொன்னார் என்று நினைவில்லாமல் "எப்போ?'' என்றேன்.

"கான்ட்ராக்ட் ஸைன் பண்ணியிருக்கேன். அது முடியறவரைக்கும் இப்படித்தான் இருக்கணும்''

பதிலைச் சொல்லிவிட்டு அடுத்து இருந்தவரைப் பார்த்தார். இந்தப் பார்வைக்காகக் காத்திருந்தவராக அடுத்து அவர் பேச ஆரம்பித்தார்.


புனைவும் நினைவும்!



குங்குமத்தில் ’நில்லுங்கள் ராஜாவே' ஆரம்பமானபோது எழுத்தாளர் சுஜாதா மீது ஆரம்பித்த பிரமிப்பு விகடனில் அவர் மறைவதற்கு முந்தின வாரம் எழுதிய கற்றதும் பெற்றதும் வரை குறையவே இல்லை. பாதி ராஜ்ஜியம், சொர்க்கத்தீவு, சிறுகதை எழுதுவது எப்படி, நடுப்பகல் மரணம், கொலையுதிர் காலம், தலைமைச் செயலகம், ஜீனோ, பிரிவோம் சந்திப்போம் என்று அவருடைய எழுத்துகள் ஒன்றுவிடாமல் படித்திருந்தாலும் அவரை நேரில் பார்க்கிற சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை. அது நான் சினிமா நிருபராகி அவரும் அடிக்கடி சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிற, இருக்கிற தருணத்தில்தான் சாத்தியமானது.

பத்திரிகைக்காக ஒரு முறை வரும் ஆண்டு சினிமா எப்படி இருக்கும் என்று கட்டுரை கேட்டு போன் செய்த போது எத்தனை எழுத்துகள் இருக்க வேண்டும் என்று அவர் திருப்பிக் கேட்டபோது, அவர் எவ்வளவு புதுசாக இருக்கிறார் என்பதை மீண்டும் புரிந்து கொண்டேன்.

ஆனாலும் நேரில் பேசுவதற்கு வாய்ப்பு இல்லை.

’ஆளவந்தான்' பட விழா சென்னை ராஜ அண்ணாமலை புரத்தில் நடந்தது. காலையில் ஆரம்பித்து மதியம் முடிந்த விழா அது. சுஜாதா வந்திருந்தார். விழா முடிந்து அனைவரும் வெளியே வரும்போது நடிகர்கள் மீது ஆர்வம் கொண்டு மக்கள் சூழ்ந்து கொண்டிருந்தபோது, சுஜாதா கூட்டத்திலிருந்து விலகி நடந்தார். அவருக்குப் பின்னால் கூட்டம் அலைமோதாத வருத்தம் ஏற்பட்டு நான் அவருக்கு வழித்துணைபோல பின்னாலேயே சென்றேன். அவர் காரை அடைந்தார். ஆடம்பரமற்ற சிறிய மாருதி 800 கார். நீல நிறம். அவர் காரில் ஏறிய பின்பு திரும்ப நினைத்தவன் காரின் ஒரு டயர் காற்று இல்லாமல் இருப்பதை அறிந்து ஓடிப்போய் சொன்னேன். அவர் நான் சொன்ன விஷயத்தை டிரைவரிடம் சொல்லிவிட்டு டயர் மாட்டுகிற வரை வேர்க்க விறுவிறுக்க காரிலேயே அமர்ந்திருந்தார்.

இன்னொரு தரம் அவருடைய வீட்டுக்குப் போய் இயக்குநர் ஷங்கர் பற்றி நான் எழுதிய புத்தகத்துக்கு முன்னுரை கேட்டேன். இப்போதெல்லாம் யாருக்கும் எழுதுவதில்லை என்று கூறிவிட்டார். சுமார் கால் நூற்றாண்டுக்காலமாக அவருடைய எழுத்துகளை வேதம் போல படித்தவன் என்பதை சில நிமிடங்களில் எனக்கு எப்படி வெளிக்காட்டுவது என்று தெரியவில்லை. எனக்குப் பேச்சே வரவில்லை. அங்கே பத்திரிகையாளர் சந்திரன் இருந்தார். பரிதாபப்பட்டாவது இரண்டு வரி எழுதித் தரமாட்டாரா என்று தன்னிரக்கம் சூழ்ந்தது.

"நீங்கள் எழுதினா ரொம்ப பெருமைப்படுவேன் சார்'' என்றேன்.

"புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே'' என்றபோது "சாரி சார்'' என்று வாசல் நோக்கி நகர்ந்துவிட்டேன்.


அவர் இறந்த அன்று அவர் எனக்கு இமெயில் அனுப்பியதாக ஒரு சிறுகதை எழுதினேன். என்னுடைய ஆசையை இப்படி புனைவாகத்தான் தீர்த்துக் கொள்ள முடிந்தது. அவருடைய முதலாண்டு நினைவு நாளின் போது அவருடைய பெயரிலான அறக்கட்டளை சார்பில் நடந்த போட்டியில் அறிவியல் புனைகதைப் போட்டியில் முதல் பரிசு கிடைத்தது. இதையெல்லாம் பார்க்க அவர் இல்லாமல் போய்விட்டாரே என்று பரிசளிப்பு நாளின் போது நினைத்தேன், வேதனையின் கிறுக்கில்.

திங்கள், ஏப்ரல் 20, 2009

சுஜாதா நினைவு பரிசு போட்டி புகைப்படங்கள் -2

சுஜாதா நினைவு பரிசு போட்டி


அமைச்சர் தென்னரசு, ராஜீவ் மேனன், திருமதி சுஜாதா



இயக்குனர்கள் பாலுமகேந்திரா, வசந்த், ஆழி செந்தில்நாதன்

வியாழன், ஏப்ரல் 16, 2009

சுஜாதா சிறுகதை போட்டி பரிசு படங்கள்

சுஜாதா சிறுகதை போட்டி

பரிசு புகைப்படங்கள்

தினமணி அலுவகத்தில்



ஆசிரியருடன்




ஆசிரியர் குழுவினருடன்

திங்கள், ஏப்ரல் 13, 2009

கணிதம் எனும் உண்மை உலகம் !

(கணிதத்தின் கதை புத்தக விமர்சனம் )





பாம்பேவுக்கு டிக்கெட் ஃபேர் எவ்வளவு?

உங்க செல் நம்பர் சொல்லுங்க?

ஆறாவது வரிசையில மூணாவது நம்பர்..

உங்க பின் நம்பர் எண்ட்ரி பண்ணுங்க..

உங்க சிஸ்டம் எத்தனை ரேம்?

முன்னூறு கிலோ மீட்டர், அஞ்சு மணி நேரத்தில ரீச் பண்ணிட்டேன்

பொண்ணு எத்தனையாவது படிக்கிறா?

நூறு ரூபாய்க்கு சேஞ்ச் இருக்குமா?

நானூறு பக்க நாவல்பா எப்படி ஒரு நாள்ல படிக்க முடியும்?

ஒரு லிட்டர் பெட்ரோல் அஞ்சு ரூபா குறைச்சிருக்கான்..

-இப்படி ஏதாவது ஒரு எண்ணைச் சொல்லாமல் நம்மால் ஒரு நாளையாவது கடந்துவிடமுடியுமா? முடியவே முடியாது. அப்படி இருக்க

வேண்டுமானால் கோமாவிலோ, வாய் பேசமுடியாமலோ இருந்தால்தான் சாத்தியம்.

பிரபஞ்சத்தை கணிதத்தால் விவரிப்பதுதான் சிறப்பானதும் நேர்மையானதுமாக இருக்கிறது. ஏனென்றால் கணிதத்தால் மட்டுமே

அதை எதிர் கொள்ள முடிவதாக இருக்கிறது. எண்ணிலடங்கா தத்துவங்களால் பிரபஞ்சத்தை விவரித்திருக்கிறார்கள். ஆனால் அந்த

எல்லா தத்துவங்களுக்கும் அடிநாதமாக பிரமிப்பும் மிரட்சியும் இருக்கிறது.

பிரபஞ்சத்தில் இத்தனை சுமார் பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன. மனித மூளையில் சுமார் இரண்டு லட்சம் செல்கள் உள்ளன... என்று

கணிதப் புள்ளிவரங்கள் சொல்லுவதில் உள்ள இயல்பான உண்மையைக் கண்டு விதம்விதமாக பிரமித்ததின் விளைவே விதம்விதமான

தத்துவங்களுக்கு அடிப்படை. கணிதம்தான் ஆரம்ப படியாகவும் அதே சமயத்தில் நிலையானதாகவும் இருக்கிறது. நீள் வட்டம்,

வட்டம், சதுரம், கோணம், மின் கட்டணம், வங்கிக் கணக்கு, வட்டிக் கணக்கு, பத்திரிகையின் பிரிண்ட் ஆர்டர், ஓர் ஒளியாண்டின் தூரம்,

மேட்டூர் அணையில் நீர் மட்டம் எல்லா இடத்திலும் முதல் விஷயமாகக் கணிதத்தின் தேவையும் பிறகு பிற விஞ்ஞான, இலக்கிய,

வரலாற்று, அரசியல் அறிவும் தேவைக்கு ஏற்ப பங்கு பெறுகிறது. உதாரணத்துக்கு மேட்டூர் நீர் மட்டம் குறைந்து போனால்

கர்நாடகாவை பழிக்க வேண்டும் என்றோ பத்து யூனிட் மின்சார பயன்பாட்டு ஆயிரம் ரூபாய் பில் போட்டவனை கோர்ட்டுக்கு

இழுப்பதோ நடக்கிறது.

பிரபஞ்சத்தின், வாழ்வின் மிக அடிப்படை கணிதம். அதை ஒரு கதை போல சொல்லுவதில் இரா. நடராசன் எடுத்துக் கொண்ட முயற்சி

நல்ல பலனைத் தந்திருக்கிறது. கணிதத்தை நேசிக்கிற ஒருவரால் மட்டுமே இதைச் செய்ய முடியும். கணித நூலை மொழி பெயர்க்கி

றவரோ, கணிதத்தைப் பாடமாக நடத்துபவரோ இதைச் சாதித்க முடியாது.

ஆதி மனிதனுக்கு கணிதத்தின் தேவை தன்னிடம் ஐந்து ஆடு இருப்பதை அடையாளம் வைத்துக் கொள்கிற சிறு சிறு கோடுகள் என்ற

அளவில்தான் இருந்திருக்கும். இந்திய, கிரேக்க, அரேபிய, பாபிலோனிய ஆரம்பகட்ட அறிஞர்கள் இன்றும் நம்மை வியக்க வைக்கி

றார்கள். உதாரணத்துக்கு ஓர் அரைவட்டத்தில் வரையப்படும் எல்லா கோணங்களும் 90 டிகிரியாகவே இருக்கும் என்று 2650

ஆண்டுகளுக்கு முன் தாலமி சொல்லியிருப்பது இன்றைக்கும் ஆச்சர்யமாகவே இருக்கிறது. அதே காலத்தைச் சேர்ந்த பிதாகரஸின் பு

கழ்பெற்ற தேற்றமான முக்கோணத்தின் இரு பக்கங்களில் வரையப்படும் சதுரங்கள் மூன்றாவது பக்கத்தின் மடங்குக்கு சமமாக

இருக்கும் என்ற உண்மையையும் அதைக் கண்டுபிடித்த ஆண்டையும் கவனியுங்கள்.

அதன் பிறகு எத்தனையோ கணித மேதைகள் இயற் கணிதத்துக்கும் திரிகோணமிதிக்கும் நுண்கணிதத்துக்கும் தொகை

கணிதத்துக்கும் வடிவ கணிதத்துக்கும் நிகழ்தகவு கணிதங்களுக்கும் வழிவகுத்தார்கள். அவர்கள் அத்தனை பேரின் பின்னணியையும்

அந்தக் கணித முறைகணித முறைகளுக்கான தேவையையும் மிகச் சுருக்கமமாகவும் தெளிவாகவும் தந்திருக்கிறார் நடராசன். கணித

வகுப்புகளில் இந்தக் கணிதத் தேவைகளைச் சொல்லி பாடம் நடத்தினால் கணிதப் பாடத்தில் பூஜ்ஜியம் வாங்கும் நிலை குறையும்.

மொட்டையாக "அல்ஜீப்ரா நோட்டை எடுங்க'' என்று சொல்லும் ஆசிரியர் இயற்கணிதம் பிறந்த கதையைச் சொல்லி அதற்கான

தேவை என்ன என்பதையும் வாழ்வில் அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்றும் சொன்னால் தேர்வில் நூற்றுக்கு நூறு

வாங்குவதை மாணவனே பார்த்துக் கொள்வான்.

சிறுவயதில் நான் படித்த ஒரு கணிதப் புதிர் இது:

ஜான் தன் நண்பன் டேவிட்டை பார்க்க சைக்கிளில் கிளம்புகிறான். ஜான் கிளம்பிய அதே நேரத்தில் டேவிட்டும் ஜான் வீட்டுக்குக் கி

ளம்புகிறான். இருவரின் சைக்கிளும் ஒரே வேகத்தில் பிரயாணிக்கின்றன. அதாவது மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகம். இருவரின் வீடும்

20 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்றன. இருவரும் இடையில் 10 வது கிலோ மீட்டரில் சந்திப்பார்கள்.
ஜான் சைக்கிளில் கிளம்பியபோது அவனுடனே சேர்ந்து அவனுடைய கிளியும் பறக்கிறது. சைக்கிள் செல்லும் பாதையிலேயே செல்கி

றது. அவன் டேவிட் வீட்டுக்குத்தான் செல்கிறான் என்று அதற்குத் தெரியும். அது மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் பறப்பதால்

சைக்கிளுக்கு முன்னே செல்கிறது. வழியில் டேவிட்டைப் பார்த்து அவன் சைக்கிளைத் தொட்டுவிட்டு மீண்டும் ஜானிடம் வருகிறது.

ஜானைத் தொட்டுவிட்டு மீண்டும் டேவிட்டை நோக்கிச் செல்கிறது. நண்பர்கள் இருவரும் சந்திக்கும்போது கிளி எத்தனை கிலோ மீட்டர்

தூரம் பறந்திருக்கும்? -இதுதான் புதிர்.

இரண்டு நண்பர்களும் சைக்கிளில் நகர்ந்து கொண்டே இருப்பதால் கிளி ஒவ்வொரு முறையும் எத்தனை கிலோ மீட்டர் பறந்த பிறகு

நண்பர்களை அடைந்தது என்பதைக் கணக்கிடுவது கஷ்டமாக இருந்தது. தொடர்ந்து அது எத்தனை முறை நண்பர்களுக்கு இடையே

பறந்தது என்று கணக்கிடுவதில் மண்டைக் காய்ந்து போய் தோல்வியை ஒப்புக் கொண்டேன்.

உண்மையில் புதிருக்கான விடை அந்தக் கேள்வியிலேயே இருந்தது.

நண்பர்கள் இருவரும் பத்து கிலோ மீட்டர் தூரம் பிரயாணித்தனர் என்றால் அவர்கள் ஒரு மணி நேரம் பயணம் செய்தார்கள் என்று

அர்த்தம். ஏனென்றால் அவர்கள் பிரயாண வேகம் மணிக்கு பத்து கிலோ மீட்டர்.
அதே போல் கிளியும் ஒரு மணி நேரம்தான் பிரயாணித்ததும் ஒரு மணி நேரம்தான். அதனுடைய வேகம்தான் கேள்வியிலேயே இருக்

கிறதே?

இதைப் பற்றி ஒரு கிளைக் கதையும் உண்டு. இந்த நூற்றாண்டின் அமெரிக்க கணித மேதை ஜான் வான் நியுமன் என்பவரிடம் இந்தப்

புதிரைச் சொன்னபோது அவர், சிறிது நேரம் கண்ணை மூடிச் சிந்தித்துவிட்டு உடனடியாக பதிலைச் சொன்னார். புதிரைச் சொன்னவர்

"புதிரின் கேள்வியிலேயே விடை இருப்பது தெரியாமல் நிறைய பேர் வீணாகக் கணக்குப் போட்டு தோல்வியைத் தழுவுகிறார்கள்''

என்றாராம்.

நியுமன் "புதிரிலேயே விடையா? நான் கணக்குப் போட்டுத்தான் சொன்னேன்'' என்றாராம்.

நியுமன் ஒரு நாற்பது பக்க நோட்டு முழுக்க கணக்குப் போட்டு கண்டுபிடிக்க வேண்டிய விடையை ஒருசில வினாடியில்

கண்டுபிடித்துவிடக் கூடியவராக இருந்தார் என்பதற்கு இப்படி பல உதாரணங்கள் உண்டு.

ஆலிஸ் இன் வொண்டர் லேண்ட் என்ற சுவையான கதையைப் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். ரொம்ப டயம் ஆகிவிட்டது என்று முயல்

ஒன்று ஓடும். ஆலிஸýக்கு ஆச்சர்ய மேற்படுத்தும் அந்த உலகைச் சுவாரஸ்யமாக விவரித்திருப்பார். அதை எழுதிய லூயிஸ் காரல் ஒரு

கணித மேதை. லாஜிக் கணிதத்தில் விற்பன்னர். கதையிலும் அப்படி நிறைய லாஜிக் விவாதம் வரும். ஒரு உதாரணம் தந்திருக்கிறார்

இரா. நடராசன். அதில் வரும் சூனியக்காரன், ஆலிஸிடம் "நான் உனக்கு ஒரு கவிதைத் தருகிறேன். அதைப் படித்தால் உனக்குக் கண்
ணீர் வரும், அல்லது..'' என்கிறான்.
"அல்லது?'' என்கிறாள் ஆலிஸ்.
"வராது'' என்கிறான்.

இரண்டு வாய்ப்புகளை எவ்வளவு அழகாகச் சொல்கிறார்.

புத்தகத்தை முடித்ததும் நடராசன் எனக்கு கணக்கு வாத்தியாராக இருந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் ஏற்பட்டது. அல்லது இந்தப் பு

த்தகத்தையாவது அவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கலாம் என்றும் தோன்றியது.

கணிதத்தின் கதை

இரா.நடராசன்

ரூ. 50

பாரதி புத்தகாலயம்,
421, அண்ணா சாலை,
தேனாமம்பேட்டை,
சென்னை-18


-தமிழ்மகன்

ஞாயிறு, ஏப்ரல் 12, 2009

திரைக்குப் பின்னே- 28

இரண்டு முதல்வர்களும் ரம்பாவும்!

முதல்வரிடம் நேரடியாக முறையிட வேண்டிய கோரிக்கைகள் நடிகர்களுக்கு அடிக்கடி ஏற்படும். குங்குமத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஒரு முறை முரசொலி அலுவலகத்துக்கு ரஜினிகாந்த் வந்து கலைஞரைச் சந்தித்துவிட்டுப் போனார். கமல்ஹாசன் சந்தித்தார். கடந்த மாதத்தில் ஒரு முறை நயன்தாரா முதல்வரைச் சந்தித்தார். இப்போது ரம்பா சந்தித்திருக்கிறார். இந்தியாவின் முதல்வர்கள் பலருக்கு அந்தந்த மாநிலத்து நடிகர்களுடன் இப்படியான நெருக்கமும் அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை. புத்ததேவ், மாயாவதி, நிதிஷ்குமார், நரேந்திரமோடி போன்றவர்களை அவர்கள் மாநிலத்து நடிகர்கள் இப்படி கோரிக்கை வைக்கிறார்களா என்று தெரியவில்லை.



ஆந்திரத்தில் இதுபோல நடப்பதுண்டு. ராமராவுக்குப் பிறகு விஜயசாந்தி, ரோஜா, ஜெயப்பிரதா, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா என்று அங்கும் அரசியலும் சினிமாவும் பின்னிப் பிணைந்திருக்கிறது.

பத்தாண்டுகளுக்கு முன்பு சந்திரபாபு நாயுடுவை ரம்பா திடீரென்று ஒரு நாள் சென்று பார்த்தார். அப்போது நான் அவரை மிகுந்த பரபரப்புகளுக்கிடையே சந்தித்து "நீங்கள் தெலுங்கு தேசத்தில் சேரப் போகிறீர்களா?" என்று கேட்டேன். அவர் வெட்கப்பட்டுச் சிரித்தார்.

இப்போது கலைஞரைச் சந்தித்த போதும் ரம்பாவை எல்லோரும் அரசியலுக்கு வருகிறீர்களா என்று கேட்டிருக்கிறார்கள். இப்போதும் மறுத்துவிட்டார். ஆந்திரத்து முதல்வரை எதற்காகச் சந்தித்தாரோ அதே காரணத்துக்காகத்தான் இப்போது கலைஞரைச் சந்தித்திருக்கிறார் ரம்பா.

மரியாதை நிமித்தம்.

சிக்காத மனிதர்!

யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு சுவாரஸ்யத்தைச் சுமக்கிறான். ஒருத்தனை சுயநலமி என்கிறோம், தலைகனம் பிடித்தவன், அப்பாவி, கர்வி, பொறுமையானவன், கோழை, வீராதி வீரன், கஞ்சன், திறமைசாலி என்று விதம்விதமாக வகைபிரித்திருந்தாலும் இந்தப் பிரிவுகளுக்குக் கட்டுப்படாமல் வழிந்து ஓடிக்கொண்டிருக்கும் வகைகள்தான் எத்தனை?

டி.ராஜேந்தரைப் பார்க்கும்போது இப்படி எந்த வைக்குள்ளும் சிக்காத ஒரு மனிதராகவே இருக்கிறார் எனக்கு.



சிம்பு நடித்த ‘எங்க வீட்டு வேலன்', ‘சபாஷ் பாபு' படங்களுக்கு இடைப்பட்ட ஒரு நேரத்தில் ஒரு சிறுவர் இதழுக்காக சிம்புவைப் பேட்டி காணச் சென்றிருந்தேன். நண்பர் "வளர்தொழில்' ஜெயகிருஷ்ணன் புதிதாக ‘பிக்கிக்கா' என்ற சிறுவர் இதழை அப்போது துவங்கியிருந்தார். அந்த இதழுக்காகத்தான் இந்தப் பிரத்யேகப் பேட்டி. டி.ஆர். தன் மகனைப் பற்றி அவர் பிரமாதமாகச் சொன்னார். அவன் ஒரு பிறவிக் கலைஞன் என்றார். ரஜினி அடிக்கடி போன் செய்து அவனிடம் பேசுவார் என்றார். சிம்பு சிறிய இரு சக்கர சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார். எதற்கோ அடம் பிடித்து அழுதார். சிம்பு என்னிடம் பேசும் மனநிலையிலேயே இல்லை. அவரை வெளியே தூக்கிச் செல்லுமாறு சொல்லிவிட்டு டி.ஆர்.தான் அவர் சார்பாகத் தகவல்களைச் சொன்னார்.

சிம்புவும் அவருடைய தந்தையும் கலந்து பேசியதாக அந்தப் பேட்டியை எழுதினேன். டி.ஆரிடம் பேசும்போது முடிவுக்கே வரமுடியாது. அவர் ஒரு வார்த்தையைச் சொல்லும்போது மிகுந்த தன்னடக்கமாகத் தோன்றும். "கையில சல்லிக் காசு இல்லாம ட்ரெய்ன்ல பாடி பிச்சை எடுத்துதான் சென்னைக்கு வந்தேன். அப்படியொரு ஏழ்மை" என்பார். அடுத்து "என்னைமாதிரி யாராவது வேகமாக ட்யூன் போட முடியுமா?" என்பார். அங்கேயே டேபிளில் தட்டி "இந்தாங்க இது ஒரு ட்யூன்.." இன்னொரு வகையில் தட்டி "இதோ இன்னொரு ட்யூன்... ஒரு நாளைக்கு ஆயிரம் ட்யூன்கூட போடுவேன்" என்பார்.

அன்றும் "என்னை மாதிரி டான்ஸ் ஸ்டெப் வைக்க முடியுமா? என்னை மாதிரி பாட முடியுமா?" என்று ஆடியும் பாடியும் காண்பித்தார். அவர் என்ன சொன்னாலும் பாராட்டுவதற்கு ஒரு சிறிய குழுவை அருகில் வைத்திருப்பதாகப்பட்டது. அவர்கள் அவருடைய செயலைப் பார்த்துச் சிரிப்பார்கள். பெருமிதமும் படுவார்கள். எது நிஜமான பாராட்டு, எது போலியானது என்பதைத் தெரிந்தே அவர் அவர்களை மொத்தமாக ஏற்றுக் கொண்டிருந்தார். இரக்க குணம் மிக்கவராகவும் தோன்றினார். உஷா வார இதழ் நடத்தும்போது சமையல்குறிப்பு, தலையங்கம், கேள்வி பதில், கவிதைகள், சுயசரிதை, சுயமுன்னேற்றக் கட்டுரை, அழகுக்குறிப்பு என அத்தனையையும் அவரே எழுதியபோது அவருடைய தன்னம்பிக்கையின் முழு வீச்சையும் பார்க்க முடிந்தது.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, புகைப்படம், நடிப்பு, இசை, பாடல்கள், காஸ்ட்யூம் என சினிமாவில் கோலோச்சியது ஞாபகம் வந்தது.

அவருடைய வீட்டுக்குக் கீழேயே ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்து பத்திரிகை ஆபீஸ் செயல்பட்டது. பத்திரிகை விற்பனை ஆரம்பத்தில் இருந்தது போல இல்லை. சர்குலேஷனை மேலே கொண்டு வர வேண்டும் என்று ஒரு முறை அவர் உறுதியாகச் கூறியிருக்கிறார். அன்று நடந்த நிகழ்ச்சியை அங்கு பணிபுரிந்த நண்பர் விவரித்தார்...

'அன்று மதிய வேளை பத்திரிகை ஊழியர்கள் எல்லாம் சாப்பிடச் சென்று திரும்பிக் கொண்டிருந்தார்கள். டேபிள், சேர், பீரோக்கள் எல்லாம் மாடிக்கு எடுத்துச் செல்ல ஆயத்தமாக இருந்தன. சாப்பிட்டுவிட்டு வந்தவர்கள் "எங்கே எடுத்துச் செல்கிறீர்கள்?" என்றோம்.

"அண்ணன் சர்குலேஷனை மேலே கொண்டு போகணும்னு சொன்னாராம். அதான்.."

"அடக் கொடுமையே.. சர்குலேஷன் டிபார்ட்மென்டை மாடிக்கு மாற்றச் சொல்லலைடா. விற்பனையை மேலே கொண்டு போகணும்னு சொன்னாரு."

மீண்டும் பீரோவும் டேபிளும் உள்ளே எடுத்துச் செல்லப்பட்டன.

விஷயம் அறிந்து டி.ஆர். யாரையும் கண்டிக்கவில்லை. தம் ஊழியரை நினைத்துச் சிரித்தார்.

எமக்குத் தொழில் நடிப்பு!



90-களில் மோகன்லாலின் விசிறியாக இருந்தேன். அவர் நடித்த ‘சித்ரம்', ‘கிலுக்கம்', ‘ஏய் ஆட்டோ', ‘நம்பர் 20 மெட்ராஸ் மெயில்', அங்கிள் பன், ‘ஒண்ணுமுதல் பூஜ்ஜியம் வரா', ‘கிரீடம்'.. என சத்யம் தியேட்டரில் ரிலீஸான அவருடைய அத்தனை படத்தையும் உலகப் படவிழா வரிசை மாதிரி பார்த்துக் கொண்டிருந்தேன்.


சென்னை ஜெமினி பாலத்துக்கு அருகே பொடானிகல் கார்டனில் வேறொரு படப்பிடிப்புக்காகச் சென்ற போது அங்கே ஒரு மலையாளப் படத்துக்காக மோகன்லால் நடித்துக் கொண்டிருந்தார்.

அவருடன் நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா நடித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம். மகிழ்ச்சியும் ஆச்சரியமுமாக மோகன்லாலிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

உங்களிடம் பத்திரிகை நிருபர் என்பதைவிட நான் உங்கள் ஃபேன் என்று சொல்லிக் கொள்வதில்தான் பெருமையாக இருக்கிறது என்றேன்.

"திடீரென்று வந்து நின்றால் நான் என்ன பேசுவது?" என்றார் அலுப்புடன்.

"பேட்டி போல அல்ல, அடுத்த ஷாட் வைக்கும் வரை பேசினால் போதும்" என்றேன்.

"தமிழில் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?" என்றபோது "எம்.ஆர்.ராதா" என்றார். எதிர்பார்க்காத பதிலாக இருந்ததாலும் அவருடைய ரசனைமீது ஈர்ப்பு ஏற்பட்டது.

வெள்ளி, ஏப்ரல் 03, 2009

திரைக்குப் பின்னே-27

‘துள்ளுவதோ இளமை'?

‘துள்ளுவதோ இளமை' படத்தில் அறிமுகமானபோது தன் அழுத்தமான நடிப்பின் மூலம் நம்பிக்கையை ஏற்படுத்தியவர் ஷெரீன். ’விசில்', ’காப்பி ஷாப்' போன்ற சில படங்களில் நடித்தவர். அவருக்கு அனிமேட்டராகவோ அல்லது பத்திரிகையாளராகவோ ஆகவேண்டும் என்ற ஆசை அதிகமிருப்பதாகச் சொன்னார். இது இரண்டையும் விட சினிமாவில் அதிகம் சம்பாதிக்கலாமே என்று சொன்னேன்.

முகம் சுளித்தார். "எனக்கு போட்டோ ஷாப், த்ரி டி மாக்ஸ், மாயா போன்ற மென்பொருள் பயன்பாட்டில் பரிச்சயம் உண்டு. அனிமேஷன் பயின்றிருக்கிறேன். நான் படித்த இன்ஸ்ட்டிட்யூட்டில் ஜர்னலிஸமும் இருந்தது. எனக்கு அனி மேட்டர் அல்லது பத்திரிகையாளர் ஆவதுதான் லட்சியம்'' என்றார்.

அதற்குள் அவருக்கு ஒரு கவர்ச்சியான நடிகை என்ற முத்திரை ஏற்பட்டுவிட்டது. அவருடன் அவருடைய அம்மா மட்டும் உண்டு. மகளை எப்படியாவது இந்திப் பட உலகுக்குக் கூட்டிச் செல்லவேண்டும் என்பதாக இருந்தது அவருடைய பேச்சு.

ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே தான் தன் அம்மாவை விட்டுப் பிரிந்து வந்துவிட்டதாகச் சொல்லி அவருடைய காதலரோடு இணைந்து போஸ் கொடுத்தார். இணைந்து போஸ் கொடுத்தார் என்பது மிகப் பொருத்தமான வார்த்தை. கை கால் எல்லாம் பின்னிக் கொண்டும் முத்தமழை பொழிந்து கொண்டும் இருந்தனர் இருவரும். ஒரு நட்சத்திர ஒட்டலில் தங்கி இருந்த அவர்கள் இந்தச் செயல்களை பத்திரிகையாளர் முன்னிலையில் நிறைவேற்றுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இருவரின் கையிலும் கோப்பைகள், சிகரெட்கள். ஒருவர் சிகரெட்டை இன்னொருவர் வாங்கிப் புகைத்துக் கொண்டனர்.

இருவரின் செயலும் ஏதோ முற்றும் அறிந்து முடிவுக்கு வந்துவிட்டதாக இருந்தது. ஒரு தீர்மானம் தெரிந்தது. உனக்கு நான், எனக்கு நீ என்பது சொர்க்கத்தில் உறுதியாகிவிட்டது என்பதாக நடந்து கொண்டனர். நீண்ட நாளைக்குத் தாங்குமா என்று பத்திரிகையாளர்கள் பேசிக் கொண்டோம். இருவரும் சேர்ந்து ஒரு படம் எடுப்பதாகச் சொன்னார்கள். படம் ஒருமாதிரியாக வெளிவந்தது. ஆனால் அதன் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். மீண்டும் தன் தாயோடு வந்துதான் ’காபி ஷாப்' படத்தில் நடித்தார். இனிமேல் எல்லாம் சரியாகிவிட்டதாக அவருடைய அம்மா சொன்னார். மகளை இந்திக்கு அழைத்துச் செல்லும் நோக்கம் அவருக்கு அப்போதும் இருந்தது. பெங்களூரைச் சேர்ந்த அவர்கள் மும்பையில் போய்த் தங்கி சினிமா வாய்ப்பு பெறப் போராடிக் கொண்டிருப்பதாகவும் சில பத்திரிகைத் தொடர்பாளர்கள் சொன்னார்கள். இரண்டு ஆண்டுகளாக அதில் முன்னேற்றம் இருப்பதாகத் தெரியவில்லை.

ஷெரீன் பற்றி நினைக்கும் போது அவர் நடித்த முதல் படத்தின் தலைப்பும் சேர்ந்துதான் ஞாபகத்துக்கு வருகிறது.





சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது!



மற்றவர்களைச் சிரிக்க வைப்பவர்கள் பெரும்பாலும் ஒரு விஷயத்தில் ஒத்துப் போவார்கள். மனிதர்கள் எதற்கெல்லாம் சிரிப்பார்களோ அதில் ஒரு அம்சத்தையாவது புரிந்து வைத்திருப்பவர்களாக இருப்பார்கள். ஒருவன் தெரியாத்தனமாக கால் இடறி விழுந்தாலும் அவனைப் பார்த்துச் சிரிப்பது சற்றேறத்தாழ மனிதன் குகையில் வசிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து இருப்பதாகச் சொல்கிறார்கள். அதை மாற்றிக் கொள்ளவே முடியவில்லை. யாராவது விழுந்துவிட்டால்... சைக்கிளில் ட்யூப் படார் என்று வெடித்தால்.. உடனடியாகச் சிரிக்கிறோம். சொல்லப்போனால் எல்லாரையும் விட முதலாவதாக விழுந்தவர்தான் சிரிக்கிறார்.

சிரிக்க வைப்பதில் இன்னொரு சுலபமான அம்சம், யாரைப் பார்த்தாலும் முந்திக் கொண்டு ஒரு சிரிப்பை உதிர்ப்பது. மதன்பாப் முகம் முழுதும் ஒரு ரெடிமேட் சிரிப்பை வைத்திருப்பார். யார் வந்தாலும் கண்களை இடுக்கி, பற்கள் தெரிய, உடம்பெல்லாம் குலுங்க ஒரு சிரிப்பு சிரிப்பார். அது அவருடைய ட்ரேட் மார்க்.

நண்பர் ஒருவரோடு அவர் வீட்டுக்குப் போயிருந்தபோது, பேச்சோடு பேச்சாக உங்களின் இந்தச் சிரிப்புதான் உங்களுக்கு மைனஸ். இதை விட்டுத் தொலைத்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும் என்று நண்பர் கூறிவிட்டார். என்ன செய்வதென்று தெரியாமல் அதற்கும் ஒரு சிரிப்பைச் சிரித்து வைத்தார் மதன்பாப்.

அவருக்கு அதில் மிகுந்த வருத்தம். மறு நாள் போனில் "அப்கோர்ஸ் அவர் சொன்னது சரியா இருக்கலாம். இதுக்கப்புறம் நான் அதை விட்டுட்டு வேற ஒண்ணு ட்ரை பண்ணினா.. என்ன இது ஒழுங்காத்தான இருந்தாரு. இப்பல்லாம் முன்னமாதிரி இன்வால்வ்மென்ட் இல்லப்பா அவர்கிட்ட'னு சொல்லிட மாட்டாங்களா?'' என்றெல்லாம் சீரியஸாகப் பேசினார்.

அந்தச் சிரிப்பு அவருக்குப் பெரிய பலமா இல்லையா என்பதைத்தாண்டி அவரிடம் வேறு பலமான விஷயங்கள் இருந்ததைக் கண்டிருக்கிறேன். அவர் வெண்டிலோகிஸம் என்னும் கலையில் வல்லவர். சிறந்த கிடாரிஸ்ட். இசையில் நல்ல ஞானம் இருந்தது. நல்ல படிப்பாளி. ரசனையாக வாழத்தெரிந்தவர்.

ஒரு உதாரணம். அவருடைய அறையில் ஓர் அட்டையில் ’எடுத்ததெல்லாம் தோல்வியிலேயே முடிகிறதா? ... பின் பக்கம் பார்க்க...' என்று ஒரு அட்டை கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. அட்டையின் பின் பக்கம் பார்த்தேன்.

’சிம்பிள், இன்னொரு தரம் முயற்சி செய்து பாருங்கள்' என்று எழுதியிருந்தது.

"பார்க்கிறவர்கள் ஏதோ முக்கியமான மந்திர வார்த்தை இருக்கப் போகிறது என்றுதான் திருப்புவார்கள். சிலருக்கு இதுவும் மந்திரச் சொல்லாக அமையலாம். இல்லாவிட்டால் குறைந்த பட்சம் தோல்வியில் துவண்டு போயிருந்தவருக்குச் சின்ன திசைதிருப்பலாகவாவது இருக்கும்'' என்றார் மதன்பாப். சிரிக்காமலேயே வெகுநேரம் என்னிடம் பேசியிருக்கிறார். அவர் சிரிப்பதெல்லாம் இடைவெளியை நிரப்புவதற்காகத்தான். அல்லது என்னடா கஷ்டகாலம் என்பதற்கும் அவருக்குச் சிரிப்புதான் கைகொடுக்கும்.

ஏனென்றால் பலர் நினைத்துக் கொண்டிருப்பது போல் அல்லாமல் சிரிப்பது மட்டும்தான் எளிமையானது.



கூட்டு இயக்குநர் குடும்பம்!



உதவி இயக்குநர் இயக்குநராக மாறுகிற கட்டம் மிகுந்த தர்மசங்கடமானது. நேற்றுவரை ஒன்றோடு ஒன்றாக மசால் வடைக்கும் டீக்கும் ஒருத்தரோடு ஒருத்தர் சிங்கியடித்துக் கொண்டிருந்துவிட்டு இயக்குநரானதும் ஓர் உயரதிகாரியாக மாற வேண்டிய சூழல். கேப்டன் ஆஃப் த ஷிப், அதிகாரி மாதிரி ஆவதில் தவறில்லை. ஆனால் பெரும்பாலானோர் அந்த நேரத்தில் அவர்கள் படுகிற அவஸ்தை சாதாரணமாக விவரிக்கத் தக்கதல்ல.

எனக்குத் தெரிந்த இயக்குநர் ஒருவர் ஒரே அறையில் தங்கி, ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒரே படுக்கையில் தூங்கிய தன் நண்பரை, "எங்கேயோ மீட் பண்ணியிருக்கோம்ல'' என்று கேட்டுவிட்டார். பாதிக்கப்பட்ட அந்த நண்பர் கண் கலங்காத குறையாக வருந்தினார். "நான் நல்ல வேலையில்தான் இருக்கிறேன். இயக்குநராகிவிட்ட நண்பரை வாழ்த்துவதற்காகச் சென்றால் இப்படியாகிவிட்டது" என்றார்.

சோதிடக் கிளி சீட்டெடுப்பது மாதிரிதான் யாரோ ஒரு உதவி இயக்குநர் பதவி உயர்வு பெறுகிறார். மற்றவர்களைவிட திறமை குறைந்தவர்கள்கூட முதலில் தேர்வாகிவிடுவதுண்டு. நல்ல திறமைசாலிகள் அவருக்கு உதவியாக இருக்க வேண்டியதிருக்கும்.

இயக்குநர் சீமானும் அவருடைய உதவியாளர்களும் இதற்கு விதிவிலக்கு. தமிழ் சினிமா உலகில் சாலிகிராமம் பக்கத்தில் சீமான் வீட்டைக் கண்டு பிடித்தவர்கள் எல்லோரும் அவருடைய உதவியாளர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். அவருக்கு நூறு உதவியாளர்களாவது இருப்பார்கள். பெரிய வீடொன்றை வாடகை எடுத்துத் தங்கியிருக்கிறார். அந்த வீடு முழுக்க இளைஞர்கள் தங்கியிருக்கிறார்கள். அனைவருமே உதவியாளர்கள் என்றுதான் சொல்லிக் கொள்ளுவார்கள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை பதினோரு மணி வாக்கில் நான் அவருடைய அறைக்குச் சென்றேன். அப்பத்தான் எழுந்திருந்தார். படுக்கை பாய் எல்லாம் அப்படியே இருக்கிறது. இன்னும் சில உதவி இயக்குநர்கள் உறக்கத்திலேயே இருக்கிறார்கள்.

"அண்ணனுக்குப் பிரியாணி சாப்பிடணும்னு ஆசையா இருக்குடா'' என்றார் பொதுவாக.
கொஞ்ச நேரத்தில் ஆட்டுக்கறி, மசாலா எல்லாம் வந்து இறங்கியது. யார் பணத்தில் என்பது தெரியவில்லை. "யார் பாக்கெட்டில் பணம் இருந்தாலும் அத்தனையும் பொது. தனியாக யாரும் பணத்தைக் கொண்டாடுவதில்லை'' என்றார்.

அநாவசியமான மரியாதைகள், கூழைக் கும்பிடுகள், போலி சம்பிரதாயங்கள் எதுவும் இல்லை. இதெல்லாம் சரியாக வருமா என்று நான் யோசித்தேன். ஆனால் கடந்த பத்தாண்டுகளாக அவர் இல்லம் சினிமா இயக்குநர்களால் நிரம்பி வழிந்தபடிதான் இருக்கிறது.

சினிமா சோஷலிஸம்?

LinkWithin

Blog Widget by LinkWithin