இரண்டு முதல்வர்களும் ரம்பாவும்!
முதல்வரிடம் நேரடியாக முறையிட வேண்டிய கோரிக்கைகள் நடிகர்களுக்கு அடிக்கடி ஏற்படும். குங்குமத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஒரு முறை முரசொலி அலுவலகத்துக்கு ரஜினிகாந்த் வந்து கலைஞரைச் சந்தித்துவிட்டுப் போனார். கமல்ஹாசன் சந்தித்தார். கடந்த மாதத்தில் ஒரு முறை நயன்தாரா முதல்வரைச் சந்தித்தார். இப்போது ரம்பா சந்தித்திருக்கிறார். இந்தியாவின் முதல்வர்கள் பலருக்கு அந்தந்த மாநிலத்து நடிகர்களுடன் இப்படியான நெருக்கமும் அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை. புத்ததேவ், மாயாவதி, நிதிஷ்குமார், நரேந்திரமோடி போன்றவர்களை அவர்கள் மாநிலத்து நடிகர்கள் இப்படி கோரிக்கை வைக்கிறார்களா என்று தெரியவில்லை.
ஆந்திரத்தில் இதுபோல நடப்பதுண்டு. ராமராவுக்குப் பிறகு விஜயசாந்தி, ரோஜா, ஜெயப்பிரதா, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா என்று அங்கும் அரசியலும் சினிமாவும் பின்னிப் பிணைந்திருக்கிறது.
பத்தாண்டுகளுக்கு முன்பு சந்திரபாபு நாயுடுவை ரம்பா திடீரென்று ஒரு நாள் சென்று பார்த்தார். அப்போது நான் அவரை மிகுந்த பரபரப்புகளுக்கிடையே சந்தித்து "நீங்கள் தெலுங்கு தேசத்தில் சேரப் போகிறீர்களா?" என்று கேட்டேன். அவர் வெட்கப்பட்டுச் சிரித்தார்.
இப்போது கலைஞரைச் சந்தித்த போதும் ரம்பாவை எல்லோரும் அரசியலுக்கு வருகிறீர்களா என்று கேட்டிருக்கிறார்கள். இப்போதும் மறுத்துவிட்டார். ஆந்திரத்து முதல்வரை எதற்காகச் சந்தித்தாரோ அதே காரணத்துக்காகத்தான் இப்போது கலைஞரைச் சந்தித்திருக்கிறார் ரம்பா.
மரியாதை நிமித்தம்.
சிக்காத மனிதர்!
யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு சுவாரஸ்யத்தைச் சுமக்கிறான். ஒருத்தனை சுயநலமி என்கிறோம், தலைகனம் பிடித்தவன், அப்பாவி, கர்வி, பொறுமையானவன், கோழை, வீராதி வீரன், கஞ்சன், திறமைசாலி என்று விதம்விதமாக வகைபிரித்திருந்தாலும் இந்தப் பிரிவுகளுக்குக் கட்டுப்படாமல் வழிந்து ஓடிக்கொண்டிருக்கும் வகைகள்தான் எத்தனை?
டி.ராஜேந்தரைப் பார்க்கும்போது இப்படி எந்த வைக்குள்ளும் சிக்காத ஒரு மனிதராகவே இருக்கிறார் எனக்கு.
சிம்பு நடித்த ‘எங்க வீட்டு வேலன்', ‘சபாஷ் பாபு' படங்களுக்கு இடைப்பட்ட ஒரு நேரத்தில் ஒரு சிறுவர் இதழுக்காக சிம்புவைப் பேட்டி காணச் சென்றிருந்தேன். நண்பர் "வளர்தொழில்' ஜெயகிருஷ்ணன் புதிதாக ‘பிக்கிக்கா' என்ற சிறுவர் இதழை அப்போது துவங்கியிருந்தார். அந்த இதழுக்காகத்தான் இந்தப் பிரத்யேகப் பேட்டி. டி.ஆர். தன் மகனைப் பற்றி அவர் பிரமாதமாகச் சொன்னார். அவன் ஒரு பிறவிக் கலைஞன் என்றார். ரஜினி அடிக்கடி போன் செய்து அவனிடம் பேசுவார் என்றார். சிம்பு சிறிய இரு சக்கர சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார். எதற்கோ அடம் பிடித்து அழுதார். சிம்பு என்னிடம் பேசும் மனநிலையிலேயே இல்லை. அவரை வெளியே தூக்கிச் செல்லுமாறு சொல்லிவிட்டு டி.ஆர்.தான் அவர் சார்பாகத் தகவல்களைச் சொன்னார்.
சிம்புவும் அவருடைய தந்தையும் கலந்து பேசியதாக அந்தப் பேட்டியை எழுதினேன். டி.ஆரிடம் பேசும்போது முடிவுக்கே வரமுடியாது. அவர் ஒரு வார்த்தையைச் சொல்லும்போது மிகுந்த தன்னடக்கமாகத் தோன்றும். "கையில சல்லிக் காசு இல்லாம ட்ரெய்ன்ல பாடி பிச்சை எடுத்துதான் சென்னைக்கு வந்தேன். அப்படியொரு ஏழ்மை" என்பார். அடுத்து "என்னைமாதிரி யாராவது வேகமாக ட்யூன் போட முடியுமா?" என்பார். அங்கேயே டேபிளில் தட்டி "இந்தாங்க இது ஒரு ட்யூன்.." இன்னொரு வகையில் தட்டி "இதோ இன்னொரு ட்யூன்... ஒரு நாளைக்கு ஆயிரம் ட்யூன்கூட போடுவேன்" என்பார்.
அன்றும் "என்னை மாதிரி டான்ஸ் ஸ்டெப் வைக்க முடியுமா? என்னை மாதிரி பாட முடியுமா?" என்று ஆடியும் பாடியும் காண்பித்தார். அவர் என்ன சொன்னாலும் பாராட்டுவதற்கு ஒரு சிறிய குழுவை அருகில் வைத்திருப்பதாகப்பட்டது. அவர்கள் அவருடைய செயலைப் பார்த்துச் சிரிப்பார்கள். பெருமிதமும் படுவார்கள். எது நிஜமான பாராட்டு, எது போலியானது என்பதைத் தெரிந்தே அவர் அவர்களை மொத்தமாக ஏற்றுக் கொண்டிருந்தார். இரக்க குணம் மிக்கவராகவும் தோன்றினார். உஷா வார இதழ் நடத்தும்போது சமையல்குறிப்பு, தலையங்கம், கேள்வி பதில், கவிதைகள், சுயசரிதை, சுயமுன்னேற்றக் கட்டுரை, அழகுக்குறிப்பு என அத்தனையையும் அவரே எழுதியபோது அவருடைய தன்னம்பிக்கையின் முழு வீச்சையும் பார்க்க முடிந்தது.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, புகைப்படம், நடிப்பு, இசை, பாடல்கள், காஸ்ட்யூம் என சினிமாவில் கோலோச்சியது ஞாபகம் வந்தது.
அவருடைய வீட்டுக்குக் கீழேயே ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்து பத்திரிகை ஆபீஸ் செயல்பட்டது. பத்திரிகை விற்பனை ஆரம்பத்தில் இருந்தது போல இல்லை. சர்குலேஷனை மேலே கொண்டு வர வேண்டும் என்று ஒரு முறை அவர் உறுதியாகச் கூறியிருக்கிறார். அன்று நடந்த நிகழ்ச்சியை அங்கு பணிபுரிந்த நண்பர் விவரித்தார்...
'அன்று மதிய வேளை பத்திரிகை ஊழியர்கள் எல்லாம் சாப்பிடச் சென்று திரும்பிக் கொண்டிருந்தார்கள். டேபிள், சேர், பீரோக்கள் எல்லாம் மாடிக்கு எடுத்துச் செல்ல ஆயத்தமாக இருந்தன. சாப்பிட்டுவிட்டு வந்தவர்கள் "எங்கே எடுத்துச் செல்கிறீர்கள்?" என்றோம்.
"அண்ணன் சர்குலேஷனை மேலே கொண்டு போகணும்னு சொன்னாராம். அதான்.."
"அடக் கொடுமையே.. சர்குலேஷன் டிபார்ட்மென்டை மாடிக்கு மாற்றச் சொல்லலைடா. விற்பனையை மேலே கொண்டு போகணும்னு சொன்னாரு."
மீண்டும் பீரோவும் டேபிளும் உள்ளே எடுத்துச் செல்லப்பட்டன.
விஷயம் அறிந்து டி.ஆர். யாரையும் கண்டிக்கவில்லை. தம் ஊழியரை நினைத்துச் சிரித்தார்.
எமக்குத் தொழில் நடிப்பு!
90-களில் மோகன்லாலின் விசிறியாக இருந்தேன். அவர் நடித்த ‘சித்ரம்', ‘கிலுக்கம்', ‘ஏய் ஆட்டோ', ‘நம்பர் 20 மெட்ராஸ் மெயில்', அங்கிள் பன், ‘ஒண்ணுமுதல் பூஜ்ஜியம் வரா', ‘கிரீடம்'.. என சத்யம் தியேட்டரில் ரிலீஸான அவருடைய அத்தனை படத்தையும் உலகப் படவிழா வரிசை மாதிரி பார்த்துக் கொண்டிருந்தேன்.
சென்னை ஜெமினி பாலத்துக்கு அருகே பொடானிகல் கார்டனில் வேறொரு படப்பிடிப்புக்காகச் சென்ற போது அங்கே ஒரு மலையாளப் படத்துக்காக மோகன்லால் நடித்துக் கொண்டிருந்தார்.
அவருடன் நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா நடித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம். மகிழ்ச்சியும் ஆச்சரியமுமாக மோகன்லாலிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
உங்களிடம் பத்திரிகை நிருபர் என்பதைவிட நான் உங்கள் ஃபேன் என்று சொல்லிக் கொள்வதில்தான் பெருமையாக இருக்கிறது என்றேன்.
"திடீரென்று வந்து நின்றால் நான் என்ன பேசுவது?" என்றார் அலுப்புடன்.
"பேட்டி போல அல்ல, அடுத்த ஷாட் வைக்கும் வரை பேசினால் போதும்" என்றேன்.
"தமிழில் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?" என்றபோது "எம்.ஆர்.ராதா" என்றார். எதிர்பார்க்காத பதிலாக இருந்ததாலும் அவருடைய ரசனைமீது ஈர்ப்பு ஏற்பட்டது.
2 கருத்துகள்:
வித்தியாசமான அனுபவங்கள்.
ரம்பா அவரது உறவினர்களாலும் உடன்பிறந்தவர்களாலும் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக கேள்விப்பட்டேன். பாவம்...
திரைக்குப் பின்னே - ஸ்வாரஸ்யமான column. தொடர்ந்து உயிரோசையில் படித்து வருகிறேன். இதை மட்டும் தனி லேபிளில் இடலாமே ... ஓரே இடத்தில் இந்த தொகுதியைத் தேடிப் படிக்க சுலபமாக இருக்கும்.
கருத்துரையிடுக