வியாழன், ஜூன் 18, 2009

ஒன்று முதல் பூஜ்ஜியம் வரை




தினமணிக்கு ஒரு சினிமா நிருபரின் தேவை இருந்தபோது சுகுமாரனை ராஜமார்த்தாண்டனும் என்னைப் புகழேந்தியும் சிபாரிசு செய்தனர். இறுதியில் நான் சேருவதாக முடிவானபோது, சுகுமாரனை சிபாரிசு செய்வர் என்ற காரணத்துக்காக அவரிடம் பேச சிறு தயக்கம் இருந்தது. ஆனால் தினமணியில் எனக்கு முதல் நண்பர் அவர்தான். வண்ணத்திரை போன்ற சினிமா பத்திரிகைகளை அவர் ஆர்வத்தோடு வாங்கிப் படிப்பதைப் பார்த்து எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நான் வண்ணத்திரையில் இருந்து வேலைக்கு வந்தவன் என்பதால் என் மீது அவருக்கு ஈர்ப்பு அதிகமாக இருந்தது. அதற்காக என்னை அவர் கூடுதலாக மதித்தார். கேன்டீனிலும் அலுவலகத்தின் பின் பக்க மொட்டை மாடியிலும் பிரபு, சிவாஜிகணேசன் பற்றி பேச எங்களுக்கு நிறைய விஷயமிருந்தது. நான் அவரை உரிமையாகக் கிண்டல் செய்பவனாக இருந்தேன். சிவாஜியையும் பிரபுவையும் கிண்டல் செய்தால் அதை அவர் பொறுத்துக் கொள்வது எனக்குப் பிடிக்கும். சண்டைக்கு வராமல் அவர் நாகர்கோவிலில்தான் பிரபுவுக்கு அதிகமான ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன என்ற புள்ளிவிவரத்தைப் பதிலாகத் தருவார்.

அதே நேரத்தில் என் கதைகளைப் படித்துவிட்டு வெகுகாலமாக ஒரு அபிப்ராயமும் சொல்லாமல் இருந்தார். எட்டாயிரம் தலைமுறை சிறுகதை தொகுதிக்காக அவரிடம் முன்னுரைக்கு அணுகியபோது அவர் மிகவும் காலம் தாழ்த்தியபோது எனக்கு சந்தேகம் வந்தது அவருக்கு விருப்பமில்லையோ என. நான் அதை அவரிடம் கொண்டிருந்த உரிமையும் கிண்டலுமான நட்புடனே தெரிவித்தேன். ஏதாவது விளக்கம் தர முற்படும்போது சீரியஸôன குரலில் பேசுவார். "உங்க கதைகள் ஏதும் மோசமா இல்லை... உங்க கதைக்கு ஒரு இடம் இருக்கு... எனக்கு வேலை அப்படி...'' மீண்டும் தன் வழக்கமான குரலில் "இன்னும் ஒரு வாரம் டயம் கொடுங்க வோய்... முடிச்சுத் தந்திட்றேன். ஆபீஸ்ல ஜி.பி.எஃப். பணம் வராம இருக்கு சீக்கிரம் சொல்லி ஏற்பாடு செய்யுங்க வோய்'' என்று முடித்தார்.

"நீங்க முன்னுரை எழுதி அனுப்புங்க. ஜி.பி.எஃப். வேலையை முடிக்கிறேன்''

வெளிப்பார்வைக்கு பலவீனங்கள் நிறைந்தவராகவும் நெருங்கிப் பார்க்கும் போது விட்டுக் கொடுக்க விரும்பாத தீவிரமான இலக்கியக் கோட்பாடும் கொண்டவராக இருந்தார் ராஜமார்த்தாண்டன். முன்னுரை எழுதி அனுப்பி வைத்தார், அது என் ஜி.பி.எஃப். மிரட்டலுக்காக இல்லை. கடைசி கொஞ்ச நாளில் என்னிடம் அடிக்கடி பேசினார். பென்ஷன் பணம் இன்னும் கைக்குக் கிடைக்கவில்லை என்பதற்காக. அவருடைய மகன் கிருஷ்ண ப்ரதீப் திருமணத்துக்கு அலுவலக நண்பர் சூரிய நாராயணனுடன் சென்று அவர் வீட்டுக்கும் போய் வந்தேன். மாடியில் அவருக்கு மரத்தாலான அழகான அறை. அங்கே அமரச் செய்தார். எனக்குச் சரியான தலைவலி. தைலம் கொண்டு வரவும் மாத்திரை கொண்டு வரவும் ரசம் சாதம் கொண்டு வரவும் ஸ்பைரைட் கொண்டுவரவும் என ஐந்தாறு முறை மாடிக்கும் கீழுக்கும் ஓடியலைந்தார். விடைபெறும்போது எங்களைப் போலவே அவரும் அந்த வீட்டுக்கு வந்திருக்கும் ஒரு விருந்தாளிபோலவே ஒட்டமால் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவருடைய தம்பியும் ராஜமார்த்தாண்டனின் மனைவியும் அடுத்து குடும்பத்தோடு வர வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்துக் கொண்டிருந்தார்கள். ராஜ மார்த்தாண்டன் புன்னகையுடன் கண்கள் மின்ன விலகி நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.

இறப்பதற்கு நான்கு நாள்களுக்கு முன்பு அவர் பென்ஷன் விஷயமாக சென்னை வந்திருந்தார். அலுவலகத்துக்கும் பென்ஷன் ஆஃபிஷுக்குமாக இரண்டு மூன்று முறை அலைந்தபோது "உன்னை ரொம்பத் தொல்லை பண்றேன்'' என்றார். விடைபெறும்போது "அடுத்த மாசம் ஒண்ணாந்தேதி உங்களுக்குப் பென்ஷன் கிடைத்துவிடும்'' என்று உறுதிகூறி அனுப்பி வைத்தேன். இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வேலை பார்க்கும் சாஜி என்பவரின் செல் நம்பரைக் கேட்டிருந்தார். நண்பர் அரவிந்தன் யாரையோ பிடித்து அவருடைய நம்பரைக் கொடுத்து அதை ராஜமார்த்தாண்டனிடம் சேர்த்துவிடும்படி சொல்லியிருந்தார். சனிக்கிழமை காலை அந்த நம்பரை அவருக்குக் கொடுக்க போன் செய்ய நினைத்தேன். வேறு வேலைகள் காரணமாக சற்றே தாமதமாகிவிட்டது. ராஜமார்த்தாண்டனின் மரணச் செய்தி முந்திக் கொண்டது.

ஒன்று முதல் பூஜ்ஜியம் வரையிலான எண்களுக்குள் அவருடைய செல்போன் எண் இருக்கிறது. இப்போது அவற்றை அழுத்தினால் யாரெடுத்துப் பேசுவார்கள் என்று தெரியவில்லை. நான் உரிமையோடு கிண்டல் செய்தால் அதைப் பொறுத்துக் கொள்ளக் கூடியவர்களாக அவர்கள் இருப்பார்களா என்பது எனக்குத் தெரியாது.

3 கருத்துகள்:

RAGUNATHAN சொன்னது…

தமிழ் எழுத்தாளனின் சாபக் கேடு அவன் வாழ்க்கையை நல்ல விதமாக நடத்துவதற்காக பணத்திற்கு அலைவதுதான். திரு. ராஜமார்த்தாண்டனும் அதற்கு பலியாக தனது கடைசி நாட்களில் அலைந்திருக்கிறார் என்று நினைக்கும் போது பெருமூச்சுதான் விட முடிகிறது.

//ஒன்று முதல் பூஜ்ஜியம் வரையிலான எண்களுக்குள் அவருடைய செல்போன் எண் இருக்கிறது. இப்போது அவற்றை அழுத்தினால் யாரெடுத்துப் பேசுவார்கள் என்று தெரியவில்லை. நான் உரிமையோடு கிண்டல் செய்தால் அதைப் பொறுத்துக் கொள்ளக் கூடியவர்களாக அவர்கள் இருப்பார்களா என்பது எனக்குத் தெரியாது.//

கண்ணீரை வரவழைக்கும் பதிவு. -;(

நாமக்கல் சிபி சொன்னது…

அடடா! நல்ல மனிதர்தான்!

ஆழ்ந்த இரங்கல்கள்!

Unknown சொன்னது…

உடம்பு என்பது உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பைதானே!

-கதிரவன்

LinkWithin

Blog Widget by LinkWithin