வெள்ளி, ஜூலை 31, 2009

விண் நட்சத்திரம் முதல் சினிமா நட்சத்திரம் வரை



எல்லா காலத்துக்குமான பொதுவான உண்மைகள் என்று ஏதேனும் இருக்க முடியுமா? அப்படி ஒன்று இருப்பதாகச் சொன்னால் அது எத்தனை பெரிய பொய்யாக இருக்கும்?

நாம் பார்த்துக் கொண்டிருக்கிற நட்சத்திரங்கள் சில இப்போது இல்லாமல் இருக்கலாம். அதாவது நாம் பார்க்கிற இடத்தில் அவை இருக்கின்றன. ஆனால் அவை இருக்கும் இடத்தில் அவை இல்லை.

எத்தனையோ ட்ரில்லியன் பில்லியன் மைல் தொலைவில் உள்ள நட்சத்திரங்களின் ஒளி நம்மை வந்து அடைவதற்கு பல லட்சம் ஆண்டுகள் ஆகின்றன. வந்து சேர்வதற்கான இந்த இடைப்பட்ட காலத்தில் நட்சத்திரம் அழிந்துபோயிருக்கலாம். ஆனால் அதன் ஒளி நம்மை வந்து சேர்ந்த வண்ணமிருக்கிறது. அதாவது அது அழிந்த பல லட்சம் ஆண்டுகளுக்கு பிறகும் இல்லாத நட்சத்திரத்தை நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

அதே போல் நாம் உருவாகி, வாழ்ந்து, சண்டை போட்டுக் கொண்டிருக்கும் இந்த சூரிய மண்டலம் எங்கோ ஒரு நட்சத்திரத்தின் பார்வையில் இன்னும் உருவாகாமலேயே இருக்கலாம். அதாவது சூரியனின் கதிர் வீச்சு இன்னும் அந்த நட்சத்திரத்தை எட்டாமல் இருக்கலாம்.

அதாவது காலம் இடைவெளியைச் சார்ந்ததாக இருக்கிறது.

இப்படியாக ரிலேட்டிவிட்டி தியரி பற்றி சுமார் நூறு ஆண்டுகளாகச் சொல்லிச் சொல்லி போரடித்துப் போனதாக சிலர் சலித்துக் கொண்டாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு மிச்சம் இருக்கத்தான் செய்கிறது. (எல்லா காலத்துக்குமான பொதுவான உண்மைகள் இல்லாதது போலவே எல்லா காலத்துக்குமான பொதுவான ஆச்சரியங்களும் இல்லைதானே? )

இன்னும் குறைவான கால விஸ்தீரணத்தைப் பார்ப்போம்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்னால், இங்கிலாந்து அரசர் படம் போட்ட ரூபாய் நோட்டுதான் இந்தியாவில் செல்லுபடியாகும். இப்போது காந்தி படம் போட்ட நோட்டு. வரும்காலத்தில் இந்தியாவையே புரட்டிப் போட்ட ஒரு மனிதர் தோன்றி அவருடைய படத்தை ரூபாயில் பிரசுரிக்க நேரிடலாம்.

என்னவென்றால் மனிதனின் வயது வரம்பு சொற்பமானதாக இருக்கிறது. அதற்குள் அவர்கள் ஒரு முடிவு எடுத்துவிட நினைக்கிறார்கள். "அப்பல்லோ ஹாஸ்பிடல்தான் பெஸ்ட்'' என்றோ "எங்கள் கடவுள்தான் மகத்தானவர்'' என்றோ.. "அந்த மனிதர் அயோக்கியர்'' என்றோ சொல்கிறோம்.

81 ஆம் ஆண்டில் சென்னை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் ப்ளஸ் ஒன் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு ஆகாதவராகத் தோன்றியவர் கவிஞர் கண்ணதாசன்.

எங்கள் பள்ளியின் பின்புறம் செல்லும் சாலையில் அவருடைய இல்லம் இருந்தது. அன்று அவருடைய உடல் அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்தது. எங்கள் பள்ளியில் இருந்து வகுப்புத் தோழர்கள் சிலருடைய வேண்டுதலின் பேரில் நடேச முதலியார் பார்க் சுற்றுப்பாதையில் இருந்த அவருடைய வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தோம். எம்.ஜி.ஆர். வந்திருக்கிறார், கலைஞர் வந்திருக்கிறார், சினிமா நட்சத்திரங்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள் என்று சாலையே பரபரப்பாக இருந்தது.

கண்ணதாசன் பற்றி அவரவருக்குத் தெரிந்த சம்பவங்களைச் சொல்லிக் கொண்டே வந்தார்கள். அவர் எழுதிய நூல் ஒன்றில் (வனவாசம்?) அண்ணா உடல்நிலை பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சேர்க்கப்பட்டிருந்தபோது, ‘பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என்பார்கள், அதனால்தான் அமெரிக்காவில் அண்ணாவுக்குச் சாப்பிட முடியாமல் ஊசி மூலம் உணவு ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது' என்று எழுதியிருந்தார்.

இந்த வாக்கியம் என்னை மிகவும் சுட்டது. தொண்டையில் கேன்சர் வந்து பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு மனிதரை இப்படி எழுதலாமா?



"உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டபோது கண்ணதாசனுக்கும்தானே ஊசிவழியாக உணவு ஏற்றப்பட்டது" என்று உடன்வந்த நண்பர்களைக் கேட்டேன். அண்ணாமீது எனக்கு ஏற்றப்பட்டிருந்த பிரியம் அப்படியானது. நண்பர்களும் என் கேள்வியின் நியாயத்தை ஒத்துக் கொண்டு வீட்டுக்கு அருகில் சென்றுவிட்டு அவருடைய உடலைப் பார்க்காமலேயே திரும்பிவிட்டோம்.




அதே ஆண்டில் மேல் நிலை பாடத்திட்டத்திலேயே கண்ணதாசனின் காலக் கணிதம் என்ற கவிதையைப் பாடமாக வைத்திருந்தார்கள்.

கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்...

இவைசரியென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவறாயின் எதிர்ப்பதென் வேலை

...

இகழ்ந்தால் என்னுடல் இறந்துவிடாது
புகழ்ந்தால் என்மனம் புல்லரிக்காது

வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு

மாற்றம் எனது மானிடத் தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்..



-என அந்தக் கவிதையின் பல வரிகள் உலுக்கின. பின்னாளில் அண்ணாவைப் பற்றி அவர் நல்லவிதமாக எழுதியதையும் படித்தேன். "நீ இப்போது எடுக்கும் முடிவு தவறு என்று உணரும்போது அதைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு உனக்குக் கிடைக்காலேயேகூடப் போய்விடும்'' என்று ‘மொழி' படத்தில் ஒரு வசனம் வரும். அது எனக்கு நேர்ந்தது.

பாரதி தாசன் சொல்லாதன சில சொல்லியவர், ஆசு கவியாகத் திகழ்ந்தவர். ஒரு ஐம்பதடி தூரத்தில் அவருடலைப் பார்க்காமல் மனசு மாறி வந்துவிட்டது பைத்தியக்காரத்தனம் போலத் தோன்றுகிறது.



ஆசியா முழுதும் புத்தருக்குச் சிலை வைத்தார்கள், பிறகு பல இடங்களில் இடித்துத் தள்ளினார்கள். காரல் மார்க்ஸ், லெனின், ஸ்டாலினுக்குச் சிலை வைத்தார்கள் இடித்துத் தள்ளினார்கள். மிகக் குறுகிய காலகட்டத்துக்குள் கலைஞருக்கும் அது நேர்ந்தது.

எல்லாவற்றிலும் மனிதர்களுக்கு முடிவு கட்டும் அவசரம். சிலை வைப்பதிலும் பின்பு அதை இடிப்பதிலும்.

இப்படியான காரணங்களால் வரவர எல்லாவற்றிலுமே எனக்கு ஒரு நிதானம் ஏற்பட்டுவிட்டது.

"ரெண்டுல ஒண்ணு இப்பவே சொல்லிடு சார்'' என்கிறார் கடைக்காரர்.

"ரசமா? மோரா?'' என்கிறார் ஓட்டல் சிப்பந்தி.

உடனடியாக ஒரு பதிலைச் சொல்ல வேண்டியிருக்கிறது எல்லா இடத்திலும். குழப்பத்தோடு டி.வி.யைப் போட்டால், "ரெண்டுலதான் ஒண்ணைத் தொட வர்றீயா?'' என்று ஒரு கதாநாயகி குலுங்கிக் குலுங்கி ஆடிக்கொண்டிருந்தார்.


உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin